![](pmdr0.gif)
மாந்தருக்குள் ஒரு தெய்வம் - முதற் பாகம்
அத்தியாயங்கள் 1-33
கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)
mAntarukkuL oru teivam (biography of Mahatma Gandhi)
part 1, chapters 1-33
by Kalki R. Krishnamurthy
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Digital Library of TVA for providing a PDF of this work.
The e-text has been generated using Google OCR online tool.
Sincere thanks also go to Prof. Pas Pasupathy of Toronto for bringing the availability of
a soft PDF version of this work at the TVA.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2019.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
https://www.projectmadurai.org/
மாந்தருக்குள் ஒரு தெய்வம் - முதற் பாகம்
அத்தியாயங்கள் 1-33
கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)
mAntarukkuL oru teivam (biography of Mahatma Gandhi)
part 1, chapters 1-33
by Kalki R. Krishnamurthy
Source:
மாந்தருக்குள் ஒரு தெய்வம் - முதற் பாகம்
கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)
மங்கள நூலகம், சென்னை -6
முதற் பதிப்பு : மார்ச்சு 1955
விலை ரூ. 6.
Printed by R. Surianarayanan, at Gnanodaya Press
11, Anderson Street, Madras-1
-------------
மாந்தருக்குள் ஒரு தெய்வம் - முதற் பாகம்
முகவுரை
அவதார புருஷர்கள் பலர் தோன்றிய பெருமை உடையது நம் நாடு. யுகத் திருப்பங்களில், அரசியல், சமூகம், இலக்கியம், சமயம், இவை சீர்குலைவதற்கான நிமித்தங்கள் தோன்றும் பொழுது, கடவுள் தன்மை மிக்க மகான்கள் எதிர்பாராத விதமாய் வருகின்றனர். குறைபாடுகளைத் தீர்த்துவிட்டு அதிசய மான. வழியில் மறைகின்றனர். புத்தபிரான், சங்கரர், சைதன்யர் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்ற பெருந்தகையோரின் மரபில் வந்து அண்மையில் நம் கண் முன்பே திருச்செயல்களை நிகழ்த்திய வர் காந்திமஹாத்மா. மற்ற அவதார புருஷர்களிடம் தென்படாத தனிச் சிறப்பு இவருக்கு உண்டு. மக்களோடு ஒருவராக இவர் இழைந்து பழகியவர்; ஏழையின் உள்ளத்தை உணர்ந்தவர்; கடல்போன் ற எதிர்ப்புக்களுக்கு அசையாத மலை போன்ற உறுதியினர்; தீவிர உண்மைகளைச் சோதனை செய் வதில் சற்றும் தளராதவர். உடல் வருந்தினாலும் உள்ளத் தெளிவை விடாதவர். முரணாக நின்று போரிட்ட மூட நம்பிக்கையை விலக்கத் தம் மன்னுயிரையும் இழக்கத் துணிந் தவர். 'நாம் யார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம், ஏமாப்போம், பிணியறியோம், பணிவோம் அல்லோம்; இன்பமே எந்நாளும் துன்பமில்லை' என்ற அப்பர து வாக்கை மெய்ப்பித்தவர்.
அற்புதங்கள் நிரம்பிய இவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத முற்றிலும் தகுதி உள் ள ஓர் இலக்கிய கர்த்தா தமிழ் நாட்டுக்குக் கிடைத்தது அதன் பெரும் பாக்கியமென்றே கூறலாம். இன்று தமிழ் மொழியை உயர்ந்த பீடத்தில் வைத்த பெருமை - 'கல்கி'யையே சாரும். தமிழர் இதயத்தில் என் றென்றும் இடம் கொண்ட அவர் ஆக்கிய இந்த திவ்ய சரிதை எ த் துணை அழகு வாய்ந்ததாய் இருக்கவேண்டும்! இதைப் புத்தக வடிவில் வெளியிடும் எமக்கு ஏற்படும் மகிழ்ச்சி ஒரு புறம் இருக்கட்டும். தாம் சிருஷ்டி செய்த இவ்வரிய செல் வத்தை அனைவரும் படித்து இன்புறுவதைப் பாராமல் அவர் பரமபதம் அடைந்ததுதான் எங்களுடைய பெருங்குறை. இருந் தாலும் நித்திய உலகிலிருந்து இந்தச் சிறு முயற்சியின்மீது தம் நோக்கைச் செலுத்தி அவர் எங்களுக்கு நிறைவான ஆசி தருவாரென்பது திண்ணம். தமிழன்பர்கள் இந்நூலை வரவேற்பு பதன் மூலம் அவருடைய திருக்குறிப்பைப் பெற்றவராவோம்.
பதிப்பாளர்.
---------
அமரர் கல்கி
எளிய குடும்பத்திலே பிறந்து சுயமுயற்சியால் முன்னுக்கு வந்த மேதைகளில், "கல்கி"ஸ்ரீ. ரா. கிருஷ்ண மூர்த்தி அவர்களும் ஒருவர்.
பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே தேசீய இயக்கத்தில் ஈடுபட்டுவிட்டார். சிறைக்குப் போனார். விடுதலையாகி வந்தபிறகு, ""நவசக்தி"யில் திரு. வி. க., வுக்குக் கீழே சில ஆண்டுகள் தொண் டாற்றினார். பின்பு, ராஜாஜி அவர்களுடைய அன்புக்கும் அபிமானத் துக்கும் பாத்திரராகி திருச்செங்கோடு சென்று, கதர்ப்பணியிலும் மது விலக்குத் தொண்டிலும் ஈடுபட்டிருந்தார். அப்புறம், ஸ்ரீ. எஸ். எஸ், வாஸ்னுடைய அழைப்புக் கிணங்க, சென்னைக்குச் சென்று, "ஆனந்த விகடன் "ஆசிரியப் பொறுப்பேற்று, பல ஆண்டுகள் அதைச் சிறப்பாக நடத்தினார். இந்தியாவிலேயே பிரபலமான வாரப் பத்திரிகையாக அதை ஆக்கினார். இணையற்ற தம் எழுத்துத் திறமையாலே எல்லோ ரையும் பிரமிக்க வைத்தார். தமிழ் இலக்கிய வரலாற்றிலே, "ஆனந்த விகடன் யுகம்" என்று சொல்லும்படியாக ஒரு காலத்தையே சிருஷ் டித்தார். பின்பு "கல்கி"யைத் தொடங்கினார். ஸ்ரீ சதாசிவத்தின் அபூர்வமான நிர்வாகத் திறமையாலும் ஒத்துழைப்பின் மூலமும், ஒரு சில ஆண்டுகளுக்குள் அதை 'விகடனுக்கு இணையாக ஆக்கினார், "விகடன் "மூலமும், "கல்கி"முலமும் தமிழ் நாட்டில் மொழிப் பற்றும் தேசப்பற்றும் ஏற்பட அவர் செய்த தொண்டை என்றும் மறக்கவே முடியாது.
இருபதாம் வயதில் பிடித்த பேனாவை, ஐம்பத்து மூன்றாம் வயது வரை-அதாவது, மறையும் வரை கீழே வைக்கவே இல்லை.
"சாவதற்குள் என் சக்தி முழுவதையும் உபயோகித்துவிட விரும்பு கிறேன். வாழ்க்கையை ஒரு சிறு மெழுகுவர்த்தியாக நான் கருத வில்லை. அதை ஓர் அற்புத ஜோதியாக மதிக்கிறேன். அதை எதிர்கால சந்ததியாருக்குக் கொடுப்பதற்குமுன், எவ்வளவு பிரகாசமாக எரியவைக்க முடியுமோ அவ்வளவு பிரகாசமாக அதை எரிய வைக்க விரும்புகிறேன்" என்றார் காலஞ்சென்ற பெர்னார்ட் ஷா. அதை அப்படியே வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் "கல்கி".
தமிழ்க் கவிதைக்கு பாரதி எப்படி புத்துயிர் அளித்தாரோ அப் படியே வசன இலக்கியத்துக்கு நவஜீவன் அளித்தவர் "' கல்கி '.
தமிழில் எதை வேண்டுமானாலும் எழுத முடியும், - அதையும் ரொம்ப ரொம்ப எளிய தமிழிலே எழுத முடியும், குழந்தைகள் கூட அதைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை நிரூபித்தவர் "கல்கி". - அரசியல், பொருளாதாரம், இலக்கியம், சங்கீத விமரிசனம் - எல்லாவற்றிலும் அவர் தன்னிகரற்று விளங்கினார். கவிதைகளும் இயற்றியுள்ளார். அவர் தொடாதது எதுவுமே இல்லை ; அவர் தொட்டுப் பொன்னாக்காதது எதுவுமே இல்லை.
சாகா வரம் பெற்ற அபூர்வமான சரித்திர நவீனங்களை அவர் தமிழுக்கு அளித்துள்ளார். "சிவகாமியின் சபதம் ", "பொன்னியின் செல்வன் ", "பார்த்திபன் கனவு "முதலிய நூல்கள், இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழிந்தபிறகுங்கூட தமிழ் மக்களுடைய இதயங்களை இன்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் என்பது நிச்சயம்.
மொழிக்குப் புத்துயிர் அளித்தது போலவே மக்களின் வாழ்க்கையி லும் அவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். நல்ல காரியம் எதுவாயிருந்தாலும் அதில் முன்னின்று உழைத்தார். அவர் கலந்து கொள்ளாத முக்கிய விழா எதுவுமே இல்லை. பாரதிக்கு எட்டயபுரத் தில் ஒப்புயர்வற்ற நினைவுச் சின்னம் கட்டினார். தேசத்தின் தந்தையா கிய காந்தி மகாத்மாவுக்கு ஸ்தூபி கட்ட அரும்பாடுபட்டார். தூத்துக் குடியில் வ. உ. சி., கல்லூரி ஏற்படுத்துவதற்குப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். முதுபெரும் எழுத்தாளராகிய வ. ரா., வுக்கும் வேறு பல கலைஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் நிதி திரட்டிக் கொடுத்து உதவி செய்தார். அன்ன தான சிவன் சங்கத்தின் தலைவராக இருந்து. சிறந்த பணியாற்றியிருக்கிறார்.
சொல்லாலும் செயலாலும் எழுத்தாலும் கடைசி மூச்சு இருக்கும் வரை தமிழ் நாட்டுக்கு உழைத்த பெரியார் அவர்.
ஸ்ரீ ரா. கிருஷ்ண மூர்த்தி மறைந்து விட்டபோதிலும், "கல்கி "தமிழ் இலக்கிய வானிலே என்றும் அழியாப் புகழுடன், அமரதாரையாக விளங்குவார்.
--------------
பொருளடக்கம்
மாந்தருக்குள் ஒரு தெய்வம்
தம்பி ! பள்ளிக்கூடத்தில் நீ சரித்திர பாடங்கள் படிக்கிறாயல்லவா? சரித்திர பாடங்களில், பல தேதிகளை நெட்டுருச் செய்யும்படி உபாத்தியாயர்கள் சொல்கிறார்கள். சரித்திர பாட புத்தகத்தின் கடைசியில் ஐந்து பக்கம் நிறையத் தேதி அநுபந்தம் சேர்த்திருக்கிறது. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலம் முதல் ஒவ்வொரு வைஸ்ராயும் இந்தியாவுக்கு வந்த தேதியும் போன தேதியும் இரண்டு பக்கங்கள் நிறைய இருக்கின்றன. அவ்வளவு தேதிகளையும் நீ ஒன்று விடாமல் மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கிற தல்லவா?
உண்மையில், அந்தத் தேதிகளை யெல்லாம் நீ நெட்டுருச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. புத்தகத்திலே தான் அச்சுப் போட்டிருக்கிறார்களே! வேண்டும்போது எடுத்துப் பார்த்துக் கொள்ளலாமே?
இந்திய சரித்திர பாடத்தில் சுமார் பதினைந்து தேதிகள் உனக்கு ஞாபகம் இருந்தால் போதும். தேதி என்றால், மாதமும் தினமும் கூட அல்ல. சுமாராக வருஷம் தெரிந்திருந்தால் போதும். எந்த நூற்றாண்டு என்பது தெரிந்தாலும் போதும்.
மகான் புத்தர் எந்தக் காலத்தவர் என்பது உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்புறம் அசோகர் காலமும் சந்திரகுப்த விக்ரமாதித்யர் காலமும் தெரிந்திருக்க வேண்டும். திருவள்ளுவர், மகேந்திர பல்லவர், ஹர்ஷவர்த்தனர், இராஜ ராஜ சோழர், சங்கரர், இராமானுஜர், அக்பர், சிவாஜி இவர்கள் வாழ்ந்த காலம் உனக்குத் தெரிய வேண்டும்.
மேற்கூறிய தேதிகளுக்குப் பிற் பாடு உனக்கு முக்கியமாகத் தெரிந் திருக்க வேண்டிய தேதி எது தெரியுமா? - சொல்லுகிறேன், கேள்! கேட்டு, மனத்தில் மறக்க முடியாதபடி பதித்து வைத்துக்கொள்!
1869 அக்டோபர் 25 உன் நினைவில் என்றென்றைக்கும் இருக்க வேண்டும்.
அந்தத் தேதியிலே தான் மாந்தருக்குள் தெய்வமான மகாத்மா காந்தி அவதரித்தார்.
தம்பி! நான் சொல்வதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே ! பிறக்கும்போதே காந்திஜி மகாத்மாவாகப் பிறந்து விடவில்லை. உன்னையும் என்னையும் நாட்டிலுள்ள எல்லாரையும் போல் அவரும் பிறந்தபோது சாதாரணக் குழந்தையாகத்தான் பிறந்தார் அப்படிப் பிறந்த குழந்தை மாநிலத்துக்கு ஒரு தலைவராகவும் மனித குலத்துக்கு ஒரு வழிகாட்டியாகவும் பிற் காலத்தில் ஆகப்போகிறது என்று அப்போது யாரும் எண்ண வில்லை; குழந்தையின் பெற்றோர்களும் அவ்விதம் நினைக்கவில்லை.
இந்தியா தேசத்தின் படத்தைப் பார்! குஜராத் எனப்படும் கூர்ஜரத்துக்கு மேலே கத்தியவார் என்று இருக்கிறதல்லவா? இந்தப் பிரதேசத்திலேதான் முன்னொரு சமயம் “ஸ்ரீ கிருஷ்ண பகவான்" வட மதுரை நகரை விட்டு வந்து துவாரகை என்னும் புதிய தலைநகரை அமைத்துக் கொண்டார். எதற்காகத் தெரியுமா? ஸ்ரீ கிருஷ்ணன் மதுரையின் மன்னராயிருந்தபோது ஒயாமல் பொல்லாத பகைவர்களுடன் யுத்தம் செய்ய வேண்டி யிருந்தது. ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு யுத்தம் போதும் போதும் என்று ஆகிவிட்டது. "யுத்தமும் வேண்டாம் ; மதுரை ராஜ்யமும் வேண்டாம்!" என்று சொல்லிவிட்டு ஸ்ரீ கிருஷ்ண பகவான் தம்முடைய உற்றார், உறவினர், நண்பர்கள், பிரஜைகள், சேனாவீரர்கள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு கத்தியவாருக்கு வந்து விட்டார்.
இப்படிச் செய்வதின் மூலமாகவாவது அந்தப் பகைவர்களின் மன த்திலுள்ள துவேஷம் போகாதா, பகைமை மறையாதா, அவர்கள் நல்லவர்களாகி விட மாட்டார்களா என்று நினைத்தே பகவான் அவ்விதம் செய்தார்.
கத்தியவார் கடற்கரையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் துவாரகை நகரைக் கட்டிக் கொண்டார். இதனாலே தான் துவாரகாபுரி ஆலயத்திலுள்ள கண்ண பெருமானுக்கு 'ரண சோட் நாதர்' என்ற திருநாமம் வழங்கி வருகிறது. (ரணம் : யுத்தம் ; சோட்: விட்ட ; நாதர் : பெருமான்)
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அதே கத்தியவார் பிரதேசத்திலே தான், "யுத்தம் வேண்டாம் ! பகைமை வேண் டாம்!" என்று உபதேசித்த காந்தி மகானும் பிறந்தார். அவர் பிறந்த ஊருக்குப் போர்பந்தர் என்று பெயர். "சுதாமாபுரி" என்ற பழைய பெயரும் அந்தப் பட்டணத்துக்கு உண்டு. "சுதாமா' என்பது குசேலருக்கு இன்னொரு பெயர் என்பது உனக்கு நினைவிருக்கிற தல்லவா?
மகாத்மாவின் பெற்றோர்கள் 'பனியா ” என்று சொல்லப் படும் வைசிய சாதியார். (காந்திஜி தான் சாதி குலப் பிறப் பென்னும் மாயைகளை யெல்லாம் கடந்த மகாத்மா ஆயிற்றே ! ஆகையினால் தான், காந்திஜியின் பெற்றோர் "வைசிய சாதி ' என்று சொன்னேன்.) வைசிய சாதி என்றாலும் காந்திஜியின் முன்னோர்கள் வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டவர்கள் அல்ல. கத்தியவாரில் அனேக சுதேச சமஸ்தானங்கள் உண்டு. காந்திஜியின் பாட்டனாரும் அவருக்கு முன்னால் மூன்று தலைமுறை யினரும் கத்தியவாரில் உள்ள சமஸ்தான மன்னர்களுக்கு முதன் மந்திரிகளாயிருந்து வந்தார்கள்.
காந்திஜியின் பாட்டனாரான ஸ்ரீ உத்தம் சந்திர காந்தி என்பவர் ஒரு தீர புருஷர். போர்பந்தர் சமஸ்தானத்தில் அவர் திவான் வேலை பார்த்து வந்தபோது அவரைக் கவிழ்த்துவிடச் சிலர் சதி செய்தார்கள். இதை அறிந்த ஸ்ரீ உத்தம சந்திரர் பக்கத்திலுள்ள ஜுனாகாத் சமஸ்தானத்தில் அடைக்கலம் புகுந்தார். ஜூனாகாத்தின் அதிபதியான முஸ்லிம் நவாப்பின் தர்பாரை ஸ்ரீ உத்தம் சந்திரர் அடைந்ததும், நவாப்புக்கு இடது கையினால் சலாம் செய்தாராம். இந்த மரியாதைக் குறைவான செயலுக்குக் காரணம் கேட்டபோது, "என்னுடைய வலது கை ஏற்கெனவே போர்பந்தரின் ஊழியத்துக்கு அர்ப்பணமாகி யிருக்கிறதே!" என்று பதில் சொன்னாராம். இந்தப் பதிலைக் கேட்ட ஜூனாகாத் நவாப், "இவர் எவ்வளவு உத்தமமான மனிதர் ! எப்பேர்ப்பட்ட சத்திய சந்தர்!" என்று எண்ணி மகிழ்ந்தாராம்.
உத்தம சந்திரருக்கு ஆறு புதல்வர்கள், இவர்களில் ஐந்தாவது புதல்வர் கரம் சந்திர காந்தி. பெயரைச் சுருக்கிக் [காபா காந்தி' என்றும் அழைப்பதுண்டு. போர் பந்தர், வங்க நேர், இராஜகோட்டை ஆகிய சமஸ்தானங்களில் ஸ்ரீ காபா காந்தி திவான் வேலை பார்த்தார். கத்தியவாரில் சமஸ்தானங்கள் நூற்றுக் கணக்கில் உண்டு. அவற்றை ஆண்ட மன்னர்களுக்குள்ளேயும், மன்னவர்களின் உறவினர் - இனத்தாருக்கு உள்ளேயும் அடிக்கடி தகராறுகள் ஏற்படும். இந்தத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதற்காக ”இராஜஸ்தான் கோர்ட் " என்று ஒரு நீதி மன்றம் அந்தக் காலத்தில் இருந்தது. அந்த நீதி மன்றத்தில் ஸ்ரீ காபா காந்தி ஒரு நீதிபதியாகப் பதவி வகித்தார்.
ஸ்ரீ காபா காந்தி உண்மையாளர் ; தைரியமும் தயாளமும் உடையவர் ; பணத்தைப் பெரிதாகக் கருதாதவர். நடுநிலைமை பிறழாத நியாயவான் என்ற புகழ் அவருக்கு ஏற்பட்டிருந்தது. அவர் பள்ளிக்கூடத்தில் படித்தது ஐந்தாவது வகுப்பு வரையில் தான். ஆனால் இயற்கை அறிவினாலும் உலக அநுபவத்தினாலும் மிகச் சிக்கலான பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் சக்தி பெற்றிருந்தார். நூற்றுக்கணக்கான மனிதர்களை வைத்து நடத்தும் நிர்வாகத் திறமையும் அவருக்கு இருந்தது.
இந்தியாவிலுள்ள சுதேச சமஸ்தானங்களை மேற்பார்வை செய்யப் பிரிட்டிஷ் சர்க்கார் சென்ற வருஷம் வரையில் ' பொலிடிகல் ஏஜெண்டு' என்னும் உத்தியோகஸ்தர்களை அமர்த்திக் கொண்டு வந்தார்கள். ஒரு சமயம் ஒரு ’பொலிடிகல் ஏஜெண்டு' இராஜ கோட்டை மன்னரைப்பற்றிச் சிறிது அவமரியாதையாகப் பேசினாராம். உடனே ஸ்ரீ காபா காந்தி குறுக்கிட்டு ஆட்சேபித்தாராம். பொலிடிகல் ஏஜெண்ட் துரை அப்பொழுதெல்லாம் சர்வ வல்லமை படைத்திருந்த பிரிட்டிஷ் சர்க்காரின் பிரதிநிதி யல்லவா? துரைக்குக் கோபம் வந்து விட்டதாம். ஸ்ரீ காபா காந்தி தம்மிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொன்னாராம். ஸ்ரீ காபா காந்தி, “முடியாது" என்றாராம். அவரைத் துரை காவலில் வைத்தாராம். அப்படியும் ஸ்ரீ காபா காந்தி மன்னிப்புக் கேட்க இணங்கவில்லையாம். சில மணி நேரத்துக்குப் பிறகு பொலிடிகல் ஏஜெண்ட் அவரை விடுதலை செய்து விட்டாராம்.
தந்தையிடம் இருந்த மேற் கூறிய உத்தம குணங்கள் எல்லாம் புதல்வரிடம் ஒன்றுக்கு ஆயிரம் மடங்காகப் பெருகிப் பிரகாசித்ததை நாம் அறிந்திருக்கிறோம்.
ஸ்ரீ காபா காந்தி மூன்று தடவை கலியாணம் செய்து கொண்டு மூன்று மனைவிகளும் காலமாகி விட்டார்கள். எனவே, நாலாவது முறையாக ஸ்ரீமதி புத்லி பாய் என்னும் கன்னிகையை அவர் மணந்து கொண்டார். இவ்விதம் நாற்பது வயதுக்கு மேல் தம் தந்தை நாலாவது முறை கலியாணம் செய்து கொண்டது மகாத்மாவுக்கு அவ்வளவாகப் பிடிக்க வில்லை என்பதை அவர் எழுதிய சுய சரிதையிலிருந்து அறிகிறோம்.
ஆனாலும் ஸ்ரீ காபா காந்தி நாலாவது தடவையும் கலியாணம் செய்து கொண்டது பற்றி நீயும் நானும் மகிழ்ச்சி யடைய வேண்டும். இந்தியா தேசமும் இந்த உலகம் முழுவதுமே அதைக் குறித்துச் சந்தோஷப்பட வேண்டும். ஏனெனில், ஸ்ரீ காபா காந்தியின் நாலாவது கலியாணத்தின் பயனாகவே மகாத்மா காந்தி இந்த உலகில் அவதரித்தார். ஸ்ரீமதி புத்லி பாயின் நாலாவது கடைக்குட்டிக் குழந்தை ஸ்ரீ மோகன் தாஸ் கரம் சந்த்ர காந்தி.
தமது அன்னையின் சிறந்த குணங்களைப்பற்றி மகாத்மாவே தம்முடைய சுய சரிதத்தில் சொல்லி யிருக்கிறார்.
ஆமாம், தம்பி! மகாத்மா காந்தி தம்முடைய சரித்திரத்தைத் தாமே எழுதியிருக்கிறார். ஆனால் அதற்குச் சுய சரிதம் என்று பெயர் கொடுக்காமல் 'சத்திய சோதனை' என்று பெயர் கொடுத்திருக்கிறார். இந்த அரிய புத்தகம் ஆங்கிலத்திலும் இந்தியாவிலுள்ள முக்கியமான பாஷைகள் எல்லாவற்றிலும் வெளியாகி யிருக்கிறது. தமிழிலும் வந்திருக்கிறது. நீ சற்றுப் பெரியவன் ஆனதும் அந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.
பெரிய மகான்களுடைய வாழ்க்கையைப்பற்றி நாளடைவில் கற்பனைக் கதைகள் பல உண்டாகிச் சேர்ந்து விடுவ து வழக்கம். மகாத்மா தம்முடைய சரிதையைத் தாமே எழுதி யிருக்கிறபடியால் அவரைப் பற்றிக் கற்பனைக் கதைகள் ஏற்பட இடமில்லாமற் போய்விட்டது. ஆனால், என்ன துரதிர்ஷ்டம்! 1920-ம் வருஷத்தோடு மகாத்மா தமது சுய சரிதத்தை நிறுத்தி விட்டிருக்கிறார். அதற்குப் பிறகு எத்தனை எத்தனை அற்புதச்
அன்னையும் பிதாவும் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன ! இன்னும் சில காலம் அவர் வாழ்ந்திருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்டு 15௳ வரையில் தமது சரிதத்தை எழுதிப் பூர்த்தி செய்திருக்கக் கூடாதா? அது முடியாதபடி ஒரு கொடும் பாதகன் அவரைக் கொலை செய்து விட்டானே?
கதையை விட்ட இடத்துக்கு மறுபடியும் போகலாம். காந்தி மகான் தமது தாயாரைப் பற்றிச் சொல்லி யிருப்பதை அப்படியே பெயர்த்து எழுதுகிறேன் :-
"அவர் பெரிதும் சமயப்பற்றுக் கொண்டவர். தினசரி தெய்வப் பிரார்த்தனை செய்யாமல் அவர் உணவு கொள்ள மாட் டார். தினந்தோறும் விஷ்ணு கோயிலுக்குச் சென்று வருவார். எனக்கு நினைவு தெரிந்த பின்னர் அவர் ஒரு வருஷமாவது சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கத் தவறியதில்லை. மிகக் கடுமையான நோன்புகளை அவர் மேற்கொண்டு நிறைவேற்றி வந்தார். உடல் நோய் காரணமாகவும் அவர் விரதத்தைக் கைவிடுவதில்லை. ஒரு முறை சாந்திராயண விரதத்தின் போது கடுமையான நோய் வந்தும், அவர் விரதத்தை விடாமல் நடத்தியது எனக்கு நினைவிருக்கிறது. இரண்டு மூன்று வேளை சேர்ந்தாற்போல் உபவாச மிருத்தல் அவருக்குச் சர்வ சாதாரணம். சாதுர்மாஸ்யத்தில் அவர் தினம் ஒரு முறை தான் உணவு கொள்வார். இது போதாதென்று ஒரு சாதுர்மாஸ்யத்தில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் பூரண உபவாச மிருந்து வந்தார். மற்றொரு சாதுர் மாஸ்யத்தின் போது தினம் சூரிய தரிசனம் செய்யாமல் சாப்பிடுவதில்லை யென்று அவர் விரதம் எடுத்துக்கொண்டார். நானும் மற்றக் குழந்தைகளும் தெருவில் நின்று கொண்டு சூரியன் எப்போது மேகக் கூட்டங்களினின்றும் வெளி வரப் போகிறதென் று காத்துக் கொண்டிருப்போம். மழை காலத்தில் சில தினங்களில் கதிரவன் தரிசனம் அளிக்கக் கருணை செய்வதில்லை யென்பது எல்லோருக்கும் தெரியும். அத்தகைய நாட்களில் சூரியன் அருமையாக வெளிவரும்போது ஓட்டமாக உள்ளே ஓடி அன்னையிடம் தெரிவிப்போம். ஆனால் அவர் ஓடி வந்து பார்ப்பதற்குள் சூரியன் மறைந்து விடுவான். ’அதனா லென்ன மோசம்? இன்று நான் சாப்பிடுவ து பகவானுக்கு விருப்பமில்லை !' என்று கூறிக்கொண்டு மலர்ந்த முகத்துடன் மீண்டும் வீட்டு வேலையைக் கவனிக்கத் தொடங்குவார்."
----------------
தம்பி ! பள்ளிக்கூடத்துப் பரீட்சைகளில் சில சமயம் அதிக 'மார்க்' வாங்கவில்லையே என்று நீ வருத்தப்படுகிறாயல்லவா? ஆனால், அப்படி வருத்தப்படுவது அவசியமில்லை. பள்ளிக்கூடங்களில் எப்போதும் அதிக மார்க் வாங்கிப் பரீட்சையில் தேறுகிறவர்கள் வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் சாதிப் பது கிடையாது. மார்க் வாங்காதவர்களும், 'மந்தம்' என்று பெயர் வாங்கியவர்களும் பிற்காலத்தில் அரும் பெரும் காரியங் களைச் சாதித்திருக்கிறார்கள். இதற்கு உதாரண புருஷராக மகாத்மாவே விளங்குகிறார்.
போர்பந்தரில் காந்திஜி ஏழு பிராயம் வரையில் இருந்தார். அந்த ஊரிலிருந்த ஆரம்பப் பள்ளிக்கூடத்துக்குப் போனார், ஆனால் அதிகமாக ஒன்றும் படித்து விடவில்லை. "அந்தக் காலத் தில் என் அறிவு மிக்க மந்தமாயிருந்தது" என்று காந்திஜி தம் சுய சரிதத்தில் எழுதியிருக்கிறார்.
காந்திஜிக்கு ஏழு பிராயம் ஆனபோது, அவருடைய தந்தை ஸ்ரீ காபா காந்தி 'இராஜஸ்தான் கோர்ட்'டின் நீதிபதியாகி இராஜகோட்டைக்குக் குடிப் போனார். இராஜகோட்டையிலிருந்த பெரிய பள்ளிக்கூடத்திலும் மோகன்தாஸ் காந்தி - கெட்டிக்காரர் ' என்று பெயர் வாங்க வில்லை. படிப்பில் அவருக்கு ருசியே ஏற்பட-வில்லை. பாட புத்தகங்களை வேண்டா வெறுப்பாகப் படித்துத் தொலைப்பார் ; வேறு எந்தப் புத்தகமும் விரும்பிப் படிக்க மாட்டார்.
இளம் வயதில் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்டதைக் காட்டிலும் நாடகம் பார்த்ததின் மூலம் அதிகம் கற்றுக்கொண்டார். மோகன் தாஸ் குழந்தையாயிருந்தபோது பார்த்த நாடகங் களில் "சிரவண பித்ரு பக்தி நாடகம் " என்பது ஒன்று. கண் இழந்த முதியோர்களான தன் பெற்றோர்களைச் சிரவணன் என்பவன் காவடியில் வைத்துத் தூக்கிக்கொண்டு சென்ற காட்சி கரம் சந்திர மோகன்தாஸின் இளம் உள்ளத்தில் நன்றாகப் பதிந்து விட்டது. "பெற்ற தாய்க்கும் தகப்பனாருக்கும் இப்படி யல்லவா சேவை செய்ய வேண்டும்? ” என்று மனத்திற்குள் தீர்மானித்துக் கொண்டார்.
அவர் பார்த்த இன்னொரு நாடகம் அரிச்சந்திர நாடகம். அதை எத்தனை தடவை பார்த்தாலும் மோகன் தாஸுக்குச் சலிப்புத் தட்டுவதே இல்லையாம். "அரிச்சந்திரனைப்-போல் ஏன் எல்லோரும் சத்திய சந்தர்களா யிருக்கக் கூடாது? " என்று அடிக்கடி எண்ணமிடுவாராம். அரிச்சந்திரனுடைய கதையை நினைத்து நினைத்து மனமுருகி அழுவாராம். சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக அரிச்சந்திரன் பட்ட கஷ்டங்களை யெல்லாம் தாமும் அநுபவிக்கவேண்டும் என்ற இலட்சியம் குழந்தை காந்தியின் மனத்தில் குடி கொண்டதாம்.
ஆகா! அந்த இலட்சியம் காந்திஜியின் வாழ்க்கையில் எவ்வளவு நன்றாக நிறைவேறிப் பூர்த்தியடைந்து விட்டது ! அரிச்சந்திரன் சத்தியத்துக்காகச் செய்த தியாகங்களையும் அநுபவித்த கஷ்டங்களையும் விட மகாத்மா செய்த தியாகங்களும் அநுபவித்த கஷ்டங்களும் அதிகமேயல்லவா? கடைசியில் சத்தியத் துக்காக மகாத்மா உயிரையே தியாகம் செய்தும் விட்டாரே !
இவ்விதம் இளம் பிராயத்திலேயே சத்தியத்தில் அழியாத நம்பிக்கை கொண்ட மகாத்மா காந்தி தம் சுயசரிதத்தை எழுதுவதில் சத்தியத்தைப் பூரணமாகக் கடைப் பிடித்திருக்கிறார், பதின்மூன்று வயதில் தமக்குக் கலியாணம் நடந்ததுபற்றி மிக்க
வருத்தத்தோடு எழுதியிருக்கிறார்.
ஆம், தம்பி ! காந்தி மகானுக்குக் கலியாணம் நடந்தபோது அவருக்கு வயது பதின்மூன்று; அன்னை கஸ்தூரி பாய்க்கும் அப்போது வயது பதின்மூன்றுதான்.
அந்தக் காலத்தில் கலியாணம் நடத்துவதென்றால் மிகவும் சிரமமான காரியமாம். ஆகையால் மோகன் தாஸ்க்கும் அவருடைய தமையனாருக்கும் இன்னொரு சித்தப்பாவின் புதல்வருக்கும் சேர்த்து ஒரே முகூர்த்தத்தில் கலியாணம் நடத்திவிடத் தீர்மானித்தார்களாம். எப்படியிருக்கிறது கதை ! அந்தக் காலத்தில் அந்த நாட்டுச் சம்பிரதாயம் அவ்வாறிருந்தது.
ஆனால் இது விஷயத்தில் காந்தி மகானுடைய கருத்து என்ன வென்பதை நீ நன்கு தெரிந்துகொள்ளவேண்டும். தம்பி! ஆண்களுக்கு ஆகட்டும், பெண்களுக்கு ஆகட்டும், இளம் வயதில் கலியாணம் செய்வித்தல் கூடவே கூடாது என்பது மகாத்மாவின் உறுதியான கொள்கை.
இளம் வயதில் தமக்கு மணம் செய்விக்கப்பட்டது பற்றி மகாத்மா பிற்காலத்தில் பச்சாத்தாபப்பட்டார் ; நினைத்து நினைத்து வருந்தினார் ; கலியாணம் செய்து வைத்த தம் தந்தையையும் நொந்து கொண்டார். ஆனால், கலியாணம் நடந்த சமயத்தில் அது பிசகு என்பதாகவே அவருக்குத் தோன்றவில்லை. கஸ்தூரிபாயிடம் மிக்க அன்பாக இருந்தார். கஸ்தூரிபாய்க்கு எழுதப் படிக்கத் தெரியாது. எழுதவும் படிக்கவும் தமது அருமை மனைவிக்குக் கற்பிக்க விரும்பினார். ஆனால் மனைவியிடம் தாம் கொண்டிருந்த அன்பே படிப்புச் சொல்லிக் கொடுக்கத் தடையாயிருந்தது என்று காந்திஜி எழுதியிருக்கிறார்.
-----------------
காந்தி மகாத்மாவுக்குச் சிறு பிராயத்திலேயே சத்தியத்தில் பற்று உண்டாயிற்று என்று சொன்னேனல்லவா? அந்தச் சத்தியப்பற்று அவரைப் பல தீமைகளிலிருந்து காத்தது.
இளம் பிராயத்தில் மோகன் தாஸ் காந்திக்குச் சிநேகிதர்கள் அதிகம் பேர் இல்லை. ஒரே ஒரு சிநேகிதன் கிடைத்தான். ஆனால் அவனுடைய சிநேகம் துஷ்ட சகவாசமாக முடிந்தது.
குஜராத் - கத்தியவார் பிரதேசங்களில் ஜைனர்கள் அதிகம் பேர் உண்டு. ஜைன மதம் ஜீவகாருண்யத்தை வற்புறுத்தும் மதம் அல்லவா? ஆகையால் ஜைனர்கள் புலால் உண்ண மாட் டார்கள். அதைப்போலவே அந்தப் பிரதேசத்து வைஷ்ணவர்களும் புலால் உணவை வெறுத்தார்கள். நமது தமிழ்நாட்டில், புலால் இல்லாமல் தானியம் - கறிகாய் மட்டும் உண்பதைச் 'சைவம்' என்று சொல்கிறோம். குஜராத்திலோ வைஷ்ணவர் கள் தான் 'சைவ' உண வில் வைராக்கியம் உள்ளவர்கள் !
காந்திஜியின் வம்சத்தார் வைராக்கிய சீலமுள்ள வைஷ்ணவர்கள். ஆகையினால் அவர்களுடைய வீட்டில் மாமிச உணவு கிடையாது. அந்தக் காலத்தில் 'புலால் உணவு சாப்பிட்டால் தான் தேகபலம் விருத்தியாகும்' என்று ஒரு தவறான பிரசாரம் குஜராத்தில் பரவி வந்தது. காந்தி மகானுடைய இளம் பிராய நண்பன் அந்தப் பிரசாரத்துக்குப் பலியானவன், காந்திஜிக்கும் அதைப் போதனை செய்தான். ”இங்கிலீஷ்காரனைப் பார் ! அவன் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான் ! இதற்குக் காரணம் அவன் மாமிசம் சாப்பிடுவதுதான் ! அதனாலேயே அவன் இந்தியா தேசத்தை அடிமைப்படுத்தி ஆள்கிறான் !" என்று அந்த சிநேகிதன் காந்திஜியிடம் அடிக்கடி சொன்னான். அது உண்மையாயிருக்கலாம் என்று காந்திஜியும் நம்பத் தொடங்கினார். இந்தியர்கள் எல்லாரும் புலால் உண்ணத் தொடங்கிவிட்டால் ஆங்கிலேயரை இந்தியா தேசத்திலிருந்து துரத்தி விடலா மென்று எண்ணினார்.
கடைசியாக ஒருநாள், அந்தச் சிநேகிதன் புலால் உண வுக்கு ஏற்பாடு செய்தான். அவன் கொண்டு வந்த உணவை ஆற்றங்கரையில் தனிமையான ஓர் இடத்தில் உட்கார்ந்து இரு வரும் சாப்பிடத் தொடங்கினார்கள். மோகன் தாஸ்க்கு அது பிடிக்கவேயில்லை. புலால் உண வும் அவருக்குப் பிடிக்கவில்லை; பெற்றோர்களுக்குத் தெரியாமல் இரகசியமாக அந்தக் காரியம் செய்வதும் பிடிக்கவில்லை.
அன்று இரவெல்லாம் மோகன் தாஸ் நன்றாகத் தூங்கவில்லை. கொஞ்சம் கண்ணயர்ந்தால் அவருடைய வயிற்றுக்கு உள்ளே உயிருள்ள ஆடு ஒன்று இருந்து பரிதாபமாகக் கத்துவதுபோலத் தோன்றுமாம் ! உடனே தூக்கிவாரிப் போட்டு எழுந்து உட்காருவாராம்! அன்று மாலையில் தாம் செய்த காரியத்தை நினைத்து வருந்துவாராம். பிறகு இந்தியா தேசத்தின் விடுதலைக்காக மாமிசம் சாப்பிடுவது தமது கடமை என்று எண்ணிச் சிறிது தைரியப்படுத்திக் கொள்வாராம்.
இன்னும் இரண்டு மூன்று தடவை இம்மாதிரி முயற்சி நடந்த பிறகு, முடிவாக இந்தக் காரியம் வேண்டாம் என்று மோகன் தாஸ் நிறுத்தி விட்டார். இதற்கு முக்கிய காரணம், பெற்றோர்களுக்குத் தெரியாமல் இந்தக் காரியம் செய்யவேண்டி யிருக்கிறதே என்ற எண்ணந்தான். மோகன் தாஸ் பொய் சொல்லுவதை வெறுத்தார் ; அதைக் காட்டிலும் பெற்றோர்களிடம் பொய் சொல்லுவதைப் பதின்மடங்கு அதிகமாக வெறுத்தார். இவ்விதம் சத்தியத்தில் அவருடைய பற்றுக் காரணமாக இரகசியமாகப் புலால் உண்ணும் காரியம் நின்றது. தமக்கு வயது வந்து சுதந்திர வாழ்க்கை நடத்தும்போது புலால் உணவைப் பார்த்துக்கொள்ளலாம் என்று அச்சமயம் காந்திஜி எண்ணினார். ஆனால் அந்தக் கொள்கையே தவறானது என்று வயது வந்ததும் அறிந்தார். தேக பலத்துக்கோ ஆரோக் யத்துக்கோ மாமிசபோஜனம் அவசியமில்லையென்பது பிற்காலத்தில் மகாத்மாவின் உறுதியான கொள்கை. இங்கிலாந்தில் பாரிஸ்டர் பரீட்சைக்குப் படித்தபோதும் தென்னாப்பிரிக்காவில் பல வருஷம் வாழ்ந்தபோதுங்கூட மகாத்மா 'சாகபட்சணி 'யாகவே இருந்தார். அவ்விதம் சைவ உணவு அருந்தியே மகாத்மா 79 வயது வரையில் திடகாத்திரமாக இருந்தார் அன்றோ?
இன்னொரு விஷயத்தையும் உனக்கு இப்போதே சொல்லி விடுகிறேன், தம்பி ! மகாத்மா காந்தி புலால் உணவை வெறுப்பவர்; அதனால் புலால் உண்பவர்களை யெல்லாம் அவர் வெறுப்பதில்லை. சைவ உணவுதான் நல்ல உணவு -சாத்வீக உணவு ஆரோக்கியத்துக்கு உகந்த உணவு என்பது அவருடைய உறுதியான கொள்கை. இது காரணமாக, சைவ உணவு அருந்தாமல் வேறு உணவு அருந்துவோரைக் கீழானவர்கள் என் று மகாத்மா நினைப்பதில்லை.
----------------------
துஷ்ட சகவாசத்தின் காரணமாக காந்திஜிக்கு இளம் பிராயத்தில் இன்னொரு விபத்து நேர்ந்தது. மற்றொரு நண்பனோடு சேர்ந்து இரகசியமாகச் சுருட்டுக் குடிக்க ஆரம்பித்தார், அதில் சுகம் ஒன்றும் அவர் காணவில்லை. சுருட்டுக் குடிப்பது ஒரு நாகரிகம் என்னும் எண்ணத்தினால் அந்தப் பழக்கம் ஆரம்பமாகிச் சிலகாலம் நடந்தது. சுருட்டு வாங்குவதற்குப் பணம் வேண்டியிருந்தது; கடனும் ஏற்பட்டது. கடைசியாக அவருடைய மூத்த சகோதரர் கையில் அணிந்திருந்த தங்கக் காப்பிலிருந்து ஒரு துண்டு வெட்டி எடுக்கவும் நேர்ந்தது. ஆனால் இப்படிச் செய்த குற்றம் காந்திஜியின் உள்ளத்தை மிகவும் உறுத்திற்று. மன வேதனையைத் தாங்கமுடியவில்லை. கடைசியாக செய்த குற்றம் எல்லாவற்றையும் தகப்பனாரிடம் ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்பது என்று தீர்மானித்தார். நேரில் சொல்லுவதற்குத் துணிச்சல் வரவில்லை. ஆகையால் ஒரு கடிதத்தில் தாம் செய்த குற்றத்தை விவரமாக எழுதி அதற்குத் தகுந்த தண்டனை அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் நோய்ப்பட்டுப் படுத்த படுக்கையாயிருந்த தகப்பனாரிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டு அவர் படுத்திருந்த பலகைக்கு எதிரே உட்கார்ந்து கொண்டார். தம்பி ! பிறகு என்ன நடந்தது என்பதை மகாத்மாவே சொல்கிறார். கேள் :-
"அவர் கடிதத்தை முற்றும் படித்தார். படிக்குங் காலையில் அவர் கண்களிலிருந்து கண்ணீர் முத்து முத்தாக வழிந்தது. கடிதமும் நனைந்து போயிற்று. ஒருகண நேரம் அவர் கண்ணை மூடிச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் ; பின்னர் கடிதத்தைக் கிழித்துப் போட்டார். கடிதத்தைப் படிப்பதற்காக எழுந்து உட்கார்ந்தவர் மீண்டும் படுத்துக் கொண்டார். நானும் அழத் தொடங்கினேன். அவரது அளவில்லாத மனவேதனையை உணர்ந்தேன். நான் சித்திரக் கலைஞனாயிருந்தால் அந்தக் காட்சியை இன்று படமாக எழுதிவிடுவேன். இன்னும் என் மனக் கண்ணில் அக் காட்சி அவ்வளவு தெளிவாகக் காணப்படுகிறது”.
"அந்த அன்புக் கண்ணீர்த் துளிகளினால் என் இருதயம் சுத்தமாயிற்று ; பாவம் நீங்கிற்று. அத்தகைய அன்பை அனுபவித்தோர் மட்டுமே அதன் இயல்பை உணர்தல் கூடும்”.
"இது எனக்கு அஹிம்சா தர்மத்தில் ஓர் உதாரண பாடமாக இருந்தது. அந்தக் காலத்தில் இந்த நிகழ்ச்சியில் என் தந்தையாரின் அன்பை மட்டுமே கண்டேன். இன்றைய தினமோ அது சுத்த அஹிம்ஸையே அன்றி வேறில்லை என்பதை அறிந் துள்ளேன். அத்தகைய அஹிம்சா தர்மம் உலகம் அனைத்தையும் தழுவி நிற்பது. தான் தொட்டதை யெல்லாம் பொன்னாக்கி விடும் இயல்பு கொண்டது. அதன் ஆற்றலுக்கு அளவு ஏது?"
"இத்தகைய உன்னதமான மன்னிக்கும் குணம் என் தந்தைக்கு இயல்பாக ஏற்பட்டதன்று. அவர் கோபங்கொண்டு கடுஞ்சொல் மொழிவாரென்றும், நெற்றியில் புடைத்துக் கொள்வார் என்றும் எண்ணியிருந்தேன். ஆனால் அவருடைய சாந்தம் எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கிற்று. நான் ஒளியாது என் குற்றத்தை ஒப்புக்கொண்டதே இதற்குக் காரணம் என்று நம்புகிறேன். மன்னிப்பதற்கு உரிய பெரியோரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொள்வதும், இனிமேல் குற்றம் செய்வதில்லை என்று உறுதிமொழி கூறுவதுமே குற்றத்தைப் போக்கிக்கொள்வதற்குச் சிறந்த பிராயச்சித்தமாகும். நான் எனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பயனாக என்னைப்பற்றி என் தந்தைக்குக் கவலையே இல்லாமல் போயிற்று என்னிடம் அவர் கொண்டிருந்த அன்பும் அளவு கடந்து பெருகிற்று."
இவ்விதம் மகாத்மா இளம் பிராயத்தில் சத்தியத்தில் கொண்ட பற்று பல தீமைகள் அவருக்கு ஏற்படாமல் பாதுகாத்தது மட்டுமல்ல; அந்த சத்தியப் பற்றிலிருந்தே அஹிம்சையின் பெருமையும் அவருக்கு விளங்கலாயிற்று. நாளடைவில் சத்தியமும் அஹிம்சையும் அவருடைய வாழ்க்கையாகிய வண்டிக்கு இரண்டு சக்கரச் சுவடுகளாக அமைந்தன. பிற்காலத்தில் மகாத்மா செய்து முடித்த அரும் பெரும் காரியங்களுக்-கெல்லாம் சத்தியமும் அஹிம்சையுமே அடிப்படையாயிருந்தன.
-------------
மோகன்தாஸ் காந்தி இளம் பிள்ளையா யிருந்தபோது கோவிலுக்குப் போவதுண்டு. ஆனால் கோவிலில் குடிகொண்டிருந்த ஆடம்பரங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. உண்மையான தெய்வ பக்தியோ சமயப் பற்றே ஆலயங்களில் அவருக்கு ஏற்படவில்லை.
வீட்டு வேலை செய்த ஒரு பெண்மணியிடம் தெய்வம், சமயம் - இவைகளைப் பற்றிய உண்மைகளை மோகன் தாஸ் அறிந்தார். அந்த வேலைக்காரியின் பெயர் அரம்பை. காந்திஜி குழந்தையாயிருந்தபோது அவரை எடுத்து வளர்த்த செவிலித் தாயும் இந்த அரம்பை என்னும் பெண் தெய்வந்தான்.
காந்திஜி குழந்தையா யிருந்த காலத்தில் அவருக்குப் பேய், பிசாசுகளிடம் பயம் அதிகமாம். இதோடு பாம்பு பயமும் திருடர் பயமும் சேர்ந்து கொள்ளுமாம். இருட்டைக் கண்டே பயப்படுவாராம். இருட்டில் அவரால் தூங்க முடியாதாம். கண்ணை மூடினால் ஒரு பக்கத்திலிருந்து பிசாசுகளும் இன்னொரு திசையிலிருந்து பாம்புகளும் மற்றொரு திக்கிலிருந்து திருடர்களும் வருவதாகத் தோன்றுமாம்!
இப்படிப்பட்ட பயத்தைப் போக்குவதற்கு மருந்தாக வேலைக்காரி அரம்பை ஸ்ரீராம நாமத்தின் மகிமையைக் குழந்தை மோகன தாஸ்க்குக் கூறினாள். அதன்படி ஸ்ரீ ராமஜபம் செய்து காந்திஜி பேய் பிசாசு பயத்தை ஒரு மாதிரி போக்கிக் கொண்டார். ஆனால் அத்துடன் ராமநாமத்தின் மகிமை தீர்ந்து போய் விடவில்லை.
"இளம் பிராயத்தில் அந்த உத்தமி அரம்பை விதைத்த விதை வீண் போகவில்லை. இன்றைக்கும் ஸ்ரீ ராமநாமம் எனது அருமருந்தாக இருந்து வருகிறது !" இவ்விதம் மகாத்மா காந்தி 1928-ம் ஆண்டில் எழுதினார். நாளது 1948- ஆண்டில் காந்தி மகானுடைய அந்திம யாத்திரை தொடங்கிய ஜனவரி 30-யன்றும் ஸ்ரீ ராமநாமம் அவருக்கு அருமருந்தாக உதவியது.
பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்திருந்த அந்தப் பாதகன் துப்பாக்கியால் சுட்ட உடனே ’ராம் ராம்’ என்று சொல்லிக் கொண்டு மகாத்மா காந்தி தரையில் சாய்ந்தார். அடுத்த கணமே அந்த மகா பக்தருடைய உயிர் ஸ்ரீராமனுடைய பாதார விந்தங்களை அடைந்தது.
கோடி கோடி ஜனங்கள் ஜனவரி 30- மாலையிலிருந்து பிப்ரவரி 25 வரையில் மகாத்மா காந்தியினிடத்தில் தாங்கள் கொண்ட பக்தியின் காரணத்தினால் "ரகுபதி ராகவ ராஜா ராம்" என்று ஸ்ரீ ராம நாம பஜனை செய்தார்கள்.
அடாடா ! எங்கிருந்து எங்கே எங்கே வந்து விட்டேன்? தம்பி ! காந்தி மகான் பிறந்த ஊருக்கு மறுபடியும் போகலாம், வா ! மகாத்மாவின் தகப்பனார் நோய்ப்பட்டுப் படுத்த படுக்கையாய்க் கிடந்தார் என்று சொன்னேனல்லவா? அப்போது லகா மகராஜ் என்னும் இராமபக்தர் அவர் வீட்டுக்கு வந்து துளசிதாஸ் ஹிந்தி பாஷையில் இயற்றியிருக்கும் இராமாயண கீதங்களைப் பாடினார். பாடிய பிறகு பாட்டுக்குப் பொருளும் கூறினார். அப்போது அவரும் மெய்மறந்தார் ; கேட்டுக் கொண் டிருந்தவர்களும் மெய்மறந்தார்கள். மெய்மறந்து பரவச மானவர்களில் இளம் பிராயத்துக் காந்திஜியும் ஒருவர். இராமாயணத்திலும் இராமரிடத்திலும் மகாத்மா காந்தி கொண்ட அளவிலாத பக்திக்கு அப்போதே விதை போட்டாயிற்று.
ஆனால் மகாத்மாவின் இராம பக்தியானது அவரை மற்ற தெய்வங்களையோ மதங்களையோ வெறுக்கும்படியாகச் செய்ய வில்லை. எல்லா மதங்களும் கடவுளை அடையும் மார்க்கங்கள்தான் என்னும் சமரசக் கொள்கையில் மகாத்மா உறுதி கொண்டவர். இந்தக் கொள்கையின் வித்தும் மகாத்மாவின் இளம் பிராயத்திலேயே அவருடைய மனத்தில் விதைக்கப் பட்டது.
காந்திஜியின் பெற்றோர்கள் ஹிந்து மதத்தின் உட்பிரிவுகள் சம்பந்தமாக வேற்றுமை பாராட்டுவதில்லை. சைவ - வைஷ்ணவச் சண்டைகள், தென்கலை - வடகலைச் சண்டைகள் முதலியவற்றை அவர்கள் அறிய மாட்டார்கள். விஷ்ணு கோயிலுக்குப் போவது போலவே சிவன் கோவிலுக்கும் போவார்கள். அவர்கள் வீட்டுக்கு ஜைன சமயப் பெரியோர்கள் அடிக்கடி வருவார்கள்; அவர்களுடன் அமர்ந்து போஜனமும் செய்வார்கள்.
இன்னும், காந்திஜியின் தந்தைக்கு முஸ்லிம் நண்பர்களும் பார்ஸி நண்பர்களும் பலர் உண்டு. அவர்களும் அடிக்கடி வீட்டுக்கு வருவார்கள். மதங்களைப் பற்றிய சம்பாஷணைகள் நடைபெறும். நோய்ப் பட்டிருந்த தம் தந்தைக்குப் பணிவிடை செய்து கொண்டே மோகன் தாஸ் காந்தி மேற்படி சம்பாஷணைகளைக் கவனமாய்க் கேட்டுக் கொண்டிருப்பார். இதன் பயனாக "எல்லா மதங்களும் கடவுளுக்கு உகந்த மதங்களே!" என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கு உண்டாயிற்று.
ஆனால் கிறிஸ்துவ மதத்தின் மேல் மட்டும் காந்திஜிக்கு அந்த நாளில் சிறிது வெறுப்பு ஏற்பட்டிருந்தது. இதற்குக் காரணம், பள்ளிக்கூடத்துக்கு அருகில் தெரு மூலைகளில் நின்று கொண்டு கிறிஸ்துவப் பாதிரிமார்கள் செய்த பிரசங்கங்கள் தான். ஹிந்து மதத்தையும் ஹிந்து மதத்துத் தெய்வங்களையும் மேற்படி பாதிரிமார்கள் தூஷணை செய்ததைக் காந்திஜியினால் கேட்க முடிய வில்லை இதே காலத்தில் ஒரு ஹிந்து பிரமுகர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவிய துபற்றிக் காந்திஜி கேள்விப்பட்டார். அந்த ஹிந்து பிரமுகர் கிறிஸ்துவரானவுடனே மாட்டிறைச்சி தின்னவும் சாராயம் குடிக்கவும் ஐரோப்பியரைப் போல் உடைதரிக்கவும் ஆரம்பித்து விட்டாராம்! அதோடு அந்தப் பிரமுகர் ஹிந்து மதத்தையும் இந்தியா தேசத்தையுமே தூஷிக்கவும் தலைப்பட்டாராம். இதை யெல்லாம் அறிந்ததும், "கிறிஸ்துவ மதமும் ஒரு மதமா? இதற்கு மதம் என்ற பெயரே தகாது !" என்று காந்தி மகாத்மா நினைத்தாராம்.
ஆனால் பிற்காலத்தில் மேற்படி காரியங்களுக் கெல்லாம் கிறிஸ்துவ மதம் பொறுப்பில்லை யென்றும், கிறிஸ்துவ மதப் பிரசாரகர்களே காரணம் என்றும் காந்தி மகான் அறிந்து கொண்டார். உண்மையான கிறிஸ்துவ மதம் காந்திஜிக்கு உகந்த மதமாயிற்று. தம்பி! மகாத்மா காந்தியின் மிகச் சிறந்த சிநேகிதர்களில் சிலர் கிறிஸ்துவர்கள் என்பது உனக்குத் தெரிந்திருக்குமே? அமெரிக்கப் பாதிரியாரான ரெவரண்டு ஹோம்ஸ், தீனபந்து ஆண்ட்ரூஸ், பிரஞ்சு தேசத்துப் பெரும் புலவர் ரோமன் ரோலந்து இவர்கள் எல்லாரும் கிறிஸ்துவர்கள் தான். ஆனால் இவர்கள் காந்திஜிக்கு எவ்வளவு ஆப்த நண்பர்கள் !
வெவ்வேறு மதங்களைப் பற்றிக் காந்திஜியின் உள்ளம் சிந்தித் துக் கொண்டிருந்த காலத்தில், அற்புதமான தத்துவங்கள் அடங்கிய குஜராத்தி பாஷைப் பாடல் ஒன்று அவருடைய இதயத்தில் குடி கொண்டது. அந்தப் பாட்டின் பொருள் பின் வருமாறு:
“ஒரு குவளை தண்ணீர் கொடுத்தவனுக்கு ஒரு வேளை விருந்து அளிக்க வேண்டும்.
அன்புடன் உன்னை வரவேற்கும் மனிதனை ஆர்வத்தோடு வணங்க வேண்டும்.
ஒரு காசு உனக்குக் கொடுத்தவனுக்கு ஒரு பொன் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
உன் உயிரைக் காத்து உதவிய தீரனுக்குத் திரும்ப உன் உயிரை அளிக்க எப்போதும் சித்தமாயிருக்க வேண்டும்.
இப்படி யெல்லாம் நல்லோர் உபதேசங்களை மதித்து நடப்பவன் ஒன்றுக்குப் பத்து மடங்கு நன்மை அடைவான்.
ஆனால் உண்மையில் 'சான்றோர்' எனப்படுவோரின் இலட்சணம் மேலே சொல்லப்பட்டவை மட்டும் அல்ல.
அவர்கள் மனித குலம் எல்லாம் ஒன்றென உணர்ந்தவர்கள் ; ஆதலின், அவர்களுக்கு ஒருவன் தீங்கு செய்தால், அதற்குப் பதிலாக அவர்கள் நன்மை செய்வார்கள்.
தீமைக்குப் பதில் தீமையை மறந்து நன்மை செய்வதிலே அவர்கள் ஆனந்தம் அடைவார்கள்."
தம்பி! மேலேயுள்ள குஜராத்தி கீதத்தில் கடைசி இரண்டு வரிகள் இளம் பிராயத்துக் காந்திஜியின் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்தன. அந்த வரிகளில் அடங்கி யிருக்கும் தத்துவமே அவருடைய வாழ்க்கைத் தத்துவமாயிற்று. அதுவே அவரை உலகம் போற்றி வணங்கும் மகாத்மா காந்தி ஆக்கிற்று.
---------------
மோகன் தாஸின் பதினாறாவது பிராயத்தில் அவருடைய அருமைத் தந்தையார் காலமானார். காலமாவதற்கு முன்பு நீண்ட காலம் அவர் படுத்த படுக்கையாகவே இருக்கும்படி நேர்ந்தது. அப்போதெல்லாம் மோகன்தாஸ் பள்ளிக்கூடம் போன நேரம் போக மிச்ச நேரமெல்லாம் தந்தைக்குப் பணி விடை செய்வதிலேயே கழித்தார். தினமும் இரவில் தந்தைக்குக் கால்பிடித்து விடுவார். தந்தை தூங்கியபிறகோ அல்லது அவர் போகச் சொன்ன பிற்பாடோதான் தூங்கச் செல்வார்.
தந்தை இறந்த அன்று இரவு பதினோரு மணி வரையில் மோகன் தாஸ் அவருக்குக் கால் பிடித்து விட்டுக்கொண்டிருந்தார். பிறகு அவருடைய சிறிய தகப்பனார் தாம் தந்தைக்குப் பணிவிடை செய்வதாகச் சொல்லி மோகன் தாஸைப் படுக்கப் போகும்படி சொன்னார். அவ்விதமே மோகன் தாஸ் சென்றார். ஆனால் படுத்த சில நிமிஷத்துக்கெல்லாம் வேலைக்காரன் ஓடி வந்து கதவைத் தட்டி, "அப்பாவுக்கு உடம்பு அதிகமாயிருக்கிறது ; சீக்கிரம் வாருங்கள்!" என்றான். மோகன்தாஸ் தந்தையிடம் போவதற்குள் அவருடைய உயிர் பிரிந்து விட்டது. மரணத் தறுவாயில் தந்தையின் பக்கத்தில் தாம் இருக்க வில்லையே என்று காந்திஜியின் மனத்தில் குடி கொண்ட வருத்தம் என்றைக்கும் நீங்கவில்லை.
தந்தை இறந்த இரண்டு வருஷத்துக்கெல்லாம் மோகன் தாஸ் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறினார். பிறகு கலாசாலையில் சேர்ந்து படிக்கவேண்டுமென்று வீட்டுப் பெரியவர்கள் விரும்பினார்கள். பவநகரில் இருந்த ஸமால்தாஸ் கலாசாலைக்குச் சென்று அதில் சேர்ந்தார். ஆனால் அங்கே அவருக்குத் திக்குத் திசை தெரியவில்லை. ஆசிரியர்களின் உபந்நியாசங்கள் அர்த்தமாகவேயில்லை. முதல் ஆறு மாதம் எப்படியோ கழித்து விட்டு விடுமுறைக்கு வீடு வந்து சேர்ந்தார்.
காந்தி குடும்பத்தாரின் பழைய நண்பர் மாவ்ஜி தவே என்னும் பிராமணர். அவர் சிறந்த அறிவாளி. மோகன் தாஸ் விடுமுறைக்கு வந்திருந்தபோது மாவ்ஜி தவே ஒரு சமயம் அவருடைய வீட்டுக்கு வந்தார். குடும்ப யோக க்ஷேமங்களை விசாரிக்கையில், மோகன் தாஸ் ஸமால் தாஸ் கலாசாலையில் சேர்ந்து படிப்பதைப் பற்றி அறிந்தார். பிறகு அவர் குடும்பத்தின் நன்மையை முன்னிட்டுப் பின்வருமாறு கூறினார்:- "காலம் இப்போது மாறிவிட்டது. தக்க படிப்பும் பட்டமும் இல்லாமல் உங்கள் தந்தையைப்போல் பெரிய உத்தியோகத்துக்கு நீங்கள் ஒருவரும் வரமுடியாது. குடும்பத்தில் இந்தப் பிள்ளை ஒருவன் தான் படிக்கிறான். ஆனால் இவன் கலாசாலையில் படித்து பி. ஏ. பரீட்சை தேறுவதென்றால் அதற்கு நாலு வருஷம் ஆகும். அப்போதும் மாதம் ஐம்பது அறுபது ரூபாய் சம்பளத்துக்குத்தான் தகுதியாவான். பிறகு சட்டம் படிப்பதென்றால் இன்னும் இரண்டு வருஷம் ஆகும். இப்போதே இவனை இங்கிலாந்துக்கு அனுப்பினால் மூன்றே வருஷத்தில் பாரிஸ்டர் பட்டத்துடன் திரும்பி வரலாம். பாரிஸ்டர் ஆவது மிகவும் சுலபம் என்று கேள்வி. பாரிஸ்டர் ஆகிவிட்டால், வக்கீல் தொழில் நடத்தினாலும் நடத்தலாம். திவான் முதலிய பெரிய உத்தியோகத்துக்கும் வரலாம். கால தாமதம் செய்ய வேண்டாம். இந்த வருஷமே இவனை இங்கிலாந்துக்கு அனுப்புங்கள்."
மாவ்ஜி தவேயைக் காந்தி குடும்பத்தார் "ஜோஷிஜி ' என்று அழைப்பது வழக்கம். ஜோஷிஜி சொன்ன காரியம் மோகன் தாஸுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. எப்படியாவது கலாசாலையை விட்டால் போதுமென்று அவருக்கு இருந்தது.
ஆனால் மோகன் தாஸின் சகோதரரும் தாயாரும் பெரிதும் கலக்கத்துக்கு உள்ளானார்கள். சகோதரருக்குப் பணத்தைப் பற்றிக் கவலை. அதோடு இவ்வளவு இளம் வயதுச் சிறுவனைத் தனியாக வெளிநாட்டுக்கு அனுப்பலாமா என்று கவலை!
தாயாருக்கோ தன்னுடைய கடைக்குட்டிப் புதல்வனைப் பிரியவே மனம் இல்லை. "நம்முடைய குடும்பத்தில் இப்போது பெரியவர் உன்னுடைய சித்தப்பாதான். அவரைப் பார்த்து யோசனை கேள்!" என் று தாயார் கூறினார்.
மோகன் தாஸின் குடும்பம் அப்போது இராஜகோட்டை யில் இருந்தது. சிறிய தந்தையோ போர்பந்தர் சமஸ்தானத்தில் உத்தியோகம் பார்த்தார்.
“சித்தப்பாவைப் பார்த்துப் பேசிவிட்டு அப்படியே போர் பந்தர் நிர்வாக அதிகாரியான மிஸ்டர் லெலியையும் பார். சமஸ்தான த்திலிருந்து உன்னுடைய படிப்புக்கு ஏதாவது உதவி கிடைக்கலாம் !" என்று சகோதரர் சொன்னார்.
இங்கிலாந்துக்குப் போக வேண்டும் என்று மோகன் தாஸக்கு ஒரே ஆத்திரமா யிருந்தது. ஆகவே, மூன்று நாள் கட்டை வண்டியிலும் ஒரு நாள் ஒட்டகத்தின் மேலும் பிரயாணம் செய்து போர்பந்தரை அடைந்தார்.
ஆனால் போன காரியம் கைகூடவில்லை. "உனக்கு அநுமதி நான் தர முடியாது; உன் னுடைய தாயார் சம்மதித்தால் சுக மாகப் போய் வா ! என் ஆசி உனக்கு எப்போதும் உண்டு!" என் று சித்தப்பா கூறினார்.
மிஸ்டர் லெலிக்கு அவர் சிபார்சுக் கடிதம் கொடுக்கவும் மறுத்து விட்டார். "நீயாகவே போய்ப் பார். உன்னுடைய உறவு முறையைச் சொல்லிக்கொள் !" என்றார்.
அவ்விதமே மோகன் தாஸ் துரையைப் பார்க்கச் சென்றார். "முதலில் - பி. ஏ. பரீட்சையில் தேறிவிட்டு அப்புறம் என்னை வந்து பார் !" என்று ஒரே வாக்கியத்தில் சொல்லி அனுப்பி விட்டார் லெலி துரை.
வெறுங்கையுடன் மோகன் தாஸ் இராஜகோட்டைக்குத் திரும்பினார். ஜோஷிஜி மறுபடியும் வந்தார். "பாரிஸ்டர் படிப்புக்காகக் கடன் பட்டாலும் பாதகமில்லை !" என்று வற்புறுத்தினார். மோகன் தாஸ் தமது மனைவியின் நகைகளை விற்றுவிட லாம் என்றார். சகோதரர், "அது கூடாது. நான் எப்படியாவது பணம் தேடிக்கொடுக்கிறேன் !" என்று சொன்னார்.
ஆனால் தாயார் மட்டும் மனம் இளகி அநுமதி கொடுக்கும் வழியாக இல்லை. இங்கிலாந்துக்குப் போகும் இளைஞர்கள் பல வழிகளிலும் கெட்டுப் போகிறார்கள் என்று அவர் கேள்விப் பட்டிருந்தார். இதைப்பற்றி மோகன்தாஸிடம் சொன்ன போது, அவர், "அம்மா! என்னை நம்பமாட்டீர்களா? நீங்கள் செய்ய வேண்டாம் என்று சொல்லும் காரியங்களை நான் எந்த நாளும் செய்ய மாட்டேன் !" என்றார்.
பேசார்ஜி ஸ்வாமி என்னும் ஜைன பிக்ஷ - ஜோஷிஜியைப் போலவே காந்தி குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர். அவ ரிடம் சென்று மோகன் தாஸின் அன்னை யோசனை கேட்டார்.
பேசார்ஜி ஸ்வாமியார் மோகன் தாஸை வரவழைத்தார். அன்னையையும், கூடவைத்துக்கொண்டு அவரிடம் மூன்று பிரதிக்ஞைகள் வாங்கிக் கொண்டார். "மதுபானம் செய்வதில்லை ; மாமிச உணவு சாப்பிடுவதில்லை; சிற்றின்பத்தில் ஈடுபடுவதில்லை" என்பவைதான் அந்த மூன்று பிரதிக்ஞைகள். இவ்விதம் புதல்வர் பிரதிக்ஞை செய்து கொடுத்த பிறகு அன்னையின் உள்ளம் தைரியம் அடைந்தது. மோகன் தாஸ் இங்கிலாந்து செல்ல அனுமதி கிடைத்தது.
மோகன் தாஸ் தம் இளம் மனைவியையும் சின்னஞ்சிறு குழந்தையையும் பிரிந்து பம்பாய்க்குப் பிரயாணமானார். சகோதரரும் அவரைக் கப்பலில் ஏற்றுவதற்காகக் கூடச் சென்றார். அவர்கள் பம்பாய் சேர்ந்த சமயம் ஜூன் மாதம். ஜூன், ஜூலை மாதங்களில் கடலில் கொந்தளிப்பு அதிகமிருக்கு மென்றும், சமீபத்திலேதான் ஒரு கப்பல் மூழ்கிவிட்ட தென்றும் சில நண்பர்கள் தெரிவித்தார்கள். மோகன் தாஸின் சகோதரருக்கு மிக்க கவலை ஏற்பட்டது. எனவே, ஒரு நண்பரின் வீட்டில் மோகன் தாஸ் சில மாதம் இருந்துவிட்டு அப்புறம் பிரயாணப் படலாமென்று தீர்மான மாயிற்று. பிரயாணச் செலவுக்கான பணத்தை இன்னொரு உறவினரிடம் கொடுத்துவிட்டு மோகன் தாஸின் தமையனார் இராஜகோட்டைக்குத் திரும்பினார்.
இதற்குள்ளே பம்பாயிலுள்ள பனியா சாதியாரிடையே இந்தச் செய்தி பரவியது. பனியா வகுப்பில் அது வரையில் யாரும் கப்பல் ஏறியதில்லை. எனவே, சாதிக் கூட்டம் ஒன்று கூட்டப் பட்டது. மோகன் தாஸை இந்தக் கூட்டத்துக்கு அழைத்து விசாரணை செய்தார்கள். மோகன் தாஸ் சிறிதேனும் அஞ்சாமலும் தயங்காமலும் தாம் இங்கிலாந்து போகப்போவது பற்றிச் சொன்னார். சாதித் தலைவர், “கடற் பிரயாணம் செய்வது நம் மதத்துக்கு விரோதம் அங்கே மது மாமிசம் சாப்பிட நேரிடும். போகக் கூடாது !" என்றார்.
" என் தாயாரிடம் நான் பிரதிக்ஞை செய்து கொடுத்திருக்கிறேன். மத விரோதம் செய்யாமல் என்னால் இங்கிலாந்தில் இருக்க முடியும்!" என்றார் மோகன் தாஸ்.
சாதித் தலைவரும் சாதிக் கூட்டமும் மோகன் தாஸ் கூறியதை ஒப்புக் கொள்ளவில்லை.
"இந்த வாலிபன் பிடிவாதக்காரன். இவனைச் சாதிப்பிரஷ் டேம் செய்திருக்கிறோம். மதவிரோதமாகப் பிரயாணம் செய்யும் இவனுக்கு உதவி செய்வோருக்கு அபராதம் விதிக்கப்படும்" என்று சாதிக் கூட்டத்தின் கட்டளை பிறந்தது.
இதனால் மோகன் தாஸ் மனங் கலங்கி விடவில்லை. ஆனால் இங்கிலாந்துக்குப் புறப்படுவதில் அவருக்கு ஆத்திரம் அதிகமாயிற்று. இதைத் தம் சகோதரர் கேள்விப் பட்டால் என்ன செய்வாரோ, என்னமோ? ஆகையால் உடனே புறப்பட்டுவிட விரும்பினார். தமையனார் யாரிடம் பிரயாணச் செலவுக்குப் பணம் கொடுத்து விட்டுச் சென்றாரோ அவரிடம் போய்க் கேட்டார். அந்த உறவினர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். கொடுத்தால் தாம் சாதிப் பிரஷ்டத்துக்கு உள்ளாக நேரிடும். அதற்குத் தாம் தயாராயில்லை யென்று சொல்லிவிட்டார்.
பிறகு மோகன் தாஸ் பம்பாயி லிருந்த இன்னொரு குடும்ப நண்பரைத் தேடிப் பிடித்து விஷயத்தைச் சொன்னார். கப்பல் செலவுக்குப் பணம் கடனாகக் கொடுக்கும்படியும் தமையனாரி டம் அதை வாங்கிக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார். அவர் அதற்கு இணங்கிப் பணம் கொடுத்ததுடன் மோகன் தாஸை உற்சாகப்படுத்தினார். அவர் செய்த இந்தக் காரியம் இந்தியாவும் உலகமும் செய்த புண்ணியத்தினால் தான் என்று சொல்ல வேண்டும். மோகன் தாஸுக்கு உதவி செய்த அந்தக் குடும்ப நண்பரை வாழ்த்துவோமாக.
உடனே மோகன் தாஸ் இங்கிலாந்து வாழ்க்கைக்குரிய உடைகளைத் தயாரித்துக் கொண்டார். குறிப்பிட்ட தினத்தில் கப்பல் ஏறினார். அதே கப்பலில் ஜூனாகாத் வக்கீலான ஸ்ரீ திர யம்பக ராய் மஜும்தார் என்பவர் பிரயாணம் செய்தார். மஜம் தாரின் அறையிலேயே மோகன் தாஸம் பிரயாணம் செய்யும் படி நண்பர்கள் ஏற்பாடு செய்தார்கள். மோகன் தாஸைக் கவ னித்துக் கொள்ளும்படியும் மும்தாரைக் கேட்டுக் கொண் டார்கள். செப்டம்பர் 4-ந் தேதி பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கப்பல் புறப்பட்டது.
---------
கப்பலில் சென்ற போது மோகன் தாஸ் தமது அறையை விட்டு அதிகம் வெளிக் கிளம்புவதில்லை. கப்பலில் கொடுத்த உணவையும் அருந்துவதில்லை. பம்பாயிலிருந்து கொண்டு வந் திருந்த மிட்டாய்களையும் பழங்களையுமே சாப்பிட்டு வந்தார்.
கப்பலில் இருந்த மற்றப் பிரயாணிகள் எல்லாரும் ஆங்கிலேயர்கள். அவர்களுடன் கலந்து பழகும்படி மஜூம்தார் உபதேசித்தது ஒன்றும் பயன்படவில்லை. மோகன் தாஸ் இளம் பிராயத்தில் பெரிய சங்கோசி. வேற்று மனிதர்களுடன் நெருங்கிப் பழகமாட்டார். அதோடு ஆங்கிலேயர் பேசுகிற ஆங்கில பாஷையை மோகன் தாஸினால் புரிந்து கொள்ள முடியவில்லை.
எனினும், ஆங்கிலப் பிரயாணி ஒருவர் மோகன் தாஸிடம் எப்படியோ அபிமானம் கொண்டு அவரைப் பேச்சுக்கு இழுத் தார். செங்கடலைத் தாண்டிய பிற்பாடு அந்த ஆங்கிலேயர் மோகன் தாஸ்க்கு, "இனி மாமிச போஜனம் செய்யாமல் சரிப்பட்டு வராது!" என்று போதிக்கத் தொடங்கினார். "இங் கிலாந்து குளிர் மிகுந்த தேசம். அங்கே இந்த விரத மெல்லாம் அனுஷ்டிக்க முடியாது!" என்று எச்சரித்தார்.
எனினும் மோகன் தாஸின் உள்ளம் சிறிதும் சலிக்கவில்லை. அன்னைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வந்தார்.
ஸெளதாம்டன் துறைமுகத்தில் இறங்கி லண்டனுக்குச் சென்றதும் விக்டோரியா ஹோட்டலில் தங்கினார். அங்கே கொடுத்த உணவை அவரால் சாப்பிட முடியவில்லை. ஆனால் செலவு மட்டும் ஏராளமாயிற்று.
லண்டனில் நாலு பேருக்கு மோகன் தாஸ் கரம் சந்திர காந்தி கடிதம் கொண்டு வந்திருந்தார். அவர்கள் டாக்டர் பி. ஜே. மேத்தா, ஸ்ரீ தளபதி ராம் சுக்லா, ராஜா ரஞ்சித்சிங், ஸ்ரீ தாதாபாய் நௌரோஜி ஆகிய பிரமுகர்கள்.
இவர்களில் டாக்டர் மேத்தா என்பவர் மோகன் தாஸை விக்டோரியா ஹோட்டலில் சந்தித்து, "ஹோட்டல் வாசம் உனக்குச் சரிப்பட்டு வராது. ஏதாவது ஓர் ஆங்கிலக் குடும்பத்தில் பணம் கொடுத்துச் சாப்பிடுவதுதான் சௌகரியம். அதற்கு நான் ஏற்பாடு செய்யும் வரையில் என் நண்பர் ஒருவரோடு இரு!" என்று சொன்னார்.
அந்த நண்பரும் மோகன் தாஸுக்கு மாமிசம் சாப்பிடும்படி உபதேசிக்கத் தொடங்கினார். "எழுத்து வாசனை அறியாத தாயாரிடம் செய்து கொடுத்த பிரதிக்ஞையை ஏன் கட்டிக் கொண்டு அழுகிறாய்? " என்று கேட்டார்.
இதனாலும் மோகன் தாஸின் மன உறுதி தளரவில்லை.
பின்னர், ஆங்கிலக் குடும்பம் ஒன்றில் அவர் வசிப்பதற்கு டாக்டர் மேத்தாவும் ஸ்ரீ சுக்லாவும் ஏற்பாடு செய்தார்கள்.
அந்தக் குடும்பத்தின் தலைவியான மூதாட்டி மோகன் தாஸை மிக்க அன்போடு நடத்தினார். ஆயினும், இங்கேயும் உண வு சரிப்பட்டு வரவில்லை. அவர்கள் கொடுத்த இரண்டு ரொட்டித் துண்டங்கள் மோகன் தாஸுக்குப் போதவில்லை. அதிகம் கேட்கவும் சங்கோசமா யிருந்தது.
நல்ல வேளையாக இதற்குள் மோகன் தாஸுக்குக் கால் முளைத்திருந்தது! அதாவது லண்டன் நகரில் அங்குமிங்கும் சுற்ற ஆரம்பித்திருந்தார். சைவ போஜன சாலை ஒன்று அவரு டைய கண்ணில் பட்டது. அதற்குள் நுழைந்தார். "மரக்கறி உண வின் மகிமை" என்ற பெயருடன் ஆசிரியர் ஸால்ட் எழுதிய புத்தகம் ஒன்றும் அந்த ஹோட்டலில் விற்றார்கள். மோகன் தாஸ் அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டு போய்ப் படித்தார். அதன் பலனாகச் சைவ உணவில் மோகன் தாஸுக்குப் பற்றுதலும் நம்பிக்கையும் உண்டாயின. அன்னைக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக மட்டுமில்லாமல் தம்முடைய சொந்த இஷ்டத்தின் பேரிலேயே சைவ உணவு விரதத்தில் உ றுதி கொண்டார். உணவு பற்றிய இன்னும் பல புத்தகங்கள் படித்து ஆராய்ச்சிகளும் நடத்தத் தொடங்கினார்.
லண்டனுக்குப் போன புதிதில் மோகன் தாஸ் ஆங்கிலேய கனவான்களைப் போல் தோரணையாக வாழ்க்கை நடத்த முயன்றார். நவநாகரிக உடுப்புகள் தைத்துக் கொண்டார். நிலைக் கண்ணாடியின் முன்னால் நின்று தலையை ஜோராக வாரிக் கொள்வதில் தினம் பத்து நிமிஷம் சென்றது. பிறகு ஆங்கில நடனம் கற்றுக் கொள்ள முயன்றார். நடனப் பயிற்சிக்குத் தாள ஞானம் அவசியமாயிருந்தது. இதற்காக ஆங்கில சங்கீதம் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். ஒரு வயலினும் வாங்கினார். இதெல்லாம் சொற்ப காலந்தான் நீடித்திருந்தது. ஆங்கில நாகரிக மோகம் மூன்று மாதத்திற்குள்ளே மோகன் தாஸை விட்டுச் சென்றது.
"இங்கிலாந்தில் நாம் எப்போதும் வாசிக்கப்போகிறோமா? பாரிஸ்டர் படிப்பு முடிந்ததும் தாய்நாடு திரும்ப வேண்டியது தானே? இந்த அயல் நாட்டு நாகரிகம் எல்லாம் நமக்கு என் னத்திற்கு?" என்று எண்ணினார். "நம்முடைய ஒழுக்கத்தினால் நாம் கனவானாக வேண்டுமே தவிர இத்தகைய வெளி வேஷங்களினால் கன வானாவதில் என்ன பயன்?" என்றும் சிந்தனை செய்தார். இத்தனை நாளும் தாம் கொண்டிருந்தது பொய்யான வாழ்க்கை இலட்சியம் என்று தெரிந்து ஆங்கில நாகரிக ஆசையை விட்டுத் தொலைத்தார்.
தம்பி! இதற்கு முன்னர் காந்திஜியின் சிறு பிராயத்துக் குறைபாடுகள் சிலவற்றைச் சொல்லி யிருக்கிறேன். மேலேயும் குறிப்பிட்டிருக்கிறேன்.
”இப்பேர்ப்பட்ட மகானுடைய சரித்திரத்தில் இம்மாதிரி சிறு குறைகளை யெல்லாம் ஏன் சொல்ல வேண்டும்?" என்று நீ கருதலாம். அல்லது, "இந்த மாதிரி குறைகள் இருந்தவர் எப்படி மகாத்மா ஆனார்? ” என் று ஆச்சரியப்படலாம்.
இதை யெல்லாம் பற்றி மகாத்மா தமது சுய சரிதத்தில் தாமே எழுதியிருக்கிறார் என்பதை நீ ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். இம்மாதிரி சுய சரிதம் எழுதும் பிரமுகர்கள் சாதாரணமாகத் தங்களுடைய குறைகளைத் தாங்கள் சொல்ல மாட்டார்கள். தங்களுடைய பெருமையை உயர்த் தக்கூடிய முறையிலேயே சுய சரிதம் எழுதுவார்கள். தங்களுடைய குறைகளைக்கூடக் குணங்களைப் போல் மாற்றி மெருகு கொடுத்து எழுதுவார்கள்.
இதிலே தான் காந்திஜிக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண வேண்டும். காந்திஜி உள்ளது உள் ள படி தம்மிடமிருந்த குறைபாடுகளை எடுத்துச் சொல்லி யிருக்கிறார். இதுமட்டுமல்ல; இந்தியாவின் மாபெரும் தலைவராகி, ”மகாத்மா" என்று மக்கள் போற்றத் தொடங்கிய பிற்பாடு கூட, தாம் செய்த தவறுகளை வெளிப்படையாக எடுத்துச் சொல்வது அவர் வழக்கம். 1922-ம் ஆண்டில் ஒரு சமயம் - இமாலயத் தவறு செய்து விட்டேன்" என்று மகாத்மா காந்தி கூறியது பலராலும் பல தடவை பல இடங்களில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
உண்மையில், இத்தகைய சத்தியப் பற்றினாலே தான் காந்திஜி உலகம் போற்றும் மகா புருஷர் ஆனார்.
காந்திஜியின் இளம்பிராயக் குறைகளைப் படித்துத் தெரிந்து கொண்டதிலிருந்து நீ இன்னொரு விஷயம் அறிய வேண்டும். மகாத்மா பிறக்கும்போதே மகாத்மாவாகப் பிறக்கவில்லை. சிறு பிராயத்தில் உன்னையும் என்னையும் போலவே பல குறைகள் உள்ள சாதாரணச் சிறுவராகவே இருந்தார். ஆயினும் சத்தியத்தின் உறுதியினாலும் மனத்தின் திட சங்கல்பத்தினாலும் இடை விடாத பிரயாசையினாலும் அந்தக் குறைகளை யெல்லாம் போக்கிக்கொண்டு மகாத்மா ஆனார். இது நமக்கெல்லாம் நம்பிக்கை தரவேண்டிய விஷயம். நம்மிடம் உள்ள குறைகளையும் நாம் பிரயாசைப்பட்டுப் போக்கிக் கொள்ளலாம். மகாத்மாவைப் போல் எல்லாரும் அவ்வளவு மகிமையடைய முடியாதுதான். மகாத்மாவைப் போன்ற மகா புருஷர் ஒருவர் உலகத்தை உத்தாரணம் செய்வதற்கு இரண்டாயிரம் வருஷத்துக்கொரு முறையே தோன் றக்கூடும். ஆயினும் பிரயாசைப்பட்டு நம்மை நாம் உயர்த்திக் கொள்ளலாம். நம்முடைய மனச்சாட்சியை நாம் திருப்தி செய்து கொள்ளலாம். "குறைகளைப் போக்கிக் கொள்ள நம்மால் முடியாது !" என்று நிராசை யடைந்து மேலும் மேலும் படுகுழியில் இறங்கி முழுகிப் போய்விட வேண்டிய தில்லை. நம்முடைய குறைகளுடன் நாம் போராடி வெற்றி கொள்ளலாம்.
இதற்காகத்தான் மகாத்மாவின் சிறு பிராயத்துக் குறைகளை விட்டுவிடாமல் நான் குறிப்பிட்டேன். முன் அத்தியாயங்களைப் படித்த உன் தாயார், "இதெல்லாம் குழந்தைக்கு எதற்காகச் சொல்கிறீர்கள்? இதனால் நன்மை என்ன?" என்று கேட்டாள். “உண்மையே வடிவான ஒருவரைப்பற்றி எழு தும்போது உண்மையைத்தானே எழுத வேண்டும்? அதனால் நிச்சயமாக நன்மையே விளையும்!" என்று நான் மறுமொழி சொன்னேன். நீ என்ன நினைக்கிறாய், தம்பி! சந்தோஷம். என்னுடன் ஒத்தே நீயும் அபிப்பிராயப் படுகிறா யல்லவா? அப்படியானால் மோகன் தாஸின் இங்கிலாந்து வாழ்க்கையில் இன்னொரு சம்பவத்தையும் கேள்.
அந்தக் காலத்தில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்ற மாணவர்கள் கலியாணமானவர்களா யிருந்தாலும் பிரம்மச்சாரிகளைப் போல் நடிப்பது வழக்கமாம். இப்படி நடிப்பதினால் ஆங்கிலக் குடும்பங்களில் உள்ள கலியாணமாகாத பெண்களுடன் அவர்கள் சல்லாபம் செய்வது சாத்தியமா யிருந்தது. ஆங்கிலேயரில் பலர் விசால நோக்கம் படைத்தவர்கள். தங்கள் பெண்கள் இந்திய இளைஞர்கள் மேல் காதல் கொண்டால் அவர்களைக் கலியாணம் செய்து கொள்வதற்குப் பெற்றோர் ஆட்சேபிப்ப தில்லை. இதை அறிந்து பல இந்திய இளைஞர்கள் பிரம்மச்சாரிகளைப்போல் நடித்துப் பொய் வாழ்க்கை நடத்தினார்கள்.
மோகன் தாஸம் இங்கிலாந்தில் வசித்தபோது சில காலம் இத்தகைய பொய் வாழ்க்கை நடத்தினார்., ஆங்கில சமூகத்தில் சாதாரணமாக இளமை மணம் கிடையாது. ஆகையால், பத்தொன்பது வயதேயான மோகன் தாஸ்-க்கு "நான் கலியாணம் ஆனவன். எனக்கு மனைவி இருக்கிறாள்' என்று சொல்லிக் கொள்ள மிகவும் சங்கோசமாயிருந்தது.
ஓர் ஆங்கில மூதாட்டி மோகன் தாஸின் பேரில் அபிமானம் கொண்டார். தம் வீட்டுக்கு அவரை அடிக்கடி அழைத்தார். அந்த வீட்டிலிருந்த கலியாணமாகாத பெண்கள் மோகன் தாஸிடம் கூச்சமின்றிச் சிநேக முறையில் பழகினார்கள்.
ஆனால் ஒரு பெண் விஷயத்தில் மோகன் தாஸுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அவளைத் தமக்குக் கலியாணம் செய்துவைக்க அந்த வீட்டு மூதாட்டி எண்ணுகிறாளோ என்று தோன்றியது. இதனால் கவலைக்குள் ஆழ்ந்தார். அவருடைய மனச்சாட்சி அவரை உறுத்தியது. கடைசியாக, மோகன்தாஸ் பின் வரும் கடிதத்தை அந்த அம்மாளுக்கு எழுதினார் :-
"பிரைட்டனில் நாம் முதன் முதலில் சந்தித்த தினத்திலிருந்து தாங்கள் என்னிடம் மிகவும் பிரியம் காட்டி வந்திருக்கிறீர்கள். என்னைத் தங்கள் புதல்வனாகவே எண்ணி என் பொருட்டுக் கவலை எடுத்து வந்திருக்கிறீர்கள். எனக்கு மணம் செய்து வைக்க வேண்டும் என்று விரும்பி அதற்காக இளம் பெண்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்து வருகிறீர்கள். ஆனால் காரியம் மிஞ்சிப் போவதற்கு முன்னால், தங்களுடைய அன்புக்கு நான் அருகனல்லன் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தங்கள் வீட்டுக்கு வரத் தொடங்கியபோதே நான் இல்லறத்தான் என்பதைத் தெரிவித்திருக்க வேண்டும். இங்கிலாந்தில் இந்திய மாணாக்கர்கள் பிரும்மசாரிகள் போல் நடிப்பதை அறிந்து நானும் அவ்வாறு செய்து வந்தேன். என் தவறினை இப்போது உணர்கிறேன். சிறுவனாயிருந்த-போதே எனக்கு மணம் ஆகிவிட்டது. இப்போது எனக்கு ஒரு புதல்வனும் உளன். இத்தனை காலம் இந்த விவரங்களைத் தங்களுக்கு அறிவியா திருந்த தன் பொருட்டு என் உள்ளம் வருந்துகிறது. இப்பொழுதேனும் உண்மை சொல்லுவதற்கு இறைவன் எனக்குத் தைரியம் அளித்தது பற்றி மகிழ்ச்சி யடைகிறேன். என்னைத் தாங்கள் மன்னித்து விடுவீர்களா? எனக்குத் தாங்கள் அறிமுகம் செய்து வைத்த இளம் பெண் விஷயத்தில் தகுதியற்ற உரிமை எதையும் நான் எடுத்துக் கொண்டதில்லை யென்று உறுதி கூறுகிறேன். நான் ஏற்கெனவே கலியாணமானவன் என்னும் விஷயம் தங்களுக்குத் தெரியாதாதலின், எங்களிருவருக்கும் விவாகமாக வேண்டுமென் று தாங்கள் விரும்பியது இயல்பே. விஷயம் இதற்கு மேல் போகக் கூடாது என்று உண்மை கூறலானேன்."
"இக்கடிதத்தைப் படித்ததும் தங்கள் அன்புக்கு அபாத்திரனாக நான் நடந்து கொண்டதாகத் தாங்கள் கருதினால் அதற்காகத் தங்கள் மீது வருத்தப்பட மாட்டேன். தாங்கள் இதுகாறும் என் மீது காட்டி வந்த பிரியத்துக்கும், செய்த உதவிக்கும் என்றென்றைக்கும் நன்றிக் கடன் பட்டவனாவேன். இதற்குப் பிறகும் தாங்கள் என்னைப் புறக்கணியாமல், தங்கள் வீட்டுக்கு வரத் தகுதியுள்ளவனாகக் கருதினால் நான் மகிழ்ச்சி யடைவேனென்று சொல்ல வேண்டியதில்லை. தங்கள் அன்புக்கு இது மற்றோர் அறிகுறி என்று கருதுவதுடன் அந்த அன்புக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளவும் முயல்வேன்."
மறு தபாலில் அந்த ஆங்கில மூதாட்டியிடமிருந்து பின் வரும் பதில் வந்தது :
"உண்மைய றிவிக்கும் உமது கடிதம் பெற்றேன். நாங்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சி யடைந்தோம். இடி இடி யென்று சிரித்தோம். நீர் கூறும் பொய்மைக் குற்றம் மன்னிக் கற்பாலதே. ஆனால் உண்மை நிலையை எங்களுக்கு அறிவித்தது நலமே யாகும். உமக்கு நான் அனுப்பிய அழைப்பு இதனால் மாறுபடவில்லை. அடுத்த ஞாயிற்றுக்கிழமை கட்டாயமாக உம்மை எதிர்பார்க்கிறோம். உமது குழந்தை மணத்தைப் பற்றி எல்லா விவரங்களையும் கேட்டு மகிழ மிகுந்த ஆவல் கொண்டிருக்கிறோம்."
மேற்படி பதில் கிடைத்த பிறகு மோகன் தாஸின் மனத்தில் இருந்த பெரும் பாரம் நீங்கிற்று. இதற்குப் பிறகு சந்தர்ப்பம் நேர்ந்த போதெல்லாம் தமக்கு விவாகம் ஆகிவிட்டது என்ற விவரத்தை அவர் தெரிவித்து விடுவது வழக்கமாம் !
-------------
இங்கிலாந்தில் இரண்டு வருஷ வாசத்துக்குப் பிறகு பிரம்ம ஞான சங்கத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுடன் மோகன் தாஸுக்குச் சிநேகம் ஏற்பட்டது. அவர்கள் கீதை படித்துக் கொண்டிருந்தார்கள். மோகன் தாஸையும் தங்களுடன் படிப்பதற்கு அழைத்தார்கள். அதுவரையில் மோகனர் கீதை படிப்பதில்லை. ஆங்கிலேயர் தூண்டும் வரையில் தாம் பகவத் கீதை படிக்கவில்லையே என்பதை எண்ணி அவர் வெட்கப் பட்டார். பிறகு அவர்களுடனே பகவத் கீதையின் சம்ஸ்கிருத சுலோகங்களையும் ஸர் எட்வின் அர்னால்டின் மொழி பெயர்ப்பையும் படிக்கத் தொடங்கினார். பகவத் கீதை விலை மதிக்க முடியாத ஒரு ஞானப் பொக்கிஷம் என்று அவருக்குத் தோன்றியது. ஞான நூல்களில் பகவத் கீதைக்கு ஒப்பான து வேறொன்றுமில்லை யென்பது மகாத்மா காந்தி பிற்காலத்தில் கொண்ட உறுதியான தீர்மானம்.
காந்திமகான் தினந்தோறும் நடத்தி வந்த மாலைப் பிரார்த் தனைகளில் பகவத் கீதை இரண்டாவது அத்தியாய சுலோகங்கள் பாராயணம் செய்யப்பட்டு வந்ததை நீ அறிந்திருப்பாய். அந்த இரண்டாவது அத்தியாய சுலோகங்களில் இரண்டு சுலோகங்களின் கருத்து பின் வருமாறு :
"மனிதன் இந்திரிய விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பதனால் அவற்றில் பற்றுதல் உண்டாகிறது. பற்றுதலிலிருந்து ஆசை பிறக்கிறது. ஆனச குரோதமாகக் கொழுந்து விட்டெரிகிறது. குரோதத்தினால் சிந்தை மயக்கமும், நினைவுத் தவறுதலும் உண்டாகின்றன. நினைவுத் தவறுதலால் புத்தி நாசமடைகிறது. புத்தி நாசத்தினால் மனிதன் அழிகிறான்.”
மேற்படி கருத்துடைய பகவத்கீதை சுலோகங்களை முதன் முதலில் படித்தபோதே மோகன் தாஸின் இதயத்தில் ஞான தீபத்தை ஏற்றி வைத்தன.
பிறகு அந்தச் சகோதரர்கள் கூறியதன் பேரில் ஸர் எட்வின் அர்னால்டின் "ஆசிய தீபம்" என்ற நூலையும் மோகன் தாஸ் படித்தார். "ஆசிய தீபம் " என்பது புத்த பகவானுடைய சரித்திரம். ஏற்கெனவே கருணையும் தயாளமும் குடிகொண்டிருந்த மோகன் தாஸின் உள்ளத்தை அந்த நூல் பெரிதும் கவர்ந்தது.
இந்தச் சமயத்தில் பெஸண்டு அம்மையார் பிரம்மஞான சங்கத்தை சேர்ந்தார். அவரையும் சங்கத் தலைவரான பிளாவட்ஸ்கி அம்மையையும் பார்ப்பதற்கு மேற்கூறிய சகோதரர்கள் மோகன் தாஸை அழைத்துச் சென்றார்கள். பிரம்மஞான சங்கத்தில் சேரும்படியாகவும் அவருக்குச் சொன்னார்கள். "என்னுடைய சொந்த மதத்தைப் பற்றி இன்னும் நான் சரியாகத் தெரிந்து கொள்ள வில்லையே ! அப்படித் தெரிந்து கொள்வதற்கு முன்னால் எந்த மதச் சங்கத்திலும் சேர நான் விரும்பவில்லை" என்று மோகன்தாஸ் சொல்லி விட்டார். ஆனாலும் பிரம்மஞான சங்கத்தாரின் நூல்களைப் படித்ததனால் பெரும் பயன் அடைந்தார். ஹிந்து மதத்தில் குருட்டு நம்பிக்கைகளே அதிகம் என்று பாதிரிமார்களின் பிரசாரத்தினால் ஏற்பட்டிருந்த தப்பபிப்பிராயம் நீங்கிற்று.
சைவ போஜன சாலையொன்றில் உத்தமரான கிறிஸ்துவர் ஒருவரை மோகன் தாஸ் சந்தித்தார். இராஜ கோட்டையில் வசித்தபோது சில பாதிரிமார்களின் அபத்தப் பிரசாரத்தினால் கிறிஸ்துவ மதத்தைப் பற்றித் தமக்கு ஏற்பட்டிருந்த தாழ் வான அபிப்பிராயத்தை அவரிடம் கூறினார். அந்தக் கிறிஸ்துவ நண்பர், "நான் புலால் உண்பதில்லை ; மதுபானமும் செய்வதில்லை; கிறிஸ்துவ வேதம் மது மாமிசம் அருந்தும்படி கட்டளை யிடவும் இல்லை. நீர் தயவு செய்து பைபிள் வாசிக்க வேண்டும்" என்று கூறி, ஒரு பைபிள் புத்தகமும் வாங்கிக் கொடுத்தார்.
பைபிள் புத்தகத்தில் பழைய ஏற்பாடு மோகன் தாஸுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் புதிய ஏற்பாடும், முக்கியமாக ஏசுநாதர் மலைமேலிருந்து செய்த உபதேசங்களும், மோகன் தாஸின் இதயத்தில் இடம் பெற்றுவிட்டன. "தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர். வல து கன்னத்தில் அடித்தவனுக்கு இடது கன்னத்தையும் காட்டுக. உங்கள் சட்டையை ஒருவன் எடுத்துச் சென்றால் அவனுக்கு உங்கள் போர்வையையும் கொடுங்கள் !" என்னும் கிறிஸ்துவ சமயத்தின் சாரமான உபதேசங்கள் மோகன் தாஸுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தன. பகவத் கீதையின் உட்பொருளும், "ஆசியதீபத்தில் அடங்கிய தத்துவமும், ஏசுநாதரின் உபதேசமும் சாராம்சத்தில் ஒன்றுதான் என் று மோகன் தாஸ் அறிந்தார். மொத்தத்தில், துறவும் தியாகமுமே மேலான சமய வாழ்க்கை என்ற நம் பிக்கை உண்டாயிற்று.
கார்லைல் எழுதிய "வீரரும் வீர பூஜையும்" என்ற நூலில் "வீர தீர்க்கதரிசி " என்னும் அத்தியாயத்தைப் படித்து முகம்மது நபி அவர்களின் கடும் விரத வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொண்டார். எனவே, இஸ்லாம் மதத்தின் பேரிலும் மோகன் தாஸ்க்கு மரியாதை ஏற்பட்டது.
இதே காலத்தில் இங்கிலாந்தில் நாஸ்திகப் பிரசாரம் ஒரு பக்கத்தில் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அதனால் மோகன தாஸின் மனம் சலிக்கவில்லை.
இங்கிலாந்தில் சார்லஸ் பிராட்லா என்பவர் இந்தியாவின் பிரசித்தி பெற்ற நண்பர். இந்தியாவுக்காக ரொம்பவும் பரிந்து பேசியவர். ஒழுக்கத்திலும் ஜீவகாருண்யத்திலும் சிறந்தவர். ஆனால் அவர் "கடவுள் உண்டு" என்னும் நம்பிக்கை தமக்கு இல்லை-யென்றும், சன்மார்க்கமே உண்மையான சமயம் என் றும் சொல்லி வந்தார்.
சார்லஸ் பிராட்லா காலமானபோது அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு லண்டனில் அப்போது வசித்த அவ்வளவு இந்தியர்களும் சென்றிருந்தார்கள். மோகன் தாஸும் சென்றிருந்தார். திரும்பி வரும்போது அவர் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்திருக்க நேர்ந்தது.
புகைவண்டி நிலையத்தில் ஏகக் கூட்டமாயிருந்தது. கூட் டத்திலிருந்த நாஸ்திகர் ஒருவர் அங்கு நின்ற ஒரு கிறிஸ் துவப் பாதிரியாரை வீண் வம்புக்கு இழுத்தார்.
“ நல்லது ஐயா, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதாக நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா?" என்று அவர் கேட்டார்.
"ஆம், நம்புகிறேன்" என்று அந்த உத்தமப் பாதிரியார் சாந்தமான குரலில் பதில் சொன்னார்.
"அப்படியானால், தயவு செய்து சொல்லுங்கள். தங்கள் கடவுள் எவ்வளவு பெரியவர்? அவர் எங்கே இருக்கிறார்?"
"நமக்கு அறியுந் திறன் உண்டானால், நம் இருவரின் இருதயங்களிலும் அவர் இருக்கிறார்" என்றார் பாதிரியார்.
"ஓ! இதுதானே வேண்டாம் என்கிறேன்? என்னைக் குழந்தை என் று நினைத்துக் கொண்டீர்களா?" என்று அந்த நாஸ்திக வீரர் கூறிவிட்டுப் பெரும் வெற்றி அடைந்தவரைப் போல் சுற்றிலும் உள்ளவர்களைப் பார்த்தார்.
கிறிஸ்தவப் பாதிரியாரோ அடக்கத்தை அணிகலனாகப் பூண்டு மௌனம் சாதித்தார்.
இயற்கையிலேயே பண்பாடு பெற்ற மோகன் தாஸின் இளம் உள்ளம் மேற்படி வாக்குவாதத்தினால் நாஸ்திகத்தின் பேரில் அதிகமான வெறுப்புக் கொண்டது.
--------------
பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக அல்லவா மோகன்தாஸ் இங்கிலாந்துக்குப் போனார்? அது என்ன ஆயிற்று என்று இப் போது சொல்லுகிறேன்.
பாரிஸ்டர் ஆவது மிகவும் சுலபம் என்று ஜோஷிஜி கூறியது முற்றும் உண்மை. இந்தியாவில் உள்ளதுபோல் இங்கிலாந்தில் சட்ட கலாசாலைகளுக்குச் சென்று படிக்கவேண்டியதில்லை.
பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்கு ஒரு மாணவன் இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யவேண்டும். அவை என்ன வென்று சொல்லட்டுமா? தம்பி ! (1) மாணாக்கர்களும் பாரிஸ்டர் - நீதிபதிகளுமாகச் சேர்ந்து உட்கார்ந்து பலமுறை விருந்து சாப்பிட்டாக வேண்டும். (2) குறிப்பிட்ட சில முக்கிய பரீட்சைகளில் மட்டும் தேறவேண்டும்.
விருந்து சாப்பிடுவது என்னத்திற்கு என்று நீ அறிய விரும்பலாம். முற்காலத்தில் சட்ட மாணாக்கர்களின் தொகை மிகக் குறைவாயிருந்தபோது பாரிஸ்டர்களும் நீதிபதிகளும் சட்ட மாணாக்கர்களும் கலந்து பழகுவதற்காகவும் சட்ட விஷயங்களைப் பற்றிச் சர்ச்சைகள் செய்வதற்காகவும் இந்த விருந்துகள் ஏற்படுத்தினார்களாம். இப்போது மாணாக்கர்களின் தொகை மிக அதிகம். பாரிஸ்டர்களும் நீதிபதிகளும் எங்கேயோ ஒரு மூலையில் உட்கார்ந்து தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். மாணவர்களுடன் அவர்கள் பேசுவதற்கே வசதி இராது. எனவே, இந்த விருந்துகள் ஏற்படுத்திய நோக்கம் இப்போது நிறைவேறுவதேயில்லையாம். ஆனாலும் சம்பிரதாயத்தை மட்டும் விடாமல் அனுஷ்டித்து வருகிறார்களாம்.
தம்பி! இந்தியா தேசத்திலே தான் நாம் பழைய சம்பிரதாயங்களை அதிகமாய்க் கட்டிக்கொண்டு அழுகிறோம் என்று சாதாரணமாய் நினைக்கிறோமல்லவா? ஆங்கிலேயர் நம்மை விடப் பழைய சம்பிரதாயங்களில் அதிகப் பற்று உள்ளவர்கள், நம்மை விட அதிகமாக ஆங்கிலேயர் குருட்டு நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் உள்ளவர்கள் என்றுகூடச் சொல்லலாம்.
ஒரு காலத்தில் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் 200 அங்கத்தினர்தான் இருந்தார்களாம். ஆகையால் 200 ஆசனங்கள் மட் டும் பார்லிமெண்டில் போடப்பட்டிருந்ததாம். இப்போது 650 அங்கத்தினர்கள் இருந்தபோதிலும் பழைய சம்பிரதாயப்படி 200 ஆசனங்கள் தான் இருக்கின்றனவாம். முன்னால் வந்தவர்கள் தான் ஆசனத்தில் உட்காரலாம். மற்றவர்கள் பின்னால் நிற்கவேண்டியதுதான் ! எப்படியிருக்கிறது கதை ! பாரிஸ்டர் ஆவதற்காக விருந்துகள் நடக்கும் விஷயமும் இப்படிப்பட்ட சம்பிரதாயந்தான்.
பாரிஸ்டர் விருந்துகள் மூன்று மாதத்துக்கு இருபத்துநாலு நடைபெறும். இவற்றில் குறைந்த பட்சம் ஆறு விருந்துகளுக்கு மாணவர்கள் கட்டாயம் போகவேண்டும். இம்மாதிரி மூன்று வருஷ காலம் விருந்துகளுக்குப் போய்த் தீரவேண்டும்.
விருந்து என்றால், இலவசச் சாப்பாடு அல்ல. இரண்டு அல்லது மூன்று ரூபாய் ஒவ்வொரு மாணாக்கனும் கொடுக்க வேண்டியிருக்கும். பணம் கொடுக்க வேண்டியது கட்டாயம். ஆனால் சாப்பிடுவது கட்டாயம் அல்ல ; சும்மா உட்கார்ந்திருந்துவிட்டுத் திரும்பலாம். பொதுவாக விருந்தில் நல்ல உணவு வகைகளும் மதுபான வகைகளும் கொடுக்கப்பட்ட படியால் மாணவர்கள் ஒரு கை பார்த்து விடுவார்களாம் ! மோகன் தாஸுக்கோ அவருடைய விரதம் இருந்தது. புலால் கலந்த உணவும் மதுபானமும் அவருக்கு உதவா. முதலிலெல்லாம் மோகன்தாஸ் சும்மா உட்கார்ந்து பார்த்திருந்து-விட்டுத் திரும்பினார். எனவே அவருடைய பங்கும் தங்களுக்குக் கிடைக்கும் என்பதற்காக மற்ற மாணவர் கோஷ்டிகள் தங்களுடன் சேர்ந்து உட்காரும்படி மோகன் தாஸை வற்புறுத்தி அழைக்கும்படி ஏற்பட்டது. அப்பொழுதல்லாம் விருந்துகளில் மோகன்தாஸ்க்கு ஏகக் கிராக்கி !
கொஞ்ச காலத்துக்குப் பிறகு மோகன் தாஸுக்குத் தைரியம் பிறந்து, பாரிஸ்டர் - நீதிபதிகளுக்காகத் தனியாகக் கொடுக்கப்பட்டு வந்த பழங்களையும் கறிவகைகளையும் தமக்கும் கொடுக்க வேண்டுமென்று கேட்டு பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டாராம்.
'சாப்பாட்டு ராமன்' என்று நம் ஊரில் வேடிக்கையாகச் சொல்கிறோமல்லவா? இதுபோலவே இங்கிலாந்தில் சாதாரணமாய்ச் ' சாப்பாட்டு பாரிஸ்டர்' என்று சொல்லுவதுண்டாம்.
விருந்து விஷயம் இப்படியிருக்க ; பரீட்சை சமாசாரம் என்ன வென்று கேள். இரண்டே இரண்டு விஷயம் பற்றிய பரீட்சைகள் நடக்கும். ஒன்று ரோமன் சட்டம் ; இன்னொன்று ஆங்கில நாட்டின் பழமைச் சட்டம். இவற்றில் தனித் தனிப் பகுதிகளுக்குப் பரீட்சைக்குப் போகலாம். பரீட்சைகளுக்குப் பாடபுத்தகங்கள் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் யாரும் சிரமப்பட்டுப் படிப்பதில்லை. இரண்டு அல்லது மூன்று மாதம் இலேசாகக் குறிப்புகளைப் படித்துவிட்டுப் பரீட்சைகளில் தேறிவிடலாம். பரீட்சைக் கேள்விகள் மிகவும் சுலபமானவை. பரீட்சைப் பரிசோதகர்களோ தாராள மனம் உள்ளவர்கள். ஆகையால் பரீட்சைக்கு எழுதுகிறவர்களில் 100-க்கு 95 பேர் முதல் 99 பேர் வரையில் தேறிவிடுவார்-களாம்!
இப்படி இங்கிலாந்தில் பரீட்சைகளைச் சுலபமாய் வைத்திருந்தார்கள் ; இதனாலே தான் படிப்பு முடிந்ததும் ஆங்கில இளைஞர்கள் பல அரிய காரியங்களைச் சாதிப்பதற்கு முடிந்தது.
நம்முடைய நாட்டிலோ, பரீட்சைகளை எவ்வளவு கஷ்ட மாகச் செய்யலாமோ அவ்வளவு கஷ்டமாகச் செய்து வைத்தார்கள்! இதனால் பரீட்சைகளில் தேறி ஒரு மாணாக்கன் வெளியே வருவதற்குள் அவனுடைய அறிவின் சக்தியெல்லாம் செலவழிந்துபோய் உடலும் அறிவும் சோர்ந்து விடுகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுங்கூட இன்னமும் அத்தகைய பரீட்சைகளையே நமது நாட்டில் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். ஆனால் இதையெல்லாம் உன்னிடம் சொல்வதில் பயன் என்ன? பரீட்சைகள் கஷ்டமாயிருக்கவேண்டும் என்று நீயா சொல்லுகிறாய்? போகட்டும் !
பாரிஸ்டர் பட்டத்துக்குரிய பரீட்சைகள் இவ்வளவு சுலபமாக இருந்தும் மோகன் தாஸ் அவற்றைக் கூடியவரையில் கஷ்டமாக்கிக்கொள்ள முயன்றார்! குறிப்பிட்ட பாட புத்தகங்களை யெல்லாம் மிகவும் சிரமப்பட்டுப் படித்தார் ! ரோமன் சட் டம், ஆங்கிலச் சட்டம் எல்லாம் படித்தார்.
இவ்வளவு படித்தும் நேரம் பாக்கியிருந்தது. வீண் பொழுது போக்க மனமின்றி லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்குப் போகத் தீர்மானித்தார். அந்தப் பரீட்சைக்குப் பழைய லத்தீன் பாஷையும், புதிய ஐரோப்பிய பாஷை யொன் றும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது! லத்தீன் பாஷை பாரிஸ்டர் வேலைக்கு மிகவும் பயன்படும் என்று மோகன் தாஸ் கேள்விப்பட்டார் ; எனவே லத்தீன் படிக்கத் தொடங்கினார். ஆனால் முதல் தடவை பரீட்சைக்குப் போனதில் லத்தீன் பாஷையில் தேறவில்லை. இன்னும் அதிகப் பிடிவாதத்துடன் படிக்கத் தொடங்கினார். படிப்பதற்கு அனுசரணையாக வாழ்க்கை முறையை மேலும் எளியதாக்கிக் கொண்டார். எண்ணெய் அடுப்பு ஒன்று வாங்கித் தினம் காலையில் அவரே உணவு தயார் செய்து கொண்டார். காலை உணவு ஓட் தானியக் கூழும் கோக்கோவுந்தான். மாலையில் மீண்டும் அறையிலேயே ரொட்டியும் கோக்கோவும் தயாரித்துச் சாப்பிட்டார். மத்தியான த் தில் மட்டும் வெளியில் சைவ போஜன சாலை ஒன்றில் சாப்பிட் டார். இவ்விதம் வாழ்வு முறையை எளியதாக்கிக் கொண்ட காரணத்தினால், பணமும் மிச்சமாயிற்று ; படிப்பதற்குச் சாவகாசமும் அதிகம் கிடைத்தது. தினமும் ஒரு ஷில்லிங் மூன்று பென்ஸ் செலவில் காலட்சேபம் நடந்தது. மாதம் ஐந்து பவுன் மிச்சமாயிற்று. கடைசியில், லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சையிலும் (லத்தீன் பாஷை உள்படத்) தேறிவிட்டார் !
தம்பி ! லண்டனில் மேற்கண்டவாறு எளிய வாழ்க்கை நடத்தியது மோகன் தாஸுக்குக் கஷ்டமாயிருக்கவில்லையாம்; சந்தோஷமாகவே இருந்ததாம். இதைப் பற்றிக் காந்திஜி தம் சுய சரிதத்தில் எழுதியிருப்பதைக் கேள் :-
“எளிய வாழ்வு முறையைக் கைக்கொண்டதால் என் வாழ்க்கை சந்தோஷமற்றதாயிற்று என்று யாரும் எண்ணவேண் டாம். அதற்கு மாறாக இந்த மாறுதல் மூலம் என் அகநிலைமையும் புற நிலைமையும் ஒற்றுமைப் பட்டதைக் கண்டேன். ஆகவே புதிய வாழ்க்கை உண்மையோடு ஒட்டிய வாழ்க்கையாயிற்று. இதை நான் உணர்ந்தபோது என் ஆத்மா (எல்லையற்ற) ஆனந்த சாகரத்தில் மிதந்தது."
இவ்வாறு மோகன்தாஸ் லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சையிலும் பாரிஸ்டர் பரீட்சையிலும் தேறுவதற்குப் பிரயத்தனம் செய்துகொண்டு அதே சமயத்தில் தமக்குத் தாமே ஆத்ம பரீட்சைகளும் நடத்திக் கொண்டிருந்தார். அவற்றில் வெற்றியடைந்து வந்தார்.
மூன்று வருஷ காலம் லண்டனில் வசித்த பிறகு கடைசி யில் 1891-ம் வருஷம் ஜூன்மீ 10௳ மோகன்தாஸ் காந்தி பாரிஸ்டர் ஆனார். மறுநாள் 11௳ இந்தியாவின் ஹைக்கோர்ட்டு களில் வக்கீல் தொழில் நடத்தும் உரிமை பெற்றார். பிறகு ஒரு தினங்கூட இங்கிலாந்தில் அவர் தாமதிக்கவில்லை. ஜூன் 12௳ யன்றே இந்தியாவுக்குப் பிரயாணமானார்.
--------------
எஸ். எஸ். அஸ்ஸாம் என்னும் கப்பலில் மோகன் தாஸ் தாய் நாடு நோக்கிப் பிரயாணம் செய்தபோது அவருடைய மனம் கவலைக்கடலில் ஆழ்ந்திருந்தது. பாரிஸ்டர் பரீட்சையில் தேறி விட்டாரே தவிர, வக்கீல் தொழில் நடத்தலாம் என்னும் நம்பிக்கை ஏற்படவில்லை. சட்ட கோட்பாடுகள் படித்திருந்தாரே தவிர, அவற்றை ஆதாரமாகக் கொண்டு கோர்ட்டுகளில் வாதமிடலாம் என்னும் தைரியம் உண்டாகவில்லை.
மேலும், இந்தியச் சட்டங்களைப் பற்றி இங்லாந்தில் அவர் ஒன்றுமே கற்கவில்லை யல்லவா? இந்தியச் சட்டங்கள் தெரியாமல் இந்தியக் கோர்ட்டுகளில் எப்படி வாதமிடுவது என்று எண்ணி அதைரியப்பட்டார். கடல் நடுவில் ஆதரவு ஒன்றுமில்லாமல் விடப்பட்டவனுடைய உள்ளத்தைப் போல் அவருடைய உள்ளம் தவித்தது. பம்பாயில் அதற்கு முன்னாலேயே பிரசித்தி யடைந்திருந்த ஸர் பிரோஸிஷா மேத்தா என்னும் தேசபக்தப் பிரமுகர் நீதி மன்றங்களில் சிம்மத்தைப்போல் கர்ஐனை செய்வார் என்று மோகன் தாஸ் கேள்விப்பட் டிருந்தார். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பரீட்சைக்குப் படித்ததைக் கொண்டு இந்தியக் கோர்ட்டுகளில் ஸர் பிரோஸிஷா மேத்தா எவ்விதம் கர்ஜனை செய்திருக்க முடியும் என்பது மோகன் தாஸுக்கு ஒரே வியப்பாயிருந்தது. ஸர் பிரோஸிஷா மேத்தாவைப் போன்ற பிரபலமும் வருமானமும் அடையும் எண்ணம் லவலேசமும் மோகன் தாஸுக்கு இருக்கவில்லை. ஜீவனத்துக்கு வேண்டிய பணமாவது சம்பாதிக்க முடியுமா என்பதே அவருக்குச் சந்தேகமா யிருந்தது.
இந்த விஷயத்தைப் பற்றி இங்கிலாந்திலிருந்தபோதே மோகன் தாஸுக்குக் கவலை ஏற்பட் டிருந்ததாம். இந்திய மாணாக்கர்களிடம் அன்பு கொண்டு புத்திமதி கூறிவந்த மிஸ்டர் பிரடரிக் பிங்கட் என்னும் ஆங்கிலேயரைப் பார்க்கும்படி ஒரு நண்பர் கூறினாராம். அவ்விதமே மோகன் தாஸ் சென்று பிங்கட் என்பவரைப் பார்த்தாராம். மோகன் தாஸின் கவலை இன்னதென்பதைப் பிங்கட் தெரிந்து கொண்டதும் பின் வருமாறு புத்திமதி சொன்னாராம் :- "ஒவ்வொரு வரும் பிரோஸிஷா மேத்தா ஆக முடியாது. வக்கீல் தொழில் செய்வதற்கு மேத்தாவைப்போல் மேதாவியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சாதாரண முயற்சித் திறமையும், நாணயமும் இருந்தால் போதும். உம்முடைய கஷ்டம் என்ன வென்று தெரிந்து கொண்டேன். உமக்குப் பொதுப் படிப்பு ரொம்பக் குறைவு. வக்கீல் தொழில் செய்வதற்கு உலக ஞானம் அவசியம். மனித சுபாவம் தெரிந்திருக்க வேண்டும். ஒருவனுடைய முகத்தைப் பார்த்தே அவனுடைய குணங்களை அறியும் திறமை வேண்டும். அதோடு சரித்திர அறிவு மிகவும் அவசியம். நீரோ இந்தியாவின் சரித்திரம் கூடப் படித்ததில்லை. ஊருக்குப் போனதும் இந்திய சரித்திர புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். மனித சுபாவத்தை அறிவதற்கு இன்னும் சில நூல்களை வாங்கிப் படியுங்கள். அதைரியப்பட வேண்டாம்!"
இம்மாதிரி பிங்கட் என்பவர் சொன்ன புத்திமதியை மோகன் தாஸ் மறக்கவேயில்லை. முக்கியமாக, வக்கீல் தொழிலில் வெற்றி பெறுவதற்கு முயற்சியும், நாணயமும் இருந்தால் போதும் என்று கூறியது அவருடைய மனத்தில் ஆழப் பதிந்திருந்தது. எனவே, மனத்தில் கவலை அதிகமாகும்போ தெல்லாம் பிங்கட் கூறியதை ஞாபகப் படுத்திக் கொண்டு மோகன் தாஸ் தைரியம் பெற முயன்றார்.
பாரிஸ்டர் மோகன் தாஸ் இந்தியாவுக்குப் பிரயாணமானது ஜூன் மாதத்தில் என்று சொன்னேனல்லவா? ஜூன் ஜூலை மாதங்களில் அரபிக் கடலில் கொந்தளிப்பு அதிக மாயிருக்கும். ஏடன் துறைமுகத்திலிருந்து அலைகள் வர வரப் பெரிதாகிக் கப்பலைப் பாடாய்ப் படுத்தின. இது காரணமாகப் பிரயாணிகளில் பலர் நோய்வாய்ப் பட்டார்கள். ஒருவருமே அறையை விட்டு வெளிவருவதில்லை. ஆனால் மோகன் தாஸ் பூரண செளக்கியத்துடன் இருந்தார். கப்பலின் மேல் தட்டிலே நின்று பெரிய பெரிய அலைகள் வந்து கப்பலை மோதும் காட்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அம்மாதிரி பெரும் அலைகள் அவருடைய உள்ளத்திலேயும் அடித்துக் கொண்டிருந்தன. கப்பல் இந்தியாவை நெருங்க நெருங்க உள்ளத்தின் அலைகளும் பெரிதாயின. பம்பாயிலிருந்து இங்கிலாந்துக்குப் புறப்படும் தறுவாயில் சாதிக் கட்டுப்பாடு என்னும் தொல்லை வந்து குறுக்கிட்டது அவர் நினைவில் இருந்தது. திரும்பித் தாய்நாட்டை அடைந்த பிறகும் அந்தத் தொல்லைக்கு ஆளாகும்படி நேருமோ என்னமோ? - இதுபோன்ற குருட்டு வழக்கங்களை யெல்லாம் ஒழித்து இந்தியாவின் சமூக வாழ்க்கையில் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டு மென்று. மோகன் தாஸின் இளம் உள்ளத்தில் பற்பல சிந்தனைகள் தோன்றிக் கொண்டிருந்தன.
ஆம் ; தம்பி ! மோகன் தாஸ் பின்னால் மகாத்மா காந்தி ஆவதற்கு அவசியமான அஸ்திவாரம் அப்போதே அவருடைய உள்ளத்தில் போடப்பட்டு வந்தது. இதுபோல் இன்னும் எத்தனையோ தடவை மோகன் தாஸ் கப்பல் பிரயாணம் செய்யும் படியாக நேரும். ஒவ்வொரு தடவையும் வெளியே கடல் அமைதியா இருந்தாலும் அவர் உள்ளத்தில் சிந்தனை அலைகள் மோதிக் கொண்டிருக்கும். கப்பலிலிருந்து கரையிலே இறங்கியதும் மிகவும் கஷ்டமான நிலைமைகளை அவர் சமாளிக்க வேண்டி யிருக்கும். மோகன் தாஸ் சிறிதேனும் அதைரியப் படாமல் நின்று சமாளிப்பார். இதையெல்லாம் இந்தச் சரித்திரத்தின் பின் பகுதிகளில் நீ பார்ப்பாய்.
--------------
பாரிஸ்டர் மோகன் தாஸ் காந்தி பம்பாய்த் துறைமுகத்தில் இறங்கியதும் மிகத் துயரம் தரும் செய்தி அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தது. மோகன் தாஸ் இங்கிலாந்திலிருந்த போதே அவருடைய அருமைத் தாயார் காலமாகி விட்டார், தூரதேசத்தில் இருக்கும்-போது இதைத் தெரிவித்து அவரைத் துன்பத்துக்கு ஆளாக்க வேண்டாமென் று அவருடைய சகோதரர் மேற்படி செய்தியைக் கடிதத்தில் எழுதவில்லை. கப்பலை விட்டு இறங்கியவுடனே தெரியப்படுத்தினார்.
மோகன் தாஸின் மனத்தில் இருந்த எத்தனையோ எண்ணங்கள் அந்தச் செய்தியினால் பங்கமுற்றுப் போயின. அன்னை தன்னை வரவேற்றுத் தழுவிக் கொண்டு மகிழ்வார் என்று எதிர்பார்த்தார். "இங்கிலாந்தில் மூன்று வருஷம் வசித்தேன். ஆயினும் விரத பங்கம் செய்யவில்லை. தங்களுக்கு அளித்த மூன்று வாக்குறுதிகளையும் நிறைவேற்றினேன்" என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்பினார். இந்த விருப்பங்கள் நிறைவேறுவதற்கில்லை. ஆயினும் மோகன் தாஸ் அன்னையை நினைத்து அழுது புலம்பிக்கொண்டிருக்கவில்லை. செய்ய வேண்டிய வைதிகக் கிரியைகளைச் செய்து விட்டு வாழ்க்கைக்குரிய தொழிலைத் தொடங்குவதில் கவனம் செலுத்தினார்.
மோகன் தாஸின் தமையனார் அவரைப்பற்றி ஆகாசக் கோட்டைகள் பல கட்டியிருந்தார். பாரிஸ்டர் பரீட்சையில் தேறி வந்திருக்கும் தம் சகோதரர் பெயரும் புகழும் பெற்றுப் பாரிஸ்டர் தொழிலில் பணம் நிறையச் சம்பாதிக்கப் போகிறார், என்று நம்பியிருந்தார். தம்பி இளையவர் பாரிஸ்டர் தொழிலில் தொடங்குவதற்கு வேண்டிய எல்லா விதமான ஏற்பாடுகளையும் மூத்தவர் செய்து வைத்திருந்தார்.
எனவே, பம்பாயில் 'பாரிஸ்டர்' என்ற போர்டு தொங்க விட்டுக் கொண்டு மோகன் தாஸ் தொழில் செய்ய ஆரம்பித்தார். ஆனால், தம்பி ! பாரிஸ்டர் மோகன் தாஸுக்குக் கிடைத்த முதல் வழக்கை அவர் நடத்திய இலட்சணத்தைப் பற்றிக் கேட்டாயானால் உனக்கு ஒரே ஆச்சரியமாயிருக்கும் ; உன்னால் நம்பவே முடியாது. காந்தி மகாத்மாவே தமது சுய சரிதத்தில் எழுதியிரா விட்டால் யாராலுமே நம்ப முடியாது.
வாதம் செய்வதில் உலகத்திலேயே யாரும் இணையில்லை யென்று பிற்காலத்தில் புகழ் பெற்றவர் காந்திஜி. லட்சக்கணக்கான மக்களின் முன்னால் ஆயிரமாயிரம் பொதுக்கூட்டங்களில் பேசியவர் காந்திஜி. கவர்னர் ஜெனரல்கள், பிரதம மந்திரிகள் உள்பட உலகத்தின் பிரசித்த இராஜதந்திரிகள் எல்லாரும் திகைத்துத் திணறும்படியாகத் தமது கட்சியை எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தவர். அத்தகையவர் பம்பாய் 'ஸ்மால் காஸ்' கோர்ட் ஒன்றில் ஒரு சிறு வழக்கில் மாமிபாய் என்னும் பெண்மணியின் சார்பாக ஆஜரானார். வழக்கில் மமிபாய் பிரதிவாதி. எனவே, வாதி தரப்புச் சாட்சிகளை பாரிஸ்டர் மோகன் தாஸ் குறுக்கு விசாரணை செய்ய வேண்டியிருந்தது. முதல் சாட்சியைக் குறுக்கு விசாரணை செய்வதற்காக எழுந்து நின்றார். ஆனால் ஒன்றும் கேட்கத் தோன்றவில்லை. தலை சுழல ஆரம்பித்தது. நீதி மன்றமும் நீதிபதியும் சாட்சிகளும் எல்லாருமே சுழலுவதாய்த் தோன்றியது. ஒரு கேள்வியும் கேட்காம லேயே ஆசனத்தில் உட்கார்ந்தார். கட்சிக்காரி மமிபாயின் பிரதிநிதி பக்கத்தில் இருந்தார். அவரிடம் தம்மால் வழக்கு நடத்த முடியா தென் றும் வேறொரு வக்கீலை அமர்த்திக் கொள்ளும்படியும் சொல்லி விட்டு வெளியேறினார்.
இம்மாதிரி தயக்கத்துக்கும் திகைப்புக்கும் 'சபைக் கோழைத்தனம்' என்று சொல்வார்கள். வாழ்க்கையின் ஆரம்பத்தில் காந்தி மகாத்மா சபைக் கோழையாயிருந்தார் என்பது மிக ஆச்சரியகரமான விஷயம் இல்லையா?
இந்த முதல் அநுபவத்துக்குப் பிறகு பாரிஸ்டர் மோகன் தாஸ் கோர்ட்டுக்குப் போவதை நிறுத்தி விட்டார். வழக்குகள் சம்பந்தமான விண்ணப்பங்கள் எழுதிக் கொடுப்பதில் தமக்கு ஆற்றல் உண்டு என்பதைக் கண்டுபிடித்தார். இந்த வேலை செய்யத் தொடங்கினார். ஆனால் இதில் வருமானம் போதிய அளவு கிடைக்கவில்லை.
உபாத்தியாயர் ஆகலாம் என்ற விருப்பம் உண்டாயிற்று. ஆங்கில பாஷையில் நல்ல தேர்ச்சி இருந்தபடியால் அந்த பாஷையை நன்றாகக் கற்பிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது . "ஓர் ஆங்கில உபாத்தியாயர் தேவை. தினம் ஒரு மணி நேரம் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ. 75 " என்ற விளம்பரத்தைப் பார்த்து விட்டு விளம்பரம் செய்திருந்த நபரிடம் போனார். மோகன் தாஸ் பி. ஏ. பட்டதாரி அல்ல என்று தெரிந்ததும் அவரை வேண்டாம் என்று சொல்லி விட்டார் விளம்பரம் செய்தவர். எப்படி யிருக்கிறது கதை !
"உலகத்திலேயே ஆங்கில பாஷையைப் பிழைகள் இல்லாமலும் லாகவமாகவும் கையாளக்கூடிய ஒரு சிலரில் காந்திஜியும் ஒருவர் " என்று நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படிப் பட்டவர் வாழ்க்கை தொடங்கிய போது, அவரை ஆங்கிலம் கற்பிக்க லாயக்கில்லாதவர் என்று சொல்லி விட்டார்கள் !
அதன்பேரில் பம்பாயில் இருப்பதில் இனிப் பயனில்லை என்று கண்டு பாரிஸ்டர் காந்தி இராஜ கோட்டைக்கே போய் விடுவது என்று தீர்மானித்தார். அதற்கு அவருடைய சகோதரரும் இசைந்தார். சகோதரர் ஏற்கெனவே இராஜ கோட்டை யில் ஒரு சின்ன வக்கீல் ; இன்னொரு வக்கீலுடன் கூட்டாகச் சேர்ந்து தொழில் நடத்திக் கொண்டிருந்தார். மோகன் தாஸம் இராஜ கோட்டைக்கு வந்து விட்டால் விண்ணப்பம் தயாரிப்பது முதலிய வேலைகள் அவருக்குக் கொடுக்கலாம் என்று நினைத்தார். பம்பாய்க் குடித்தனத்தின் செலவும் மிச்சமாகும். எனவே, ஆறு மாதம் பம்பாய் வாழ்க்கை நடத்திய பிறகு பாரிஸ் படர் மோகன் தாஸ் காந்தி இராஜ கோட்டைக்குச் சென்றார்.
பம்பாயை விட்டு மோகன் தாஸ் புறப்படுவதற்கு முன் அவருடைய பம்பாய் வாழ்க்கையைப் பற்றிச் சில விவரங்களைக் கூ றவேண்டும். குதிரை வண்டியிலோ டிராமிலோ- அவர் ஏறுவது கிடையாதாம். தினம், பம்பாய் ஹைக்கோர்ட்டுக்கு, நடந்து போவாராம் : நடந்தே திரும்பி வருவாராம். இதனால் பணம் மிச்சமான தோடு, தேக ஆரோக்யத்துக்கும் அந்த வழக்கம் உகந்ததாயிருந்ததாம். பம்பாயில் அவருடைய நண்பர்கள் பலர் அடிக்கடி நோயினால் படுத்துக் கொள்வது வழக்கமாம் ; ஆனால் காந்திஜி ஒருதடவைகூட நோய் என்று படுத்தது கிடையாதாம். தினந்தோறும் சிறிது தூரமாவது நடக்கும் வழக்கத்தைக் காந்திஜி கடைசிவரையில் கைக்கொண்டிருந்தார். "இந்த நல்ல வழக்கத்தின் நற்பயன் களை இன்றளவும் நான் அநுப் வித்து மகிழ்ந்து வருகிறேன்" என்று சத்திய சோதனை யில் மகாத்மா காந்தி எழுதியிருக்கிறார்.
பம்பாயில் இருந்தபோது பாரிஸ்டர் மோகன் தாஸுக்கு ராஜ சந்திரர் என்னும் ஒரு வர்த்தகருடன் நட்பு உண்டாயிற்று. இவர் இருபத்தைந்து வய துள்ள இளைஞர்தான். ஆனால் கவிஞர் என்றும் சதாவதானி என்றும் புகழ் பெற்றிருந்தார். காந்திஜிக்கு அவருடைய அதிசய ஞாபகசக்தி அளவற்ற வியப்பை யளித்தது. ஆனால் அவருடைய நல்லொழுக்கத்துக்காகவும் சமயங்களைப் பற்றிய ஞானத்துக்காகவுமே காந்திஜி அவர் மீது மரியாதை கொண்டார். முக்தானந்தர் என்பவரின் கீதம் ஒன்றை அவர் அடிக்கடி பாடிக் கொண் டிருப்பாராம். அந்தக் கீதத்தின் கருத்து வருமாறு :- "தினசரி வாழ்க்கையில் நான் புரியும் செயல் ஒவ்வொன்றிலும் ஆண்டவனை எப்போது காண்கிறேனோ அப்போதே கிருதார்த்தனாவேன். முக்தானந்தரின் உயிரைத் தாங்கி நிற்கும் நூலிழை ஆண்டவனே அன்றோ?"
ராய்சந்தர் பெரிய ரத்தின வியாபாரி. முத்து, வைரப் பரீட்சைகளில் அவர் கைதேர்ந்தவர். எனினும் நகைக் கடை யில் பெட்டியடியில் உட்கார்ந்து கொண்டு வியாபாரம் செய்த நேரம் போக ஏதாவது ஒரு சமய நூலைப் படித்துக் கொண்டிருப்பாராம். உலக வாழ்க்கையின் மத்தியில் தாமரை இலைத் தண்ணீரைப் போல் இருந்துகொண்டு ராய் சந்தர் கடவுளைத் தேடிக் கொண்டிருந்தார் என்பது காந்திஜிக்கு ஐயமறத் தெரிந்தது. பிற்காலத்தில் எவ்வளவோ சமய குருமார்களையும் மதத் தலைவர்களையும் காந்திஜி சந்தித்ததுண்டு ; அவர்களுடைய போதனைகளைக் கேட்டதுண்டு. ஆனால் ராய்சந்தரைப் போல் அவருடைய மனத்தை யாரும் கவர வில்லை.
இவ்வாறு ராய் சந்தரின் ஒழுக்கப்பற்றும் அறிவு மேன்மையும் சமய ஞான மும் அவரிடம் காந்திஜிக்குப் பிரமாதமான மதிப்பையும் பக்தியையும் உண்டாக்கிற்று. ஆயினும் அவரைக் காந்திஜி தம்முடைய குருநாதராக ஏற்றுக் கொள்ள வில்லை.
இந்த விஷயமாகக் காந்திஜி சொல்லியிருப்பதைக் கேள் :-
"என்னுடைய குரு நாதரை இன்னும் நான் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் இன்று வரைக்கும் என் இருதய சிம்மாசனம் காலியாகவே இருந்து வருகிறது. ஆத்ம சாதனத்துக்கு வழிகாட்டக் குரு ஒருவர் அவசியம் என்பது ஹிந்து சமயக் கொள்கை. இதில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் அத்தகைய குருவானவர் பரிபூரண மடைந்தவரா யிருக்க வேண்டும். அரை குறைப் படிப்பும் அறிவும் உள்ளவர்களிடம் லெளகிகக் கல்வியைக் கற்றுக்கொள்ளலாம்: ஆனால் ஆத்ம ஞானம் பெறுவதற்கு இது கூடாது. பரிபூரண ஞானியையே பரம குருவாகக் கொள்ள வேண்டும். அத்தகைய குருவைப் பெறுவதற்காக நாம் நம்முடைய குறைகளை யெல்லாம் போக்கிக் கொள்ளவும் பூரணத்துவம் பெறவும் இடை விடாமல் முயன்று வர வேண்டும். நாம் செய்ய வேண்டிய முயற்சியைச் செய்துகொண்டிருந்தால், குருநாதர் கிடைப்பது இறைவனுடைய திருவுளப்படி நடக்கும்.'
இவ்விதம் மகாத்மா காந்தி தமது சுய சரிதத்தில் எழுதியிருக்கிறார். அதன்படியே அவர் வாழ்க்கை யெல்லாம் பூரணத்துவம் பெற இடைவிடாது பிரயத்தனம் செய்து வந்தார். ஆயினும் காந்திஜிக்குப் பரம குரு கிட்ட வில்லை. இறைவனுடைய திருவுள்ளம் வேறு விதமா யிருந்தது. அவரே ஆயிரக் கணக்கானவர்களுக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கும் பரம குருவாக ஏற்பட வேண்டுமென்று இறைவன் திருவுள்ளம் இருக்கையில், அவருக்குத் தகுந்த குருநாதர் கிடைப்பாரா?
------------------
பம்பாயை விட்டுக் காந்திஜி இராஜ கோட்டை சென் றார். சகோதரர் கூறியபடியே விண்ணப்பம் எழுதிக்கொடுக்கும் வேலை அவருக்கு நிறையக் கிடைத்து வந்தது. மாதம் முந்நூறு ரூபாய் வரையில் வருமானம் கிடைத்தது. இந்த நாளில் காந்திஜிக்கு ஏற்பட்ட ஓர் அநுபவம் அவருடைய வாழ்க்கையில் முதலாவது பெரும் அதிர்ச்சியை அளித் தது. அந்த அநுபவம் இது தான்.
போர்பந்தர் ராஜாவுக்கு முடிசூட்டு நடப்பதற்கு முன்னால் அவருக்கு அந்தரங்கக் காரியதரிசியாகக் காந்திஜியின் தமையனார் வேலை பார்த்து வந்தார். ராஜாவுக்கு அச்சமயம் தப்பு யோசனை சொன்னதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த விஷயம் அப்போது பொலிடிகல் ஏஜெண்டு என்னும் பிரிட்டிஷ் சர்க்காரின் விசேஷ பிரதிநிதியினால் பரிசீலனை செய்யப் பட்டு வந்தது.
மேற்படி உத்தியோகஸ்தர் இங்கிலாந்தில் காந்திஜி இருந்த போது அவருக்குப் பரிச்சயமானவர். ஓரளவு சிநேக உரிமை பாராட்டியவர் என்றும் சொல்லலாம்.
எனவே அந்த நட்பைப் பயன்படுத்திக் கொண்டு மோகன் தாஸ் பொலிடிகல் ஏஜெண்டைப் பேட்டி காண வேண்டும் என்றும் தம்மைப் பற்றிய தப்பு அபிப்பிராயத்தைப் போக்க வேண்டும் என்றும் காந்திஜியின் தமையனார் விரும்பினார்.
இந்த யோசனை காந்திஜிக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. தமையனார் நிரபராதியா-யிருக்கும் பட்சத்தில் தம்முடைய கட்சியைச் சொல்லிவிட்டுத் தைரியத்துடன் முடிவை எதிர் பார்ப்பதுதான் சரியான முறை என்று கருதினார். அவ்விதமே சகோதரரிடம் கூறினார். ஆனால் சகோதரருக்கு இந்தத் தர்மோபதேசம் ஒன்றும் பிடிக்கவில்லை. "உனக்குக் கத்தியவாரைப் பற்றி ஒன்றும் தெரியாது. இங்கே எல்லாம் செல்வாக்கின் மூலம் தான் நடைபெறுகிறது. உனக்கு நன்றாய்த் தெரிந்த மனிதரிடம் என்னைப்பற்றி ஒரு வார்த்தை சொல்வது உனக்கு மிகவும் எளிய காரியம். அதை நீ செய்யவில்லை யென்றால் சகோதர விசுவாசம் உனக்குக் கொஞ்சமும் இல்லை யென்று தான் ஏற்படும் !" என்று கூறினார்.
தமக்கு எவ்வளவோ உபகாரங்கள் செய்திருக்கும் தமையனாருடைய மனத்தைப் புண்படுத்த விரும்பாமல் காந்திஜி மேற்படி உத்தியோகஸ்தரைப் பார்க்கச் சென்றார்.
சந்திப்பின் ஆரம்பத்திலேயே இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள வித்தியாசம் நன்கு தெரிந்தது. பழைய சிநேகத்தை நினைப்பூட்டியதும் துரையின் கடுகடுப்பு அதிகமாயிற்று. "அதைத் துர் உபயோகப்படுத்திக் கொள்ள வந்தீரா??' என்னும் கேள்வி அந்தக் கடுகடுத்த முகத்தின் நெற்றியில் தெளிவாக எழுதி ஒட்டி யிருந்தது.
ஆயினும் காந்திஜி தமது சகோதரரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். உடனே துரை பொறுமை இழந்து, “உம்முடைய சகோதரர் பெரிய சூழ்ச்சிக்காரர். அவரைப்பற்றி உம்மிடம் எதுவும் கேட்க நான் விரும்பவில்லை. அதற்கு நேரமும் எனக்குக் கிடையாது. உம்முடைய தமையனார் சொல்ல வேண்டியது ஏதேனும் இருந்தால் முறைப்படி எழுதித் தெரிவித்துக் கொள்ளட்டும்" என்றார்.
ஆனாலும் காந்திஜி நிறுத்தாமல் பிடிவாதமாக மேலே பேச ஆரம்பித்தார். "தயவு செய்து நான் சொல்வதைக் கேட்டு விடுங்கள். அப்புறம் எது வேணுமானாலும் செய்யுங்கள் !" என்றார். துரைக்குத் தலைக்குமேல் கோபம் வந்து விட்டது. "போம் ! நீர் போகலாம்!" என்றார். காந்திஜி போக வில்லை. துரை தமது சேவகனைக் கூப்பிட்டுக் காந்தியை வெளியே அனுப்பும்படி கட்டளை யிட்டார். சேவகன் வந்து காந்திஜியின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியபடி வெளியே கொண்டு வந்து விட்டான்.
இதைப் பற்றிய ஒரு வேடிக்கைச் சம்பவத்தைச் சொல்கிறேன் கேள், தம்பி ! 1926-ம் ஆண்டில் காந்திஜி தமது சுய சரிதத்தை 'எங் இந்தியாவில் எழுதி வந்தார். அப்போது இந்தக் கட்டம் வந்தது. வாரா வாரம் மகாத்மா சுய சரிதத்தை மொழிபெயர்த்துப் போட்டுக் கொண்டிருந்த ஒரு தினப் பத்திரிகையின் சுவர் ஒட்டும் போஸ்டர் விளம்பரங்களில் "மகாத்மா காந்தி கழுத்தைப் பிடித்துத் தள்ளப்பட்டார்!" என்று கொட்டை எழுத்துக்களில் அச்சிட்டிருந்தது. அந்த சமயம் இந்தியாவின் மாபெரும் தேசியத் தலைவராக மகாத்மா ஆகி யிருந்தார். எனவே தமிழ் மக்கள் ஒரே பரபரப்படைந்து மேற்படி தினப் பத்திரிகையை வாங்கிப் படித்தார்கள். "ஓகோ! இது பழைய கதையா?" என்று எண்ணி ஆறுதல் அடைந்தார்கள். இது அந்தக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு வகைப் பத்திரிகை தர்மம். போகட்டும் ; மேலே கதைக்குச் செல்வோம்.
சேவகனால் தோளைப் பிடித்து வெளியிலே கொண்டு விடப் பட்ட மோகன் தாஸின் உள்ளம் கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் துடி துடித்தது. துரையின் பங்களா வாசலில் நின்று கொண்டு துரைக்கு ஒரு கடிதம் எழுதினார். "என்னை நீர் அவ மதித்துவிட்டீர். உமது சேவகனைக் கொண்டு தாக்கச் செய்தீர். தக்க பரிகாரம் உடனே செய்யாவிட்டால் சட்டப்படி நட வடிக்கை எடுப்பேன் !" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
துரையிடமிருந்து பளிச்சென்று பதில் வந்தது! "நீர் முரட்டுத்தனமாய் நடந்து கொண்டீர். வெளியே போகச் சொல்லியும் போகவில்லை. ஆகையால் சேவகனை விட்டு வெளியிலே கொண்டுவிடச் செய்ய வேண்டி வந்தது. உம் இஷ்டம்போல் நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்."
காந்திஜி மேற்படி பதிலுடன் வீடு திரும்பினார். சகோதர ரிடம் எல்லாம் கூறினார். துரைமீது எப்படி நடவடிக்கை எடுத் துக் கொள்வது என்று தெரிய வில்லை. அந்தச் சமயம் ஸர் பிரோஸிஷா மேத்தா இராஜ கோட்டைக்கு ஒரு வழக்கு நிமித்தமாக வந்திருந்தார். மோகன் தாஸ் ஒரு பிரபல இராஜ கோட்டை வக்கீல் மூலமாக அவரிடம் யோசனை கேட்கச் செய்தார். ஸர் பிரோஸிஷா மேத்தா கூறியதாவது :-
"காந்தி இப்போதுதான் இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்திருக்கிறார். அதனால் அவருக்கு ரோஸம் அதிகமாயிருக்கிறது. வக்கீல்களும் பாரிஸ்டர்களும் இம்மாதிரி அநுபவங்களுக்கு இந் நாட்டில் தயாராகவே இருக்க வேண்டும். பொலிடிகல் ஏஜெண்ட் மீது வழக்குத் தொடர்வதால் நன்மை எதுவும் ஏற்படாது. வெட்கத்தை வெளியில் சொல்லாமலிருப்பதே நல்லது."
இந்தப் புத்திமதி காந்திஜிக்கு நஞ்சைப் போல் இருந்தது. ஆயினும் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. “இனிமேல் இந்த மாதிரி சங்கடத்தில் ஒருநாளும் அகப்பட்டுக் கொள்ள மாட்டேன் ; சிநேகிதத்தைச் சொந்தக் காரியத்துக்கு உபயோகித்துக் கொள்ள முயல மாட்டேன் !" என்று அவர் சங்கல்பம் செய்து கொண்டார்.
மேற்படி சம்பவம் காந்திஜியின் பிற்கால வாழ்க்கைப் போக்கையே மாற்றி அமைப்பதற்கு ஏதுவாயிருந்தது.
சகோதரருக்காக என்றாலுங்கூட அந்த உத்தியோகஸ்தரிடம் சிபார்சுக்காகத் தாம் போனது தவறு என்பதை மோகன் தாஸ் உணர்ந்திருந்தார். எனினும் அந்த உத்தியோகஸ்தர் அவ்வளவு கடுகடுப்புக் கொண்டதற்கும் வெளியில் பிடித்துத் தள்ளும்படி உத்தரவிட்டதற்கும் எவ்வித நியாயமும் கிடையாது. கறுப்பு மனிதர் வாய் திறந்து பேசியதே அந்த வெள்ளைக்கார அதிகாரிக்குப் பிடிக்கவில்லை. அதிகார வெறியினால் அவர் மதிமயங்கிப் போயிருந்தபடியாலேயே அவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார். இது அவருடைய சர்வ சாதாரண வழக்கம் என்றும், யாரையும் அவர் அவமதிப்பது உண்டு என்றும் மோகன் தாஸ் தெரிந்துகொண்டார். அப்படிப்-பட்டவருடைய கோர்ட்டில் ஆஜராவ து மோகன் தாஸுக்குப் பிடிக்கவில்லை. இராஜகோட்டையில் இருந்தால் அவருடைய கோர்ட்டுக்குப் போய்த் தீரவேண்டி வரும்.
இதற்கிடையில் கத்தியவார் பிரதேசத்தின் அரசியலைப் பற்றி மோகன் தாஸ் சிறிது விசாரித்துத் தெரிந்துகொண்டிருந் தார். கத்தியவாரில் சிறு சிறு சமஸ்தானங்கள் அநேகம் இருந்தன. அந்த சமஸ்தானங்களின் ராஜாக்கள் பெரும்பாலும் சுய புத்தியற்றவர்கள். பிறரிடம் யோசனை கேட்டே எந்தக் காரியமும் செய்வார்கள். எனவே சூழ்ச்சிகளுக்கு இடம் தாராளமா யிருந்தது. ஒவ்வொரு சமஸ்தானமும் மற்ற சமஸ்தானங்களை எதிர்த்துச் சூழ்ச்சி செய்தது. ஒவ்வொரு உத்தியோகஸ்தரும் மற்ற உத்தியோகஸ்தரகளுக்கு வெடிவைக்கச் சூழ்ச்சி செய்தார்கள். எல்லோருக்கும் மேல் உத்தியோகஸ்தர் மோகன் தாஸை வெளியே தள்ளச் செய்த துரை தான். அவருடைய தயவைப் பெறுவதற்கு முதலில் அவருடைய சேவகனுடைய தயவைத் தேடவேண்டும். துரையின் கண்களும் காதுகளுமாக இருந்த சிரஸ்தார் பெரிய தகப்பன் சாமி. துரையைவிடச் சிரஸ் தாருக்கு வரும்படி அதிகம்.
மொத்தத்தில் கத்தியவாரில் அடித்த காற்றே விஷக்காற்று என்று மோகன் தாஸுக்குத் தோன்றியது. அங்கே யிருந்தால் மேற்படி விஷவாயுவினால் பாதிக்கப்படாமல் தப்புவது கடி னம் என்று எண்ணினார். அதோடு, கோர்ட்டுகளில் தம்முடைய கட்சிக்காரர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை யென்பதையும் தெரிந்து கொண்டிருந்தார். கட்சிக்காரர்களுக்கு நியாயம் கிடைக்க வேணுமானால் முறையில்லா முறைகளைக் கையாள வேண்டும். மோகன் தாஸினால் அது இயலாத காரியம்.
இப்படிப்பட்ட மோசமான நிலைமையில் அங்கே எப்படி யிருப்பது, எத்தனை நாள் அவ்விடமிருந்து காலந் தள்ள முடியும் என்று மோகன் தாஸின் உள்ளம் கலங்கிக் கொண்டிருந்த போது, ஆண்டவன் வழி காட்டினார். மோகன் தாஸ் எந்த இலட்சியத்துக்காக இவ்வுலகில் ஜனனம் எடுத்தாரோ அந்தக் காரியத்தைத் தொடங்குவதற்குரிய காலமும் வந்து கூடியது.
போர்பந்தரிலிருந்து ஒரு வியாபாரக் கம்பெனியார் மோகன் தாஸின் சகோதரருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் விஷயம் வருமாறு ; மேற்படி போர்பந்தர் வியாபாரக் கம்பெனிக்குத் தென்னாப்பிரிக்காவில் பெரிய கிளை ஆபீஸ் இருந்தது. இந்தக் கிளைக் கம்பெனி சார்பாக டர்பன் நீதிமன்றத்தில் நாற்பதினாயிரம் பவுன் தாவா ஒன்று நடந்துகொண்டிருந்தது. பிரபல வெள்ளைக்கார பாரிஸ்டர்கள் வழக்கை நடத்தினார்கள். எனி னும், கம்பெனிக்காரர்களுக்கு உதவியா இருக்கும் பொருட்டு இந்திய வக்கீல் ஒருவர் தேவையாக இருந்தது. கம்பெனியாரிடம் வழக்கு விவரங்களைத் தெரிந்துகொண்டு வழக்கை நடத் தும் பாரிஸ்டர்களுக்கு அந்த விவரங்களைத் தெரியப்படுத்த வேண்டும். இந்த வேலைக்கு ஒருவரை அனுப்ப முடியுமா?
இப்படிக் கேட்ட கம்பெனிக்குத் தாதா அப்துல்லா கம்பெனி என்று பெயர். கம்பெனியின் முதலாளி தாதா அப்துல்லா அப்போது தென்னாப்பிரிக்காவிலிருந்தார். அவருடைய கூட்டாளி சேத் அப்துல் கரீம் ஜாவேரி என்பவர்தான் போர்பந் தரிலிருந்து மேற்கண்ட கடிதத்தை எழுதினார். பிறகு அவர் இராஜகோட்டைக்கும் வந்தார். சேத் ஜாவேரிக்கு மோகன் தாஸை அவருடைய சகோதரர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
மோகன் தாஸுக்கு எப்படியாவது கத்தியவாரை விட்டுப் போனால் போதும் என்று இருந்தது. புதிய நாடுகளைப் பார்க்கலாம், புதிய அநுபவங்களை அடையலாம் என்னும் ஆசையும் ஏற்பட்டது. எனவே அவர் தென்னாப்பிரிக்காவுக்குப் போக எவ்வித தடையும் கூறாமல் உடன்பட்டார்.
" எத்தனை காலம் அங்கே இருக்கவேண்டும்? சன்மானம் என்ன தருவீர்கள்?" என்று கேட்டார்.
"ஒரு வருஷத்துக்கு மேலே அங்கு இருக்க வேண்டி யிராது. போக வர முதல் வகுப்புப் பிரயாணச் செலவும் மொத்தம் 105 பவுனும் தருகிறோம். தென்னாப்பிரிக்காவில் கம்பெனியின் விருந்தாளியா யிருப்பீர்களாதலால் வேறு செலவு கிடையாது" என்றார் சேத் ஜாவேரி.
இதிலிருந்து தம்மை வக்கீல் என்ற முறையில் அழைக்க வில்லை யென்றும், கம்பெனியின் ஊழியனாக இருக்கச் சொல்கிறார்கள் என்றும் பாரிஸ்டர் மோகன் தாஸ் தெரிந்துகொண் டார். ஒரு வருஷத்துக்கு 105 பவுன், சன்மானமும் குறைவு தான். ஆயினும் பேரம் பேசாமல் அதை ஒப்புக்கொண்டு மோகன் தாஸ் தென்னாப்பிரிக்கா செல்ல ஆயத்தமானார்.
தம்பி! இதுவரையில் காந்திஜியின் சரித்திரத்தில் விசேஷ். சம்பவங்களையோ வீர தீரச் செயல்களையோ நீ காணவில்லை. இனிமேல் அத்தகைய சம்பவங்களும் செயல்களும் மேலும் மேலும் தொடர்ந்து வரப்போகின் றன.
இது வரையில் காந்திஜியின் சரித்திரத்தைக் கவனித்தால் ஒரு விஷயம் தெரியவரும். மகத்தான ஆத்மசக்தி படைத்த ஒரு ஜீவனைப் பிரம்மா படைத்து விட்டு, "கண் திருஷ்டி ஏற்படப்போகிறதே!" என்று பயந்து விட்டார் போலும்! ஆகை யினாலேயே ஒரு சாதாரண குடும்பத்தில் அந்த மகா புருஷரைப் பிறக்கச் செய்து மிகச் சாதாரண முறையில் வாழ்க்கை தொடங்கச் செய்தார் போலும்!
சுவாமி விவேகானந்தர், மகாகவி டாகூர் முதலியவர்களைப் போல் இளம் பிராயத்திலேயே காந்திஜியின் மேதையும் மேன்மையும் சோபிக்கவில்லை. பண்டித ஜவாஹர்லாலைப் போல் மகாத்மா செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளரவில்லை.
ஆனால் சிறையைத் தகர்த்தெறிந்துவிட்டு வெளி வரும் மகா வீரனைப் போல மகாத்மா காந்தியும் சாதாரண வாழ்க்கை யிலிருந்து விடுபட்டுச் சீக்கிரம் வெளிவருவார். அப்போது. அவருடைய வாழ்க்கையில் எத்தனையோ விந்தை நிகழ்ச்சிகளையும் வீரச் செயல்களையும் நீ காண்பாய்.
---------------
இங்கிலாந்துக்குப் பாரிஸ்டர் பரீட்சைக்குப் படிக்கப் போன போது மோகன் தாஸ் ஒரு பக்கம் உற்சாகம் கொண் டிருந்தாலும் மற்றொரு பக்கம் அன்னையைப் பிரிந்து செல்லும்படி நேர்ந்தது பற்றி வருத்தப்பட்டார். தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டபோதோ கஸ்தூரிபாயைப் பிரிய நேர்ந்த துபற்றி வருந்தினார். இங்கிலாந்திலிருந்து மோகன் தாஸ் திரும்பி வந்தபிறகு அந்தத் தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது. கஸ்தூரிபாய்க்குக் கல்வி கற்பிக்கவும் மற்றும் வாழ்வு முறையில் சில சீர்திருத்தங்களைக் கற்பிக்கவும் மோகன் தாஸ் முயன்று வந்தார். ஆகவே, இம்முறை அவர்களுடைய பிரிவு இருவருக்கும் அதிக வருத்தம் அளித்தது. எனினும் மோகன் தாஸ் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, "இன்னும் ஒரு வருஷத்துக்குள் எப்படியும் சந்திப்போம்" என்று கஸ்தூரிபாய்க்குத் தைரியம் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
பம்பாய்க்கு வந்ததும் பிரயாணத்துக்கு ஒரு இடையூறு ஏற்பட்டது. குறிப்பிட்ட கப்பலில் முதல் வகுப்பு டிக்கட் கிடைக்கவில்லை யென்று தாதா அப்துல்லா கம்பெனியின் பம்பாய்க் காரியஸ்தர் கூறினார். 'டெக்'கில் அதாவது கப்பலின் மேல் தளத்தில் பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் தெரிவித்தார். பாரிஸ்டராகிய தாம் முதல் வகுப்புக்குக் கீழே பிரயாணம் செய்வது கெளரவக் குறைவு என்று மோகன் தாஸ் எண்ணினார். (பிற்காலத்தில் மூன்றாம் வகுப்பிலேயே பிரயாணம் செய்வேன் என்று பிடிவாதம் செய்த காந்திஜி தான் அப்போது அவ்விதம் கருதினார்.) காரியஸ்தர் கூறியதில் அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. "நானே போய் விசாரித்துப் பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனார். கப்பல் தலைவரைச் சந்தித்து, "எப்படியாவது நெருக்கிப் பிடித்து எனக்கு ஓர் இடம் கண்டுபிடித்துக் கொடுக்கக்கூடாதா?" என்று கேட்டார். கப்பலின் தலைவர் மோகன் தாஸைத் தலை முதல் கால் வரையில் ஒரு தடவை உற்றுப் பார்த்தார். மோகன் தாஸின் தோற்றம் எதனாலேயோ அவருடைய மனதைக் கவர்ந்தது. " என்னுடைய சொந்த அறையில் இன்னொருவரும் பிரயாணம் செய்ய இடம் இருக்கிறது. அந்த இடத்தை மற்றவர்களுக்குச் சாதாரணமாய்க் கொடுப்பதில்லை. வேண்டுமானால் உமக்குத் தருகிறேன்" என்று கப்பல் தலைவர் கூறினார்.
மோகன் தாஸ் மிக்க மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு நன்றி கூறினார். காரியஸ்தரிடம் சொல்லி முதல் வகுப்பு டிக்கட் வாங்கச் செய்தார். தென்னாப்பிரிக்காவில் தமக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடன் 1893-ம் வருஷம் ஏப்ரல் மாதத்தில் பாரிஸ்டர் மோகன் தாஸ் காந்தி உற்சாகமாகக் கப்பல் ஏறிப் பிரயாணமானார்.
பாரிஸ்டர் மோகன் தாஸுக்கு மட்டுந்தானா தென்னாப்பிரிக்காவில் அதிர்ஷ்டம் காத்திருந்தது? இந்தியாவுக்கும் உலகத்துக்குமே அதிர்ஷ்டம் காத்திருந்தது. அநீதியையும் கொடுமையையும் எதிர்த்துப் போராடுவதற்குச் சத்தியாக்கிரஹம் என் னும் அஹிம்சா தர்ம ஆயுதத்தைத் தென்னாப்பிரிக்காவிலே யல்லவா காந்திஜி கண்டு பிடித்துத் தயாரித்தார் !
பாரிஸ்டர் மோகன் தாஸ் காந்தியின் முகவெட்டு அந்தக் கப்பல் தலைவரின் மனத்தைக் கவர்ந்துவிட்டது என்று சொன்னேனல்லவா? எந்தவிதமான நன்மையிலும் ஏதேனும் ஒரு கெடுதலும் கூட இருந்தே தீரும் போலிருக்கிறது. கப்பல் தலைவரின் சிநேகிதம் மோகன் தாஸ்க்கு உதவியாகவும் இருந் தது ; ஒரு பெரும் அபாயத்துக்கும் அவரை உள்ளாக்கியது.
பிரயாணத்தின்போது பொழுது போக்காக மோகன் தாஸுக்குக் கப்பல் தலைவர் சதுரங்கம் ஆடக் கற்றுக் கொடுத்தார். மோகன் தாஸும் பிரியத்துடன் கற்றுக் கொண்டார். ஆனால் இலேசில் ஆட்டம் பிடிபடவில்லை. எனினும் மோகன் தாஸுக்கு ஆட்டம் சொல்லிக் கொடுப்பதில் கப்பல் தலைவரின் ஊக்கம் சிறிதும் தளரவில்லை.
வழியில் கப்பல் நின்ற முதல் துறைமுகப் பட்டினம் லாமு பதின் மூன்று நாள் தொடர்ந்து கடற் பிரயாணம் செய்த பிறகு கரையில் இறங்குவதற்கு ஆசை உண்டாவது இயல்புதானே? கப்பலில் பிரயாணம் செய்தவர்களில் பலர் துறைமுகத்தில் இறங்கிப் பட்டணம் பார்த்து வரச் சென்றார்கள். காந்திஜியும் போக விரும்பினார். லாமு துறைமுகம் அபாயகரமான கொந்தளிப்பு உள்ள து என்றும், கப்பல் நாலுமணி நேரத்தில் புறப்பட்டு விடுமென்றும், அதற்குள் திரும்பி வந்துவிடும்படியும் கப்பல் தலைவர் எச்சரிக்கை செய்தார்.
மோகன் தாஸ் லாமு நகரைச் சுற்றிப் பார்த்தார். தபால் ஆபீஸில் வேலை செய்த இந்திய குமாஸ்தாக்களுடன் சிறிது, நேரம் பேசிக்கொண்டிருந்தார். ஆப்பிரிக்கா சுதேசிகள் சிலரையும் சந்தித்து அவர்களுடைய வாழ்க்கை முறையைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதற்குள் நேரமாகி விட்டபடியால் துறைமுகத்துக்கு அவசரமாகத் திரும்பினார்.
அதே கப்பலின் மேல் தளத்தில் பிரயாணம் செய்த இன்னும் சில இந்தியப் பிரயாணிகள் ஒரு வேளையாவது அமைதியாகச் சமைத்துச் சாப்பிடலாம் என்று லாமு துறைமுகத்தில் இறங்கி யிருந்தார்கள். அவர்கள் தங்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்து கொண்டு கப்பலுக்குப் போவதற்காகப் படகில் ஏறினார்கள். அந்தப் படகிலேயே மோகன் தாஸும் ஏறினார். கப்பல் தலைவர் எச்சரித்தது போலவே கடல் அப்போது கொந்தளிக்கத் தொடங்கியிருந்தது. படகிலோ கூட்டம் அதிகம். ஆகையால் கப்பலில் ஏறுவதற்கான ஏணிக்கு அருகில் படகை நிறுத்தமுடியவில்லை. ஏணியின் அருகில் படகு போகும் ; ஆனால் யாரும் ஏணியில் ஏறுவதற்குமுன் அங்கிருந்து நகர்ந்துவிடும்.
கப்பல் புறப்படுவதற்கான முதல் சங்கு ஊ தியாகி விட்டது. மோகன் தாஸ் பெரிதும் கவலையடைந்தார். இதையெல்லாம் கப்பலின் மேல் தளத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த கப்பல் தலைவர் குறிப்பிட்ட கால அளவுக்குமேல் ஐந்து நிமிஷம் கப்பலை நிறுத்தி வைத்தார். கப்பலுக்கு அருகில் மிதந்த இன்னொரு படகில் மோகன் தாஸ் பத்து ரூபாய் கொடுத்து ஏறிக் கொண்டார். அந்தப் படகில் கூட்டம் இல்லாதபடியால் சற்று இலகுவாக ஏணியின் அருகில் அதைச் செலுத்த முடிந்தது. ஆனால் படகு ஏணியருகில் வந்தபோது, ஏணி தூக்கப்பட்டு விட்டது. கப்பல் தலைவர் மோகன்தாஸின் நிலையைப் பார்த்து இரக்கங் கொண்டார். மேலேயிருந்து ஒரு கயிற்றைத் தொங்கவிடச் செய்தார். அதைப் பிடித்துக்கொண்டு மோகன் தாஸ் ஏறிக் கப்பலின் தளத்தில் அடிவைத்தாரோ, இல்லையோ, கப்பலும் புறப்பட்டு விட்டது. மற்றப் பிரயாணிகள் கப்பலில் ஏற முடியாமல் பின் தங்கும்படி நேர்ந்தது.
இவ்விதமாக, கப்பல் தலைவரின் நட்பு லாமுவில் மோகன் தாஸுக்கு மிகவும் உதவியாக இருந்தது. வழியிலிருந்த ஸான்ஸிபார் என்னும் மற்றொரு துறைமுகத்தில் அந்த நட்பினால் பெரும் அபாயம் நேர்ந்தது. கப்பல் தலைவர் மோகன் தாஸையும் மற்றொரு ஆங்கில நண்பரையும் "குஷாலாகக் கரைக்குப் போய்வரலாம்" என்று சொல்லி அழைத்துச் சென்றார். ' குஷால்' என்றால் என்ன என்பது முதலில் மோகன் தாஸுக்குத் தெரியவில்லை. கரையிலே இறங்கிப் பட்டணத்துக்குள் போன பிறகு, 'குஷால்' என்றால் 'விபசார விடுதி' என்று தெரிந்தது. அத்தகைய விடுதி ஒன்றுக்கு ஒரு மனிதன் அவர்களை அழைத்துச் சென்றான். ஒவ்வொருவரையும் ஒரு தனி அறைக்குள் போகச் செய்தான். மோகன் தாஸ் புகுந்த அறையில் ஒரு நீக்ரோ ஸ்திரீ இருந்தாள். அப்போதுதான் தாம் வந்திருந்த இடம் இப்படிப்பட்டதென்பது மோகன் தாஸுக்குத் தெரிந்தது. வெட்கமும் அருவருப்பும் அவரைப் பிடுங்கித் தின்றன. சிறிது நேரம் ஊமையைப்போல் மெளனமாக நின்றார்; பிறகு நொந்த மனத்துடன் வெளியே வந்தார்.
கப்பல் தலைவர் வெளிவந்ததும் மோகன் தாஸின் மனோ நிலையைத் தெரிந்து கொண்டு அவரைப் பரிகசித்தார். ஆனால் மோகன் தாஸோ அந்தப் பரிகாசத்தைப் பொருட் படுத்த வில்லை. இந்த மட்டும் பாவக் குழியில் விழாமல் தப்பினோமே என்று கடவுளுக்கு நன்றி செலுத்தினார். கருணைக் கடலான பகவானுடைய அருளே அச்சமயம் தம்மைத் தடுத்து ஆட்கொண்டது என்ற எண்ணத்தினால் இறைவனிடம் அவருடைய நம்பிக்கை வலுப் பெற்றது.
ஸான்ஸிபாருக்குப் பிறகு மொஸாம்பிக் துறைமுகத்தில் கப்பல் சில நாள் நின்று விட்டு அடுத்தபடியாக டர்பன் துறை முகத்தை அடைந்தது. தென்னாப்பிரிக்காவில் நேட்டால், டிரான்ஸ்வால், ஆரஞ்சு பிரீ ஸ்டேட் என்னும் மாகாணங்கள் உண்டு. நேட்டால் மாகாணத்தின் துறைமுகப் பட்டினம் டர்பன். இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்கா செல்லும் பிரயாணிகள் சாதாரணமாய் டர்பன் துறைமுகத்திலே தான் இறங்குவது வழக்கம்.
மோகன் தாஸை வரவேற்பதற்காகத் தாதா அப்துல்லா சேத் துறைமுகத்துக்கு வந்திருந்தார். அப்துல்லா சேத்துக்கு அறிமுகமான வெள்ளைக்காரர் பலர் துறைமுகத்தில் இருந்ததையும், அவர்கள் அப்துல்லா சேத்தை அவ்வளவு மரியாதையாக நடத்தவில்லை யென்பதையும் மோகன் தாஸ் கவனிக்கும்படி நேர்ந்தது. இது அவருக்கு வியப்பையும் வருத்தத்தையும் அளித்தது. அதோடு மேற்படி வெள்ளைக்காரர்கள் மோகன் தாஸை ஏதோ ஒரு விநோதப் பிராணியைப் பார்ப்பதுபோல் உற்றுப் பார்ப்பதையும் கவனிக்க நேர்ந்தது.
மோகன் தாஸ் இங்கிலாந்திலிருந்தபோது அங்கிருந்த ஆங்கிலேயர் இப்படி யெல்லாம் நடந்து கொள்ள வில்லை. இந்தியாவில் ஆங்கில உத்தியோகஸ்தர் அகம்பாவத்துடனும் முரட்டுத் தனமாகவும் நடந்து கொண்ட அநுபவம் அவருடைய மனத்தில் ஆழ்ந்து பதிந்திருந்தது. டர்பன் துறைமுகத்தில் இறங்கின வுடனேயே இங்கே வெள்ளைக்காரரின் அகம்பாவம் அபரிமிதம் என்பதை மோகன் தாஸ் அறிந்து கொள்ளலாயிற்று. இரண்டு நாளைக்குப் பிறகு டர்பன் நகரின் நீதி மன்றத்துக்குச் சென்ற போது அதை இன்னும் நன்றாய் மனத்தில் பதியும்படி அவர் தெரிந்து கொள்ள நேர்ந்தது.
துறைமுகத்திலிருந்து மோகன் தாஸை அப்துல்லா சேத் தமது வியாபாரக் கம்பெனியின் கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றார். அவர் முக்கியமாக எதற்காக வந்தாரோ அந்த வழக்கு டிரான்ஸ்வால் மாகணத்தில் பிரிட்டோரியா நகரில் நடந்து வருகிறதென்று மோகன் தாஸ் தெரிந்து கொண்டார்.
தாதா அப்துல்லா சேத்துக்கு மோகன் தாஸைப் பற்றி அவ்வளவு நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை. "இவரைப் பிடித்து எதற்காக அனுப்பினார்கள்? இவரால் என்ன உபயோகம்? வீண் பணச் செலவு தான்!" என்று அவர் நினைப்பது போலக் காணப் பட்டது.
அப்துல்லா சேத் அவ்வளவாகப் படித்த மனிதர் அல்ல, ஆனால் அறிவுக் கூர்மையும் உலக அநுபவமும் பெற்றவர். தென்னாப்பிரிக்காவில் வியாபாரம் நடத்திய பெரிய இந்தியக் கம்பெனிகளுக்குள் அப்துல்லா கம்பெனிதான் மிகப் பெரியது. சொற்ப ஆங்கில பாஷா ஞானம் அவருக்கு இருந்தது. அதைக் கொண்டு ஐரோப்பியக் கம்பெனிகளுடன் அவர் வர்த்தகமும் விவகாரமும் நடத்தி வந்தார். வக்கீல்களுக்கு வேண்டிய சட்ட 'பாயிண்டு’களை யெல்லாம் அவர் எடுத்துச் சொல்லி விடுவார். தென்னாப்பிரிக்காவில் இருந்த இந்தியர்கள் அனைவரும் அப்துல்லா சேத்திடம் பெருமதிப்பு வைத்திருந்தார்கள்.
இவ்வளவு உயர்ந்த மனிதராயிருந்தாலும் அவரிடத்தில் ஒரு குறை இருந்தது. பெரிய சந்தேகப் பிராணி ! இலேசில் யாரையும் அவர் நம்பிவிட மாட்டார்.
கேள், தம்பி ! பாரிஸ்டர் எம். கே. காந்தியைத் தனியாகப் பிரிட்டோரியாவுக்கு அனுப்ப அவர் தயங்கினார். ஏன் தெரியுமா? பிரிட்டோரியாவிலே தான் அவர் தொடுத்திருந்த வழக்கின் பிரதிவாதிகள் இருந்தார்கள். இந்த இளம்பிள்ளை பாரிஸ்டரை மேற்படி பிரதிவாதிகள் தங்கள் வசப்படுத்திக் கொண்டு விட்டால் என்ன செய்கிறது என்று சந்தேகப் பட்டார். அதாவது தம்முடைய கம்பெனியில் பாரிஸ்டர் காந்தி சம்பளம் வாங்கிக்கொண்டு எதிர்க் கட்சிக்காரர்களுடன் சேர்ந்து தமக்குத் துரோகம் செய்துவிடக் கூடும் என்று நினைத்தார் ! எப்படி யிருக்கிறது கதை? பின்னால், அந்த இளம் பாரிஸ்டரைப் பற்றி தாதா அப்துல்லா மிக நன்றாய்த் தெரிந்து கொண்டார். தாம் அவரைப் பற்றி அவ்விதம் சந்தேகித்தது எவ்வளவு பெரிய தவறு என்பதையும் உணர்ந்தார்.
-------------
பாரிஸ்டர் மோகன் தாஸ் காந்தி டர்பனுக்கு வந்த மூன்றாம் நாள் அவரைத் தாதா அப்துல்லா டர்பன் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே பலருக்கும் புது பாரிஸ்டரை அறிமுகம் செய்து வைத்ததுடன் தம்முடைய வக்கீலுக்குப் பக்கத்தில் அவரை உட்கார வைத்தார்.
அதுவரையில் பாரிஸ்டர் காந்திக்கு உற்சாகமாகவே இருந்தது. சிறிது நேரத்துக் கெல்லாம் தம்மை மாஜிஸ்ட்ரேட் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது அவருடைய கவனத்துக்கு வந்தது. "இது என்ன? ஏன் இப்படி நம்மைப் பார்க்கிறார்? துறைமுகத்தில் இருந்த வெள்ளைக்காரர்கள் ஏதோ விசித்திரப் பிராணி என்று எண்ணி, நம்மைப் பார்த்தார்களே, அதுபோல் அல்லவா இந்த மாஜிஸ்ட்ரேட்டும் பார்க்கிறார்? " என்று காந்திஜி எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போதே மாஜிஸ்ட்ரேட் அவரை நோக்கி ஓர் உத்தரவு போட்டார். "உம்முடைய தலையில் வைத்திருக்கும் தலைப்பாகையை எடுத்துவிடும் !" என்பது தான் அந்த உத்தரவு.
தம்பி! பாரிஸ்டர் காந்தி தென்னாப்பிரிக்கா சென்ற போது நீளமான சொக்காயும் தலைப்பாகையும் தரித்துக் கொண்டிருந் தார். இங்கிலாந்தில் வசித்த காலத்தில் சில மாதம் அவர் நாகரிக உடைதரித்துப் பார்த்துப் பின்னால் அதைக் கைவிட்டு விட்டார் என்பது நினைவிருக்கிறதல்லவா? எனவே, தென்னாப் பிரிக்கா சென்றபோது அவர் தொப்பி வைத்துக் கொள்ள வில்லை. 'காந்தி குல்லா' என்று சொல்கிறோமே, அந்த மாதிரிக் குல்லாவும் வைத்துக் கொள்ள வில்லை. கெளரவமான இந்தியர்கள் அந்தக் காலத்தில் தலைப்பாகை அணிந்து கொள்வதே வழக்கமா யிருந்தபடியால் அதன்படி காந்திஜியும் தலைப்பாகை வைத்துக் கொண்டிருந்தார்.
ஆகவே மாஜிஸ்ட்ரேட் பகிரங்கக் கோர்ட்டில் அத்தனை பேருக்கு முன்னால் "தலைப்பாகையை எடும்!" என்று உத்தரவு போட்டதும் காந்திஜிக்கு ஒரே திகைப்பாய்ப் போய்விட் டது. அந்த உத்தரவின் காரணம் அவருக்கு நன்றாய் விளங்க வில்லை. ஆனால் அது தம்மை அகௌரவப் படுத்துவது என்று மட்டும் தெரிந்து கொண்டார். ஆகையால் உத்தரவை நிறை வேற்ற அவர் விரும்பவில்லை. விவரங்களை நன்றாய்த் தெரிந்து. கொள்வதற்கு முன்னால் எடுக்க மாட்டேன்" என்று சொல்லிக் கோர்ட்டில் 'கலாட்டா’ செய்யவும் அவர் விரும்பவில்லை. சட்டென்று எழுந்து கோர்ட்டுக்கு வெளியே வந்துவிட்டார்.
பிற்பாடு சேத் அப்துல்லாவும் வெளியே வந்ததும் அவரிடம் விவரம் கேட்டார். முக்கியமாக, தாதா அப்துல்லா சேத் தலைப்பாகை அணிந்திருந்தும் அதை எடுக்கும்படி மாஜிஸ்ட் ரேட் சொல்லாமல் தமக்கு மட்டும் உத்தரவு போட்டது, காந்திஜிக்கு வியப்பா யிருந்தது. இதன் காரணத்தைத் தாதா அப்துல்லா விளக்கிச் சொன்னார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்த இந்தியர்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். முதற் பகுதியார் முஸ்லிம் வியாபாரிகள் ; இரண்டாவது பகுதியார் ஹிந்து குமாஸ்தாக்கள் ; மூன்றாவது பிரிவினர் பார்ஸிகள். முஸ்லிம் வர்த்தகர்கள் தங்களை 'அராபியர்' என்றும், பார்ஸிகள் தங்களைப் ’பாரஸிகர் ' என்றும் சொல்லிக் கொண்டார்கள். ஆகையால் அவர்கள் தலைப்பாகை வைத்துக் கொள்ள அநுமதிக்கப் பட்டனர். ஆனால் ஹிந்து குமாஸ்தாக்களோ தங்களை "இந்தியர்கள்" என்று தான் சொல்லிக் கொள்ள வேண்டியிருந்தது. வேறு நாட்டின் பெயரை அவர்கள் சொல்லிக் கொள்வதற்கில்லையே !
அரேபியாவும், பாரஸீகமும் சுதந்திர தேசங்கள். ஆகையால் அராபியர் என்றும் பாரஸிகர் என்றும் சொல்லிக்கொண்ட வர்களுக்குத் தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்கள் கொஞ்சம் மரியாதை அளித்தார்கள். அவர்கள் இஷ்டம்போல் உடை தரிக்கும் உரிமையும் அளித்தார்கள். ஆனால் இந்தியா அடிமை இந்தியா தானே? அடிமை இந்தியர்களுக்குத் தலையிலே தலைப் பாகை என்ன வேண்டிக் கிடந்தது? - இவ்விதம் தென்னாப் பிரிக்கா வெள்ளைக்காரர்கள் கருதினார்கள்.
இந்தியர்களில் மேற்சொன்ன மூன்று பகுதியாரைத் தவிர நாலாவது ஒரு பகுதியினரும் இருந்தனர். இவர்கள் இந்தியாவிலிருந்து வந்திருந்த ஒப்பந்தக் கூலிகளும் மாஜி ஒப்பந்தக் கூலிகளும்தான். இவர்களே தொகையில் அதிகமானவர்கள். பெரும்பாலும் தமிழ் நாட்டிலிருந்தும் ஆந்திர தேசத்திலிருந்தும் ஓரளவு வடநாட்டிலிருந்தும் இவர்கள் வந்திருந்தார்கள். ஐந்து வருஷம் தோட்ட வேலையோ வேறு வேலையோ செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு வந்தவர்களாகையால் 'ஒப்பந்தக் கூலிகள்' என்று இவர்கள் சொல்லப்பட்டனர். இது காரணமாகத் தென்னாப்பிரிக்காவின் வெள்ளைக்காரர்கள் இந்தியர்கள் அனைவரையுமே 'கூலி'கள் என்று அழைத்தார்கள்.
இந்தியர்களுக்குக் 'கூலி ' என்ற பெயரோடு, 'ஸாமி' என்ற பெயரும் தென்னாப்-பிரிக்காவில் வழங்கிற்று. 'ஸாமி ' எப்படி வந்தது தெரியுமா? பெரும்பாலான ஒப்பந்தத் தொழிலாளர் தென்னிந்தியாவிலிருந்து போனவர்கள் அல்லவா? தென்னிந்தியர்களின் பெயர்கள் பெரும்பாலும் ராமஸாமி, கிருஷ்ண ஸாமி, கோவிந்தஸாமி, நாராயண ஸாமி, சிவஸாமி என்று ஒரே ஸாமி மயமாக இருக்கும் என்பது உனக்குத் தெரியுமே? எனவே, தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்கள் இந்தியர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது 'கூலி' என்று சொல்லாவிடில், 'ஸாமி' என்பார்கள். அவர்களுடைய மனசில், 'ஸாமி' என்பது 'கூலி 'க்கு மாற்றுப் பெயர் ! இந்தியர்களில் கொஞ்சம் வாசாலகர்களாயிருப்பவர்கள் வெள்ளைக்காரர் தங்களை 'ஸாமி' என்று அழைக்கும்போது, "ஸாமி என்றால் எஜமானன் என்று அர்த்தம் ; நான் உனக்கு எஜமானனா?" என்று கேட் பார்களாம். ஆனால் அவ்விதம் கேட்பவர்கள் வெள்ளைக்காரர்களிடம் அடிபடவும் தயாராயிருக்க வேண்டுமாம் ! ஆம், தம்பி! அந்தக் காலத்தில் தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்கள் இந்தியர்களை அடிப்பது சர்வ சாதாரணம். இதைப் பற்றி மேலே அதிகமாக நீ தெரிந்துகொள்ள நேரிடும்.
இப்போது தலைப்பாகை விஷயத்துக்குத் திரும்பி வருவோம். தாதா அப்துல்லாவிடம் தம்முடைய தலைப்பாகையைப் பற்றி மாஜிஸ்ட்ரேட்டுக்கு என்ன ஆட்சேபம் என்று காந்திஜி கேட்டு மேற்கூறிய விவரத்தைத் தெரிந்துகொண்டார்.
உடனே, அன்று கோர்ட்டில் நடந்த சம்பவத்தைப்பற்றிப் பத்திரிகைகளுக்கு ஒரு கடிதம் எழுதினார். தாம் தலைப்பாகை அணிந்திருந்தது நியாயம் என்றும், மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவு தவறான து என்றும் அந்தக் கடிதத்தில் வாதமிட்டிருந்தார். இந்தக் கடிதத்தைச் சில பத்திரிகைகள் பிரசுரித்தன. பிரசுரித்த தோடு "வேண்டாத விருந்தாளி " என்று காந்திஜிக்குப் பட் டம் சூட்டி அவருடைய பிடிவாதப் போக்கைக் கண்டித்து எழுதின. ஒரு சிலர் காந்திஜியை ஆதரித்துப் பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதினார்கள். ஆகக்கூடி, காந்திஜி தென்னாப்பிரிக்காவுக்கு வந்து சில நாளைக்குள்ளேயே அவருடைய பெயர் மிகவும் பிரபல மடைந்தது.
பாரிஸ்டர் காந்தி டர்பன் நகரில் சிலநாள் தங்கினார். அந் நகரில் வசித்த மிஸ்டர் பால், மிஸ்டர் சுபான் காட்பிரே, பார்ஸி ரஸ்டம்ஜி, ஆதம்ஜி மியாகான் முதலிய இந்தியப் பிரமுகர்களை அறிமுகம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் பிரிட்டோரியாவிலிருந்து தாதா அப்துல்லாவுக்குக் கடிதம் வந்தது. "வழக்கு ஆரம்பமாகப் போகிறது. நீங்களாவது உங்களுடைய பிரதிநிதியாவது உடனே வந்து சேரவேண்டியது" என்று அதில் எழுதியிருந்தது.
இந்தக் கடிதத்தை அப்துல்லா சேத் காந்திஜியிடம் காட்டி, "பிரிட்டோரியாவுக்குப் போகிறீரா?" என்று கேட் டார். "முதலில் வழக்கைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்கிறேன்" என்றார் காந்திஜி. அவருக்கு வழக்கின் விவரங்களைத் தெரியப்படுத்தும்படி தாதா அப்துல்லா தம் குமாஸ்தாக்களுக்குச் சொன்னார்.
அந்த வழக்கு, பெரும்பாலும் கணக்குகளைப் பற்றியது. ஆகவே ஆரம்பத்தில் காந்திஜிக்குத் தலைகால் ஒன்றும் தெரிய வில்லை. பற்று வரவு நுணுக்கங்களைப் பற்றிக் குமாஸ்தாக்கள் சொன்னது ஒன்றும் அவருக்குப் பிடிபடவில்லை. குழப்பம் தான் அதிகமாயிற்று. குமாஸ்தாக்கள் அடிக்கடி 'பி. நோட்' என்று குறிப்பிட்டார்கள். 'பி. நோட்' என்றால் என்ன என்பதே இவருக்குத் தெரியவில்லை. கடைசியாகக் குமாஸ்தாக் களைக் கேட்டார். அவர்கள் சிரித்துவிட்டு, 'பிராமிஸரி நோட்' என்று சொன்னார்கள். இதன்பேரில் காந்திஜி கணக்கு முறையைப் பற்றி விவரிக்கும் புத்தகம் ஒன்றை வாங்கிப் படித்தார். அதற்குப் பிறகு ஒருவாறு விஷயம் தெளிவாயிற்று ; வழக்கு சம்பந்தமான நுணுக்கங்களும் புரிந்தன.
பிறகு, மோகன் தாஸ் "பிரிட்டோரியாவுக்குப் புறப்பட நான் தயார் !" என்று அப்துல்லாவிடம் தெரிவித்தார்.
தம்பி ! ஆதி காலத்திலிருந்து மகான்களும் மகரிஷிகளும் மதத் தலைவர்களும் அன்பையும் அஹிம்சையையும் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது "எல்லாரிடமும் அன்பா யிருக்கவேண்டும் ; யாரையும் எதற்காகவும் ஹிம்சிக்கக் கூடாது!" என்று உபதேசம் செய்திருக்கிறார்கள். "அஹிம்சா பரமோ தர்ம: " என்னும் அருமையான வாக்கியத்தையும் நீ கேள்விப்பட்டிருப்பாய். ஆகவே, அன்பும் அஹிம்சையும் உல கத்துக்குப் புதிய விஷயங்கள் அல்ல.
ஆனால் அன்பையும் அஹிம்சையையும் முற்காலத்தில் உபதேசித்த பெரியோர்கள் அவற்றை மனிதனுடைய நல்வாழ்வுக்குரிய மேலான குணங்களாகவும் மோட்ச சாதனங்களாகவும் உபதேசித்தார்களே தவிர, அந்த குணங்களை உலகிலுள்ள தீமைகளை எதிர்த்துப் போராடுவதற்குரிய ஆயுதங்களாக உபயோகிக்கலாம் என்று சொல்லவில்லை. அன்பையும் அஹிம்சையையும் சமூகத் தீமைகளை ஒழிப்பதற்கு ஆயுதங்களாகச் செய்து காட்டிய அவதார புருஷர் மகாத்மா காந்தி தான். அன்பும் அஹிம்சையும் எப்படிக் காந்திஜியின் கையில் சிறந்த வலிமையுள்ள ஆயுதங்களாயின என்பதை நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அந்த ஆயுதங்கள் எப்படிக் காந்தி மகானின் உள்ளத்தில் உருவாக ஆரம்பித்தன என்பதை இப் போது நீ பார்க்கப் போகிறாய்.
----------------
தாதா அப்துல்லா சேத் மிக்க முன் ஜாக்கிரதை யுள்ளவர், பாரிஸ்டர் காந்தி பிரிட்டோரியாவுக்குப் போகத் தயார் என்று தெரிவித்ததும் பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்தார். பிறகு காந்திஜியைப் பார்த்து, "பிரிட்டோரியாவில் எங்கே தங்குவீர்?" என் று கேட்டார்.
" எங்கே தங்கும்படி சொல்கிறீர்களோ, அங்கே தங்குகிறேன்" என்றார் காந்திஜி.
"சரி ; உமக்கு ஜாகை ஏற்படுத்திக் கொடுக்கும்படி அங்கேயுள்ள நம்முடைய வக்கீலுக்கு எழுதுகிறேன். இன்னும் சில நண்பர்களுக்கும் உம்மைப் பற்றி எழுதுகிறேன். ஆனால் அவர்களில் யாரோடும் நீர் தங்கவேண்டாம். நம் எதிராளிக்குப் பிரிட்டோரியாவில் அதிக செல்வாக்கு உண்டு. நம் முடைய கடிதங்கள் எல்லாம் அந்தரங்கமாக இருக்க வேண்டும். யாராவது நம்முடைய கடிதங்களைப் படிக்க நேர்ந்து. விட்டால் நமக்குப் பெருந் தீங்கு விளையும்!" என்று அப்துல்லா சேத் பலமுறை எச்சரித்தார்.
அதற்குப் பாரிஸ்டர் மோகன் தாஸ் கூறியதாவது: "நமது வக்கீல் ஏற்படுத்தும் ஜாகையிலேயே தங்குகிறேன். அல்லது நானே இடம் தேடிக் கொள்கிறேன். ஆனால் ஒரு விஷயத்தில் தாங்கள் நிம்மதியாக இருங்கள். நமக்குள் அந்தரங்கமான விஷயம் வேறு யாருக்கும் தெரியவராது. எதிர்க் கட்சியாரையும் பழக்கம் செய்து கொள்ளலாம் என்றே எண்ணியிருக்கிறேன். கூடுமானால் நம்முடைய வழக்கைக் கோர்ட் டுக்கு வெளியில் ராஜியாகத் தீர்த்துக் கொள்ளப் பிரயத்தனம் செய்வேன். பார்க்கப் போனால், பிரதிவாதி தங்களுடைய நெருங்கிய உறவினர்தானே?"
வழக்கில் பிரதிவாதியின் பெயர் சேத் தயேப் ஹாஜி கான் முகம்மது என்றும், அவர் அப்துல்லா சேத்தின் நெருங்கிய உறவினர் என்றும் காந்திஜி தெரிந்து கொண்டிருந்தார். இவர்கள் ஒருவருக்கொருவர் வழக்குத் தொடுத்துக் கொண்டிருப்பது எவ்வளவு வீணான காரியம் என்று அவருக்குத் தோன்றியது. இந்தியர்கள் எல்லாரையும் அலட்சியமாகவும் அவமதிப்போடும் பார்க்கும் வெள்ளைக்காரர்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டே இந்தியர்கள் ஒருவரோ டொருவர் சண்டை பிடித்துக்கொண் டிருப்பதின் முறைகேடு காந்திஜியின் உள்ளத்தை உறுத்தியது.
'ராஜி ' என்னும் வார்த்தையைக் கேட்டதும் அப்துல்லா சேத் சிறிது திடுக்கிட்டார். ஆனால் காந்திஜியைப் பற்றி அவருடைய அபிப்பிராயம் இந்தச் சில நாளைக்குள்ளேயே மாறிப்போ யிருந்தது. அவரிடம் நன்மதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆகவே அப்துல்லா சேத் கூறியதாவது :- "ஆம், ஆம் ! கோர்ட்டுக்கு வெளியே வழக்குத் தீர்ந்துவிட்டால் நல்லதுதான். ஆனால் தயேப் சேத் இலேசில் ராஜிக்கு வரும் மனிதர் அல்ல. நம்முடைய இரகசியங்களை அறிந்து கொண்டு நம்மைக் கவிழ்த்து விடப் பார்ப்பார். ஆகையால் நீர் சர்வ ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். எந்தக் காரியத்தையும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்துச் செய்யவேண்டும்."
"தாங்கள் சிறிதும் கவலைப்படவேண்டாம். வழக்கு விவரங்களைப் பற்றி நான் தயேப் சேத்தினிடமாவது அல்லது வேறு யாரிடமாவது ஒருநாளும் பேசமாட்டேன். ராஜி செய்து கொண்டு விடுவது நல்லது என்று மட்டும் பொதுப்படையாக யோசனை கூறுவேன்" என்றார் பாரிஸ்டர் காந்தி.
இதற்கு அப்துல்லா சேத் ஆட்சேபம் சொல்லவில்லை. பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காந்திஜி ரயிலில் முதல் வகுப்பு டிக்கட் வாங்கிக்கொண்டார். தென்னாப்பிரிக்கா ரயில்களில் முதல் வகுப்புப் பிரயாணிகளா யிருந்தாலும் இரவில் படுக்கை ' சப்ளை 'க்காகத் தனியாக ஐந்து ஷில்லிங் கொடுத்து டிக்கட் வாங்க வேணுமாம். இதையும் வாங்கிவிடும்படி அப்துல்லா சேத் சொன்னார். ஆனால் காந்திஜி அவ்விதம் வீண் செலவு செய்ய விரும்பவில்லை. அப்துல்லா சேத் மறுபடியும், "இங்கே பாரும்! இது இந்தியா தேசம் அன்று. முன் ஜாக்கிரதை அவசியம். ஆண்டவன் புண்ணியத்தில் நமக்குப் பணக் கஷ்டம் கிடையாது. ஆகையால் சிக்கனம் செய்ய எண்ணி வீண் கஷ்டங்களை விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டாம்" என்றார்.
'ரொம்ப வந்தனம் ; என்னுடைய காரியங்களை நானே பார்த்துக்கொள்வேன். தாங்கள் என்னைப்பற்றிக் கவலைப்படா திருந்தால் போதும்!" என்றார் மோகன் தாஸ்.
* * *
தாதா அப்துல்லா சேத்தின் யோசனைப்படி செய்யாததின் பலனை விரைவிலேயே மோகன் தாஸ் உணரும்படி நேரிட்டது. நேட்டாலின் தலைநகரமாகிய மேரிட்ஸ்பர்க்குக்கு இரவு 9 மணிக்கு ரயில் போய்ச் சேர்ந்தது. இந்த ஸ்டேஷனில் பிரயாணிகளுக்குப் படுக்கை கொடுக்கப் படுவது வழக்கம். ஒரு ரயில்வே ஊழியர் வந்து, "படுக்கை வேண்டுமா? " என்று காந்திஜியைக் கேட்டார். "வேண்டாம் ; என்னிடம் படுக்கை இருக்கிறது !" என்று காந்திஜி விடையளித்தார். அந்த ஊழியர் சென்ற பிறகு, வெள்ளைக்காரப் பிரயாணி ஒருவர் வந்து, காந்திஜியை மேலுங் கீழும் உற்றுப் பார்த்தார். கறுப்பு மனிதர் ஒருவர் முதல் வகுப்பு ரயிலில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் அவருடைய மனம் பெரும் சங்கடத்துக்கு ஆளாகி விட்டது. போலும்! அவர் போய் இரண்டு ரயில்வே உத்தியோகஸ்தர்களை அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தார். எல்லாரும் மோகன் தாஸை உற்றுப்பார்த்துக்கொண்டு நின்றார்கள். கடை சியில் இன்னொரு உத்தியோகஸ்தர் வந்து, "கீழே இறங்கு; சாமான் ஏற்றும் வண்டியில் போய் ஏறிக்கொள் !" என்றார்.
"என்னிடம் முதல் வகுப்பு ரயில் டிக்கட் இருக்கிறது, ஐயா !" என்று காந்திஜி மரியாதையாகச் சொன்னார்.
"அக்கறை யில்லை; நீ போய்ச் சாமான் வண்டியிலே தான் ஏறிக்கொள்ள வேண்டும். இந்த வண்டியில் இடம் கொடுக்க முடியாது!" என்றார் உத்தியோகஸ்தர்.
"டர்பனில் இந்த வண்டியிலே தான் எனக்கு இடம் கொடுக்கப்பட்டது. இதிலேதான் நான் பிரயாணம் செய்வேன்" என்று உறுதியான குரலில் கூறினார் காந்திஜி.
* * *
இந்த இடத்தில் நீ ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும், தம்பி! காந்திஜியின் குணாதிசயத்தில் ஒரு விசேஷம் அவருடைய மன உறுதி என்பதை ஏற்கெனவே நீ அறிந்திருக்கிறாய். சீமைப் பிரயாணம் செய்வது தவறு என்று சாதிக் கூட்டத்தார் சொன்னார்கள்; ஆனால் காந்திஜி அதைப் பொருட்படுத்தாமல் கிளம்பிவிட்டார். சீமையில் பலர் அவரை எப்படியாவது புலால் உண்ணச் செய்துவிட வேண்டும் என்று பெரும் பிரயத்தனம் செய்தார்கள்; ஆனால் அதற்கு அவர் உடன்படவில்லை. தமக்குச் சரி யென்று தோன்றுவதைப் பிறர் தடுப்பதற்காகக் காந்திஜி கைவிடமாட்டார்; தமக்குப் பிசகு என்று தோன்றுவதை மற்றவர்கள் சொல்வதற்காகச் செய்ய வும் மாட்டார். இத்தகைய மன உறுதி காந்திஜியின் இயற்கையில் ஏற்பட்டிருந்தது. அந்த மன உறுதியிலிருந்துதான் சத்தி யாக்கிரஹம் என்னும் புதிய அஹிம்சை ஆயுதம் உதயமாயிற்று.
பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்லாமல், பிறர் கஷ்டப்படுத்துவார்களே என்பதற்காகவும் சரியான காரியத் தைக் கைவிடக் கூடாது என்பது காந்திஜி உபதேசித்த முக்கிய வாழ்க்கைத் தத்துவம். அந்த உயர்ந்த தத்துவம் அவருடைய வாழ்க்கையில் எப்படி உருவாக ஆரம்பித்தது என்பதை இதோ நீ பார்க்கப் போகிறாய்.
* * *
பாரிஸ்டர் காந்தி "இந்த வண்டியிலேதான் பிரயாணம் செய்யப் போகிறேன்" என்று உறுதியாகச் சொன்னதும் அவரை இறங்கச் சொன்ன ரயில் உத்தியோகஸ்தருக்குக் கடும் கோபம் வந்து விட்டது. அவருடைய மீசை துடித்தது.
"மரியாதையாக இந்த வண்டியை விட்டு இறங்குகிறாயா? அல்ல து போலீஸ்காரனை அழைத்துப் பிடித்துத் தள்ளச் சொல்லட்டுமா?" என்று கேட்டார்.
“நல்லது ; போலீஸ்காரன் வரட்டும். நானாக இந்த வண்டியிலிருந்து நகரப் போவதில்லை" என்றார் காந்திஜி.
ரயில்வே உத்தியோகஸ்தர் கூறியது வெறும் மிரட்டல் அல்ல. உண்மையாகவே போலீஸ்காரன் வந்தான். “இறங்குகிறாயா, மாட்டாயா?" என்று அவன் கேட்டான். "மாட்டேன்" என்றார் மோகன் தாஸ்.
உடனே அவரைக் கையைப் பிடித்துப் பலாத்காரமாக இழுத்து வெளியே தள்ளினான். அவருடைய சாமான்களையும் எடுத்து வெளியே எறிந்தான். "சாமான் வண்டிக்கு இப்போதாவது போ!" என்ற புத்திமதியும் கிடைத்தது. ஆனால் காந்திஜி சாமான் வண்டிக்குப் போகவில்லை.
ரயில் வண்டி அவர் இல்லாமலே புறப்பட்டுப் போயே போய் விட்டது !
எடுத்து எறியப்பட்ட சாமான்களில் தமது கைப்பையை மட்டும் காந்திஜி எடுத்துக்கொண்டு பிரயாணிகளின் ' வெயிடிங் ரூம் ' எங்கே இருக்கிறதென்று தேடிச் சென்றார். மற்றச் சாமான்களை ரயில்வே ஊழியர்கள் எடுத்து வைத்தார்கள்.
அப்போது குளிர் காலம். தென்னாப்பிரிக்காவில் உயர மான பிரதேசங்களில் குளிர் மிகவும் அதிகம். மேரிட்ஸ்ப ர்க் நகரம் உயரமான இடத்தில் இருந்தது. பொறுக்க முடியாத குளிர். காந்திஜியின் 'ஓவர் கோட்' மற்றச் சாமான்களோடு அகப்பட்டுக் கொண்டது. அதைக் கேட்டு வாங்கிக்கொள் ளக் காந்திஜி விரும்பவில்லை. கேட்டால் மீண்டும் அவமதிப்புக் கிடைக்குமோ, என்னவோ? குளிரில் நடுங்கிக்கொண்டு வெளிச்சமில்லாத அறையில் தனியாக உட்கார்ந்திருந்தார்.
--------------
அந்த நாளில் டர்பனிலிருந்து பிரிடோரியாவுக்கு ரயில் மார்க்கம் நெடுகிலும் கிடையாது. வழியில் சார்லஸ் டவுன் என் னும் ஸ்டேஷனில் இறங்கிக் குதிரை வண்டியில் ஜோகானிஸ் பர்க் சென்று அங்கே மறுபடி ரயில் ஏற வேண்டும்.
சார்லஸ் டவுனில் காந்திஜி இறங்கினார். அவரிடம் குதிரை வண்டிக்கும் டிக்கட் இருந்தது. வழியில் ஒரு நாள் தாமதித்து விட்டதனால் அது செல்லாமல் போய் விடவில்லை. இதைப் பற்றி அப்துல்லா சேத் சார்லஸ் டவுனிலிருந்த குதிரை வண்டிக் கம்பெனியின் ஏஜெண்டுக்குத் தந்தியும் அடித்திருந்தார்.
ஆனால் அந்தக் குதிரை வண்டி ஏஜெண்ட் இலேசுப்பட்ட பேர்வழி அல்ல. கறுப்பு மனிதன் விஷயத்தில் அவனுக்கு ஏதேனும் ஒரு சாக்குத்தான் தேவையா யிருந்தது. "உம்முடைய சீட்டு நேற்றையச் சீட்டு ; இன்றைக்கு அது செல்லாது !" என்றான். காந்திஜி "அது செல்லும்" என்று மரியாதையாக வாதாடினார். கடைசியாக, மேற்படி ஏஜெண்ட் தோல்வி யடைந்து காந்திஜிக்குக் குதிரை வண்டியில் இடங்கொடுத்தான்.
ஆனால் காந்திஜியின் தொல்லை தீர்ந்து போய்விடவில்லை.
அந்தக் குதிரை வண்டியில் பிரயாணிகள் உள்ளே உட்காருவது வழக்கம். வண்டி ஓட்டியின் பெட்டிக்கு இருபுறத்திலும் இரண்டு இடங்கள் உண்டு. இவற்றில் ஒன்றில் வண்டியின் 'காப்டன்' உட்காருவான். இன்றைக்கு அவன் கறுப்பு மனிதனுக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினான். வண்டிக்குள்ளே மற்ற எல்லாரும் வெள்ளைக்காரர்கள். அவர்களுக்குச் சரிநிகராக ஒரு 'கூலி 'யை வண்டிக்குள் உட்கார வைக்க அவன் விரும்பவில்லை. தான் உள்ளே உட்கார்ந்து கொண்டு வண்டிக்காரனுக்குப் பக்கத்து இடத்தில் காந்திஜியை உட் காரும்படிச் சொன்னான்.
இது அநீதி, அவமதிப்பு என்பது மோகன் தாஸுக்குத் தெரிந்தே யிருந்தது. ஆயினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் விடுவதே உசிதம் என்று அவர் நினைத்தார். அந்தச் சமயம் ஏதாவது தகராறு விளைத்தால் ரயிலைப்போல் குதிரை வண்டியும் அவரை விட்டுவிட்டுப் போய்விடலாம். ஆகவே, வண்டியின் முகப்பில் வண்டிக்காரனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார்.
* * *
வண்டி புறப்பட்டுச் சென்றது. மத்தியானம் மூன்று மணி சுமாருக்குப் பர்தேகோப் என்னும் இடத்தை அடைந்தது. அங்கே வந்ததும் காப்டனுக்குக் குஷி பிறந்தது. வெளியில் சற்றுக் காற்றாட உட்கார்ந்து சுருட்டுப் பிடிக்க விரும்பினான்.
வண்டிக்காரன் கீழே இருந்து கால் வைத்து அவனுடைய பெட்டி மேல் ஏறுவதற்குப் படி ஒன்று இருந்தது. காப்டன் வண்டிக்காரனிடமிருந்து அழுக்குச் சாக்குத் துணி ஒன்று வாங்கி அதில் விரித்தான். காந்திஜியைப் பார்த்து, "சாமி ! இதில் உட்கார்! வண்டி போட்டிக்குப் பக்கத்தில் நான் உட்கார வேண்டும்" என்றான்.
இந்த அநியாயத்தைச் சகித்துக் கொள்ளக் காந்திஜியினால் முடியவில்லை. மனத்துக்குள் என்ன நேருமோ என்ற பயம் தோன்றிற்று. அதனால் உடம்பு நடுங்கிற்று. ஆயினும் அவர் உறுதியாகச் சொன்னார்:-"'நியாயமாக எனக்கு உள்ளே இடங் கொடுத்திருக்க வேண்டும். அவ்விதம் செய்யாமல் என்னை இங்கே உட்காரச் சொன்னீர். இப்போது நீர் உல்லாசமாகச் சுருட்டுப் பிடிப்பதற்காக உம் கால் அடியில் உட்காரச் சொல்கிறீர். இது சரியல்ல. உள்ளே இடங்கொடுத்தால் போய் உட்கார்ந்து கொள்கிறேன். படியில் உட்கார முடியாது."
இப்படிக் காந்திஜி சொல்லி முடிப்பதற்குள்ளே காப்டன் அவர் அருகில் நெருங்கினான். காதைப் பார்த்து ஓங்கி அறைந்தான். கையைப் பிடித்துக் கீழே இழுத்து விட முயன்றான். காந்திஜியின் மன உறுதி அப்போது பெரும் சோதனைக்கு உள்ளாயிற்று. வண்டிப் பெட்டியின் பித்தளைக் கம்பிகளை அவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். மணிக்கட்டு முறிந்தாலும் பிடியை விடுவதில்லை யென்று உறுதிகொண்டார். அவரை அந்தக் கிராதகன் அடிப்பதையும் திட்டிக் கொண்டே இழுப்பதையும் மற்றப் பிரயாணிகள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அடித்தவன் பெருந்தடியன் ; அடிபட்டவரோ பலமற்ற மெலிந்த மனிதர். அந்த வெள்ளைக்காரப் பிரயாணிகளில் சிலர் இரக்கம் அடைந்தார்கள். காப்டனைப் பார்த்து, "ஏன் அப்பா அவரை அடிக்கிறாய்? அவர் சொல்லுவது நியாயந்தானே? அங்கே இடமில்லா விட்டால் உள்ளே வந்து உட்காரட்டும் ! " என்றார்கள். "ஒருநாளும் முடியாது!" என்றான் அந்த முரடன். எனினும், சிறிது வெட்கிப் போய் அடிப்பதையும் இழுப்பதையும் விட்டான். இன்னும் சிறிது நேரம் திட்டிக்கொண்டே யிருந்தான். பிறகு, வண்டிக்காரனுக்கு மறுபக்கத்து இடத்தில் இருந்த 'ஹாட்டன் டாட்' வேலைக்காரனைப் படியில் உட்கார வைத்துவிட்டுத் தான் அவன் இடத்தில் உட்கார்ந்தான்.
'ஹாட்டன் டாட்' என்று கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா? ஆப்பிரிக்காவின் ஆதி மக்களில் 'ஹாட்டன் டாட்' ஒரு இனம். ' நீகிரோ ', 'ஸலு ' என்பவர்களும் ஆப்பிரிக்க இனத்தார் தான். வெள்ளைக்காரர்கள் பிழைப்புத் தேடி ஆப்பிரிக்காவுக்கு வந்தவர்கள். அப்படிப் பிழைக்க வந்தவர்கள் தான் அந்த நாட்டின் பல பகுதிகளையும் தங்கள் வசமாக்கிக் கொண்டு இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்தார்கள் !
* * *
வண்டி மறுபடியும் புறப்பட்டது. காந்திஜியின் நெஞ்சு அதிவேகமாக அடித்துக் கொண்டது. பிரிடோரியாவுக்கு உயிரோடு போய்ச் சேருவோமோ என்னமோ என்ற கவலையே உண்டாகி விட்டது. போதாதற்கு, வண்டித் தலைவன் அடிக்கடி அவரைக் கோபமாக முறைத்துப் பார்ப்பதும், விரலை ஆட் டிக் கொண்டே, "இரு இரு ! ஸ்டாண்டர்ட்டன் போனதும் உனக்குப் பாடம் சொல்லித் தருகிறேன்" என்று உறுமுவது மாயிருந்தான். காந்திஜி மனத்துக்குள் தமக்குத் துணை புரிந்து காப்பாற்றும்படி கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். அந்த நிலைமையில் வேறு யார் துணையைக் கோர முடியும்?
இருட்டிய பிறகு குதிரை வண்டி ஸ்டாண்டர்ட்டனை அடைந்தது. வண்டி நின்ற இடத்தில் சில இந்தியர்களின் முகங்களைப் பார்த்ததில் காந்திஜிக்கு ஆறுதல் ஏற்பட்டது. பெரு மூச்சுடன் வண்டியிலிருந்து இறங்கினார். உடனே மேற்படி இந்தியர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். ”சேத் அப்துல்லா விடமிருந்து எங்களுக்குத் தந்தி கிடைத்தது. உம்மை ஈஸா சேத்தின் கடைக்கு அழைத்துப் போவதற்காக வந்திருக்கிறோம் !" என்றார்கள்.
தம்பி! இந்த நாட்டு ஜனங்களுக்குள் அடிக்கடி சாதிச் சண்டைகளும் சமூகச் சண்டைகளும் ஏற்படுவது பற்றி உனக்குத் தெரியும். இந்தியர்களுக்குள் ஒற்றுமை யில்லாத படியால் ஆதிகாலம் முதல் எத்தனையோ கஷ்டங்களை இந்த நாடு அநுபவித்திருக்கிறது.
ஆனால் சொந்த நாட்டில் இப்படியெல்லாம் சண்டை பிடிக்கும் இந்தியர்கள் அயல் நாடுகளுக்குப் போகும்போது பெரும்பாலும் அவர்களுக்குள் அதிசயமான ஒற்றுமையும் சகோதர பாவமும் ஏற்பட்டு விடுகிறது. சாதி சமய வேற்றுமைகளை யெல்லாம் மறந்து அவர்கள் ஒன்றாகி விடுகிறார்கள். ஒருவருக் கொருவர் உதவி செய்யச் சந்தர்ப்பம் எங்கே கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதை இப்போது மோகன் தாஸ் கண்டார். ஏற்கெனவே அப்துல்லா சேத்தின் வழக்கு சம்பந்தமாகக் கவலை யடைந்தவர் தென்னாப்பிரிக்கா இந்தியர்களிடையே குடி கொண்டுள்ள சகோதர பாவத்தை அறிந்து மகிழ்ந்தார். தம்மை அழைத்துச் செல்ல வந்தவர்களுடனே சேத் ஈஸா ஹாஜி ஸமார் என்பவரின் கடைக்குச் சென்றார். அங்கே யிருந்த இந்தியர்கள் எல்லாரும் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அவருக்கு நேர்ந்த கஷ்டங்களைக் கேட்டு அநுதாபப்பட்டார்கள். எல்லாரும் தங் கள் தங்கள் அநுபவங்களைச் சொல்லி ஆறுதலும் கூறினார்கள்.
அந்த ஊரிலிருந்த குதிரை வண்டிக் கம்பெனியின் ஏஜெண்டுக்குக் காந்திஜி வழியில் நடந்த விவரமெல்லாம் தெரிவித்துக் கடிதம் எழுதினார். ஏஜெண்டிடமிருந்து உடனே பதில் கிடைத்தது. "இந்த ஊரிலிருந்து வேறு பெரிய வண்டி போகிறது. வண்டித் தலைவனும் மாற்றப்படுகிறான். மற்றப் பிரயாணிகளோடு உமக்கு வண்டிக்குள்ளேயே இடம் தரப்படும் " என்று அந்த ஏஜெண்ட் மரியாதையாக எழுதி யிருந்தான்.
ஈஸா சேத்தின் மனிதர்கள் மோகன் தாஸை மறு நாள் காலையில் வண்டி புறப்படும் இடத்துக்குக் கொண்டுவிட்டார்கள். புது வண்டியின் உள்ளே காந்திஜிக்கு நல்ல இடம் கொடுக்கப்பட்டது. வழியில் வேறு தொல்லைக்கு ஆளாகாமல் அன்றிரவு ஜோகானிஸ்பர்க் போய்ச் சேர்ந்தார்.
மேற் கூறிய சம்பவத்தைப் பற்றிக் காந்திஜி தமது சுய சரிதத்தில் விவரித்து விட்டு முடிவுரையாக எழுதி யிருக்கிறார் : "என்னை அடித்த குதிரை வண்டித் தலைவன் மீது அதற்குமேல் வேறு நடவடிக்கை எதுவும் எடுக்க நான் விரும்பவில்லை. ஆகவே அந்தச் சம்பவம் இத்துடன் முடிவு பெற்றது."
மேலே கூறியது போன்ற மற்றொரு சம்பவம் பிற்காலத் தில் நிகழ்ந்தது. இதைக் காட்டிலும் கொடுமையாகக் காந்திஜி அடிக்கப்பட்டார். அப்போது தென்னாப்பிரிக்காவில் அவருடைய பெயர் பிரபலமாகி யிருந்தது ; செல்வாக்கும் அதிகமாகி யிருந்தது. எனவே நடவடிக்கை எடுக்கும்படி நண்பர்கள் வற்புறுத்தினார்கள். சில வெள்ளைக்காரர்கள் தாங்கள் சாட்சி சொல்வதாகவும் முன் வந்தார்கள். ஆயினும் காந்திஜி மறுத்துவிட்டார். "அடித்தவன் பேரில் எனக்குக் கோபம் இல்லை. பழிக்குப் பழி வாங்கமாட்டேன் !" என்று பிடிவாத மாகச் சொல்லிவிட்டார். இந்தச் செய்தி இந்தியாவுக்கு வந்தது ; இந்தியப் பத்திரிகைகளிலும் பிரசுரமாயிற்று.
அதற்குள்ளாக டாக்டர் பெசண்டு அம்மையார் இந்தியாவுக்கு வந்து இந்தியாவையே தாய் நாடாகக் கொண்டு தொண்டு செய்யத் தொடங்கி யிருந்தார். காசி ஹிந்து சர்வ கலாசாலை என்று இப்போது பிரசித்தமாயிருக்கும் ஸ்தாபனம் அப்போது மத்திய ஹிந்து காலேஜ் ஆக இருந்தது. அந்தக் கலாசாலையின் மாதப் பத்திரிகை ஒன்று 'சென்ட்ரல் ஹிந்து காலேஜ் மெகஸைன்' என்ற பெயருடன் நடந்தது. அதில் டாக்டர் பெசண்டு அம்மை ஒரு கட்டுரை எழுதினார். தென் னாப்பிரிக்காவில் ஸ்ரீ எம். கே. காந்தி தம்மை அடித்தவன் மேல் பழி வாங்கும் எண்ணத்துடன் நடவடிக்கை எடுக்க மறுத்தது பற்றிக் குறிப்பிட்டார். "இவ்வளவு தயாள குணமுள்ளவர் சாதாரண மனிதர் அல்ல; அவரை 'மகாத்மா' என்று தான் சொல்ல வேண்டும்" என்று எழுதியிருந்தார்.
அதுமுதல் மோகன் தாஸ் காந்திஜியைச் சிலர் மகாத்மா ' என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள். சில காலத்துக்கெல்லாம் இந்தியா தேசம் முழுவதும் ’மகாத்மா காந்தி' என்று அவரைப் பெருமையுடன் போற்றியது.
இன்னும் சில காலத்தில் இந்த உலகம் முழுவதுமே அவரை 'மகாத்மா காந்தி' என்று போற்றப்போகிறது.
-----------------
ஜோகானிஸ்பர்க் பெரிய பட்டணம். அந்தப் பட்டணத்தில் முகம்மது காஸிம் கம்ருதீன் கம்பெனியின் விலாசம் காந்திஜியிடம் இருந்தது. அப்துல்லா சேத் இந்தக் கம்பெனிக்கு முன் கூட்டியே செய்தி அனுப்பி யிருந்தார். கம்பெனியின் ஆள் குதிரை வண்டி நிற்குமிடத்துக்கு வந்து காத்திருந்து விட்டுக் காந்திஜியை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிப் போய் விட்டான். ஆகவே, காந்திஜி ஜோகானிஸ்பர்க்கில் ஏதாவது ஒரு ஹோட்டலில் தங்குவது என்று தீர்மானித்து கிராண்ட் நேஷனல் ஹோட்ட 'லுக்குப் போனார். ஹோட்டல் மானேஜர் காந்திஜியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "இங்கே இடமில்லை; வருந்துகிறேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டான். பிறகு காந்திஜி கம்ருதீன் கம்பெனிக்குச் சென்றார். அங்கே அப்துல் கனி சேத் என்பவர் காந்திஜியை வரவேற்றார்.
காந்திஜி ஹோட்டலுக்குச் சென்று தங்க நினைத்ததைச் சொன்னதும் அப்துல் கனி சேத் இடி இடியென்று சிரித்தார். ”ஹோட்டலில் தங்க லாம் என்று பார்த்தீர்களா? ஓஹோஹோ !" என்று மறுபடியும் சிரித்தார். சிரிப்புக்குக் காரணம் கேட்டபோது, "கொஞ்ச நாள் இந்த நாட்டில் இருந்தால் நீங்களே எல்லாம் தெரிந்து கொள்வீர்கள். ஹோட்டலில் கறுப்பு மனிதர்களுக்கு இடம் தர மாட்டார்கள். என்னைப் போன்ற வியாபாரிகள் இங்கே பணம் சம்பாதிப்பதற்காக வந்திருக்கிறோம். ஆகையால் கஷ்டங்களையும் அவமானங்களையும் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். உங்களால் இந்த நாட்டில் இருக்கவே முடியாது. ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். நாளைக்கு நீங்கள் பிரிட்டோரியாவுக்குப் போகவேண்டும் அல்லவா? ரயிலில் மூன்றாம் வகுப்பிலே தான் பிரயாணம் செய்தாக வேண்டும். நேட்டால் நிலைமையைக் காட்டிலும் டிரான்ஸ்வாலில் நிலைமை கேவலம். இங்கே இரண்டாம் வகுப்பு முதல் வகுப்பு டிக்கட்டுகள் இந்தியர்களுக்குக் கொடுக்கவே மாட்டார்கள் " என்றார் அப்துல் கனி.
"முதல் வகுப்பு டிக்கட் வாங்க நீங்கள் ஒருவேளை பிடிவாதமாக முயற்சி செய்திருக்க மாட்டீர்கள் " என்றார் காந்திஜி.
பிறகு ரயில்வே விதிகள் அடங்கிய புத்தகம் தருவித்துப் பார்த்தார். விதிகள் வழவழ குழகுழ வென்று இருந்தன. ரயில்வே அதிகாரிகள் இஷ்டப்படி டிக்கட் கொடுக்க மறுப்பதற்கு அந்த விதிகள் இடம் கொடுக்குமெனத் தோன்றிற்று.
"முதல் வகுப்பு டிக்கட் வாங்குவதற்கு முயற்சிக்கிறேன். அது முடியாவிட்டால் ஜட்கா வண்டியில் நேரே பிரிட்டோரி யாவுக்குப் போய் விடுகிறேன் " என்று காந்திஜி சொன்னார்.
ஜோகானிஸ்பர்க் நகரத்திலிருந்து பிரிட்டோரியா முப்பத் தேழு மைல் தூரம்தான். ஆகவே குதிரை வண்டியில் போவது அசாத்திய மல்ல.
மேற்கண்டபடி முடிவு செய்துகொண்டு ஸ்டேஷன் மாஸ்டருக்குக் காந்திஜி ஒரு கடிதம் எழுதினார். தாம் அவசரமாக பிரிட்டோரியா போகவேண்டி யிருக்கிற தென்றும், முதல் வகுப்பு டிக்கட் வேண்டும் என்றும், காலையில் நேரில் வந்து டிக்கட் பெற்றுக் கொள்வதாகவும் கடிதத்தில் எழுதியிருந் தார். பதில் வேண்டுமென்று கேட்கவில்லை. பதில் கேட்டால் ஒரு வேளை 'டிக்கட் இல்லை' என்று எழுதிவிடக்கூடும் அல் லவா? நேரில் சந்தித்தால் விவாதம் செய்து பார்க்கலாம்.
மறுநாள் காலையில் பிரிட்டோரியா ஸ்டேஷனுக்குச் சென் று ஸ்டேஷன் மாஸ்டரைச் சந்தித்து முதல் வகுப்பு டிக்கட் கேட்டார்.
ஸ்டேஷன் மாஸ்டர் புன்னகை புரிந்த வண்ணம் 'கடிதம் எழுதியது நீங்கள் தானே? " என்றார்.
"ஆம்; பிரிட்டோரியாவுக்கு இன்று அவசியம் நான் போக வேண்டும்" என்றார் காந்திஜி.
ஸ்டேஷன் மாஸ்டர் கூறியதாவது:- "இதோ பாருங்கள். நான் இந்த ஊர்க்காரன் அல்ல ; ஹாலந்து தேசத்தவன். உமக்கு டிக்கட் கொடுக்கவே விரும்புகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. ரயில்வே கார்ட் உம்மை முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்புக்குப் போகச் சொன்னால் அதற்கு நான் ஜவாப் தாரியல்ல. என் மேல் புகார் சொல்லவும் கூடாது ; கம்பெனியின் பேரில் வழக்குத் தொடரவும் கூடாது ! அப்படி ஏதாவது செய்தால் என்பாடு சங்கடமாகி விடும்."
காந்திஜி மேற்படி நிபந்தனைக்குச் சம்மதித்து டிக்கட் பெற்றுக் கொண்டார். "உம்மைப் பார்த்தால் கண்ணியமான மனிதராகத் தோன்றுகிறது. சுகமாகப் போய் வாரும்!" என்று ஆசி கூறினார் ஸ்டேஷன் மாஸ்டர்.
அப்துல் கனி சேத், காந்திஜியை ரயிலேற்றி அனுப்புவதற்காக ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். முதல் வகுப்பு டிக்கட் கிடைத்தது பற்றி அவருக்கு ஒரு பக்கத்தில் ஆச்சரியம் ; இன் னொரு பக்கம் சந்தோஷம். ஆனாலும் காந்திஜிக்கு ஒரு எச்சரிக்கையும் செய்து வைத்தார் :-
"டிக்கட் என்னமோ கிடைத்து விட்டது. ஆனால் கார்டு உங்களை முதல் வகுப்பில் விட்டு வைப்பானா என்பது சந்தேகம் தான். அவன் விட்டு வைத்தாலும் மற்ற ஐரோப்பியப் பிரயாணிகள் அதை பலமாக ஆட்சேபிக்கக் கூடும். எப்படியோ ஆண்டவன் புண்ணியத்தில் நீங்கள் சுகமாகப் பிரிட்டோரியா போய்ச் சேரவேண்டியது."
இந்த எச்சரிக்கையைக் காதில் வாங்கிக் கொண்டே காந்திஜி ரயில் ஏறினார். முதல் வகுப்பு வண்டியிலேதான். ரயில் புறப்பட்டது. ஜெர்மிஸ்டன் என்னும் அடுத்த ஸ்டேஷனில் கார்டு டிக்கட் சோதனைக்கு வந்தான். முதல் வகுப்பில் கறுப்பு மனிதனைப் பார்த்ததும் கார்டுக்குக் கடுங்கோபம் வந்துவிட் டது. "இறங்கு கீழே ! மூன்றாம் வகுப்புக்குப் போ!" என்றான்.
காந்திஜி தம்மிடமிருந்த முதல் வகுப்பு டிக்கட்டை எடுத்துக் கார்டினிடம் காட்டினார்.
“ அக்கறை இல்லை ! போ, மூன்றாம் வகுப்புக்கு !" என்று உறுமினான் கார்டு.
அந்த வண்டியில் ஐரோப்பியர் ஒருவர் தான் இருந்தார். அவர் நல்ல மனிதர். கார்டைப் பார்த்து, “ஏனையா இவரைத் தொந்தரவு செய்கிறீர்? முதல் வகுப்பு டிக்கட்தான் வைத்திருக்கிறாரே ! இவர் இந்த வண்டியில் வருவதில் எனக்குச் சிறிதும் ஆட்சேபம் இல்லை !" என்றார்.
"கூலியுடன் பிரயாணம் செய்ய உமக்கு விருப்பமாயிருந்தால் எனக்கு என்ன வந்தது? " என்று முணுமுணுத்துக் கொண்டே கார்டு போய் விட்டான்.
இதற்கு பிறகு வழியில் விபத்து ஒன்றும் ஏற்படாமல் காந்திஜியின் பிரயாணம் நடந்தது.
* * *
காந்திஜி பிரிட்டோரியா ஸ்டேஷனை அடைந்தபோது இரவு நேரம். 1893-ம் ஆண்டில் நடந்த வரலாறு அல்லவா? அப்போது மின்சார விளக்குகள் இல்லை. ஸ்டேஷனில் தீபங்கள் மங்கலாக எரிந்தன. பிளாட்பாரத்தில் பிரயாணிகள் அதிகம் பேரில்லை. காந்திஜியை அழைத்துப்போக நகரிலிருந்து யாரும் வந்திருக்கவும் இல்லை. எங்கே போவது, என்ன செய்வது என்று புரியாமல் காந்திஜி திகைத்தார். ஹோட்டல்களிலோ 'கூலி ' இந்தியருக்கு இடங்கொடுக்க மாட்டார்கள்.
எல்லாப் பிரயாணிகளும் போன பிற்பாடு டிக்கட் கலெக்டரிடம் நகரில் தங்குவதற்கு இடம் கிடைக்குமா என்று விசாரிக்கலாம், அல்லது ஸ்டேஷனிலேயே இரவு தங்கி விடலாம் என்று எண்ணிக் காந்திஜி காத்துக்கொண்டிருந்தார். இந்த விஷயம் கேட்பதற்குக்கூட யோசனையாகத்தானிருந்தது. ஒருவேளை டிக்கட் கலெக்டரும் அவமதிப்பானோ என்னமோ?
அவ்விதம் ஒன்றும் நேர வில்லை. டிக்கட் கலெக்டர் மரியாதையாகப் பதில் சொன்னான். ஆனால் ஹோட்டலைப்பற்றி அவனால் தகவல் கொடுக்க முடியவில்லை. பக்கத்தில் நின்று மேற்படி சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த நீகிரோ கனவான் ஒருவர், “ நீங்கள் இந்த நகருக்குப் புதியவர்போ லிருக்கிறது. அமெரிக்கர் நடத்தும் சிறிய ஹோட்டல் ஒன்றை எனக்குத் தெரியும். அங்கு வேணுமானால் உங்களை அழைத் துப் போகிறேன்" என்றார்.
அவ்விதமே அவருடன் காந்திஜி சென்று அமெரிக்கரின் ஹோட்டலை அடைந்தார். ஹோட்டல் சொந்தக்காரர் பெயர் மிஸ்டர் ஜான்ஸ்டன். அவர் காந்திஜிக்கு இரவு தங்க இடம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். "ஆனால் எல்லாரும் சாப்பிடும் பொது போஜன அறையில் சாப்பாடு போட்டால் மற்ற ஐரோப்பியர்கள் கோபித்துக் கொள்ளலாம். உங்களுடைய அறைக்கே சாப்பாடு அனுப்பிவிடுகிறேன்" என்றார்.
இந்த மட்டும் தங்குவதற்கு இடம் கொடுத்ததற்காகக் காந்திஜி அந்த ஹோட்டல்காரருக்கு வந்தனம் செலுத்தினார்.
மறுநாள் காலையில் அப்துல்லா சேத்தின் அட்டர்னி மிஸ்டர் பேக்கர் என்பவரைக் காந்திஜி போய்ப் பார்த்தார். காந்திஜியை அவர் முகமலர்ச்சியுடன் வரவேற்றுச் சொன்னதாவது:-
"இங்கே கோர்ட்டில் வழக்கு நடத்தப் பெரிய பாரிஸ்டர்களை அமர்த்தி யிருக்கிறோம். ஆகையால் கோர்ட்டில் பேச வேண்டிய வேலை உங்களுக்கு ஏற்படாது. வழக்கு ரொம்பவும் சிக்கலான து. அது சம்பந்தமாக வேண்டிய தகவல்களை யெல்லாம் சேகரித்துக் கொடுக்க உங்களுடைய உதவி தேவை யாயிருக்கும். கட்சிக்காரரிட மிருந்து தெரிந்து கொள்ள வேண்டியதை யெல்லாம் இனி உங்கள் மூலமாகவே தெரிந்து கொள்வேன். இந்த நாட்டில் நிறவேற்றுமை உணர்ச்சி அதிகம். உங்களுக்கு ஜாகை அகப்படுவது கஷ்டம். எனக்குத் தெரிந்த ஏழை ஸ்திரீ ஒருத்தி இருக்கிறாள். அவள் ஒரு வேளை உங்களுக்கு ஜாகையும் உணவும் கொடுக்கச் சம்மதிக்கலாம். போய்க் கேட்கலாம், வாருங்கள் !"
இவ்விதம் கூறி அவர் காந்திஜியை அந்த ஏழை ஸ்திரீயின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வாரத்துக்கு 35 ஷில்லிங் வாங்கிக்கொண்டு அந்த ஆங்கில மாது காந்திஜிக்கு இடங் கொடுத்துச் சாப்பாடு போடவும் சம்மதித்தாள்.
மிஸ்டர் ஜான்ஸ்டனுடைய ஹோட்டலிலிருந்து காந்திஜி ஜாகையைப் புது இடத்துக்கு மாற்றிக் கொண்டார். அந்தப் பெண்மணி மிகவும் நல்லவள். காந்திஜியை மிக அன்போடு நடத்தினாள். அவருக்காக மரக்கறி உணவு தயாரித்துக்கொடுத்தாள். வெகு விரைவில் காந்திஜி அவளுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் போலாகிவிட்டார்.
-----------------
பிரிட்டோரியா போய்ச் சேர்ந்த சில தினங்களுக்குள் அந் நகரிலிருந்த பல இந்தியப் பிரமுகர்களைக் காந்திஜி அறிமுகம் செய் து கொண்டார். பிறகு இந்தியர்களின் பொதுக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். சேத் ஹாஜி முகம்மது என்னும் முஸ்லிம் பிரமுகர் வீட்டில் பொதுக் கூட்டம் நடந்தது. முதன் முதலாகக் காந்திஜி பொதுக் கூட்டத்தில் தைரியமாகப் பேசத் தொடங்கியது இந்தக் கூட்டத்திலே தான்.
மூன்று விஷயங்களைப் பற்றிக் காந்திஜி பேசினார். முதலாவது, வியாபாரத்தில் உண்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம். சாதாரணமாக, வியாபாரிகளுக்குள் ஒரு நம்பிக்கை பரவியிருந்தது. அதாவது வர்த்தகத் துறையில் சத்தியம் செல்லுபடியாகாது என்பது. சத்தியம் மத சம்பந்தமான விஷ யம் என்றும், வர்த்தகம் உலக விவகாரம் என்றும், ஒன்றுக் கொன்று சம்பந்தமில்லை யென்றும் அவர்கள் கருதினார்கள். இது சுத்தத் தவறான கொள்கை என்று காந்திஜி வற்புறுத்தினார். முக்கியமாக, வெளிநாட்டுக்கு வந்திருக்கும் இந்தியர்கள் எல்லாத் துறைகளிலும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அவர்களுடைய ஒழுக்கத்தைக் கொண்டே உலக மானது இந்திய சாதியின் ஒழுக்க நிலையை அள விடும் என்றும் எடுத்துக் காட்டினார். அதாவது தென்னாப்பிரிக்காவில் சில இந்திய வியாபாரிகள் பொய் சொல்லுவதாகவோ ஏமாற்றுவ தாகவோ ஏற்பட்டால், "ஒ ! இந்த இந்தியர்களே இப்படித் தான் ! பொய் சொல்லும் சாதி இந்திய சாதி !" என்று அங் குள்ள ஐரோப்பியர்கள் சொல்வார்கள். இந்த அபிப்பிராயம் உலகம் எல்லாம் பரவி இந்திய மக்களின் கெளரவத்தையே நாச மாக்கிவிடும். இதைக் காந்திஜி நன்கு எடுத்துக் கூறினார்.
இரண்டாவது, தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் பழக்க வழக்கங்களைப் பற்றியது. தென்னாப்பிரிக்க வெள்ளைக்காரரின் பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியர்களுடைய பழக்க வழக்கங்கள் சுகாதாரக் குறைவா யிருப்பதைக் காந்திஜி சுட்டிக் காட்டினார்.
மூன்றாவது, வெளிநாட்டுக்கு வந்திருக்கும் இந்தியர்கள் தங்களுக்குள் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என்ற மதவேற்று மையும் குஜராத்தி, மதராஸி, பஞ்சாபி முதலான மாகாண வேற்றுமைகளையும் அடியோடு மறந்து ஒற்றுமை யடைய வேண்டும் என்றும், அப்போதுதான் அவர்களுடைய உரிமை களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றும் சொன்னார்.
கடைசியாக, இந்தியர்களுக்கு இங்கே அநேக கஷ்டங்கள் இருப்பதால் அவற்றை அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லிப் பரிகாரம் தேடுவதற்கு ஒரு சங்கம் அமைக்க வேண்டும் என் றும் யோசனை சொன்னார்.
காந்திஜியின் பிரசங்கம் அங்கே கூடியிருந்தவர்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. அவர் கூறிய விஷயங்கள் பற்றிச் சிறிது நேரம் விவாதம் நடந்தது. மாதம் ஒரு முறை அம் மாதிரி பொதுக் கூட்டம் நடத்த வேண்டும் என்று முடிவாயிற்று. இந்தியர்களின் கஷ்டங்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துத் தருவதற்குச் சில பிரமுகர்கள் முன் வந்தார்கள்.
அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் பலருக்கு ஆங்கில பாஷை தெரியவில்லை என்பதைக் காந்திஜி கண்டார். தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களுக்கு ஆங்கில பாஷை உபயோகமா யிருக்குமாதலால் யாராவது ஆங்கிலம் கற்றுக் கொள்ள விரும்பினால் தாமே சொல்லிக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார். மூன்று பேர் அவ்விதம் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முன் வந்தனர். அவர்களில் ஒருவர் நாவிதர் ; ஒருவர் குமாஸ்தா ; ஒருவர் சில்லறைக் கடைக்காரர். பின் இருவரும் எட்டு மாதத்தில் நல்ல ஆங்கில பாஷா ஞானம் பெற்றார்கள். அதனால் அவர்களுடைய வருமானமும் உயர்ந்தது. நாவிதர் தம்மிடம் கூ வரம் செய்துகொள்ள வருவோரிடம் பேச வேண்டிய அளவுக்கு இங்கிலீஷ் கற்றுக் கொண்டாராம்.
முதற் கூட்டத்தில் செய்த தீர்மானத்தின்படி மாதாமாதம் தவறாமல் இந்தியர்களின் பொதுக்கூட்டம் நடந்து வந்தது. அந்தக் கூட்டங்களில் எல்லாரும் தத்தம் அபிப்பிராயங்களைத் தாராளமாய்த் தெரிவித்தார்கள். இந்தக் கூட்டங்களின் காரணமாக பிரிட்டோரியாவில் இருந்த அத்தனை இந்தியர்களையும் காந்திஜி தெரிந்து கொண்டார். அவர்களில் ஒவ்வொருவருடைய நிலைமையையும் பற்றித் தனித் தனியே அறிந்து கொண்டார்.
டிரான்ஸ்வாலிலும் அதை அடுத்த ஆரஞ்சு பிரீ ஸ்டேட் மாகாணத்திலும் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதிகளைப் பற்றிய விவரங்களை அறிந்தார்.
ஆரஞ்சு பிரீ ஸ்டேட் மாகாணத்தில் 1888-ம் ஆண்டில் ஒரு விசேஷ சட்டம் இயற்றி இந்தியர்களுடைய பிரஜா உரிமைகள் எல்லாவற்றையும் பறித்து விட்டார்கள். பல காலமாக அங்கே தங்கி வியாபாரத் துறையில் ஈடுபட்டிருந்த இந்தியர்களைப் பெயருக்கு நஷ்ட ஈடு என்று கொடுத்துத் துரத்தி விட்டார்கள். அந்த மாகாணத்தில் இந்தியர்கள் இருக்க விரும்பினால் ஹோட் டல் வேலைக்காரர்களாகவோ அல்லது வேறு சிற்றூழியம் செய்பவர்களாகவோ தான் இருக்கலாம் என ஏற்பட்டது.
டிரான்ஸ்வாலில் 1885, 1886-ம் ஆண்டுகளில் மிகக் கடுமையான சட்டங்கள் இந்தியருக்கு விரோதமாகச் செய்யப்பட் டன. அச்சட்டங்களின் படி, டிரான்ஸ்வாலுக்குள் வரும் ஒவ்வொரு இந்தியனும் மூன்று பவுன் தலை வரி கொடுக்க வேண்டும். இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே அவர்கள் நிலம் வைத்துக் கொள்ளலாம். காரியாம்சத்தில் அந்த நிலமும் அவர்களுக்குச் சொந்தமாகாது. இந்தியர்களுக்கு வாக்குரிமை கிடையாது. இந்தியர்கள் உள்படக் கறுப்பு மனிதர்களில் யாரும் பொது நடைப் பாதைகளில் நடக்கக் கூடாது.
இரவு ஒன்பது மணிக்குமேலே கறுப்பு மனிதர்கள் வெளியே புறப்படக் கூடாது என்று ஒரு விதி சொல்லிற்று. ஆனால் இந்த விதியைச் சமயோசிதம்போல் பிரயோகித்தார்கள். தங்களை 'அராபியர்கள்' என்று சொல்லிக் கொண்ட இந்தியர்கள் மீது தாட்சண்யம் காட்டி மேற்படி விதியைப் பிரயோகம் செய்வதில்லை. ஆனால் விதி விலக்குச் செய்வது போலீஸ்காரனின் சித்தத்தையே பொறுத்த காரியமாயிருந்தது.
மேற்படி அந்தமான சட்டங்களையும் விதிகளையும் பற்றிக் காந்திஜி கேட்டுத் தெரிந்து கொண்டார். தமது சொந்த அனுபவத்திலிருந்தும் தெரிந்து கொண்டார். சுய மரியாதையுள்ள இந்தியன் எவனும் தென்னாப்பிரிக்காவில் வசிப்பதற்கு லாயக் கில்லை என்று அறிந்தார். இந்தக் கேவலமான நிலைமையைச் சீர் திருத்துவது எப்படி என்று சிந்தனை செய்யலானார்.
இதற்கிடையில் தாதா அப்துல்லாவின் வழக்கு சம்பந்தமாக வும் காந்திஜி தீவிர கவனம் செலுத்தினார்.
------------------
தாதா அப்துல்லா கம்பெனியாரின் வழக்கு சாமான்யமான தல்ல. நாற்பதினாயிரம் பவுன் வர வேண்டு மென்று வழக்குத் தொடரப்பட்டிருந்தது. தாவாவுக்கு ஆதாரம் புரோநோட்டுகளும் புரோநோட்டுத் தருவதாக வாக்குறுதிகளுந்தான். 'புரோநோட்டுகள் யோசனை செய்வதற்கு அவகாசம் கொடாமல் மோசடியாக எழுதி வாங்கப்பட்டவை ' என்பது பிரதி வாதியின் கட்சி. வழக்கில் சிக்கல்களும் சட்ட நுட்பங்களும் ஏராளமா யிருந்தன. இரு தரப்பிலும் பெரிய பெரிய பாரிஸ்டர்களையும் அட்டர்னிகளையும் அமர்த்தியிருந்தார்கள்.
வாதியின் கட்சிக்கு ஆதாரங்களையும் நிகழ்ச்சி விவரங்களையும் சேர்த்துத் தொகுக்கும் வேலை காந்திஜிக்கு அளிக்கப்பட் டது. எனவே வக்கீல் தொழில் நடத்தும் முறை பற்றிய மிக உபயோகமான அனுபவங்கள் காந்திஜிக்குக் கிடைத்தன.
எடுத்துக் கொண்ட வேலையை மிகவும் சிரத்தையுடன் காந்திஜி செய்தார். வழக்கின் விவரங்களில் அமிழ்ந்து விட் டார் என்றே சொல்லலாம். இரு கட்சியாரின் தஸ்தாவேஜிகளை யும் அவர் படிக்கும்படி ஏற்பட்டது. எனவே வாதிப் பிரதி வாதிகளுக்குக்கூட தெரியாத அளவில் காந்திஜி மேற்படி வழக்கைப் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டார்.
விவரங்கள் என்றால் உண்மை நிகழ்ச்சிகளே யல்லவா? இவ் வழக்கில் உண்மை நிகழ்ச்சிகள் தாதா அப்துல்லாவுக்கே சாதகமாயிருந்தன. எனவே சட்டமும் அவருக்கு அநுகூல மாக இருக்கும் என்று காந்திஜிக்கு உறுதி ஏற்பட்டது.
அதே சமயத்தில் அந்த வழக்கு இலேசில் முடியக் கூடிய தல்ல வென்றும் நெடுங்காலம் இழுத்துக் கொண்டே போகக் கூடும் என்றும் காந்திஜிக்குத் தெரிய வந்தது. விவகாரம் நீடிக்க நீடிக்க, இரு கட்சிகளுக்கும் பண நஷ்டம் அதிகமாகிக் கொண்டே வரும். கடைசியில் இருவருமே அழிந்து போவார்கள் இத்தனைக்கும் வாதியும் பிரதிவாதியும் உற்ற பந்துக்கள். இவர்கள் வீண் பிடிவாதத்தினால் வழக்கு நடத்தி அழிந்து போவது எவ்வளவு அறிவீனம்?
இதை யெல்லாம் சிந்தித்துப் பார்த்த காந்திஜி பிரதிவாதி யாகிய தயேப் சேத்தினிடம் சென்றார். வழக்கை மத்தியஸ்தம் செய்வதற்கு விட்டு முடிவு செய்யும்படி யோசனை சொன்னார் ; மிகவும் மன்றாடி வேண்டிக் கொண்டார். ஆனால் உடனே பலன் கிட்டவில்லை.
வக்கீல்களுக்கு கூலி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. வாதிப் பிரதிவாதிகள் பெரும் செல்வர்கள் தான். ஆயி னும் இப்படியே போய்க்கொண்டிருந்தால் அவர்களுடைய சொத்தை யெல்லாம் இந்த வழக்கே விழுங்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் வழக்கிலேயே அதிகமாகக் கவனம் செலுத்தியபடியால் வாதிப் பிரதிவாதிகள் வியாபாரத்தில் கவ னம் செலுத்துவது குறைந்து வந்தது.
வக்கீல்கள் தங்கள் கட்சிக்கு அநுகூலமாக மேலும் மேலும் சட்ட, நுட்பங்களைக் கிளப்பிக்கொண்டே யிருந்தார்கள். முடிவாக யார் வெற்றி யடைந்தாலும் வழக்கில் செலவழிந்த தொகை திரும்பி வராது என்பது நிச்சயம். கோர்ட் பீஸ் சட்டத்தின்படி வக்கீல்களுக்கு இவ்வளவு விகிதந்தான் கூலி கொடுக்கலாம் என்று விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அட்டர்னிகளுக்குக் கொடுக்கப்பட்ட தொகை பன்மடங்கு அதிகம். இந்த அநீதிகளை யெல்லாம் எண்ண எண்ணக் காந்திஜிக்குச் சகிக்கமுடியவில்லை. வக்கீல் தொழில் மேலேயே வெறுப்பு உண்டாயிற்று. தம்மைப் பொறுத்த வரையில் வாதிப் பிரதிவாதிகளுக்குள் ராஜி செய்து வைப்பது தான் தமது கடமை என்று கருதினார். அதற்கு மேலும் மேலும் சலியாமல் விடாமுயற்சி செய்தார். கடைசியாக, முயற்சி வெற்றி பெற்றது. வழக்கை மத்தியஸ்தத்துக்கு விடத் தயேப் சேத் சம்மதித்தார்.
மத்தியஸ்தர் நியமிக்கப் பட்டார். அவர் முன்னால் இரு தரப்பு வாதங்களும் சொல்லப் பட்டன. எல்லாவற்றையும் மத்தியஸ்தர் கேட்டுவிட்டுக் கடைசியாகத் தாதா அப்துல்லாவின் பக்கமே தீர்ப்பளித்தார். அதன்படி முப்பத்தேழாயிரம் பவுனும் செலவு தொகையும் வாதிக்குப் பிரதிவாதி கொடுக்க வேண்டுமென்று ஏற்பட்டது.
தீர்ப்பு நியாயமான தீர்ப்புத்தான். ஆனால் இத்துடன் காந்திஜி திருப்தி அடைந்துவிட வில்லை. தீர்ப்பின்படி பூராத் தொகையையும் உடனே செலுத்தவேண்டுமென்று வற்புறுத்தினால், தயேப் சேத்தினால் செலுத்த முடியாது. அவர் 'இன் ஸால் வெண்ட்' ஆக நேரிடும். அப்போது தென்னாப்பிரிக்காவில் வசித்த போர்பந்தர் வியாபாரிகளுக்குள் "இன்ஸால் வெண்ட் ஆவதைக் காட்டிலும் மரண மடைவதே மேல்" என்னும் உணர்ச்சி குடி கொண்டிருந்தது. பைசா பாக்கியில்லாமல் பணத்தைக் கொடுத்துவிட வேண்டுமென்றுதான் தயேப் சேத் எண்ணினார். ஆனால் ’இன்ஸால் வெண்ட்' என் னும் அபகீர்த்தியை அடைய விரும்பவில்லை.
ஆகவே தயேப் சேத்தைத் தப்புவிப்பதற்கு ஒரே ஒரு வழி தான் இருந்தது. பல தவணைகளாகப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தாதா அப்துல்லா இணங்கவேண்டும். அப்படி அவரை இணங்கச் செய்வதற்குக் காந்திஜி பெரும் பிரயத்தனம் செய்தார். மத்தியஸ்தத்திற்கு இரு கட்சியாரையும் ஒப்புக்கொள்ளும்படி செய்ததைக் காட்டிலும் இதற்கு அதிகப் பிரயாசை தேவையா யிருந்தது, முடிவில் தாதா அப்துல்லாவின் மனம் இளகிற்று. நீண்ட காலத்தில் பல தவணைகளாகப் பணம் பெற்றுக்கொள்வதற்கு இசைந்தார். முடிவு இருதரப் பாருக்கும் மகிழ்ச்சி யளித்தது. இந்திய சமூகத்தில் இரண்டு தரப்பாரின் மதிப்பும் உயர்ந்தது.
காந்திஜியோ ஆனந்தக் கடலில் ஆழ்ந்தார். தாம் வந்த காரியம் இவ்வளவு திருப்திகரமாக முடிந்ததே என்று மகிழ்ந்தார். உண்மையில் வக்கீல் தொழில் நடத்த வேண்டிய முறையே இதுதான் என்று கருதினார். இந்த எண்ணம் காந்திஜியின் மனத்தில் அப்போது ஆழ்ந்து பதிந்து விட்டது. மகாத்மா தம் சுய சரிதத்தில் கூறுகிறார் :-
"கட்சிக்காரர்களுக்குள் பிளவை நீக்கி ஒற்றுமையை நாட்டுவதே வக்கீலின் உண்மை வேலை என்று அறிந்தேன். இந்தப் படிப்பினை அப்போது என்றும் அழியா வண்ணம் என் ஹிருதயத்தில் பதிந்துவிட்டபடியால், பிற்காலத்தில் நான் வக்கீல் தொழில் நடத்திய இருபது ஆண்டுகளிலும் கட்சிக்காரர்களுக்குள் ராஜி செய்து வைப்பதிலேயே என் காலத்தில் பெரும் பகுதி கழிந்தது. நூற்றுக் கணக்கான வழக்குகளை அப்படி நான் ராஜி செய்து வைத்திருக்கிறேன். இதனால் நான் அடைந்த நஷ்டம் யாதுமில்லை ; ஆன்ம நஷ்டமும் அடையவில்லை."
----------------
தாதா அப்துல்லாவின் வழக்கு நடந்து கொண்டிருந்த போது காந்திஜிக்குச் சில விசேஷ அநுபவங்கள் ஏற்பட்டன.
மேற்படி வழக்கின் அட்டர்னியான மிஸ்டர் பேகர் என்பவரைக் காந்திஜி பிரிட்டோரியா வந்ததும் சந்தித்தார் அல்லவா? மிஸ்டர் பேகர் கிறிஸ்துவ மதத்தில் மிகப் பற்றுள்ளவர். கிறிஸ் துவ மதப் பிரசாரமும் செய்து வந்தார். அவரும் அவருடைய நண்பர்கள் சிலரும் வாரந்தோறும் ஓரிடத்தில் கூடிப் பிரார்த்தனை நடத்தினார்கள். இந்தப் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வரும்படி காந்திஜியை மிஸ்டர் பேகர் அழைத்தார். தமக்கும் தம்முடைய சகாக்களுக்கும் நிற வேற்றுமை உணர்ச்சி கிடை யாதென்றும் தெரிவித்தார்.
அவ்விதமே காந்திஜி மிஸ்டர் பேகரின் மதப் பிரசங்கங்களுக்கும் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கும் சென்றார். இங்கு மிஸ்டர் கோடெஸ் என்பவரையும் இன்னும் சிலரையும் காந்திஜிக்கு மிஸ்டர் பேகர் அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் வழக்கமான பிரார்த்தனையைச் செய்து விட்டு, காந்திஜி கடைத் தேறும் பொருட்டாக விசேஷ பிரார்த்தனை செலுத்தினார்கள்.
"ஆண்டவனே ! இன்று எங்களிடையே புதிதாக வந்திருக்கும் சகோதரருக்கு ஞான மார்க்கத்தைக் காட்டி அருள்வீராக! எங்களுக்கு அருளிய மனச் சாந்தியை அவருக்கும் தருவீராக! எங்களை ஆட்கொண்ட ஏசு பெருமான் அவரையும் ஆட்கொள் எட்டும்!" என்று பிரார்த்தித்தார்கள்.
பிறகு காந்திஜி அடிக்கடி அந்த நண்பர்களைச் சந்தித்து மத விஷயங்களைப் பற்றிச் சர்ச்சை செய்து வந்தார். அவர்கள் காந்திஜியைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்துவிடும்படி அடிக்கடி போதனை செய்தார்கள். கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்தவர்களின் பாவங்களையெல்லாம் ஏசுநாதர் தாம் ஒப்புக்கொண்டு அவர்களுக்கு மோட்சத்தை அளிக்கிறார் என்றும், ஆகையால் பாவம் நீங்கி மோட்சம் அடையக் கிறிஸ்துவ மதத்தில் சேருவது ஒன்றே வழி யென்றும் வற்புறுத்தினார்கள்.
இந்த வாதம் காந்திஜிக்குத் திருப்தி அளிக்கவில்லை. "பாவம் செய்துவிட்டு அதன் பலனை அநுபவியாமல் தப்பவேண்டும் என்று நான் ஆசைப்படவில்லை. பாவத்திலிருந்தும் பாவ எண்ணங்களிலிருந்தும் கூட விடுதலை பெற விரும்புகிறேன். அதற்காக இடைவிடாமல் நான் முயற்சி செய்யப் போகிறேன் " என்று சொன்னார்.
துளசிமணிமாலை அணியும் வழக்கத்தைக் காந்தி மகாத்மா இளம் வயதிலேயே கைக்கொண்டிருந்தார்.
மிஸ்டர் கோடெஸ் என்னும் கிறிஸ்துவ நண்பர் காந்திஜி கழுத்தில் அணிந்திருந்த துளசிமணி மாலையைப் பார்த்துவிட்டு, "இந்த மாலையை எதற்காக அணிந்திருக்கிறீர்கள்? இதெல்லாம் சுத்தக் குருட்டு நம்பிக்கை. அதை இங்கே கொடுத்துவிடுங் கள் ! இப்போதே உடைத்து எறிந்துவிடுகிறேன்!" என்றார்.
"இல்லை ! இதை உடைக்கக் கூடாது. இந்த மாலை என் தாயார் எனக்கு அளித்த புனிதச் சின்னம் " என்றார் காந்திஜி.
"இதனிடம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? இந்த மாலையை எடுத்துவிட்டால் மோட்சம் கிட்டாது என்று நினைக்கி றீர்களா? உண்மையாகச் சொல்லுங்கள்!" என் று மிஸ்டர் கோடெஸ் கேட்டார்.
”இந்த மணி மாலையின் உட்பொருள் என்னமோ எனக்குத் தெரியாது. இதை அணியா விட்டால் எனக்குக் கெடுதல் நேர்ந்து விடும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் என் தாயார் அன்புடன் என் கழுத்தில் அணிவித்த மாலையைத் தகுந்த காரணமின் றி எடுத்து எறிய மாட்டேன் ! இதை உடைக்கவும் சம்மதிக்க மாட்டேன்!" என்றார் காந்திஜி.
இவ்வாறாகப் பல தடவைகளில் நண்பர்கள் எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லியும், காந்திஜி கிறிஸ்துவ மதத்தில் சேரத் தயாராகவில்லை. ஆனால் கிறிஸ்துவ மத போதனைகளில் மிகப் பற்றுக் கொண்டார். முக்கியமாக “தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய்யவேண்டும்" என்னும் ஏசுநாதரின் போதனை அவருடைய சிந்தையைக் கவர்ந்தது.
மேற்படி கொள்கையில் காந்திஜியின் நம்பிக்கையைச் சோதிக்கும்படியான சம்பவம் ஒன்று அப்போது நடந்தது.
பொது நடைப் பாதைகளில் இந்தியர்கள் நடக்கக்கூடாது என்றும், இரவு ஒன்பது மணிக்குமேல் அநுமதிச் சீட்டு இல்லாமல் இந்தியர்கள் வெளியில் புறப்படக் கூடாதென்றும் டிரான்ஸ் வாலில் சட்டங்கள் இருந்தன வல்லவா?
மிஸ்டர் கோடெஸ்ஸம் காந்திஜியும் இரவில் வெளியில் உலாவச் செல்வது வழக்கம். இரவு பத்து மணிக்குத்தான் அவர்கள் திரும்பி வருவார்கள். இப்படிச் சட்ட விரோதம் செய்வதற்காகப் போலீஸார் காந்திஜியைக் கைது செய்தால் என்ன பண்ணுவது என்ற கவலை காந்திஜியைக் காட்டிலும் அதிகமாக மிஸ்டர் கோடெஸ்ஸ க்கு இருந்தது. ஆகையால் அவர் சர்க்கார் வக்கீலான டாக்டர் கிராஸே என்பவரிடம் காந்திஜியை அழைத்துப் போனார். இங்கிலாந்தில் காந்திஜி பாரிஸ்டர் பயிற்சி பெற்ற ஸ்தாபனத்திலேயே கிராஸேயும் பயிற்சி பெற்றவர். அவர் காந்திஜியிடம் மிக்க அனுதாபம் தெரிவித்தார். சாதாரண அநுமதிச்சீட்டுக்குப் பதிலாகப் போலீஸ் தொந்தரவு இல்லாமல் - எப்போது வேண்டுமானாலும் வெளியே போகக் கூடிய வாறு ஒரு கடிதமும் தந்தார். இந்தக் கடிதத் தைக் காந்திஜி எப்போது வெளியே புறப்பட்டாலும் கையோடு எடுத்துப் போவது வழக்கம்.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மனிதர்கள் இப்படிப்பட்ட அநீதமான சட்டங்களை யெல்லாம் இயற்றி யிருக்கும்போது, கிறிஸ்துவ மதத்தைத் தழுவிய் உடனே ஒருவன் பரிசுத்தனாகி மோட்ச சாம்ராஜ்யத்துக்கு உரியவனாகிவிடுவான் என்று நம்புவது காந்திஜிக்குக் கஷ்டமா இருந்திருக்குமல்லவா?
உண்மையில், ஒருவனுக்கு மோட்சம் கிடைப்பதும் கிடைக் காததும் அவனுடைய நடத்தையையும் மனத் தூய்மையையும் பொறுத்தனவே தவிர, அவன் சம்பிரதாயமாகக் கடைப்பிடிக் கும் வெளி மதாச்சாரங்களைப் பொறுத்தன வல்ல என்பது காந்திஜியின் கொள்கை. இந்தக் கொள்கை ருசியாவின் மகான் டால்ஸ்டாய் எழுதிய "ஆண்டவன் ராஜ்யம் உனக்குள்ளே " என்னும் புத்தகத்தைப் படித்ததில் உறுதியாயிற்று. காந்திஜியின் ஆத்மீக வளர்ச்சிக்கு மேற்படி புத்தகம் பெரிதும் துணையாயிருந்தது. தம்பி! நீ இன்னும் கொஞ்சம் பெரியவரனான பிறகு மேற்படி புத்தகத்தை அவசியம் படிக்கவேண்டும். இன்னும் மகான் டால்ஸ்டாய் எழுதியிருக்கும் சிறு கதைகள், நாவல்கள், கட்டுரை நூல்கள் முதலியவற்றையும் படிக்க வேண்டும். டால்ஸ்டாயின் நூல்கள் உலக வாழ்வின் இருளைப் போக்கும் ஞான தீபங்கள் ; அதோடு, அவை மிகச் சிறந்த இலக்கியப் பொக்கிஷங்களுமாகும். நிற்க.
மேற்கண்டவாறு விசேஷ அநுமதிக் கடிதம் பெற்றிருந்துங்கூட, பொது நடைப் பாதைகளில் இந்தியர்கள் நடக்கக் கூடாது என்ற விதியினால் காந்திஜி ஒரு சமயம் பெருந் தொல்லைக்கு ஆளாக நேர்ந்தது.
தினம் இரவு நேரத்தில் காந்திஜியும் மிஸ்டர் கோடெஸ்ஸும் உலாவச் செல்லும் போது 'அக்கிராசனர் வீதி' என்று வழங்கிய சாலை வழியாக ஒரு மைதானத்துக்குப் போவது வழக்கம். இந்த வீதியில் தென்னாப்பிரிக்கா சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற பிரசிடெண்ட் குரூகர் என்பவரின் வீடு இருந்தது. டிரான்ஸ்வால் சர்க்காரின் தலைவராக விளங்கிய அக்கிராசனர். குருகர் எளிய வாழ்வைக் கடைப்பிடித்தவர். அவருடைய வீடு படாடோபமில்லாத சிறிய வீடு. பக்கத்து வீடுகளுக்கும் அக்கிரா சனர் குருகர் வீட்டுக்கும் வித்தியாசம் ஒன்றுமே தெரியாது.
பிரிட்டோரியாவில் லட்சாதிபதிகளான பல வெள்ளைக்காரர்கள் உண்டு. அவர்களுடைய பங்களாக்கள் பிரமாதமா யிருக்கும். ஆனால் குருகரின் வீடு வெகு சாமான்யமான து. வீட்டின் வாச லில் ஒரு சேவகன் எப்போதும் நின்று கொண்டிருப்பான். இதில் லிருந்துதான் அது ஓர் உத்தியோகஸ்தரின் வீடு என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
அந்த வீட்டுக்கு முன்னாலிருந்த நடைப்பாதை வழியாகவே காந்திஜி எப்போதும் உலாவப் போவது வழக்கம். பல நாள் வரையில் இதற்குத் தடை ஒன்றும் ஏற்படவில்லை. ஒரு நாள் ஏற்பட்டு விட்டது !
காவலுக்கு நிற்கும் சேவகர்கள் அடிக்கடி மாறுவது இயல்பே யல்லவா? ஒரு நாள் ஒரு புதிய சேவகன் வந்தான். அவன் நின்ற இடத்தின் அருகாமையில் காந்திஜி சென்றபோது, அந்த மூர்க்கன் சிறிதும் எச்சரிக்கை செய்யாமலும் "அப்பால் போ!" என்று கூடச் சொல்லாமலும் காந்திஜியை உதைத்துத். தள்ளினான்! இப்படி ஒரு மூர்க்கன் செய்வான் என்று நம்புவதற்கே இப்போது கஷ்டமாயிருக்கிற தல்லவா? ஆனால் இதை விட நம்புவதற்குக் கஷ்டமான அபூர்வ நிகழ்ச்சிகளும் அச்சம் தர்ப்பத்தில் நடந்தன.
தற்செயலாக அதே சமயத்தில் அந்தப் பக்கம் மிஸ்டர் கோடெஸ் குதிரைமேல் போய்க் கொண்டிருந்தார். மேற்படி சம்பவத்தைப் பார்த்தார். பரபரப்புடன் காந்திஜியிடம் ஓடி வந்து அநுதாபம் தெரிவித்தார். அதோடு, "இந்த முரடன் மீது கட்டாயம் வழக்குத் தொடர வேண்டும்; நான் சாட்சி சொல்லுகிறேன். இவன் தண்டிக்கப்படுவான் !" என்றார்.
மகாத்மா அதற்கு என்ன சொன்னார் தெரியுமா? "வேண்டாம், வேண்டாம்! பாவம் ! அவன் என்ன கண்டான்? கறுப்பு மனிதர்களை யெல்லாம் இப்படி நடத்தியே இவனுக்குப் பழக்கம். இந்த நாட்டின் சட்டங்கள் அவ்வளவு இலட்சண மாக இருக்கின்றன. ஆகவே இந்தச் சேவகன்மேல் வழக்கு தொடருவதில் என்ன பயன்? எனக்கு ஒருவன் கெடுதல் செய்ததற்காக அவன் பேரில் நான் கோபப்பட மாட்டேன் ; பழி வாங்கவும் எண்ண மாட்டேன். ' தீமை செய்தவனை மன்னித்து விடு' என்பது ஏசுநாதரின் திருவாக்கு அல்லவா? என் னைத் துன்புறுத்திய இவனை நான் மன்னித்து விட்டேன். வழக்குத் தொடர வேண்டிய அவசியமில்லை !" என்றார் காந்திஜி.
மிஸ்டர் கோடெஸ் திகைத்துப் போனார். "ஆஹா ! ஏசு நாதரின் போதனையை வாழ்க்கையில் உண்மையாகவே கடைப் பிடிக்கத் துணிச்சல் உள்ள மனிதர் இதோ ஒருவர் இருக்கிறாரே!" என்று வியந்தார். நாளடைவில் இந்தச் செய்தி பரவிய போது உலகமெல்லாமே ஆச்சரியப்பட்டது. ருஷியாவில் டால்ஸ்டாயும், இந்தியாவில் கோகலேயும், பெஸண்டு அம்மையும் கேட்டு வியந்தார்கள். "இவர் ஒரு மகாத்மா " என்று பலரும் வியந்து பாராட்டினார்கள்.
பிறகு மிஸ்டர் கோடெஸ் அந்தப் போலீஸ்காரனிடம் சென்று டச்சு பாஷையில் பேசினார். அவனுடைய நடத்தை எவ்வளவு மிருகத்தனமானது என்பதைச் சொல்லி, காந்தி மகாத்மா அவனிடம் காட்டும் கருணை எவ்வளவு தெய்வீகமான தென்பதையும் எடுத்துக் கூறினார். அந்த முரட்டுச் சேவகனுடைய மனம் இளகி விட்டது. காந்திஜியிடம் வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். "மன்னிப்புக் கேட்க அவசியமே இல்லை. உன்னை முன்னமே நான் மன்னித்து விட்டேன்" என்றார் காந்தி மகாத்மா.
அந்தப் பாதை வழியாகப் பிறகு மகாத்மா போகவில்லை. ஒரு வேளை மறுபடியும் சேவகன் மாறலாம். அவன் எப்படிப் பட்டவனோ என்னமோ? அவன் மீண்டும் இப்படி ஏதாவது செய்து வைத்தால்? காந்திஜி தமக்கு நேரக் கூடிய கஷ்டத்தைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் ஒரு ஏழைச் சேவகன் அறியாமையினால் முரட்டுச் செயல் புரிவதற்குக் காரணமாக அவர் நடந்து கொள்ள விரும்பவில்லை.
செய்ய வேண்டியது வேறு காரியம். தென்னாப்பிரிக்கா வில் உள்ள அந்த நிற வேற்றுமைச் சட்டங்களை ஒழித்துக் கறுப்பு மனிதர்களைக் காப்பாற்ற வேண்டும். அம்பை விட்டவனை நோகாமல் அம்பை நொந்து கொள்வதில் என்ன பயன்?
-------------
தாதா அப்துல்லாவின் வழக்கு முடிந்து விட்டது. அதன் பிறகு பிரிட்டோரியாவில் காந்திஜி இருப்பதற்கு முகாந்தரம் எதுவும் கிடையாது. எனவே டர்பனுக்குப் புறப்பட்டுச் சென்று தாய்நாட்டுக்குக் கப்பல் ஏறுவதற்குக் காந்திஜி ஆயத்தமானார். ஆனால் அப்துல்லா சேத் அவ்வளவு சுலபமாக அவரை விட்டு விடுவாரா? இதற்குள்ளே காந்திஜியின் பேரில் மிக்க அபிமானமும் மரியாதையும் அவருக்கு ஏற்பட்டிருந்தது. ஆகவே, காந்திஜிக்குப் பிரிவு உபசார விருந்து ஒன்று நடத்தினார். பல நண்பர்களை விருந்துக்கு அழைத்தார். எல்லாரும் ஒரு நாள் முழுதும் தங்கி பொழுது போக்க ஏற்பாடு செய்திருந்தார்.
அச் சமயம் அங்கே கிடந்த தென்னாப்பிரிக்காப் பத்திரிகைகளைக் காந்திஜி புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார். "இந்தியர்களின் வாக்குரிமை " என்ற தலைப்பைக் கண்டதும் அதன் அடியில் கண்ட செய்தியைப் படித்தார். அப்போது நேட்டால் சட்ட சபையில் விவாதிக்கப்பட்டுவந்த ஒரு மசோதாவைப் பற்றியது அந்தச் செய்தி. நேட்டால் சட்டசபைத் தேர்தலில் வோட்டுக் கொடுக்கும் உரிமை அங்கே வியாபாரம் முதலிய தொழில்கள் செய்து வந்த இந்தியர்களுக்கு இருந்தது. அதைப் பறித்துவிடும் நோக்கத்துடன் மேற்படி மசோதா கொண்டு வரப்பட்டிருந்தது.
விருந்துக்கு வந்திருந்த இந்திய நண்பர்களிடம் காந்திஜி அதுபற்றி விசாரித்தார். அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை.
அப்துல்லா சேத் கூறினார் -- "இந்த விஷயமெல்லாம் எங்களுக்கு என்ன தெரியும்? வியாபார சம்பந்தமான விஷயங்களைப் பற்றி மட்டுந்தான் நாங்கள் சிரத்தை எடுத்துக் கொள்கிறோம். ஆரஞ்சு பிரீ ஸ்டேட் மாகாணத்தில் இந்தியர்கள் வியாபாரமே செய்யக்கூடாது என்று ஏற்பட்டுவிட்டது. அதைப்பற்றி நாங்கள் செய்த கிளர்ச்சி பயன்படவில்லை, நாங்கள் படிப்பாளிகள் அல்ல. பத்திரிகை வாங்கி அதிலுள்ள மார்க்கெட் நிலவரங்களைப்பற்றி மட்டும் படித்துவிட்டு எறிந்துவிடுகிறோம். சட்ட விவகாரங்களுக்கெல்லாம் இங்குள்ள ஐரோப்பிய அட்டர்னிகளையே நம்பியிருக்கிறோம்."
இதைக் கேட்ட காந்திஜி, "என்ன இப்படிச் சொல்கிறீர் கள்? இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்து கல்வி பயின்ற இந்திய இளைஞர்கள் அநேகர் இருக்கிறார்களே? அவர்கள் உங்களுக்கு உதவி செய்வதில்லையா?" என்றார்.
"அவர்களா? அவர்கள் எங்கள் பக்கத்திலேயே வருவதில்லை. நாங்களும் அவர்களை இலட்சியம் செய்வதில்லை. இங்கே படித்த இந்திய இளைஞர்கள் எல்லாரும் கிறிஸ்துவர்கள். வெள்ளைக்காரப் பாதிரிமார்கள் சொல்கிறபடி ஆடுகிறவர்கள். அந்தப் பாதிரிமார்களோ அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். அப்படி யிருக்கும்போது எங்களுக்கு அவர்களின் உதவி எப்படிக் கிடைக்கும்?" என்று அப்துல்லா சேத் கூறினார்.
இதைக் கேட்டதும் காந்திஜிக்கு ஒரே வியப்பாய்ப் போய் விட்டது. கிறிஸ்துவர்கள் ஆன காரணத்தினால் அவர்கள் இந்தியர் அல்லாதவராகி விட்டார்களா? கிறிஸ்துவ மதத்தின் பொருள் இதுதானா? ஒருநாளும் இல்லை. அத்தகைய கிறிஸ்துவ இந்திய வாலிபர்களை யெல்லாம் நம்மவர்கள் என்று உரிமை பாராட்டவேண்டும் என்பதாகக் காந்திஜிக்குத் தோன்றியது.
ஆனால் இத்தகைய எண்ணங்களினால் என்ன பயன்? காந்திஜியோ கப்பல் ஏற ஆயத்தமாயிருந்தார். தென்னாப்பிரிக்காவில் செய்ய வேண்டிய காரியங்களைப்பற்றி அவர் கவலைப் பட்டு ஆவதென்ன? என்றாலும், அப்துல்லா சேத்துக்கு ஓர் எச்சரிக்கை செய்துவிடவேண்டுமென்று தீர்மானித்துக் கூறினார்:- "இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் இந்த மசோதா நேட்டால் சட்ட சபையில் நிறைவேறுமானால் இந்தியர்களின் நிலைமை இப்போதைக் காட்டிலும் கஷ்டமாகிவிடும்! இந்தியர்களின் சுய மரியாதைக்குப் பங்கம் விளைவிப்பதுடன் இந்திய சமூகத்தையே நாசமாக்கிவிடும் ! ஆகையால் முன் ஜாக்கிரதையாயிருங்கள் !"
இதைக் கேட்ட அப்துல்லா சேத் சொன்னதாவது: "நீங்கள் சொல்வது வாஸ்தவமா யிருக்கலாம். ஆயினும் இந்த மசோதா ஏன் கொண்டுவரப் படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். சில காலத்துக்கு முன்னால் வரையில் இந்தியர்களுக்கு வாக்குரிமை உண்டு என்னும் விஷயமே எங்களுக்குத் தெரியாமலிருந்தது. எங்களுடைய அட்டர்னிகளில் ஒருவரான மிஸ்டர் எஸ்கோம்ப் ஒரு சமயம் தேர்தலுக்கு நின்றார். என்ஜினியர் ஒருவரோடு அவர் போட்டியிட்டார். என்ஜினியர் தம்மைத் தோற்க அடித்து விடுவாரோ என்ற பயம் மிஸ்டர் எஸ் கோம்புக்கு ஏற்பட்டது. உடனே அவர் எங்களிடம் வந்தார். எங்களுக்கு வாக்குரிமை உண்டு என்பதை எடுத்துக் கூறி எங்களை வோட்டர்களாகப் பதிவு செய்து கொள்ளத் தூண்டினார். அப்படியே பதிவு செய்து கொண்டு அவருக்கு வோட்டும் கொடுத்தோம். என்ஜினியர் தோற்றுப்போனார். இது காரணமாகவே எங்களுடைய வோட்டுரிமையைப் பறிக்கும் சட்டம் கொண்டுவருகிறார்கள் போலிருக்கிறது. தாங்கள் எடுத்துச் சொன்ன பிறகு வோட்டுரிமையின் முக்கியம் எங்களுக்குத் தெரிகிறது. ஆனால் அது தெரிந்து என்ன பயன்? நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று தெரியவில்லையே !'
காந்திஜிக்கும் அப்துல்லா சேத்துக்கும் நடந்த சம்பாஷணையை விருந்துக்கு வந்திருந்த பல நண்பர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர், "என்ன செய்ய வேண்டுமென்பதை நான் சொல்லட்டுமா? காந்திஜி இந்தியாவுக்குப் புறப்படாமல் தடுத்து நிறுத்திவிடவேண்டும். கப்பல் டிக்கட்டை ரத்து செய்துவிடவேண்டும். இன்னும் ஒரு மாதம் காந்திஜி இங்கே இருக்கட்டும். அவர் காட்டும் வழியைப் பின் பற்றி நாம் வோட்டுரிமைக்காகப் போராடுவோம்" என்றார்.
உடனே அங்கிருந்தோர் அனைவரும் "அதுதான் சரி ; அது தான் சரி! அப்துல்லா சேத் ! சகோதரர் காந்தியை எப்படியாவது நிறுத்திவிடுங்கள்!" என்று கூச்சலிட்டார்கள்.
அப்துல்லா சேத் காரியத்தில் கண்ணுள்ள மனிதர். காந்திஜியை நிறுத்தினால் அவருக்குச் சன்மானம் கொடுக்க வேண்டாமா என்று யோசனை செய்தார். "நீங்கள் சொல்வது என்னமோ சரியான காரியந்தான். ஆனால் சகோதரர் காந்தியை இனி நிறுத்தி வைப்பதற்கு எனக்குத் தனிப்பட்ட உரிமை கிடை யாது. நாம் எல்லாரும் சேர்ந்து அவரைத் தங்கிப் போகும்படி கேட்கலாம். ஆனால் அவருடைய சன்மானத்துக்கு என்ன ஏற்பாடு? காந்திஜி பாரிஸ்டர் என்பது எல்லாருக்கும் ஞாபக மிருக்கட்டும்!" என்று சொன்னார்.
சன்மானத்தைப் பற்றி அப்துல்லா சேத் குறிப்பிட்டது மகாத்மாவுக்கு வருத்தம் அளித்தது. அவர் குறுக்கிட்டுச் சொன்ன தாவது:- "சேத்! சன்மானம் என்ற பேச்சே வேண்டாம். பொது ஊழியத்துக்குச் சன்மானம் ஏது? யார் கொடுப்பது? யார் வாங்குவது? இந்த நண்பர்களிடம் எனக்கு அதிகப் பழக்கம் கிடையாது. இவர்கள் எல்லாரும் என்னுடன் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருந்தால் இன்னும் ஒரு மாதம் நான் இங்கே தங்கிப் போகிறேன். எனக்குச் சன்மானம் எதுவும் வேண்டியதில்லை. ஆனால் நாம் தொடங்கப்போகும் முயற்சி பணம் இல்லாமல் நடைபெறாது. தந்தி தபால்கள் அனுப்ப வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் அச்சிடவேண்டும். சுற்றுப் பிரயாணம் செய்யவேண்டி வரலாம். இதற்கெல்லாம் பணம் தேவை. பணம் மட்டும் போதாது. ஒருவர் மட்டும் தனித்துச் செய்யக்கூடிய காரியம் அல்ல. பலரும் உற்சாகத்துடன் உதவி செய்வதற்கு முன் வரவேண்டும். என்ன சொல்கிறீர்கள்?"
இவ்விதம் காந்தி மகான் சொன்ன தும் அந்தக் கூட்டத்திலிருந்தவர்களில் பலர் ஏக காலத்தில், "ஆண்டவனுடைய மகிமையே மகிமை. கடவுளின் கருணையே கருணை. தாங்கள் மட்டும் தங்கிப்போகச் சம்மதியுங்கள். ஆள் உதவி, பண உதவி எல்லாம் ஏராளமாக வரும் !" என்று கூவினார்கள்.
நண்பர்களின் இந்த ஏக மனதான விருப்பத்தை மதித்துக் காந்திஜி தென்னாப்பிரிக்காவில் மேலும் ஒரு மாதம் தங்கச் சம்மதித்தார். இதன் காரணமாகப் பின்னால் எத்தனை எத்தனையோ காரியங்கள் விளைந்தன.
ஒரு மாதம் பல மாதங்களாகிப் பிறகு பல வருஷங்களுமாயின. காந்திஜி தென்னாப்பிரிக்காவில் ஆரம்பித்து நடத்திய சத்தியப் போராட்டமான து உலகத்துக்கே ஒரு புது வழி காட்டுவதாயிற்று. அன்று தென்னாப்பிரிக்காவில் கோவித்த நண்பர்களைப்போலவே நாமும் "ஆண்டவனுடைய மகிமையே மகிமை !" என்று கோஷிக்க வேண்டியவர்களாகிறோம்.
---------------
தாதா அப்துல்லாவின் வீட்டில் சேத் ஹாஜி முகம்மது அவர்களின் தலைமையில் நேட்டால் இந்தியர்களின் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. எள்ளுப் போட்டால் கீழே விழாதபடி இந்தியர்கள் அன்று கூடியிருந்தார்கள். அக் கூட் டத்தில் இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் மசோதா வைத் தீவிரமாக எதிர்ப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
எதிர்ப்பு வேலையை நடத்தத் தொண்டர்கள் சேர்க்க வேண்டும் என்று காந்திஜி சொன்னார். உடனே நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு தொண்டர்கள் முன் வந்தார்கள். பிரபல முஸ்லிம் வியாபாரிகள் தொண்டர்களானார்கள். கடை குமாஸ்தாக்கள் தொண்டர் படையில் சேர்ந்தார்கள். நேட்டாலில் பிறந்து வளர்ந்து படித்துத் தேர்ந்த இந்தியக் கிறிஸ்தவ வாலிபர்களும் தொண்டர்களாக முன் வந்தார்கள்.
காந்தி மகாத்மா ஆரம்பித்த அந்த முதல் போராட்டத்தில் பங்கு பெறுவதற்கு நமது தமிழ் நாட்டிலிருந்து போன சிலரும் பாக்கியம் செய்திருந்தார்கள். அவர்களில் ஸ்ரீ ஏ. குழந்தை வேலுப் பிள்ளை, ஸ்ரீ ரங்கசாமிப் படையாச்சி என்னும் இருவர் பெயரை மகாத்மா காந்தி தாம் எழுதிய சுய சரிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தக் கூட்டத்தில் கூடியிருந்தவர்கள் எல்லாருக்கும் இந்த மட்டும் ஒரு பொது ஊழியத்தில் ஈடுபடும் சந்தர்ப்பம் தங்களுக்குக் கிடைத்ததே என்று சந்தோஷமாயிருந்தது. நேட்டாலில் இந்திய சமூகத்துக்கு வருவதற்கிருந்த பெரும் அபாயத்தை எண்ணித் தங்களுக்குள் இருந்த எல்லா வேற்றுமைகளையும் அவர்கள் மறந்தார்கள். உயர்ந்தவர், தாழ்ந்தவர், பெரியவர், சிறியவர், எஜமானர், ஊழியர், ஹிந்து, முஸ்லிம், பார்ஸி, கிறிஸ்துவர், குஜராத்தியர், மதராஸியர் ஆகிய சகல வித்தியாசங்களும் ஒழிந்து எல்லாரும் ஒன்று பட்டார்கள்.
நேட்டால் சட்ட சபையில் மசோதா நிறைவேறும் தறுவாயில் இருந்தது. எனவே, முதல் வேலையாகச் சட்டசபை அக்கிராசனருக்கு ஒரு தந்தி கொடுக்கப் பட்டது. இந்தியர் வாக்குரிமை மசோதா நிறைவேற்றுவதைத் தள்ளிவைக்க வேண்டு மென்று அந்தத் தந்தியில் வேண்டிக் கொள்ளப் பட்டது. அம் மாதிரியே நேட்டால் பிரதம மந்திரிக்கும், தாதா அப்துல்லாவின் அட்டர்னி மிஸ்டர் எஸ்கோம்புக்கும் தந்திகள் சென்றன.
விவாதம் இரண்டு நாளைக்குத் தள்ளிவைக்கப்படும் என்று சட்டசபைத் தலைவரிடமிருந்து பதில் வந்தது. இந்த ஆரம்ப நல்ல சகுனத்தினால் தொண்டர்களின் உற்சாகம் அதிகமாயிற்று.
சட்ட சபைக்கு அனுப்ப இந்தியர்களின் விண்ணப்பம் இரண்டு நாளைக்குள் தயாராக வேண்டும். விண்ணப்பத்தில் ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் வாங்கப்பட வேண்டும். எனவே, காந்திஜியின் தலைமையில் இரவெல்லாம் கண் விழித்துத் தொண்டர்கள் வேலை செய்தார்கள்.
காந்திஜி விண்ணப்ப நகலைத் தயாரித்தார். அதற்கு ஏக காலத்தில் ஐந்து பிரதிகள் எடுக்கப் பட்டன. அவற்றை எடுத்துக் கொண்டு தொண்டர்கள் நாலா பக்கமும் விரைந்தார்கள். சிலர் தங்களுடைய சொந்த வண்டியில் சென்றார்கள். சிலர் தாங்களே வாடகை கொடுத்து வண்டி வைத்துக்கொண்டு சென்றார்கள். ஒரே நாளில் கையொப்பங்கள் ஏராளமாக வாங்கப்பட்டன. குறிப்பிட்ட சமயத்தில் விண்ணப்பம் சட்ட சபைக்குச் சென்றது. விண்ணப்பத்தில் கண்ட காரணங்களுக்குச் சர்க்கார் தரப்பில் நொண்டிச் சமாதானங்கள் சொல்லப்பட்டன. அந்த அநியாய மசோதா சட்டமாகி விட்டது.
இவ்விதம் காரியம் கைகூடாமற் போனாலும் அது சம்பந்தமாக நடந்த முயற்சி காரணமாக இந்திய சமூகமே புத்துயிர் பெற்றது. முயற்சியை அத்துடன் விட்டு விடுவதில்லை யென் றும், இந்தியர் ஒரு முகமாகத் தங்கள் வியாபார உரிமைக்காகவும் அரசியல் உரிமைக்காகவும் தொடர்ந்து போராடுவதென் றும் தீர்மானித்தார்கள்.
அப்போது லார்ட் ரிப்பன் என்பவர் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய மந்திரி சபையில் குடியேற்ற நாட்டு மந்திரியாயிருந்தார். நேட்டால் சட்ட சபை செய்த சட்டத்தை நிராகரிக்க வேணுமென்று அவருக்கு மகஜர் அனுப்பத் தீர்மானிக்கப் பட்டது. இந்த மகஜரில் மறுபடியும் இந்தியர்களின் கையொப்பங்கள் வாங்கப்பட்டன. மொத்தம் பதினாயிரம் கையொப்பங்களுடன் குடியேற்ற நாட்டு மந்திரிக்கு மகஜர் போயிற்று.
காந்திஜி மேற்படி மகஜரை அச்சிட ஏற்பாடு செய்தார். ஆயிரம் பிரதிகள் எடுத்து இந்தியாவிலுள்ள பத்திரிகைகள், பிரமுகர்கள் எல்லாருக்கும் அனுப்பினார். இந்தியாவில் பல பத்திரிகைகள் மகஜரை ஆதரித்து அபிப்பிராயம் எழுதின. பம்பாய் ”டைம்ஸ் ஆப் இந்தியா" பத்திரிகையும் லண்டன் "டைம்ஸ்" பத்திரிகையுங்கூட மேற்படி மகஜரைப் பற்றிச் சாதகமாக அபிப்பிராயம் எழுதின.
இதற்குள் ஏறக்குறைய ஒரு மாதம் ஆகிவிட்டது. நேட்டாலில் காந்திஜிக்குப் பல நண்பர்கள் ஏற்பட்டு விட்டார்கள். எல்லாரும் ஒரு முகமாகக் காந்திஜி நேட்டாலிலேயே தங்கிவிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
காந்திஜிக்கும் அங்கே தாம் தொடங்கிய வேலையைத் தொடர்ந்து நடத்திப் பார்த்து விட வேண்டும் என்றிருந்தது. ஆனால், காலட்சேபம் நடத்துவது எப்படி? தனி ஜாகை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்துவதா யிருந்தால் குறைந்த பட் சம் வருஷத்துக்கு 300 பவுன் வேண்டியிருக்கும். இந்த வருமானம் தரக்கூடிய அளவுக்குத் தமக்குக் கோர்ட்டு வேலை தருவதாயிருந்தால் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கிவிடுவதாகக் காந்தி மகாத்மா சொன்னார்.
"நன்றாயிருக்கிறது ! தங்களைத் தங்கும்படிச் சொல்லி விட்டுச் செலவுக்கு ஏற்பாடு செய்யாமல் சும்மா இருந்து விடுவோமா? தாங்கள் செய்யும் பொது வேலைக்காகவே 300 பவுன் வசூல் செய்து தந்துவிடுகிறோம்" என்று நண்பர்கள் அவரிடம் சொன்னார்கள்.
பொது வேலைக்காகப் பணம் பெற்றுக் கொள்ளக் காந்திஜிக்கு விருப்பமில்லை.
“அவ்வளவு தொகை கிடைக்கும்படியாக எனக்குப் பாரிஸ்டர் தொழிலில் கேஸ்கள் கொடுத்தால் போதும். பொது ஊழியத்துக்காகப் பணம் பெற்றுக் கொள்ள மாட்டேன்" என்று காந்தி மகாத்மா வற்புறுத்தினார்.
அதன் பேரில் சுமார் இருபது இந்திய வியாபாரிகள் ஒரு வருஷத்துக்குக் காந்திஜியைத் தங்களுடைய சொந்த வக்கீலாக அமர்த்திக் கொண்டு அவருடைய சேவைக்காக முன்பணமும் கொடுத்தார்கள்.
காந்திஜியும் நேட்டாலில் ஸ்திரமாக வாசம் செய்வதென்று முடிவு செய்தார். ஆனால் அந்த முடிவைக் காரியத்தில் நிறை வேற்றுவது அவ்வளவு சுலபமாயில்லை. எதிர்பாராத தடை ஒன்று குறுக்கிட்டது.
வக்கீல் வேலையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டல்லவா காந்திஜி அங்கே வாழ்க்கை நடத்த உத்தேசித்தார்? அந்த உத்தேசத்துக்கு நேட்டால் வக்கீல் சங்கத்தார் இடையூறு செய்ய முன் வந்தார்கள்.
நேட்டால் ஹைக்கோர்ட்டில் ஆஜராகி வழக்கு நடத்தும் உரிமைக்காகக் காந்திஜி விண்ணப்பம் செய்து கொண்டார். அவர் பாரிஸ்டர் என்பதற்கு ருசு வேண்டும் அல்லவா? அதற்காக பம்பாய் ஹைக்கோர்ட்டில் தாம் வக்கீல் தொழில் நடத்துவதற்காகப் பெற்றிருந்த அங்கீகாரப் பத்திரத்தையும், அத்துடன் இரண்டு நேட்டால் ஐரோப்பியர்களின் நற்சாட்சிப் பத்திரத்தையும் சேர்த்து காந்திஜி விண்ணப்பத்தை அனுப்பினார். தாதா அப்துல்லாவின் சிநேகிதரான மிஸ்டர் எஸ்கோம்ப் என்பவர் தான் அப்போது அட்டர்னி ஜெனரல் ; அதாவது சர்க்கார் வக்கீல். அவரே காந்திஜியின் விண்ணப்பத்தைக் கோர்ட்டில் சமர்ப்பிக்க முன் வந்தார்.
ஆனால் யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக நேட்டால் வக்கீல் சங்கத்தார் குறுக்கிட்டுக் காந்திஜியின் விண்ணப்பத்தை ஆட்சேபித்தார்கள். காந்திஜி இங்கிலாந்தில் பெற்ற அசல் பாரிஸ்டர் சர்டிபிகேட் விண்ணப்பத்தோடு சேர்க்கப்பட வில்லை யென்பது அவர்கள் குறிப்பிட்ட ஒரு காரணம். மேற்படி சர்டிபிகேட்டைப் பம்பாய் ஹைக்கோர்ட்டில் கொடுத்து விட்டுத்தான் அந்த ஹைக்கோர்ட்டின் அங்கீகாரத்தை மகாத்மா பெற்றிருந்தார். ஆகவே அசல் சர்டிபிகேட்டை இப்போது எப்படிக் கொண்டு வர முடியும்?
அசல் பாரிஸ்டர் சர்டிபிகேட் இல்லாத காரணத்தை மட் டும் நேட்டால் வக்கீல் சங்கத்தார் குறிப்பிடவில்லை. தென்னாப்பிரிக்கா வளம் பெற்றுச் செழிப்படைந்ததற் கெல்லாம் காரணம் ஐரோப்பியர்கள். ஆதலால், தென்னாப்பிரிக்கா கோர்ட்டுகளில் ஐரோப்பிய வக்கீல்கள் தான் தொழில் நடத்தலாம் என்றும், இந்திய வக்கீல்களுக்கு இடங்கொடுத்தால் நாளடைவில் ஐரோப்பிய வக்கீல்களைக் காட்டிலும் இந்திய வக்கீல்கள் அதிகமாகி விடுவார்கள் என்றும் விசித்திரமான ஒரு காரணம் சொல்லி ஆட்சேபித்தார்கள்.
காந்திஜிக்கு இது பெரும் வியப்பையும் ஏமாற்றத்தையும் அளித்தது. நீதி வழங்குவதற்காக ஏற்பட்ட நியாய ஸ்தலங்களிலும் இப்படிப்பட்ட அநீதியா என்று ஆச்சரியப் பட்டார். பொங்கிவந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களை முறைப்படி செய்தார். கடைசியில் கோர்ட் டில் விண்ணப்பம் வந்தது. நல்ல வேளையாக நீதிபதி அவ்வளவு மோசமான மனப்பான்மை உடையவராயில்லை. வக்கீல் சங்கத்தின் ஆட்சேபங்களை அவர் நிராகரித்து, காந்திஜியை அட்வகேட்டாக அங்கீகரித்தார். அச்சமயம் நீதிபதி கூறியதாவது:-
"விண்ணப்பதாரர் விண்ணப்பத்துடன் அசல் அத்தாட்சிப் பத்திரத்தைச் சேர்க்கவில்லை யென்னும் வாதம் பொருளற்றது. அவர் பொய்யான அத்தாட்சிகளைச் சேர்த்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ள இடமிருக்கிறது. விசாரணையில் குற்றவாளி யென் று நிரூபிக்கப் பட்டால் அப்போது அவருடைய பெயரை எடுத்து விடலாம். வக்கீல்களின் விஷயத்தில் வெள்ளைக்காரர், வேறு நிறத்தவர் என்னும் வேற்றுமையைச் சட்டம் அங்கீகரிக்க வில்லை. ஆதலின் மிஸ்டர் காந்தியை அட்வகேட்டாக அங்கீகரிக்க மறுப்பதற்கு நமக்கு எவ்வகை அதிகாரமும் கிடையாது. அவருடைய விண்ணப்பத்தை அங்கீகரிக்கிறோம். மிஸ்டர் காந்தி, இனி நீங்கள் சத்தியப் பிரமாணம் செய்யலாம்."
அவ்வாறே காந்திஜி சத்தியப் பிரமாணம் செய்து நேட் டால் ஹைக் கோர்ட்டில் அட்வகேட் ஆனார். ஆனாலும் வக் கீல் சங்கத்தார் கிளப்பிய மேற்படி ஆட்சேபணை அவருடைய மனத்தில் ஆழ்ந்து பதிந்தது. தென்னாப்பிரிக்காவில் உள்ள படித்த ஐரோப்பியர் கூட எத்தகைய துவேஷ மனப்பான்மை கொண்டிருக்கிறார்கள் என்று மகாத்மாவுக்குத் தெரிந்தது.
-------------
டர்பன் ஹைக் கோர்ட்டில் காந்திஜி அட்டர்னி தொழில் நடத்தத் தொடங்கினார். ஆனால் இது அவருடைய வாழ்க்கையில் இரண்டாவது வேலையாகவே இருந்தது. முதற் கடமையாக அவர் கருதிச் செய்தது தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் க்ஷேமத்தைப் பற்றிய பொது ஊ ழியந்தான். இந்த ஊழியம் சரியாக நடைபெறுவதற்கு ஒரு பொது ஸ்தாபனம் அமைக்க வேண்டும் என்று காந்திஜி கருதினார். நண்பர்களுடன் கலந்து ஆலோசனை செய்தார். எல்லாரும் அத்தகைய ஸ்தாபனம் அவசியந்தான் என்று ஒப்புக் கொண்டார்கள்.
ஸ்தாபனத்துக்கு என்ன பெயர் இடுவது என்ற கேள்வி எழுந்தது. இந்தியாவில் 1885-ம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டுப் பிரபலம் அடைந்திருந்தது. தேசிய உணர்ச்சி பெற்ற இந்தியர்கள் எல்லாரும் காங்கிரஸை இந்தியாவின் உயிர் என்றே கருதினார்கள். காந்திஜியும் அதே கருத்துக் கொண்டிருந்தார். ஆகையால் நேட்டாலில் தொடங்க உத்தே சித்த ஸ்தாபனத்துக்கு "நேட்டால் இந்தியக் காங்கிரஸ்" என்று பெயரிடலாம் என்று காந்திஜி யோசனை கூறினார். அதையே மற்றவர்களும் ஒப்புக் கொண்டதில் ஆச்சரியம் இல்லை யல்லவா?
1894-ம் வருஷம் மே மீ 22 டர்பனில் தாதா அப்துல்லாவின் இல்லத்தில் நேட்டாலின் பல பகுதிகளிலிருந்தும் இந்தியர்கள் வந்து கூடியிருந்தார்கள். அவர்களுடைய ஏகமன தான ஆதரவுடன் உற்சாக ஆரவாரங்களுக்கிடையே "நேட்டால் இந் தியக் காங்கிரஸ்" ஸ்தாபிக்கப்பட்டது. காங்கிரஸில் அங்கத்தின ராவதற்கு விதிகள் மிக எளிதாக அமைக்கப்பட்டன. ஆனால் சந்தாமட்டும் அதிகமாக ஏற்படுத்தப்பட்டது. பெரிய வேலைகள் ஆகவேண்டி யிருந்தன வல்லவா? மாதத்திற்குக் குறைந்த பட்சம் ஐந்து ஷில்லிங் சந்தா என்றும், சக்தி உள்ளவர்கள் இஷ்டப்பட்டு அதிகம் செலுத்தலாம் என்றும் ஏற்படுத்தினார்கள். எல்லாருக்கும் முதலில் தாதா அப்துல்லா மாதம் இரண்டு பவுன் சந்தா கொடுப்பதாகக் கையொப்பமிட்டார். காந்திஜி தம்முடைய சக்திக்கு மேல் என்று தெரிந்தே மாதம் ஒரு பவுன் சந்தா வுக்குக் கையொப்பம் செய்தார். மற்றும் சிலர் மாதம் ஒரு பவுனும் பலர் மாதம் பத்து ஷில்லிங்கும் சந்தா தருவதற்கு இசைந்தார்கள். மொத்தமாக நன்கொடைகள் அளிக்கவும் சிலர் முன் வந்தார்கள்.
ஆரம்ப உற்சாகத்தில் பலர் சந்தாவுக்கும் நன்கொடைக்கும் கையொப்பம் செய்து விடுவார்கள். ஆனால் கையொப்பம் செய்தபடி சந்தாவும் நன்கொடையும் ஒழுங்காகச் செலுத்துவோர் எங்கேயும் கொஞ்சம் அருமைதான். நேட்டாலிலும் அப்படித்தானிருந்தது. நேட்டால் இந்தியக் காங்கிரஸின் காரியதரிசி காந்திஜி ஆகையால், சந்தா வசூலிக்கும் பொறுப்பு அவருக்கு ஏற்பட்டது. மாதா மாதம் சந்தா வசூலிப்பது பெருந் தொல்லையா யிருந்தது. ஒரு குமாஸ்தாவுக்கு அந்த வேலையே சரியாய்ப் போயிற்று. இதை உத்தேசித்து மாதச் சந்தாவுக்குப் பதிலாக வருஷச் சந்தா ஏற்படுத்தத் தீர்மானிக்கப் பட்டது. வருஷத்துக்கு குறைந்த பட்சச் சந்தா மூன்று பவுன் என்று ஏற்படுத்தினார்கள். இதன் பிறகு சந்தா வசூல் கொஞ்சம் சுலபமாயிற்று.
பொதுக் காரியங்களுக்குப் பணம் சேகரிப்பதில் காந்திஜியைப் போல் திறமைசாலி வேறு யாரும் இல்லை என்பதை இந்தியாவில் நாம் கண்டிருக்கிறோம். எந்தக் காரியத்துக்கானாலும் ஒரு குறிப்பிட்ட தொகை வேண்டும் என்று காந்திஜி தீர்மானித்தால் அதைச் சேகரித்தே தீருவார். எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சர்களின் மனத்தையும் கரைத்து விடுவார். காந்திஜியின் இந்தத் திறமை தென்னாப்பிரிக்கா-விலேயே வெளியாயிற்று.
காந்திஜியும் நண்பர்களும் அடிக்கடி காங்கிரஸ் அங்கத்தினர் சேர்ப்பதற்காக நேட்டாலில் தூர தூரத்து ஊர்களுக்கும் போவதுண்டு. ஆங்காங்கிருந்த இந்திய வியாபாரிகள் உற்சாகமாக வரவேற்று விருந்தளித்து அங்கத்தினராகவும் சேருவார்கள். பல இடங்களிலிருந்து காந்திஜிக்கு அடிக்கடி அழைப்பும் வந்து கொண்டிருந்தது.
இத்தகைய சுற்றுப் பிரயாணத்தின் போது ஒருமுறை ஓர் ஊரில் தர்ம சங்கடமான நிலைமை ஏற்பட்டது. அந்த ஊரில் யாருடைய விருந்தாளிகளாகக் காந்திஜியும் நண்பர்களும் தங்கினார்களோ அந்த மனிதர் நல்ல பணக்காரர். அவரிடமிருந்து வருஷத்துக்கு ஆறு பவுன் சந்தா எதிர்பார்த்தார்கள். அவரோ மூன்று பவுன் தான் கொடுப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார். கொடாக் கண்டர் - விடாக் கண் டர் கதை நடந்தது. அவரிடம் மூன்று பவுன் வாங்கி விட்டால் மற்றவர்கள் யாரும் அதற்கு மேல் கொடுக்க மாட்டார்கள். தேவையாயிருந்த உத்தேசத் தொகை சேராது. எனவே இரவு வெகு நேரம் வரையில் விவாதம் நீடித்தது. ஒருவரும் சாப்பிட்ட பாடில்லை.
எல்லாருக்கும் பசி அதிகமாயிருந்தாலும், ஆறு பவுன் வசூலியாமல் சாப்பிடுவதில்லை யென் று உறுதியா யிருந்தார்கள். அந்த வியாபாரியும் மசிகிற வழியாகக் காணவில்லை. அதே ஊரைச் சேர்ந்த மற்ற வியாபாரிகள் மன்றாடியும் பயனில்லை. இரவில் பெரும் பகுதி இவ்விதம் கழிந்த பிறகு, நாலாவது ஜாமத்தில் அந்தக் கனவான் வழிக்கு வந்து ஆறு பவுன் தர ஒப்புக்கொண் டார். பிறகு விருந்தும் நடந்தது. இந்தச் செய்தி நாலாபுறமும் பரவியபடியால் சந்தா வசூல் வெகு சுலபமாயிற்று.
காந்திஜி பொதுக் காரியங்களுக்குப் பணம் வசூலிப்பதில் எவ்வளவு திறமை யுள்ளவரோ அவ்வளவு அந்தப் பணத்தைச் செலவு செய்வதிலும் செலவுக்குக் கணக்கு வைப்பதிலும் மிக வும் கண்டிப்பானவர். அவருடைய இந்த இயல்பும் தென்னாப் பிரிக்காவிலேயே வெளியாயிற்று. தம்பி ! பொதுப் பண நிர்வாகம் சம்பந்தமாகக் காந்திஜி எழுதியிருப்பதைக் கேள் :-
"பொது வேலைகளில் சில்லறைச் செலவுகளே பெருந் தொகைகளாகிவிடு மென்பதை நான் அறிந்திருந்தேன். எனவே ஆரம்பத்தில் ரசீது புத்தகங்கள் கூட அச்சடிக்க வேண்டாமென த் தீர்மானித்தேன். எனது காரியாலயத்திலிருந்த சைக்ளோஸ்டைல் என்னும் பிரதிகள் எடுக்கும் கருவியில் ரசீதுகளும் அறிக்கைகளும் தயாரித்துக் கொண்டேன். காங்கிரஸுக்கு நிதியும் அங்கத்தினரும் நிரம்பச் சேர்ந்து வேலையும் அதிகமான பின்னரே ரசீது புத்தகம், அறிக்கை முதலியவை அச்சடிக்கத் தொடங்கினேன். எல்லாப் பொது ஸ்தாபனங்களுக்கும் இத்தகைய சிக்கனம் அத்யாவசியமானது. ஆனால் பெரும்பாலும் இந்த விஷயத்தில் கவனஞ் செலுத்தப் படுவதில்லை யென்பதை நான் அறிந்திருந்தேன்.
பொது ஜனங்கள் தாங்கள் கொடுத்த பணத்துக்கு ரசீது பெறுவதில் கவலை காட்டுவதில்லை. ஆனால் நாங்கள் ரசீது கொடுப்பதை எப்போதும் வற்புறுத்திக் கொண்டு வந்தோம். ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்தோம். நேட்டால் இந்தியக் காங்கிரஸின் பழைய தஸ்தாவேஜிகளைப் புரட்டினால் இன்றும் 1894-ம் ஆண்டுக் கணக்குப் புத்தகத்தை அப்படியே காணலா மென்று நான் துணிந்து கூற முடியும். எந்தப் பொது ஸ்தாபனத்துக்கும் வரவு செலவுக் கணக்கு ஒழுங்காக வைத் திருத்தல் இன்றியமையாதது. இல்லா விட்டால் அந்தப் பொது ஸ்தாபனம் விரைவில் கெட்ட பெயர் எடுக்கும் என்பதில் ஐயா மில்லை. ஒழுங்குபட்ட கணக்கு வையாமல் உண்மையைப் பாதுகாத்தல் இயலாத காரியம் என்பது என் அனுபவம்."
------------------
ஸ்ரீ மோகன் தாஸ் காந்தி நேட்டாலில் நிலையாகத் தங்குவது என்ற உத்தேசத்துடன் அட்டர்னி தொழில் செய்ய ஆரம்பித்து நாலு மாதம் ஆயிற்று. இந்த நாலு மாதத்தில் நேட்டாலில் வசித்த இந்திய வியாபாரிகள், இந்தியக் குமாஸ்தாக்கள் இவர்களுடைய பழக்கம் காந்திஜிக்கு ஏற்பட்டிருந்தது. நேட்டால் இந்தியக் காங்கிரஸில் அங்கத்தினராகச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வியாபாரிகள், குமாஸ்தாக்கள் ஆகியவர்கள்தான். தென்னாப்பிரிக்காவில் வசித்த இந்தியர்களில் மிகப் பெரும்பாலோரான ஒப்பந்தக் கூலிகளுடன் காந்திஜிக்கு இன்னும் பழக்கம் ஏற்படவில்லை. ஆனால் ஒப்பந்தக் கூலிகளின் கஷ்டங்களைப்பற்றி ஓரளவு கேள்விப் பட்டிருந்தார்.
இந்த நிலைமையில் ஒருநாள் காந்திஜியின் காரியாலயத்துக்கு ஓர் ஏழை இந்தியன் அலங்கோலமாக அழுதுகொண்டு வந்து சேர்ந்தான். அவன் இடுப்பில் கந்தைத் துணி உடுத்தியிருந்தான் ; கையிலே முண்டாசுத் துணி வைத்திருந்தான் ; அவனுடைய முன் வாய்ப் பற்கள் இரண்டு உடைபட்டு வாயிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது; நோவினாலும் பயத்தினாலும் அவனுடைய உடம்பு நடுங்கிற்று.
காந்திஜியின் காரியாலயத்தில் குமாஸ்தாவாக வேலை செய்தவர் ஒரு தமிழர். அந்தக் குமாஸ்தாவைக் கொண்டு அலங்கோலமாக வந்தவனிடம் விஷயம் என்ன வென்று காந்திஜி விசாரிக்கச் செய்தார். பல் உடைபட்டு வந்தவன் ஒரு தமிழன்; ஒப்பந்தக் கூலி; அவன் பெயர் பாலசுந்தரம். டர்பனில் ஒரு பிரபல ஐரோப்பியரிடம் அவன் ஒப்பந்தக் கூலியாக வேலைக்கு வந்தவன். அந்த மூர்க்க ஐரோப்பிய எஜமான் ஏதோ காரணம் பற்றிக் கோபங்கொண்டு பாலசுந்தரத்தை அவ்விதமாக நையப் புடைத்து விட்டான். அவன் அடித்த அடியில் பாலசுந்தரத்தின் முன் வாய்ப் பற்கள் இரண்டு உடைந்து தெரித்து விழுந்து விட்டன.
"அதிகமாய்ப் பேசினால் பல்லை உடைத்து விடுவேன் !" என்று சிலர் கோபமாகப் பேசுவதை நீ கேட்டிருக்கலாம், தம்பி ! பல்லை உடைப்பது என்பது இலேசான காரியமல்ல; மிகக் குரூரமாக அடித்தால் தான் பல்லை உடைக்க முடியும். பாலசுந்தரத்தை ஒப்பந்தக்கூலியாகப் பெற்றிருந்த வெள்ளைக்காரன் அம்மாதிரி அவனைக் குரூரமாக அடித்திருந்தான்.
இந்தச் சமயத்தில், "ஒப்பந்தக் கூலி " என்றால் என்ன என்பதை உனக்குச் சொல்லி வைக்கிறேன். அதைச் சொல்லுவதில் எனக்குச் சந்தோஷபம் ஒன்றுமில்லை ; வருத்தமாகவும் அவமானமாகவும் இருக்கிறது. ஆனாலும் அதை நீ தெரிந்து கொள்ளாவிட்டால் மேலே வரும் காந்தி மகானுடைய வரலாற்றை உன்னால் நன்கு அறிந்துகொள்ள முடியாது.
இங்கிலாந்து, ஹாலந்து முதலிய தேசங்களிலிருந்து தென்னாப்பிரிக்கா சென்று குடியேறிய ஐரோப்பியர்கள் அந்த நாட்டில் உள்ள நீர்வளத்தைக் கண்டு அங்கே கரும்பு சாகுபடி நிறையச் செய்யலாம் என்று தீர்மானித்தார்கள். கரும்பு சாகுபடி செய்வதற்கு ஆள் வசதி நிறைய வேண்டும். நேட்டாலின் பூர்வ குடிகளான ஸலூ சாதியார் காட்டுமிராண்டி ஜனங்கள்; அவர்களால் எந்த வேலையும் நிலைத்து நின்று செய்ய முடியாது. விவசாய வேலை அவர்களுக்குத் தெரியாது ; சொல்லிக்கொடுத்தாலும் அவர்கள் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஸூலூ சாதியாருக்கு நேர்மாறானவர்கள் இந்தியா தேசத்து ஏழை மக்கள். விவசாய வேலையில் பற்று உள்ளவர்கள் ; உடலை உழைத்துப் பாடுபடக் கூடியவர்கள் இந்த விஷயம் உலகப் பிரசித்தமானது.
ஆகவே ஐரோப்பியர் புதிதாகச் சென்று குடியேறிய இடங்களில் எல்லாம் இந்தியா தேசத்திலிருந்து ஏழை மக்களைத் தருவித்துக்கொள்ள விரும்பினார்கள். இலங்கை யாகட்டும், மலாய் நாடாகட்டும், வெகு வெகு தூரத்திலுள்ள பீஜித் தீவு ஆகட் டும்,-ஐரோப்பியர் குடியேறிய இடங்களில் கரும்பு, தேயிலை, காப்பி, அவுரித் தோட்டங்களில் வேலை செய்வதற்கு இந்தியாவிலிருந்து கூலி ஆட்களைத் தருவித்துக் கொண்டார்கள்.
இதே சமயத்தில் இந்தியாவில் இங்கிலீஷ் காரர்களின் ஆட்சி நிலைபெற்றிருந்தது. அந்த ஆட்சி காரணமாகத் தேசமெங்கும் வறுமை அதிகமாகி வந்தது. வெளிநாடுகளுக்குச் சென்று வயிறு வளர்க்கவும், கூடுமானால் கொஞ்சம் பணம் சம்பாதித் துக்கொண்டு வரவும் இந்தியாவின் ஏழை மக்கள் பலர் தயாரா யிருந்தார்கள். அவர்களைத் திரட்டி வெளிநாடுகளுக்குக் கூலிகளாக அனுப்பிக் கொடுக்க இந்தியாவில் ஆங்கில சர்க்கார் தயாராயிருந்தனர்.
சுமார் 1860-ம் ஆண்டுக்கு முன் பின்னாக தென்னாப்பிரிக்கா ஐரோப்பியர்கள் இந்தியாவிலிருந்து இந்தியக் கூலிகளைத் தரும் வித்துக்கொள்ள விரும்பினார்கள். அப்போது இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் சர்க்கார் அதற்கு அநுமதி கொடுத்தார்கள். இந்த ஏற்பாட்டுக்கு "ஒப்பந்தக் கூலி முறை" என்று பெயர் வழங்கிற்று. இதன்படி தென்னாப்பிரிக்காவிலுள்ள ஐரோப்பியரின் கீழ் ஐந்து வருஷம் கட்டாயமாகக் கூலி வேலை செய்வதாய் இந்தியத் தொழிலாளரிடம் ஒப்பந்தம் எழுதி வாங்கப்பட்டது, 'இந்த ஒப்பந்த காலம் முடிந்ததும் தென்னாப்பிரிக்காவிலேயே நிரந்தரமாய்க் குடியேறலாம்’ என்றும் சொந்தமாக நிலம் வைத்துக்கொண்டு விவசாயம் செய்யலாம் என்றும் ஆசைவார்த்தை சொல்லி ஆள் சேர்த்தார்கள், ஆனால் ஐரோப்பியர் மனத்திற்குள் எண்ணியது, "ஐந்து வருஷம் ஆன பிறகு இவர்களுக்கு இங்கே நிலம் எங்கே கிடைக்கப் போகிறது? அதற்குப் பிறகும் நம்மிடம் கூலி வேலை செய்துதான் இந்தியர்கள் பிழைக்க வேண்டும்!" என்பதுதான். அவர்களுடைய இந்த எண்ணம் என்ன ஆயிற்று என்று பிறகு பார்க்கலாம்.
ஒப்பந்தத் தொழிலாளியாயிருக்கும் வரையில் ஒருவன் ஏறக்குறைய அடிமையைப் போலவே நடத்தப் பட்டான். ஐரோப்பிய எஜமானனுக்குக் கொஞ்சம் கோபம் வந்தாலும் போதும்; இந்தியக் கூலியின்பாடு அதோகதிதான். எஜமான் எவ்வளவு கொடூரமாக நடத்தினாலும் கேட்பார் இல்லை ; நீதி வழங்குவாரும் இல்லை.
இத்தகைய நிலைமை நெடுங்காலமாகத் தென்னாப்பிரிக்காவில் குடி கொண் டிருந்தது. ஆனால் இந்தியாவின் பட்டிக்காடுகளில் வசித்த ஏழைக் குடியானவர்களுக்கு அந்த நிலைமை தெரியாதல்லவா? எனவே, ஆள் சேர்த்தவர்களின் வார்த்தைகளில் மயங்கி மேலும் மேலும் தென்னாப்பிரிக்காவுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.
அப்படிப்பட்ட ஒப்பந்தக் கூலிகளில் ஒருவனான தமிழன் பாலசுந்தரம் மேற்சொன்னவாறு காந்தி மகானுடைய ஆபீஸில் அவருக்கு முன்னால் போய் நின்றான். தன்னுடைய கதையையும் தட்டுத் தடுமாறி அழுதுகொண்டே சொன்னான். காந்திஜி உடனே அவனை வண்டியில் ஏற்றி ஒரு டாக்டரிடம் அழைத் துச் சென்றார். வெள்ளைக்கார டாக்டர் தான் ; ஆயினும் அவர் அவசியமான சிகிச்சையைச் செய்தார். காந்திஜி வற்புறுத்தியதின்பேரில் பாலசுந்தரத்தின் காயங்களைப் பற்றி அத்தாட்சிப் பத்திரமும் எழுதிக் கொடுத்தார்.
உடனே காந்திஜி பாலசுந்தரத்தை ஒரு மாஜிஸ்ட்ரேட்டிடம் அழைத்துச் சென்றார். பாலசுந்தரம் தம்மிடம் சொன்ன கதையை மாஜிஸ்ட்ரேட் முன்னால் வாக்குமூலமாகக் கொடுக்கும்படிச் செய்தார். மாஜிஸ்ட்ரேட் பாலசுந்தரத்துக்கு இழைக்கப் பட்டக் கொடுமையைக் கேட்டுவிட்டு உடனே அந்த ஐரோப்பிய எஜ மானனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இப்போது காந்திஜி யோசனை செய்தார். கேஸ் நடத்தினால் முடிவு என்ன ஆகுமோ என்னமோ? எஜமானனுக்கு ஒரு வேளை அபராதம் போட்டாலும் போடலாம்; அல்லது வழக்கைத் தள்ளினாலும் தள்ளிவிடலாம். ஆனால் பாலசுந்தரத்தின் கதி என்ன? அவன் மறுபடியும் அதே எஜமானனிடம் வேலை செய்ய முடியுமா? அவனை அந்த மூர்க்க எஜமானனிடமிருந்து விடுதலை செய்வதல்லவா இப்போது முக்கியமான காரியம்? அதை எப்படிச் செய்வது?
ஒப்பந்தக் கூலி முறை சம்பந்தமான சட்ட திட்டங்கள் : விதி முறைகள் எல்லாவற்றையும் காந்திஜி ஆராய்ந்தார். ஒப்பந்தக்கூலி ஒருவன் ஒப்பந்தக் காலத்துக்குள் வேலையை விட்டு நின்றால், அவன் மீது எஜமான் சட்டபடி வழக்குத் தொடரலாம்; அப்படி நின்ற குற்றத்துக்குச் சிறைத் தண்டனை கூட விதிக்கலாம் ! இவ்வளவு இலட்சணமாக இருந்தது சட்டம்.
சட்டவிரோதமில்லாமல் பாலசுந்தரத்தை விடுதலை செய்ய இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று, ஒப்பந்தக் கூலிகளைப் பாதுகாப்பதற்கென்று ஏற்பட்ட உத்தியோகஸ்தரிடம் புகார் செய்து அவரைக் கொண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தல். இது நடவாத காரியம் என்று காந்திஜி அறிந்தார். ஏனெனில் ஒப்பந்தக் கூலிகளைப் பாதுகாக்கும் ஐரோப்பிய உத்தியோகஸ்தர் உண்மையில் ஐரோப்பிய எஜமானர்களுடைய உரிமைகளைத்தான் பாதுகாத்து வந்தார். எனவே அந்த வழியில் பிரயத்தனம் செய்வது உபயோகப்படாது.
இன்னொன்று, பால சுந்தரத்தின் எஜமானர் சம்மதித்து இன்னொருவருக்கு ஒப்பந்தத்தை மாற்றிக் கொடுப்பது. இந்த வழியில் முயற்சி செய்து பார்க்கலாம் என்று காந்திஜி மேற்படி எஜமானிடமே சென்றார். "ஐயா ! பாலசுந்தரத்தை நீங்கள் ரொம்பக் கொடுமையாக அடித்து விட்டீர்கள். இதை நீங்களே உணர்ந்திருக்கலாம். ஆயினும் உங்கள் பேரில் வழக்குத் தொடர எனக்கு இஷ்டமில்லை. ஒப்பந்தத்தை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுத்துவிடுங்கள். அத்துடன் இந்த விஷயம் முடிந்து போகட்டும்!" என்றார்.
அந்த மூர்க்க ஐரோப்பியனுடைய மனதுகூடக் காந்திஜியின் வார்த்தைகளினால் இளகி விட்டது. "கேஸ் போடுகிறபடி போடு. ஒருகை பார்த்துவிடுகிறேன் !" என்று அவன் பதில் சொல்லவில்லை. ஒப்பந்தத்தை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுக்கச் சம்மதித்தான்.
சரி ; ஆனால் பால் சுந்தரத்துக்கு இன்னொரு எஜமானனைக் கண்டுபிடிக்க வேண்டுமே? இந்தியர்களுக்கு ஒப்பந்தக் கூலி வைத்துக் கொள்ளும் உரிமை கிடையாது. ஐரோப்பியர்கள் தான் வைத்துக் கொள்ளலாம். ஆகவே காந்திஜி தமக்கு அப்போது தெரிந்திருந்த ஐரோப்பியர்களில் நல்லவர் என்று எண்ணிய ஒருவரிடம் சென்று விஷயத்தைச் சொன்னார். அவர் பாலசுந்தரத்தை ஒப்பந்தக் கூலியாக எடுத்துக்கொள்ளத் தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்தார்.
மாஜிஸ்ட்ரேட்டிடம் இந்த விவரங்கள் எல்லாம் சொல்லப் பட்டன. அவர் காந்திஜி இந்த விஷயத்தில் செய்த முயற்சிகளைக் குறித்து ஆச்சரியப்பட்டுவிட்டு, "பாலசுந்தரத்தை அவனுடைய எஜமானன் அடித்தது குற்றந்தான்; ஆனால் ஒப்பந்தத்தை இன்னொருவருக்கு மாற்றச் சம்மதிப்பதால் விஷயம் இத்துடன் முடிவு பெற்றது " என்று தீர்ப்பு எழுதினார்.
பாலசுந்தரத்தின் கதை தென்னாப்பிரிக்கா எங்கும் பரவியது. தூர தூரத்திலிருந்த தோட்டங்களுக்குள்ளே புகுந்து ஒப்பந்தத் தொழிலாளிகளின் காதில் விழுந்தது. "ஆகா ! நமக்காகப் பரிந்து பேசுகிறவர், பாடுபடுகிறவர் ஒருவர் இருக்கி றாரே!" என்று அவர்கள் எல்லாரும் வியந்து மகிழ்ந்தார்கள். வாழ்க்கையில் அடியோடு நிராசை யடைந்திருந்தவர்களுக் கெல்லாம் ஒரு புது நம்பிக்கை உண்டாயிற்று. "நிர்க்கதி யானோம்" என்று எண்ணியிருந்தவர்களுக்கெல்லாம் ’நமக்கு ஒரு கதி உண்டு' என்ற உற்சாகம் ஏற்பட்டது.
.
பாலசுந்தரம் "கையிலே முண்டாசுத் துணியுடன் காந்திஜியின் அறையில் நுழைந்தான்" என்று மேலே சொன்னேனல்லவா? இது எதற்காகத் தெரியுமா? டர்பன் கோர்ட்டில் காந்திஜியின் தலைப்பாகையை எடுக்கச் சொன்ன விஷயம் உனக்கு நினைவிருக்கிற-தல்லவா? இந்தியர் யாராயிருந்தாலும் ஐரோப்பியரைக் காணப்போகும் போது தலைப்பாகையைத் தலையிலிருந்து எடுத்துக் கையிலே வைத்துக்கொள்ள வேண்டும் என்று தென்னாப்பிரிக்காவில் ஒரு சம்பிரதாயம் அமுலில் இருந்தது. இது விஷயத்தில் தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்கள் வெகு கண்டிப்பாக இருந்தார்கள். இந்தியர்கள் அப்படிச் செய்யாவிட்டால் தங்களுக்கு அது அவமரியாதை என்று எண்ணினார்கள். - தலையில் வைத்திருப்பது குல்லாவானாலும், தலைப்பாகையானாலும், வெறும் துண்டை முண்டாசாகச் சுற் றிக் கொண்டிருந்தாலும் எடுத்துவிட வேண்டியதுதான். விதி விலக்கே கிடையாது. தலைத் துணியை எடுக்காமல் கைகூப்பி வணங்கினாலும் போதாது.
பாலசுந்தரம் ஐரோப்பியர்களைப் பார்க்கப் போகும்போது தலைமுண்டாசை எடுத்துப் பழக்கப் பட்டிருந்தான். காந்திஜி பெரிய மனிதர் ஆகையால் அவர் முன்னால் போகும்போது அப்படிச் செய்யவேண்டும் என்று நினைத்தான் ! இதைக் கண்ட தும் காந்திஜியின் மனம் குன்றிப் போயிற்று. "துணியை எடுக்க வேண்டாம், அப்பனே ! தலையில் சுற்றிக் கொள்!" என்று காந்திஜி பாலசுந்தரத்திடம் சொன்னார். அவனும் சிறிது தயங்கிவிட்டுப் பிறகு முக மலர்ச்சியுடன் தலையில் துணியைச் சுற்றிக் கொண்டான். அந்த நிமிஷத்திலேயே காந்தி மகாத்மா இந்திய மக்களின் சிரஸில் சுதந்திரக் கிரீடத்தை வைத்தார்.
காந்தி மகாத்மா எழுதியிருக்கிறார் :- "இதயத்திலே எழுந்த பரிசுத்தமான ஆசை எதுவும் நிறைவேறாமற் போவ தில்லை. என்னுடைய சொந்த அனுபவத்தில் இதை நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். ஏழை எளியவர்களுக்குத் தொண்டு புரிய வேண்டும் என்பது என் உள்ளத்தில் இருந்த அத்தியந்த ஆசை. அந்த ஆசை என்னை ஏழைகளிடம் கொண்டு சேர்த்தது. அவர்களோடு சரிசமமாகக் கலந்து பழகி அவர்களில் ஒருவனாகிவிடும் சக்தியையும் தந்தது!"
தம்பி! காந்தி மகாத்மாவின் இதயத்தில் எழுந்த அத்தி பயந்த பரிசுத்தமான ஆசை தமிழ் நாட்டைச் சேர்ந்த ஏழைப் பாலசுந்தரத்தின் மூலமாக நிறைவேறியது ஒரு விசேஷமல்லவா? பாலசுந்தரத்தின் கதையைக் கேட்டு நீ அடைந்த துயரத்துக்கு மத்தியில் இப்படி ஒரு திருப்தியும் அடையலாம்.
-------------
பாலசுந்தரம் காந்திஜியைத் தேடிவந்த சமயம் மிகவும் நல்ல சமயமாயிற்று. பாலசுந்தரத்தின் மூலமாகக் காந்திஜி தென்னாப்பிரிக்காவில் அப்போது வசித்த பதினாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளிகளின் நிலைமையைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுடைய தலையில் போடுவதற்கு ஒரு பெரிய பாறாங்கல் தயாராகிக் கொண்டிருப்பதையும் அவர் அறிந்து கொள்ளக் கூடிய தாயிற்று.
அந்த 1894-ம் ஆண்டில் நேட்டால் அரசாங்கத்தார் இந்தியர்களுக்கு ஒரு மிகப் பெரும் அநீதியை இழைக்கப் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தார்கள். அதாவது ஒப்பந்தக் கூலியாக வந்து ஒப்பந்தம் நீங்கிய ஒவ்வொரு தொழிலாளி மீதும் 25 பவுன் தலைவரி விதிக்க யோசனை செய்தார்கள் !
இப்படிப்பட்ட அபூர்வமான யோசனையை நேட்டால் வெள்ளைக்காரர்கள் ஏன் செய்தார்கள் தெரியுமா? ஒப்பந்தத் தொழிலாளியாக வந்த இந்தியர்கள் நல்ல உழைப்பாளிகள். விவசாயத் தொழிலில் கை தேர்ந்தவர்கள், எளிய வாழ்க்கை நடத்துகிறவர்கள்.
இவர்களை ஒப்பந்தக் காலம் நீங்கிய பிறகு தென்னாப்பிரிக் காவில் சுயேச்சையாக வசிக்கும்படி விட்டால், வெகு சீக்கிரத் தில் வலுத்துப் போய் விடுவார்கள் ! சொந்த நிலம் வைத்துக் கொண்டு பயிர் செய்து சொந்த வீடு கட்டிக்கொண்டு வாழ்வார்கள். சிலர் வியாபாரத் துறையிலும் இறங்குவார்கள்; ஐரோப்பியரை விட அதிகமாகப் பணம் சேர்த்து விடுவார்கள். அடிமைகளைப் போல் ஐரோப்பியர்களுக்கு வேலை செய்து கொண்டு காலம் தள்ள மாட்டார்கள். பிறகு தென்னாப்பிரிக்காவிலுள்ள ஐரோப்பியர்கள் பாடு ஆபத்தாய்ப் போய்விடும்.
ஆகையால் ஒப்பந்தக் கூலிகளாக வருகிறவர்கள் ஒப்பந் தக் காலம் நீங்கிய பிறகு சுயேச்சையாக வாழ அநுமதிக்கக் கூடாது என்று கேட்டால் வெள்ளைக்காரர்கள் கருதினார்கள். ஆனால் ஒப்பந்தக் காலம் முடிந்தவர்களைத் திருப்பி அனுப்புவதும் அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஏனெனில், இந்தியாவில் ஆள் திரட்டியபோது ஒப்பந்தம் நீங்கியதும் அவர்கள் சுயேச்சையாகத் தென்னாப்பிரிக்காவில் வசிக்கலாம் என்று உறுதி கொடுக்கப்பட்டது. ஆகவே அவர்களைப் பலவந்தமாய்த் திருப்பி அனுப்ப முடியாது. அவர்களே திரும்பிப் போகும்படி செய்ய வேண்டும். அல்லது மறுபடியும் வெள்ளைக்காரரிடம் வேலைக்கு அமரும்படி செய்ய வேண்டும் !
இதற்கு உபாயம் என்ன? "போடு தலைவரி! இந்தியர் சுயேச்சையாக வாழ்வதை அசாத்தியமாகச் செய்!" என்று சில புண்ணியவான்கள் உபாயம் சொன்னார்கள். அதை நேட்டால் சர்க்காரும் ஒப்புக் கொண்டார்கள். ஒப்பந்தக் கூலியாக வந்து விடுதலை பெற்ற ஒவ்வொரு இந்தியனும் தலைக்கு வருஷத்துக்கு இருபத்தைந்து பவுன் தலைவரி கொடுக்க வேண் டும் என்று சொன்னார்கள் !
எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் இந்தியத் தொழிலாளி ஒருவன் வருஷத்துக்கு 12 பவுனுக்கு மேல் சம்பாதிக்க முடியாது. இருபத்தைந்து பவுன் வரி கொடு என்றால் எப்படிக் கொடுப்பது? இந்த நிபந்தனையின்படி எந்தத் தொழிலாளி இந்தியனும் அங்கே இருக்க முடியாது! அப்படியென்றால் திரும்பிப் போய்த்தானே தீர வேண்டும்!
இந்தக் கொடிய அநீதியைப்பற்றி அறிந்த காந்திஜி நேட்டால் இந்தியக் காங்கிரஸ் மூலம் கிளர்ச்சி தொடங்கினார். அந்தக் கிளர்ச்சியின் ஒலி இந்தியா வரையில் சென்று எட்டியது. நேட்டால் வெள்ளைக்காரர்கள் யோசித்துப் பார்த்தார்கள். தங்கள் அபூர்வ யோசனைக்கு இந்திய அரசாங்கத்தின் சம்மதம் தேவை என்று கருதினார்கள்.
இந்திய சர்க்காரின் சம்மதத்தின் பேரிலும் ஒத்துழைப்பின் பேரிலும் அல்லவா ஒப்பந்தத் தொழிலாளிகளை அடிமை வேலை செய்யத் திரட்ட வேண்டியிருக்கிறது? ஆகையால் தாங்கள் போடும் தலைவரியை இந்திய சர்க்கார் ஆட்சேபித்து ஒப்பந்தக் கூலிகள் அனுப்புவதையே நிறுத்திவிட்டால் என்ன செய்கிறது என்று கவலைப்பட்டார்கள்.
ஆகவே நேட்டால் வெள்ளைக்காரர்களின் பிரதிநிதிகளாக ஸர் ஹென்றி பின்ஸ், மிஸ்டர் மேஸன் என்னும் இருவர் இந்தியாவுக்குச் சென்றார்கள். அச்சமயம் இந்தியாவில் லார்ட் எல்ஜின் என்பவர் கவர்னர் ஜெனரலாகவும் இராஜப் பிரதிநிதியாகவும் இருந்தார். இந்த இராஜப் பிரதிநிதி என்ன செய்தார் தெரியுமா? "இருபத்தைந்து பவுன் தலைவரி கூடவே கூடாது" என்று சொல்லிவிட்டார். ”கொடுக்க முடியாத வரியாகப் போடாதீர்கள். கொடுக்கக் கூடிய அளவாகப் போடுங்கள்!" என்றார் அந்தப் புண்ணியவான். அதாவது தலைக்கு மூன்று பவுன் வரி விதிக்க லார்ட் எல்ஜின் சம்மதம் கொடுத்தார். இந்தத் தலைவரி தொழிலாளிக்கு மட்டும் அல்ல ; அவன் குடும்பத்தோடு வாழ விரும்பினால் மனைவிக்கும் தலைவரி கொடுக்க வேண்டும். பதின் மூன்று வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைக்கும், பதினாறு வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைக்கும் மூன்று பவுன் வரி கொடுக்கவேண்டும். இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பம் மாதம் ஒரு பவுன் வரி கொடுத்தாக வேண்டும் !
உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் எந்தக் காலத்திலும் இம்மாதிரி அநியாய வரி போடப்பட்டதில்லை. ஆயினும் இந்த அநியாயத்துக்கு இந்தியாவை அப்போது ஆண்ட இராஜப் பிரதிநிதி சம்மதித்தார். "இருபத்தைந்து பவுன் வரி போடுவதை மூன்று பவுனாகச் செய்தேனே ! இந்த சகாயம் போதாதா?" என்றார். உண்மையில் இது சகாயமே யில்லை. இருபத்தைந்து பவுன் வரி போட்டால் நிச்சயமாகத் தென்னாப் பிரிக்காவில் எந்தத் தொழிலாளி இந்தியனும் இருக்க முடியாது ; திரும்பிப் போய் விடுவான். இந்தியாவிலிருந்து புதிய தொழிலாளிகளைக் கொண்டுவர முடியாது. மூன்று பவுன் தலைவரி என்றால், இந்தியத் தொழிலாளிகள் போவதா இருப்பதா என்று தயங்குவார்கள். ஒரு சிலர் இருந்தே பார்க்கலாம் என்று இருப்பார்கள். அடியோடு கொல்லுவதற்குப் பதிலாகக் குற்றுயிராக வைத்திருப்பதற்குச் சமமாகும்.
ஆகவே, தலைவரி மூன்று பவுன் ஆனதுபற்றிக் காந்திஜி திருப்தி யடையவில்லை. அதை ஒரு வெற்றியாகவும் கருத வில்லை. இந்திய வைஸ்ராய் அதற்குச் சம்மதம் கொடுத்தது பெருந் தவறு என்று கருதினார். இந்தியா தேசத்துக்கும் இந்திய மக்களுக்கும் அது பெரும் அவமானம் என்றும் எண்ணினார். ஆகையால் எப்பாடு பட்டாவது அந்தத் தலைவரியை ஒழித்து விடவேண்டும் என்று காந்திஜியின் யோசனையின்பேரில் நேட்டால் இந்தியக் காங்கிரஸ் கங்கணம் கட்டிக் கொண்டது. ஆனால் அந்த முயற்சி இலேசில் வெற்றி யடையவில்லை. இருபது வருஷம் காந்திஜியின் தலைமையில் சாத்வீகப் போராட் டம் நடந்த பிறகுதான் வெற்றி கிடைத்தது. முடிவாக நடந்த பெரும் போராட்டத்தில் தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் பதினா யிரம் பேருக்கு மேல் சிறை சென்றார்கள். பலர் துப்பாக்கிப் பிரயோகத்தினால் மரணம் அடைந்தார்கள். அவர்களுடைய தியாகங்களின் பலனாக முடிவில் வெற்றி கிடைத்தது; மூன்று பவுன் தலைவரியும் ஒழிந்தது.
தலைவரிப் போராட்டத்தைப் பற்றிக் காந்தி மகாத்மா எழுதியிருப்பதாவது :-
"தளராத நம்பிக்கையும் அளவிடப்படாத பொறுமையும் இடைவிடாத முயற்சியும் இருந்திராவிடின் அப்போராட்டம் வெற்றி பெற்றிருக்க முடியாது. தென்னாப்பிரிக்கா இந்திய சமூகம் அப்போராட்டத்தை இடையில் கை விட்டிருந்தால் கிளர்ச்சியை நிறுத்தி வரிக்குட்படுவதைத் தவிர வேறு வழியில்லை யென்று காங்கிரஸ் தீர்மானித்திருந்தால் - இன்று வரை அக் கொடிய வரி விதிக்கப்பட்டே வந்திருக்கும். தென்னாப் பிரிக்கா இந்தியர்களுக்கும் சரி, பாரத தேசத்துக்கும் சரி மகத்தான ஓர் அவமானத்துக்கு அறிகுறியாய் அது விளங்கிக் கொண்டு வந்திருக்கும்."
-----------------
தென்னாப்பிரிக்காவுக்குக் காந்திஜி வந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு முறை தாய்நாடு சென்றுவர விரும்பினார். இந்த மூன்று வருஷத்தில் தென்னாப்பிரிக்கா இந்தியர்களிடையே காந்திஜிக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டு விட்டது. பலரும் சிநேகிதர்கள் ஆனார்கள். பாரிஸ்டர் தொழிலும் நன்றாய் நடந்தது. ஆகவே, இந்தியாவுக்குப் போய்ச் சில நாள் இருந்து விட்டு மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வருவது என்று காந்திஜி தீர்மானித்தார். இந்தியாவில் தங்கி உயிருக்கும் சமயத்தில் தென்னாப்பிரிக்கா இந்தியர் நிலைமையைப் பற்றிக் கொஞ்சம் பிரசாரம் செய்யலாம் என்றும் எண்ணினார்.
தாம் இல்லாத சமயத்தில் நேட்டால் காங்கிரஸ் வேலையை யும் சமூக சேவையையும் கவனிப்பதற்கு ஆதம்ஜி மியாகான், பார்ஸி ரஸ்டம்ஜி ஆகிய இரு நண்பர்களை நியமித்துவிட்டுப் "பொங்கோலா" என்னும் கப்பலில் பிரயாணமானார்.
பிரயாணத்தின்போது காந்திஜி உருது பாஷையும் தமிழும் கற்றுக்கொள்ள முயன்றார். தென்னாப்பிரிக்காவிலிருந்த ஒப்பந்தத் தொழிலாளிகளில் பெரும்பாலோர் மதராஸிகள் அல்லவா? அவர்களுக்கு ஊழியம் செய்யவேண்டுமானால் தமிமும் தெலுங்கும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று காந்திஜி கருதினார். கப்பல் டாக்டர் வைத்திருந்த தமிழ் ”ஸ்வபோதினி" புத்தகத்தை வாங்கிப் படித்தார். தமிழ் எழுத்துக்களை நன்றாக எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். பிறகு காந்திஜிக்கு ஏற்பட்ட பல முக்கிய அலுவல்களினால் தொடர்ந்து தமிழ் கற்க முடியவில்லை. சிறைவாசம் செய்த காலங்களில் மட்டும் சிறிது அவகாசம் கிடைத்தது. தமிழ் பாஷையைப் பூரணமாகப் பயின்று தமிழ் மக்களுடன் மனம் விட்டுப் பேசவும் தமிழில் எழுதவும் சக்தி பெறவில்லையே என்ற மனக்குறை காந்திஜிக்கு எப்போதும் இருந்து வந்தது.
கப்பல் ஏறிய 24-ம் நாள், 1896-ம் வருஷத்தின் மத்தியில், காந்திஜி ஹக்ளி நதியை அடைந்தார். அந்த நதியின் செளந்தரியங்களை அநுபவித்துக்கொண்டே இன்னும் கொஞ்சம் பிரயாணம் செய்து கல்கத்தாவில் வந்து இறங்கினார். கல்கத்தாவில் தங்கி வீண் பொழுது போக்க விரும்பாமல் அன்றைய தினம் ரயிலிலேயே பம்பாய்க்குப் புறப்பட்டார்.
பம்பாய்க்குச் செல்லும் மார்க்கத்தில் ரயில் அலகாபாத்தில் 45 நிமிஷம் நின்றது. அந்த நேரத்தில் நகரைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாம் என்று சென்றார். மருந்துக் கடை ஒன்றில் ஒரு மருந்து வாங்குவதற்காக நின்றதில் கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது. மருந்துக் கடைக்காரர் தூங்கி வழிந்து கேட்ட மருந்தைக் கொடுப்பதற்கு நேரம் செய்துவிட்டார். ஆகையால் காந்திஜி திரும்பி ஸ்டேஷனுக்கு வந்தபோது ரயில் போய்விட் டது ! நல்ல வேளையாக ஸ்டேஷன் மாஸ்டர் காந்திஜியின் சாமான்களை மட்டும் வண்டியிலிருந்து வெளியே எடுத்து வைத்திருந்தார்.
அடுத்த ரயில் மறுநாளைக்குத்தான் வரும். ஆகவே அந்த ஒரு தினத்தை வீணாக்க வேண்டாம் என்று காந்திஜி தீர்மானித்தார். அலகாபாத்தில் அப்போது "பயனியர்" என்னும் பத்திரிகை பிரசித்தி பெற்றிருந்தது. அதை நடத்தியவர்கள் ஐரோப்பியர்கள். இந்தியர்களின் கோரிக்கைகளைப் பொதுவாக எதிர்ப்பதே "பயனியர்"பத்திரிகையின் கொள்கை. இது தெரிந்திருந்தும் காந்திஜி அந்தப் பத்திரிகைக் காரியாலயத்துக்குப் போனார். இந்தியாவில் எல்லாக் கட்சியாருடைய ஆதரவையும் தேடவேண்டும் என்று அவர் தீர்மானித்திருந்தபடியால் போனார். பத்திரிகாசிரியர் மிஸ்டர் செஸ்னிக்குத் தம்முடைய நோக்கத்தைக் குறிப்பிட்டுச் சீட்டு அனுப்பினார். மிஸ்டர் செஸ்னி காந்திஜியைப் பார்ப்பதற்கு இசைந்தார். காந்திஜி அவரிடம் தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் கஷ்டங்களைப்பற்றி விவரமாகக் கூறினார். எல்லாவற்றையும் கேட்ட மிஸ்டர் செஸ்னி, "நீங்கள் இதையெல்லாம் குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதுங்கள். அதை வெளியிடுகிறேன். ஆனால் தலையங்கத்தில் தங்கள் கட்சியை ஆதரித்து எழுத முடியாது. தென்னாப்பிரிக்கா ஐரோப்பியர்களின் கட்சி இன்னதென்பதையும் கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகுதான் அதைப்பற்றி நான் அபிப்பிராயம் எழுத முடியும்" என்றார்.
“ரொம்ப வந்தனம். எங்களுடைய கட்சியைப் பிரசுரிக்க ஒப்புக்கொண்டதே போதும்!" என்று சொல்லிவிட்டுக் காந்திஜி விடைபெற்றுக் கொண்டார்.
இப்படிப் 'பயனியர் ' ஆசிரியர் சொன்னதிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாகப் பல சம்பவங்கள் நிகழ்ந்தன. கடைசியில், காந்திஜி மறுபடியும் தென்னாப்பிரிக்கா சென்று இறங்கிய போது நேட்டால் ஐரோப்பியர்கள் காந்திஜியைக் கொன்றுவிட முயற்சித்ததில் வந்து முடிந்தது! இவ்வளவுக்கும் காரணம் அலகாபாத்தில் ஒரு மருந்துக் கடைக்காரன் தூங்கு மூஞ்சியா யிருந்ததும், அதன் பலனாகக் காந்திஜிக்கு ரயில் தப்பிப் போனதுந்தான். உலகத்தில் எவ்வளவு சின்னக் காரணத்திலிருந்து எவ்வளவு பெரிய பெரிய காரியங்கள் சரித்திரத்தையே மாற்றும் சம்பவங்கள் எல்லாம் விளைந்து விடுகின்றன !
தம்பி ! இந்த இடத்தில் உனக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். காந்திஜி இந்திய விடுதலை இயக்கத்தின் மாபெருந் தலைவராயிருந்த காலத்தில் நம் நாட்டுப் பத்திரிகைப் பிரதிநிதிகள் சிலர் அவர் பேரில் ஒரு குறை கூறுவதுண்டு. "வெள்ளைக்காரப் பத்திரிகை நிருபர்களுக்குக் காந்திஜி விசேஷ சலுகை காட்டுகிறார். இந்தியப் பத்திரிகை நிருபர்களைக் கவ னிப்பதில்லை!" என்று புகார் சொல்வார்கள். இது சுத்தத் தவறான விஷயம். காந்திஜிக்கு அந்த மாதிரி பட்சபாதம் ஒன் றும் கிடையாது. இந்தியப் பத்திரிகைகளை விட ஐரோப்பியப் பத்திரிகைகளுக்கு அவர் அதிக மதிப்புக் கொடுப்பதுமில்லை. ஆனால் ஒரு விஷயத்தை வெளி உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்றால், யாரிடம் சொன்னால் வெளி உலகத்துக்கு தெரியுமோ, அவர்களிடத்தானே சொல்லவேண்டும்? இந்தியாவின் கட்சியில் உள்ள நியாயத்தை அமெரிக்கா அறிய வேண்டுமென் றால், அமெரிக்க நிருபர்களிடம் சொல்லித் தானே ஆக வேண்டும்?-இந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் நம்மவர்கள் சிலர் மகாத்மா மீது குறை கூறினார்கள் ! பெரியவர்களின் விஷயமே இப்படித்தான் ! அவர்களை மற்றவர்கள் அறிந்து கொள்ளாமல் புகார் சொல்லுவது எப்போதுமே உலக இயல்பா யிருந்து வருகிறது. நிற்க,
அலகாபாத்திலிருந்து பம்பாய் சென்று அங்கே தங்காமல் நேரே இராஜகோட்டைக்கு மகாத்மா சென்றார். அங்கே தென்னாப்பிரிக்கா இந்தியரின் நிலைமை பற்றி ஒரு துண்டுப் பிரசுரம் எழுதினார். அதை எழுதி அச்சிட்டு வெளியிடுவதற்கு ஒரு மாதத்திற்கு மேலாயிற்று. அந்தப் பிரசுரத்தின் மேலட்டை பச்சை நிறமாயிருந்தபடியால் அது ’பச்சைப் பிரசுரம்' என்று பெயர் பெற்றது. தென்னாப்பிரிக்கா இந்தியரின் கஷ்டமான நிலைமையைக் காந்திஜி அதில் ஓரளவு குறைத்தே எழுதியிருந்தார். மிதமான, பாஷையை உபயோகித்திருந்தார். மிகைப் படுத்திச் சொன்ன தாக யாரும் குற்றம் சாட்ட இடங்கொடுக்கக் கூடாது என்பது காந்திஜியின் நோக்கம். மேலும் தூரத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றிக் கொஞ்சம் சொன்னாலும் அது அதிகமாகத் தோன்றலாம் அல்லவா?
மேற்படி பச்சைப் பிரசுரத்தில் பதினாயிரம் பிரதிகள் அச்சிட்டு இந்தியா வெங்குமுள்ள எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்பினார். முதன் முதலில் அதைப் பிரசுரித்ததோடு தலையங்கத்திலும் அதைப்பற்றிக் குறிப்பிட்டு எழுதிய பத்திரிகை "பயனியர்" பத்திரிகைதான். இந்தப் பத்திரிகைக் கட்டுரையின் சாராம்சம் ராய்ட்டர் செய்தி ஸ்தாபனத்தினால் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அதன் சுருக்கம் லண்டனிலிருந்து நேட்டாலுக்கு அனுப்பப்பட்டது. அது மூன்றே மூன்று வரிகள் அடங்கிய தந்திச் செய்தி. நேட்டாலில் இந்தியர் நடத்தப்படும் கொடூரமான விதத்தைப் பற்றிக் காந்திஜி ரொம்பவும் கண்டித்துக் கட்டுரை எழுதியிருப்பதாக அந்தச் செய்தி பொதுப்படையாகச் சொல்லிற்று. மேற்படி தந்திச் செய்தி கேட்டால் ஐரோப்பியர்களுக்கு மிகவும் கோபத்தை உண்டாக்கிற்று. அவர்கள் தங்களுடைய கோபத்தை எப்படிக் காட்டினார்கள் என்பதைப் பின்னால் பார்க்கப் போகிறோம்.
'பச்சைப் பிரசுரம்' அச்சிட்டுப் பத்திரிகைகளுக்கு அனுப்பியதுடன் மகாத்மா திருப்தி அடைந்துவிடவில்லை. இந்தியாவின் பிரபல அரசியல் தலைவர்களையும் பிரமுகர்களையும் பார்த்துப் பேசி அவர்களுடைய ஆதரவைத் தேட விரும்பினார். இந்த நோக்கத்துடன் முதலில் பம்பாய்க்குச் சென்றார். பம்பாயில் அப்போது மூன்று பிரமுகர்கள் பிரசித்தி அடைந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் ரானடே ; இன்னொருவர் பட்ருடீன் தயாப்ஜி ; மூன்றாவது பிரமுகர் ஸர் பிரோஸிஷா மேத்தா. முன்னவர் இருவரும் அச்சமயம் பம்பாய் ஹைக்கோர்ட்டின் நீதிபதிகளாயிருந்தார்கள். அந்தக் காலத்திலெல்லாம் ஆரம்பத்தில் அரசியல் தலைவர்களாயிருப்பவர்கள் சீக்கிரத்தில் பெரிய சர்க்கார் உத்தியோகங்களுக்குப் போய்விடுவது வழக்கம்.
ரான டே, தயாப்ஜி இருவரும் காந்திஜியிடம், "எங்களுடைய அநுதாபமெல்லாம் உங்கள் பக்கத்தான் இருக்கிறது. ஆனால் நாங்கள் நீதிபதி உத்தியோகம் வகிப்பதால் பகிரங்கமாக எ துவும் செய்ய முடியாது. உங்களுக்குத் திறமையாக வழி காட்டி உதவி செய்யக் கூடியவர் ஸர் பிரோஸிஷா மேத்தா தான் !" என்று சொன்னார்கள்.
இதிலிருந்து ஸர் பிரோஸிஷா மேத்தா எவ்வளவு செல்வாக் குடையவர் என்பதை காந்திஜி நன்கு தெரிந்து கொண்டார். உடனே அவரிடம் சென்றார். “பம்பாயின் சிங்கம்" என்றும் "பம்பாய் மாகாணத்தின் முடிசூடா மன்னர்" என்றும் ஸர் பி. எம். மேத்தா பட்டம் பெற்றிருந்தார். அப்படிப் பட்டவரைப் பார்ப்பதற்குச் சிறிது தயக்கத்துடனே தான் காந்திஜி போனார். ஆனால் மேத்தாவோ அன்புள்ள தந்தை புதல்வனை வரவேற்பது போல் மகாத்மாவை வரவேற்றார். அப்போது மேத்தாவை அவருடைய அன்புக்குரிய சீடர்களான ஸ்ரீ டி. இ. வாச்சா, ஸ்ரீ காமா முதலியவர்கள் புடை சூழ்ந்திருந்தார்கள். ஸர் பிரோஸிஷா மேத்தா காந்திஜி கூறியதைச் செவிகொடுத்துக் கேட்டார். பின்னர், ''உங்களுடைய கட்சி மிகவும் நியாயமான து. கட்டாயம் உங்களுக்கு உதவி செய்ய வேண்டியது தான். இங்கே ஒரு பொதுக் கூட்டத்துக்கு முதலில் ஏற்பாடு செய்கிறேன்'' என்றார். பொதுக் கூட்டத்துக்குத் தேதியும் இடமும் அவசரமாகக் குறிப்பிடப் பட்டது. அந்த தினத்துக்கு முதல் நாள் தம்மை வந்து பார்க்கும்படி ஸர் பிரோஸிஷா மேத்தா காந்திஜிக்குச் சொல்லி அனுப்பினார்.
---------------
ஸர் பிரோஸிஷா மேத்தா சொல்லியிருந்தபடி, பம்பாயில் பொதுக் கூட்டத்துக்குக் குறிப்பிட்டிருந்த தினத்துக்கு முதல் நாள், காந்திஜி அவரைப் போய்ப் பார்த்தார்.
" காந்தி! பிரசங்கம் தயாரா யிருக்கிறதா? '' என்று மேத்தா கேட்டார். காந்திஜி, ''பிரசங்கம் தயாரிக்கவில்லை ; ஞாபகத்திலிருந்து பேசிவிடலாம் என்றிருக்கிறேன்'' என்றார்.
''அதெல்லாம் இந்த பம்பாயில் சரிக்கட்டி வராது. நாம் நடத்தும் பொதுக் கூட்டத்தினால் பயன் ஏற்பட வேண்டுமானால் உமது பிரசங்கத்தை எழுதி அச்சுப் போட்டுக்கொண்டு வந்துவிட வேண்டும் ! இன்றிரவு பதினோரு மணிக்குள் பிரசங்கத்தை எழுதிக்கொண்டு வந்துவிட வேண்டும். தெரிகிறதா?'' என்று சொன்னார் ஸர் பிரோஸிஷா மேத்தா.
ஸர் பிரோஸிஷா சொன்னபடியே காந்திஜியும் செய்தார். அது எவ்வளவு நல்ல யோசனை என்று கூட்டத்தின்போது தெரிய வந்தது. பொதுக் கூட்டம் பம்பாயில் அப்போது பிரசித்தி பெற்றிருந்த ஸர் கவாஸ் ஜி ஜிஹாங்கீர் மண்டபத்தில் நடைபெற்றது. அந்த மண்டபத்தில் அன்று கூடியிருந்தது போன் ற கூட்டத்தை அதற்கு முன்னால் காந்திஜி பார்த்ததே கிடையாது. அச்சுப்போட்ட பிரசங்கத்தைப் படிக்கும் போது காந்திஜியின் உடம்பு நடுங்கிற்று. அக்கிராசனம் வகித்த ஸர் பிரோஸிஷா மேத்தா அடிக்கடி “உரக்கப் பேசுங்கள்'', ''உரக்கப் பேசுங்கள்'' என்று சொல்லி உற்சாகப்படுத்தினார். இதனால் காந்திஜியின் குரல் மேலும் மெலிவடைந்து வந்தது.
காந்திஜியின் நண்பரான ஸ்ரீ கேசவராவ் தேஷ்பாண்டே என்பவர் பக்கத்தில் இருந்தார். அவருடைய குரல் பலமான து. காந்திஜியின் பிரசங்கத்தைத் தான் படிக்கிறதாக அவர் முன் வந்தார். காந்திஜியும் அதற்கிணங்கி அச்சுப் பிரசங்கத்தை அவரிடம் கொடுத்தார். ஆனால் ஸ்ரீ தேஷ்பாண்டே படிப்பதைக் கேட்கச் சபையோர் தயாராயில்லை. ''வாச்சா! வாச்சா !” என்று கத்தினார்கள். அதாவது ஸர் பிரோஸிஷாவின் பிரதம சிஷ்யரான ஸ்ரீ டி. இ. வாச்சா பேச வேண்டுமென் ற தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள்.
உடனே ஸ்ரீ டி. இ. வாச்சா எழுந்து பிரசங்கத்தைப் படிக்க ஆரம்பித்தார். சபையோர் கரகோஷம் செய்தார்கள். பிறகு கூட்டத்தில் அமைதி நிலவியது. முடிவு வரையில் சபையோர் கவனமாகக் கேட்டார்கள். தென்னாப்பிரிக்கா இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றிப் பிரசங்கத்தில் குறிப்பிட்ட போதெல்லாம் ''வெட்கம், வெட்கம்!'' என்று பலமாகக் கத்தினார்கள்.
இவ்விதம் பொதுக் கூட்டத்தின் நோக்கம் நிறைவேறியது பற்றிக் காந்திஜி மகிழ்ந்தார். கூட்ட முடிவில் ஸர் பிரோஸிஷா மேத்தா காந்திஜியைப் பார்த்து, ''உம்முடைய பிரசங்கம் மிக்க நன்றாயிருந்தது!'' என்று சொன்ன போது காந்திஜி ஆனந்தக் கடலில் மூழ்கினார். அவ்வளவு பெரிய பிரமுகரிடம் பம்பாயின் முடிசூடா மன்னரிடம், ''நன்றா யிருந்தது'' என்று அத்தாட்சி பெறுவது பெரிய காரியம் அல்லவா?
பிற்காலத்தில் ஸர் பிரோஸிஷா மேத்தா பொது ஜனங்களின் பக்திக்கு உரியவராயிருந்த போதே காலமானார். ஆனால் ஸ்ரீ டி. இ. வாச்சா ஸர் டி. இ. வாச்சா ஆகி, பழுத்த மிதவாதியாகி, பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆதரிப்பவராகி, தேசீய இயக்கத்துக்கு எதிரியாகி, இந்தியப் பொதுமக்களின் அதிருப் திக்குப் பாத்திரமாகி, காலகதி அடைந்தார்.
தம்பி ! பேச்சுத் திறமையும் பிரசங்கத் திறமையும் மட்டும் உலகில் ஒருவருக்கு உயர்வை அளித்துவிட முடியாது. அப்படி அடைந்த உயர்வும் நிலைத்து நில்லாது. ஒழுக்கத்தினாலும் தியாகத்தினாலும் இடைவிடாத தொண்டினாலுந்தான் ஒருவருக்கு உண்மையான உயர்வு ஏற்படும்.
அன்று தாம் எழுதி அச்சிட்ட பிரசங்கத்தைத் தாமே உரத்து வாசிக்க முடியாமல் காந்தி மகான் திண்டாடினார், அவர் எழுதிய பிரசங்கத்தை இன்னொருவர் படிக்கவேண்டியதா யிருந்தது.
அதே காந்தி மகாத்மா பிற்காலத்தில் பத்து லட்சம் மக்கள் அடங்கிய பல பொதுக் கூட்டங்களில் பேசினார். மக்கள் நிச்சப்தமாயிருந்து அவருடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் பயபக்தியுடன் கேட்டார்கள்.
* * *
பம்பாயில் ஸர் பிரோஸிஷா மேத்தாவின் தலைமையில் நடந்த பொதுக் கூட்டமானது காந்திஜியின் வேலையை எளிதாக்கி விட்டது. பொதுக் கூட்டத்தைப்பற்றிய விவரங்களைப் பத்திரிகைகளில் படித்து நாடெங்கும் உள்ள தேசியத் தலைவர்கள் தென்னாப்பிரிக்கா இந்தியர் சம்பந்தமான விவரங்களைத் தெரிந்து கொண்டார்கள். எனவே, காந்திஜி முன்னைக் காட்டி லும் அதிக தைரியத்துடனே பூனா நகரத்துக்குச் சென்றார்.
பூனாவில் அப்போது இரண்டு கட்சிகள் இருந்தன. ஸ்ரீ லோகமான்ய பாலகங்காதர திலகரின் கட்சி ஒன்று ; ஸ்ரீ கோபால கிருஷ்ண கோகலேயைத் தலைவராகக் கொண்ட கட்சி ஒன்று. பின்னால் இக்கட்சிகளுக்குள் பிளவு அதிகமாகித் திலகர் கட்சி தீவிரக் கட்சி என்றும், கோகலேயின் கட்சி மிதவாதக் கட்சி என்றும் வழங்கப் பட்டன.
அந்தக் காலத்தில் மேற்படி இரு கட்சிகளுக்குள்ளும் அவ்வளவு பலமான போராட்டம் இல்லை. ஆகையால் இரு கட்சிகளின் ஆதரவையும் தேட வேண்டும் என்று காந்திஜி விரும்பினார். முதலில் லோகமான்யரிடம் சென்றார்.
லோகமான்யர், ''தென்னாப்பிரிக்கா விஷயத்தில் அபிப்பிராய பேதமே இருக்கமுடியாது. எல்லாக் கட்சியின் ஆதரவையும் நீங்கள் பெற விரும்புவது நியாயந்தான். ஆனால் கூட்டத்தின் தலைவர் எந்தக் கட்சியையும் சேராதவரா யிருப்பது நல்லது. ஆசிரியர் பந்தர்க்கரை அக்கிராசனராயிருக்க வேண்டும் மென்று கேட்டுப் பாருங்கள். சில காலமாக அவர் வெளிவருவதே இல்லை. நான் உங்களுக்கு எல்லாவித உதவியும் செய்யத் தயார்!'' என்றார்.
பிறகு காந்திஜி ஸ்ரீ கோகலேயைப் பார்க்கச் சென்றார். பிரசித்தி பெற்ற பூனா பெர்க்கூஸன் கலாசாலையில் அப்போது கோகலே ஆசிரியர். அவருடைய இனிய சுபாவம் காந்திஜியின் உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்தது. இப்போதுதான் முதன் முறையாகப் பார்த்தாலும் பழைய நண்பரைச் சந்திப்பது போலவே தோன்றியது.
காந்திஜி சொல்லுகிறார்:- "ஸர் பிரோஸிஷா இமாலயத்தை போல் எனக்குத் தோன்றினார். லோகமான்யர் மகா சாகரத்தைப் போல் காட்சி அளித்தார். கோகலேயோ கங்கை நதியை ஒத்திருந்தார். இமாலயத்தை ஏறிக் கடத்தல் இயலாத காரியம். சமுத்திரத்தில் ஒருவன் துணிந்து இறங்குவதும் எளிதன்று. ஆனால் கங்கையோ தன்னிடம் வரும்படி அனைவரையும் பரிவோடு அழைக்கிறது. அந்தப் புனித நதியில் நாம் பயமின்றி இறங்கி ஸ்நானம் செய்து மகிழலாம். கையில் துடுப்புடனே படகில் ஏறி அந்த மாநதியில் மிதக்கலாம்!''
இவ்விதமாகக் கோகலே விஷயத்தில் காந்திஜிக்கு ஏற்பட்ட அபிப்பிராயம் பின்னால் மகத்தான பலன்களைத் தந்தது.
ஸ்ரீ கோகலே காந்திஜியை அழைத்துக்கொண்டு போய்ப் பெர்க்கூஸன் கலாசாலை முழுவதையும் காட்டினார். பொதுக் கூட்டம் விஷயமாக யார் யாரிடம் போகவேண்டும் என்றும் அவர்களை எப்படி அணுகவேண்டும் என்றும் யோசனை சொன் னார். ஸர் பிரோஸிஷாவைப் போலவே கோகலேயும் காந்திஜி செய்யப்போகும் பிரசங்கத்தைத் தாம் முன்னதாகப் பார்க்க வேண்டும் என்று கூறினார். டாக்டர் பந்தர்க்கரைச் சந்தித்துப் பேசிய பிறகு தம்மிடம் மறுபடியும் வரும்படி சொன்னார்.
காந்திஜி மிக்க உற்சாகத்துடனே டாக்டர் பந்தர்க்கரிடம் போனார். அந்தப் பேராசிரியர் கல்வித் துறையில் நாட்டுக்கு இணையற்ற தொண்டு செய்த பிரமுகர். காந்திஜியை அவரும் பிரியத்துடன் வரவேற்றார். எந்தக் கட்சியிலும் சேராதவரைப் பொதுக் கூட்டத்துக்குத் தலைவராகக் கோர விரும்புவதாய்க் காந்திஜி சொன்ன போது, "அதுதான் சரி ; அதுதான் சரி'' என்றார் ஆசிரியர் பந்தர்க்கர். உடனே “தாங்கள் தான் தலைவர் ராயிருக்கவேண்டும்'' என்றார் காந்திஜி.
டாக்டர் பந்தர்க்கர் சிறிது யோசித்துவிட்டுச் சொன்னதாவது :- ''நான் அரசியல் விஷயங்களில் தலையிடுவதில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். என்றாலும் நீங்கள் சொல்லும் காரியத்துக்கு என்னால் மறுத்துரைக்க முடியவில்லை. திலகர், கோகலே இருவரையும் நீர் கலந்து கொண்டது சரியான காரியம். அவர்கள் இருவரும் சேர்ந்து நடத்தும் கூட்டத்துக்குத் தலைமை வகிப்பதற்கு எனக்குச் சந்தோஷந்தான். அப்படியே அவர்களிடமும் தெரிவியுங்கள்.''
காந்திஜி மகிழ்ச்சியடைந்தார். பம்பாய்ப் பொதுக் கூட் டத்தைப்போல் பூனாக் கூட்டமும் வெற்றிகரமாக நடந்தது.
* * *
பிறகு காந்திஜி நம் சென்னை மாகாணத்துக்கு வந்தார். பாலசுந்தரம் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவன் அல்லவா? ஆகவே சென்னை மாகாணம் அச்சமயம் அரசியலில் முன்னணியில் நிற்கா விட்டாலும் காந்திஜி வந்த காரியத்துக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. "பச்சைப் பிரசுரம்'' ஏராளமாகச் சென்னை நகரத்தில் விற்பனையாயிற்று.
அப்போது சென்னை நகரில் நடந்த ”மெட்ராஸ் ஸ்டாண் டர்டு" ஆசிரியர் ஸ்ரீ ஜி. பரமேசுவரம் பிள்ளையும், ”ஹிந்து'' பத்திரிகை ஆசிரியர் ஸ்ரீ ஜி. சுப்பிரமணிய ஐயரும், பிற்காலத்தில் மிகப் பிரசித்தி பெற்ற நீதிபதி ஸர் எஸ். சுப்பிரமணிய ஐயரும் தமக்குப் பேருதவி செய்ததாகக் காந்திஜி குறிப்பிட்டுள்ளார்.
* * *
சென்னையிலிருந்து காந்திஜி கல்கத்தாவுக்குப் போனார். கல்கத்தா அப்போது இந்தியாவின் தலைநகரமாயிருந்தது. இந்தியாவின் கவர்னர் ஜெனரல் கல்கத்தாவிலே தான் வசித்தார். கல்கத்தாவில் காந்திஜியின் அனுபவங்கள் அவ்வளவு சந்தோஷகரமா யிருக்கவில்லை. பல தொல்லைகள் அவருக்கு ஏற்பட்டன ; ஏமாற்றங்களும் நேர்ந்தன.
கல்கத்தாவில் காந்திஜிக்கு யாரையுமே தெரியாது. அங்கே போனதும் எங்கே தங்குவது? ரயில்வேக் கம்பெனியின் விளம்பரப் புத்தகத்தில் "கிரேட் ஈஸ்டர்ன் ஹோட்டல்” விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டுக் காந்திஜி மேற்படி ஹோட்டலுக்குத் தந்தி அடித்தார். காந்திஜிக்காக ஓர் அறை ஹோட்டலில் ரிஸர்வ் செய்யப்பட்டிருந்தது. அதில் ஜாகை ஏற்படுத்திக்கொண்டார். லண்டன் ''டெய்லி டெலி கிராப்' பத்திரிகையின் நிருபர் மிஸ்டர் எல்லர் தார்ப்பே என்பவருடன் அந்த ஹோட்டலில் காந்திஜிக்குப் பழக்கம் ஏற்பட் டது. எல்லர் தார்ப்பே ’பெங்கால் கிளப்' என்னும் ஐரோப்பியர் விடுதியில் தங்கியிருந்தார். காந்தியைக் கிளப்புக்கு அழைத்துப் போனார். ஆனால் அந்தக் கிளப்பின் பிரதான ஹாலுக்கு இந்தியர் வரக்கூடாது என்னும் விதி அவருக்குத் தெரியாது. காந்தியை அழைத்துக்கொண்டு அங்கே போனதும் இந்த விவரம் அவருக்குத் தெரிய வந்தது. உடனே தமது சொந்த அறைக்குக் காந்திஜியை அழைத்துப் போனார்.
இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷாருக்கும் தென்னாப்பிரிக்கா இந்தியா முதலிய தேசங்களில் உள்ள பிரிட்டிஷாருக்கும் மனப்பான்மையில் உள்ள வேற்றுமைக்கு மறுபடியும் ஓர் உதாரணம் கிடைத்தது. மிஸ்டர் எல்லர் தார்ப்பே கல்கத்தா ஐரோப்பியர்களின் கேவல மனப்பான்மையைப்பற்றி வருத்தம் தெரிவித்து அங்கே காந்தியைக் கூட்டிக்கொண்டு வந்ததற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
பிறகு காந்திஜி கல்கத்தா பிரமுகர்களைப் பார்க்கச் சென்றார். அந்தக் காலத்தில் வங்காளத்தின் தெய்வமாக விளங்கியவர் ஸ்ரீ பாபு சுரேந்திரநாத் பானர்ஜி. அவரைக் காந்திஜி பார்க்கச் சென்றபோது பல நண்பர்கள் புடை சூழ அவர் வீற்றிருந்தார். காந்திஜி கூறியதைக் கேட்ட பிறகு, “இங்கே எங்களுக்கு இருக்கும் தொல்லைகளே அசாத்தியம். உங்கள் விஷ யத்தில் ஜனங்களைச் சிரத்தை கொள்ளச் செய்வது கஷ்டம் என்று தோன்றுகிறது. ஆயினும் இன்னும் சில பிரமுகர்களை நீங்கள் பார்த்து அவர்களுடைய அநுதாபத்தைப் பெற முயலுங்கள்'' என்று சொன்னார்.
பானர்ஜி குறிப்பிட்ட கனவான்கள் காந்திஜி கூறியதைக் காது கொடுத்தே கேட்க வில்லை. பிறகு காந்திஜி பிரசித்தி பெற்ற 'அமிருத பஜார்' பத்திரிகைக் காரியாலயத்துக்குப் போனார். அங்கே அவரால் பத்திரிகாசிரியரைப் பார்க்கவே முடியவில்லை. பிறகு 'வங்க வாசி' காரியாலயத்துக்குப் போனார். அதன் ஆசிரியர் வெகு நேரம் காந்திஜியைக் காக்க வைத்துவிட்டு, ''எனக்குத் தலைக்குமேல் வேலை இருக்கிறது. உம்முடைய விஷயத்தைக் கேட்க எனக்கு இப்போது நேரமில்லை '' என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
காந்தி மகாத்மா இந்தச் சம்பவம் பற்றி எழுதியிருப்பதாவது :- "ஒரு கண நேரம் எனக்குக் கோபம் வந்தது. ஆனால் உடனே பத்திரிகாசிரியரின் நிலையை உணர்ந்தேன். 'வங்க வாசி'ப் பத்திரிகையின் புகழைக் குறித்து நான் ரொம்பவும் கேள்விப்பட்டதுண்டு. இடை விடாமல் அவரைப் பார்க்க மனிதர்கள் வந்துகொண்டிருப்பதையும் கண்டேன். அவர்கள் அவருக்குப் பழக்கப்பட்டவர்கள். நான் முன் பின் தெரியாதவன். தென்னாப்பிரிக்கா விஷயமும் அவருக்குத் தெரியாது. கஷ்டப்படுகிறவனுக்குத் தன்னுடைய கஷ்டமே பெரியதாகத் தோன்றும். ஆனால் பத்திரிகாசிரியரைப் பார்க்க வருகிறவர்கள் எல்லாரும் ஒவ்வொரு குறையுடனேயே வருவார்கள். எல்லாருடனும் அவர் பேசிப் பதில் சொல்வது எங்நுனம் சாத்தியம்? ”
இவ்வாறு எண்ணி மனத்தைச் சாந்தப்படுத்திக் கொண்ட மகாத்மா பிறகு ஆங்கிலோ - இந்தியப் பத்திரிகாசிரியர்களிடம் சென்றார். ''இங்கிலீஷ்மான்'', ''ஸ்டேட்ஸ்மான் '' என்ற இரண்டு பத்திரிகைகளின் ஆசிரியர்களும் காந்திஜி சொல்லியதை யெல்லாம் பொறுமையுடன் கேட்டுத் தங்கள் பத்திரிகைகளில் விவரமாகப் பிரசுரித்தார்கள்.
'' இங்கிலீஷ்மான் '' பத்திரிகையின் ஆசிரியர் மிஸ்டர் ஸாண்டர்ஸ் என்பவர் காந்திஜியின் உற்ற நண்பராகவே ஆகி விட்டார். காந்திஜி தென்னாப்பிரிக்கா இந்தியர்களுடைய கட்சியை எடுத்துச் சொன்னதோடு தென்னாப்பிரிக்கா ஐரோப்பியருடைய கட்சியையும் பாரபட்சமின்றி எடுத்துச் சொன்ன து மிஸ்டர் ஸாண்டர்ஸின் மனத்தைக் கவர்ந்து காந்திஜியிடம் மரியாதையை உண்டாக்கிற்று.
மிஸ்டர் ஸாண்டர்ஸின் உதவியினால் கல்கத்தாவிலும் பொதுக்கூட்டம் நடத்திவிடலாம் என்று மகாத்மா எண்ணிக் கொண்டிருந்தபோது டர்பனிலிருந்து, ''பார்லிமெண்ட் ஜனவரியில் கூடுகிறது. சீக்கிரம் திரும்பி வாருங்கள்!'' என்று ஒரு தந்திச் செய்தி வந்தது. உடனே காந்திஜி புறப்படத் தீர்மானித்தார். பம்பாயிலிருந்து புறப்படும் அடுத்த முதல் கப்பலில் தமக்கு இடம் தேடி டிக்கட் வாங்கி வைக்கும்படி தாதா அப்துல்லாவின் பம்பாய் ஏஜண்டுக்குத் தந்தி அடித்தார்.
---------
தாதா அப்துல்லா கம்பெனியார் “கோர்லாண்டு '' என்னும் நீராவிக் கப்பலை அப்போதுதான் விலைக்கு வாங்கியிருந்தார்கள். கல்கத்தாவிலிருந்து காந்திஜி தந்தி கொடுத்த சமயத்தில் ”கோர்லாண்டு '' கப்பல் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்படுவதா-யிருந்தது. அந்தக் கப்பலிலேயே காந்திஜி பிரயாணம் செய்யவேண்டும் என்றும், டிக்கட் கிரயம் அவரிடம் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் அப்துல்லா கம்பெனியார் தெரிவித்தார்கள். காந்திஜி இம்முறை தமது மனைவியையும், இரண்டு புதல்வர்களையும், சகோதரி குமாரன் ஒருவனையும் தம்மோடு அழைத்துப் போவதாக எண்ணியிருந்தார். அதைக் காந்திஜி தெரியப்படுத்தியதும் அவர்களுக்குக் கப்பலில் இடந்தருவதாகவும் டிக்கட் வாங்கக் கூடாதென்றும் கம்பெனியார் வற்புறுத்தினார்கள். அவர்களுடைய உதவியைக் காந்திஜி நன்றியுடன் ஏற்றுக்கொண்டார். ”கோர்லாண்டு'' கப்பல் புறப்பட்ட அதே சமயத்தில் ''நாடேரி'' என்னும் இன்னொரு நீராவிக் கப்பலும் டர்பனுக்குப் புறப்பட்டது. இரண்டு கப்பல்களிலும் சுமார் 800 பிரயாணிகள் இருந்தார்கள். இவர்களில் பாதிப்பேர் டிரான்ஸ்வாலுக்குச் செல்லுபவர்கள்.
மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கப்பல் ஏறுவதற்கு முன்னால் அவர்களுடைய உடை விஷயமாகக் காந்திஜி யோசிக்க வேண்டியதாயிற்று. ஐரோப்பிய நாகரிகத்தையும் நடை உடை பாவனைகளையும் கைக்கொண்டால் தான் தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்களுக்கு மத்தியில் கெளரவமான வாழ்க்கை நடத்தலாமென்றும், அங்குள்ள இந்தியர்களுக்கு அப்போதுதான் நல்ல சேவை செய்யமுடியு மென்றும் காந்திஜி கருதினார். ஆனால் திடீரென்று அவர்கள் முழு ஐரோப்பிய உடை தரிப்பது சாத்தியமன்று. ஐரோப்பிய உடைக்கு அடுத்தபடியாக பார்ஸிக்காரர்களின் உடை நாகரிக மானது என்று தோன்றியது. எனவே கஸ்தூரிபாயைப் பார்ஸி மாதரைப் போல் சேலை அணியச் செய்தார். குழந்தைகளுக்குப் பார்ஸிகளைப் போல் மேற்சட்டையும், காற்சட்டையும் வாங்கிக் கொடுத்தார். காலுறையும் அதன் மேல் பூட்ஸும் எல்லாரும் அணிய வேண்டியிருந்தது.
பாவம் ! தாயும் குழந்தைகளும் உடை மாறுதலினால் மிகவும் கஷ்டப்பட்டனர். ஆயினும் பொறுமையோடு சகித்துக் கொண்டு காந்திஜி சொன்னபடி நடந்தார்கள். நாகரிக உடை தரித்ததோடு, ஐரோப்பிய முறையில் மேஜையின் மீது உணவு வைத்துக்கொண்டு கத்தியும் முள்ளும் உபயோகித்துச் சாப்பிடவும் பழகிக்கொண்டார்கள். ஆனால் இந்த நாகரிகமெல்லாம் நெடுங்காலம் நிலைத்திருக்கவில்லை. ''இவையெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனம்'' என்று பிற்காலத்தில் காந்திஜி தீர்மானித்து அவற்றைக் கைவிடச் செய்தார். கைக்கொள்ளுவது கஷ்டமாயிருந்தது போலவே சிலகாலம் பழகிய பிறகு கைவிடுவதும் கஷ்டமாயிருந்தது. ஆயினும் அந்த மாதரசி கணவருடைய விருப்பத்தின்படி தம்முடைய பழக்கத்தை மாற்றிக்கொண்டார். குழந்தைகளும் அப்படியே செய்தன. நிற்க,
கப்பல்கள் இரண்டும் நடுவில் எந்தத் துறைமுகத்திலும் நில்லாமல் நேரே சென் றபடியால் பதினெட்டே நாளில் டர்பன் துறைமுகத்தை அடைந்தன. ஆனால் வழியில், இன்னும் நாலு நாள் பிரயாணம் பாக்கியிருந்தபோது, ஒரு பெரிய அபாயம் நேரிட்டது. பயங்கரமான புயற்காற்றில் கப்பல்கள் அகப்பட்டுக் கொண்டன. பிரயாணிகள் பெரும் பீதி கொண்டார்கள். ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் எல்லாரும் சமய வேறுபாடுகளை மறந்து ஏக பரம்பொருளை நினைத்து வேண்டுதல் செய்து கொண்டார்கள். கப்பல் தலைவரும் பிரயாணிகளுடன் சேர்ந்து ஆண்டவனைப் பிரார்த்திக்கத் தொடங்கினார். காற்றின் வேகத்தினால் மோதப்பட்டுக் கப்பலில் எல்லா இடங்களிலும் 'கிறீச் ', 'கிறீச்' என்ற சத்தம் உண்டாயிற்று. எந்த நிமிஷத்தில் எந்த இடம் பொத்துக் கொள்கிறதோ என்று பயப்படும்படி இருந்தது. ஒரு பலகை சிறிது அகன்று ஒரு சிறு துவாரம் ஏற்பட்டால் போதுமே; குபு குபு என் று கடல் நீர் கப்பலுக்குள் வர ஆரம்பித்து விடுமே! அதுகூட அவசியமில்லை ! காற்றில் அடிபட்டுக் கப்பல் அப்படியும் இப்படியும் ஆடி அசைந்ததைப் பார்த்தால் எந்த நிமிஷமும் கப்பல் கவிழ்ந்து ’அரோகரா' ஆகிவிடலாம் என்றும் எண்ண ஏது இருந்தது. கப்பலின் மேல் தளத்தில் ஒர் ஈ காக்கை இல்லை ! எல்லாரும் கீழே இறங்கி ஒரே கும்பலாய் நெருங்கியிருந்தார்கள். ”எல்லாம் ஆண்டவன் சித்தம் ! ” என் று அடிக்கடி சொல்லிக் கொண்டார்கள்.
இப்படிப்பட்ட பீதிகரமான சமயத்தில் அந்தக் கப்பலில் தைரியமாயிருந்த பிரயாணி காந்திஜி ஒருவர் தான். அவருக்குக் கடல் யாத்திரை பழக்கமாகி யிருந்தது. இயற்கையிலேயே இம்மாதிரி சந்தர்ப்பங்களில் திடசித்தம் கொண்டிருப்பவர் - அத்துடன் கடலில் அடிக்கும் இத்தகைய புயல்களையும் ஏற் கெனவே பார்த்து அநுபவமுள்ளவர். ஆகையால் மற்றப் பிரயாணிகளைச் சந்தித்துத் தைரியம் சொல்லுவதில் காந்திஜி ஈடுபட்டிருந்தார். புயல் நிலைமையைப் பற்றி அடிக்கடி கப்பல் தலைவர் தெரிவித்த செய்திகளைத் தெரிந்துகொண்டு வந்து பிரயாணிகளுக்கு அறிவித்து வந்தார். இவ்விதம் அன்று கப்பல் பிரயாணிகள் பலருடன் காந்திஜிக்கு ஏற்பட்ட பழக்கம் சில நாளைக்குள்ளே மிகவும் பயன்பட்டது என்பதை அடுத்தாற் போல் பார்க்கப் போகிறோம்.
புயல் இருபத்துநாலு மணி நேரம் நீடித்திருந்த பிறகு அதன் வேகம் தணிந்தது. வானம் வெளி வாங்கிற்று. சூரிய பகவான் தரிசனம் தந்தார். அவ்வளவுதான் ! இத்தனை நேரமும் சோகக் கடலில் மூழ்கி ”ஐயோ அப்பா!' என்று அலறிக் கொண்டிருந்தவர்கள் ஆனந்தக் களியாட்டங்களில் ஈடுபட்டார்கள். சம்பிரதாயமாகக் கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள் என்றாலும், அபாய நிலைமையில் ஏற்பட்டிருந்த பக்தி சிரத்தை மறைந்துவிட்டது என்பதைக் காந்திஜி கண்டு வருந்தினார்.
ஆனால் அந்தப் பிரயாணிகளுக்காவது காந்திஜிக்காவது ஒரு விஷயம் அப்போது தெரியாது. கடலில் நேர்ந்த இந்த அபாயத்தைக் காட்டிலும் பெரியதோர் அபாயம் கரையிலே காத்திருக்கிறது என்பதை அவர்கள் அறிருந்திருக்கவில்லை அறிந்திருந்தால் காந்திஜியின் மனோநிலையில் மாறுதல் இருந்திராது; ஆனால் மற்றப் பிரயாணிகள் களியாட்டங்களில் ஈடுபட் டிருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.
* * *
டிசம்பர் மாதம் 18-ந் தேதி காந்திஜி ஏறிவந்த ''கோர்லாண்டு'' கப்பல் டர்பன் துறைமுகத்தை அடைந்தது. அதே தினத்தில் ”நாடேரி ' கப்பலும் வந்து சேர்ந்தது. இரண்டு கப்பல்களும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன.
வெளிநாடுகளிலிருந்து கப்பல்களில் வந்து இறங்குவோரைத் துறைமுகத்தில் வைத்திய பரிசோதனைக்கு உள்ளாக்குவது வழக்கம். தொத்து நோய்கள் பரவாதிருக்கும் பொருட்டு இந்த வழக்கம் கையாளப்படுகிறது. தென்னாப்பிரிக்கா துறைமுகங்களில் கப்பலிலேயே வைத்திய பரிசோதனை செய்து பார்த்துவிட்டுத்தான் கரையில் இறங்க விடுவார்கள்.
'கோர்லாண்டு', 'நாடேரி ' கப்பல்கள் பம்பாயிலிருந்து புறப்பட்டபோது பம்பாயில் பிளேக் நோய் பரவியிருந்தது. ஆகையினால் இந்தக் கப்பல்களின் விஷயத்தில் வைத்திய பரிசோதனை கடுமையாக இருக்கலாம் என்றும், கொஞ்சம் கால தாமதமும் ஏற்படலாம் என்றும் எதிர்பார்த்தார்கள்.
வெளி நாட்டிலிருந்து துறைமுகத்துக்கு வரும் ஒவ்வொரு கப்பல் மீதும் ஒரு மஞ்சள் கொடி பறக்கவிடப்பட்டிருக்கும். மஞ்சள் கொடியை இறக்கிவிட்டால் வைத்தியப் பரிசோதனை முடிந்துவிட்டது என்று பொருள். அதன் பிறகு கப்பலில் வந்த பிரயாணிகளை வரவேற்பதற்காக அவர்களுடைய நண்பர்களும் பந்துக்களும் கப்பலுக்குள் ஏறிவரலாம்.
”கோர்லாண்டு'' கப்பலிலும் மஞ்சள் கொடி பறக்க விடப்பட்டிருந்தது. டாக்டர் வந்து பிரயாணிகளைப் பரிசோதனை செய்தார். ஆனால் அத்தாட்சிப் பத்திரம் உடனே கொடுக்கவில்லை. ''பிளேக் கிருமிகள் வளர்ச்சி பெறுவதற்கு 23 நாள் ஆகலாம் ; இந்தக் கப்பல் பம்பாயிலிருந்து புறப்பட்டு 18 நாள் தான் ஆகிறது. ஆகையால் இன்னும் ஐந்து நாள் எல்லாரும் கப்பலிலேயே இருக்க வேண்டும்'' என்று சொல்லி விட்டு டாக்டர் போய்விட்டார். ''நாடேரி'' கப்பலில் இருந்தவர்களுக்கும் இதே விதமான தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இவ்விதம் வைத்தியர் ஐந்து நாளைக்குத் தடை உத்தரவு போட்ட காரணம் பம்பாய்ப் பிளேக் மட்டும் அல்ல என்பது சீக்கிரத்திலேயே தெரியவந்தது. மேற்படி இரண்டு கப்பலிலும் வந்த இந்தியர்களை டர்பனில் இறங்க விடாமல் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று அந்த நகரில் வசித்த ஐரோப்பியர்கள் பெருங்கிளர்ச்சி செய்து கொண்டிருந்தார்கள் என்பதாகத் தகவல் கிடைத்தது.
ஒவ்வொரு நாளும் வெள்ளைக்காரர்கள் பெருங் கூட்டம் நடத்தினார்கள். ''காந்தியையும் அவருடன் வந்திருக்கும் இந் தியர்களையும் இறங்கவிடக் கூடாது'' என்று ஆவேசமாகப் பேசினார்கள்; தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். அவர்களுடைய கிளர்ச்சிக்கு நேட்டால் அரசாங்கத்தாரின் ஆதரவும் இருந்தது. அரசாங்க மந்திரிகளில் செல்வாக்குள்ள ஒருவர் மேற்படி கிளர்ச்சிக் கூட்டங்களுக்குச் சென்று பகிரங்கமாகக் கலந்து கொண்டார்.
வெள்ளைக்காரர்கள் டர்பனில் எற்கெனவே வசித்த இந்தியர்களைப் பயமுறுத்தினார்கள். தாதா அப்துல்லா கம்பெனியைப் பயமுறுத்தினார்கள். இரண்டு கப்பல்களையும் திருப்பி அனுப்பி விட்டால் நஷ்ட ஈடு தருவதாகவும் சொன்னார்கள் !
ஆனால் டர்பன் இந்தியர்களும் தாதா அப்துல்லா கம்பெனியாரும் உறுதியுடனிருந்தார்கள். டர்பன் இந்திய சமூகத்துக்கு அப்போது மிஸ்டர் லாப்டன் என்னும் ஆங்கிலேயர் வக்கீலாக இருந்து வந்தார். அவர் அஞ்சா நெஞ்சம் படைத்த தீரர். மற்ற வெள்ளைக்காரர்களின் கிளர்ச்சியை அவர் பலமாகக் கண்டித்தார். இந்தியர்களுக்கு உண்மையாக நண்பரா யிருந்து ஆலோசனை சொல்லி வந்தார்.
அச்சமயம் தாதா அப்துல்லா கம்பெனியின் டர்பன் கிளையைச் சேத் அப்துல்லா கரீம் ஹாஜி ஆதம் என்பவர் நிர்வகித்து வந்தார். அவர் தினந்தோறும் விவரமாகக் கடிதம் எழுதிக் கப்பலில் காத்திருந்த காந்திஜிக்கு அனுப்பி வந்தார்.
வெள்ளைக்காரர்களின் சார்பாகவும் கப்பலுக்குக் கடிதம் வந்தது. ”மரியாதையாகத் திரும்பிப் போய் விடுங்கள். திரும்பிப் போகச் சம்மதித்தால் பிரயாணச் செலவு கொடுத்து விடுகிறோம். திரும்பிப் போகச் சம்மதிக்கா விட்டால் கடலிலே தள்ளிச் சாக அடித்து விடுவோம் ! ஜாக்கிரதை !'' என்பது போன்ற கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. காந்திஜி பிரயாணிகள் எல்லாரிடையிலும் சென்று அவர்களுடனே பேசித் தைரியமூட்டி வந்தார். ”நாடேரி'' கப்பலில் இருந்தவர்களுக்கும் அவ்வப்போது தைரியப்படுத்திச் செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்தார்.
டர்பன் வெள்ளைக்காரர்கள் இவ்வளவு மூர்த்தண்யமான துவேஷங் கொண்டு கிளர்ச்சி செய்ததின் காரணம் என்ன தெரியுமா? அவர்கள் காந்திஜியின் மீது இரண்டு குற்றங்களைச் சுமத்தினார்கள்.
1. இந்தியாவிலிருந்தபோது காந்திஜி நேட்டால் வெள்ளைக்காரர்கள் மீது அவதூறு கூறித் துவேஷப் பிரசாரம் செய்தார் என்பது ஒன்று.
2. நேட்டாலில் இந்தியர்களைப் பெருந்திரளாகக் கொண்டு சேர்த்து நேட்டாலை இந்திய மயமாக்கி விடும் நோக்கத்துடன் இரண்டு கப்பல் நிறைய இந்தியப் பிரயாணிகளை அவர் அழைத்து வந்திருக்கிறார் என்பது இரண்டாவது.
உண்மையில், மேற்படி இரண்டு குற்றங்களுக்கும் காந்திஜி உரியவர் அல்ல. இந்தியாவில் காந்திஜி நேட்டால் வெள்ளைக்காரர்களைப் பற்றி மிகைப்படுத்தி ஒன்றும் சொல்லவில்லை. அவர்களுடைய குற்றங்களைக் குறைத்தே கூறினார். நேட்டாலில் இருந்தபோது அவர்களைப்பற்றிக் கூறாத ஒரு வார்த்தையை யாவது இந்தியாவிலே அவர் சொல்லவில்லை.
மற்றப்படி அந்த இரு கப்பல்களிலும் இருந்தவர்களில் தம்முடைய மனைவி மக்களைத் தவிர வேறு யாரையும் காந்திஜிக்குத் தெரியவே தெரியாது. யாருக்கும் கடிதம் எழுதியோ நேரில் பேசியோ நேட்டாலுக்கு வரும்படி அவர் தூண்டியதும் அழைத்ததும் கிடையாது.
இப்படிக் காந்திஜி நிரபராதியாயிருந்தபோதிலும் அவருக்குத் தம்மால் மற்றப் பிரயாணிகளுக்கு இந்த நெருக்கடி ஏற்பட்டு விட்டதே என்று வருத்தமாயிருந்தது. தாதா அப்துல்லா கம்பெனிக்கும் பெரும் சங்கடம் உண்டாகி யிருந்தது. கப்பலில் இருந்த பிரயாணிகளுக்கெல்லாம் உயிருக்கே ஆபத்து என் ற நிலைமை ஏற்பட்டிருந்தது. காந்திஜியின் மனைவி மக்களும் அபாயத்துக்கு உள்ளாகியிருந்தனர்.
இதைப்பற்றி யோசிக்க யோசிக்க, காந்திஜிக்கு மேனாட்டு நாகரிகத்தைப்பற்றி வருத்தம் உண்டாயிற்று. மேனாட்டு நாகரிகத்தின் விளைவாகத்தானே நேட்டால் வெள்ளைக்காரர்கள் இப்படி யெல்லாம் நடந்து கொள்ளுகிறார்கள் !
துறைமுகத்தில் கப்பல் காத்திருந்த சமயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை வந்தது. அந்தப் பண்டிகையை முன்னிட்டுக் கப்பல் தலைவர் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்புப் பிரயாணிகளைத் தம்முடன் விருந்துண்ண அழைத்தார். விருந்துக்குப் “பிறகு விருந்தாளிகளில் சிலரும் விருந்து கொடுத்தவரும் பேசுவ து மேனாட்டு முறை. இந்திய விருந்தாளிகளின் சார்பாகக் காந்திஜி பேசவேண்டி ஏற்பட்டது. சாதாரணமாகப் பண்டிகை விருந்துகளில் பேசுவோர் தமாஷாகச் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்கள். அல்லது ஒருவருக்கொருவர் உபசாரம் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் காந்திஜிக்குத் தமாஷாப் பேச்சில் அப்போது மனம் செல்லவில்லை. அவருடைய உள்ளம் டர்பனில் நடந்து கொண்டிருந்த துவேஷக் கிளர்ச்சிப் போராட்டத் திலேயே ஈடுபட்டிருந்தது. எனவே, கப்பல் தலைவர் அளித்த கிறிஸ்மஸ் விருந்தில் ''மேனாட்டு நாகரிகம்'' என்னும் விஷயமாகக் காந்திஜி பேசினார்.
மேனாட்டார் கிறிஸ்துவ மதத்தினராயிருந்த போதிலும் கிறிஸ்துவின் போதனைகளைக் கைக்கொள்வதில்லை யென்றும், பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய வாழ்க்கை அமைந்திருக்கிற தென்றும் காந்திஜி தமது பேச்சில் கூறினார். இதற்கு மாறாகக் கீழ்நாட்டு நாகரிகம் அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட தென்று எடுத்துக் காட்டினார். கப்பல் தலைவரும், மற்றக் கப்பல் உத்தியோகஸ்தர்களும் வெள்ளைக்காரர்கள். எனினும் அவர்கள் காந்திஜி கூறியதைக் கவனமாகக் கேட்டார்கள். விருந்துப் பேச்சுகள் முடிந்த பிறகு அது விஷயமாகக் காந்திஜியுடன் சம்பாஷணை நடத்தினார்கள். அவர்களில் ஒருவர், ''நீங்கள் அஹிம்சையைப் பற்றி இவ்வளவு பேசுகிறீர்களே? உங்களுடைய கொள்கையை உங்களாலேயே நிறைவேற்றி வைக்க முடியுமா? டர்பன் வெள்ளைக்காரர்கள் பயமுறுத்துகிறபடி காரியத்தில் செய்தார்களானால் நீங்கள் என்ன செய்வீர்களாம்? '' என்று கேட்டார்.
அதற்குக் காந்திஜி, ''அவர்களிடம் நான் கோபங்கொள்ள மாட்டேன். சட்டப்படி வழக்குத் தொடரவும் மாட்டேன். உண்மையிலேயே அவர்கள் மேல் எனக்குக் கோபம் கிடை யாது. அவர்களுடைய அறியாமைக்காகவும் குறுகிய மனப் போக்குக் காகவும் வருந்துகிறேன். ஆனால் அதற்காக அவர்களுக்குப் பதிலுக்குத் தீங்கு செய்ய என் மனம் இடங் கொடாது!'' என்று சொன்னார். கேள்வி கேட்டவர் புன்னகை புரிந்தார். காந்திஜியின் பதிலில் அவருக்கு அப்பொழுது அவ்வளவாக நம்பிக்கை ஏற்படவில்லை.
இவ்விதம் நாட்கள் கழிந்து கொண்டிருந்தன. வைத்திய பரிசோதகர் இப்போது விஷயம் தம் கையில் இல்லை யென்றும், சர்க்காரிடமிருந்து உத்தரவு வந்தால் காந்திஜி முதலியவர்கள் கப்பலிலிருந்து இறங்கலா மென்றும் சொன்னார்,
காந்திஜிக்கு இறுதிச் செய்தி கரையிலிருந்து வந்தது. ”உயிர் தப்பிப் பிழைக்க வேண்டுமானால் பிடிவாதத்தை விட்டு விடுங்கள் ; அப்படியே திரும்பிப் போய் விடச் சம்மதியுங்கள்!'' என்று அந்தச் செய்தி சொல்லிற்று.
----------
கரையிலிருந்து வந்த இறுதிச் செய்திக்குக் காந்திஜி மற்றப் பிரயாணிகளையும் கலந்துகொண்டு பதில் அனுப்பினார். ''திரும்பிப் போக முடியாது. நேட்டால் துறைமுகத்தில் இறங்குவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு. என்ன நேர்ந்தாலும் சரி, அந்த உரிமையை நிலைநாட்ட உறுதி கொண்டிருக்கிறோம் '' என்பதுதான் பதில்.
இனியும் கப்பல்களைக் கடலிலேயே நிறுத்திவைக்க முடியாது என்று அதிகாரிகள் கண்டார்கள். சொல்லக்கூடிய காரணம் ஒன்றும் இல்லை. எனவே ஹார்பருக்குள் கப்பல்கள் வருவதற்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
இரண்டு கப்பல்களும் கரையோரமாகக் கொண்டு வந்து, நிறுத்தப்பட்டன. இத்தனை நாளும் காத்திருந்த பிரயாணிகள் இப்போது பரபரப்புடன் இறங்கினார்கள். நேட்டால் அரசாங்க அட்டர்னியும் ஏற்கெனவே காந்திஜிக்குத் தெரிந்தவருமான மிஸ்டர் எஸ்கோம்ப் இச்சமயத்தில் காந்திஜிக்கு ஒரு செய்தி அனுப்பினார். “இங்குள்ள ஐரோப்பியர்கள் உங்கள் பேரில் தனிப்பட மிகவும் கோபங்கொண்டிருக்கிறார்கள். இது உங்களுக்குத் தெரிந்ததே! ஆகையால் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பகலில் கப்பலிலிருந்து இறங்க வேண்டாம். நன்றாக இருட்டிய பிறகு இறங்குங்கள், துறைமுகத்தின் தலைமை அதிகாரி மிஸ்டர் டாட்டம் உங்களைப் பத்திரமாக அழைத்துப் போய் வீட்டில் விட்டு விடுவார்.'' இந்தச் செய்தியைக் கப்பல் தலைவர் காந்திமகானிடம் தெரவித்தார். காந்திஜியும் அதன்படி செய்ய உத்தேசித்தார், ஆனால் அரை மணி நேரத்துக்கெல்லாம் டர்பன் இந்தியர்களின் வக்கீலான மிஸ்டர் லாப்டன் என் பவர் கப்பலுக்கு வந்து சேர்ந்தார். அவர் காந்திஜியிடம் சொன்னதாவது :-
''நீங்கள் இருட்டிய பிற்பாடு நகரில் பிரவேசிக்கும் யோசனை எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. எதற்காக அப்படிப் பயப்பட வேண்டும்? உங்கள் மனைவியையும் குழந்தைகளையும் முதலில் வண்டியில் ஏற்றி ரஸ்டம்ஜியின் வீட்டுக்கு அனுப்பி விடுவோம். நாம் இருவரும் நடந்து போவோம். யாரும் உங்களுக்குத் தீங்கு செய்வார்கள் என்று நான் கருத வில்லை. நகரம் இப்போது அமைதியா யிருக்கிறது. கிளர்ச்சி அடங்கி விட்டது. அப்படி ஏதாவது அபாயம் வருவதாயிருந்தாலும் அதற்குப் பயப்பட்டுக்-கொண்டு திருடனைப் போல் இருட்டிலே போவதா? கூடவே கூடாது ! உங்கள் விருப்பம் என்ன?'' - இவ்விதம் மிஸ்டர் லாப்டன் கூறியது காந்திஜிக்கு நியாயமாகத் தோன்றியது. அவருடைய யோசனைப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டார். காந்திஜியின் மனைவியும் குழந்தைகளும் முன்னதாக வண்டியில் ஏறி ரஸ்டம்ஜியின் வீட்டுக்குப் பத்திரமாய்ப் போய்ச் சேர்ந்தார்கள்.
கப்பல் தலைவரிடம் அநுமதி பெற்றுக்கொண்டு காந்திஜி மிஸ்டர் லாப்டனுடன் கப்பலிலிருந்து இறங்கினார். துறை முகத்திலிருந்து இரண்டு மைல் தூரத்திலிருந்த ரஸ்டம்ஜியின் வீட்டுக்கு இருவரும் நடந்து செல்லத் தொடங்கினார்கள்.
கப்பலிலிருந்து இறங்கிச் சிறிது தூரம் செல்வதற்குள்ளே வெள்ளைக்காரச் சிறுவர்கள் சிலர் அவரைப் பார்த்து இன்னார் என்று தெரிந்துகொண்டார்கள். உடனே அவர்கள் ''காந்தி! காந்தி !'' என்று கூச்சல் போட்டார்கள். அதைக் கேட்டு ஐந்தாறு பெரிய ஆட்கள் வந்து அந்தப் பிள்ளைகளுடனே சேர்ந்து கூச்சல் போட்டார்கள். அந்தக் கூச்சலைக் கேட்டுவிட்டு நாலாபுறத்திலிருந்தும் சிறுவர்களும் பெரியவர்களும் ஓடி வரத் தொடங்கினார்கள்.
இதைப் பார்த்ததும் மிஸ்டர் லாப்டனுக்குப் பயமாய்ப் போய்விட்டது. கூட்டம் பெரிதாகி விட்டால் தொந்தரவாய்ப் போய் விடலாமென்றும், காந்திஜி மேலே நடந்து செல்ல முடியாமற் போய்விடலாம் என்றும் எண்ணினார். ஆகையால் பக்கத்தில் நின்ற ஒரு ரிக்ஷாவைக் கூவி அழைத்தார். மனிதன் இழுக்கும் வண்டியாகிய ரிக்ஷாவில் காந்திஜி ஏறுவதே கிடையாது. அச் சமயம் மிஸ்டர் லாப்டனுடைய வற்புறுத்தலுக்காக ஏ ற உத்தேசித்தார். ஆனால் அந்த உத்தேசம் பயனளிக்க வில்லை. கூட்டத்தினர் சிலர் ரிக்ஷா வண்டியைச் சுற்றி நின்று கொண்டு. ரிக்ஷாக்காரனைப் பயமுறுத்தினார்கள். அங்கிருந்து
அவன் ஓடியே போய்விட்டான்.
காந்தியும் மிஸ்டர் லாப்டனும் மேலே நடந்தார்கள். போகப் போகக் கூட்டம் பெருகியது ; கூச்சலும் அதிகமாயிற்று. மேலே ஓர் அடி வைக்கவும் முடியாத நிலைமை ஏற்பட்டது. அப்போது கூட்டத்தில் சிலர் மிஸ்டர் லாப்டனைப் பிடித்து இழுத்து அப்புறம் கொண்டுபோனார்கள். மற்றவர்கள் தன்னந்தனியாக நின்ற காந்திஜியைச் சூழ்ந்து கொண்டார்கள். அந்த ஏழை பங்காளன் மீது கல்லை விட்டெறிந்தார்கள். ஒரு முரடன் அவருடைய தலைப்பாகையைப் பிடுங்கிக் கொண் டான். பிறகு ஜனங்கள் அம் மகானைக் கையாலேயே அடிக்க வும் குத்தவும் தொடங்கினார்கள். காந்திஜியின் உடல் தளர்ந்தது ; தலை சுற்றத் தொடங்கியது. ஆயினும் மன உறுதி மட்டும் குன்றவில்லை. கீழே விழுந்துவிடாதிருக்கும் பொருட்டுப் பக்கத்திலிருந்த வீட்டின் முன்புற வேலிக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டார். அவரைச் சூழ்ந்திருந்த கூட்டம் மேலும் அதிகமாகி நாலாபுறத்திலும் அவரை நெருக்கியது. அவர் மூச்சு விடவும் முடியாத நிலைமை ஏற்பட்டது.
அச்சமயத்தில் கடவுள் அருளால் டர்பன் போலீஸ் சூப்ரின் டெண்டு மிஸ்டர் அலெக்ஸாண்டரின் மனைவி அந்த வழியாகச் சென்றார். அவருக்கு ஏற்கெனவே காந்திஜியைத் தெரியும். கூட்டத்தையும் கூக்குரலையும் பார்த்ததும் என்ன விஷயம் என்று விசாரித்தார். கூட்டத்தின் நடுவில் காந்திஜி அகப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததும், தீரமுள்ள அந்தப் பெண்மணி கூட்டத்திற்குள் துணிந்து புகுந்தார். ஜனங்களை விலக்கிக் கொண்டு காந்திஜியின் அருகில் வந்து சேர்ந்தார். அப்போது வெய்யில் இல்லா விட்டாலும் தம்முடைய கையிலிருந்த குடையை விரித்துப் பிடித்துக்கொண்டார். காந்திஜிக்கும் ஜனக் கூட்டத்துக்கும் மத்தியில் நின்றார். இதனால் ஜனங்கள் காந்திஜியை நெருங்கவோ அடிக்கவோ முடியாமற் போயிற்று. டரீமதி அலெக்ஸாண்டர் மீது அடிபடாமல் காந்திஜியை அடிக்க முடியவில்லை.
இதற்குள் ளே அங்கு நடந்ததை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இந்திய இளைஞன் ஒருவன் போலீஸ் ஸ்டேஷ னுக்கு ஓடினான். அங்கே போலீஸ் சூப்பிரன்டெண்டு மிஸ்டர் அலெக்ஸாண்டர் இருந்தார். அவரிடம் தகவலைச் சொன்னான். மிஸ்டர் அலெக்ஸாண்டர் உடனே சில போலீஸ் ஜவான்களை அனுப்பினார். காந்திஜியை அவருடைய வீட்டில் பத்திரமாய்க் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு வரும்படி அவர்களுக்கு உத்தரவிட்டு அனுப்பினார். போலீஸ் ஜவான்கள் அவ்விதமே சென்று காந்திஜியைச் சுற்றி வளையம்போல் நின்றுகொண்டு ரஸ்டம்ஜியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.
அவர்கள் போகும் வழியிலேயே போலீஸ் ஸ்டேஷன் இருந்தது. ஸ்டேஷன் வாசலில் மிஸ்டர் அலெக்ஸாண்டர் காந்திஜியைச் சந்தித்து ''நீங்கள் இன்றைக்கு இங்கேயே இருந்து விடுவது நலம். போலீஸ் ஸ்டேஷனிலேயே இருந்து விட்டால் உங்களைப் பாதுகாப்பதற்கு நான் ஆயிற்று !'' என்றார். காந்திஜி அவருக்கு நன்றி செலுத்தினார். ஆயினும் உயிருக்குப் பயந்துகொண்டு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுவதற்குக் காந்திஜி விரும்பவில்லை.
''இனிமேல் ஒன்றும் அபாயமிராது. ஜனங்கள் சீக்கிரத்தில் சாந்தமடைந்து விடுவார்கள். அவர்களுடைய குற்றம் அவர்களுக்கே புலப்பட்டுவிடும்!'' என்றார்.
பிறகு போலீஸ் துணையுடன் வழியில் வேறு அபாயம் எ துவுமின் றி ரஸ்டம்ஜியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்.
காந்திஜியின் உடம்பெல்லாம் அடிபட்டதினால் தழும்பேறி யிருந்தது. ஒரிடத்தில் பலமான காயம் ஏற்பட்டிருந்தது. காயத்துக்குச் சிகிச்சை செய்தார்கள். அடிபட்ட தழும்புகளுக்கு ஒத்தடம் கொடுத்தார்கள். நல்லவேளையாக இந்த மட்டோடு போயிற்றே என்று வீட்டில் இருந்தவர்கள் அனை வரும் ஆறுதல் அடைந்தார்கள்.
ஆனால் அந்த மட்டோடு போய்விடவில்லை ! வீட்டைச் சுற்றி வெள்ளைக்காரர்களின் கூட்டம் சேர்ந்துகொண்டிருந்தது. சீக்கிரத்தில் கூட்டம் பெரிதாகிவிட்டது. ''காந்தியை வெளியே அனுப்பு!'' என்ற ஒரு குரல் எழுந்தது. ஒரு குரல் பத்துக் குரலாயிற்று. பத்துக் குரல் நூறு குரலாயிற்று. ''காந்தியை வெளியே அனுப்பு!'' என்ற கோஷம் வானை அளாவிய து. அந்தக் கோஷம் வீட்டுக்குள்ளே இருந்தவர்களின் காதிலும் விழுந்தது. தூரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த மிஸ்டர் அலெக்ஸாண்டர் காதிற்கும் எட்டியது.
மிகத் திறமைசாலியான அலெக்ஸாண்டர் ஓடோடியும் வந்தார். ஜனக்கூட்டத்தை அச்சமயம் பயமுறுத்துவதில் பயனில்லை யென்று கண்டார். அவர்களுடன் தமாஷாகப் பேசிக் குஷிப்படுத்தத் தொடங்கினார். இதன் மூலமாக அவர்கள் அத்துமீறி வீட்டுக்குள் புகாமலும் வேறு தீய செயல்களில் இறங்காமலும் பார்த்துக்கொண்டார்.
ஆனால் இம்மாதிரி எத்தனை நேரம் சமாளிக்க முடியும்? ஜனங்கள் கலைந்து போகிற வழியாகக் காணவில்லை.
மிஸ்டர் அலெக்ஸாண்டர் யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தார். வீட்டின் பின்புற வழியாக ஒரு ஆளை அனுப்பிக் காந்திஜியிடம் ஒரு செய்தி சொல்லும்படி செய்தார். அந்தச் செய்தி இதுதான் :- “உங்கள் நண்பரின் வீட்டையும் வீட்டிலுள்ள உடைமைகளையும் உங்கள் குடும்பத்தாரையும் நண்பரின் குடும்பத்தாரையும் காப்பாற்ற விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் உடனே மாறுவேடம் பூண்டு இந்த வீட்டைவிட்டுத் தப்பிச் செல்வது அவசியம். இதைத் தவிர இந்தச் சமயத்தில் வேறு வழியே இல்லை ! ''
இந்தச் செய்தியைக் கேட்டதும் காந்திஜியின் மனத்தில் ஒரு போராட்டம் எழுந்தது. வெளியே போவதா இல்லையா என்பதுபற்றித்தான். கடைசியில் அலெக்ஸாண்டரின் யோசனைப்படி நடக்க முடிவு செய்தார். அதைக் குறித்து காந்திஜி தம் சுயசரிதத்தில் எழுதியிருப்பதாவது:-
''உயிருக்கு அபாயம் நேரிடலாமென்பது வெறும் உத்தேசமாக மட்டுமிருந்தபோது மிஸ்டர் லாப்டன் என்னைப் பகிரங்கமாக வெளிக் கிளம்பும்படி சொன்னார். அவருடைய யோசனையை நான் ஏற்றுக்கொண்டு நடந்தேன். அபாயம் நிச்சயம் என்னும் நிலைமை ஏற்பட்டபோது மற்றொரு நண்பர் நேர்மாறான யோசனைக் கூறினார். அதையும் நான் ஏற்று நடந்தேன். என் உயிருக்கு அபாயம் வரலாம் என்பதை முன்னிட்டே அப்படிச் செய்தேனோ, அல்லது என் நண்பரின் சொத்தையும் சொந்தக்காரர்களையும் காப்பாற்றுவதின் பொருட்டா, அல்லது என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அபாயம் நேரிடாதிருக்கும் பொருட்டா என்று யார் கூற முடியும்? முதலிலே ஜனக்கூட்டத்தை நான் தைரியமாக எதிர்த்ததும், பின்னர் மாறுவேடம் பூண்டு அக் கூட்டத்தினின்று தப்பியோடியதும் இரண்டும் சரியானவை யென்று யார் நிச்சயமாகச் சொல்லமுடியும்?''
காந்திஜி தப்பித்துச் செல்வது என்று முடிவு செய்ததும் அது சம்பந்தமான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தினார். உடம்பின் காயம், வலியெல்லாம் அந்தப் பிரயத்தனத்தில் மறந்து போய்விட்டன. இந்தியப் போலீஸ் சேவகனைப்போல் உடை தரித்துக்கொண்டார். நமது சென்னை மாகாணத்தில் வழங்கும் அங்கவஸ்திரம் ஒன்றை ஒரு தட்டின் மீது சுற்றி அதைத் தலைக்குக் கவசமாக அணிந்துகொண்டார். (மதராஸ் அங்க வஸ்திரத்தின் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம் ! அது மகாத்மா காந்தியின் தலையின் மேல் அவருக்குப் பாதுகாப்பாக விளங்கிய தல்லவா?) அலெக்ஸாண்டரின் திட்டப்படி இரகசியப் போலீஸைச் சேர்ந்த இருவர் காந்திஜியை வெளியில் பத்திரமாக அழைத்துப் போவதற்காக வீட்டுக்குள் வந்தார்கள். அவர்கள் முகத்துக்கு வர்ணம் பூசிக்கொண்டு இந்திய வியாபாரிகளைப் போல் வேஷம் தரித்திருந்தார்கள்.
வீட்டுக்குப் பக்கத்திலிருந்த குறுக்குச் சந்தில் வெளியேறி ஒரு சாமான் கிடங்கில் புகுந்து சாக்கு மூட்டைகளின் வழியாக இருட்டில் தட்டுத் தடுமாறிக் கடைசியில் வீதிக்கு வந்து சேர்ந்தார்கள். அந்தக் கிடங்கின் வாசலிலேயும் ஜனக்கூட்டம் நிறைந்திருந்தது. ஆனால் கிடங்கிலிருந்து வெளிவந்தவர்களில் காந்திஜி இருப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அனைவருடைய கவனமும் ரஸ்டம்ஜியின் வீட்டு வாசலிலேயே இருந்தது. அங்கே மிஸ்டர் அலெக்ஸாண்டர் உயரமான ஒரு படிக்கட்டில் நின்று கொண்டு ஜனக்கூட்டத்தோடு தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தார். சமய சந்தர்ப்பத்துக்கேற்ப அவர் ஒரு பாடல் இட்டுக் கட்டி அதைப் பாடியும் காட்டினார்.
''புளிப்பு இலந்தை மரத்தின்மீது
பொல்லாத காந்தியைத் தூக்குப்போடு!''
என்பது அந்தப் பாட்டின் பல்லவி. இதை மிஸ்டர் அலெக்ஸாண்டர் முறை வைத்துப் பாட, ஜனக் கூட்டமும் அவருடன் சேர்ந்து உற்சாகமாகப் பாடியது !
ஜனங்களின் கவனத்தை இவ்விதம் மிஸ்டர் அலெக்ஸாண்டர் கவர்ந்திருக்கையில், காந்திஜியும் இரகசியப் போலீஸ் துணைவர்களும் அக் கூட்டத்தின் வழியாகப் புகுந்து சென்று தெருக் கோடியில் தயாராய் நின்ற வண்டியில் ஏறிப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
காந்திஜி பத்திரமாய் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தார் என்ற செய்தி வந்த தும் மிஸ்டர் அலெக்ஸாண்டரின் குரல் மாறியது. ''நல்லது. பறவை கூட்டிலிருந்து தப்பி ஓடி விட்டது! நீங்கள் யாருக்காக இங்கே வந்து காத்திருக்கிறீர்களோ அவர் இந்த வீட்டில் இல்லை. இனிமேல் உங்களுடைய வீட்டுக்குத் திரும்பிப் போகலாம்!'' என்று அங்கே கூடியிருந்தவர்களைப் பார்த்து உரத்த குரலில் கூறினார்.
கூட்டத்தில் சிலர் அவர் மேல் கோபங் கொண்டார்கள், சிலர் அவருடைய வார்த்தையை நம்பாமல் சிரித்தார்கள்.
''நல்லது ; உங்களுக்கு என் பேச்சில் நம்பிக்கை இல்லா விட்டால் உங்களுடைய பிரதிநிதிகளாக இரண்டு பேரை நியமனம் செய்யுங்கள். அவர்களை நானே வீட்டுக்குள் அழைத்துப் போகிறேன். காந்தியை அவர்கள் கண்டுபிடித்து விட்டால் உங்களிடம் அவரை ஒப்படைத்து விடுகிறேன். காந்தி இந்த வீட்டில் இல்லையென்று நிச்சயமானால் நீங்கள் எல்லாரும் திரும்பிப் போய் விடவேண்டும். ரஸ்டம்ஜியின் வீட்டுக்கோ காந்தியின் குடும்பத்தாருக்கோ நீங்கள் தீங்கு செய்ய விரும்ப வில்லையல்லவா? அவர்கள் மீது நீங்கள் கோபம் கொள்ளக் காரணம் ஒன்றும் இல்லையே '' என்று சொன்னார் மிஸ்டர் அலெக்ஸாண்டர்.
ஜனங்கள் அலெக்ஸாண்டர் கூறிய யோசனைக்கு இணங்கினர், ரஸ்டம்ஜியின் வீட்டைச் சோதனை போடப் பிரதிநிதிகள் பொறுக்கப் பட்டார்கள். மிஸ்டர் அலெக்ஸாண்டர் அவர்களை அழைத்துக்கொண்டு போனார். வீட்டின் மூலை முடுக்கெல்லாம் அவர்கள் சோதனை போட்டுவிட்டு வந்து ''காந்தி இல்லை!'' என்று தெரிவித்தார்கள். கூட்டத்தில் பெரும்பாலோர் மிஸ்டர் அலெக்ஸாண்டரின் சாமர்த்தியத்தைப் பாராட்டிப் பேசிக் கொண்டு வீடு திரும்பினார்கள். ஒருசிலர் கோபத்தினால் குமுறிக் கொண்டும் திரும்பிச் சென்றார்கள்.
தம்பி! உலகத்தையும் மானிடரின் வாழ்க்கையையும் இயக்கிவரும் நியதி ஒன்று இருப்பதாகப் பெரியோர் கூறு கிறார்கள். அதைத் தெய்வ சித்தம் என்றும் கடவுளின் கருணை என்றும் பெயர் கொடுத்து அழைக்கிறார்கள். அத்தகைய தெய்வ சித்தத்தின் நியதியினாலேயே தான் முதலில் மிஸ்ஸஸ் அலெக்ஸாண்டரும் பின்னர் மிஸ்டர் அலெக்ஸாண்டரும் காந்திஜியைக் காப்பாற்றும் விஷயத்தில் அவ்வளவு சிரத்தை கொண்டிருக்க வேண்டும். அவர்கள் ''நமக்கென்ன வந்தது?'' என்று அலட்சியமாக விட்டிருந்தால், அன்றைய தினம் காந்தியின் உயிருக்கு அபாயம் நேர்ந்திருந்தால் - ஆகா ! இந்த மானிலமும் மன்னுயிரும் இந்தியாவும் இந்தியர்களும் எவ்வளவு மகத்தான நஷ்டத்தை அடைந்திருப்பார்கள்?
-------------
சமீபத்தில் நடந்த மகா யுத்தத்தின் ஆரம்பத்தில் மிஸ்டர் நெவில்லி சேம்பர்லின் என்பவர் பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்தாரல்லவா? இவருடைய தந்தை மிஸ்டர் ஜோஸப் சேம்பர்லின் என்பவர் அப்போது பிரிட்டிஷ் மந்திரி சபையில் குடியேற்ற நாட்டு மந்திரியாகப் பதவி வகித்தார். டர்பனில் காந்திஜி இறங்கிய அன்று நடந்த சம்பவங்களைக் கேள்விப் பட்டதும் அவர், ''காந்தியைத் தாக்கியவர்களைக் கைது செய்து அவர்கள் மீது வழக்கு நடத்தவும்'' என்று நேட்டால் சர்க்காருக்குத் தந்தி அடித்தார்.
உடனே நேட்டால் சர்க்காரின் அட்டர்னி ஜெனரலான மிஸ்டர் எஸ்கோம்ப், காந்திஜியைக் கூப்பிட்டு அனுப்பினார். காந்திஜிக்கு நேர்ந்த கஷ்டங்களுக்காகத் தமது வருத்தத்தை யும் அநுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார். பிறகு அவர் கூறியதாவது:- 'கப்பலிலிருந்து இரவு நேரத்தில் இறங்கும்படி நான் சொல்லி அனுப்பினேன். அதைக் கேட்டு நடந்திருந்தால் இந்தக் கஷ்டங்கள் நேர்ந்திரா. ஆனால் மிஸ்டர் லாப்டனுடைய யோசனைப்படி நடந்து அதனால் நேரும் கஷ்டங்களை அநுபவிக்க உறுதி கொண்டிருந்ததை நான் பாராட்டுகிறேன். அம்மாதிரி நடந்து கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு என்பதையும் ஒத்துக் கொள்கிறேன். இப்போது உங்கள் விருப்பம் என்ன? உங்களைத் தாக்கியவர்களைக் குறித்து அடையாளம் சொல்ல முடியுமானால் அவர்களைக் கைது செய்து வழக்கு நடத்தத் தயாரா யிருக்கிறேன். வழக்கு நடத்த வேண்டும் என்று மிஸ் டர் சேம்பர்லினிடமிருந்து தந்தி வந்திருக்கிறது.''
இதற்குக் காந்திஜி பின்வருமாறு பதில் அளித்தார் : ''யார் மீதும் வழக்கு நடத்த எனக்கு விருப்பம் இல்லை. இரண்டொரு மனிதர்களை நான் அடையாளங் கண்டுபிடித்துச் சொல்ல முடியும். அதனால் பயன் என்ன? அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதில் எனக்குத் திருப்தி கிடை யாது. என்னைத் தாக்கியவர்கள் மீது எனக்குக் கோபம். இல்லை; அவர்கள் மீது நான் குற்றம் சொல்லவும் மாட்டேன் - குற்றம் உங்களைப் போன்ற சமூகத் தலைவர்களுடையது. நீங்கள் ஜனங்களுக்குச் சரியான வழி காட்டி யிருக்கவேண்டும். அப்படிச் செய்ய நீங்கள் தவறி விட்டீர்கள். யாருக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்க நான் விரும்பவில்லை. இந்தியாவில் நான் இருந்தபோது நேட்டால் வெள்ளைக்காரர்கள் மீது ஏதோ அவதூறுப் பிரசாரம் செய்ததாக நம்பி அவர்கள் இம்மாதிரி நடந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையை உணரும்போது,
அவர்களே தங்களுடைய செயலுக்காக வருந்துவார்கள்.''
இதைக் கேட்டதும் மிஸ்டர் எஸ்கோம்புக்கு ஒரே வியப்பாய்ப் போய்விட்டது. காந்திஜியிடம் அவருக்கு ஏற்கெனவே இருந்த மதிப்பு இன்னும் உயர்ந்தது.
''இப்போது நீங்கள் சொன்னதை எழுத்து மூலமாக எழுதித் தருவீர்களா? ஏனெனில் தங்களுடைய விருப்பம் இது வென்று மிஸ்டர் சேம்பர்லினுக்கு நான் அறிவித்து விடவேண் டும். ஆனால் அவசரப்பட்டு நீங்கள் எழுதிக் கொடுக்கவேண்டாம். திரும்பிச் சென்று மிஸ்டர் லாப்டனையும் இன்னும் உங்களுடைய நண்பர்களையும் கலந்து கொண்டு முடிவு செய்யலாம். முடிவு செய்த பிறகு எனக்கு எழுதித் தெரிவித்தால் போதும். ஆனால் ஒரு விஷயம் நிச்சயமாகச் சொல்வேன். இப்போது நீங்கள் சொன்னதுபோல் உங்களைத் தாக்கியவர்கள் மீது வழக்குத் தொடராமல் விட்டீர்களானால், நேட்டாலில் அமைதியை நிலை நாட்டுவதற்குப் பெரிதும் உதவியாயிருக்கும் ! '' என்று மிஸ்டர் எஸ்கோம்ப் சொன்னார்.
''வந்தனம் ! ஆனால் இது விஷயமாக நான் யாரையும் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை. தங்களிடம் வருவதற்கு முன்னாலேயே இதைப்பற்றி நன்றாக ஆலோசித்து முடிவு செய்து விட்டேன். இந்த நிமிஷமே தாங்கள் கேட்ட படி எழுதிக் கொடுக்கத் தயாராயிருக்கிறேன் " என்றார் காந்திஜி.
ஆம்; காந்திஜி கப்பலை விட்டு இறங்குவதற்கு முன்னாலேயே கப்பல் உத்தியோகஸ்தர்களிடம் சம்பாஷிக்கும்போது, ”எனக்கு வெள்ளைக்காரர்கள் மீது தனிப்படக் கோபம் கிடையாது. அவர்கள் எனக்குத் தீங்கு செய்தாலும் நான் அவர்களுக்குத் திருப்பித் தீங்கு செய்ய முயலமாட்டேன்'' என்று சொல்லி யிருந்தார் அல்லவா?
அந்த வார்த்தையை இப்போது நிறைவேற்றினார். மிஸ்டர் எஸ்கோம்ப் கேட்டபடி, ''வழக்குத் தொடர வேண்டிய தில்லை '' என்று வாக்குமூலம் எழுதிக் கொடுத்தார்.
* * *
காந்திஜி போலீஸ் ஸ்டேஷனை விட்டு வீட்டுக்குச் சென்ற போது மிஸ்டர் அலெக்ஸாண்டர் இரண்டு போலீஸ் சேவகர்களை அவருடைய பாதுகாப்புக்காக அனுப்பிவைத்தார். ஆனால் வெகு சீக்கிரத்திலேயே போலீஸ் பாதுகாப்புத் தேவையில்லாத நிலைமை ஏற்பட்டு விட்டது.
'நேட்டால் அட்வர்டைஸர் ' என்னும் பத்திரிகையின் பிரதிநிதி காந்திஜியைப் பார்க்க வந்தார். இந்தியாவில் காந்திஜி செய்த காரியங்களைப் பற்றியும் பேசிய பேச்சுக்களைப் பற்றியும் பல கேள்விகள் கேட்டார். ஸர் பிரோஸிஷா மேத்தாவின் யோசனைப்படி காந்திஜி இந்தியாவில் எல்லா இடங்களிலும் தமது பிரசங்கங்களை எழுதிப் படித்திருந்தார். அவ்விதம் செய் தது இப்போதும் மிகவும் உபயோகமா யிருந்தது. தமது பேச் சுக்களின் நகல்களைக் காந்திஜி மேற்படி பத்திரிகைப் பிரதிநிதி யிடம் கொடுத்து, ''இந்தியாவில் என் பேச்சுக்களில் எதைப் பற்றியாவது மிகைப்படுத்திச் சொல்லி யிருக்கிறேனா, தென்னாப்பிரிக்காவில் பகிரங்கமாகச் சொல்லாத எந்த விஷயத்தையாவது இந்தியாவில் சொல்லியிருக்கிறேனா,-நீரே பார்த்துக் கொள்ளும் !'' என்றார். பிரசங்கங்களின் நகல்கள், துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரைகள் ஆகிய வற்றையும் மேற்படி பத்திரிகைப் பிரதிநிதியிடம் கொடுத்தார். அவற்றில் தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரரைப்பற்றிக் கடுமையாகவோ அவதூறாகவோ ஒரு வார்த்தையும் இல்லை என்று பத்திரிகைப் பிரதிநிதி தெரிந்து கொண்டார். மற்றும், 'கோர் லாண்டு', 'நாடேரி ' கப்பல்களில் வந்த பிரயாணிகளைத் தாம் திரட்டிச் சேர்த்துக் கொண்டு வரவில்லை யென்றும், கப்பல் ஏறுவதற்கு முன்னால் அவர்களைத் தமக்குத் தெரியவே தெரியாது என்றும் ஆதாரங்களுடன் நிரூபித்தார். மேற்படி கப்பல்களில் வந்தவர்களில் பலர் ஏற்கெனவே தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர்கள், தாய் நாட்டுக்குச் சென்று திரும்புகிறவர்கள் என்றும், இன்னும் பலர் நேட்டாலில் குடியேறும் உத்தேசம் இல்லாதவர்கள், டிரான்ஸ்வாலுக்குப் போகிறவர்கள் என்றும் எடுத்துக் காட்டினார்.
இந்த விவரங்களை யெல்லாம் மேற்படி பத்திரிகைப் பிரதிநிதி தம்முடைய பத்திரிகையில் வெளியிட்டார். இத்துடன், காந்திஜி தம்மைத் தாக்கியவர்கள் மீது வழக்குத் தொடர மறுத்து விட்டார் என்னும் செய்தியும் பிரசுரமாயிற்று. இந்த விவரங்களினால் டர்பன் ஐரோப்பியரின் மனோபாவம் மாறிவிட் டது. அவர்கள் தங்களுடைய நடத்தையைக் குறித்து அவமானப் படலாயினர். பல பத்திரிகைகள் காந்திஜி குற்றமற்றவர் என்று தீர்ப்புக் கூறி ஜனக் கூட்டத்தின் செயலைக் கண்டித்தன. இவ்வாறு டர்பன் வெள்ளைக்காரர்களின் பலாத்காரமும் காந்தி ஜியின் அஹிம்சையும் தென்னாப்பிரிக்கா இந்திய சமூகத்துக்கு ஒரு புதிய கெளரவத்தை அளித்தன. இந்தியர்களின் உரிமைப் போராட்டத்துக்கும் அதனால் சாதகம் ஏற்பட்டது. இந்தியர்களும் அதிகத் தன்மதிப்பு உணர்ச்சி பெற்றார்கள்.
-------------
காந்திஜி கப்பலிலிருந்து இறங்கிய அன்று நடந்த விபரீத சம்பவங்களின் கொந்தளிப்பு விரைவிலேயே அடங்கிவிட் டது. சில தினங்களுக் கெல்லாம் அவருடைய தினசரி வாழ்க்கை பழைய ரீதிக்கு வந்தது. வக்கீல் தொழிலில் வருமானம் மட்டும் அதிகம் வரத் தொடங்கியது. ஆனால் அதைக் காந்திஜி அதிகமாகப் பொருட்படுத்தவில்லை. தம் வாழ்க்கையைப் பொது ஊழியத்துக்கு மேலும் மேலும் அதிகமாக உபயோகப்படுத்த வேண்டும் என்னும் ஆசை அவர் உள்ளத்தில் வளர்ந்து வந்தது. பொது வேலையில் ஸ்ரீ மனுசுக்லல் நாஸார் காந்திஜிக்குப் பெரிதும் உதவி செய்தார்.
காந்திஜி இல்லாத சமயத்தில் சேத் ஆதம்ஜி மியாகான் தமது கடமையை நன்கு நிறைவேற்றி யிருந்தார். நேட்டால் இந்தியக் காங்கிரஸுக்கு ஆயிரம் பவுனுக்கு மேல் நிதி சேர்த்திருந்தார். காந்திஜி திரும்பி வந்த தினத்தில் நடந்த சம்பவத்தின் பயனாக இந்திய சமூகத்தினிடையே பெரிதும் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தபடியால் அதைப் பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் நிதியை 5000 பவுனாகப் பெருக்கினார். இதைக் கொண்டு ஒரு வீடு வாங்கி வாடகைக்கு விடப்பட்டது. இவ்விதமாக நேட் டால் இந்தியக் காங்கிரசுக்கு நிரந்தர சொத்து ஏற்பட்டது.
இம்மாதிரி பொது ஸ்தாபனங்களுக்கு நிரந்தர சொத்து அதிகம் சேர்த்து வைப்பது பிசகு என்பது காந்திஜி பிற்காலத்தில் கொண்ட உறுதியான அபிப்பிராயம். காந்திஜி தென்னாப் பிரிக்காவை ஒருவழியாக விட்டு விட்டு இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு நேட்டால் காங்கிரஸின் சொத்து கோர்ட்டில் வழக்கு நடப்பதற்குக் காரணமாயிற்று. இதுவும் இன்னும் பல பொது ஸ்தாபன அநுபவங்களும் காந்திஜியின் மனத்தில், “நிரந்தர நிதிகளைக் கொண்டு பொது ஸ்தாபனங்களை நடத்துதல் பெருந் தவறு '' என்ற அபிப்பிராயத்தை உறுதிப் படுத்தியது. இதைப்பற்றிக் காந்திஜி எழுதியிருப்பதாவது:-
''ஒரு பொது ஸ்தாபனத்தின் நிரந்தர நிதியிலேயே அதன் தார்மிக வீழ்ச்சிக்கு வித்து இருக்கிறதென்பதில் ஐயமில்லை. பொது ஸ்தாபனம் எனில், பொது ஜனங்களின் சம்மதியுடன் பொது ஜனங்களின் பணத்தைக் கொண்டு நடக்கும் அமைப்பு என்று பொருள். அத்தகைய ஸ்தாபனத்துக்குப் பொது ஜனங்களின் ஆதரவு எப்போது இல்லாமற் போகிறதோ, அப்போது அந்த ஸ்தாபனம் இருப்பதற்கே உரிமை இழந்ததாகிறது. நிரந்தர நிதியைக் கொண்டு நடத்தப்படும் அமைப்புகள் பொது ஜன அபிப்பிராயத்தை மதியாமல் அதற்கு மாறாக அடிக்கடி காரியம் நடத்துவதைக் காண்கிறோம். நமது தேசத்தில் எங்கும் இது சர்வ சாதாரணம். மத ஸ்தாபனங்கள் என்று கூறப் படும் அமைப்புகளில் சில கணக்குச் சொல்வதே கிடையாது. தர்மகர்த்தர்கள் சொத்துக்குச் சொந்தக்காரர்களாகி விட்டார்கள். அவர்கள் யாருக்கும் கணக்குச் சொல்லக் கடமைப் பட்டவர்களல்லர். இதையெல்லாம் பார்க்கும்போது, அன்றன்று வரும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதே பொது ஸ்தாபனங்களின் இலட்சியமாயிருக்க வேண்டுமென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்.
''நிரந்தரமான கட்டிடங்கள் இன்றி நடைபெறுவதே சாத்தியமில்லாத ஸ்தாபனங்கள் சில இருக்கின்றன. அவற்றிற்கு நான் மேற்கூறியவை பொருந்தா. பொது ஸ்தாபனங்களின் நடைமுதல் செலவுகள் வருஷா வருஷம் கிடைக்கும் சந்தாத் தொகையைக் கொண்டே நடைபெற வேண்டு மென்பது தான் என்னுடைய கருத்து.''
ஒரு பக்கம் பொது ஊழியத்தில் காந்திஜி ஈடுபட்டிருக்கையில் அவருடைய குடும்ப வாழ்க்கை சம்பந்தமான பல பிரச்னைகள் எழுந்தன. பத்து வயதான மருமகனும், ஒன்பது வயதும் ஐந்து வயதும் உள்ள புதல்வர்கள் இருவரும் அவருடன் வந்திருந்தார்கள். இந்த மூன்று சிறுவர்களையும் படிக்க வைப்பது. எப்படி? காந்திஜி பாரிஸ்டர் ஆகையால், ஐரோப்பியக் குழந்தைகளுக்கு என்று ஏற்பட்ட பள்ளிக்கூடங்களில் அவருடைய குழந்தைகளைச் சேர்த்துக் கொண்டிருப்பார்கள். அதை அவர் விரும்பவில்லை. இந்தியக் குழந்தைகளுக்கு என்று தனியாகக் கிறிஸ்துவப் பாதிரிமார்கள் நடத்திய பள்ளிக்கூடத்தில் சேர்க்கவும் விரும்ப வில்லை. ஆதலால் குழந்தைகளுக்குக் காந்திஜியே கல்வி கற்பிக்க முயன்றார். ஆனால் அதற்குப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை. எனவே, ஆங்கில பாஷை கற்பிப்பதற்கு ஓர் ஆங்கில உபாத்தியாயினியை ஏற்படுத்திவிட்டு மற்ற விஷயங்களைத் தாமே கற்பித்தார். காந்திஜி தம்முடைய குழந்தைகள் யாரையும் தென்னாப்பிரிக்காவிலோ இந்தியாவிலோ பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பவே யில்லை. அவருடைய மூத்த புதல்வன் பிற்காலத்தில் தன்னுடைய சொந்தப் பொறுப்பில் இந்தியாவிலுள்ள சர்க்கார் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தான், மற்ற மூன்று புதல்வர்களும் காந்திஜியிடமே பெரும்பாலும் கல்வி கற்றுக் கொண்டார்கள். தம்முடைய புதல்வர்களுக்குக் கல்வி கற்பித்ததிலும் பின்னால் ஏற்பட்ட போனிக்ஸ் ஆசிரமத்தில் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்ததி லும் காந்திஜி பல அநுபவங்களை அடைந்தார். இவற்றைக் கொண்டு இந்தியக் குழந்தைகளுக்கு எந்த முறையில் கல்வி கற்பிக்க வேண்டும் என்பது பற்றி அவர் உறுதியான முடிவுகள் செய்யக் கூடியதாயிற்று. அந்த வாழ்க்கை அநுபவங்களும் முடிவுகளும் காந்திஜியின் ஆதாரக் கல்வித் திட்டத்துக்கு ஒரு நல்ல ஆதாரமா யமைந்தன.
* * *
வக்கீல் தொழிலிலும் குடும்பப் பிரச்னைகளிலும் காந்திஜிக்கு வேண்டிய அலுவல்கள் இருந்தும் அவருடைய மனம் நிம்மதி யடையவில்லை. சகோதர மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டு மென் னும் ஆர்வம் அவருடைய உள்ளத்தில் வளர்ந்து வந்தது. ஒரு நாள் ஒரு குஷ்டரோகி காந்திஜியின் வீட்டுக்குப் பிச்சை கேட்க வந்தான். அவன் ஒப்பந்தத் தொழிலாளியாக வந்து மேற்படி கொடிய நோய் காரணமாக வேலை இழந்து நிர்க்கதியானவன். அவனுக்குப் பிச்சை போட்டுத் துரத்தி விடக் காந்திஜி விரும்பவில்லை. வீட்டில் சில நாள் இருக்கும்படிச் சொல்லி அவனுடைய புண்களை அலம்பிக் கட்டிச் சிகிச்சை செய்தார். வீட்டிலேயே அவனை வைத்துக் கொண்டிருத்தல் மற்றவர்களுக்குத் தொல்லையா யிருந்தது. எனவே கொஞ்சம் உடம்பு குணமானதும் ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கென் று ஏற்பட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.
அது முதல் நோயாளிக்குப் பணிவிடை செய்யும் ஆர்வம் காந்திஜியின் மனத்தில் வளர்ந்து வந்தது. பார்ஸி ரஸ்டம்ஜி தர்மத்துக் கென்று கொஞ்சம் சொத்து ஒதுக்கி வைத்தார். அதைக் கொண்டு காந்திஜி ஏழைகளுக்காகத் தர்ம வைத்திய சாலை ஒன்று ஏற்படுத்தினார். ஏழைகளுக்கு உதவி செய்வதில் பற்றுக் கொண்ட டாக்டர் பூத் மேற்படி வைத்தியசாலையைக் கவனித்துக் கொண்டார். அந்த வைத்தியசாலையில் காந்திஜி தினம் இரண்டு மணி நேரம் வேலை செய்தார். நோயாளிகளிடம் பேசி அவர்களுடைய நோய்களைத் தெரிந்து கொண்டு டாக்டர் பூத்திடம் சொல்லி அவர் எழுதிக்கொடுக்கும் முறைப் படி மருந்துகளைக் கலந்து கொடுத்து வந்தார். சுருங்கச்சொன்னால், 'கம்பவுண்டர்' வேலை பார்த்தார். இந்தத் தொண்டு காந்திஜிக்கு மிக்க மன நிம்மதி அளித்தது. அதோடு ஏழை இந்தியர்களுடன் கலந்து நெருங்கிப் பழகுவதற்குச் சந்தர்ப்பங்கள் அதிகம் கிடைத்தன.
ஆரம்பத்தில் காந்திஜி தென்னாப்பிரிக்காவில் மேனாட்டு முறையில் நாகரிக வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தார். தொண்டில் பற்று அதிகமாக ஆக ஆடம்பரத்தில் வெறுப்பு மிகுந்தது. வாழ்க்கையை எளிமைப்படுத்த ஆரம்பித்தார். வண்ணானிடம் துணிகளைச் சலவைக்குப் போடுவ தில் பணம் அதிகச் செலவானதுடன் சமயத்தில் துணிகள் வருவதில்லை யாதலால் டஜன் கணக்கில் சட்டைகளும் காலர்களும் தேவையாயிருந்தன. எனவே சலவைச் சாமான்களும் இஸ்திரிப்பெட்டியும் வாங்கி வைத்துக்கொண்டு காந்திஜி தாமே துணிகளை வெளுத்துக் கொள்ளத் தொடங்கினார். முதன் முதலில் சலவை சரியாக வரவில்லை. கழுத்துப் பட்டைக்கு இஸ்திரி போட்டதில் பசை மாவு அதில் அதிகமாக ஒட்டிக் கொண்டு கோர்ட்டுக்குப் போன பிறகு உதிர்ந்து வீழ ஆரம்பித்தது. மற்ற பாரிஸ்டர்கள் இதன் பொருட்டுக் காந்திஜியைப் பார்த்துச் சிரித்தார்கள். ஆனால் கேலிக்கும் பரிகாசத் துக்கும் பயப்படும் சுபாவம் காந்திஜிக்கு எப்போதுமே கிடையாது. சிரித்தவர்களைப் பார்த்து, ''என் காலரை நானே சலவை செய்து இஸ்திரி போட்டதில் இப்படி மா உதிர்கிறது. அது உங்களுடைய குதூகலத்துக்குக் காரணமாயிருப்பதில் எனக்கு இரு மடங்கு சந்தோஷம் '' என்றார் காந்திஜி.
''எதற்காக நீங்களே சலவை செய்து கொள்ள வேண்டும்? இந்த ஊரில் சலவைச் சாலை இல்லையா? '' என்று காந்திஜியின் பாரிஸ்டர் நண்பர்கள் கேட்டார்கள்.
''இருக்கின் றன! அதனால் என்ன? நம்முடைய சொந்தக் காரியங்களுக்கு எதற்காகப் பிறரை நம்பி யிருக்கவேண்டும்? நம்முடைய காரியங்களை நாமே செய்து கொள்வதுதானே நல்லது? '' என்று காந்திஜி பதில் அளித்தார்.
கொஞ்ச நாளைக்கெல்லாம் காந்திஜி சலவைக் கலையில் நன்கு தேர்ந்து விட்டார். பின்னால் ஒருசமயம் ஸ்ரீ கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு விஜயம் செய்தார். கோகலேயிடம் அவருடைய குரு ஸ்ரீ ரானடே அன்பளிப்பாகக் கொடுத்த அங்கவஸ்திரம் ஒன்று இருந்தது. முக்கியமான சந்தர்ப்பங்களில் ஸ்ரீ ரானடே அளித்த அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொள்வது ஸ்ரீ கோகலே யின் வழக்கம். தென்னாப்பிரிக்காவில் ஜோகானிஸ்பர்க் இந்தியர்கள் கோகலேக்கு ஒரு விருந்து நடத் தினார்கள். அதற்கு மேற்படி அங்க வஸ்திரத்தை அணிந்து கொண்டுபோகக் கோகலே விரும்பினார். ஆனால் அங்கவஸ்திரம் மடிப்புக் கலைந்து போயிருந்தது. இது குறித்துக் கோகலே அடைந்த கவலையைக் காந்திஜி தெரிந்துகொண்டு தம்முடைய கைவரிசையைக் காட்டுவதாகச் சொன்னார்.
'' அரசியல் காரியங்களுக்கும் வக்கீல் வேலைக்கும் உம்மை நம்பலாம். ஆனால் சலவைத் தொழிலுக்கு எப்படி நம்ப முடியும்? அங்கவஸ்திரத்தைக் குட்டிச் சுவராக்கி விட்டால் என்ன செய்வேன்? '' என்றார் கோகலே.
காந்திஜி மேலும் பிடிவாதம் பிடித்து அங்கவஸ்திரத்தை வாங்கிக் கொண்டார். சலவைத் தொழிலாளியைவிட நன்றாய் இஸ்திரி செய்திருப்பதாகக் கோகலே மகிழ்ச்சியுடன் அத்தாட்சி கொடுத்தார்.
சலவைத் தொழிலைப்போலவே தலைமயிர் வெட்டிக் கொள் ளும் வேலையையும் காந்திஜி கற்றுக் கொண்டார் முதலில் இந்தக் காரியமும் காந்திஜியை அவருடைய சகாக்களின் நகைப்புக்கு உள்ளாயிற்று. '' உமது மயிருக்கு என்ன ஆபத்து வந்தது? எலி கடித்து விட்டதா? '' என்று நண்பர்கள் சிரித்துக் கொண்டே கேட்டார்கள். ஆனால் கொஞ்ச நாளைக் குள் தலை மயிரைத் தாமே வெட்டிக் கொள்வதிலும் காந்திஜி நல்ல திறமை அடைந்தார்.
தம்பி! இதெல்லாம் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சலவைத் தொழில், கூவரத் தொழில் உள்பட அறுபத்து நாலு கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் என்னும் விவரத்தை நினைப் பூட்டுகிற தல்லவா?
--------------
தென்னாப்பிரிக்காவில் 1899-ஆம் ஆண்டில் போயர் யுத்தம் ஆரம்பமாயிற்று. ஹாலந்து தேசத்திலிருந்து தென்னாப்பிரிக்காவில் போய்க் குடியேறியவர்கள் 'போயர்கள்' என்று அழைக்கப் பட்டார்கள். முதலில் இவர்கள் நேட்டாலில் அதிகமாகக் குடியேறி யிருந்தார்கள். நேட்டால் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தபிறகு போயர்களில் பெரும்பாலோர் உள்நாடு நோக்கிச் சென்று டிரான்ஸ்வால் ராஜ்யத்தை ஸ்தாபித்துக் கொண்டார்கள். கொஞ்ச காலம் டிரான்ஸ்வால் ஏறக்குறைய சுதந்திர ரரஜ்யமாக இருந்து வந்தது. அப்போது தான் குரூகர் என்னும் போயர்ப் பிரமுகர் டிரான்ஸ்வால் குடியரசின் தலைவராக இருந்தார். குடியரசு என்று பெயர் இருந்தாலும் ஓரளவு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் தொடர்பு இருந்தது. ஆனால் டிரான்ஸ்வால் மீது பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஸ்திரப் படுத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் சர்க்கார் முயன்றபோது போயர்கள் அம்முயற்சியை எதிர்த்தார்கள், அதன் விளைவாகவே போயர் யுத்தம் மூண்டது.
இந்த யுத்தத்தில் தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்கள் என்ன கொள்கையை அனுசரிக்க வேண்டும் என்ற பிரச்னை எழுந்தது. காந்தி மகான் இது விஷயமாக ரொம்பவும் சிந்தனை செய்தார். அந்த நாளில் பிரிட்டிஷ் ஆட்சியின் நல்ல நோக்கத்தில் மகாத்மாவுக்கு நம்பிக்கை இருந்தது. உலகத்தின் முன்னேற்றத்துக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உதவி செய்கிறது என்று எண்ணினார். இந்தியாவிலும் தென்னாப்பிரிக்காவிலும் நடைபெறும் பட்சபாதங்களும் மற்ற அநீதிகளும் ஆங்காங் குள்ள தனிப்பட்ட இங்கிலீஷ்காரர்களின் காரியங்கள் என்றும், மொத்தத்தில் பிரிட்டிஷார் தர்ம நியாயமாகக் காரியம் செய்கிறவர்கள் என்றும் நம்பியிருந்தார். ஆகையால் போயர்களின் சுதந்திரக் கோரிக்கையில் காந்திஜிக்கு அநுதாபம் இருந்த போதிலும் தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் பிரிட்டிஷ் கட்சியிலேயே இருக்க வேண்டும் என்று நினைத்தார். தங்களுக்குச் சுதந்திரம் வேண்டு மென்று போராடும் போயர்கள் இந்தியர்களுக்காவது தென்னாப்பிரிக்காவின் சுதேசிகளுக்காவது சுதந் திரம் கொடுக்க விரும்ப வில்லை ; நியாயம் செய்யவும் முன் வருவதில்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சர்க்காரோ எல்லாருக்கும் சமநியாயம் வழங்குவதாகச் சொல்லிக் கொள்ளவாவது. செய்தார்கள். காந்திஜி தாக்கப்பட்ட செய்தி அறிந்ததும் ”தாக்கியவர்களைக் கைது செய்யவும் ” என்று ஜோசப் சேம்பர்லின் தந்தி அடித்தார் அல்லவா? இதிலிருந்து பிரிட்டிஷார் எப்போதும் நியாயமாக நடந்து கொள்ளா விட்டாலும் அவர்களுக்கு நியாய உணர்ச்சி இருந்தது என்றாவது ஏற்பட்டது. போயர்கள் விஷயத்திலோ இதுகூடச் சொல்வதற்கில்லை. அவர்கள் தென்னாப்பிரிக்காவில் வந்து குடியேறியவர்கள் தான். ஆயினும் தாங்கள் குடியேறிய பிரதேசம் தங்களுக்கே சொந்தம் என் று நினைத்து அவர்கள் நடந்து கொண்டார்கள்.
இதையெல்லாம் எண்ணிக் காந்திஜி போயர் யுத்தத்தின் போது பிரிட்டிஷ் கட்சியில் இருந்து தொண்டு செய்வதென்று. முடிவு செய்தார். 'பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரஜைகளுக்கு உள்ள பூரண உரிமைகளை நாம் கோருகிறோமல்லவா? ஆகையால் அந்த சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்கும் நாம் உதவி செய்தாக வேண்டும்'' என்று மற்ற இந்தியர்களுக்கு எடுத்துச் சொன்னார். யுத்த சேவை செய்ய முன் வந்த இந்தியர்களைக் கொண்டு 'ஆம்புலன்ஸ் படை' அமைத்தார். 'ஆம்புலன்ஸ் படை' என்றால் என்ன தெரியுமா, தம்பி? போர்க்களத்தில் போர் செய்கிறவர்கள் காயம் பட்டு விழுவார்கள் அல்லவா? அவர்களைத் தூக்கிக் கொண்டு வந்து இராணுவ முகாம் ஆஸ்பத்திரிகளில் சேர்ப்பது, அவசியமான ஆரம்ப சிகிச்சைகளைச் செய்வது முதலிய ஜீவகாருண்ய சேவைகளைச் செய்யும் படைக்கு 'ஆம்புலன்ஸ் படை' என்று பெயர். யுத்தம் செய்யும் படை வீரர்களைப் போலவே இவர்களும் ஆபத்துக்கு உட்பட்டாக வேண்டும். ஆனால் இவர்கள் யாரையும் கொல்ல வேண்டியதில்லை. காயம் பட்டுச் சாகக் கிடப்பவர்களுக்குப் பணிவிடை செய்து கூடுமானால் அவர்களைப் பிழைக்கச் செய்வது இவர்களுடைய வேலை. மொத்தத்தில் யுத்த சேவை என்றாலும், மிகச் சிறந்த ஜீவகாருண்யத் தொண்டாகும்.
காந்திஜி 'ஆம்புலன்ஸ் படை'க்கு இந்தியர்களைச் சேர்க்க ஆரம்பித்தபோது பலர் அவரை அதைரியப் படுத்தினார்கள். இந்தியர்கள் அபாயங்களைக் கண்டு அஞ்சும் கோழைகள் என் றும், தாற்காலிக சுயநலத்தைத் தவிர வேறு விசால நோக்கம் இல்லாதவர்கள் என்றும் அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் நம்பினார்கள். ஆகையால் காந்திஜியின் முயற்சியைப் பொது வாக ஆங்கிலேயர் ஆதரிக்கவில்லை. ஆனால் டாக்டர் பூத், மிஸ்டர் லாப்டன், மிஸ்டர் எஸ்கோம்ப் முதலிய சிலர் காந்திஜியை ஆதரித்து உற்சாகப் படுத்தினார்கள். சேவைப் படையில் சேர்ந்த இந்தியர்களுக்கு டாக்டர் பூத் பயிற்சி அளித்தார். யுத்தகாலத்தில் சேவை செய்யத் தகுந்தவர்கள் என்று வைத்தியர்களின் அத்தாட்சியும் வாங்கப் பட்டது. இவ்வளவுக்குப் பிறகு காந்திஜி போர்க்களத்தில் தொண்டு செய்ய இந்திய சேவைப் படைக்கு அனுமதி அளிக்கும்படி நேட்டால் சர்க்காருக்கு எழுதினார். சர்க்காரின் பதில் பளிச் சென்று வந்தது. ''மிக்க வந்தனம் ; ஆனால் தற்சமயம் உங்கள் ஊழியம் தேவை இல்லை !'' என்று சர்க்காரின் பதில் கூறியது.
இத்துடன் காந்திஜி சும்மா இருந்துவிட வில்லை. இந்தியர்களின் சேவையைச் சர்க்கார் ஒப்புக் கொள்ளும்படி செய்வ தற்கு மேலும் பிரயத்தனம் செய்தார். டாக்டர் பூத் அவர்களை அழைத்துக் கொண்டு நேட்டால் பிஷப் பாதிரியைப் போய்ப் பார்த்தார் ; விவரங்களைச் சொன்னார். இந்திய சேவைப் படையில் இந்தியக் கிறிஸ்துவர் பலர் இருக்கிறார்கள் என்னும் விவரத்தையும் அறிவித்தார். நேட்டால் பிஷப் காந்திஜியின் முயற்சிக்கு உதவி செய்வதாக வாக்களித்தார். நேட்டால் சர்க்காருக்கும் எழுதினார்.
இதற்கிடையில் போயர் யுத்தம் மிகக்கடுமையான நிலையை அடைந்தது. பிரிட்டிஷ் சர்க்கார் எதிர்பார்த்ததைக் காட்டிலும் போயர்கள் அதிகப் பிடிவாதமாகப் போராடினார்கள். இந்தியர்களின் யுத்த சேவையைச் சர்க்கார் அலட்சியம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது.
நாற்பது தலைவர்கள் உள்பட ஆயிரத்து நூறு இந்தியர்கள் அடங்கிய சேவைப் படை போர்க்களத்தில் சேவை செய்யச் சென்றது. இந்த ஆயிரம் பேரில் முந்நூறு பேர் சுதந்திர இந்தியர்கள், மற்றவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகள். இந்திய சேவைப் படை போர்க்களத்தில் நல்ல ஊழியம் செய்து பெயர் பெற்றது. சாதாரணமாகச் சேவைப் படையினர் துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால் ஸ்பியான் கோட் என்னுமிடத்தில் பிரிட்டிஷ் துருப்புக்கள் போயர்களால் முறியடிக்கப் பட்ட போது மிக நெருக்கடியான நிலைமை ஒன்று ஏற்பட்டது. போர்க்களத்திற்குச் சென்று காயம்பட்டவர்களைத் தூக்கி வெளி யேற்ற முடியுமா என்று பிரிட்டிஷ் தளபதி ஜெனரல் புல்லர் காந்திஜிக்குச் செய்தி அனுப்பினார். ஒரு கணமும் தயங்காமல் ''அப்படியே செய்கிறோம்!'' என்று காந்திஜி பதில் அனுப்பினார். பிறகு இந்திய சேவைப் படை துப்பாக்கிப் பிரயோகம் நடந்து கொண்டிருந்த போர்க் களத்திலேயே சேவை செய்ய ஆரம்பித்தது. காயம் பட்ட வீரர்களைச் சுமந்துகொண்டு சுமார் இருபத்தைந்து மைல் வரையில் நடந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வேண்டி யிருந் தது. இந்திய சேவைப் படையைச் சேர்ந்தவர்கள் சிறிதும் சுணங்காமல் இத்தகைய சேவைகளைச் செய்தார்கள். இவர்களால் ரண களத்திலிருந்து தூக்கிச் செல்லப்பட்டவர்களில் தளபதி உட்கேட் என்னும் பிரபல இராணுவ அதிகாரி ஒருவர்.
இவ்விதம் ஆறு வார காலம் இந்திய சேவைப் படை தொண்டு புரிந்தது. இதற்குள் பிரிட்டிஷ் சேனாதிபதி இங்கிலாந்திலிருந்து உதவிப் படை வரும் வரையில் மேலே முன்னேறு வதில்லை என்று தீர்மானித்து விட்டார். ஆகையால் இந்திய சேவைப் படை கலைத்துவிடப் பட்டது.
போயர் யுத்தத்தின் போது இந்தியர்கள் செய்த சேவையைப் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய சர்க்கார் பெரிதும் பாராட்டினார்கள். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் மதிப்பு அதிகமாயிற்று. ''நாம் எல்லாரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் புதல்வர்கள் தானே? வெள்ளைக்காரர் ஆனால் என்ன? இந்தியர் ஆனால் என்ன? '' என் னும் தோரணையில் தென்னாப்பிரிக்காப் பத்திரிகைகள் கூட இந்தியரின் சேவையைப் புகழ்ந்து எழுதின.
சேனாதிபதி ஜெனரல் புல்லர் இந்தியரின் போர்க்களச் சேவையைத் தமது அறிக்கைகளில் பாராட்டி யிருந்தார். சேவைப் படையின் தலைவர்களுக்கு யுத்த சன்மானப் பதக்கங்கள் அளித்து அவர்கள் கௌரவிக்கப்ப் பட்டனர்.
சாதாரண வெள்ளைக்காரர்களின் மனோ பாவமும் பெரிதும் மாறுத லடைந்து விட்டதாகக் காணப்பட்டது. யுத்தத்தின் போது இந்தியர்களும் வெள்ளைக்காரர்களும் சிநேக பாவம் கொண்டாடினார்கள். ஆயிரக்கணக்கான வெள்ளைக்கார சோல்ஜர்களுடன் இந்தியர்கள் நெருங்கிப் பழக நேர்ந்தது.
கஷ்டங்களும் சோதனைகளும் ஏற்படும் காலத்தில் மனித சுபாவம் சில சமயம் பெரிதும் மேன்மை அடைவதுண்டு. அதற்கு ஓர் நல்ல உதாரணம் அப்போது கிடைத்தது. காந்தி மகாத்மா எழுதியிருக்கிறார்:-
''சிவ்லி பாசறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம் அங்கு, லார்ட் ராபர்ட்ஸின் புதல்வர் லெப்டினண்ட் ராபர்ட்ஸ் படுகாய முற்று மரணமடைந்தார். அவர் உடலைப் போர்க்களத் திலிருந்து தூக்கிச் செல்லும் கடமை எங்கள் படைக்குக் கிடைத்தது. அன்று வறட்சி மிகுந்த தினம். ஒவ்வொருவரும் தண்ணீருக்குத் தவித்துக் கொண்டிருந்தனர். வழியில் தாகம் தணித்துக் கொள்ளக்கூடிய ஒரு சிறிய அருவி ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் முதலில் யார் அருவியில் தண்ணீர் அருந்துவது என்ற பிரச்னை ஏற்பட்டது. வெள்ளைக்காரப் போர் வீரர்கள் அருந்திய பின்னரே நாங்கள் அருவியில் இறங்குவதென்று முடிவு செய்திருந்தோம். ஆனால் அவர்கள் இதற்குச் சம்மதிக்க வில்லை ; எங்களை முதலில் தண்ணீர் குடிக்கும்படிச் சொன்னார்கள். இவ்வாறு, யார் முதலில் தண்ணீர் அருந்துவது என்பது குறித்து எங்களுக்குள் கொஞ்ச நேரம் போட்டி நடந்தது.''
காந்தி மகாத்மா தம்முடைய வாழ்க்கையில் நிகழ்ந்த நினைக்க நினைக்க இன்பந்தரும் ஞாபகங்களில் மேற்கூறிய சம்பவம் ஒன்று என்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
------------
தென்னாப்பிரிக்கா இந்திய சமூகத்தில் காந்திஜியின் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. அந்தச் செல்வாக்கைக் காந்திஜி சமூகத்தின் நன்மைக்காகவே பயன்படுத்தி வந்தார். இந்தியர்களின் உரிமைகளுக்காகச் சர்க்காரோடு போராடுவதுடன் அவர் நின்று விடவில்லை. இந்திய சமூகத்தில் குடிகொண்டிருந்த குறைபாடுகளைப் போக்கித் தூய்மைப் படுத்தவும் பெருமுயற்சி செய்தார். நம்மிடத்திலுள்ள குறை பாடுகளை மறைத்து மெழுகுவது காந்திஜிக்கு எப்போதும் பிடிப்பதில்லை. நம்முடைய உரிமைகளுக்காகப் போராடுவதில் எவ்வளவு சிரத்தை காட்டுகிறோமோ அவ்வளவு கடமைகளைச் செலுத்துவதிலும் ஊக்கம் காட்ட வேண்டும் என்பது காந்திஜியின் உறுதியான கொள்கை.
தென்னாப்பிரிக்கா இந்தியர்களைப் பற்றி வெள்ளைக்காரர்கள் அடிக்கடி சொல்லி வந்த ஒரு குறைபாடு இந்தியர்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாய் வைத்துக் கொள்ளுவதில்லை யென்பது தான். பொதுவாக இந்தியர்களிடம் இந்தக் குறை உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. நம்முடைய உடம்பையும் உடைகளையும் சுத்தமாய் வைத்துக் கொள்வதில் நாம் மிகுந்த சிரத்தை காட்டுவோம். உணவுப் பொருள் களின் விஷயத்தில் வெகு சுத்தமா யிருப்போம். ஆசார அனுஷ்டிப்பாகக் கடைப் பிடிப்போம். ஒரு நாள் உடுத்திய துணியை இன்னொரு நாள் உடுத்த மாட்டோம். தோய்த்து உலர்த்தித்தான் உடுத்திக் கொள்வோம். இல்லாவிட் டால் ' விழுப்பு' என்போம். ஒருவரை யொருவர் தொட்டால் தீட்டு என்போம். சாப்பிட்ட இடத்தைச் சாணமிட்டு மெழுகா விட்டால் இடம் சுத்தமான தாகக் கருத மாட்டோம். நன்றாகத் தேய்த்து வைத்த பாத்திரத்தை மறுபடியும் தண்ணீர் விட்டுக் கழுவுவோம். இப்படி யெல்லாம் சுத்தம், அசுத்தம், தீட்டு, தீண்டாமை முதலிய பல கட்டுப்பாடுகளை அனுசரிக்கும் நாம் வேறு சில முக்கியமான காரியங்களில் சுத்தம் - அசுத்தம் என்னும் உணர்ச்சியே இல்லாமல் நடந்து கொள்வோம். வீட்டுக் குள்ளிருக்கும் குப்பையை வாசலிலே போட்டு விட்டுத் திருப்தி யடைவோம். எச்சில் இலைகளைப் பக்கத்து வீட்டு ஓரமாகப் போட்டு விட்டுச் சும்மா இருப்போம். சாக்கடைத் தண்ணீர் நம் வீட்டுக்கு வெளியிலே போய்விட்டால் போதுமான து! வீதியிலோ கொல்லையிலோ சாக்கடைத் தண்ணீர் தேங்கிக் கிடந்து நாற்றம் எடுப்பதைக் கவனிப்பதில்லை. அதனால் எவ்வளவு சுகாதாரக் குறைவு என்பதையும் எண்ணிப் பார்ப்பதில்லை. நதிக் கரைகளையும் கோயில் குளங்களையும் மற்றும் பொது இடங்களையும் நம்முடைய ஜனங்கள் அசுத்தப்படுத்துவதைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை !
தென்னாப்பிரிக்காவில் வசித்த இந்திய சமூகத்தாரிடையிலும் இத்தகைய குறைபாடுகள் இருந்தன. இவற்றைக் குறித்து வெள்ளைக்காரர்கள் அடிக்கடி புகார் சொல்லி வந்தார் கள். அது காரண மாக இந்தியர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசினார்கள். அவர்கள் சொல்லுவதில் உண்மை இருக்கிறது. என்பதைக் காந்திஜி கண்டார்.
''எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு "
என்னும் கொள்கையைக் காந்தி மகான் பரிபூரணமாகக் கடைப்பிடிப்பவர். ஆகவே டர்பனில் வசித்த இந்தியர்களின் வீடு வாசல்களைத் தூய்மைப் படுத்துவதற்கும் தூய்மையாக, வைத்துக் கொள்ளும்படி செய்வதற்கும் பெரு முயற்சி தொடங்கினார். அந்த முயற்சிக்கு வேகம் கொடுப்பதற்கு ஒரு காரணம் ஏற்பட்டது. அதாவது டர்பனில் பிளேக் நோய் பரவத் தொடங்கியது. இந்தியர் வீடுகளின் சுகாதாரத்தைக் கவனிக்கும் விஷயத்தில் நகரசபை அதிகாரிகள் இந்திய சமூகத் தலைவர்களின் உதவியை நாடினார்கள். காந்திஜியும் மற்ற சமூகத் தலைவர்களும் டர்பனில் வசித்த ஒவ்வொரு இந்தியரின் வீட்டுக்கும் போய்ச் சோதனை போட்டார்கள். வீட்டுக்கு உள்ளும் புறமும் தூய்மைப்படுத்துவதற்குப் பிரயத்தனம் செய்தார்கள்: காந்திஜியும் அவருடைய சகாக்களும் மேற்கொண்ட பிரயத் தனத்தின் காரணமாக அதிகாரிகளின் வேலை எளிதாயிற்று. இந்திய சமூகம் பெருநன்மை அடைந்தது. பிளேக் முதலிய கொள்ளை நோய்கள் பரவும்போதெல்லாம் நிர்வாக அதிகாரிகள் பொறுமை இழந்து அளவு மீறிய கடும் முறைகளைக் கையாளுவது வழக்கம். அதனால் ஜனங்கள் பெருந் தொல்லைகளுக்கும் அல்லல்களுக்கும் ஆளாவார்கள். டர்பனில் பிளேக் நோய் தோன்றிய சமயத்தில் காந்திஜியின் முயற்சியால் இந்திய சமூ கத்தாரே முன் வந்து சகலவிதமான சுகாதார முறைகளையும் மேற்கொண்டார்கள். இதனால் அவர்கள் அதிகாரக் கொடுமைகளுக்கு ஆளாகாமல் தப்பினார்கள்.
மேற்கூறிய முயற்சி நடந்த காலத்தில் காந்திஜிக்குப் பல வருந்தத் தக்க அநுபவங்கள் ஏற்பட்டன. உரிமைகளுக்காகப் போராடும் போது இந்திய சமூகத்தினர் எவ்வளவு ஊக்கம் காட்டினார்களோ அவ்வளவு இப்போது கடமைகளை ஆற்றும் விஷயத்தில் காட்டவில்லை என்பதைக் கண்டார். சிலர் காந்திஜியிடம் அவமதிப்பாகவே நடந்து கொண்டார்கள். சிலர் வாய்ப் பேச்சில் மரியாதை செலுத்தி விட்டுக் காரியத்தில் அசட்டையா யிருந்தார்கள். இதனாலெல்லாம் காந்திஜி மனச்சோர்வு அல்லது மனக் கசப்பு அடைந்து விடவில்லை. மக்களின் இயல்பு இது தான் என்பதை அறிந்து பொறுமையுடன் தமது முயற்சியைச் செய்து வந்தார். மொத்தத்தில் இந்திய சமூகத்தாரின் வீடுகளும் சுற்றுப்புறங்களும் தூய்மை அடைந்தன.
இவ்வாறு இந்திய சமூகத்தின் முன்னேற்றத்துக்காகப் பற்பல துறைகளிலும் பாடுபட்டு வந்ததோடு இந்தியர்களுக்குத் தாய்நாட்டின் நினைவும் தாய் நாட்டிடம் பக்தியும் இருக்கு மாறும் பார்த்துக் கொண்டார். வெளி நாடுகளுக்கு வந்துள்ள இந்தியர்கள் தாய்நாட்டுக்குச் செலுத்த வேண்டிய கடமை உண்டு என்பதை அடிக்கடி வற்புறுத்தினார். இதைக் காரியத்தில் காட்டுவதற்கு விரைவில் சந்தர்ப்பம் நேர்ந்தது.
1897-ம் ஆண்டிலும் 1899-ம் ஆண்டிலும் இந்தியாவின் சில பகுதிகளில் கடும் பஞ்சம் நேர்ந்தது. அந்தப் பகுதிகளில் வசித்த இந்திய மக்கள் கொடிய கஷ்டங்களை அநுபவித்தார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டுக் காந்திஜி தென்னாப்பிரிக்காவில் நிதி வசூல் ஆரம்பித்தார். தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் தாராளமாக நிதிக்குப் பண உதவி செய்தார்கள். வர்த்தக சமூகத்தாரைத் தவிர ஒப்பந்தத் தொழிலாளிகளும் தங்களால் இயன்ற சிறு தொகைகளைக் கொடுத்து உதவினார்கள். தென்னாப் பிரிக்கா வெள்ளைக்-காரர்களுக்குக் காந்திஜி விடுத்த வேண்டுகோளும் வீண் போகவில்லை. வெள்ளைக்காரர்கள் பலரும் இந் தியப் பஞ்சநிவாரணத்துக்குப் பணம் கொடுத்து உதவினார்கள். காந்திஜி கூறுகிறார் :- இவ்வாறு, தென்னாப்பிரிக்கா இந்தியர்களுக்கு நான் செய்த ஊழியம் ஒவ்வொரு படியிலும் சத்தியத்தின் புதிய புதிய அம்சங்களை எனக்குப் புலப்படுத்தி வந்தது. சத்தியம் என்பது ஒரு பெரிய விருட்சம். அதற்கு நீர் ஊற்றி வளர்க்க வளர்க்க அதிகப் பழங்களைத் தருகிறது. சத்திய மென்னும் சுரங்கத்தில் எவ்வளவு ஆழமாகத் தோண்டுகிறோமோ அவ்வளவுக்கு அதில் புதைந்து கிடக்கும் ரத்தினங் களைக் கண்டு பிடிப்போம் தொண்டு புரிவதற்குப் புதிய புதிய துறைகளே அந்த இரத்தினங்களாகும். ”
* * *
இம்முறை காந்திஜி தென்னாப்பிரிக்காவில் ஐந்து வருஷம் இருந்தார். 1901-ம் ஆண்டில் தாய்நாட்டுக்குத் திரும்ப எண்ணினார். தென்னாப்பிரிக்காவில் மேலும் தங்கினால் பணம் சம்பாதிப்பதே முக்கிய வேலையாய்ப் போய் விடு மென்றும் இந்தியாவுக்குச் சென்றால் அதிக பயன் தரும் தொண்டு செய்யலாம் என்றும் நினைத்தார், தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் நலன்களைக் கவனித்துக் கொள்வதற்கு மனுசுக்லால் நாஸார் முதலிய நண்பர்கள் இருந்தார்கள். காந்தி மகாத்மாவுடன் சேர்ந்து தொண்டு புரிந்ததில் அவர்களுக்கு நல்ல பயிற்சி ஏற்பட்டிருந்தது.
நண்பர்களிடம் காந்திஜி தம் உத்தேசத்தைத் தெரிவித்த போது அவர்கள் இலேசில் அதற்கு இணங்கவில்லை. கடைசியாக ஒரு நிபந்தனையின் பேரில் விடை கொடுக்க ஒப்புக்கொண்டார்கள். அந்த நிபந்தனை தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் மறுபடியும் காந்திஜியின் உதவி தங்களுக்குத் தேவை என்று கருதி அழைத்தால் காந்திஜி எந்தத் தடையும் கூறாமல் உடனே திரும்பி வந்துவிட வேண்டு என்பது தான்.
நிபந்தனையைக் காந்திஜி அவ்வளவாக விரும்பவில்லை யென்றாலும் நண்பர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு அதை ஒப்புக் கொண்டார். பிறகு, காந்திஜி இந்தியா போவதை முன்னிட்டுப் பிரிவுபசார விருந்துகளும் கூட்டங்களும் ஆரம்பமாயின. நேட் டால் இந்தியர்கள் அன்பு என்னும் அமுத வெள்ளத்தில் மகாத்மாவை மூழ்க அடித்தார்கள். பல பரிசுப் பொருள்கள் அளிக்கப்பட்டன. தங்கச் சாமான்கள்-வெள்ளிச் சாமான்களோடு விலை யுயர்ந்த வைர ஆபரணங்களும் பரிசாக அளிக்கப்பட்டன. இந்தப் பரிசுகளில் ஐம்பத்திரண்டு பவுன் பெறுமானமுள்ள கண்டஹாரம் ஒன்றும் இருந்தது. இது காந்திஜியின் மனைவியாரான கஸ்தூரி பாய்க்கு என்று கொடுக்கப்பட்டது.
மேற்படி வெகுமதிகள் ஏராளமாகக் கிடைத்த ஒரு நாள் இரவு காந்திஜிக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. பரிசுகளைத் தாம் சொந்தத்துக்கு வைத்துக் கொள்வது உசிதமா என்று சிந்தனை செய்தார். அவை பெரும்பாலும் சமூகத்துக்கு அவர் செய்த தொண்டை உத்தேசித்து அளிக்கப்பட்டவை. அவற்றை அங்கீகரித்தால் சமூகத் தொண்டுக்குக் கூலி பெற்றது போலத் தானே ஆகும்? அது முறையாகுமா? ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பரிசுகளை வேண்டாமென்று புறக் கணிப்பதும் சுலபமான காரியமில்லை. வேண்டாம் என்று மறுப்பது காந்திஜிக்கு விருப்பமா யிருந்தாலும் அதற்கு மனைவியும் குழந்தைகளும் சம்மதிக்க வேண்டுமே? அவர்கள் ஒரு வேளை ஆட்சேபித்தால் என்ன செய்வது?
காந்திஜியின் வீட்டில் அதுவரை விலையுயர்ந்த நகை எதுவும் கிடையாது. தங்கச் சாமான்--வெள்ளிச் சாமான் கிடையவே கிடையாது. நகைப் பைத்தியத்தை ஒழிக்க வேண்டும் என்று காந்திஜி ஜனங்களுக்கு அடிக்கடி உப தேசித்து வந்தார். தம் குடும்பத்தில் அதைக் கடுமையாக அனுஷ்டித்தார். அப்படி யிருக்க, இப்போது பரிசாகக் கிடைத்த தங்கக் கடிகாரங்கள், தங்கச் சங்கிலிகள், வைர மோதிரங்கள் ஆகியவற்றை என்ன செய்வது?
இரவெல்லாம் யோசனை செய் து பரிசுகளைச் சொந்தத்துக்கு வைத்துக்கொள்ளக் கூடாது என்ற முடிவுக்குக் காந்திஜி வந்தார். அவற்றைத் தென்னாப்பிரிக்கா இந்திய சமூகத்துக்கே உரிமை யாக்குவதென்றும், அந்தத் தர்ம சொத்தைப் பரிபாலிப்பதற்கு பார்ஸி ரஸ்டம் ஜி முதலியவர்களைத் தர்மகர்த்தர்களாக நியமிப்ப தென்றும் தீர்மானித்தார். அந்தப்படியே கடிதமும் எழுதி முடித்தார். இதற்குப் பிறகுதான் காந்திஜியினால் தூங்க முடிந்தது.
பொழுது விடிந்ததும் குழந்தைகளிடம் தம்முடைய தீர்மானத்தைத் தெரிவித்தார். தந்தையின் உயர்ந்த இலட்சியங்களில் பயிற்சி பெற்று ஊறிப் போயிருந்த குழந்தைகள் காந்திஜியின் முடிவை உற்சாகமாக ஆமோதித்தன.
''அப்படியானால் உங்கள் அம்மாவிடம் இதைப்பற்றிப் பேசி அவளை இந்த ஏற்பாட்டுக்கு இணங்கச் செய்யுங்கள், பார்க்கலாம்!'' என்றார் காந்திஜி.
அவர் எதிர்பார்த்தது போலவே கஸ்தூரிபாயை இணங்கச் செய்வது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. ஸ்ரீமதி கஸ்தூரிபாய் கூறியதாவது :- " உங்களுக்கு இப் பொருள்கள் தேவையில்லை. உங்கள் குழந்தைகளுக்கும் தேவையில்லை. நீங்கள் சொல்கிறதைக் கேட்டுக் கொண்டு அவர்கள் உங்கள் இஷ்டப்படி கூத்தாடுவார்கள். குழந்தைகளுக்கு என்ன தெரியும்? ஆனால் பரிசுகளைத் திருப்பிக் கொடுக்க நான் சம்மதிக்க மாட்டேன், என்னை நகை அணிந்துகொள்ளக் கூடாது என்று சொல்கிறீர்கள்; அதன்படியே நான் நடக்கிறேன். ஆனால் நாளைக்கு நம் பிள்ளைகள் மணக்கும் நாட்டுப் பெண்களின் விஷயம் என்ன? அவர்களையும் நீங்கள் கட்டாயப் படுத்த முடியுமா? அவர்களுக்கு ஆபரணங்கள் வேண்டி யிருக்கும். ஆகையால் திருப்பிக் கொடுக்கவே கூடாது.''
இவ்வாறு ஸ்ரீமதி கஸ்தூரிபாய் சொல்லித் தம் வாதத்துக்குப் பக்கபலமாகக் கண்ணீர் பெருக்கத் தொடங்கினார்.
எனினும் காந்திஜி சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. கற்பாறையை யொத்த சலியாத மன உறுதியுட னிருந்தார்.
''குழந்தைகளுக்கு நாளைக்குக் கலியாணம் செய்து வைக்கப் போகிறோமா? அவர்களுக்கு வயது வந்தபின் கலியாணம் செய்து கொள்ளலாம். அப்போது அவர்களே தங்கள் காரியத்தைக் கவனித்துக் கொள்வார்கள். நாமாகக் கலியாணம் பண்ணி வைத்தால் நகைப் பைத்தியம் கொண்ட பெண்களை ஒரு நாளும் கலியாணம் செய்துவைக்கப் போவ தில்லை. அப்படி உன் மருமகள்மார்களுக்கு ஆபரணம் செய்து போடுவது அவசியம் என்று ஏற்பட்டால் நான் ஒருவன் இல்லையா? என்னைக் கேட்டால் வேண்டியதை வாங்கிக் கொடுக்கிறேன் ! ''
'' உங்களை யார் கேட்பது? இவ்வளவு நாளைக்குப் பிறகும் உங்கள் சமாசாரம் எனக்குத் தெரியாதா? என்னுடைய நகைகளை யெல்லாம் நீங்கள் தானே பிடுங்கிக் கொண்டீர்கள்? அப்படிப்பட்ட நீங்களா மருமகள்மாருக்கு ஆபரணம் செய்து விடப் போகிறீர்கள்? ஒருநாளும் இல்லை. இப்போதே என் குழந்தைகளைச் சந்நியாசியாக்கப் பார்க்கிறீர்களே ! கூடாது, கூடாது. நகைகளைத் திருப்பிக் கொடுக்க முடியாது. மேலும் என்னுடைய கண்டஹாரத்தைக் கேட்பதற்கு நீங்கள் யார்? உங் களுக்கு என்ன உரிமை?''
இதைக் கேட்ட காந்திஜி சற்றுக் கோபம் அடைந்து ”கண்டஹாரம் இந்திய சமூகத்துக்கு நான் செய்த ஊழியத் துக்காகக் கொடுக்கப்பட்டதா? உன்னுடைய ஊழியத்துக்காகவா?'' என்று கேட்டார்.
''உங்களுடைய ஊழியத்துக்காகத்தான். ஆனால் நீங்கள் செய்த ஊழியம் நான் செய்தது போல் அல்லவா? உண்மையில், நான் ஒன்றும் செய்யவில்லையா? இரவும் பகலும் உங்களுக்காக உழைத்தேனே, அதெல்லாம் ஊ ழியம் அல்லவா? வழியோடு போகிறவர்களை யெல்லாம் வீட்டுக்கு அழைத்துவந்து என்னை வதைத்தீர்களே? அது என்ன ஆகிறது? உங்களுடைய விருந் தாளிகளுக்கெல்லாம் நான் அடிமையைப் போல் உழைக்க வில்லையா? அதற்காக வெல்லாம் இந்தக் கண்டஹாரம் எனக்குத் தகாதா? ”
ஸ்ரீமதி கஸ்தூரி பாயின் கேள்விகளில் பெரிதும் உண்மை யிருந்தது. ஆகையால் அவை கூரிய அம்புகளைப்போல் காந்திஜியின் உள்ளத்தில் தைத்தன. எனினும், காந்திஜி தம் உறுதியிலிருந் து பிறழவில்லை. மேலும் ஸ்ரீமதி கஸ்தூரி பாயுடன் தொடர்ந்து வாதாடிப் பரிசுகளைத் திருப்பிக் கொடுப்பதற்குச் சம்மதிக்கும்படி செய்தார்.
இந்தச் சம்பவத்தைப் பற்றி விவரமாகச் சொல்லி விட்டுக் காந்தி மகாத்மா முடிவாக எழுதி யிருப்பதாவது :-
''இவ்வாறு செய்ததின் பொருட்டு நான் எப்போதுமே வருந்தியதில்லை. நாளடைவில் என் மனைவியும் அப்படிச் செய்ததே அறிவுடைமை என்பதை உணர்ந்து கொண்டாள். இதனால் எவ்வளவோ சோதனைகளுக் குள்ளாகாமல் நாங்கள் பாதுகாக்கப் பட்டோம். பொது ஊழியத்தில் ஈடுபட்டோர் விலை உயர்ந்த வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளக் கூடாதென்பது என் உறுதியான அபிப்பிராயம்.''
--------

காந்திகண்ட ராமராஜ்ய கனவு பலிக்கவே
கருத்தில் என்றும் புத்தர் தந்த கருணைதழைக்கவே
சாந்தி பொங்கி தமிழகத்தில் தருமம் ஓங்கவே
சமத்துவத்தில் சுதந்தரத்தை அமைத்து வாழவே
மாந்தருக்குள் தெய்வமென்ற நூலை அருளிய
மன்னனான கல்கி பாத மலரைப் போற்றுவேன்.
-கொத்தமங்கலம் சுப்பு

1. அன்னையும் பிதாவும் | 18. சமூகத் தொண்டு |
2. கல்வியும் கல்யாணமும் | 19. வழக்கின் முடிவு |
3 சத்தியம் காத்தது | 20. ஏசுவின் போதனை |
4 அஹிம்சை உதயம் | 21. காந்தியை நிறுத்துங்கள் |
5 பயத் துக்கு மருந்து | 22. வாக்குரிமைப் போர் |
6 கடல் பிரயாணம் | 23. நேட்டால் இந்தியக் காங்கிரஸ் |
7 லண்டன் வாழ்க்கை | 24. பால் சுந்தரம் |
8. நாஸ்திகத்தில் வெறுப்பு | 25. மூன்று பவுன் தலைவரி |
9 பாரிஸ்டர் ஆனார் | 26. தாய் நாட்டில் |
10. கவலைக் கடல் | 27. பிரசார யாத்திரை |
11. கோர்ட்டில் முதல் வழக்கு | 28. கடலில் அபாயம் |
12. வாழ்வில் முதல் அதிர்ச்சி | 29. கரையில் ஆபத்து |
13. அதிர்ஷ்ட ப் பிரயாணம் | 30. வழக்கு வேண்டாம் |
14 தலைப்பாகைத் தகராறு | 31. எளிய வாழ்க்கை |
15 வழியில் நேர்ந்த விபத்து | 32. போயர் யுத்தம் |
16 மேலும் சோதனைகள் | 33. கஸ்தூரிபாயும் கண்டஹாரமும் |
17. பிரிட்டோரியாவில் |
மாந்தருக்குள் ஒரு தெய்வம்
1. அன்னையும் பிதாவும்
தம்பி ! பள்ளிக்கூடத்தில் நீ சரித்திர பாடங்கள் படிக்கிறாயல்லவா? சரித்திர பாடங்களில், பல தேதிகளை நெட்டுருச் செய்யும்படி உபாத்தியாயர்கள் சொல்கிறார்கள். சரித்திர பாட புத்தகத்தின் கடைசியில் ஐந்து பக்கம் நிறையத் தேதி அநுபந்தம் சேர்த்திருக்கிறது. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலம் முதல் ஒவ்வொரு வைஸ்ராயும் இந்தியாவுக்கு வந்த தேதியும் போன தேதியும் இரண்டு பக்கங்கள் நிறைய இருக்கின்றன. அவ்வளவு தேதிகளையும் நீ ஒன்று விடாமல் மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கிற தல்லவா?
உண்மையில், அந்தத் தேதிகளை யெல்லாம் நீ நெட்டுருச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. புத்தகத்திலே தான் அச்சுப் போட்டிருக்கிறார்களே! வேண்டும்போது எடுத்துப் பார்த்துக் கொள்ளலாமே?
இந்திய சரித்திர பாடத்தில் சுமார் பதினைந்து தேதிகள் உனக்கு ஞாபகம் இருந்தால் போதும். தேதி என்றால், மாதமும் தினமும் கூட அல்ல. சுமாராக வருஷம் தெரிந்திருந்தால் போதும். எந்த நூற்றாண்டு என்பது தெரிந்தாலும் போதும்.
மகான் புத்தர் எந்தக் காலத்தவர் என்பது உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்புறம் அசோகர் காலமும் சந்திரகுப்த விக்ரமாதித்யர் காலமும் தெரிந்திருக்க வேண்டும். திருவள்ளுவர், மகேந்திர பல்லவர், ஹர்ஷவர்த்தனர், இராஜ ராஜ சோழர், சங்கரர், இராமானுஜர், அக்பர், சிவாஜி இவர்கள் வாழ்ந்த காலம் உனக்குத் தெரிய வேண்டும்.
மேற்கூறிய தேதிகளுக்குப் பிற் பாடு உனக்கு முக்கியமாகத் தெரிந் திருக்க வேண்டிய தேதி எது தெரியுமா? - சொல்லுகிறேன், கேள்! கேட்டு, மனத்தில் மறக்க முடியாதபடி பதித்து வைத்துக்கொள்!
1869 அக்டோபர் 25 உன் நினைவில் என்றென்றைக்கும் இருக்க வேண்டும்.
அந்தத் தேதியிலே தான் மாந்தருக்குள் தெய்வமான மகாத்மா காந்தி அவதரித்தார்.
தம்பி! நான் சொல்வதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே ! பிறக்கும்போதே காந்திஜி மகாத்மாவாகப் பிறந்து விடவில்லை. உன்னையும் என்னையும் நாட்டிலுள்ள எல்லாரையும் போல் அவரும் பிறந்தபோது சாதாரணக் குழந்தையாகத்தான் பிறந்தார் அப்படிப் பிறந்த குழந்தை மாநிலத்துக்கு ஒரு தலைவராகவும் மனித குலத்துக்கு ஒரு வழிகாட்டியாகவும் பிற் காலத்தில் ஆகப்போகிறது என்று அப்போது யாரும் எண்ண வில்லை; குழந்தையின் பெற்றோர்களும் அவ்விதம் நினைக்கவில்லை.
இந்தியா தேசத்தின் படத்தைப் பார்! குஜராத் எனப்படும் கூர்ஜரத்துக்கு மேலே கத்தியவார் என்று இருக்கிறதல்லவா? இந்தப் பிரதேசத்திலேதான் முன்னொரு சமயம் “ஸ்ரீ கிருஷ்ண பகவான்" வட மதுரை நகரை விட்டு வந்து துவாரகை என்னும் புதிய தலைநகரை அமைத்துக் கொண்டார். எதற்காகத் தெரியுமா? ஸ்ரீ கிருஷ்ணன் மதுரையின் மன்னராயிருந்தபோது ஒயாமல் பொல்லாத பகைவர்களுடன் யுத்தம் செய்ய வேண்டி யிருந்தது. ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு யுத்தம் போதும் போதும் என்று ஆகிவிட்டது. "யுத்தமும் வேண்டாம் ; மதுரை ராஜ்யமும் வேண்டாம்!" என்று சொல்லிவிட்டு ஸ்ரீ கிருஷ்ண பகவான் தம்முடைய உற்றார், உறவினர், நண்பர்கள், பிரஜைகள், சேனாவீரர்கள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு கத்தியவாருக்கு வந்து விட்டார்.
இப்படிச் செய்வதின் மூலமாகவாவது அந்தப் பகைவர்களின் மன த்திலுள்ள துவேஷம் போகாதா, பகைமை மறையாதா, அவர்கள் நல்லவர்களாகி விட மாட்டார்களா என்று நினைத்தே பகவான் அவ்விதம் செய்தார்.
கத்தியவார் கடற்கரையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் துவாரகை நகரைக் கட்டிக் கொண்டார். இதனாலே தான் துவாரகாபுரி ஆலயத்திலுள்ள கண்ண பெருமானுக்கு 'ரண சோட் நாதர்' என்ற திருநாமம் வழங்கி வருகிறது. (ரணம் : யுத்தம் ; சோட்: விட்ட ; நாதர் : பெருமான்)
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அதே கத்தியவார் பிரதேசத்திலே தான், "யுத்தம் வேண்டாம் ! பகைமை வேண் டாம்!" என்று உபதேசித்த காந்தி மகானும் பிறந்தார். அவர் பிறந்த ஊருக்குப் போர்பந்தர் என்று பெயர். "சுதாமாபுரி" என்ற பழைய பெயரும் அந்தப் பட்டணத்துக்கு உண்டு. "சுதாமா' என்பது குசேலருக்கு இன்னொரு பெயர் என்பது உனக்கு நினைவிருக்கிற தல்லவா?
மகாத்மாவின் பெற்றோர்கள் 'பனியா ” என்று சொல்லப் படும் வைசிய சாதியார். (காந்திஜி தான் சாதி குலப் பிறப் பென்னும் மாயைகளை யெல்லாம் கடந்த மகாத்மா ஆயிற்றே ! ஆகையினால் தான், காந்திஜியின் பெற்றோர் "வைசிய சாதி ' என்று சொன்னேன்.) வைசிய சாதி என்றாலும் காந்திஜியின் முன்னோர்கள் வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டவர்கள் அல்ல. கத்தியவாரில் அனேக சுதேச சமஸ்தானங்கள் உண்டு. காந்திஜியின் பாட்டனாரும் அவருக்கு முன்னால் மூன்று தலைமுறை யினரும் கத்தியவாரில் உள்ள சமஸ்தான மன்னர்களுக்கு முதன் மந்திரிகளாயிருந்து வந்தார்கள்.
காந்திஜியின் பாட்டனாரான ஸ்ரீ உத்தம் சந்திர காந்தி என்பவர் ஒரு தீர புருஷர். போர்பந்தர் சமஸ்தானத்தில் அவர் திவான் வேலை பார்த்து வந்தபோது அவரைக் கவிழ்த்துவிடச் சிலர் சதி செய்தார்கள். இதை அறிந்த ஸ்ரீ உத்தம சந்திரர் பக்கத்திலுள்ள ஜுனாகாத் சமஸ்தானத்தில் அடைக்கலம் புகுந்தார். ஜூனாகாத்தின் அதிபதியான முஸ்லிம் நவாப்பின் தர்பாரை ஸ்ரீ உத்தம் சந்திரர் அடைந்ததும், நவாப்புக்கு இடது கையினால் சலாம் செய்தாராம். இந்த மரியாதைக் குறைவான செயலுக்குக் காரணம் கேட்டபோது, "என்னுடைய வலது கை ஏற்கெனவே போர்பந்தரின் ஊழியத்துக்கு அர்ப்பணமாகி யிருக்கிறதே!" என்று பதில் சொன்னாராம். இந்தப் பதிலைக் கேட்ட ஜூனாகாத் நவாப், "இவர் எவ்வளவு உத்தமமான மனிதர் ! எப்பேர்ப்பட்ட சத்திய சந்தர்!" என்று எண்ணி மகிழ்ந்தாராம்.
உத்தம சந்திரருக்கு ஆறு புதல்வர்கள், இவர்களில் ஐந்தாவது புதல்வர் கரம் சந்திர காந்தி. பெயரைச் சுருக்கிக் [காபா காந்தி' என்றும் அழைப்பதுண்டு. போர் பந்தர், வங்க நேர், இராஜகோட்டை ஆகிய சமஸ்தானங்களில் ஸ்ரீ காபா காந்தி திவான் வேலை பார்த்தார். கத்தியவாரில் சமஸ்தானங்கள் நூற்றுக் கணக்கில் உண்டு. அவற்றை ஆண்ட மன்னர்களுக்குள்ளேயும், மன்னவர்களின் உறவினர் - இனத்தாருக்கு உள்ளேயும் அடிக்கடி தகராறுகள் ஏற்படும். இந்தத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதற்காக ”இராஜஸ்தான் கோர்ட் " என்று ஒரு நீதி மன்றம் அந்தக் காலத்தில் இருந்தது. அந்த நீதி மன்றத்தில் ஸ்ரீ காபா காந்தி ஒரு நீதிபதியாகப் பதவி வகித்தார்.
ஸ்ரீ காபா காந்தி உண்மையாளர் ; தைரியமும் தயாளமும் உடையவர் ; பணத்தைப் பெரிதாகக் கருதாதவர். நடுநிலைமை பிறழாத நியாயவான் என்ற புகழ் அவருக்கு ஏற்பட்டிருந்தது. அவர் பள்ளிக்கூடத்தில் படித்தது ஐந்தாவது வகுப்பு வரையில் தான். ஆனால் இயற்கை அறிவினாலும் உலக அநுபவத்தினாலும் மிகச் சிக்கலான பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் சக்தி பெற்றிருந்தார். நூற்றுக்கணக்கான மனிதர்களை வைத்து நடத்தும் நிர்வாகத் திறமையும் அவருக்கு இருந்தது.
இந்தியாவிலுள்ள சுதேச சமஸ்தானங்களை மேற்பார்வை செய்யப் பிரிட்டிஷ் சர்க்கார் சென்ற வருஷம் வரையில் ' பொலிடிகல் ஏஜெண்டு' என்னும் உத்தியோகஸ்தர்களை அமர்த்திக் கொண்டு வந்தார்கள். ஒரு சமயம் ஒரு ’பொலிடிகல் ஏஜெண்டு' இராஜ கோட்டை மன்னரைப்பற்றிச் சிறிது அவமரியாதையாகப் பேசினாராம். உடனே ஸ்ரீ காபா காந்தி குறுக்கிட்டு ஆட்சேபித்தாராம். பொலிடிகல் ஏஜெண்ட் துரை அப்பொழுதெல்லாம் சர்வ வல்லமை படைத்திருந்த பிரிட்டிஷ் சர்க்காரின் பிரதிநிதி யல்லவா? துரைக்குக் கோபம் வந்து விட்டதாம். ஸ்ரீ காபா காந்தி தம்மிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொன்னாராம். ஸ்ரீ காபா காந்தி, “முடியாது" என்றாராம். அவரைத் துரை காவலில் வைத்தாராம். அப்படியும் ஸ்ரீ காபா காந்தி மன்னிப்புக் கேட்க இணங்கவில்லையாம். சில மணி நேரத்துக்குப் பிறகு பொலிடிகல் ஏஜெண்ட் அவரை விடுதலை செய்து விட்டாராம்.
தந்தையிடம் இருந்த மேற் கூறிய உத்தம குணங்கள் எல்லாம் புதல்வரிடம் ஒன்றுக்கு ஆயிரம் மடங்காகப் பெருகிப் பிரகாசித்ததை நாம் அறிந்திருக்கிறோம்.
ஸ்ரீ காபா காந்தி மூன்று தடவை கலியாணம் செய்து கொண்டு மூன்று மனைவிகளும் காலமாகி விட்டார்கள். எனவே, நாலாவது முறையாக ஸ்ரீமதி புத்லி பாய் என்னும் கன்னிகையை அவர் மணந்து கொண்டார். இவ்விதம் நாற்பது வயதுக்கு மேல் தம் தந்தை நாலாவது முறை கலியாணம் செய்து கொண்டது மகாத்மாவுக்கு அவ்வளவாகப் பிடிக்க வில்லை என்பதை அவர் எழுதிய சுய சரிதையிலிருந்து அறிகிறோம்.
ஆனாலும் ஸ்ரீ காபா காந்தி நாலாவது தடவையும் கலியாணம் செய்து கொண்டது பற்றி நீயும் நானும் மகிழ்ச்சி யடைய வேண்டும். இந்தியா தேசமும் இந்த உலகம் முழுவதுமே அதைக் குறித்துச் சந்தோஷப்பட வேண்டும். ஏனெனில், ஸ்ரீ காபா காந்தியின் நாலாவது கலியாணத்தின் பயனாகவே மகாத்மா காந்தி இந்த உலகில் அவதரித்தார். ஸ்ரீமதி புத்லி பாயின் நாலாவது கடைக்குட்டிக் குழந்தை ஸ்ரீ மோகன் தாஸ் கரம் சந்த்ர காந்தி.
தமது அன்னையின் சிறந்த குணங்களைப்பற்றி மகாத்மாவே தம்முடைய சுய சரிதத்தில் சொல்லி யிருக்கிறார்.
ஆமாம், தம்பி! மகாத்மா காந்தி தம்முடைய சரித்திரத்தைத் தாமே எழுதியிருக்கிறார். ஆனால் அதற்குச் சுய சரிதம் என்று பெயர் கொடுக்காமல் 'சத்திய சோதனை' என்று பெயர் கொடுத்திருக்கிறார். இந்த அரிய புத்தகம் ஆங்கிலத்திலும் இந்தியாவிலுள்ள முக்கியமான பாஷைகள் எல்லாவற்றிலும் வெளியாகி யிருக்கிறது. தமிழிலும் வந்திருக்கிறது. நீ சற்றுப் பெரியவன் ஆனதும் அந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.
பெரிய மகான்களுடைய வாழ்க்கையைப்பற்றி நாளடைவில் கற்பனைக் கதைகள் பல உண்டாகிச் சேர்ந்து விடுவ து வழக்கம். மகாத்மா தம்முடைய சரிதையைத் தாமே எழுதி யிருக்கிறபடியால் அவரைப் பற்றிக் கற்பனைக் கதைகள் ஏற்பட இடமில்லாமற் போய்விட்டது. ஆனால், என்ன துரதிர்ஷ்டம்! 1920-ம் வருஷத்தோடு மகாத்மா தமது சுய சரிதத்தை நிறுத்தி விட்டிருக்கிறார். அதற்குப் பிறகு எத்தனை எத்தனை அற்புதச்
அன்னையும் பிதாவும் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன ! இன்னும் சில காலம் அவர் வாழ்ந்திருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்டு 15௳ வரையில் தமது சரிதத்தை எழுதிப் பூர்த்தி செய்திருக்கக் கூடாதா? அது முடியாதபடி ஒரு கொடும் பாதகன் அவரைக் கொலை செய்து விட்டானே?
கதையை விட்ட இடத்துக்கு மறுபடியும் போகலாம். காந்தி மகான் தமது தாயாரைப் பற்றிச் சொல்லி யிருப்பதை அப்படியே பெயர்த்து எழுதுகிறேன் :-
"அவர் பெரிதும் சமயப்பற்றுக் கொண்டவர். தினசரி தெய்வப் பிரார்த்தனை செய்யாமல் அவர் உணவு கொள்ள மாட் டார். தினந்தோறும் விஷ்ணு கோயிலுக்குச் சென்று வருவார். எனக்கு நினைவு தெரிந்த பின்னர் அவர் ஒரு வருஷமாவது சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கத் தவறியதில்லை. மிகக் கடுமையான நோன்புகளை அவர் மேற்கொண்டு நிறைவேற்றி வந்தார். உடல் நோய் காரணமாகவும் அவர் விரதத்தைக் கைவிடுவதில்லை. ஒரு முறை சாந்திராயண விரதத்தின் போது கடுமையான நோய் வந்தும், அவர் விரதத்தை விடாமல் நடத்தியது எனக்கு நினைவிருக்கிறது. இரண்டு மூன்று வேளை சேர்ந்தாற்போல் உபவாச மிருத்தல் அவருக்குச் சர்வ சாதாரணம். சாதுர்மாஸ்யத்தில் அவர் தினம் ஒரு முறை தான் உணவு கொள்வார். இது போதாதென்று ஒரு சாதுர்மாஸ்யத்தில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் பூரண உபவாச மிருந்து வந்தார். மற்றொரு சாதுர் மாஸ்யத்தின் போது தினம் சூரிய தரிசனம் செய்யாமல் சாப்பிடுவதில்லை யென்று அவர் விரதம் எடுத்துக்கொண்டார். நானும் மற்றக் குழந்தைகளும் தெருவில் நின்று கொண்டு சூரியன் எப்போது மேகக் கூட்டங்களினின்றும் வெளி வரப் போகிறதென் று காத்துக் கொண்டிருப்போம். மழை காலத்தில் சில தினங்களில் கதிரவன் தரிசனம் அளிக்கக் கருணை செய்வதில்லை யென்பது எல்லோருக்கும் தெரியும். அத்தகைய நாட்களில் சூரியன் அருமையாக வெளிவரும்போது ஓட்டமாக உள்ளே ஓடி அன்னையிடம் தெரிவிப்போம். ஆனால் அவர் ஓடி வந்து பார்ப்பதற்குள் சூரியன் மறைந்து விடுவான். ’அதனா லென்ன மோசம்? இன்று நான் சாப்பிடுவ து பகவானுக்கு விருப்பமில்லை !' என்று கூறிக்கொண்டு மலர்ந்த முகத்துடன் மீண்டும் வீட்டு வேலையைக் கவனிக்கத் தொடங்குவார்."
----------------
2. கல்வியும் கல்யாணமும்
தம்பி ! பள்ளிக்கூடத்துப் பரீட்சைகளில் சில சமயம் அதிக 'மார்க்' வாங்கவில்லையே என்று நீ வருத்தப்படுகிறாயல்லவா? ஆனால், அப்படி வருத்தப்படுவது அவசியமில்லை. பள்ளிக்கூடங்களில் எப்போதும் அதிக மார்க் வாங்கிப் பரீட்சையில் தேறுகிறவர்கள் வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் சாதிப் பது கிடையாது. மார்க் வாங்காதவர்களும், 'மந்தம்' என்று பெயர் வாங்கியவர்களும் பிற்காலத்தில் அரும் பெரும் காரியங் களைச் சாதித்திருக்கிறார்கள். இதற்கு உதாரண புருஷராக மகாத்மாவே விளங்குகிறார்.
போர்பந்தரில் காந்திஜி ஏழு பிராயம் வரையில் இருந்தார். அந்த ஊரிலிருந்த ஆரம்பப் பள்ளிக்கூடத்துக்குப் போனார், ஆனால் அதிகமாக ஒன்றும் படித்து விடவில்லை. "அந்தக் காலத் தில் என் அறிவு மிக்க மந்தமாயிருந்தது" என்று காந்திஜி தம் சுய சரிதத்தில் எழுதியிருக்கிறார்.
காந்திஜிக்கு ஏழு பிராயம் ஆனபோது, அவருடைய தந்தை ஸ்ரீ காபா காந்தி 'இராஜஸ்தான் கோர்ட்'டின் நீதிபதியாகி இராஜகோட்டைக்குக் குடிப் போனார். இராஜகோட்டையிலிருந்த பெரிய பள்ளிக்கூடத்திலும் மோகன்தாஸ் காந்தி - கெட்டிக்காரர் ' என்று பெயர் வாங்க வில்லை. படிப்பில் அவருக்கு ருசியே ஏற்பட-வில்லை. பாட புத்தகங்களை வேண்டா வெறுப்பாகப் படித்துத் தொலைப்பார் ; வேறு எந்தப் புத்தகமும் விரும்பிப் படிக்க மாட்டார்.
இளம் வயதில் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்டதைக் காட்டிலும் நாடகம் பார்த்ததின் மூலம் அதிகம் கற்றுக்கொண்டார். மோகன் தாஸ் குழந்தையாயிருந்தபோது பார்த்த நாடகங் களில் "சிரவண பித்ரு பக்தி நாடகம் " என்பது ஒன்று. கண் இழந்த முதியோர்களான தன் பெற்றோர்களைச் சிரவணன் என்பவன் காவடியில் வைத்துத் தூக்கிக்கொண்டு சென்ற காட்சி கரம் சந்திர மோகன்தாஸின் இளம் உள்ளத்தில் நன்றாகப் பதிந்து விட்டது. "பெற்ற தாய்க்கும் தகப்பனாருக்கும் இப்படி யல்லவா சேவை செய்ய வேண்டும்? ” என்று மனத்திற்குள் தீர்மானித்துக் கொண்டார்.
அவர் பார்த்த இன்னொரு நாடகம் அரிச்சந்திர நாடகம். அதை எத்தனை தடவை பார்த்தாலும் மோகன் தாஸுக்குச் சலிப்புத் தட்டுவதே இல்லையாம். "அரிச்சந்திரனைப்-போல் ஏன் எல்லோரும் சத்திய சந்தர்களா யிருக்கக் கூடாது? " என்று அடிக்கடி எண்ணமிடுவாராம். அரிச்சந்திரனுடைய கதையை நினைத்து நினைத்து மனமுருகி அழுவாராம். சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக அரிச்சந்திரன் பட்ட கஷ்டங்களை யெல்லாம் தாமும் அநுபவிக்கவேண்டும் என்ற இலட்சியம் குழந்தை காந்தியின் மனத்தில் குடி கொண்டதாம்.
ஆகா! அந்த இலட்சியம் காந்திஜியின் வாழ்க்கையில் எவ்வளவு நன்றாக நிறைவேறிப் பூர்த்தியடைந்து விட்டது ! அரிச்சந்திரன் சத்தியத்துக்காகச் செய்த தியாகங்களையும் அநுபவித்த கஷ்டங்களையும் விட மகாத்மா செய்த தியாகங்களும் அநுபவித்த கஷ்டங்களும் அதிகமேயல்லவா? கடைசியில் சத்தியத் துக்காக மகாத்மா உயிரையே தியாகம் செய்தும் விட்டாரே !
இவ்விதம் இளம் பிராயத்திலேயே சத்தியத்தில் அழியாத நம்பிக்கை கொண்ட மகாத்மா காந்தி தம் சுயசரிதத்தை எழுதுவதில் சத்தியத்தைப் பூரணமாகக் கடைப் பிடித்திருக்கிறார், பதின்மூன்று வயதில் தமக்குக் கலியாணம் நடந்ததுபற்றி மிக்க
வருத்தத்தோடு எழுதியிருக்கிறார்.
ஆம், தம்பி ! காந்தி மகானுக்குக் கலியாணம் நடந்தபோது அவருக்கு வயது பதின்மூன்று; அன்னை கஸ்தூரி பாய்க்கும் அப்போது வயது பதின்மூன்றுதான்.
அந்தக் காலத்தில் கலியாணம் நடத்துவதென்றால் மிகவும் சிரமமான காரியமாம். ஆகையால் மோகன் தாஸ்க்கும் அவருடைய தமையனாருக்கும் இன்னொரு சித்தப்பாவின் புதல்வருக்கும் சேர்த்து ஒரே முகூர்த்தத்தில் கலியாணம் நடத்திவிடத் தீர்மானித்தார்களாம். எப்படியிருக்கிறது கதை ! அந்தக் காலத்தில் அந்த நாட்டுச் சம்பிரதாயம் அவ்வாறிருந்தது.
ஆனால் இது விஷயத்தில் காந்தி மகானுடைய கருத்து என்ன வென்பதை நீ நன்கு தெரிந்துகொள்ளவேண்டும். தம்பி! ஆண்களுக்கு ஆகட்டும், பெண்களுக்கு ஆகட்டும், இளம் வயதில் கலியாணம் செய்வித்தல் கூடவே கூடாது என்பது மகாத்மாவின் உறுதியான கொள்கை.
இளம் வயதில் தமக்கு மணம் செய்விக்கப்பட்டது பற்றி மகாத்மா பிற்காலத்தில் பச்சாத்தாபப்பட்டார் ; நினைத்து நினைத்து வருந்தினார் ; கலியாணம் செய்து வைத்த தம் தந்தையையும் நொந்து கொண்டார். ஆனால், கலியாணம் நடந்த சமயத்தில் அது பிசகு என்பதாகவே அவருக்குத் தோன்றவில்லை. கஸ்தூரிபாயிடம் மிக்க அன்பாக இருந்தார். கஸ்தூரிபாய்க்கு எழுதப் படிக்கத் தெரியாது. எழுதவும் படிக்கவும் தமது அருமை மனைவிக்குக் கற்பிக்க விரும்பினார். ஆனால் மனைவியிடம் தாம் கொண்டிருந்த அன்பே படிப்புச் சொல்லிக் கொடுக்கத் தடையாயிருந்தது என்று காந்திஜி எழுதியிருக்கிறார்.
-----------------
3. சத்தியம் காத்தது
காந்தி மகாத்மாவுக்குச் சிறு பிராயத்திலேயே சத்தியத்தில் பற்று உண்டாயிற்று என்று சொன்னேனல்லவா? அந்தச் சத்தியப்பற்று அவரைப் பல தீமைகளிலிருந்து காத்தது.
இளம் பிராயத்தில் மோகன் தாஸ் காந்திக்குச் சிநேகிதர்கள் அதிகம் பேர் இல்லை. ஒரே ஒரு சிநேகிதன் கிடைத்தான். ஆனால் அவனுடைய சிநேகம் துஷ்ட சகவாசமாக முடிந்தது.
குஜராத் - கத்தியவார் பிரதேசங்களில் ஜைனர்கள் அதிகம் பேர் உண்டு. ஜைன மதம் ஜீவகாருண்யத்தை வற்புறுத்தும் மதம் அல்லவா? ஆகையால் ஜைனர்கள் புலால் உண்ண மாட் டார்கள். அதைப்போலவே அந்தப் பிரதேசத்து வைஷ்ணவர்களும் புலால் உணவை வெறுத்தார்கள். நமது தமிழ்நாட்டில், புலால் இல்லாமல் தானியம் - கறிகாய் மட்டும் உண்பதைச் 'சைவம்' என்று சொல்கிறோம். குஜராத்திலோ வைஷ்ணவர் கள் தான் 'சைவ' உண வில் வைராக்கியம் உள்ளவர்கள் !
காந்திஜியின் வம்சத்தார் வைராக்கிய சீலமுள்ள வைஷ்ணவர்கள். ஆகையினால் அவர்களுடைய வீட்டில் மாமிச உணவு கிடையாது. அந்தக் காலத்தில் 'புலால் உணவு சாப்பிட்டால் தான் தேகபலம் விருத்தியாகும்' என்று ஒரு தவறான பிரசாரம் குஜராத்தில் பரவி வந்தது. காந்தி மகானுடைய இளம் பிராய நண்பன் அந்தப் பிரசாரத்துக்குப் பலியானவன், காந்திஜிக்கும் அதைப் போதனை செய்தான். ”இங்கிலீஷ்காரனைப் பார் ! அவன் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான் ! இதற்குக் காரணம் அவன் மாமிசம் சாப்பிடுவதுதான் ! அதனாலேயே அவன் இந்தியா தேசத்தை அடிமைப்படுத்தி ஆள்கிறான் !" என்று அந்த சிநேகிதன் காந்திஜியிடம் அடிக்கடி சொன்னான். அது உண்மையாயிருக்கலாம் என்று காந்திஜியும் நம்பத் தொடங்கினார். இந்தியர்கள் எல்லாரும் புலால் உண்ணத் தொடங்கிவிட்டால் ஆங்கிலேயரை இந்தியா தேசத்திலிருந்து துரத்தி விடலா மென்று எண்ணினார்.
கடைசியாக ஒருநாள், அந்தச் சிநேகிதன் புலால் உண வுக்கு ஏற்பாடு செய்தான். அவன் கொண்டு வந்த உணவை ஆற்றங்கரையில் தனிமையான ஓர் இடத்தில் உட்கார்ந்து இரு வரும் சாப்பிடத் தொடங்கினார்கள். மோகன் தாஸ்க்கு அது பிடிக்கவேயில்லை. புலால் உண வும் அவருக்குப் பிடிக்கவில்லை; பெற்றோர்களுக்குத் தெரியாமல் இரகசியமாக அந்தக் காரியம் செய்வதும் பிடிக்கவில்லை.
அன்று இரவெல்லாம் மோகன் தாஸ் நன்றாகத் தூங்கவில்லை. கொஞ்சம் கண்ணயர்ந்தால் அவருடைய வயிற்றுக்கு உள்ளே உயிருள்ள ஆடு ஒன்று இருந்து பரிதாபமாகக் கத்துவதுபோலத் தோன்றுமாம் ! உடனே தூக்கிவாரிப் போட்டு எழுந்து உட்காருவாராம்! அன்று மாலையில் தாம் செய்த காரியத்தை நினைத்து வருந்துவாராம். பிறகு இந்தியா தேசத்தின் விடுதலைக்காக மாமிசம் சாப்பிடுவது தமது கடமை என்று எண்ணிச் சிறிது தைரியப்படுத்திக் கொள்வாராம்.
இன்னும் இரண்டு மூன்று தடவை இம்மாதிரி முயற்சி நடந்த பிறகு, முடிவாக இந்தக் காரியம் வேண்டாம் என்று மோகன் தாஸ் நிறுத்தி விட்டார். இதற்கு முக்கிய காரணம், பெற்றோர்களுக்குத் தெரியாமல் இந்தக் காரியம் செய்யவேண்டி யிருக்கிறதே என்ற எண்ணந்தான். மோகன் தாஸ் பொய் சொல்லுவதை வெறுத்தார் ; அதைக் காட்டிலும் பெற்றோர்களிடம் பொய் சொல்லுவதைப் பதின்மடங்கு அதிகமாக வெறுத்தார். இவ்விதம் சத்தியத்தில் அவருடைய பற்றுக் காரணமாக இரகசியமாகப் புலால் உண்ணும் காரியம் நின்றது. தமக்கு வயது வந்து சுதந்திர வாழ்க்கை நடத்தும்போது புலால் உணவைப் பார்த்துக்கொள்ளலாம் என்று அச்சமயம் காந்திஜி எண்ணினார். ஆனால் அந்தக் கொள்கையே தவறானது என்று வயது வந்ததும் அறிந்தார். தேக பலத்துக்கோ ஆரோக் யத்துக்கோ மாமிசபோஜனம் அவசியமில்லையென்பது பிற்காலத்தில் மகாத்மாவின் உறுதியான கொள்கை. இங்கிலாந்தில் பாரிஸ்டர் பரீட்சைக்குப் படித்தபோதும் தென்னாப்பிரிக்காவில் பல வருஷம் வாழ்ந்தபோதுங்கூட மகாத்மா 'சாகபட்சணி 'யாகவே இருந்தார். அவ்விதம் சைவ உணவு அருந்தியே மகாத்மா 79 வயது வரையில் திடகாத்திரமாக இருந்தார் அன்றோ?
இன்னொரு விஷயத்தையும் உனக்கு இப்போதே சொல்லி விடுகிறேன், தம்பி ! மகாத்மா காந்தி புலால் உணவை வெறுப்பவர்; அதனால் புலால் உண்பவர்களை யெல்லாம் அவர் வெறுப்பதில்லை. சைவ உணவுதான் நல்ல உணவு -சாத்வீக உணவு ஆரோக்கியத்துக்கு உகந்த உணவு என்பது அவருடைய உறுதியான கொள்கை. இது காரணமாக, சைவ உணவு அருந்தாமல் வேறு உணவு அருந்துவோரைக் கீழானவர்கள் என் று மகாத்மா நினைப்பதில்லை.
----------------------
4. அஹிம்சை உதயம்
துஷ்ட சகவாசத்தின் காரணமாக காந்திஜிக்கு இளம் பிராயத்தில் இன்னொரு விபத்து நேர்ந்தது. மற்றொரு நண்பனோடு சேர்ந்து இரகசியமாகச் சுருட்டுக் குடிக்க ஆரம்பித்தார், அதில் சுகம் ஒன்றும் அவர் காணவில்லை. சுருட்டுக் குடிப்பது ஒரு நாகரிகம் என்னும் எண்ணத்தினால் அந்தப் பழக்கம் ஆரம்பமாகிச் சிலகாலம் நடந்தது. சுருட்டு வாங்குவதற்குப் பணம் வேண்டியிருந்தது; கடனும் ஏற்பட்டது. கடைசியாக அவருடைய மூத்த சகோதரர் கையில் அணிந்திருந்த தங்கக் காப்பிலிருந்து ஒரு துண்டு வெட்டி எடுக்கவும் நேர்ந்தது. ஆனால் இப்படிச் செய்த குற்றம் காந்திஜியின் உள்ளத்தை மிகவும் உறுத்திற்று. மன வேதனையைத் தாங்கமுடியவில்லை. கடைசியாக செய்த குற்றம் எல்லாவற்றையும் தகப்பனாரிடம் ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்பது என்று தீர்மானித்தார். நேரில் சொல்லுவதற்குத் துணிச்சல் வரவில்லை. ஆகையால் ஒரு கடிதத்தில் தாம் செய்த குற்றத்தை விவரமாக எழுதி அதற்குத் தகுந்த தண்டனை அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் நோய்ப்பட்டுப் படுத்த படுக்கையாயிருந்த தகப்பனாரிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டு அவர் படுத்திருந்த பலகைக்கு எதிரே உட்கார்ந்து கொண்டார். தம்பி ! பிறகு என்ன நடந்தது என்பதை மகாத்மாவே சொல்கிறார். கேள் :-
"அவர் கடிதத்தை முற்றும் படித்தார். படிக்குங் காலையில் அவர் கண்களிலிருந்து கண்ணீர் முத்து முத்தாக வழிந்தது. கடிதமும் நனைந்து போயிற்று. ஒருகண நேரம் அவர் கண்ணை மூடிச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் ; பின்னர் கடிதத்தைக் கிழித்துப் போட்டார். கடிதத்தைப் படிப்பதற்காக எழுந்து உட்கார்ந்தவர் மீண்டும் படுத்துக் கொண்டார். நானும் அழத் தொடங்கினேன். அவரது அளவில்லாத மனவேதனையை உணர்ந்தேன். நான் சித்திரக் கலைஞனாயிருந்தால் அந்தக் காட்சியை இன்று படமாக எழுதிவிடுவேன். இன்னும் என் மனக் கண்ணில் அக் காட்சி அவ்வளவு தெளிவாகக் காணப்படுகிறது”.
"அந்த அன்புக் கண்ணீர்த் துளிகளினால் என் இருதயம் சுத்தமாயிற்று ; பாவம் நீங்கிற்று. அத்தகைய அன்பை அனுபவித்தோர் மட்டுமே அதன் இயல்பை உணர்தல் கூடும்”.
"இது எனக்கு அஹிம்சா தர்மத்தில் ஓர் உதாரண பாடமாக இருந்தது. அந்தக் காலத்தில் இந்த நிகழ்ச்சியில் என் தந்தையாரின் அன்பை மட்டுமே கண்டேன். இன்றைய தினமோ அது சுத்த அஹிம்ஸையே அன்றி வேறில்லை என்பதை அறிந் துள்ளேன். அத்தகைய அஹிம்சா தர்மம் உலகம் அனைத்தையும் தழுவி நிற்பது. தான் தொட்டதை யெல்லாம் பொன்னாக்கி விடும் இயல்பு கொண்டது. அதன் ஆற்றலுக்கு அளவு ஏது?"
"இத்தகைய உன்னதமான மன்னிக்கும் குணம் என் தந்தைக்கு இயல்பாக ஏற்பட்டதன்று. அவர் கோபங்கொண்டு கடுஞ்சொல் மொழிவாரென்றும், நெற்றியில் புடைத்துக் கொள்வார் என்றும் எண்ணியிருந்தேன். ஆனால் அவருடைய சாந்தம் எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கிற்று. நான் ஒளியாது என் குற்றத்தை ஒப்புக்கொண்டதே இதற்குக் காரணம் என்று நம்புகிறேன். மன்னிப்பதற்கு உரிய பெரியோரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொள்வதும், இனிமேல் குற்றம் செய்வதில்லை என்று உறுதிமொழி கூறுவதுமே குற்றத்தைப் போக்கிக்கொள்வதற்குச் சிறந்த பிராயச்சித்தமாகும். நான் எனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பயனாக என்னைப்பற்றி என் தந்தைக்குக் கவலையே இல்லாமல் போயிற்று என்னிடம் அவர் கொண்டிருந்த அன்பும் அளவு கடந்து பெருகிற்று."
இவ்விதம் மகாத்மா இளம் பிராயத்தில் சத்தியத்தில் கொண்ட பற்று பல தீமைகள் அவருக்கு ஏற்படாமல் பாதுகாத்தது மட்டுமல்ல; அந்த சத்தியப் பற்றிலிருந்தே அஹிம்சையின் பெருமையும் அவருக்கு விளங்கலாயிற்று. நாளடைவில் சத்தியமும் அஹிம்சையும் அவருடைய வாழ்க்கையாகிய வண்டிக்கு இரண்டு சக்கரச் சுவடுகளாக அமைந்தன. பிற்காலத்தில் மகாத்மா செய்து முடித்த அரும் பெரும் காரியங்களுக்-கெல்லாம் சத்தியமும் அஹிம்சையுமே அடிப்படையாயிருந்தன.
-------------
5. பயத்துக்கு மருந்து
மோகன்தாஸ் காந்தி இளம் பிள்ளையா யிருந்தபோது கோவிலுக்குப் போவதுண்டு. ஆனால் கோவிலில் குடிகொண்டிருந்த ஆடம்பரங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. உண்மையான தெய்வ பக்தியோ சமயப் பற்றே ஆலயங்களில் அவருக்கு ஏற்படவில்லை.
வீட்டு வேலை செய்த ஒரு பெண்மணியிடம் தெய்வம், சமயம் - இவைகளைப் பற்றிய உண்மைகளை மோகன் தாஸ் அறிந்தார். அந்த வேலைக்காரியின் பெயர் அரம்பை. காந்திஜி குழந்தையாயிருந்தபோது அவரை எடுத்து வளர்த்த செவிலித் தாயும் இந்த அரம்பை என்னும் பெண் தெய்வந்தான்.
காந்திஜி குழந்தையா யிருந்த காலத்தில் அவருக்குப் பேய், பிசாசுகளிடம் பயம் அதிகமாம். இதோடு பாம்பு பயமும் திருடர் பயமும் சேர்ந்து கொள்ளுமாம். இருட்டைக் கண்டே பயப்படுவாராம். இருட்டில் அவரால் தூங்க முடியாதாம். கண்ணை மூடினால் ஒரு பக்கத்திலிருந்து பிசாசுகளும் இன்னொரு திசையிலிருந்து பாம்புகளும் மற்றொரு திக்கிலிருந்து திருடர்களும் வருவதாகத் தோன்றுமாம்!
இப்படிப்பட்ட பயத்தைப் போக்குவதற்கு மருந்தாக வேலைக்காரி அரம்பை ஸ்ரீராம நாமத்தின் மகிமையைக் குழந்தை மோகன தாஸ்க்குக் கூறினாள். அதன்படி ஸ்ரீ ராமஜபம் செய்து காந்திஜி பேய் பிசாசு பயத்தை ஒரு மாதிரி போக்கிக் கொண்டார். ஆனால் அத்துடன் ராமநாமத்தின் மகிமை தீர்ந்து போய் விடவில்லை.
"இளம் பிராயத்தில் அந்த உத்தமி அரம்பை விதைத்த விதை வீண் போகவில்லை. இன்றைக்கும் ஸ்ரீ ராமநாமம் எனது அருமருந்தாக இருந்து வருகிறது !" இவ்விதம் மகாத்மா காந்தி 1928-ம் ஆண்டில் எழுதினார். நாளது 1948- ஆண்டில் காந்தி மகானுடைய அந்திம யாத்திரை தொடங்கிய ஜனவரி 30-யன்றும் ஸ்ரீ ராமநாமம் அவருக்கு அருமருந்தாக உதவியது.
பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்திருந்த அந்தப் பாதகன் துப்பாக்கியால் சுட்ட உடனே ’ராம் ராம்’ என்று சொல்லிக் கொண்டு மகாத்மா காந்தி தரையில் சாய்ந்தார். அடுத்த கணமே அந்த மகா பக்தருடைய உயிர் ஸ்ரீராமனுடைய பாதார விந்தங்களை அடைந்தது.
கோடி கோடி ஜனங்கள் ஜனவரி 30- மாலையிலிருந்து பிப்ரவரி 25 வரையில் மகாத்மா காந்தியினிடத்தில் தாங்கள் கொண்ட பக்தியின் காரணத்தினால் "ரகுபதி ராகவ ராஜா ராம்" என்று ஸ்ரீ ராம நாம பஜனை செய்தார்கள்.
அடாடா ! எங்கிருந்து எங்கே எங்கே வந்து விட்டேன்? தம்பி ! காந்தி மகான் பிறந்த ஊருக்கு மறுபடியும் போகலாம், வா ! மகாத்மாவின் தகப்பனார் நோய்ப்பட்டுப் படுத்த படுக்கையாய்க் கிடந்தார் என்று சொன்னேனல்லவா? அப்போது லகா மகராஜ் என்னும் இராமபக்தர் அவர் வீட்டுக்கு வந்து துளசிதாஸ் ஹிந்தி பாஷையில் இயற்றியிருக்கும் இராமாயண கீதங்களைப் பாடினார். பாடிய பிறகு பாட்டுக்குப் பொருளும் கூறினார். அப்போது அவரும் மெய்மறந்தார் ; கேட்டுக் கொண் டிருந்தவர்களும் மெய்மறந்தார்கள். மெய்மறந்து பரவச மானவர்களில் இளம் பிராயத்துக் காந்திஜியும் ஒருவர். இராமாயணத்திலும் இராமரிடத்திலும் மகாத்மா காந்தி கொண்ட அளவிலாத பக்திக்கு அப்போதே விதை போட்டாயிற்று.
ஆனால் மகாத்மாவின் இராம பக்தியானது அவரை மற்ற தெய்வங்களையோ மதங்களையோ வெறுக்கும்படியாகச் செய்ய வில்லை. எல்லா மதங்களும் கடவுளை அடையும் மார்க்கங்கள்தான் என்னும் சமரசக் கொள்கையில் மகாத்மா உறுதி கொண்டவர். இந்தக் கொள்கையின் வித்தும் மகாத்மாவின் இளம் பிராயத்திலேயே அவருடைய மனத்தில் விதைக்கப் பட்டது.
காந்திஜியின் பெற்றோர்கள் ஹிந்து மதத்தின் உட்பிரிவுகள் சம்பந்தமாக வேற்றுமை பாராட்டுவதில்லை. சைவ - வைஷ்ணவச் சண்டைகள், தென்கலை - வடகலைச் சண்டைகள் முதலியவற்றை அவர்கள் அறிய மாட்டார்கள். விஷ்ணு கோயிலுக்குப் போவது போலவே சிவன் கோவிலுக்கும் போவார்கள். அவர்கள் வீட்டுக்கு ஜைன சமயப் பெரியோர்கள் அடிக்கடி வருவார்கள்; அவர்களுடன் அமர்ந்து போஜனமும் செய்வார்கள்.
இன்னும், காந்திஜியின் தந்தைக்கு முஸ்லிம் நண்பர்களும் பார்ஸி நண்பர்களும் பலர் உண்டு. அவர்களும் அடிக்கடி வீட்டுக்கு வருவார்கள். மதங்களைப் பற்றிய சம்பாஷணைகள் நடைபெறும். நோய்ப் பட்டிருந்த தம் தந்தைக்குப் பணிவிடை செய்து கொண்டே மோகன் தாஸ் காந்தி மேற்படி சம்பாஷணைகளைக் கவனமாய்க் கேட்டுக் கொண்டிருப்பார். இதன் பயனாக "எல்லா மதங்களும் கடவுளுக்கு உகந்த மதங்களே!" என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கு உண்டாயிற்று.
ஆனால் கிறிஸ்துவ மதத்தின் மேல் மட்டும் காந்திஜிக்கு அந்த நாளில் சிறிது வெறுப்பு ஏற்பட்டிருந்தது. இதற்குக் காரணம், பள்ளிக்கூடத்துக்கு அருகில் தெரு மூலைகளில் நின்று கொண்டு கிறிஸ்துவப் பாதிரிமார்கள் செய்த பிரசங்கங்கள் தான். ஹிந்து மதத்தையும் ஹிந்து மதத்துத் தெய்வங்களையும் மேற்படி பாதிரிமார்கள் தூஷணை செய்ததைக் காந்திஜியினால் கேட்க முடிய வில்லை இதே காலத்தில் ஒரு ஹிந்து பிரமுகர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவிய துபற்றிக் காந்திஜி கேள்விப்பட்டார். அந்த ஹிந்து பிரமுகர் கிறிஸ்துவரானவுடனே மாட்டிறைச்சி தின்னவும் சாராயம் குடிக்கவும் ஐரோப்பியரைப் போல் உடைதரிக்கவும் ஆரம்பித்து விட்டாராம்! அதோடு அந்தப் பிரமுகர் ஹிந்து மதத்தையும் இந்தியா தேசத்தையுமே தூஷிக்கவும் தலைப்பட்டாராம். இதை யெல்லாம் அறிந்ததும், "கிறிஸ்துவ மதமும் ஒரு மதமா? இதற்கு மதம் என்ற பெயரே தகாது !" என்று காந்தி மகாத்மா நினைத்தாராம்.
ஆனால் பிற்காலத்தில் மேற்படி காரியங்களுக் கெல்லாம் கிறிஸ்துவ மதம் பொறுப்பில்லை யென்றும், கிறிஸ்துவ மதப் பிரசாரகர்களே காரணம் என்றும் காந்தி மகான் அறிந்து கொண்டார். உண்மையான கிறிஸ்துவ மதம் காந்திஜிக்கு உகந்த மதமாயிற்று. தம்பி! மகாத்மா காந்தியின் மிகச் சிறந்த சிநேகிதர்களில் சிலர் கிறிஸ்துவர்கள் என்பது உனக்குத் தெரிந்திருக்குமே? அமெரிக்கப் பாதிரியாரான ரெவரண்டு ஹோம்ஸ், தீனபந்து ஆண்ட்ரூஸ், பிரஞ்சு தேசத்துப் பெரும் புலவர் ரோமன் ரோலந்து இவர்கள் எல்லாரும் கிறிஸ்துவர்கள் தான். ஆனால் இவர்கள் காந்திஜிக்கு எவ்வளவு ஆப்த நண்பர்கள் !
வெவ்வேறு மதங்களைப் பற்றிக் காந்திஜியின் உள்ளம் சிந்தித் துக் கொண்டிருந்த காலத்தில், அற்புதமான தத்துவங்கள் அடங்கிய குஜராத்தி பாஷைப் பாடல் ஒன்று அவருடைய இதயத்தில் குடி கொண்டது. அந்தப் பாட்டின் பொருள் பின் வருமாறு:
“ஒரு குவளை தண்ணீர் கொடுத்தவனுக்கு ஒரு வேளை விருந்து அளிக்க வேண்டும்.
அன்புடன் உன்னை வரவேற்கும் மனிதனை ஆர்வத்தோடு வணங்க வேண்டும்.
ஒரு காசு உனக்குக் கொடுத்தவனுக்கு ஒரு பொன் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
உன் உயிரைக் காத்து உதவிய தீரனுக்குத் திரும்ப உன் உயிரை அளிக்க எப்போதும் சித்தமாயிருக்க வேண்டும்.
இப்படி யெல்லாம் நல்லோர் உபதேசங்களை மதித்து நடப்பவன் ஒன்றுக்குப் பத்து மடங்கு நன்மை அடைவான்.
ஆனால் உண்மையில் 'சான்றோர்' எனப்படுவோரின் இலட்சணம் மேலே சொல்லப்பட்டவை மட்டும் அல்ல.
அவர்கள் மனித குலம் எல்லாம் ஒன்றென உணர்ந்தவர்கள் ; ஆதலின், அவர்களுக்கு ஒருவன் தீங்கு செய்தால், அதற்குப் பதிலாக அவர்கள் நன்மை செய்வார்கள்.
தீமைக்குப் பதில் தீமையை மறந்து நன்மை செய்வதிலே அவர்கள் ஆனந்தம் அடைவார்கள்."
தம்பி! மேலேயுள்ள குஜராத்தி கீதத்தில் கடைசி இரண்டு வரிகள் இளம் பிராயத்துக் காந்திஜியின் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்தன. அந்த வரிகளில் அடங்கி யிருக்கும் தத்துவமே அவருடைய வாழ்க்கைத் தத்துவமாயிற்று. அதுவே அவரை உலகம் போற்றி வணங்கும் மகாத்மா காந்தி ஆக்கிற்று.
---------------
6. கடல் பிரயாணம்
மோகன் தாஸின் பதினாறாவது பிராயத்தில் அவருடைய அருமைத் தந்தையார் காலமானார். காலமாவதற்கு முன்பு நீண்ட காலம் அவர் படுத்த படுக்கையாகவே இருக்கும்படி நேர்ந்தது. அப்போதெல்லாம் மோகன்தாஸ் பள்ளிக்கூடம் போன நேரம் போக மிச்ச நேரமெல்லாம் தந்தைக்குப் பணி விடை செய்வதிலேயே கழித்தார். தினமும் இரவில் தந்தைக்குக் கால்பிடித்து விடுவார். தந்தை தூங்கியபிறகோ அல்லது அவர் போகச் சொன்ன பிற்பாடோதான் தூங்கச் செல்வார்.
தந்தை இறந்த அன்று இரவு பதினோரு மணி வரையில் மோகன் தாஸ் அவருக்குக் கால் பிடித்து விட்டுக்கொண்டிருந்தார். பிறகு அவருடைய சிறிய தகப்பனார் தாம் தந்தைக்குப் பணிவிடை செய்வதாகச் சொல்லி மோகன் தாஸைப் படுக்கப் போகும்படி சொன்னார். அவ்விதமே மோகன் தாஸ் சென்றார். ஆனால் படுத்த சில நிமிஷத்துக்கெல்லாம் வேலைக்காரன் ஓடி வந்து கதவைத் தட்டி, "அப்பாவுக்கு உடம்பு அதிகமாயிருக்கிறது ; சீக்கிரம் வாருங்கள்!" என்றான். மோகன்தாஸ் தந்தையிடம் போவதற்குள் அவருடைய உயிர் பிரிந்து விட்டது. மரணத் தறுவாயில் தந்தையின் பக்கத்தில் தாம் இருக்க வில்லையே என்று காந்திஜியின் மனத்தில் குடி கொண்ட வருத்தம் என்றைக்கும் நீங்கவில்லை.
தந்தை இறந்த இரண்டு வருஷத்துக்கெல்லாம் மோகன் தாஸ் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறினார். பிறகு கலாசாலையில் சேர்ந்து படிக்கவேண்டுமென்று வீட்டுப் பெரியவர்கள் விரும்பினார்கள். பவநகரில் இருந்த ஸமால்தாஸ் கலாசாலைக்குச் சென்று அதில் சேர்ந்தார். ஆனால் அங்கே அவருக்குத் திக்குத் திசை தெரியவில்லை. ஆசிரியர்களின் உபந்நியாசங்கள் அர்த்தமாகவேயில்லை. முதல் ஆறு மாதம் எப்படியோ கழித்து விட்டு விடுமுறைக்கு வீடு வந்து சேர்ந்தார்.
காந்தி குடும்பத்தாரின் பழைய நண்பர் மாவ்ஜி தவே என்னும் பிராமணர். அவர் சிறந்த அறிவாளி. மோகன் தாஸ் விடுமுறைக்கு வந்திருந்தபோது மாவ்ஜி தவே ஒரு சமயம் அவருடைய வீட்டுக்கு வந்தார். குடும்ப யோக க்ஷேமங்களை விசாரிக்கையில், மோகன் தாஸ் ஸமால் தாஸ் கலாசாலையில் சேர்ந்து படிப்பதைப் பற்றி அறிந்தார். பிறகு அவர் குடும்பத்தின் நன்மையை முன்னிட்டுப் பின்வருமாறு கூறினார்:- "காலம் இப்போது மாறிவிட்டது. தக்க படிப்பும் பட்டமும் இல்லாமல் உங்கள் தந்தையைப்போல் பெரிய உத்தியோகத்துக்கு நீங்கள் ஒருவரும் வரமுடியாது. குடும்பத்தில் இந்தப் பிள்ளை ஒருவன் தான் படிக்கிறான். ஆனால் இவன் கலாசாலையில் படித்து பி. ஏ. பரீட்சை தேறுவதென்றால் அதற்கு நாலு வருஷம் ஆகும். அப்போதும் மாதம் ஐம்பது அறுபது ரூபாய் சம்பளத்துக்குத்தான் தகுதியாவான். பிறகு சட்டம் படிப்பதென்றால் இன்னும் இரண்டு வருஷம் ஆகும். இப்போதே இவனை இங்கிலாந்துக்கு அனுப்பினால் மூன்றே வருஷத்தில் பாரிஸ்டர் பட்டத்துடன் திரும்பி வரலாம். பாரிஸ்டர் ஆவது மிகவும் சுலபம் என்று கேள்வி. பாரிஸ்டர் ஆகிவிட்டால், வக்கீல் தொழில் நடத்தினாலும் நடத்தலாம். திவான் முதலிய பெரிய உத்தியோகத்துக்கும் வரலாம். கால தாமதம் செய்ய வேண்டாம். இந்த வருஷமே இவனை இங்கிலாந்துக்கு அனுப்புங்கள்."
மாவ்ஜி தவேயைக் காந்தி குடும்பத்தார் "ஜோஷிஜி ' என்று அழைப்பது வழக்கம். ஜோஷிஜி சொன்ன காரியம் மோகன் தாஸுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. எப்படியாவது கலாசாலையை விட்டால் போதுமென்று அவருக்கு இருந்தது.
ஆனால் மோகன் தாஸின் சகோதரரும் தாயாரும் பெரிதும் கலக்கத்துக்கு உள்ளானார்கள். சகோதரருக்குப் பணத்தைப் பற்றிக் கவலை. அதோடு இவ்வளவு இளம் வயதுச் சிறுவனைத் தனியாக வெளிநாட்டுக்கு அனுப்பலாமா என்று கவலை!
தாயாருக்கோ தன்னுடைய கடைக்குட்டிப் புதல்வனைப் பிரியவே மனம் இல்லை. "நம்முடைய குடும்பத்தில் இப்போது பெரியவர் உன்னுடைய சித்தப்பாதான். அவரைப் பார்த்து யோசனை கேள்!" என் று தாயார் கூறினார்.
மோகன் தாஸின் குடும்பம் அப்போது இராஜகோட்டை யில் இருந்தது. சிறிய தந்தையோ போர்பந்தர் சமஸ்தானத்தில் உத்தியோகம் பார்த்தார்.
“சித்தப்பாவைப் பார்த்துப் பேசிவிட்டு அப்படியே போர் பந்தர் நிர்வாக அதிகாரியான மிஸ்டர் லெலியையும் பார். சமஸ்தான த்திலிருந்து உன்னுடைய படிப்புக்கு ஏதாவது உதவி கிடைக்கலாம் !" என்று சகோதரர் சொன்னார்.
இங்கிலாந்துக்குப் போக வேண்டும் என்று மோகன் தாஸக்கு ஒரே ஆத்திரமா யிருந்தது. ஆகவே, மூன்று நாள் கட்டை வண்டியிலும் ஒரு நாள் ஒட்டகத்தின் மேலும் பிரயாணம் செய்து போர்பந்தரை அடைந்தார்.
ஆனால் போன காரியம் கைகூடவில்லை. "உனக்கு அநுமதி நான் தர முடியாது; உன் னுடைய தாயார் சம்மதித்தால் சுக மாகப் போய் வா ! என் ஆசி உனக்கு எப்போதும் உண்டு!" என் று சித்தப்பா கூறினார்.
மிஸ்டர் லெலிக்கு அவர் சிபார்சுக் கடிதம் கொடுக்கவும் மறுத்து விட்டார். "நீயாகவே போய்ப் பார். உன்னுடைய உறவு முறையைச் சொல்லிக்கொள் !" என்றார்.
அவ்விதமே மோகன் தாஸ் துரையைப் பார்க்கச் சென்றார். "முதலில் - பி. ஏ. பரீட்சையில் தேறிவிட்டு அப்புறம் என்னை வந்து பார் !" என்று ஒரே வாக்கியத்தில் சொல்லி அனுப்பி விட்டார் லெலி துரை.
வெறுங்கையுடன் மோகன் தாஸ் இராஜகோட்டைக்குத் திரும்பினார். ஜோஷிஜி மறுபடியும் வந்தார். "பாரிஸ்டர் படிப்புக்காகக் கடன் பட்டாலும் பாதகமில்லை !" என்று வற்புறுத்தினார். மோகன் தாஸ் தமது மனைவியின் நகைகளை விற்றுவிட லாம் என்றார். சகோதரர், "அது கூடாது. நான் எப்படியாவது பணம் தேடிக்கொடுக்கிறேன் !" என்று சொன்னார்.
ஆனால் தாயார் மட்டும் மனம் இளகி அநுமதி கொடுக்கும் வழியாக இல்லை. இங்கிலாந்துக்குப் போகும் இளைஞர்கள் பல வழிகளிலும் கெட்டுப் போகிறார்கள் என்று அவர் கேள்விப் பட்டிருந்தார். இதைப்பற்றி மோகன்தாஸிடம் சொன்ன போது, அவர், "அம்மா! என்னை நம்பமாட்டீர்களா? நீங்கள் செய்ய வேண்டாம் என்று சொல்லும் காரியங்களை நான் எந்த நாளும் செய்ய மாட்டேன் !" என்றார்.
பேசார்ஜி ஸ்வாமி என்னும் ஜைன பிக்ஷ - ஜோஷிஜியைப் போலவே காந்தி குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர். அவ ரிடம் சென்று மோகன் தாஸின் அன்னை யோசனை கேட்டார்.
பேசார்ஜி ஸ்வாமியார் மோகன் தாஸை வரவழைத்தார். அன்னையையும், கூடவைத்துக்கொண்டு அவரிடம் மூன்று பிரதிக்ஞைகள் வாங்கிக் கொண்டார். "மதுபானம் செய்வதில்லை ; மாமிச உணவு சாப்பிடுவதில்லை; சிற்றின்பத்தில் ஈடுபடுவதில்லை" என்பவைதான் அந்த மூன்று பிரதிக்ஞைகள். இவ்விதம் புதல்வர் பிரதிக்ஞை செய்து கொடுத்த பிறகு அன்னையின் உள்ளம் தைரியம் அடைந்தது. மோகன் தாஸ் இங்கிலாந்து செல்ல அனுமதி கிடைத்தது.
மோகன் தாஸ் தம் இளம் மனைவியையும் சின்னஞ்சிறு குழந்தையையும் பிரிந்து பம்பாய்க்குப் பிரயாணமானார். சகோதரரும் அவரைக் கப்பலில் ஏற்றுவதற்காகக் கூடச் சென்றார். அவர்கள் பம்பாய் சேர்ந்த சமயம் ஜூன் மாதம். ஜூன், ஜூலை மாதங்களில் கடலில் கொந்தளிப்பு அதிகமிருக்கு மென்றும், சமீபத்திலேதான் ஒரு கப்பல் மூழ்கிவிட்ட தென்றும் சில நண்பர்கள் தெரிவித்தார்கள். மோகன் தாஸின் சகோதரருக்கு மிக்க கவலை ஏற்பட்டது. எனவே, ஒரு நண்பரின் வீட்டில் மோகன் தாஸ் சில மாதம் இருந்துவிட்டு அப்புறம் பிரயாணப் படலாமென்று தீர்மான மாயிற்று. பிரயாணச் செலவுக்கான பணத்தை இன்னொரு உறவினரிடம் கொடுத்துவிட்டு மோகன் தாஸின் தமையனார் இராஜகோட்டைக்குத் திரும்பினார்.
இதற்குள்ளே பம்பாயிலுள்ள பனியா சாதியாரிடையே இந்தச் செய்தி பரவியது. பனியா வகுப்பில் அது வரையில் யாரும் கப்பல் ஏறியதில்லை. எனவே, சாதிக் கூட்டம் ஒன்று கூட்டப் பட்டது. மோகன் தாஸை இந்தக் கூட்டத்துக்கு அழைத்து விசாரணை செய்தார்கள். மோகன் தாஸ் சிறிதேனும் அஞ்சாமலும் தயங்காமலும் தாம் இங்கிலாந்து போகப்போவது பற்றிச் சொன்னார். சாதித் தலைவர், “கடற் பிரயாணம் செய்வது நம் மதத்துக்கு விரோதம் அங்கே மது மாமிசம் சாப்பிட நேரிடும். போகக் கூடாது !" என்றார்.
" என் தாயாரிடம் நான் பிரதிக்ஞை செய்து கொடுத்திருக்கிறேன். மத விரோதம் செய்யாமல் என்னால் இங்கிலாந்தில் இருக்க முடியும்!" என்றார் மோகன் தாஸ்.
சாதித் தலைவரும் சாதிக் கூட்டமும் மோகன் தாஸ் கூறியதை ஒப்புக் கொள்ளவில்லை.
"இந்த வாலிபன் பிடிவாதக்காரன். இவனைச் சாதிப்பிரஷ் டேம் செய்திருக்கிறோம். மதவிரோதமாகப் பிரயாணம் செய்யும் இவனுக்கு உதவி செய்வோருக்கு அபராதம் விதிக்கப்படும்" என்று சாதிக் கூட்டத்தின் கட்டளை பிறந்தது.
இதனால் மோகன் தாஸ் மனங் கலங்கி விடவில்லை. ஆனால் இங்கிலாந்துக்குப் புறப்படுவதில் அவருக்கு ஆத்திரம் அதிகமாயிற்று. இதைத் தம் சகோதரர் கேள்விப் பட்டால் என்ன செய்வாரோ, என்னமோ? ஆகையால் உடனே புறப்பட்டுவிட விரும்பினார். தமையனார் யாரிடம் பிரயாணச் செலவுக்குப் பணம் கொடுத்து விட்டுச் சென்றாரோ அவரிடம் போய்க் கேட்டார். அந்த உறவினர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். கொடுத்தால் தாம் சாதிப் பிரஷ்டத்துக்கு உள்ளாக நேரிடும். அதற்குத் தாம் தயாராயில்லை யென்று சொல்லிவிட்டார்.
பிறகு மோகன் தாஸ் பம்பாயி லிருந்த இன்னொரு குடும்ப நண்பரைத் தேடிப் பிடித்து விஷயத்தைச் சொன்னார். கப்பல் செலவுக்குப் பணம் கடனாகக் கொடுக்கும்படியும் தமையனாரி டம் அதை வாங்கிக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார். அவர் அதற்கு இணங்கிப் பணம் கொடுத்ததுடன் மோகன் தாஸை உற்சாகப்படுத்தினார். அவர் செய்த இந்தக் காரியம் இந்தியாவும் உலகமும் செய்த புண்ணியத்தினால் தான் என்று சொல்ல வேண்டும். மோகன் தாஸுக்கு உதவி செய்த அந்தக் குடும்ப நண்பரை வாழ்த்துவோமாக.
உடனே மோகன் தாஸ் இங்கிலாந்து வாழ்க்கைக்குரிய உடைகளைத் தயாரித்துக் கொண்டார். குறிப்பிட்ட தினத்தில் கப்பல் ஏறினார். அதே கப்பலில் ஜூனாகாத் வக்கீலான ஸ்ரீ திர யம்பக ராய் மஜும்தார் என்பவர் பிரயாணம் செய்தார். மஜம் தாரின் அறையிலேயே மோகன் தாஸம் பிரயாணம் செய்யும் படி நண்பர்கள் ஏற்பாடு செய்தார்கள். மோகன் தாஸைக் கவ னித்துக் கொள்ளும்படியும் மும்தாரைக் கேட்டுக் கொண் டார்கள். செப்டம்பர் 4-ந் தேதி பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கப்பல் புறப்பட்டது.
---------
7. லண்டன் வாழ்க்கை
கப்பலில் சென்ற போது மோகன் தாஸ் தமது அறையை விட்டு அதிகம் வெளிக் கிளம்புவதில்லை. கப்பலில் கொடுத்த உணவையும் அருந்துவதில்லை. பம்பாயிலிருந்து கொண்டு வந் திருந்த மிட்டாய்களையும் பழங்களையுமே சாப்பிட்டு வந்தார்.
கப்பலில் இருந்த மற்றப் பிரயாணிகள் எல்லாரும் ஆங்கிலேயர்கள். அவர்களுடன் கலந்து பழகும்படி மஜூம்தார் உபதேசித்தது ஒன்றும் பயன்படவில்லை. மோகன் தாஸ் இளம் பிராயத்தில் பெரிய சங்கோசி. வேற்று மனிதர்களுடன் நெருங்கிப் பழகமாட்டார். அதோடு ஆங்கிலேயர் பேசுகிற ஆங்கில பாஷையை மோகன் தாஸினால் புரிந்து கொள்ள முடியவில்லை.
எனினும், ஆங்கிலப் பிரயாணி ஒருவர் மோகன் தாஸிடம் எப்படியோ அபிமானம் கொண்டு அவரைப் பேச்சுக்கு இழுத் தார். செங்கடலைத் தாண்டிய பிற்பாடு அந்த ஆங்கிலேயர் மோகன் தாஸ்க்கு, "இனி மாமிச போஜனம் செய்யாமல் சரிப்பட்டு வராது!" என்று போதிக்கத் தொடங்கினார். "இங் கிலாந்து குளிர் மிகுந்த தேசம். அங்கே இந்த விரத மெல்லாம் அனுஷ்டிக்க முடியாது!" என்று எச்சரித்தார்.
எனினும் மோகன் தாஸின் உள்ளம் சிறிதும் சலிக்கவில்லை. அன்னைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வந்தார்.
ஸெளதாம்டன் துறைமுகத்தில் இறங்கி லண்டனுக்குச் சென்றதும் விக்டோரியா ஹோட்டலில் தங்கினார். அங்கே கொடுத்த உணவை அவரால் சாப்பிட முடியவில்லை. ஆனால் செலவு மட்டும் ஏராளமாயிற்று.
லண்டனில் நாலு பேருக்கு மோகன் தாஸ் கரம் சந்திர காந்தி கடிதம் கொண்டு வந்திருந்தார். அவர்கள் டாக்டர் பி. ஜே. மேத்தா, ஸ்ரீ தளபதி ராம் சுக்லா, ராஜா ரஞ்சித்சிங், ஸ்ரீ தாதாபாய் நௌரோஜி ஆகிய பிரமுகர்கள்.
இவர்களில் டாக்டர் மேத்தா என்பவர் மோகன் தாஸை விக்டோரியா ஹோட்டலில் சந்தித்து, "ஹோட்டல் வாசம் உனக்குச் சரிப்பட்டு வராது. ஏதாவது ஓர் ஆங்கிலக் குடும்பத்தில் பணம் கொடுத்துச் சாப்பிடுவதுதான் சௌகரியம். அதற்கு நான் ஏற்பாடு செய்யும் வரையில் என் நண்பர் ஒருவரோடு இரு!" என்று சொன்னார்.
அந்த நண்பரும் மோகன் தாஸுக்கு மாமிசம் சாப்பிடும்படி உபதேசிக்கத் தொடங்கினார். "எழுத்து வாசனை அறியாத தாயாரிடம் செய்து கொடுத்த பிரதிக்ஞையை ஏன் கட்டிக் கொண்டு அழுகிறாய்? " என்று கேட்டார்.
இதனாலும் மோகன் தாஸின் மன உறுதி தளரவில்லை.
பின்னர், ஆங்கிலக் குடும்பம் ஒன்றில் அவர் வசிப்பதற்கு டாக்டர் மேத்தாவும் ஸ்ரீ சுக்லாவும் ஏற்பாடு செய்தார்கள்.
அந்தக் குடும்பத்தின் தலைவியான மூதாட்டி மோகன் தாஸை மிக்க அன்போடு நடத்தினார். ஆயினும், இங்கேயும் உண வு சரிப்பட்டு வரவில்லை. அவர்கள் கொடுத்த இரண்டு ரொட்டித் துண்டங்கள் மோகன் தாஸுக்குப் போதவில்லை. அதிகம் கேட்கவும் சங்கோசமா யிருந்தது.
நல்ல வேளையாக இதற்குள் மோகன் தாஸுக்குக் கால் முளைத்திருந்தது! அதாவது லண்டன் நகரில் அங்குமிங்கும் சுற்ற ஆரம்பித்திருந்தார். சைவ போஜன சாலை ஒன்று அவரு டைய கண்ணில் பட்டது. அதற்குள் நுழைந்தார். "மரக்கறி உண வின் மகிமை" என்ற பெயருடன் ஆசிரியர் ஸால்ட் எழுதிய புத்தகம் ஒன்றும் அந்த ஹோட்டலில் விற்றார்கள். மோகன் தாஸ் அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டு போய்ப் படித்தார். அதன் பலனாகச் சைவ உணவில் மோகன் தாஸுக்குப் பற்றுதலும் நம்பிக்கையும் உண்டாயின. அன்னைக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக மட்டுமில்லாமல் தம்முடைய சொந்த இஷ்டத்தின் பேரிலேயே சைவ உணவு விரதத்தில் உ றுதி கொண்டார். உணவு பற்றிய இன்னும் பல புத்தகங்கள் படித்து ஆராய்ச்சிகளும் நடத்தத் தொடங்கினார்.
லண்டனுக்குப் போன புதிதில் மோகன் தாஸ் ஆங்கிலேய கனவான்களைப் போல் தோரணையாக வாழ்க்கை நடத்த முயன்றார். நவநாகரிக உடுப்புகள் தைத்துக் கொண்டார். நிலைக் கண்ணாடியின் முன்னால் நின்று தலையை ஜோராக வாரிக் கொள்வதில் தினம் பத்து நிமிஷம் சென்றது. பிறகு ஆங்கில நடனம் கற்றுக் கொள்ள முயன்றார். நடனப் பயிற்சிக்குத் தாள ஞானம் அவசியமாயிருந்தது. இதற்காக ஆங்கில சங்கீதம் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். ஒரு வயலினும் வாங்கினார். இதெல்லாம் சொற்ப காலந்தான் நீடித்திருந்தது. ஆங்கில நாகரிக மோகம் மூன்று மாதத்திற்குள்ளே மோகன் தாஸை விட்டுச் சென்றது.
"இங்கிலாந்தில் நாம் எப்போதும் வாசிக்கப்போகிறோமா? பாரிஸ்டர் படிப்பு முடிந்ததும் தாய்நாடு திரும்ப வேண்டியது தானே? இந்த அயல் நாட்டு நாகரிகம் எல்லாம் நமக்கு என் னத்திற்கு?" என்று எண்ணினார். "நம்முடைய ஒழுக்கத்தினால் நாம் கனவானாக வேண்டுமே தவிர இத்தகைய வெளி வேஷங்களினால் கன வானாவதில் என்ன பயன்?" என்றும் சிந்தனை செய்தார். இத்தனை நாளும் தாம் கொண்டிருந்தது பொய்யான வாழ்க்கை இலட்சியம் என்று தெரிந்து ஆங்கில நாகரிக ஆசையை விட்டுத் தொலைத்தார்.
தம்பி! இதற்கு முன்னர் காந்திஜியின் சிறு பிராயத்துக் குறைபாடுகள் சிலவற்றைச் சொல்லி யிருக்கிறேன். மேலேயும் குறிப்பிட்டிருக்கிறேன்.
”இப்பேர்ப்பட்ட மகானுடைய சரித்திரத்தில் இம்மாதிரி சிறு குறைகளை யெல்லாம் ஏன் சொல்ல வேண்டும்?" என்று நீ கருதலாம். அல்லது, "இந்த மாதிரி குறைகள் இருந்தவர் எப்படி மகாத்மா ஆனார்? ” என் று ஆச்சரியப்படலாம்.
இதை யெல்லாம் பற்றி மகாத்மா தமது சுய சரிதத்தில் தாமே எழுதியிருக்கிறார் என்பதை நீ ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். இம்மாதிரி சுய சரிதம் எழுதும் பிரமுகர்கள் சாதாரணமாகத் தங்களுடைய குறைகளைத் தாங்கள் சொல்ல மாட்டார்கள். தங்களுடைய பெருமையை உயர்த் தக்கூடிய முறையிலேயே சுய சரிதம் எழுதுவார்கள். தங்களுடைய குறைகளைக்கூடக் குணங்களைப் போல் மாற்றி மெருகு கொடுத்து எழுதுவார்கள்.
இதிலே தான் காந்திஜிக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண வேண்டும். காந்திஜி உள்ளது உள் ள படி தம்மிடமிருந்த குறைபாடுகளை எடுத்துச் சொல்லி யிருக்கிறார். இதுமட்டுமல்ல; இந்தியாவின் மாபெரும் தலைவராகி, ”மகாத்மா" என்று மக்கள் போற்றத் தொடங்கிய பிற்பாடு கூட, தாம் செய்த தவறுகளை வெளிப்படையாக எடுத்துச் சொல்வது அவர் வழக்கம். 1922-ம் ஆண்டில் ஒரு சமயம் - இமாலயத் தவறு செய்து விட்டேன்" என்று மகாத்மா காந்தி கூறியது பலராலும் பல தடவை பல இடங்களில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
உண்மையில், இத்தகைய சத்தியப் பற்றினாலே தான் காந்திஜி உலகம் போற்றும் மகா புருஷர் ஆனார்.
காந்திஜியின் இளம்பிராயக் குறைகளைப் படித்துத் தெரிந்து கொண்டதிலிருந்து நீ இன்னொரு விஷயம் அறிய வேண்டும். மகாத்மா பிறக்கும்போதே மகாத்மாவாகப் பிறக்கவில்லை. சிறு பிராயத்தில் உன்னையும் என்னையும் போலவே பல குறைகள் உள்ள சாதாரணச் சிறுவராகவே இருந்தார். ஆயினும் சத்தியத்தின் உறுதியினாலும் மனத்தின் திட சங்கல்பத்தினாலும் இடை விடாத பிரயாசையினாலும் அந்தக் குறைகளை யெல்லாம் போக்கிக்கொண்டு மகாத்மா ஆனார். இது நமக்கெல்லாம் நம்பிக்கை தரவேண்டிய விஷயம். நம்மிடம் உள்ள குறைகளையும் நாம் பிரயாசைப்பட்டுப் போக்கிக் கொள்ளலாம். மகாத்மாவைப் போல் எல்லாரும் அவ்வளவு மகிமையடைய முடியாதுதான். மகாத்மாவைப் போன்ற மகா புருஷர் ஒருவர் உலகத்தை உத்தாரணம் செய்வதற்கு இரண்டாயிரம் வருஷத்துக்கொரு முறையே தோன் றக்கூடும். ஆயினும் பிரயாசைப்பட்டு நம்மை நாம் உயர்த்திக் கொள்ளலாம். நம்முடைய மனச்சாட்சியை நாம் திருப்தி செய்து கொள்ளலாம். "குறைகளைப் போக்கிக் கொள்ள நம்மால் முடியாது !" என்று நிராசை யடைந்து மேலும் மேலும் படுகுழியில் இறங்கி முழுகிப் போய்விட வேண்டிய தில்லை. நம்முடைய குறைகளுடன் நாம் போராடி வெற்றி கொள்ளலாம்.
இதற்காகத்தான் மகாத்மாவின் சிறு பிராயத்துக் குறைகளை விட்டுவிடாமல் நான் குறிப்பிட்டேன். முன் அத்தியாயங்களைப் படித்த உன் தாயார், "இதெல்லாம் குழந்தைக்கு எதற்காகச் சொல்கிறீர்கள்? இதனால் நன்மை என்ன?" என்று கேட்டாள். “உண்மையே வடிவான ஒருவரைப்பற்றி எழு தும்போது உண்மையைத்தானே எழுத வேண்டும்? அதனால் நிச்சயமாக நன்மையே விளையும்!" என்று நான் மறுமொழி சொன்னேன். நீ என்ன நினைக்கிறாய், தம்பி! சந்தோஷம். என்னுடன் ஒத்தே நீயும் அபிப்பிராயப் படுகிறா யல்லவா? அப்படியானால் மோகன் தாஸின் இங்கிலாந்து வாழ்க்கையில் இன்னொரு சம்பவத்தையும் கேள்.
அந்தக் காலத்தில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்ற மாணவர்கள் கலியாணமானவர்களா யிருந்தாலும் பிரம்மச்சாரிகளைப் போல் நடிப்பது வழக்கமாம். இப்படி நடிப்பதினால் ஆங்கிலக் குடும்பங்களில் உள்ள கலியாணமாகாத பெண்களுடன் அவர்கள் சல்லாபம் செய்வது சாத்தியமா யிருந்தது. ஆங்கிலேயரில் பலர் விசால நோக்கம் படைத்தவர்கள். தங்கள் பெண்கள் இந்திய இளைஞர்கள் மேல் காதல் கொண்டால் அவர்களைக் கலியாணம் செய்து கொள்வதற்குப் பெற்றோர் ஆட்சேபிப்ப தில்லை. இதை அறிந்து பல இந்திய இளைஞர்கள் பிரம்மச்சாரிகளைப்போல் நடித்துப் பொய் வாழ்க்கை நடத்தினார்கள்.
மோகன் தாஸம் இங்கிலாந்தில் வசித்தபோது சில காலம் இத்தகைய பொய் வாழ்க்கை நடத்தினார்., ஆங்கில சமூகத்தில் சாதாரணமாக இளமை மணம் கிடையாது. ஆகையால், பத்தொன்பது வயதேயான மோகன் தாஸ்-க்கு "நான் கலியாணம் ஆனவன். எனக்கு மனைவி இருக்கிறாள்' என்று சொல்லிக் கொள்ள மிகவும் சங்கோசமாயிருந்தது.
ஓர் ஆங்கில மூதாட்டி மோகன் தாஸின் பேரில் அபிமானம் கொண்டார். தம் வீட்டுக்கு அவரை அடிக்கடி அழைத்தார். அந்த வீட்டிலிருந்த கலியாணமாகாத பெண்கள் மோகன் தாஸிடம் கூச்சமின்றிச் சிநேக முறையில் பழகினார்கள்.
ஆனால் ஒரு பெண் விஷயத்தில் மோகன் தாஸுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அவளைத் தமக்குக் கலியாணம் செய்துவைக்க அந்த வீட்டு மூதாட்டி எண்ணுகிறாளோ என்று தோன்றியது. இதனால் கவலைக்குள் ஆழ்ந்தார். அவருடைய மனச்சாட்சி அவரை உறுத்தியது. கடைசியாக, மோகன்தாஸ் பின் வரும் கடிதத்தை அந்த அம்மாளுக்கு எழுதினார் :-
"பிரைட்டனில் நாம் முதன் முதலில் சந்தித்த தினத்திலிருந்து தாங்கள் என்னிடம் மிகவும் பிரியம் காட்டி வந்திருக்கிறீர்கள். என்னைத் தங்கள் புதல்வனாகவே எண்ணி என் பொருட்டுக் கவலை எடுத்து வந்திருக்கிறீர்கள். எனக்கு மணம் செய்து வைக்க வேண்டும் என்று விரும்பி அதற்காக இளம் பெண்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்து வருகிறீர்கள். ஆனால் காரியம் மிஞ்சிப் போவதற்கு முன்னால், தங்களுடைய அன்புக்கு நான் அருகனல்லன் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தங்கள் வீட்டுக்கு வரத் தொடங்கியபோதே நான் இல்லறத்தான் என்பதைத் தெரிவித்திருக்க வேண்டும். இங்கிலாந்தில் இந்திய மாணாக்கர்கள் பிரும்மசாரிகள் போல் நடிப்பதை அறிந்து நானும் அவ்வாறு செய்து வந்தேன். என் தவறினை இப்போது உணர்கிறேன். சிறுவனாயிருந்த-போதே எனக்கு மணம் ஆகிவிட்டது. இப்போது எனக்கு ஒரு புதல்வனும் உளன். இத்தனை காலம் இந்த விவரங்களைத் தங்களுக்கு அறிவியா திருந்த தன் பொருட்டு என் உள்ளம் வருந்துகிறது. இப்பொழுதேனும் உண்மை சொல்லுவதற்கு இறைவன் எனக்குத் தைரியம் அளித்தது பற்றி மகிழ்ச்சி யடைகிறேன். என்னைத் தாங்கள் மன்னித்து விடுவீர்களா? எனக்குத் தாங்கள் அறிமுகம் செய்து வைத்த இளம் பெண் விஷயத்தில் தகுதியற்ற உரிமை எதையும் நான் எடுத்துக் கொண்டதில்லை யென்று உறுதி கூறுகிறேன். நான் ஏற்கெனவே கலியாணமானவன் என்னும் விஷயம் தங்களுக்குத் தெரியாதாதலின், எங்களிருவருக்கும் விவாகமாக வேண்டுமென் று தாங்கள் விரும்பியது இயல்பே. விஷயம் இதற்கு மேல் போகக் கூடாது என்று உண்மை கூறலானேன்."
"இக்கடிதத்தைப் படித்ததும் தங்கள் அன்புக்கு அபாத்திரனாக நான் நடந்து கொண்டதாகத் தாங்கள் கருதினால் அதற்காகத் தங்கள் மீது வருத்தப்பட மாட்டேன். தாங்கள் இதுகாறும் என் மீது காட்டி வந்த பிரியத்துக்கும், செய்த உதவிக்கும் என்றென்றைக்கும் நன்றிக் கடன் பட்டவனாவேன். இதற்குப் பிறகும் தாங்கள் என்னைப் புறக்கணியாமல், தங்கள் வீட்டுக்கு வரத் தகுதியுள்ளவனாகக் கருதினால் நான் மகிழ்ச்சி யடைவேனென்று சொல்ல வேண்டியதில்லை. தங்கள் அன்புக்கு இது மற்றோர் அறிகுறி என்று கருதுவதுடன் அந்த அன்புக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளவும் முயல்வேன்."
மறு தபாலில் அந்த ஆங்கில மூதாட்டியிடமிருந்து பின் வரும் பதில் வந்தது :
"உண்மைய றிவிக்கும் உமது கடிதம் பெற்றேன். நாங்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சி யடைந்தோம். இடி இடி யென்று சிரித்தோம். நீர் கூறும் பொய்மைக் குற்றம் மன்னிக் கற்பாலதே. ஆனால் உண்மை நிலையை எங்களுக்கு அறிவித்தது நலமே யாகும். உமக்கு நான் அனுப்பிய அழைப்பு இதனால் மாறுபடவில்லை. அடுத்த ஞாயிற்றுக்கிழமை கட்டாயமாக உம்மை எதிர்பார்க்கிறோம். உமது குழந்தை மணத்தைப் பற்றி எல்லா விவரங்களையும் கேட்டு மகிழ மிகுந்த ஆவல் கொண்டிருக்கிறோம்."
மேற்படி பதில் கிடைத்த பிறகு மோகன் தாஸின் மனத்தில் இருந்த பெரும் பாரம் நீங்கிற்று. இதற்குப் பிறகு சந்தர்ப்பம் நேர்ந்த போதெல்லாம் தமக்கு விவாகம் ஆகிவிட்டது என்ற விவரத்தை அவர் தெரிவித்து விடுவது வழக்கமாம் !
-------------
8. நாஸ்திகத்தில் வெறுப்பு
இங்கிலாந்தில் இரண்டு வருஷ வாசத்துக்குப் பிறகு பிரம்ம ஞான சங்கத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுடன் மோகன் தாஸுக்குச் சிநேகம் ஏற்பட்டது. அவர்கள் கீதை படித்துக் கொண்டிருந்தார்கள். மோகன் தாஸையும் தங்களுடன் படிப்பதற்கு அழைத்தார்கள். அதுவரையில் மோகனர் கீதை படிப்பதில்லை. ஆங்கிலேயர் தூண்டும் வரையில் தாம் பகவத் கீதை படிக்கவில்லையே என்பதை எண்ணி அவர் வெட்கப் பட்டார். பிறகு அவர்களுடனே பகவத் கீதையின் சம்ஸ்கிருத சுலோகங்களையும் ஸர் எட்வின் அர்னால்டின் மொழி பெயர்ப்பையும் படிக்கத் தொடங்கினார். பகவத் கீதை விலை மதிக்க முடியாத ஒரு ஞானப் பொக்கிஷம் என்று அவருக்குத் தோன்றியது. ஞான நூல்களில் பகவத் கீதைக்கு ஒப்பான து வேறொன்றுமில்லை யென்பது மகாத்மா காந்தி பிற்காலத்தில் கொண்ட உறுதியான தீர்மானம்.
காந்திமகான் தினந்தோறும் நடத்தி வந்த மாலைப் பிரார்த் தனைகளில் பகவத் கீதை இரண்டாவது அத்தியாய சுலோகங்கள் பாராயணம் செய்யப்பட்டு வந்ததை நீ அறிந்திருப்பாய். அந்த இரண்டாவது அத்தியாய சுலோகங்களில் இரண்டு சுலோகங்களின் கருத்து பின் வருமாறு :
"மனிதன் இந்திரிய விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பதனால் அவற்றில் பற்றுதல் உண்டாகிறது. பற்றுதலிலிருந்து ஆசை பிறக்கிறது. ஆனச குரோதமாகக் கொழுந்து விட்டெரிகிறது. குரோதத்தினால் சிந்தை மயக்கமும், நினைவுத் தவறுதலும் உண்டாகின்றன. நினைவுத் தவறுதலால் புத்தி நாசமடைகிறது. புத்தி நாசத்தினால் மனிதன் அழிகிறான்.”
மேற்படி கருத்துடைய பகவத்கீதை சுலோகங்களை முதன் முதலில் படித்தபோதே மோகன் தாஸின் இதயத்தில் ஞான தீபத்தை ஏற்றி வைத்தன.
பிறகு அந்தச் சகோதரர்கள் கூறியதன் பேரில் ஸர் எட்வின் அர்னால்டின் "ஆசிய தீபம்" என்ற நூலையும் மோகன் தாஸ் படித்தார். "ஆசிய தீபம் " என்பது புத்த பகவானுடைய சரித்திரம். ஏற்கெனவே கருணையும் தயாளமும் குடிகொண்டிருந்த மோகன் தாஸின் உள்ளத்தை அந்த நூல் பெரிதும் கவர்ந்தது.
இந்தச் சமயத்தில் பெஸண்டு அம்மையார் பிரம்மஞான சங்கத்தை சேர்ந்தார். அவரையும் சங்கத் தலைவரான பிளாவட்ஸ்கி அம்மையையும் பார்ப்பதற்கு மேற்கூறிய சகோதரர்கள் மோகன் தாஸை அழைத்துச் சென்றார்கள். பிரம்மஞான சங்கத்தில் சேரும்படியாகவும் அவருக்குச் சொன்னார்கள். "என்னுடைய சொந்த மதத்தைப் பற்றி இன்னும் நான் சரியாகத் தெரிந்து கொள்ள வில்லையே ! அப்படித் தெரிந்து கொள்வதற்கு முன்னால் எந்த மதச் சங்கத்திலும் சேர நான் விரும்பவில்லை" என்று மோகன்தாஸ் சொல்லி விட்டார். ஆனாலும் பிரம்மஞான சங்கத்தாரின் நூல்களைப் படித்ததனால் பெரும் பயன் அடைந்தார். ஹிந்து மதத்தில் குருட்டு நம்பிக்கைகளே அதிகம் என்று பாதிரிமார்களின் பிரசாரத்தினால் ஏற்பட்டிருந்த தப்பபிப்பிராயம் நீங்கிற்று.
சைவ போஜன சாலையொன்றில் உத்தமரான கிறிஸ்துவர் ஒருவரை மோகன் தாஸ் சந்தித்தார். இராஜ கோட்டையில் வசித்தபோது சில பாதிரிமார்களின் அபத்தப் பிரசாரத்தினால் கிறிஸ்துவ மதத்தைப் பற்றித் தமக்கு ஏற்பட்டிருந்த தாழ் வான அபிப்பிராயத்தை அவரிடம் கூறினார். அந்தக் கிறிஸ்துவ நண்பர், "நான் புலால் உண்பதில்லை ; மதுபானமும் செய்வதில்லை; கிறிஸ்துவ வேதம் மது மாமிசம் அருந்தும்படி கட்டளை யிடவும் இல்லை. நீர் தயவு செய்து பைபிள் வாசிக்க வேண்டும்" என்று கூறி, ஒரு பைபிள் புத்தகமும் வாங்கிக் கொடுத்தார்.
பைபிள் புத்தகத்தில் பழைய ஏற்பாடு மோகன் தாஸுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் புதிய ஏற்பாடும், முக்கியமாக ஏசுநாதர் மலைமேலிருந்து செய்த உபதேசங்களும், மோகன் தாஸின் இதயத்தில் இடம் பெற்றுவிட்டன. "தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர். வல து கன்னத்தில் அடித்தவனுக்கு இடது கன்னத்தையும் காட்டுக. உங்கள் சட்டையை ஒருவன் எடுத்துச் சென்றால் அவனுக்கு உங்கள் போர்வையையும் கொடுங்கள் !" என்னும் கிறிஸ்துவ சமயத்தின் சாரமான உபதேசங்கள் மோகன் தாஸுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தன. பகவத் கீதையின் உட்பொருளும், "ஆசியதீபத்தில் அடங்கிய தத்துவமும், ஏசுநாதரின் உபதேசமும் சாராம்சத்தில் ஒன்றுதான் என் று மோகன் தாஸ் அறிந்தார். மொத்தத்தில், துறவும் தியாகமுமே மேலான சமய வாழ்க்கை என்ற நம் பிக்கை உண்டாயிற்று.
கார்லைல் எழுதிய "வீரரும் வீர பூஜையும்" என்ற நூலில் "வீர தீர்க்கதரிசி " என்னும் அத்தியாயத்தைப் படித்து முகம்மது நபி அவர்களின் கடும் விரத வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொண்டார். எனவே, இஸ்லாம் மதத்தின் பேரிலும் மோகன் தாஸ்க்கு மரியாதை ஏற்பட்டது.
இதே காலத்தில் இங்கிலாந்தில் நாஸ்திகப் பிரசாரம் ஒரு பக்கத்தில் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அதனால் மோகன தாஸின் மனம் சலிக்கவில்லை.
இங்கிலாந்தில் சார்லஸ் பிராட்லா என்பவர் இந்தியாவின் பிரசித்தி பெற்ற நண்பர். இந்தியாவுக்காக ரொம்பவும் பரிந்து பேசியவர். ஒழுக்கத்திலும் ஜீவகாருண்யத்திலும் சிறந்தவர். ஆனால் அவர் "கடவுள் உண்டு" என்னும் நம்பிக்கை தமக்கு இல்லை-யென்றும், சன்மார்க்கமே உண்மையான சமயம் என் றும் சொல்லி வந்தார்.
சார்லஸ் பிராட்லா காலமானபோது அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு லண்டனில் அப்போது வசித்த அவ்வளவு இந்தியர்களும் சென்றிருந்தார்கள். மோகன் தாஸும் சென்றிருந்தார். திரும்பி வரும்போது அவர் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்திருக்க நேர்ந்தது.
புகைவண்டி நிலையத்தில் ஏகக் கூட்டமாயிருந்தது. கூட் டத்திலிருந்த நாஸ்திகர் ஒருவர் அங்கு நின்ற ஒரு கிறிஸ் துவப் பாதிரியாரை வீண் வம்புக்கு இழுத்தார்.
“ நல்லது ஐயா, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதாக நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா?" என்று அவர் கேட்டார்.
"ஆம், நம்புகிறேன்" என்று அந்த உத்தமப் பாதிரியார் சாந்தமான குரலில் பதில் சொன்னார்.
"அப்படியானால், தயவு செய்து சொல்லுங்கள். தங்கள் கடவுள் எவ்வளவு பெரியவர்? அவர் எங்கே இருக்கிறார்?"
"நமக்கு அறியுந் திறன் உண்டானால், நம் இருவரின் இருதயங்களிலும் அவர் இருக்கிறார்" என்றார் பாதிரியார்.
"ஓ! இதுதானே வேண்டாம் என்கிறேன்? என்னைக் குழந்தை என் று நினைத்துக் கொண்டீர்களா?" என்று அந்த நாஸ்திக வீரர் கூறிவிட்டுப் பெரும் வெற்றி அடைந்தவரைப் போல் சுற்றிலும் உள்ளவர்களைப் பார்த்தார்.
கிறிஸ்தவப் பாதிரியாரோ அடக்கத்தை அணிகலனாகப் பூண்டு மௌனம் சாதித்தார்.
இயற்கையிலேயே பண்பாடு பெற்ற மோகன் தாஸின் இளம் உள்ளம் மேற்படி வாக்குவாதத்தினால் நாஸ்திகத்தின் பேரில் அதிகமான வெறுப்புக் கொண்டது.
--------------
9. பாரிஸ்டர் ஆனார்
பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக அல்லவா மோகன்தாஸ் இங்கிலாந்துக்குப் போனார்? அது என்ன ஆயிற்று என்று இப் போது சொல்லுகிறேன்.
பாரிஸ்டர் ஆவது மிகவும் சுலபம் என்று ஜோஷிஜி கூறியது முற்றும் உண்மை. இந்தியாவில் உள்ளதுபோல் இங்கிலாந்தில் சட்ட கலாசாலைகளுக்குச் சென்று படிக்கவேண்டியதில்லை.
பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்கு ஒரு மாணவன் இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யவேண்டும். அவை என்ன வென்று சொல்லட்டுமா? தம்பி ! (1) மாணாக்கர்களும் பாரிஸ்டர் - நீதிபதிகளுமாகச் சேர்ந்து உட்கார்ந்து பலமுறை விருந்து சாப்பிட்டாக வேண்டும். (2) குறிப்பிட்ட சில முக்கிய பரீட்சைகளில் மட்டும் தேறவேண்டும்.
விருந்து சாப்பிடுவது என்னத்திற்கு என்று நீ அறிய விரும்பலாம். முற்காலத்தில் சட்ட மாணாக்கர்களின் தொகை மிகக் குறைவாயிருந்தபோது பாரிஸ்டர்களும் நீதிபதிகளும் சட்ட மாணாக்கர்களும் கலந்து பழகுவதற்காகவும் சட்ட விஷயங்களைப் பற்றிச் சர்ச்சைகள் செய்வதற்காகவும் இந்த விருந்துகள் ஏற்படுத்தினார்களாம். இப்போது மாணாக்கர்களின் தொகை மிக அதிகம். பாரிஸ்டர்களும் நீதிபதிகளும் எங்கேயோ ஒரு மூலையில் உட்கார்ந்து தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். மாணவர்களுடன் அவர்கள் பேசுவதற்கே வசதி இராது. எனவே, இந்த விருந்துகள் ஏற்படுத்திய நோக்கம் இப்போது நிறைவேறுவதேயில்லையாம். ஆனாலும் சம்பிரதாயத்தை மட்டும் விடாமல் அனுஷ்டித்து வருகிறார்களாம்.
தம்பி! இந்தியா தேசத்திலே தான் நாம் பழைய சம்பிரதாயங்களை அதிகமாய்க் கட்டிக்கொண்டு அழுகிறோம் என்று சாதாரணமாய் நினைக்கிறோமல்லவா? ஆங்கிலேயர் நம்மை விடப் பழைய சம்பிரதாயங்களில் அதிகப் பற்று உள்ளவர்கள், நம்மை விட அதிகமாக ஆங்கிலேயர் குருட்டு நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் உள்ளவர்கள் என்றுகூடச் சொல்லலாம்.
ஒரு காலத்தில் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் 200 அங்கத்தினர்தான் இருந்தார்களாம். ஆகையால் 200 ஆசனங்கள் மட் டும் பார்லிமெண்டில் போடப்பட்டிருந்ததாம். இப்போது 650 அங்கத்தினர்கள் இருந்தபோதிலும் பழைய சம்பிரதாயப்படி 200 ஆசனங்கள் தான் இருக்கின்றனவாம். முன்னால் வந்தவர்கள் தான் ஆசனத்தில் உட்காரலாம். மற்றவர்கள் பின்னால் நிற்கவேண்டியதுதான் ! எப்படியிருக்கிறது கதை ! பாரிஸ்டர் ஆவதற்காக விருந்துகள் நடக்கும் விஷயமும் இப்படிப்பட்ட சம்பிரதாயந்தான்.
பாரிஸ்டர் விருந்துகள் மூன்று மாதத்துக்கு இருபத்துநாலு நடைபெறும். இவற்றில் குறைந்த பட்சம் ஆறு விருந்துகளுக்கு மாணவர்கள் கட்டாயம் போகவேண்டும். இம்மாதிரி மூன்று வருஷ காலம் விருந்துகளுக்குப் போய்த் தீரவேண்டும்.
விருந்து என்றால், இலவசச் சாப்பாடு அல்ல. இரண்டு அல்லது மூன்று ரூபாய் ஒவ்வொரு மாணாக்கனும் கொடுக்க வேண்டியிருக்கும். பணம் கொடுக்க வேண்டியது கட்டாயம். ஆனால் சாப்பிடுவது கட்டாயம் அல்ல ; சும்மா உட்கார்ந்திருந்துவிட்டுத் திரும்பலாம். பொதுவாக விருந்தில் நல்ல உணவு வகைகளும் மதுபான வகைகளும் கொடுக்கப்பட்ட படியால் மாணவர்கள் ஒரு கை பார்த்து விடுவார்களாம் ! மோகன் தாஸுக்கோ அவருடைய விரதம் இருந்தது. புலால் கலந்த உணவும் மதுபானமும் அவருக்கு உதவா. முதலிலெல்லாம் மோகன்தாஸ் சும்மா உட்கார்ந்து பார்த்திருந்து-விட்டுத் திரும்பினார். எனவே அவருடைய பங்கும் தங்களுக்குக் கிடைக்கும் என்பதற்காக மற்ற மாணவர் கோஷ்டிகள் தங்களுடன் சேர்ந்து உட்காரும்படி மோகன் தாஸை வற்புறுத்தி அழைக்கும்படி ஏற்பட்டது. அப்பொழுதல்லாம் விருந்துகளில் மோகன்தாஸ்க்கு ஏகக் கிராக்கி !
கொஞ்ச காலத்துக்குப் பிறகு மோகன் தாஸுக்குத் தைரியம் பிறந்து, பாரிஸ்டர் - நீதிபதிகளுக்காகத் தனியாகக் கொடுக்கப்பட்டு வந்த பழங்களையும் கறிவகைகளையும் தமக்கும் கொடுக்க வேண்டுமென்று கேட்டு பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டாராம்.
'சாப்பாட்டு ராமன்' என்று நம் ஊரில் வேடிக்கையாகச் சொல்கிறோமல்லவா? இதுபோலவே இங்கிலாந்தில் சாதாரணமாய்ச் ' சாப்பாட்டு பாரிஸ்டர்' என்று சொல்லுவதுண்டாம்.
விருந்து விஷயம் இப்படியிருக்க ; பரீட்சை சமாசாரம் என்ன வென்று கேள். இரண்டே இரண்டு விஷயம் பற்றிய பரீட்சைகள் நடக்கும். ஒன்று ரோமன் சட்டம் ; இன்னொன்று ஆங்கில நாட்டின் பழமைச் சட்டம். இவற்றில் தனித் தனிப் பகுதிகளுக்குப் பரீட்சைக்குப் போகலாம். பரீட்சைகளுக்குப் பாடபுத்தகங்கள் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் யாரும் சிரமப்பட்டுப் படிப்பதில்லை. இரண்டு அல்லது மூன்று மாதம் இலேசாகக் குறிப்புகளைப் படித்துவிட்டுப் பரீட்சைகளில் தேறிவிடலாம். பரீட்சைக் கேள்விகள் மிகவும் சுலபமானவை. பரீட்சைப் பரிசோதகர்களோ தாராள மனம் உள்ளவர்கள். ஆகையால் பரீட்சைக்கு எழுதுகிறவர்களில் 100-க்கு 95 பேர் முதல் 99 பேர் வரையில் தேறிவிடுவார்-களாம்!
இப்படி இங்கிலாந்தில் பரீட்சைகளைச் சுலபமாய் வைத்திருந்தார்கள் ; இதனாலே தான் படிப்பு முடிந்ததும் ஆங்கில இளைஞர்கள் பல அரிய காரியங்களைச் சாதிப்பதற்கு முடிந்தது.
நம்முடைய நாட்டிலோ, பரீட்சைகளை எவ்வளவு கஷ்ட மாகச் செய்யலாமோ அவ்வளவு கஷ்டமாகச் செய்து வைத்தார்கள்! இதனால் பரீட்சைகளில் தேறி ஒரு மாணாக்கன் வெளியே வருவதற்குள் அவனுடைய அறிவின் சக்தியெல்லாம் செலவழிந்துபோய் உடலும் அறிவும் சோர்ந்து விடுகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுங்கூட இன்னமும் அத்தகைய பரீட்சைகளையே நமது நாட்டில் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். ஆனால் இதையெல்லாம் உன்னிடம் சொல்வதில் பயன் என்ன? பரீட்சைகள் கஷ்டமாயிருக்கவேண்டும் என்று நீயா சொல்லுகிறாய்? போகட்டும் !
பாரிஸ்டர் பட்டத்துக்குரிய பரீட்சைகள் இவ்வளவு சுலபமாக இருந்தும் மோகன் தாஸ் அவற்றைக் கூடியவரையில் கஷ்டமாக்கிக்கொள்ள முயன்றார்! குறிப்பிட்ட பாட புத்தகங்களை யெல்லாம் மிகவும் சிரமப்பட்டுப் படித்தார் ! ரோமன் சட் டம், ஆங்கிலச் சட்டம் எல்லாம் படித்தார்.
இவ்வளவு படித்தும் நேரம் பாக்கியிருந்தது. வீண் பொழுது போக்க மனமின்றி லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்குப் போகத் தீர்மானித்தார். அந்தப் பரீட்சைக்குப் பழைய லத்தீன் பாஷையும், புதிய ஐரோப்பிய பாஷை யொன் றும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது! லத்தீன் பாஷை பாரிஸ்டர் வேலைக்கு மிகவும் பயன்படும் என்று மோகன் தாஸ் கேள்விப்பட்டார் ; எனவே லத்தீன் படிக்கத் தொடங்கினார். ஆனால் முதல் தடவை பரீட்சைக்குப் போனதில் லத்தீன் பாஷையில் தேறவில்லை. இன்னும் அதிகப் பிடிவாதத்துடன் படிக்கத் தொடங்கினார். படிப்பதற்கு அனுசரணையாக வாழ்க்கை முறையை மேலும் எளியதாக்கிக் கொண்டார். எண்ணெய் அடுப்பு ஒன்று வாங்கித் தினம் காலையில் அவரே உணவு தயார் செய்து கொண்டார். காலை உணவு ஓட் தானியக் கூழும் கோக்கோவுந்தான். மாலையில் மீண்டும் அறையிலேயே ரொட்டியும் கோக்கோவும் தயாரித்துச் சாப்பிட்டார். மத்தியான த் தில் மட்டும் வெளியில் சைவ போஜன சாலை ஒன்றில் சாப்பிட் டார். இவ்விதம் வாழ்வு முறையை எளியதாக்கிக் கொண்ட காரணத்தினால், பணமும் மிச்சமாயிற்று ; படிப்பதற்குச் சாவகாசமும் அதிகம் கிடைத்தது. தினமும் ஒரு ஷில்லிங் மூன்று பென்ஸ் செலவில் காலட்சேபம் நடந்தது. மாதம் ஐந்து பவுன் மிச்சமாயிற்று. கடைசியில், லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சையிலும் (லத்தீன் பாஷை உள்படத்) தேறிவிட்டார் !
தம்பி ! லண்டனில் மேற்கண்டவாறு எளிய வாழ்க்கை நடத்தியது மோகன் தாஸுக்குக் கஷ்டமாயிருக்கவில்லையாம்; சந்தோஷமாகவே இருந்ததாம். இதைப் பற்றிக் காந்திஜி தம் சுய சரிதத்தில் எழுதியிருப்பதைக் கேள் :-
“எளிய வாழ்வு முறையைக் கைக்கொண்டதால் என் வாழ்க்கை சந்தோஷமற்றதாயிற்று என்று யாரும் எண்ணவேண் டாம். அதற்கு மாறாக இந்த மாறுதல் மூலம் என் அகநிலைமையும் புற நிலைமையும் ஒற்றுமைப் பட்டதைக் கண்டேன். ஆகவே புதிய வாழ்க்கை உண்மையோடு ஒட்டிய வாழ்க்கையாயிற்று. இதை நான் உணர்ந்தபோது என் ஆத்மா (எல்லையற்ற) ஆனந்த சாகரத்தில் மிதந்தது."
இவ்வாறு மோகன்தாஸ் லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சையிலும் பாரிஸ்டர் பரீட்சையிலும் தேறுவதற்குப் பிரயத்தனம் செய்துகொண்டு அதே சமயத்தில் தமக்குத் தாமே ஆத்ம பரீட்சைகளும் நடத்திக் கொண்டிருந்தார். அவற்றில் வெற்றியடைந்து வந்தார்.
மூன்று வருஷ காலம் லண்டனில் வசித்த பிறகு கடைசி யில் 1891-ம் வருஷம் ஜூன்மீ 10௳ மோகன்தாஸ் காந்தி பாரிஸ்டர் ஆனார். மறுநாள் 11௳ இந்தியாவின் ஹைக்கோர்ட்டு களில் வக்கீல் தொழில் நடத்தும் உரிமை பெற்றார். பிறகு ஒரு தினங்கூட இங்கிலாந்தில் அவர் தாமதிக்கவில்லை. ஜூன் 12௳ யன்றே இந்தியாவுக்குப் பிரயாணமானார்.
--------------
10. கவலைக் கடல்
எஸ். எஸ். அஸ்ஸாம் என்னும் கப்பலில் மோகன் தாஸ் தாய் நாடு நோக்கிப் பிரயாணம் செய்தபோது அவருடைய மனம் கவலைக்கடலில் ஆழ்ந்திருந்தது. பாரிஸ்டர் பரீட்சையில் தேறி விட்டாரே தவிர, வக்கீல் தொழில் நடத்தலாம் என்னும் நம்பிக்கை ஏற்படவில்லை. சட்ட கோட்பாடுகள் படித்திருந்தாரே தவிர, அவற்றை ஆதாரமாகக் கொண்டு கோர்ட்டுகளில் வாதமிடலாம் என்னும் தைரியம் உண்டாகவில்லை.
மேலும், இந்தியச் சட்டங்களைப் பற்றி இங்லாந்தில் அவர் ஒன்றுமே கற்கவில்லை யல்லவா? இந்தியச் சட்டங்கள் தெரியாமல் இந்தியக் கோர்ட்டுகளில் எப்படி வாதமிடுவது என்று எண்ணி அதைரியப்பட்டார். கடல் நடுவில் ஆதரவு ஒன்றுமில்லாமல் விடப்பட்டவனுடைய உள்ளத்தைப் போல் அவருடைய உள்ளம் தவித்தது. பம்பாயில் அதற்கு முன்னாலேயே பிரசித்தி யடைந்திருந்த ஸர் பிரோஸிஷா மேத்தா என்னும் தேசபக்தப் பிரமுகர் நீதி மன்றங்களில் சிம்மத்தைப்போல் கர்ஐனை செய்வார் என்று மோகன் தாஸ் கேள்விப்பட் டிருந்தார். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பரீட்சைக்குப் படித்ததைக் கொண்டு இந்தியக் கோர்ட்டுகளில் ஸர் பிரோஸிஷா மேத்தா எவ்விதம் கர்ஜனை செய்திருக்க முடியும் என்பது மோகன் தாஸுக்கு ஒரே வியப்பாயிருந்தது. ஸர் பிரோஸிஷா மேத்தாவைப் போன்ற பிரபலமும் வருமானமும் அடையும் எண்ணம் லவலேசமும் மோகன் தாஸுக்கு இருக்கவில்லை. ஜீவனத்துக்கு வேண்டிய பணமாவது சம்பாதிக்க முடியுமா என்பதே அவருக்குச் சந்தேகமா யிருந்தது.
இந்த விஷயத்தைப் பற்றி இங்கிலாந்திலிருந்தபோதே மோகன் தாஸுக்குக் கவலை ஏற்பட் டிருந்ததாம். இந்திய மாணாக்கர்களிடம் அன்பு கொண்டு புத்திமதி கூறிவந்த மிஸ்டர் பிரடரிக் பிங்கட் என்னும் ஆங்கிலேயரைப் பார்க்கும்படி ஒரு நண்பர் கூறினாராம். அவ்விதமே மோகன் தாஸ் சென்று பிங்கட் என்பவரைப் பார்த்தாராம். மோகன் தாஸின் கவலை இன்னதென்பதைப் பிங்கட் தெரிந்து கொண்டதும் பின் வருமாறு புத்திமதி சொன்னாராம் :- "ஒவ்வொரு வரும் பிரோஸிஷா மேத்தா ஆக முடியாது. வக்கீல் தொழில் செய்வதற்கு மேத்தாவைப்போல் மேதாவியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சாதாரண முயற்சித் திறமையும், நாணயமும் இருந்தால் போதும். உம்முடைய கஷ்டம் என்ன வென்று தெரிந்து கொண்டேன். உமக்குப் பொதுப் படிப்பு ரொம்பக் குறைவு. வக்கீல் தொழில் செய்வதற்கு உலக ஞானம் அவசியம். மனித சுபாவம் தெரிந்திருக்க வேண்டும். ஒருவனுடைய முகத்தைப் பார்த்தே அவனுடைய குணங்களை அறியும் திறமை வேண்டும். அதோடு சரித்திர அறிவு மிகவும் அவசியம். நீரோ இந்தியாவின் சரித்திரம் கூடப் படித்ததில்லை. ஊருக்குப் போனதும் இந்திய சரித்திர புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். மனித சுபாவத்தை அறிவதற்கு இன்னும் சில நூல்களை வாங்கிப் படியுங்கள். அதைரியப்பட வேண்டாம்!"
இம்மாதிரி பிங்கட் என்பவர் சொன்ன புத்திமதியை மோகன் தாஸ் மறக்கவேயில்லை. முக்கியமாக, வக்கீல் தொழிலில் வெற்றி பெறுவதற்கு முயற்சியும், நாணயமும் இருந்தால் போதும் என்று கூறியது அவருடைய மனத்தில் ஆழப் பதிந்திருந்தது. எனவே, மனத்தில் கவலை அதிகமாகும்போ தெல்லாம் பிங்கட் கூறியதை ஞாபகப் படுத்திக் கொண்டு மோகன் தாஸ் தைரியம் பெற முயன்றார்.
பாரிஸ்டர் மோகன் தாஸ் இந்தியாவுக்குப் பிரயாணமானது ஜூன் மாதத்தில் என்று சொன்னேனல்லவா? ஜூன் ஜூலை மாதங்களில் அரபிக் கடலில் கொந்தளிப்பு அதிக மாயிருக்கும். ஏடன் துறைமுகத்திலிருந்து அலைகள் வர வரப் பெரிதாகிக் கப்பலைப் பாடாய்ப் படுத்தின. இது காரணமாகப் பிரயாணிகளில் பலர் நோய்வாய்ப் பட்டார்கள். ஒருவருமே அறையை விட்டு வெளிவருவதில்லை. ஆனால் மோகன் தாஸ் பூரண செளக்கியத்துடன் இருந்தார். கப்பலின் மேல் தட்டிலே நின்று பெரிய பெரிய அலைகள் வந்து கப்பலை மோதும் காட்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அம்மாதிரி பெரும் அலைகள் அவருடைய உள்ளத்திலேயும் அடித்துக் கொண்டிருந்தன. கப்பல் இந்தியாவை நெருங்க நெருங்க உள்ளத்தின் அலைகளும் பெரிதாயின. பம்பாயிலிருந்து இங்கிலாந்துக்குப் புறப்படும் தறுவாயில் சாதிக் கட்டுப்பாடு என்னும் தொல்லை வந்து குறுக்கிட்டது அவர் நினைவில் இருந்தது. திரும்பித் தாய்நாட்டை அடைந்த பிறகும் அந்தத் தொல்லைக்கு ஆளாகும்படி நேருமோ என்னமோ? - இதுபோன்ற குருட்டு வழக்கங்களை யெல்லாம் ஒழித்து இந்தியாவின் சமூக வாழ்க்கையில் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டு மென்று. மோகன் தாஸின் இளம் உள்ளத்தில் பற்பல சிந்தனைகள் தோன்றிக் கொண்டிருந்தன.
ஆம் ; தம்பி ! மோகன் தாஸ் பின்னால் மகாத்மா காந்தி ஆவதற்கு அவசியமான அஸ்திவாரம் அப்போதே அவருடைய உள்ளத்தில் போடப்பட்டு வந்தது. இதுபோல் இன்னும் எத்தனையோ தடவை மோகன் தாஸ் கப்பல் பிரயாணம் செய்யும் படியாக நேரும். ஒவ்வொரு தடவையும் வெளியே கடல் அமைதியா இருந்தாலும் அவர் உள்ளத்தில் சிந்தனை அலைகள் மோதிக் கொண்டிருக்கும். கப்பலிலிருந்து கரையிலே இறங்கியதும் மிகவும் கஷ்டமான நிலைமைகளை அவர் சமாளிக்க வேண்டி யிருக்கும். மோகன் தாஸ் சிறிதேனும் அதைரியப் படாமல் நின்று சமாளிப்பார். இதையெல்லாம் இந்தச் சரித்திரத்தின் பின் பகுதிகளில் நீ பார்ப்பாய்.
--------------
11. கோர்ட்டில் முதல் வழக்கு
பாரிஸ்டர் மோகன் தாஸ் காந்தி பம்பாய்த் துறைமுகத்தில் இறங்கியதும் மிகத் துயரம் தரும் செய்தி அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தது. மோகன் தாஸ் இங்கிலாந்திலிருந்த போதே அவருடைய அருமைத் தாயார் காலமாகி விட்டார், தூரதேசத்தில் இருக்கும்-போது இதைத் தெரிவித்து அவரைத் துன்பத்துக்கு ஆளாக்க வேண்டாமென் று அவருடைய சகோதரர் மேற்படி செய்தியைக் கடிதத்தில் எழுதவில்லை. கப்பலை விட்டு இறங்கியவுடனே தெரியப்படுத்தினார்.
மோகன் தாஸின் மனத்தில் இருந்த எத்தனையோ எண்ணங்கள் அந்தச் செய்தியினால் பங்கமுற்றுப் போயின. அன்னை தன்னை வரவேற்றுத் தழுவிக் கொண்டு மகிழ்வார் என்று எதிர்பார்த்தார். "இங்கிலாந்தில் மூன்று வருஷம் வசித்தேன். ஆயினும் விரத பங்கம் செய்யவில்லை. தங்களுக்கு அளித்த மூன்று வாக்குறுதிகளையும் நிறைவேற்றினேன்" என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்பினார். இந்த விருப்பங்கள் நிறைவேறுவதற்கில்லை. ஆயினும் மோகன் தாஸ் அன்னையை நினைத்து அழுது புலம்பிக்கொண்டிருக்கவில்லை. செய்ய வேண்டிய வைதிகக் கிரியைகளைச் செய்து விட்டு வாழ்க்கைக்குரிய தொழிலைத் தொடங்குவதில் கவனம் செலுத்தினார்.
மோகன் தாஸின் தமையனார் அவரைப்பற்றி ஆகாசக் கோட்டைகள் பல கட்டியிருந்தார். பாரிஸ்டர் பரீட்சையில் தேறி வந்திருக்கும் தம் சகோதரர் பெயரும் புகழும் பெற்றுப் பாரிஸ்டர் தொழிலில் பணம் நிறையச் சம்பாதிக்கப் போகிறார், என்று நம்பியிருந்தார். தம்பி இளையவர் பாரிஸ்டர் தொழிலில் தொடங்குவதற்கு வேண்டிய எல்லா விதமான ஏற்பாடுகளையும் மூத்தவர் செய்து வைத்திருந்தார்.
எனவே, பம்பாயில் 'பாரிஸ்டர்' என்ற போர்டு தொங்க விட்டுக் கொண்டு மோகன் தாஸ் தொழில் செய்ய ஆரம்பித்தார். ஆனால், தம்பி ! பாரிஸ்டர் மோகன் தாஸுக்குக் கிடைத்த முதல் வழக்கை அவர் நடத்திய இலட்சணத்தைப் பற்றிக் கேட்டாயானால் உனக்கு ஒரே ஆச்சரியமாயிருக்கும் ; உன்னால் நம்பவே முடியாது. காந்தி மகாத்மாவே தமது சுய சரிதத்தில் எழுதியிரா விட்டால் யாராலுமே நம்ப முடியாது.
வாதம் செய்வதில் உலகத்திலேயே யாரும் இணையில்லை யென்று பிற்காலத்தில் புகழ் பெற்றவர் காந்திஜி. லட்சக்கணக்கான மக்களின் முன்னால் ஆயிரமாயிரம் பொதுக்கூட்டங்களில் பேசியவர் காந்திஜி. கவர்னர் ஜெனரல்கள், பிரதம மந்திரிகள் உள்பட உலகத்தின் பிரசித்த இராஜதந்திரிகள் எல்லாரும் திகைத்துத் திணறும்படியாகத் தமது கட்சியை எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தவர். அத்தகையவர் பம்பாய் 'ஸ்மால் காஸ்' கோர்ட் ஒன்றில் ஒரு சிறு வழக்கில் மாமிபாய் என்னும் பெண்மணியின் சார்பாக ஆஜரானார். வழக்கில் மமிபாய் பிரதிவாதி. எனவே, வாதி தரப்புச் சாட்சிகளை பாரிஸ்டர் மோகன் தாஸ் குறுக்கு விசாரணை செய்ய வேண்டியிருந்தது. முதல் சாட்சியைக் குறுக்கு விசாரணை செய்வதற்காக எழுந்து நின்றார். ஆனால் ஒன்றும் கேட்கத் தோன்றவில்லை. தலை சுழல ஆரம்பித்தது. நீதி மன்றமும் நீதிபதியும் சாட்சிகளும் எல்லாருமே சுழலுவதாய்த் தோன்றியது. ஒரு கேள்வியும் கேட்காம லேயே ஆசனத்தில் உட்கார்ந்தார். கட்சிக்காரி மமிபாயின் பிரதிநிதி பக்கத்தில் இருந்தார். அவரிடம் தம்மால் வழக்கு நடத்த முடியா தென் றும் வேறொரு வக்கீலை அமர்த்திக் கொள்ளும்படியும் சொல்லி விட்டு வெளியேறினார்.
இம்மாதிரி தயக்கத்துக்கும் திகைப்புக்கும் 'சபைக் கோழைத்தனம்' என்று சொல்வார்கள். வாழ்க்கையின் ஆரம்பத்தில் காந்தி மகாத்மா சபைக் கோழையாயிருந்தார் என்பது மிக ஆச்சரியகரமான விஷயம் இல்லையா?
இந்த முதல் அநுபவத்துக்குப் பிறகு பாரிஸ்டர் மோகன் தாஸ் கோர்ட்டுக்குப் போவதை நிறுத்தி விட்டார். வழக்குகள் சம்பந்தமான விண்ணப்பங்கள் எழுதிக் கொடுப்பதில் தமக்கு ஆற்றல் உண்டு என்பதைக் கண்டுபிடித்தார். இந்த வேலை செய்யத் தொடங்கினார். ஆனால் இதில் வருமானம் போதிய அளவு கிடைக்கவில்லை.
உபாத்தியாயர் ஆகலாம் என்ற விருப்பம் உண்டாயிற்று. ஆங்கில பாஷையில் நல்ல தேர்ச்சி இருந்தபடியால் அந்த பாஷையை நன்றாகக் கற்பிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது . "ஓர் ஆங்கில உபாத்தியாயர் தேவை. தினம் ஒரு மணி நேரம் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ. 75 " என்ற விளம்பரத்தைப் பார்த்து விட்டு விளம்பரம் செய்திருந்த நபரிடம் போனார். மோகன் தாஸ் பி. ஏ. பட்டதாரி அல்ல என்று தெரிந்ததும் அவரை வேண்டாம் என்று சொல்லி விட்டார் விளம்பரம் செய்தவர். எப்படி யிருக்கிறது கதை !
"உலகத்திலேயே ஆங்கில பாஷையைப் பிழைகள் இல்லாமலும் லாகவமாகவும் கையாளக்கூடிய ஒரு சிலரில் காந்திஜியும் ஒருவர் " என்று நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படிப் பட்டவர் வாழ்க்கை தொடங்கிய போது, அவரை ஆங்கிலம் கற்பிக்க லாயக்கில்லாதவர் என்று சொல்லி விட்டார்கள் !
அதன்பேரில் பம்பாயில் இருப்பதில் இனிப் பயனில்லை என்று கண்டு பாரிஸ்டர் காந்தி இராஜ கோட்டைக்கே போய் விடுவது என்று தீர்மானித்தார். அதற்கு அவருடைய சகோதரரும் இசைந்தார். சகோதரர் ஏற்கெனவே இராஜ கோட்டை யில் ஒரு சின்ன வக்கீல் ; இன்னொரு வக்கீலுடன் கூட்டாகச் சேர்ந்து தொழில் நடத்திக் கொண்டிருந்தார். மோகன் தாஸம் இராஜ கோட்டைக்கு வந்து விட்டால் விண்ணப்பம் தயாரிப்பது முதலிய வேலைகள் அவருக்குக் கொடுக்கலாம் என்று நினைத்தார். பம்பாய்க் குடித்தனத்தின் செலவும் மிச்சமாகும். எனவே, ஆறு மாதம் பம்பாய் வாழ்க்கை நடத்திய பிறகு பாரிஸ் படர் மோகன் தாஸ் காந்தி இராஜ கோட்டைக்குச் சென்றார்.
பம்பாயை விட்டு மோகன் தாஸ் புறப்படுவதற்கு முன் அவருடைய பம்பாய் வாழ்க்கையைப் பற்றிச் சில விவரங்களைக் கூ றவேண்டும். குதிரை வண்டியிலோ டிராமிலோ- அவர் ஏறுவது கிடையாதாம். தினம், பம்பாய் ஹைக்கோர்ட்டுக்கு, நடந்து போவாராம் : நடந்தே திரும்பி வருவாராம். இதனால் பணம் மிச்சமான தோடு, தேக ஆரோக்யத்துக்கும் அந்த வழக்கம் உகந்ததாயிருந்ததாம். பம்பாயில் அவருடைய நண்பர்கள் பலர் அடிக்கடி நோயினால் படுத்துக் கொள்வது வழக்கமாம் ; ஆனால் காந்திஜி ஒருதடவைகூட நோய் என்று படுத்தது கிடையாதாம். தினந்தோறும் சிறிது தூரமாவது நடக்கும் வழக்கத்தைக் காந்திஜி கடைசிவரையில் கைக்கொண்டிருந்தார். "இந்த நல்ல வழக்கத்தின் நற்பயன் களை இன்றளவும் நான் அநுப் வித்து மகிழ்ந்து வருகிறேன்" என்று சத்திய சோதனை யில் மகாத்மா காந்தி எழுதியிருக்கிறார்.
பம்பாயில் இருந்தபோது பாரிஸ்டர் மோகன் தாஸுக்கு ராஜ சந்திரர் என்னும் ஒரு வர்த்தகருடன் நட்பு உண்டாயிற்று. இவர் இருபத்தைந்து வய துள்ள இளைஞர்தான். ஆனால் கவிஞர் என்றும் சதாவதானி என்றும் புகழ் பெற்றிருந்தார். காந்திஜிக்கு அவருடைய அதிசய ஞாபகசக்தி அளவற்ற வியப்பை யளித்தது. ஆனால் அவருடைய நல்லொழுக்கத்துக்காகவும் சமயங்களைப் பற்றிய ஞானத்துக்காகவுமே காந்திஜி அவர் மீது மரியாதை கொண்டார். முக்தானந்தர் என்பவரின் கீதம் ஒன்றை அவர் அடிக்கடி பாடிக் கொண் டிருப்பாராம். அந்தக் கீதத்தின் கருத்து வருமாறு :- "தினசரி வாழ்க்கையில் நான் புரியும் செயல் ஒவ்வொன்றிலும் ஆண்டவனை எப்போது காண்கிறேனோ அப்போதே கிருதார்த்தனாவேன். முக்தானந்தரின் உயிரைத் தாங்கி நிற்கும் நூலிழை ஆண்டவனே அன்றோ?"
ராய்சந்தர் பெரிய ரத்தின வியாபாரி. முத்து, வைரப் பரீட்சைகளில் அவர் கைதேர்ந்தவர். எனினும் நகைக் கடை யில் பெட்டியடியில் உட்கார்ந்து கொண்டு வியாபாரம் செய்த நேரம் போக ஏதாவது ஒரு சமய நூலைப் படித்துக் கொண்டிருப்பாராம். உலக வாழ்க்கையின் மத்தியில் தாமரை இலைத் தண்ணீரைப் போல் இருந்துகொண்டு ராய் சந்தர் கடவுளைத் தேடிக் கொண்டிருந்தார் என்பது காந்திஜிக்கு ஐயமறத் தெரிந்தது. பிற்காலத்தில் எவ்வளவோ சமய குருமார்களையும் மதத் தலைவர்களையும் காந்திஜி சந்தித்ததுண்டு ; அவர்களுடைய போதனைகளைக் கேட்டதுண்டு. ஆனால் ராய்சந்தரைப் போல் அவருடைய மனத்தை யாரும் கவர வில்லை.
இவ்வாறு ராய் சந்தரின் ஒழுக்கப்பற்றும் அறிவு மேன்மையும் சமய ஞான மும் அவரிடம் காந்திஜிக்குப் பிரமாதமான மதிப்பையும் பக்தியையும் உண்டாக்கிற்று. ஆயினும் அவரைக் காந்திஜி தம்முடைய குருநாதராக ஏற்றுக் கொள்ள வில்லை.
இந்த விஷயமாகக் காந்திஜி சொல்லியிருப்பதைக் கேள் :-
"என்னுடைய குரு நாதரை இன்னும் நான் தேடிக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் இன்று வரைக்கும் என் இருதய சிம்மாசனம் காலியாகவே இருந்து வருகிறது. ஆத்ம சாதனத்துக்கு வழிகாட்டக் குரு ஒருவர் அவசியம் என்பது ஹிந்து சமயக் கொள்கை. இதில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் அத்தகைய குருவானவர் பரிபூரண மடைந்தவரா யிருக்க வேண்டும். அரை குறைப் படிப்பும் அறிவும் உள்ளவர்களிடம் லெளகிகக் கல்வியைக் கற்றுக்கொள்ளலாம்: ஆனால் ஆத்ம ஞானம் பெறுவதற்கு இது கூடாது. பரிபூரண ஞானியையே பரம குருவாகக் கொள்ள வேண்டும். அத்தகைய குருவைப் பெறுவதற்காக நாம் நம்முடைய குறைகளை யெல்லாம் போக்கிக் கொள்ளவும் பூரணத்துவம் பெறவும் இடை விடாமல் முயன்று வர வேண்டும். நாம் செய்ய வேண்டிய முயற்சியைச் செய்துகொண்டிருந்தால், குருநாதர் கிடைப்பது இறைவனுடைய திருவுளப்படி நடக்கும்.'
இவ்விதம் மகாத்மா காந்தி தமது சுய சரிதத்தில் எழுதியிருக்கிறார். அதன்படியே அவர் வாழ்க்கை யெல்லாம் பூரணத்துவம் பெற இடைவிடாது பிரயத்தனம் செய்து வந்தார். ஆயினும் காந்திஜிக்குப் பரம குரு கிட்ட வில்லை. இறைவனுடைய திருவுள்ளம் வேறு விதமா யிருந்தது. அவரே ஆயிரக் கணக்கானவர்களுக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கும் பரம குருவாக ஏற்பட வேண்டுமென்று இறைவன் திருவுள்ளம் இருக்கையில், அவருக்குத் தகுந்த குருநாதர் கிடைப்பாரா?
------------------
12. வாழ்வில் முதல் அதிர்ச்சி
பம்பாயை விட்டுக் காந்திஜி இராஜ கோட்டை சென் றார். சகோதரர் கூறியபடியே விண்ணப்பம் எழுதிக்கொடுக்கும் வேலை அவருக்கு நிறையக் கிடைத்து வந்தது. மாதம் முந்நூறு ரூபாய் வரையில் வருமானம் கிடைத்தது. இந்த நாளில் காந்திஜிக்கு ஏற்பட்ட ஓர் அநுபவம் அவருடைய வாழ்க்கையில் முதலாவது பெரும் அதிர்ச்சியை அளித் தது. அந்த அநுபவம் இது தான்.
போர்பந்தர் ராஜாவுக்கு முடிசூட்டு நடப்பதற்கு முன்னால் அவருக்கு அந்தரங்கக் காரியதரிசியாகக் காந்திஜியின் தமையனார் வேலை பார்த்து வந்தார். ராஜாவுக்கு அச்சமயம் தப்பு யோசனை சொன்னதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த விஷயம் அப்போது பொலிடிகல் ஏஜெண்டு என்னும் பிரிட்டிஷ் சர்க்காரின் விசேஷ பிரதிநிதியினால் பரிசீலனை செய்யப் பட்டு வந்தது.
மேற்படி உத்தியோகஸ்தர் இங்கிலாந்தில் காந்திஜி இருந்த போது அவருக்குப் பரிச்சயமானவர். ஓரளவு சிநேக உரிமை பாராட்டியவர் என்றும் சொல்லலாம்.
எனவே அந்த நட்பைப் பயன்படுத்திக் கொண்டு மோகன் தாஸ் பொலிடிகல் ஏஜெண்டைப் பேட்டி காண வேண்டும் என்றும் தம்மைப் பற்றிய தப்பு அபிப்பிராயத்தைப் போக்க வேண்டும் என்றும் காந்திஜியின் தமையனார் விரும்பினார்.
இந்த யோசனை காந்திஜிக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. தமையனார் நிரபராதியா-யிருக்கும் பட்சத்தில் தம்முடைய கட்சியைச் சொல்லிவிட்டுத் தைரியத்துடன் முடிவை எதிர் பார்ப்பதுதான் சரியான முறை என்று கருதினார். அவ்விதமே சகோதரரிடம் கூறினார். ஆனால் சகோதரருக்கு இந்தத் தர்மோபதேசம் ஒன்றும் பிடிக்கவில்லை. "உனக்குக் கத்தியவாரைப் பற்றி ஒன்றும் தெரியாது. இங்கே எல்லாம் செல்வாக்கின் மூலம் தான் நடைபெறுகிறது. உனக்கு நன்றாய்த் தெரிந்த மனிதரிடம் என்னைப்பற்றி ஒரு வார்த்தை சொல்வது உனக்கு மிகவும் எளிய காரியம். அதை நீ செய்யவில்லை யென்றால் சகோதர விசுவாசம் உனக்குக் கொஞ்சமும் இல்லை யென்று தான் ஏற்படும் !" என்று கூறினார்.
தமக்கு எவ்வளவோ உபகாரங்கள் செய்திருக்கும் தமையனாருடைய மனத்தைப் புண்படுத்த விரும்பாமல் காந்திஜி மேற்படி உத்தியோகஸ்தரைப் பார்க்கச் சென்றார்.
சந்திப்பின் ஆரம்பத்திலேயே இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள வித்தியாசம் நன்கு தெரிந்தது. பழைய சிநேகத்தை நினைப்பூட்டியதும் துரையின் கடுகடுப்பு அதிகமாயிற்று. "அதைத் துர் உபயோகப்படுத்திக் கொள்ள வந்தீரா??' என்னும் கேள்வி அந்தக் கடுகடுத்த முகத்தின் நெற்றியில் தெளிவாக எழுதி ஒட்டி யிருந்தது.
ஆயினும் காந்திஜி தமது சகோதரரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். உடனே துரை பொறுமை இழந்து, “உம்முடைய சகோதரர் பெரிய சூழ்ச்சிக்காரர். அவரைப்பற்றி உம்மிடம் எதுவும் கேட்க நான் விரும்பவில்லை. அதற்கு நேரமும் எனக்குக் கிடையாது. உம்முடைய தமையனார் சொல்ல வேண்டியது ஏதேனும் இருந்தால் முறைப்படி எழுதித் தெரிவித்துக் கொள்ளட்டும்" என்றார்.
ஆனாலும் காந்திஜி நிறுத்தாமல் பிடிவாதமாக மேலே பேச ஆரம்பித்தார். "தயவு செய்து நான் சொல்வதைக் கேட்டு விடுங்கள். அப்புறம் எது வேணுமானாலும் செய்யுங்கள் !" என்றார். துரைக்குத் தலைக்குமேல் கோபம் வந்து விட்டது. "போம் ! நீர் போகலாம்!" என்றார். காந்திஜி போக வில்லை. துரை தமது சேவகனைக் கூப்பிட்டுக் காந்தியை வெளியே அனுப்பும்படி கட்டளை யிட்டார். சேவகன் வந்து காந்திஜியின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியபடி வெளியே கொண்டு வந்து விட்டான்.
இதைப் பற்றிய ஒரு வேடிக்கைச் சம்பவத்தைச் சொல்கிறேன் கேள், தம்பி ! 1926-ம் ஆண்டில் காந்திஜி தமது சுய சரிதத்தை 'எங் இந்தியாவில் எழுதி வந்தார். அப்போது இந்தக் கட்டம் வந்தது. வாரா வாரம் மகாத்மா சுய சரிதத்தை மொழிபெயர்த்துப் போட்டுக் கொண்டிருந்த ஒரு தினப் பத்திரிகையின் சுவர் ஒட்டும் போஸ்டர் விளம்பரங்களில் "மகாத்மா காந்தி கழுத்தைப் பிடித்துத் தள்ளப்பட்டார்!" என்று கொட்டை எழுத்துக்களில் அச்சிட்டிருந்தது. அந்த சமயம் இந்தியாவின் மாபெரும் தேசியத் தலைவராக மகாத்மா ஆகி யிருந்தார். எனவே தமிழ் மக்கள் ஒரே பரபரப்படைந்து மேற்படி தினப் பத்திரிகையை வாங்கிப் படித்தார்கள். "ஓகோ! இது பழைய கதையா?" என்று எண்ணி ஆறுதல் அடைந்தார்கள். இது அந்தக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு வகைப் பத்திரிகை தர்மம். போகட்டும் ; மேலே கதைக்குச் செல்வோம்.
சேவகனால் தோளைப் பிடித்து வெளியிலே கொண்டு விடப் பட்ட மோகன் தாஸின் உள்ளம் கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் துடி துடித்தது. துரையின் பங்களா வாசலில் நின்று கொண்டு துரைக்கு ஒரு கடிதம் எழுதினார். "என்னை நீர் அவ மதித்துவிட்டீர். உமது சேவகனைக் கொண்டு தாக்கச் செய்தீர். தக்க பரிகாரம் உடனே செய்யாவிட்டால் சட்டப்படி நட வடிக்கை எடுப்பேன் !" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
துரையிடமிருந்து பளிச்சென்று பதில் வந்தது! "நீர் முரட்டுத்தனமாய் நடந்து கொண்டீர். வெளியே போகச் சொல்லியும் போகவில்லை. ஆகையால் சேவகனை விட்டு வெளியிலே கொண்டுவிடச் செய்ய வேண்டி வந்தது. உம் இஷ்டம்போல் நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்."
காந்திஜி மேற்படி பதிலுடன் வீடு திரும்பினார். சகோதர ரிடம் எல்லாம் கூறினார். துரைமீது எப்படி நடவடிக்கை எடுத் துக் கொள்வது என்று தெரிய வில்லை. அந்தச் சமயம் ஸர் பிரோஸிஷா மேத்தா இராஜ கோட்டைக்கு ஒரு வழக்கு நிமித்தமாக வந்திருந்தார். மோகன் தாஸ் ஒரு பிரபல இராஜ கோட்டை வக்கீல் மூலமாக அவரிடம் யோசனை கேட்கச் செய்தார். ஸர் பிரோஸிஷா மேத்தா கூறியதாவது :-
"காந்தி இப்போதுதான் இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்திருக்கிறார். அதனால் அவருக்கு ரோஸம் அதிகமாயிருக்கிறது. வக்கீல்களும் பாரிஸ்டர்களும் இம்மாதிரி அநுபவங்களுக்கு இந் நாட்டில் தயாராகவே இருக்க வேண்டும். பொலிடிகல் ஏஜெண்ட் மீது வழக்குத் தொடர்வதால் நன்மை எதுவும் ஏற்படாது. வெட்கத்தை வெளியில் சொல்லாமலிருப்பதே நல்லது."
இந்தப் புத்திமதி காந்திஜிக்கு நஞ்சைப் போல் இருந்தது. ஆயினும் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. “இனிமேல் இந்த மாதிரி சங்கடத்தில் ஒருநாளும் அகப்பட்டுக் கொள்ள மாட்டேன் ; சிநேகிதத்தைச் சொந்தக் காரியத்துக்கு உபயோகித்துக் கொள்ள முயல மாட்டேன் !" என்று அவர் சங்கல்பம் செய்து கொண்டார்.
மேற்படி சம்பவம் காந்திஜியின் பிற்கால வாழ்க்கைப் போக்கையே மாற்றி அமைப்பதற்கு ஏதுவாயிருந்தது.
சகோதரருக்காக என்றாலுங்கூட அந்த உத்தியோகஸ்தரிடம் சிபார்சுக்காகத் தாம் போனது தவறு என்பதை மோகன் தாஸ் உணர்ந்திருந்தார். எனினும் அந்த உத்தியோகஸ்தர் அவ்வளவு கடுகடுப்புக் கொண்டதற்கும் வெளியில் பிடித்துத் தள்ளும்படி உத்தரவிட்டதற்கும் எவ்வித நியாயமும் கிடையாது. கறுப்பு மனிதர் வாய் திறந்து பேசியதே அந்த வெள்ளைக்கார அதிகாரிக்குப் பிடிக்கவில்லை. அதிகார வெறியினால் அவர் மதிமயங்கிப் போயிருந்தபடியாலேயே அவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார். இது அவருடைய சர்வ சாதாரண வழக்கம் என்றும், யாரையும் அவர் அவமதிப்பது உண்டு என்றும் மோகன் தாஸ் தெரிந்துகொண்டார். அப்படிப்-பட்டவருடைய கோர்ட்டில் ஆஜராவ து மோகன் தாஸுக்குப் பிடிக்கவில்லை. இராஜகோட்டையில் இருந்தால் அவருடைய கோர்ட்டுக்குப் போய்த் தீரவேண்டி வரும்.
இதற்கிடையில் கத்தியவார் பிரதேசத்தின் அரசியலைப் பற்றி மோகன் தாஸ் சிறிது விசாரித்துத் தெரிந்துகொண்டிருந் தார். கத்தியவாரில் சிறு சிறு சமஸ்தானங்கள் அநேகம் இருந்தன. அந்த சமஸ்தானங்களின் ராஜாக்கள் பெரும்பாலும் சுய புத்தியற்றவர்கள். பிறரிடம் யோசனை கேட்டே எந்தக் காரியமும் செய்வார்கள். எனவே சூழ்ச்சிகளுக்கு இடம் தாராளமா யிருந்தது. ஒவ்வொரு சமஸ்தானமும் மற்ற சமஸ்தானங்களை எதிர்த்துச் சூழ்ச்சி செய்தது. ஒவ்வொரு உத்தியோகஸ்தரும் மற்ற உத்தியோகஸ்தரகளுக்கு வெடிவைக்கச் சூழ்ச்சி செய்தார்கள். எல்லோருக்கும் மேல் உத்தியோகஸ்தர் மோகன் தாஸை வெளியே தள்ளச் செய்த துரை தான். அவருடைய தயவைப் பெறுவதற்கு முதலில் அவருடைய சேவகனுடைய தயவைத் தேடவேண்டும். துரையின் கண்களும் காதுகளுமாக இருந்த சிரஸ்தார் பெரிய தகப்பன் சாமி. துரையைவிடச் சிரஸ் தாருக்கு வரும்படி அதிகம்.
மொத்தத்தில் கத்தியவாரில் அடித்த காற்றே விஷக்காற்று என்று மோகன் தாஸுக்குத் தோன்றியது. அங்கே யிருந்தால் மேற்படி விஷவாயுவினால் பாதிக்கப்படாமல் தப்புவது கடி னம் என்று எண்ணினார். அதோடு, கோர்ட்டுகளில் தம்முடைய கட்சிக்காரர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை யென்பதையும் தெரிந்து கொண்டிருந்தார். கட்சிக்காரர்களுக்கு நியாயம் கிடைக்க வேணுமானால் முறையில்லா முறைகளைக் கையாள வேண்டும். மோகன் தாஸினால் அது இயலாத காரியம்.
இப்படிப்பட்ட மோசமான நிலைமையில் அங்கே எப்படி யிருப்பது, எத்தனை நாள் அவ்விடமிருந்து காலந் தள்ள முடியும் என்று மோகன் தாஸின் உள்ளம் கலங்கிக் கொண்டிருந்த போது, ஆண்டவன் வழி காட்டினார். மோகன் தாஸ் எந்த இலட்சியத்துக்காக இவ்வுலகில் ஜனனம் எடுத்தாரோ அந்தக் காரியத்தைத் தொடங்குவதற்குரிய காலமும் வந்து கூடியது.
போர்பந்தரிலிருந்து ஒரு வியாபாரக் கம்பெனியார் மோகன் தாஸின் சகோதரருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் விஷயம் வருமாறு ; மேற்படி போர்பந்தர் வியாபாரக் கம்பெனிக்குத் தென்னாப்பிரிக்காவில் பெரிய கிளை ஆபீஸ் இருந்தது. இந்தக் கிளைக் கம்பெனி சார்பாக டர்பன் நீதிமன்றத்தில் நாற்பதினாயிரம் பவுன் தாவா ஒன்று நடந்துகொண்டிருந்தது. பிரபல வெள்ளைக்கார பாரிஸ்டர்கள் வழக்கை நடத்தினார்கள். எனி னும், கம்பெனிக்காரர்களுக்கு உதவியா இருக்கும் பொருட்டு இந்திய வக்கீல் ஒருவர் தேவையாக இருந்தது. கம்பெனியாரிடம் வழக்கு விவரங்களைத் தெரிந்துகொண்டு வழக்கை நடத் தும் பாரிஸ்டர்களுக்கு அந்த விவரங்களைத் தெரியப்படுத்த வேண்டும். இந்த வேலைக்கு ஒருவரை அனுப்ப முடியுமா?
இப்படிக் கேட்ட கம்பெனிக்குத் தாதா அப்துல்லா கம்பெனி என்று பெயர். கம்பெனியின் முதலாளி தாதா அப்துல்லா அப்போது தென்னாப்பிரிக்காவிலிருந்தார். அவருடைய கூட்டாளி சேத் அப்துல் கரீம் ஜாவேரி என்பவர்தான் போர்பந் தரிலிருந்து மேற்கண்ட கடிதத்தை எழுதினார். பிறகு அவர் இராஜகோட்டைக்கும் வந்தார். சேத் ஜாவேரிக்கு மோகன் தாஸை அவருடைய சகோதரர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
மோகன் தாஸுக்கு எப்படியாவது கத்தியவாரை விட்டுப் போனால் போதும் என்று இருந்தது. புதிய நாடுகளைப் பார்க்கலாம், புதிய அநுபவங்களை அடையலாம் என்னும் ஆசையும் ஏற்பட்டது. எனவே அவர் தென்னாப்பிரிக்காவுக்குப் போக எவ்வித தடையும் கூறாமல் உடன்பட்டார்.
" எத்தனை காலம் அங்கே இருக்கவேண்டும்? சன்மானம் என்ன தருவீர்கள்?" என்று கேட்டார்.
"ஒரு வருஷத்துக்கு மேலே அங்கு இருக்க வேண்டி யிராது. போக வர முதல் வகுப்புப் பிரயாணச் செலவும் மொத்தம் 105 பவுனும் தருகிறோம். தென்னாப்பிரிக்காவில் கம்பெனியின் விருந்தாளியா யிருப்பீர்களாதலால் வேறு செலவு கிடையாது" என்றார் சேத் ஜாவேரி.
இதிலிருந்து தம்மை வக்கீல் என்ற முறையில் அழைக்க வில்லை யென்றும், கம்பெனியின் ஊழியனாக இருக்கச் சொல்கிறார்கள் என்றும் பாரிஸ்டர் மோகன் தாஸ் தெரிந்துகொண் டார். ஒரு வருஷத்துக்கு 105 பவுன், சன்மானமும் குறைவு தான். ஆயினும் பேரம் பேசாமல் அதை ஒப்புக்கொண்டு மோகன் தாஸ் தென்னாப்பிரிக்கா செல்ல ஆயத்தமானார்.
தம்பி! இதுவரையில் காந்திஜியின் சரித்திரத்தில் விசேஷ். சம்பவங்களையோ வீர தீரச் செயல்களையோ நீ காணவில்லை. இனிமேல் அத்தகைய சம்பவங்களும் செயல்களும் மேலும் மேலும் தொடர்ந்து வரப்போகின் றன.
இது வரையில் காந்திஜியின் சரித்திரத்தைக் கவனித்தால் ஒரு விஷயம் தெரியவரும். மகத்தான ஆத்மசக்தி படைத்த ஒரு ஜீவனைப் பிரம்மா படைத்து விட்டு, "கண் திருஷ்டி ஏற்படப்போகிறதே!" என்று பயந்து விட்டார் போலும்! ஆகை யினாலேயே ஒரு சாதாரண குடும்பத்தில் அந்த மகா புருஷரைப் பிறக்கச் செய்து மிகச் சாதாரண முறையில் வாழ்க்கை தொடங்கச் செய்தார் போலும்!
சுவாமி விவேகானந்தர், மகாகவி டாகூர் முதலியவர்களைப் போல் இளம் பிராயத்திலேயே காந்திஜியின் மேதையும் மேன்மையும் சோபிக்கவில்லை. பண்டித ஜவாஹர்லாலைப் போல் மகாத்மா செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளரவில்லை.
ஆனால் சிறையைத் தகர்த்தெறிந்துவிட்டு வெளி வரும் மகா வீரனைப் போல மகாத்மா காந்தியும் சாதாரண வாழ்க்கை யிலிருந்து விடுபட்டுச் சீக்கிரம் வெளிவருவார். அப்போது. அவருடைய வாழ்க்கையில் எத்தனையோ விந்தை நிகழ்ச்சிகளையும் வீரச் செயல்களையும் நீ காண்பாய்.
---------------
13. அதிர்ஷ்டப் பிரயாணம்
இங்கிலாந்துக்குப் பாரிஸ்டர் பரீட்சைக்குப் படிக்கப் போன போது மோகன் தாஸ் ஒரு பக்கம் உற்சாகம் கொண் டிருந்தாலும் மற்றொரு பக்கம் அன்னையைப் பிரிந்து செல்லும்படி நேர்ந்தது பற்றி வருத்தப்பட்டார். தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டபோதோ கஸ்தூரிபாயைப் பிரிய நேர்ந்த துபற்றி வருந்தினார். இங்கிலாந்திலிருந்து மோகன் தாஸ் திரும்பி வந்தபிறகு அந்தத் தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது. கஸ்தூரிபாய்க்குக் கல்வி கற்பிக்கவும் மற்றும் வாழ்வு முறையில் சில சீர்திருத்தங்களைக் கற்பிக்கவும் மோகன் தாஸ் முயன்று வந்தார். ஆகவே, இம்முறை அவர்களுடைய பிரிவு இருவருக்கும் அதிக வருத்தம் அளித்தது. எனினும் மோகன் தாஸ் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, "இன்னும் ஒரு வருஷத்துக்குள் எப்படியும் சந்திப்போம்" என்று கஸ்தூரிபாய்க்குத் தைரியம் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
பம்பாய்க்கு வந்ததும் பிரயாணத்துக்கு ஒரு இடையூறு ஏற்பட்டது. குறிப்பிட்ட கப்பலில் முதல் வகுப்பு டிக்கட் கிடைக்கவில்லை யென்று தாதா அப்துல்லா கம்பெனியின் பம்பாய்க் காரியஸ்தர் கூறினார். 'டெக்'கில் அதாவது கப்பலின் மேல் தளத்தில் பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் தெரிவித்தார். பாரிஸ்டராகிய தாம் முதல் வகுப்புக்குக் கீழே பிரயாணம் செய்வது கெளரவக் குறைவு என்று மோகன் தாஸ் எண்ணினார். (பிற்காலத்தில் மூன்றாம் வகுப்பிலேயே பிரயாணம் செய்வேன் என்று பிடிவாதம் செய்த காந்திஜி தான் அப்போது அவ்விதம் கருதினார்.) காரியஸ்தர் கூறியதில் அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. "நானே போய் விசாரித்துப் பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனார். கப்பல் தலைவரைச் சந்தித்து, "எப்படியாவது நெருக்கிப் பிடித்து எனக்கு ஓர் இடம் கண்டுபிடித்துக் கொடுக்கக்கூடாதா?" என்று கேட்டார். கப்பலின் தலைவர் மோகன் தாஸைத் தலை முதல் கால் வரையில் ஒரு தடவை உற்றுப் பார்த்தார். மோகன் தாஸின் தோற்றம் எதனாலேயோ அவருடைய மனதைக் கவர்ந்தது. " என்னுடைய சொந்த அறையில் இன்னொருவரும் பிரயாணம் செய்ய இடம் இருக்கிறது. அந்த இடத்தை மற்றவர்களுக்குச் சாதாரணமாய்க் கொடுப்பதில்லை. வேண்டுமானால் உமக்குத் தருகிறேன்" என்று கப்பல் தலைவர் கூறினார்.
மோகன் தாஸ் மிக்க மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு நன்றி கூறினார். காரியஸ்தரிடம் சொல்லி முதல் வகுப்பு டிக்கட் வாங்கச் செய்தார். தென்னாப்பிரிக்காவில் தமக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடன் 1893-ம் வருஷம் ஏப்ரல் மாதத்தில் பாரிஸ்டர் மோகன் தாஸ் காந்தி உற்சாகமாகக் கப்பல் ஏறிப் பிரயாணமானார்.
பாரிஸ்டர் மோகன் தாஸுக்கு மட்டுந்தானா தென்னாப்பிரிக்காவில் அதிர்ஷ்டம் காத்திருந்தது? இந்தியாவுக்கும் உலகத்துக்குமே அதிர்ஷ்டம் காத்திருந்தது. அநீதியையும் கொடுமையையும் எதிர்த்துப் போராடுவதற்குச் சத்தியாக்கிரஹம் என் னும் அஹிம்சா தர்ம ஆயுதத்தைத் தென்னாப்பிரிக்காவிலே யல்லவா காந்திஜி கண்டு பிடித்துத் தயாரித்தார் !
பாரிஸ்டர் மோகன் தாஸ் காந்தியின் முகவெட்டு அந்தக் கப்பல் தலைவரின் மனத்தைக் கவர்ந்துவிட்டது என்று சொன்னேனல்லவா? எந்தவிதமான நன்மையிலும் ஏதேனும் ஒரு கெடுதலும் கூட இருந்தே தீரும் போலிருக்கிறது. கப்பல் தலைவரின் சிநேகிதம் மோகன் தாஸ்க்கு உதவியாகவும் இருந் தது ; ஒரு பெரும் அபாயத்துக்கும் அவரை உள்ளாக்கியது.
பிரயாணத்தின்போது பொழுது போக்காக மோகன் தாஸுக்குக் கப்பல் தலைவர் சதுரங்கம் ஆடக் கற்றுக் கொடுத்தார். மோகன் தாஸும் பிரியத்துடன் கற்றுக் கொண்டார். ஆனால் இலேசில் ஆட்டம் பிடிபடவில்லை. எனினும் மோகன் தாஸுக்கு ஆட்டம் சொல்லிக் கொடுப்பதில் கப்பல் தலைவரின் ஊக்கம் சிறிதும் தளரவில்லை.
வழியில் கப்பல் நின்ற முதல் துறைமுகப் பட்டினம் லாமு பதின் மூன்று நாள் தொடர்ந்து கடற் பிரயாணம் செய்த பிறகு கரையில் இறங்குவதற்கு ஆசை உண்டாவது இயல்புதானே? கப்பலில் பிரயாணம் செய்தவர்களில் பலர் துறைமுகத்தில் இறங்கிப் பட்டணம் பார்த்து வரச் சென்றார்கள். காந்திஜியும் போக விரும்பினார். லாமு துறைமுகம் அபாயகரமான கொந்தளிப்பு உள்ள து என்றும், கப்பல் நாலுமணி நேரத்தில் புறப்பட்டு விடுமென்றும், அதற்குள் திரும்பி வந்துவிடும்படியும் கப்பல் தலைவர் எச்சரிக்கை செய்தார்.
மோகன் தாஸ் லாமு நகரைச் சுற்றிப் பார்த்தார். தபால் ஆபீஸில் வேலை செய்த இந்திய குமாஸ்தாக்களுடன் சிறிது, நேரம் பேசிக்கொண்டிருந்தார். ஆப்பிரிக்கா சுதேசிகள் சிலரையும் சந்தித்து அவர்களுடைய வாழ்க்கை முறையைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதற்குள் நேரமாகி விட்டபடியால் துறைமுகத்துக்கு அவசரமாகத் திரும்பினார்.
அதே கப்பலின் மேல் தளத்தில் பிரயாணம் செய்த இன்னும் சில இந்தியப் பிரயாணிகள் ஒரு வேளையாவது அமைதியாகச் சமைத்துச் சாப்பிடலாம் என்று லாமு துறைமுகத்தில் இறங்கி யிருந்தார்கள். அவர்கள் தங்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்து கொண்டு கப்பலுக்குப் போவதற்காகப் படகில் ஏறினார்கள். அந்தப் படகிலேயே மோகன் தாஸும் ஏறினார். கப்பல் தலைவர் எச்சரித்தது போலவே கடல் அப்போது கொந்தளிக்கத் தொடங்கியிருந்தது. படகிலோ கூட்டம் அதிகம். ஆகையால் கப்பலில் ஏறுவதற்கான ஏணிக்கு அருகில் படகை நிறுத்தமுடியவில்லை. ஏணியின் அருகில் படகு போகும் ; ஆனால் யாரும் ஏணியில் ஏறுவதற்குமுன் அங்கிருந்து நகர்ந்துவிடும்.
கப்பல் புறப்படுவதற்கான முதல் சங்கு ஊ தியாகி விட்டது. மோகன் தாஸ் பெரிதும் கவலையடைந்தார். இதையெல்லாம் கப்பலின் மேல் தளத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த கப்பல் தலைவர் குறிப்பிட்ட கால அளவுக்குமேல் ஐந்து நிமிஷம் கப்பலை நிறுத்தி வைத்தார். கப்பலுக்கு அருகில் மிதந்த இன்னொரு படகில் மோகன் தாஸ் பத்து ரூபாய் கொடுத்து ஏறிக் கொண்டார். அந்தப் படகில் கூட்டம் இல்லாதபடியால் சற்று இலகுவாக ஏணியின் அருகில் அதைச் செலுத்த முடிந்தது. ஆனால் படகு ஏணியருகில் வந்தபோது, ஏணி தூக்கப்பட்டு விட்டது. கப்பல் தலைவர் மோகன்தாஸின் நிலையைப் பார்த்து இரக்கங் கொண்டார். மேலேயிருந்து ஒரு கயிற்றைத் தொங்கவிடச் செய்தார். அதைப் பிடித்துக்கொண்டு மோகன் தாஸ் ஏறிக் கப்பலின் தளத்தில் அடிவைத்தாரோ, இல்லையோ, கப்பலும் புறப்பட்டு விட்டது. மற்றப் பிரயாணிகள் கப்பலில் ஏற முடியாமல் பின் தங்கும்படி நேர்ந்தது.
இவ்விதமாக, கப்பல் தலைவரின் நட்பு லாமுவில் மோகன் தாஸுக்கு மிகவும் உதவியாக இருந்தது. வழியிலிருந்த ஸான்ஸிபார் என்னும் மற்றொரு துறைமுகத்தில் அந்த நட்பினால் பெரும் அபாயம் நேர்ந்தது. கப்பல் தலைவர் மோகன் தாஸையும் மற்றொரு ஆங்கில நண்பரையும் "குஷாலாகக் கரைக்குப் போய்வரலாம்" என்று சொல்லி அழைத்துச் சென்றார். ' குஷால்' என்றால் என்ன என்பது முதலில் மோகன் தாஸுக்குத் தெரியவில்லை. கரையிலே இறங்கிப் பட்டணத்துக்குள் போன பிறகு, 'குஷால்' என்றால் 'விபசார விடுதி' என்று தெரிந்தது. அத்தகைய விடுதி ஒன்றுக்கு ஒரு மனிதன் அவர்களை அழைத்துச் சென்றான். ஒவ்வொருவரையும் ஒரு தனி அறைக்குள் போகச் செய்தான். மோகன் தாஸ் புகுந்த அறையில் ஒரு நீக்ரோ ஸ்திரீ இருந்தாள். அப்போதுதான் தாம் வந்திருந்த இடம் இப்படிப்பட்டதென்பது மோகன் தாஸுக்குத் தெரிந்தது. வெட்கமும் அருவருப்பும் அவரைப் பிடுங்கித் தின்றன. சிறிது நேரம் ஊமையைப்போல் மெளனமாக நின்றார்; பிறகு நொந்த மனத்துடன் வெளியே வந்தார்.
கப்பல் தலைவர் வெளிவந்ததும் மோகன் தாஸின் மனோ நிலையைத் தெரிந்து கொண்டு அவரைப் பரிகசித்தார். ஆனால் மோகன் தாஸோ அந்தப் பரிகாசத்தைப் பொருட் படுத்த வில்லை. இந்த மட்டும் பாவக் குழியில் விழாமல் தப்பினோமே என்று கடவுளுக்கு நன்றி செலுத்தினார். கருணைக் கடலான பகவானுடைய அருளே அச்சமயம் தம்மைத் தடுத்து ஆட்கொண்டது என்ற எண்ணத்தினால் இறைவனிடம் அவருடைய நம்பிக்கை வலுப் பெற்றது.
ஸான்ஸிபாருக்குப் பிறகு மொஸாம்பிக் துறைமுகத்தில் கப்பல் சில நாள் நின்று விட்டு அடுத்தபடியாக டர்பன் துறை முகத்தை அடைந்தது. தென்னாப்பிரிக்காவில் நேட்டால், டிரான்ஸ்வால், ஆரஞ்சு பிரீ ஸ்டேட் என்னும் மாகாணங்கள் உண்டு. நேட்டால் மாகாணத்தின் துறைமுகப் பட்டினம் டர்பன். இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்கா செல்லும் பிரயாணிகள் சாதாரணமாய் டர்பன் துறைமுகத்திலே தான் இறங்குவது வழக்கம்.
மோகன் தாஸை வரவேற்பதற்காகத் தாதா அப்துல்லா சேத் துறைமுகத்துக்கு வந்திருந்தார். அப்துல்லா சேத்துக்கு அறிமுகமான வெள்ளைக்காரர் பலர் துறைமுகத்தில் இருந்ததையும், அவர்கள் அப்துல்லா சேத்தை அவ்வளவு மரியாதையாக நடத்தவில்லை யென்பதையும் மோகன் தாஸ் கவனிக்கும்படி நேர்ந்தது. இது அவருக்கு வியப்பையும் வருத்தத்தையும் அளித்தது. அதோடு மேற்படி வெள்ளைக்காரர்கள் மோகன் தாஸை ஏதோ ஒரு விநோதப் பிராணியைப் பார்ப்பதுபோல் உற்றுப் பார்ப்பதையும் கவனிக்க நேர்ந்தது.
மோகன் தாஸ் இங்கிலாந்திலிருந்தபோது அங்கிருந்த ஆங்கிலேயர் இப்படி யெல்லாம் நடந்து கொள்ள வில்லை. இந்தியாவில் ஆங்கில உத்தியோகஸ்தர் அகம்பாவத்துடனும் முரட்டுத் தனமாகவும் நடந்து கொண்ட அநுபவம் அவருடைய மனத்தில் ஆழ்ந்து பதிந்திருந்தது. டர்பன் துறைமுகத்தில் இறங்கின வுடனேயே இங்கே வெள்ளைக்காரரின் அகம்பாவம் அபரிமிதம் என்பதை மோகன் தாஸ் அறிந்து கொள்ளலாயிற்று. இரண்டு நாளைக்குப் பிறகு டர்பன் நகரின் நீதி மன்றத்துக்குச் சென்ற போது அதை இன்னும் நன்றாய் மனத்தில் பதியும்படி அவர் தெரிந்து கொள்ள நேர்ந்தது.
துறைமுகத்திலிருந்து மோகன் தாஸை அப்துல்லா சேத் தமது வியாபாரக் கம்பெனியின் கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றார். அவர் முக்கியமாக எதற்காக வந்தாரோ அந்த வழக்கு டிரான்ஸ்வால் மாகணத்தில் பிரிட்டோரியா நகரில் நடந்து வருகிறதென்று மோகன் தாஸ் தெரிந்து கொண்டார்.
தாதா அப்துல்லா சேத்துக்கு மோகன் தாஸைப் பற்றி அவ்வளவு நல்ல அபிப்பிராயம் ஏற்படவில்லை. "இவரைப் பிடித்து எதற்காக அனுப்பினார்கள்? இவரால் என்ன உபயோகம்? வீண் பணச் செலவு தான்!" என்று அவர் நினைப்பது போலக் காணப் பட்டது.
அப்துல்லா சேத் அவ்வளவாகப் படித்த மனிதர் அல்ல, ஆனால் அறிவுக் கூர்மையும் உலக அநுபவமும் பெற்றவர். தென்னாப்பிரிக்காவில் வியாபாரம் நடத்திய பெரிய இந்தியக் கம்பெனிகளுக்குள் அப்துல்லா கம்பெனிதான் மிகப் பெரியது. சொற்ப ஆங்கில பாஷா ஞானம் அவருக்கு இருந்தது. அதைக் கொண்டு ஐரோப்பியக் கம்பெனிகளுடன் அவர் வர்த்தகமும் விவகாரமும் நடத்தி வந்தார். வக்கீல்களுக்கு வேண்டிய சட்ட 'பாயிண்டு’களை யெல்லாம் அவர் எடுத்துச் சொல்லி விடுவார். தென்னாப்பிரிக்காவில் இருந்த இந்தியர்கள் அனைவரும் அப்துல்லா சேத்திடம் பெருமதிப்பு வைத்திருந்தார்கள்.
இவ்வளவு உயர்ந்த மனிதராயிருந்தாலும் அவரிடத்தில் ஒரு குறை இருந்தது. பெரிய சந்தேகப் பிராணி ! இலேசில் யாரையும் அவர் நம்பிவிட மாட்டார்.
கேள், தம்பி ! பாரிஸ்டர் எம். கே. காந்தியைத் தனியாகப் பிரிட்டோரியாவுக்கு அனுப்ப அவர் தயங்கினார். ஏன் தெரியுமா? பிரிட்டோரியாவிலே தான் அவர் தொடுத்திருந்த வழக்கின் பிரதிவாதிகள் இருந்தார்கள். இந்த இளம்பிள்ளை பாரிஸ்டரை மேற்படி பிரதிவாதிகள் தங்கள் வசப்படுத்திக் கொண்டு விட்டால் என்ன செய்கிறது என்று சந்தேகப் பட்டார். அதாவது தம்முடைய கம்பெனியில் பாரிஸ்டர் காந்தி சம்பளம் வாங்கிக்கொண்டு எதிர்க் கட்சிக்காரர்களுடன் சேர்ந்து தமக்குத் துரோகம் செய்துவிடக் கூடும் என்று நினைத்தார் ! எப்படி யிருக்கிறது கதை? பின்னால், அந்த இளம் பாரிஸ்டரைப் பற்றி தாதா அப்துல்லா மிக நன்றாய்த் தெரிந்து கொண்டார். தாம் அவரைப் பற்றி அவ்விதம் சந்தேகித்தது எவ்வளவு பெரிய தவறு என்பதையும் உணர்ந்தார்.
-------------
14. தலைப்பாகைத் தகராறு
பாரிஸ்டர் மோகன் தாஸ் காந்தி டர்பனுக்கு வந்த மூன்றாம் நாள் அவரைத் தாதா அப்துல்லா டர்பன் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே பலருக்கும் புது பாரிஸ்டரை அறிமுகம் செய்து வைத்ததுடன் தம்முடைய வக்கீலுக்குப் பக்கத்தில் அவரை உட்கார வைத்தார்.
அதுவரையில் பாரிஸ்டர் காந்திக்கு உற்சாகமாகவே இருந்தது. சிறிது நேரத்துக் கெல்லாம் தம்மை மாஜிஸ்ட்ரேட் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது அவருடைய கவனத்துக்கு வந்தது. "இது என்ன? ஏன் இப்படி நம்மைப் பார்க்கிறார்? துறைமுகத்தில் இருந்த வெள்ளைக்காரர்கள் ஏதோ விசித்திரப் பிராணி என்று எண்ணி, நம்மைப் பார்த்தார்களே, அதுபோல் அல்லவா இந்த மாஜிஸ்ட்ரேட்டும் பார்க்கிறார்? " என்று காந்திஜி எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போதே மாஜிஸ்ட்ரேட் அவரை நோக்கி ஓர் உத்தரவு போட்டார். "உம்முடைய தலையில் வைத்திருக்கும் தலைப்பாகையை எடுத்துவிடும் !" என்பது தான் அந்த உத்தரவு.
தம்பி! பாரிஸ்டர் காந்தி தென்னாப்பிரிக்கா சென்ற போது நீளமான சொக்காயும் தலைப்பாகையும் தரித்துக் கொண்டிருந் தார். இங்கிலாந்தில் வசித்த காலத்தில் சில மாதம் அவர் நாகரிக உடைதரித்துப் பார்த்துப் பின்னால் அதைக் கைவிட்டு விட்டார் என்பது நினைவிருக்கிறதல்லவா? எனவே, தென்னாப் பிரிக்கா சென்றபோது அவர் தொப்பி வைத்துக் கொள்ள வில்லை. 'காந்தி குல்லா' என்று சொல்கிறோமே, அந்த மாதிரிக் குல்லாவும் வைத்துக் கொள்ள வில்லை. கெளரவமான இந்தியர்கள் அந்தக் காலத்தில் தலைப்பாகை அணிந்து கொள்வதே வழக்கமா யிருந்தபடியால் அதன்படி காந்திஜியும் தலைப்பாகை வைத்துக் கொண்டிருந்தார்.
ஆகவே மாஜிஸ்ட்ரேட் பகிரங்கக் கோர்ட்டில் அத்தனை பேருக்கு முன்னால் "தலைப்பாகையை எடும்!" என்று உத்தரவு போட்டதும் காந்திஜிக்கு ஒரே திகைப்பாய்ப் போய்விட் டது. அந்த உத்தரவின் காரணம் அவருக்கு நன்றாய் விளங்க வில்லை. ஆனால் அது தம்மை அகௌரவப் படுத்துவது என்று மட்டும் தெரிந்து கொண்டார். ஆகையால் உத்தரவை நிறை வேற்ற அவர் விரும்பவில்லை. விவரங்களை நன்றாய்த் தெரிந்து. கொள்வதற்கு முன்னால் எடுக்க மாட்டேன்" என்று சொல்லிக் கோர்ட்டில் 'கலாட்டா’ செய்யவும் அவர் விரும்பவில்லை. சட்டென்று எழுந்து கோர்ட்டுக்கு வெளியே வந்துவிட்டார்.
பிற்பாடு சேத் அப்துல்லாவும் வெளியே வந்ததும் அவரிடம் விவரம் கேட்டார். முக்கியமாக, தாதா அப்துல்லா சேத் தலைப்பாகை அணிந்திருந்தும் அதை எடுக்கும்படி மாஜிஸ்ட் ரேட் சொல்லாமல் தமக்கு மட்டும் உத்தரவு போட்டது, காந்திஜிக்கு வியப்பா யிருந்தது. இதன் காரணத்தைத் தாதா அப்துல்லா விளக்கிச் சொன்னார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்த இந்தியர்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். முதற் பகுதியார் முஸ்லிம் வியாபாரிகள் ; இரண்டாவது பகுதியார் ஹிந்து குமாஸ்தாக்கள் ; மூன்றாவது பிரிவினர் பார்ஸிகள். முஸ்லிம் வர்த்தகர்கள் தங்களை 'அராபியர்' என்றும், பார்ஸிகள் தங்களைப் ’பாரஸிகர் ' என்றும் சொல்லிக் கொண்டார்கள். ஆகையால் அவர்கள் தலைப்பாகை வைத்துக் கொள்ள அநுமதிக்கப் பட்டனர். ஆனால் ஹிந்து குமாஸ்தாக்களோ தங்களை "இந்தியர்கள்" என்று தான் சொல்லிக் கொள்ள வேண்டியிருந்தது. வேறு நாட்டின் பெயரை அவர்கள் சொல்லிக் கொள்வதற்கில்லையே !
அரேபியாவும், பாரஸீகமும் சுதந்திர தேசங்கள். ஆகையால் அராபியர் என்றும் பாரஸிகர் என்றும் சொல்லிக்கொண்ட வர்களுக்குத் தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்கள் கொஞ்சம் மரியாதை அளித்தார்கள். அவர்கள் இஷ்டம்போல் உடை தரிக்கும் உரிமையும் அளித்தார்கள். ஆனால் இந்தியா அடிமை இந்தியா தானே? அடிமை இந்தியர்களுக்குத் தலையிலே தலைப் பாகை என்ன வேண்டிக் கிடந்தது? - இவ்விதம் தென்னாப் பிரிக்கா வெள்ளைக்காரர்கள் கருதினார்கள்.
இந்தியர்களில் மேற்சொன்ன மூன்று பகுதியாரைத் தவிர நாலாவது ஒரு பகுதியினரும் இருந்தனர். இவர்கள் இந்தியாவிலிருந்து வந்திருந்த ஒப்பந்தக் கூலிகளும் மாஜி ஒப்பந்தக் கூலிகளும்தான். இவர்களே தொகையில் அதிகமானவர்கள். பெரும்பாலும் தமிழ் நாட்டிலிருந்தும் ஆந்திர தேசத்திலிருந்தும் ஓரளவு வடநாட்டிலிருந்தும் இவர்கள் வந்திருந்தார்கள். ஐந்து வருஷம் தோட்ட வேலையோ வேறு வேலையோ செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு வந்தவர்களாகையால் 'ஒப்பந்தக் கூலிகள்' என்று இவர்கள் சொல்லப்பட்டனர். இது காரணமாகத் தென்னாப்பிரிக்காவின் வெள்ளைக்காரர்கள் இந்தியர்கள் அனைவரையுமே 'கூலி'கள் என்று அழைத்தார்கள்.
இந்தியர்களுக்குக் 'கூலி ' என்ற பெயரோடு, 'ஸாமி' என்ற பெயரும் தென்னாப்-பிரிக்காவில் வழங்கிற்று. 'ஸாமி ' எப்படி வந்தது தெரியுமா? பெரும்பாலான ஒப்பந்தத் தொழிலாளர் தென்னிந்தியாவிலிருந்து போனவர்கள் அல்லவா? தென்னிந்தியர்களின் பெயர்கள் பெரும்பாலும் ராமஸாமி, கிருஷ்ண ஸாமி, கோவிந்தஸாமி, நாராயண ஸாமி, சிவஸாமி என்று ஒரே ஸாமி மயமாக இருக்கும் என்பது உனக்குத் தெரியுமே? எனவே, தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்கள் இந்தியர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது 'கூலி' என்று சொல்லாவிடில், 'ஸாமி' என்பார்கள். அவர்களுடைய மனசில், 'ஸாமி' என்பது 'கூலி 'க்கு மாற்றுப் பெயர் ! இந்தியர்களில் கொஞ்சம் வாசாலகர்களாயிருப்பவர்கள் வெள்ளைக்காரர் தங்களை 'ஸாமி' என்று அழைக்கும்போது, "ஸாமி என்றால் எஜமானன் என்று அர்த்தம் ; நான் உனக்கு எஜமானனா?" என்று கேட் பார்களாம். ஆனால் அவ்விதம் கேட்பவர்கள் வெள்ளைக்காரர்களிடம் அடிபடவும் தயாராயிருக்க வேண்டுமாம் ! ஆம், தம்பி! அந்தக் காலத்தில் தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்கள் இந்தியர்களை அடிப்பது சர்வ சாதாரணம். இதைப் பற்றி மேலே அதிகமாக நீ தெரிந்துகொள்ள நேரிடும்.
இப்போது தலைப்பாகை விஷயத்துக்குத் திரும்பி வருவோம். தாதா அப்துல்லாவிடம் தம்முடைய தலைப்பாகையைப் பற்றி மாஜிஸ்ட்ரேட்டுக்கு என்ன ஆட்சேபம் என்று காந்திஜி கேட்டு மேற்கூறிய விவரத்தைத் தெரிந்துகொண்டார்.
உடனே, அன்று கோர்ட்டில் நடந்த சம்பவத்தைப்பற்றிப் பத்திரிகைகளுக்கு ஒரு கடிதம் எழுதினார். தாம் தலைப்பாகை அணிந்திருந்தது நியாயம் என்றும், மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவு தவறான து என்றும் அந்தக் கடிதத்தில் வாதமிட்டிருந்தார். இந்தக் கடிதத்தைச் சில பத்திரிகைகள் பிரசுரித்தன. பிரசுரித்த தோடு "வேண்டாத விருந்தாளி " என்று காந்திஜிக்குப் பட் டம் சூட்டி அவருடைய பிடிவாதப் போக்கைக் கண்டித்து எழுதின. ஒரு சிலர் காந்திஜியை ஆதரித்துப் பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதினார்கள். ஆகக்கூடி, காந்திஜி தென்னாப்பிரிக்காவுக்கு வந்து சில நாளைக்குள்ளேயே அவருடைய பெயர் மிகவும் பிரபல மடைந்தது.
பாரிஸ்டர் காந்தி டர்பன் நகரில் சிலநாள் தங்கினார். அந் நகரில் வசித்த மிஸ்டர் பால், மிஸ்டர் சுபான் காட்பிரே, பார்ஸி ரஸ்டம்ஜி, ஆதம்ஜி மியாகான் முதலிய இந்தியப் பிரமுகர்களை அறிமுகம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் பிரிட்டோரியாவிலிருந்து தாதா அப்துல்லாவுக்குக் கடிதம் வந்தது. "வழக்கு ஆரம்பமாகப் போகிறது. நீங்களாவது உங்களுடைய பிரதிநிதியாவது உடனே வந்து சேரவேண்டியது" என்று அதில் எழுதியிருந்தது.
இந்தக் கடிதத்தை அப்துல்லா சேத் காந்திஜியிடம் காட்டி, "பிரிட்டோரியாவுக்குப் போகிறீரா?" என்று கேட் டார். "முதலில் வழக்கைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்கிறேன்" என்றார் காந்திஜி. அவருக்கு வழக்கின் விவரங்களைத் தெரியப்படுத்தும்படி தாதா அப்துல்லா தம் குமாஸ்தாக்களுக்குச் சொன்னார்.
அந்த வழக்கு, பெரும்பாலும் கணக்குகளைப் பற்றியது. ஆகவே ஆரம்பத்தில் காந்திஜிக்குத் தலைகால் ஒன்றும் தெரிய வில்லை. பற்று வரவு நுணுக்கங்களைப் பற்றிக் குமாஸ்தாக்கள் சொன்னது ஒன்றும் அவருக்குப் பிடிபடவில்லை. குழப்பம் தான் அதிகமாயிற்று. குமாஸ்தாக்கள் அடிக்கடி 'பி. நோட்' என்று குறிப்பிட்டார்கள். 'பி. நோட்' என்றால் என்ன என்பதே இவருக்குத் தெரியவில்லை. கடைசியாகக் குமாஸ்தாக் களைக் கேட்டார். அவர்கள் சிரித்துவிட்டு, 'பிராமிஸரி நோட்' என்று சொன்னார்கள். இதன்பேரில் காந்திஜி கணக்கு முறையைப் பற்றி விவரிக்கும் புத்தகம் ஒன்றை வாங்கிப் படித்தார். அதற்குப் பிறகு ஒருவாறு விஷயம் தெளிவாயிற்று ; வழக்கு சம்பந்தமான நுணுக்கங்களும் புரிந்தன.
பிறகு, மோகன் தாஸ் "பிரிட்டோரியாவுக்குப் புறப்பட நான் தயார் !" என்று அப்துல்லாவிடம் தெரிவித்தார்.
தம்பி ! ஆதி காலத்திலிருந்து மகான்களும் மகரிஷிகளும் மதத் தலைவர்களும் அன்பையும் அஹிம்சையையும் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது "எல்லாரிடமும் அன்பா யிருக்கவேண்டும் ; யாரையும் எதற்காகவும் ஹிம்சிக்கக் கூடாது!" என்று உபதேசம் செய்திருக்கிறார்கள். "அஹிம்சா பரமோ தர்ம: " என்னும் அருமையான வாக்கியத்தையும் நீ கேள்விப்பட்டிருப்பாய். ஆகவே, அன்பும் அஹிம்சையும் உல கத்துக்குப் புதிய விஷயங்கள் அல்ல.
ஆனால் அன்பையும் அஹிம்சையையும் முற்காலத்தில் உபதேசித்த பெரியோர்கள் அவற்றை மனிதனுடைய நல்வாழ்வுக்குரிய மேலான குணங்களாகவும் மோட்ச சாதனங்களாகவும் உபதேசித்தார்களே தவிர, அந்த குணங்களை உலகிலுள்ள தீமைகளை எதிர்த்துப் போராடுவதற்குரிய ஆயுதங்களாக உபயோகிக்கலாம் என்று சொல்லவில்லை. அன்பையும் அஹிம்சையையும் சமூகத் தீமைகளை ஒழிப்பதற்கு ஆயுதங்களாகச் செய்து காட்டிய அவதார புருஷர் மகாத்மா காந்தி தான். அன்பும் அஹிம்சையும் எப்படிக் காந்திஜியின் கையில் சிறந்த வலிமையுள்ள ஆயுதங்களாயின என்பதை நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். அந்த ஆயுதங்கள் எப்படிக் காந்தி மகானின் உள்ளத்தில் உருவாக ஆரம்பித்தன என்பதை இப் போது நீ பார்க்கப் போகிறாய்.
----------------
15. வழியில் நேர்ந்த விபத்து
தாதா அப்துல்லா சேத் மிக்க முன் ஜாக்கிரதை யுள்ளவர், பாரிஸ்டர் காந்தி பிரிட்டோரியாவுக்குப் போகத் தயார் என்று தெரிவித்ததும் பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்தார். பிறகு காந்திஜியைப் பார்த்து, "பிரிட்டோரியாவில் எங்கே தங்குவீர்?" என் று கேட்டார்.
" எங்கே தங்கும்படி சொல்கிறீர்களோ, அங்கே தங்குகிறேன்" என்றார் காந்திஜி.
"சரி ; உமக்கு ஜாகை ஏற்படுத்திக் கொடுக்கும்படி அங்கேயுள்ள நம்முடைய வக்கீலுக்கு எழுதுகிறேன். இன்னும் சில நண்பர்களுக்கும் உம்மைப் பற்றி எழுதுகிறேன். ஆனால் அவர்களில் யாரோடும் நீர் தங்கவேண்டாம். நம் எதிராளிக்குப் பிரிட்டோரியாவில் அதிக செல்வாக்கு உண்டு. நம் முடைய கடிதங்கள் எல்லாம் அந்தரங்கமாக இருக்க வேண்டும். யாராவது நம்முடைய கடிதங்களைப் படிக்க நேர்ந்து. விட்டால் நமக்குப் பெருந் தீங்கு விளையும்!" என்று அப்துல்லா சேத் பலமுறை எச்சரித்தார்.
அதற்குப் பாரிஸ்டர் மோகன் தாஸ் கூறியதாவது: "நமது வக்கீல் ஏற்படுத்தும் ஜாகையிலேயே தங்குகிறேன். அல்லது நானே இடம் தேடிக் கொள்கிறேன். ஆனால் ஒரு விஷயத்தில் தாங்கள் நிம்மதியாக இருங்கள். நமக்குள் அந்தரங்கமான விஷயம் வேறு யாருக்கும் தெரியவராது. எதிர்க் கட்சியாரையும் பழக்கம் செய்து கொள்ளலாம் என்றே எண்ணியிருக்கிறேன். கூடுமானால் நம்முடைய வழக்கைக் கோர்ட் டுக்கு வெளியில் ராஜியாகத் தீர்த்துக் கொள்ளப் பிரயத்தனம் செய்வேன். பார்க்கப் போனால், பிரதிவாதி தங்களுடைய நெருங்கிய உறவினர்தானே?"
வழக்கில் பிரதிவாதியின் பெயர் சேத் தயேப் ஹாஜி கான் முகம்மது என்றும், அவர் அப்துல்லா சேத்தின் நெருங்கிய உறவினர் என்றும் காந்திஜி தெரிந்து கொண்டிருந்தார். இவர்கள் ஒருவருக்கொருவர் வழக்குத் தொடுத்துக் கொண்டிருப்பது எவ்வளவு வீணான காரியம் என்று அவருக்குத் தோன்றியது. இந்தியர்கள் எல்லாரையும் அலட்சியமாகவும் அவமதிப்போடும் பார்க்கும் வெள்ளைக்காரர்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டே இந்தியர்கள் ஒருவரோ டொருவர் சண்டை பிடித்துக்கொண் டிருப்பதின் முறைகேடு காந்திஜியின் உள்ளத்தை உறுத்தியது.
'ராஜி ' என்னும் வார்த்தையைக் கேட்டதும் அப்துல்லா சேத் சிறிது திடுக்கிட்டார். ஆனால் காந்திஜியைப் பற்றி அவருடைய அபிப்பிராயம் இந்தச் சில நாளைக்குள்ளேயே மாறிப்போ யிருந்தது. அவரிடம் நன்மதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆகவே அப்துல்லா சேத் கூறியதாவது :- "ஆம், ஆம் ! கோர்ட்டுக்கு வெளியே வழக்குத் தீர்ந்துவிட்டால் நல்லதுதான். ஆனால் தயேப் சேத் இலேசில் ராஜிக்கு வரும் மனிதர் அல்ல. நம்முடைய இரகசியங்களை அறிந்து கொண்டு நம்மைக் கவிழ்த்து விடப் பார்ப்பார். ஆகையால் நீர் சர்வ ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். எந்தக் காரியத்தையும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்துச் செய்யவேண்டும்."
"தாங்கள் சிறிதும் கவலைப்படவேண்டாம். வழக்கு விவரங்களைப் பற்றி நான் தயேப் சேத்தினிடமாவது அல்லது வேறு யாரிடமாவது ஒருநாளும் பேசமாட்டேன். ராஜி செய்து கொண்டு விடுவது நல்லது என்று மட்டும் பொதுப்படையாக யோசனை கூறுவேன்" என்றார் பாரிஸ்டர் காந்தி.
இதற்கு அப்துல்லா சேத் ஆட்சேபம் சொல்லவில்லை. பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காந்திஜி ரயிலில் முதல் வகுப்பு டிக்கட் வாங்கிக்கொண்டார். தென்னாப்பிரிக்கா ரயில்களில் முதல் வகுப்புப் பிரயாணிகளா யிருந்தாலும் இரவில் படுக்கை ' சப்ளை 'க்காகத் தனியாக ஐந்து ஷில்லிங் கொடுத்து டிக்கட் வாங்க வேணுமாம். இதையும் வாங்கிவிடும்படி அப்துல்லா சேத் சொன்னார். ஆனால் காந்திஜி அவ்விதம் வீண் செலவு செய்ய விரும்பவில்லை. அப்துல்லா சேத் மறுபடியும், "இங்கே பாரும்! இது இந்தியா தேசம் அன்று. முன் ஜாக்கிரதை அவசியம். ஆண்டவன் புண்ணியத்தில் நமக்குப் பணக் கஷ்டம் கிடையாது. ஆகையால் சிக்கனம் செய்ய எண்ணி வீண் கஷ்டங்களை விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டாம்" என்றார்.
'ரொம்ப வந்தனம் ; என்னுடைய காரியங்களை நானே பார்த்துக்கொள்வேன். தாங்கள் என்னைப்பற்றிக் கவலைப்படா திருந்தால் போதும்!" என்றார் மோகன் தாஸ்.
* * *
தாதா அப்துல்லா சேத்தின் யோசனைப்படி செய்யாததின் பலனை விரைவிலேயே மோகன் தாஸ் உணரும்படி நேரிட்டது. நேட்டாலின் தலைநகரமாகிய மேரிட்ஸ்பர்க்குக்கு இரவு 9 மணிக்கு ரயில் போய்ச் சேர்ந்தது. இந்த ஸ்டேஷனில் பிரயாணிகளுக்குப் படுக்கை கொடுக்கப் படுவது வழக்கம். ஒரு ரயில்வே ஊழியர் வந்து, "படுக்கை வேண்டுமா? " என்று காந்திஜியைக் கேட்டார். "வேண்டாம் ; என்னிடம் படுக்கை இருக்கிறது !" என்று காந்திஜி விடையளித்தார். அந்த ஊழியர் சென்ற பிறகு, வெள்ளைக்காரப் பிரயாணி ஒருவர் வந்து, காந்திஜியை மேலுங் கீழும் உற்றுப் பார்த்தார். கறுப்பு மனிதர் ஒருவர் முதல் வகுப்பு ரயிலில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் அவருடைய மனம் பெரும் சங்கடத்துக்கு ஆளாகி விட்டது. போலும்! அவர் போய் இரண்டு ரயில்வே உத்தியோகஸ்தர்களை அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தார். எல்லாரும் மோகன் தாஸை உற்றுப்பார்த்துக்கொண்டு நின்றார்கள். கடை சியில் இன்னொரு உத்தியோகஸ்தர் வந்து, "கீழே இறங்கு; சாமான் ஏற்றும் வண்டியில் போய் ஏறிக்கொள் !" என்றார்.
"என்னிடம் முதல் வகுப்பு ரயில் டிக்கட் இருக்கிறது, ஐயா !" என்று காந்திஜி மரியாதையாகச் சொன்னார்.
"அக்கறை யில்லை; நீ போய்ச் சாமான் வண்டியிலே தான் ஏறிக்கொள்ள வேண்டும். இந்த வண்டியில் இடம் கொடுக்க முடியாது!" என்றார் உத்தியோகஸ்தர்.
"டர்பனில் இந்த வண்டியிலே தான் எனக்கு இடம் கொடுக்கப்பட்டது. இதிலேதான் நான் பிரயாணம் செய்வேன்" என்று உறுதியான குரலில் கூறினார் காந்திஜி.
* * *
இந்த இடத்தில் நீ ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும், தம்பி! காந்திஜியின் குணாதிசயத்தில் ஒரு விசேஷம் அவருடைய மன உறுதி என்பதை ஏற்கெனவே நீ அறிந்திருக்கிறாய். சீமைப் பிரயாணம் செய்வது தவறு என்று சாதிக் கூட்டத்தார் சொன்னார்கள்; ஆனால் காந்திஜி அதைப் பொருட்படுத்தாமல் கிளம்பிவிட்டார். சீமையில் பலர் அவரை எப்படியாவது புலால் உண்ணச் செய்துவிட வேண்டும் என்று பெரும் பிரயத்தனம் செய்தார்கள்; ஆனால் அதற்கு அவர் உடன்படவில்லை. தமக்குச் சரி யென்று தோன்றுவதைப் பிறர் தடுப்பதற்காகக் காந்திஜி கைவிடமாட்டார்; தமக்குப் பிசகு என்று தோன்றுவதை மற்றவர்கள் சொல்வதற்காகச் செய்ய வும் மாட்டார். இத்தகைய மன உறுதி காந்திஜியின் இயற்கையில் ஏற்பட்டிருந்தது. அந்த மன உறுதியிலிருந்துதான் சத்தி யாக்கிரஹம் என்னும் புதிய அஹிம்சை ஆயுதம் உதயமாயிற்று.
பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்லாமல், பிறர் கஷ்டப்படுத்துவார்களே என்பதற்காகவும் சரியான காரியத் தைக் கைவிடக் கூடாது என்பது காந்திஜி உபதேசித்த முக்கிய வாழ்க்கைத் தத்துவம். அந்த உயர்ந்த தத்துவம் அவருடைய வாழ்க்கையில் எப்படி உருவாக ஆரம்பித்தது என்பதை இதோ நீ பார்க்கப் போகிறாய்.
* * *
பாரிஸ்டர் காந்தி "இந்த வண்டியிலேதான் பிரயாணம் செய்யப் போகிறேன்" என்று உறுதியாகச் சொன்னதும் அவரை இறங்கச் சொன்ன ரயில் உத்தியோகஸ்தருக்குக் கடும் கோபம் வந்து விட்டது. அவருடைய மீசை துடித்தது.
"மரியாதையாக இந்த வண்டியை விட்டு இறங்குகிறாயா? அல்ல து போலீஸ்காரனை அழைத்துப் பிடித்துத் தள்ளச் சொல்லட்டுமா?" என்று கேட்டார்.
“நல்லது ; போலீஸ்காரன் வரட்டும். நானாக இந்த வண்டியிலிருந்து நகரப் போவதில்லை" என்றார் காந்திஜி.
ரயில்வே உத்தியோகஸ்தர் கூறியது வெறும் மிரட்டல் அல்ல. உண்மையாகவே போலீஸ்காரன் வந்தான். “இறங்குகிறாயா, மாட்டாயா?" என்று அவன் கேட்டான். "மாட்டேன்" என்றார் மோகன் தாஸ்.
உடனே அவரைக் கையைப் பிடித்துப் பலாத்காரமாக இழுத்து வெளியே தள்ளினான். அவருடைய சாமான்களையும் எடுத்து வெளியே எறிந்தான். "சாமான் வண்டிக்கு இப்போதாவது போ!" என்ற புத்திமதியும் கிடைத்தது. ஆனால் காந்திஜி சாமான் வண்டிக்குப் போகவில்லை.
ரயில் வண்டி அவர் இல்லாமலே புறப்பட்டுப் போயே போய் விட்டது !
எடுத்து எறியப்பட்ட சாமான்களில் தமது கைப்பையை மட்டும் காந்திஜி எடுத்துக்கொண்டு பிரயாணிகளின் ' வெயிடிங் ரூம் ' எங்கே இருக்கிறதென்று தேடிச் சென்றார். மற்றச் சாமான்களை ரயில்வே ஊழியர்கள் எடுத்து வைத்தார்கள்.
அப்போது குளிர் காலம். தென்னாப்பிரிக்காவில் உயர மான பிரதேசங்களில் குளிர் மிகவும் அதிகம். மேரிட்ஸ்ப ர்க் நகரம் உயரமான இடத்தில் இருந்தது. பொறுக்க முடியாத குளிர். காந்திஜியின் 'ஓவர் கோட்' மற்றச் சாமான்களோடு அகப்பட்டுக் கொண்டது. அதைக் கேட்டு வாங்கிக்கொள் ளக் காந்திஜி விரும்பவில்லை. கேட்டால் மீண்டும் அவமதிப்புக் கிடைக்குமோ, என்னவோ? குளிரில் நடுங்கிக்கொண்டு வெளிச்சமில்லாத அறையில் தனியாக உட்கார்ந்திருந்தார்.
--------------
16. மேலும் சோதனைகள்
அந்த நாளில் டர்பனிலிருந்து பிரிடோரியாவுக்கு ரயில் மார்க்கம் நெடுகிலும் கிடையாது. வழியில் சார்லஸ் டவுன் என் னும் ஸ்டேஷனில் இறங்கிக் குதிரை வண்டியில் ஜோகானிஸ் பர்க் சென்று அங்கே மறுபடி ரயில் ஏற வேண்டும்.
சார்லஸ் டவுனில் காந்திஜி இறங்கினார். அவரிடம் குதிரை வண்டிக்கும் டிக்கட் இருந்தது. வழியில் ஒரு நாள் தாமதித்து விட்டதனால் அது செல்லாமல் போய் விடவில்லை. இதைப் பற்றி அப்துல்லா சேத் சார்லஸ் டவுனிலிருந்த குதிரை வண்டிக் கம்பெனியின் ஏஜெண்டுக்குத் தந்தியும் அடித்திருந்தார்.
ஆனால் அந்தக் குதிரை வண்டி ஏஜெண்ட் இலேசுப்பட்ட பேர்வழி அல்ல. கறுப்பு மனிதன் விஷயத்தில் அவனுக்கு ஏதேனும் ஒரு சாக்குத்தான் தேவையா யிருந்தது. "உம்முடைய சீட்டு நேற்றையச் சீட்டு ; இன்றைக்கு அது செல்லாது !" என்றான். காந்திஜி "அது செல்லும்" என்று மரியாதையாக வாதாடினார். கடைசியாக, மேற்படி ஏஜெண்ட் தோல்வி யடைந்து காந்திஜிக்குக் குதிரை வண்டியில் இடங்கொடுத்தான்.
ஆனால் காந்திஜியின் தொல்லை தீர்ந்து போய்விடவில்லை.
அந்தக் குதிரை வண்டியில் பிரயாணிகள் உள்ளே உட்காருவது வழக்கம். வண்டி ஓட்டியின் பெட்டிக்கு இருபுறத்திலும் இரண்டு இடங்கள் உண்டு. இவற்றில் ஒன்றில் வண்டியின் 'காப்டன்' உட்காருவான். இன்றைக்கு அவன் கறுப்பு மனிதனுக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினான். வண்டிக்குள்ளே மற்ற எல்லாரும் வெள்ளைக்காரர்கள். அவர்களுக்குச் சரிநிகராக ஒரு 'கூலி 'யை வண்டிக்குள் உட்கார வைக்க அவன் விரும்பவில்லை. தான் உள்ளே உட்கார்ந்து கொண்டு வண்டிக்காரனுக்குப் பக்கத்து இடத்தில் காந்திஜியை உட் காரும்படிச் சொன்னான்.
இது அநீதி, அவமதிப்பு என்பது மோகன் தாஸுக்குத் தெரிந்தே யிருந்தது. ஆயினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் விடுவதே உசிதம் என்று அவர் நினைத்தார். அந்தச் சமயம் ஏதாவது தகராறு விளைத்தால் ரயிலைப்போல் குதிரை வண்டியும் அவரை விட்டுவிட்டுப் போய்விடலாம். ஆகவே, வண்டியின் முகப்பில் வண்டிக்காரனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார்.
* * *
வண்டி புறப்பட்டுச் சென்றது. மத்தியானம் மூன்று மணி சுமாருக்குப் பர்தேகோப் என்னும் இடத்தை அடைந்தது. அங்கே வந்ததும் காப்டனுக்குக் குஷி பிறந்தது. வெளியில் சற்றுக் காற்றாட உட்கார்ந்து சுருட்டுப் பிடிக்க விரும்பினான்.
வண்டிக்காரன் கீழே இருந்து கால் வைத்து அவனுடைய பெட்டி மேல் ஏறுவதற்குப் படி ஒன்று இருந்தது. காப்டன் வண்டிக்காரனிடமிருந்து அழுக்குச் சாக்குத் துணி ஒன்று வாங்கி அதில் விரித்தான். காந்திஜியைப் பார்த்து, "சாமி ! இதில் உட்கார்! வண்டி போட்டிக்குப் பக்கத்தில் நான் உட்கார வேண்டும்" என்றான்.
இந்த அநியாயத்தைச் சகித்துக் கொள்ளக் காந்திஜியினால் முடியவில்லை. மனத்துக்குள் என்ன நேருமோ என்ற பயம் தோன்றிற்று. அதனால் உடம்பு நடுங்கிற்று. ஆயினும் அவர் உறுதியாகச் சொன்னார்:-"'நியாயமாக எனக்கு உள்ளே இடங் கொடுத்திருக்க வேண்டும். அவ்விதம் செய்யாமல் என்னை இங்கே உட்காரச் சொன்னீர். இப்போது நீர் உல்லாசமாகச் சுருட்டுப் பிடிப்பதற்காக உம் கால் அடியில் உட்காரச் சொல்கிறீர். இது சரியல்ல. உள்ளே இடங்கொடுத்தால் போய் உட்கார்ந்து கொள்கிறேன். படியில் உட்கார முடியாது."
இப்படிக் காந்திஜி சொல்லி முடிப்பதற்குள்ளே காப்டன் அவர் அருகில் நெருங்கினான். காதைப் பார்த்து ஓங்கி அறைந்தான். கையைப் பிடித்துக் கீழே இழுத்து விட முயன்றான். காந்திஜியின் மன உறுதி அப்போது பெரும் சோதனைக்கு உள்ளாயிற்று. வண்டிப் பெட்டியின் பித்தளைக் கம்பிகளை அவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். மணிக்கட்டு முறிந்தாலும் பிடியை விடுவதில்லை யென்று உறுதிகொண்டார். அவரை அந்தக் கிராதகன் அடிப்பதையும் திட்டிக் கொண்டே இழுப்பதையும் மற்றப் பிரயாணிகள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அடித்தவன் பெருந்தடியன் ; அடிபட்டவரோ பலமற்ற மெலிந்த மனிதர். அந்த வெள்ளைக்காரப் பிரயாணிகளில் சிலர் இரக்கம் அடைந்தார்கள். காப்டனைப் பார்த்து, "ஏன் அப்பா அவரை அடிக்கிறாய்? அவர் சொல்லுவது நியாயந்தானே? அங்கே இடமில்லா விட்டால் உள்ளே வந்து உட்காரட்டும் ! " என்றார்கள். "ஒருநாளும் முடியாது!" என்றான் அந்த முரடன். எனினும், சிறிது வெட்கிப் போய் அடிப்பதையும் இழுப்பதையும் விட்டான். இன்னும் சிறிது நேரம் திட்டிக்கொண்டே யிருந்தான். பிறகு, வண்டிக்காரனுக்கு மறுபக்கத்து இடத்தில் இருந்த 'ஹாட்டன் டாட்' வேலைக்காரனைப் படியில் உட்கார வைத்துவிட்டுத் தான் அவன் இடத்தில் உட்கார்ந்தான்.
'ஹாட்டன் டாட்' என்று கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா? ஆப்பிரிக்காவின் ஆதி மக்களில் 'ஹாட்டன் டாட்' ஒரு இனம். ' நீகிரோ ', 'ஸலு ' என்பவர்களும் ஆப்பிரிக்க இனத்தார் தான். வெள்ளைக்காரர்கள் பிழைப்புத் தேடி ஆப்பிரிக்காவுக்கு வந்தவர்கள். அப்படிப் பிழைக்க வந்தவர்கள் தான் அந்த நாட்டின் பல பகுதிகளையும் தங்கள் வசமாக்கிக் கொண்டு இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்தார்கள் !
* * *
வண்டி மறுபடியும் புறப்பட்டது. காந்திஜியின் நெஞ்சு அதிவேகமாக அடித்துக் கொண்டது. பிரிடோரியாவுக்கு உயிரோடு போய்ச் சேருவோமோ என்னமோ என்ற கவலையே உண்டாகி விட்டது. போதாதற்கு, வண்டித் தலைவன் அடிக்கடி அவரைக் கோபமாக முறைத்துப் பார்ப்பதும், விரலை ஆட் டிக் கொண்டே, "இரு இரு ! ஸ்டாண்டர்ட்டன் போனதும் உனக்குப் பாடம் சொல்லித் தருகிறேன்" என்று உறுமுவது மாயிருந்தான். காந்திஜி மனத்துக்குள் தமக்குத் துணை புரிந்து காப்பாற்றும்படி கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். அந்த நிலைமையில் வேறு யார் துணையைக் கோர முடியும்?
இருட்டிய பிறகு குதிரை வண்டி ஸ்டாண்டர்ட்டனை அடைந்தது. வண்டி நின்ற இடத்தில் சில இந்தியர்களின் முகங்களைப் பார்த்ததில் காந்திஜிக்கு ஆறுதல் ஏற்பட்டது. பெரு மூச்சுடன் வண்டியிலிருந்து இறங்கினார். உடனே மேற்படி இந்தியர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். ”சேத் அப்துல்லா விடமிருந்து எங்களுக்குத் தந்தி கிடைத்தது. உம்மை ஈஸா சேத்தின் கடைக்கு அழைத்துப் போவதற்காக வந்திருக்கிறோம் !" என்றார்கள்.
தம்பி! இந்த நாட்டு ஜனங்களுக்குள் அடிக்கடி சாதிச் சண்டைகளும் சமூகச் சண்டைகளும் ஏற்படுவது பற்றி உனக்குத் தெரியும். இந்தியர்களுக்குள் ஒற்றுமை யில்லாத படியால் ஆதிகாலம் முதல் எத்தனையோ கஷ்டங்களை இந்த நாடு அநுபவித்திருக்கிறது.
ஆனால் சொந்த நாட்டில் இப்படியெல்லாம் சண்டை பிடிக்கும் இந்தியர்கள் அயல் நாடுகளுக்குப் போகும்போது பெரும்பாலும் அவர்களுக்குள் அதிசயமான ஒற்றுமையும் சகோதர பாவமும் ஏற்பட்டு விடுகிறது. சாதி சமய வேற்றுமைகளை யெல்லாம் மறந்து அவர்கள் ஒன்றாகி விடுகிறார்கள். ஒருவருக் கொருவர் உதவி செய்யச் சந்தர்ப்பம் எங்கே கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதை இப்போது மோகன் தாஸ் கண்டார். ஏற்கெனவே அப்துல்லா சேத்தின் வழக்கு சம்பந்தமாகக் கவலை யடைந்தவர் தென்னாப்பிரிக்கா இந்தியர்களிடையே குடி கொண்டுள்ள சகோதர பாவத்தை அறிந்து மகிழ்ந்தார். தம்மை அழைத்துச் செல்ல வந்தவர்களுடனே சேத் ஈஸா ஹாஜி ஸமார் என்பவரின் கடைக்குச் சென்றார். அங்கே யிருந்த இந்தியர்கள் எல்லாரும் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அவருக்கு நேர்ந்த கஷ்டங்களைக் கேட்டு அநுதாபப்பட்டார்கள். எல்லாரும் தங் கள் தங்கள் அநுபவங்களைச் சொல்லி ஆறுதலும் கூறினார்கள்.
அந்த ஊரிலிருந்த குதிரை வண்டிக் கம்பெனியின் ஏஜெண்டுக்குக் காந்திஜி வழியில் நடந்த விவரமெல்லாம் தெரிவித்துக் கடிதம் எழுதினார். ஏஜெண்டிடமிருந்து உடனே பதில் கிடைத்தது. "இந்த ஊரிலிருந்து வேறு பெரிய வண்டி போகிறது. வண்டித் தலைவனும் மாற்றப்படுகிறான். மற்றப் பிரயாணிகளோடு உமக்கு வண்டிக்குள்ளேயே இடம் தரப்படும் " என்று அந்த ஏஜெண்ட் மரியாதையாக எழுதி யிருந்தான்.
ஈஸா சேத்தின் மனிதர்கள் மோகன் தாஸை மறு நாள் காலையில் வண்டி புறப்படும் இடத்துக்குக் கொண்டுவிட்டார்கள். புது வண்டியின் உள்ளே காந்திஜிக்கு நல்ல இடம் கொடுக்கப்பட்டது. வழியில் வேறு தொல்லைக்கு ஆளாகாமல் அன்றிரவு ஜோகானிஸ்பர்க் போய்ச் சேர்ந்தார்.
மேற் கூறிய சம்பவத்தைப் பற்றிக் காந்திஜி தமது சுய சரிதத்தில் விவரித்து விட்டு முடிவுரையாக எழுதி யிருக்கிறார் : "என்னை அடித்த குதிரை வண்டித் தலைவன் மீது அதற்குமேல் வேறு நடவடிக்கை எதுவும் எடுக்க நான் விரும்பவில்லை. ஆகவே அந்தச் சம்பவம் இத்துடன் முடிவு பெற்றது."
மேலே கூறியது போன்ற மற்றொரு சம்பவம் பிற்காலத் தில் நிகழ்ந்தது. இதைக் காட்டிலும் கொடுமையாகக் காந்திஜி அடிக்கப்பட்டார். அப்போது தென்னாப்பிரிக்காவில் அவருடைய பெயர் பிரபலமாகி யிருந்தது ; செல்வாக்கும் அதிகமாகி யிருந்தது. எனவே நடவடிக்கை எடுக்கும்படி நண்பர்கள் வற்புறுத்தினார்கள். சில வெள்ளைக்காரர்கள் தாங்கள் சாட்சி சொல்வதாகவும் முன் வந்தார்கள். ஆயினும் காந்திஜி மறுத்துவிட்டார். "அடித்தவன் பேரில் எனக்குக் கோபம் இல்லை. பழிக்குப் பழி வாங்கமாட்டேன் !" என்று பிடிவாத மாகச் சொல்லிவிட்டார். இந்தச் செய்தி இந்தியாவுக்கு வந்தது ; இந்தியப் பத்திரிகைகளிலும் பிரசுரமாயிற்று.
அதற்குள்ளாக டாக்டர் பெசண்டு அம்மையார் இந்தியாவுக்கு வந்து இந்தியாவையே தாய் நாடாகக் கொண்டு தொண்டு செய்யத் தொடங்கி யிருந்தார். காசி ஹிந்து சர்வ கலாசாலை என்று இப்போது பிரசித்தமாயிருக்கும் ஸ்தாபனம் அப்போது மத்திய ஹிந்து காலேஜ் ஆக இருந்தது. அந்தக் கலாசாலையின் மாதப் பத்திரிகை ஒன்று 'சென்ட்ரல் ஹிந்து காலேஜ் மெகஸைன்' என்ற பெயருடன் நடந்தது. அதில் டாக்டர் பெசண்டு அம்மை ஒரு கட்டுரை எழுதினார். தென் னாப்பிரிக்காவில் ஸ்ரீ எம். கே. காந்தி தம்மை அடித்தவன் மேல் பழி வாங்கும் எண்ணத்துடன் நடவடிக்கை எடுக்க மறுத்தது பற்றிக் குறிப்பிட்டார். "இவ்வளவு தயாள குணமுள்ளவர் சாதாரண மனிதர் அல்ல; அவரை 'மகாத்மா' என்று தான் சொல்ல வேண்டும்" என்று எழுதியிருந்தார்.
அதுமுதல் மோகன் தாஸ் காந்திஜியைச் சிலர் மகாத்மா ' என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள். சில காலத்துக்கெல்லாம் இந்தியா தேசம் முழுவதும் ’மகாத்மா காந்தி' என்று அவரைப் பெருமையுடன் போற்றியது.
இன்னும் சில காலத்தில் இந்த உலகம் முழுவதுமே அவரை 'மகாத்மா காந்தி' என்று போற்றப்போகிறது.
-----------------
17. பிரிட்டோரியாவில்
ஜோகானிஸ்பர்க் பெரிய பட்டணம். அந்தப் பட்டணத்தில் முகம்மது காஸிம் கம்ருதீன் கம்பெனியின் விலாசம் காந்திஜியிடம் இருந்தது. அப்துல்லா சேத் இந்தக் கம்பெனிக்கு முன் கூட்டியே செய்தி அனுப்பி யிருந்தார். கம்பெனியின் ஆள் குதிரை வண்டி நிற்குமிடத்துக்கு வந்து காத்திருந்து விட்டுக் காந்திஜியை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிப் போய் விட்டான். ஆகவே, காந்திஜி ஜோகானிஸ்பர்க்கில் ஏதாவது ஒரு ஹோட்டலில் தங்குவது என்று தீர்மானித்து கிராண்ட் நேஷனல் ஹோட்ட 'லுக்குப் போனார். ஹோட்டல் மானேஜர் காந்திஜியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "இங்கே இடமில்லை; வருந்துகிறேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டான். பிறகு காந்திஜி கம்ருதீன் கம்பெனிக்குச் சென்றார். அங்கே அப்துல் கனி சேத் என்பவர் காந்திஜியை வரவேற்றார்.
காந்திஜி ஹோட்டலுக்குச் சென்று தங்க நினைத்ததைச் சொன்னதும் அப்துல் கனி சேத் இடி இடியென்று சிரித்தார். ”ஹோட்டலில் தங்க லாம் என்று பார்த்தீர்களா? ஓஹோஹோ !" என்று மறுபடியும் சிரித்தார். சிரிப்புக்குக் காரணம் கேட்டபோது, "கொஞ்ச நாள் இந்த நாட்டில் இருந்தால் நீங்களே எல்லாம் தெரிந்து கொள்வீர்கள். ஹோட்டலில் கறுப்பு மனிதர்களுக்கு இடம் தர மாட்டார்கள். என்னைப் போன்ற வியாபாரிகள் இங்கே பணம் சம்பாதிப்பதற்காக வந்திருக்கிறோம். ஆகையால் கஷ்டங்களையும் அவமானங்களையும் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். உங்களால் இந்த நாட்டில் இருக்கவே முடியாது. ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். நாளைக்கு நீங்கள் பிரிட்டோரியாவுக்குப் போகவேண்டும் அல்லவா? ரயிலில் மூன்றாம் வகுப்பிலே தான் பிரயாணம் செய்தாக வேண்டும். நேட்டால் நிலைமையைக் காட்டிலும் டிரான்ஸ்வாலில் நிலைமை கேவலம். இங்கே இரண்டாம் வகுப்பு முதல் வகுப்பு டிக்கட்டுகள் இந்தியர்களுக்குக் கொடுக்கவே மாட்டார்கள் " என்றார் அப்துல் கனி.
"முதல் வகுப்பு டிக்கட் வாங்க நீங்கள் ஒருவேளை பிடிவாதமாக முயற்சி செய்திருக்க மாட்டீர்கள் " என்றார் காந்திஜி.
பிறகு ரயில்வே விதிகள் அடங்கிய புத்தகம் தருவித்துப் பார்த்தார். விதிகள் வழவழ குழகுழ வென்று இருந்தன. ரயில்வே அதிகாரிகள் இஷ்டப்படி டிக்கட் கொடுக்க மறுப்பதற்கு அந்த விதிகள் இடம் கொடுக்குமெனத் தோன்றிற்று.
"முதல் வகுப்பு டிக்கட் வாங்குவதற்கு முயற்சிக்கிறேன். அது முடியாவிட்டால் ஜட்கா வண்டியில் நேரே பிரிட்டோரி யாவுக்குப் போய் விடுகிறேன் " என்று காந்திஜி சொன்னார்.
ஜோகானிஸ்பர்க் நகரத்திலிருந்து பிரிட்டோரியா முப்பத் தேழு மைல் தூரம்தான். ஆகவே குதிரை வண்டியில் போவது அசாத்திய மல்ல.
மேற்கண்டபடி முடிவு செய்துகொண்டு ஸ்டேஷன் மாஸ்டருக்குக் காந்திஜி ஒரு கடிதம் எழுதினார். தாம் அவசரமாக பிரிட்டோரியா போகவேண்டி யிருக்கிற தென்றும், முதல் வகுப்பு டிக்கட் வேண்டும் என்றும், காலையில் நேரில் வந்து டிக்கட் பெற்றுக் கொள்வதாகவும் கடிதத்தில் எழுதியிருந் தார். பதில் வேண்டுமென்று கேட்கவில்லை. பதில் கேட்டால் ஒரு வேளை 'டிக்கட் இல்லை' என்று எழுதிவிடக்கூடும் அல் லவா? நேரில் சந்தித்தால் விவாதம் செய்து பார்க்கலாம்.
மறுநாள் காலையில் பிரிட்டோரியா ஸ்டேஷனுக்குச் சென் று ஸ்டேஷன் மாஸ்டரைச் சந்தித்து முதல் வகுப்பு டிக்கட் கேட்டார்.
ஸ்டேஷன் மாஸ்டர் புன்னகை புரிந்த வண்ணம் 'கடிதம் எழுதியது நீங்கள் தானே? " என்றார்.
"ஆம்; பிரிட்டோரியாவுக்கு இன்று அவசியம் நான் போக வேண்டும்" என்றார் காந்திஜி.
ஸ்டேஷன் மாஸ்டர் கூறியதாவது:- "இதோ பாருங்கள். நான் இந்த ஊர்க்காரன் அல்ல ; ஹாலந்து தேசத்தவன். உமக்கு டிக்கட் கொடுக்கவே விரும்புகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. ரயில்வே கார்ட் உம்மை முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்புக்குப் போகச் சொன்னால் அதற்கு நான் ஜவாப் தாரியல்ல. என் மேல் புகார் சொல்லவும் கூடாது ; கம்பெனியின் பேரில் வழக்குத் தொடரவும் கூடாது ! அப்படி ஏதாவது செய்தால் என்பாடு சங்கடமாகி விடும்."
காந்திஜி மேற்படி நிபந்தனைக்குச் சம்மதித்து டிக்கட் பெற்றுக் கொண்டார். "உம்மைப் பார்த்தால் கண்ணியமான மனிதராகத் தோன்றுகிறது. சுகமாகப் போய் வாரும்!" என்று ஆசி கூறினார் ஸ்டேஷன் மாஸ்டர்.
அப்துல் கனி சேத், காந்திஜியை ரயிலேற்றி அனுப்புவதற்காக ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். முதல் வகுப்பு டிக்கட் கிடைத்தது பற்றி அவருக்கு ஒரு பக்கத்தில் ஆச்சரியம் ; இன் னொரு பக்கம் சந்தோஷம். ஆனாலும் காந்திஜிக்கு ஒரு எச்சரிக்கையும் செய்து வைத்தார் :-
"டிக்கட் என்னமோ கிடைத்து விட்டது. ஆனால் கார்டு உங்களை முதல் வகுப்பில் விட்டு வைப்பானா என்பது சந்தேகம் தான். அவன் விட்டு வைத்தாலும் மற்ற ஐரோப்பியப் பிரயாணிகள் அதை பலமாக ஆட்சேபிக்கக் கூடும். எப்படியோ ஆண்டவன் புண்ணியத்தில் நீங்கள் சுகமாகப் பிரிட்டோரியா போய்ச் சேரவேண்டியது."
இந்த எச்சரிக்கையைக் காதில் வாங்கிக் கொண்டே காந்திஜி ரயில் ஏறினார். முதல் வகுப்பு வண்டியிலேதான். ரயில் புறப்பட்டது. ஜெர்மிஸ்டன் என்னும் அடுத்த ஸ்டேஷனில் கார்டு டிக்கட் சோதனைக்கு வந்தான். முதல் வகுப்பில் கறுப்பு மனிதனைப் பார்த்ததும் கார்டுக்குக் கடுங்கோபம் வந்துவிட் டது. "இறங்கு கீழே ! மூன்றாம் வகுப்புக்குப் போ!" என்றான்.
காந்திஜி தம்மிடமிருந்த முதல் வகுப்பு டிக்கட்டை எடுத்துக் கார்டினிடம் காட்டினார்.
“ அக்கறை இல்லை ! போ, மூன்றாம் வகுப்புக்கு !" என்று உறுமினான் கார்டு.
அந்த வண்டியில் ஐரோப்பியர் ஒருவர் தான் இருந்தார். அவர் நல்ல மனிதர். கார்டைப் பார்த்து, “ஏனையா இவரைத் தொந்தரவு செய்கிறீர்? முதல் வகுப்பு டிக்கட்தான் வைத்திருக்கிறாரே ! இவர் இந்த வண்டியில் வருவதில் எனக்குச் சிறிதும் ஆட்சேபம் இல்லை !" என்றார்.
"கூலியுடன் பிரயாணம் செய்ய உமக்கு விருப்பமாயிருந்தால் எனக்கு என்ன வந்தது? " என்று முணுமுணுத்துக் கொண்டே கார்டு போய் விட்டான்.
இதற்கு பிறகு வழியில் விபத்து ஒன்றும் ஏற்படாமல் காந்திஜியின் பிரயாணம் நடந்தது.
* * *
காந்திஜி பிரிட்டோரியா ஸ்டேஷனை அடைந்தபோது இரவு நேரம். 1893-ம் ஆண்டில் நடந்த வரலாறு அல்லவா? அப்போது மின்சார விளக்குகள் இல்லை. ஸ்டேஷனில் தீபங்கள் மங்கலாக எரிந்தன. பிளாட்பாரத்தில் பிரயாணிகள் அதிகம் பேரில்லை. காந்திஜியை அழைத்துப்போக நகரிலிருந்து யாரும் வந்திருக்கவும் இல்லை. எங்கே போவது, என்ன செய்வது என்று புரியாமல் காந்திஜி திகைத்தார். ஹோட்டல்களிலோ 'கூலி ' இந்தியருக்கு இடங்கொடுக்க மாட்டார்கள்.
எல்லாப் பிரயாணிகளும் போன பிற்பாடு டிக்கட் கலெக்டரிடம் நகரில் தங்குவதற்கு இடம் கிடைக்குமா என்று விசாரிக்கலாம், அல்லது ஸ்டேஷனிலேயே இரவு தங்கி விடலாம் என்று எண்ணிக் காந்திஜி காத்துக்கொண்டிருந்தார். இந்த விஷயம் கேட்பதற்குக்கூட யோசனையாகத்தானிருந்தது. ஒருவேளை டிக்கட் கலெக்டரும் அவமதிப்பானோ என்னமோ?
அவ்விதம் ஒன்றும் நேர வில்லை. டிக்கட் கலெக்டர் மரியாதையாகப் பதில் சொன்னான். ஆனால் ஹோட்டலைப்பற்றி அவனால் தகவல் கொடுக்க முடியவில்லை. பக்கத்தில் நின்று மேற்படி சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த நீகிரோ கனவான் ஒருவர், “ நீங்கள் இந்த நகருக்குப் புதியவர்போ லிருக்கிறது. அமெரிக்கர் நடத்தும் சிறிய ஹோட்டல் ஒன்றை எனக்குத் தெரியும். அங்கு வேணுமானால் உங்களை அழைத் துப் போகிறேன்" என்றார்.
அவ்விதமே அவருடன் காந்திஜி சென்று அமெரிக்கரின் ஹோட்டலை அடைந்தார். ஹோட்டல் சொந்தக்காரர் பெயர் மிஸ்டர் ஜான்ஸ்டன். அவர் காந்திஜிக்கு இரவு தங்க இடம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். "ஆனால் எல்லாரும் சாப்பிடும் பொது போஜன அறையில் சாப்பாடு போட்டால் மற்ற ஐரோப்பியர்கள் கோபித்துக் கொள்ளலாம். உங்களுடைய அறைக்கே சாப்பாடு அனுப்பிவிடுகிறேன்" என்றார்.
இந்த மட்டும் தங்குவதற்கு இடம் கொடுத்ததற்காகக் காந்திஜி அந்த ஹோட்டல்காரருக்கு வந்தனம் செலுத்தினார்.
மறுநாள் காலையில் அப்துல்லா சேத்தின் அட்டர்னி மிஸ்டர் பேக்கர் என்பவரைக் காந்திஜி போய்ப் பார்த்தார். காந்திஜியை அவர் முகமலர்ச்சியுடன் வரவேற்றுச் சொன்னதாவது:-
"இங்கே கோர்ட்டில் வழக்கு நடத்தப் பெரிய பாரிஸ்டர்களை அமர்த்தி யிருக்கிறோம். ஆகையால் கோர்ட்டில் பேச வேண்டிய வேலை உங்களுக்கு ஏற்படாது. வழக்கு ரொம்பவும் சிக்கலான து. அது சம்பந்தமாக வேண்டிய தகவல்களை யெல்லாம் சேகரித்துக் கொடுக்க உங்களுடைய உதவி தேவை யாயிருக்கும். கட்சிக்காரரிட மிருந்து தெரிந்து கொள்ள வேண்டியதை யெல்லாம் இனி உங்கள் மூலமாகவே தெரிந்து கொள்வேன். இந்த நாட்டில் நிறவேற்றுமை உணர்ச்சி அதிகம். உங்களுக்கு ஜாகை அகப்படுவது கஷ்டம். எனக்குத் தெரிந்த ஏழை ஸ்திரீ ஒருத்தி இருக்கிறாள். அவள் ஒரு வேளை உங்களுக்கு ஜாகையும் உணவும் கொடுக்கச் சம்மதிக்கலாம். போய்க் கேட்கலாம், வாருங்கள் !"
இவ்விதம் கூறி அவர் காந்திஜியை அந்த ஏழை ஸ்திரீயின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வாரத்துக்கு 35 ஷில்லிங் வாங்கிக்கொண்டு அந்த ஆங்கில மாது காந்திஜிக்கு இடங் கொடுத்துச் சாப்பாடு போடவும் சம்மதித்தாள்.
மிஸ்டர் ஜான்ஸ்டனுடைய ஹோட்டலிலிருந்து காந்திஜி ஜாகையைப் புது இடத்துக்கு மாற்றிக் கொண்டார். அந்தப் பெண்மணி மிகவும் நல்லவள். காந்திஜியை மிக அன்போடு நடத்தினாள். அவருக்காக மரக்கறி உணவு தயாரித்துக்கொடுத்தாள். வெகு விரைவில் காந்திஜி அவளுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் போலாகிவிட்டார்.
-----------------
18. சமூகத் தொண்டு
பிரிட்டோரியா போய்ச் சேர்ந்த சில தினங்களுக்குள் அந் நகரிலிருந்த பல இந்தியப் பிரமுகர்களைக் காந்திஜி அறிமுகம் செய் து கொண்டார். பிறகு இந்தியர்களின் பொதுக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். சேத் ஹாஜி முகம்மது என்னும் முஸ்லிம் பிரமுகர் வீட்டில் பொதுக் கூட்டம் நடந்தது. முதன் முதலாகக் காந்திஜி பொதுக் கூட்டத்தில் தைரியமாகப் பேசத் தொடங்கியது இந்தக் கூட்டத்திலே தான்.
மூன்று விஷயங்களைப் பற்றிக் காந்திஜி பேசினார். முதலாவது, வியாபாரத்தில் உண்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம். சாதாரணமாக, வியாபாரிகளுக்குள் ஒரு நம்பிக்கை பரவியிருந்தது. அதாவது வர்த்தகத் துறையில் சத்தியம் செல்லுபடியாகாது என்பது. சத்தியம் மத சம்பந்தமான விஷ யம் என்றும், வர்த்தகம் உலக விவகாரம் என்றும், ஒன்றுக் கொன்று சம்பந்தமில்லை யென்றும் அவர்கள் கருதினார்கள். இது சுத்தத் தவறான கொள்கை என்று காந்திஜி வற்புறுத்தினார். முக்கியமாக, வெளிநாட்டுக்கு வந்திருக்கும் இந்தியர்கள் எல்லாத் துறைகளிலும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அவர்களுடைய ஒழுக்கத்தைக் கொண்டே உலக மானது இந்திய சாதியின் ஒழுக்க நிலையை அள விடும் என்றும் எடுத்துக் காட்டினார். அதாவது தென்னாப்பிரிக்காவில் சில இந்திய வியாபாரிகள் பொய் சொல்லுவதாகவோ ஏமாற்றுவ தாகவோ ஏற்பட்டால், "ஒ ! இந்த இந்தியர்களே இப்படித் தான் ! பொய் சொல்லும் சாதி இந்திய சாதி !" என்று அங் குள்ள ஐரோப்பியர்கள் சொல்வார்கள். இந்த அபிப்பிராயம் உலகம் எல்லாம் பரவி இந்திய மக்களின் கெளரவத்தையே நாச மாக்கிவிடும். இதைக் காந்திஜி நன்கு எடுத்துக் கூறினார்.
இரண்டாவது, தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் பழக்க வழக்கங்களைப் பற்றியது. தென்னாப்பிரிக்க வெள்ளைக்காரரின் பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியர்களுடைய பழக்க வழக்கங்கள் சுகாதாரக் குறைவா யிருப்பதைக் காந்திஜி சுட்டிக் காட்டினார்.
மூன்றாவது, வெளிநாட்டுக்கு வந்திருக்கும் இந்தியர்கள் தங்களுக்குள் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என்ற மதவேற்று மையும் குஜராத்தி, மதராஸி, பஞ்சாபி முதலான மாகாண வேற்றுமைகளையும் அடியோடு மறந்து ஒற்றுமை யடைய வேண்டும் என்றும், அப்போதுதான் அவர்களுடைய உரிமை களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றும் சொன்னார்.
கடைசியாக, இந்தியர்களுக்கு இங்கே அநேக கஷ்டங்கள் இருப்பதால் அவற்றை அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லிப் பரிகாரம் தேடுவதற்கு ஒரு சங்கம் அமைக்க வேண்டும் என் றும் யோசனை சொன்னார்.
காந்திஜியின் பிரசங்கம் அங்கே கூடியிருந்தவர்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. அவர் கூறிய விஷயங்கள் பற்றிச் சிறிது நேரம் விவாதம் நடந்தது. மாதம் ஒரு முறை அம் மாதிரி பொதுக் கூட்டம் நடத்த வேண்டும் என்று முடிவாயிற்று. இந்தியர்களின் கஷ்டங்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துத் தருவதற்குச் சில பிரமுகர்கள் முன் வந்தார்கள்.
அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் பலருக்கு ஆங்கில பாஷை தெரியவில்லை என்பதைக் காந்திஜி கண்டார். தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களுக்கு ஆங்கில பாஷை உபயோகமா யிருக்குமாதலால் யாராவது ஆங்கிலம் கற்றுக் கொள்ள விரும்பினால் தாமே சொல்லிக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார். மூன்று பேர் அவ்விதம் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முன் வந்தனர். அவர்களில் ஒருவர் நாவிதர் ; ஒருவர் குமாஸ்தா ; ஒருவர் சில்லறைக் கடைக்காரர். பின் இருவரும் எட்டு மாதத்தில் நல்ல ஆங்கில பாஷா ஞானம் பெற்றார்கள். அதனால் அவர்களுடைய வருமானமும் உயர்ந்தது. நாவிதர் தம்மிடம் கூ வரம் செய்துகொள்ள வருவோரிடம் பேச வேண்டிய அளவுக்கு இங்கிலீஷ் கற்றுக் கொண்டாராம்.
முதற் கூட்டத்தில் செய்த தீர்மானத்தின்படி மாதாமாதம் தவறாமல் இந்தியர்களின் பொதுக்கூட்டம் நடந்து வந்தது. அந்தக் கூட்டங்களில் எல்லாரும் தத்தம் அபிப்பிராயங்களைத் தாராளமாய்த் தெரிவித்தார்கள். இந்தக் கூட்டங்களின் காரணமாக பிரிட்டோரியாவில் இருந்த அத்தனை இந்தியர்களையும் காந்திஜி தெரிந்து கொண்டார். அவர்களில் ஒவ்வொருவருடைய நிலைமையையும் பற்றித் தனித் தனியே அறிந்து கொண்டார்.
டிரான்ஸ்வாலிலும் அதை அடுத்த ஆரஞ்சு பிரீ ஸ்டேட் மாகாணத்திலும் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதிகளைப் பற்றிய விவரங்களை அறிந்தார்.
ஆரஞ்சு பிரீ ஸ்டேட் மாகாணத்தில் 1888-ம் ஆண்டில் ஒரு விசேஷ சட்டம் இயற்றி இந்தியர்களுடைய பிரஜா உரிமைகள் எல்லாவற்றையும் பறித்து விட்டார்கள். பல காலமாக அங்கே தங்கி வியாபாரத் துறையில் ஈடுபட்டிருந்த இந்தியர்களைப் பெயருக்கு நஷ்ட ஈடு என்று கொடுத்துத் துரத்தி விட்டார்கள். அந்த மாகாணத்தில் இந்தியர்கள் இருக்க விரும்பினால் ஹோட் டல் வேலைக்காரர்களாகவோ அல்லது வேறு சிற்றூழியம் செய்பவர்களாகவோ தான் இருக்கலாம் என ஏற்பட்டது.
டிரான்ஸ்வாலில் 1885, 1886-ம் ஆண்டுகளில் மிகக் கடுமையான சட்டங்கள் இந்தியருக்கு விரோதமாகச் செய்யப்பட் டன. அச்சட்டங்களின் படி, டிரான்ஸ்வாலுக்குள் வரும் ஒவ்வொரு இந்தியனும் மூன்று பவுன் தலை வரி கொடுக்க வேண்டும். இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே அவர்கள் நிலம் வைத்துக் கொள்ளலாம். காரியாம்சத்தில் அந்த நிலமும் அவர்களுக்குச் சொந்தமாகாது. இந்தியர்களுக்கு வாக்குரிமை கிடையாது. இந்தியர்கள் உள்படக் கறுப்பு மனிதர்களில் யாரும் பொது நடைப் பாதைகளில் நடக்கக் கூடாது.
இரவு ஒன்பது மணிக்குமேலே கறுப்பு மனிதர்கள் வெளியே புறப்படக் கூடாது என்று ஒரு விதி சொல்லிற்று. ஆனால் இந்த விதியைச் சமயோசிதம்போல் பிரயோகித்தார்கள். தங்களை 'அராபியர்கள்' என்று சொல்லிக் கொண்ட இந்தியர்கள் மீது தாட்சண்யம் காட்டி மேற்படி விதியைப் பிரயோகம் செய்வதில்லை. ஆனால் விதி விலக்குச் செய்வது போலீஸ்காரனின் சித்தத்தையே பொறுத்த காரியமாயிருந்தது.
மேற்படி அந்தமான சட்டங்களையும் விதிகளையும் பற்றிக் காந்திஜி கேட்டுத் தெரிந்து கொண்டார். தமது சொந்த அனுபவத்திலிருந்தும் தெரிந்து கொண்டார். சுய மரியாதையுள்ள இந்தியன் எவனும் தென்னாப்பிரிக்காவில் வசிப்பதற்கு லாயக் கில்லை என்று அறிந்தார். இந்தக் கேவலமான நிலைமையைச் சீர் திருத்துவது எப்படி என்று சிந்தனை செய்யலானார்.
இதற்கிடையில் தாதா அப்துல்லாவின் வழக்கு சம்பந்தமாக வும் காந்திஜி தீவிர கவனம் செலுத்தினார்.
------------------
19. வழக்கின் முடிவு
தாதா அப்துல்லா கம்பெனியாரின் வழக்கு சாமான்யமான தல்ல. நாற்பதினாயிரம் பவுன் வர வேண்டு மென்று வழக்குத் தொடரப்பட்டிருந்தது. தாவாவுக்கு ஆதாரம் புரோநோட்டுகளும் புரோநோட்டுத் தருவதாக வாக்குறுதிகளுந்தான். 'புரோநோட்டுகள் யோசனை செய்வதற்கு அவகாசம் கொடாமல் மோசடியாக எழுதி வாங்கப்பட்டவை ' என்பது பிரதி வாதியின் கட்சி. வழக்கில் சிக்கல்களும் சட்ட நுட்பங்களும் ஏராளமா யிருந்தன. இரு தரப்பிலும் பெரிய பெரிய பாரிஸ்டர்களையும் அட்டர்னிகளையும் அமர்த்தியிருந்தார்கள்.
வாதியின் கட்சிக்கு ஆதாரங்களையும் நிகழ்ச்சி விவரங்களையும் சேர்த்துத் தொகுக்கும் வேலை காந்திஜிக்கு அளிக்கப்பட் டது. எனவே வக்கீல் தொழில் நடத்தும் முறை பற்றிய மிக உபயோகமான அனுபவங்கள் காந்திஜிக்குக் கிடைத்தன.
எடுத்துக் கொண்ட வேலையை மிகவும் சிரத்தையுடன் காந்திஜி செய்தார். வழக்கின் விவரங்களில் அமிழ்ந்து விட் டார் என்றே சொல்லலாம். இரு கட்சியாரின் தஸ்தாவேஜிகளை யும் அவர் படிக்கும்படி ஏற்பட்டது. எனவே வாதிப் பிரதி வாதிகளுக்குக்கூட தெரியாத அளவில் காந்திஜி மேற்படி வழக்கைப் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டார்.
விவரங்கள் என்றால் உண்மை நிகழ்ச்சிகளே யல்லவா? இவ் வழக்கில் உண்மை நிகழ்ச்சிகள் தாதா அப்துல்லாவுக்கே சாதகமாயிருந்தன. எனவே சட்டமும் அவருக்கு அநுகூல மாக இருக்கும் என்று காந்திஜிக்கு உறுதி ஏற்பட்டது.
அதே சமயத்தில் அந்த வழக்கு இலேசில் முடியக் கூடிய தல்ல வென்றும் நெடுங்காலம் இழுத்துக் கொண்டே போகக் கூடும் என்றும் காந்திஜிக்குத் தெரிய வந்தது. விவகாரம் நீடிக்க நீடிக்க, இரு கட்சிகளுக்கும் பண நஷ்டம் அதிகமாகிக் கொண்டே வரும். கடைசியில் இருவருமே அழிந்து போவார்கள் இத்தனைக்கும் வாதியும் பிரதிவாதியும் உற்ற பந்துக்கள். இவர்கள் வீண் பிடிவாதத்தினால் வழக்கு நடத்தி அழிந்து போவது எவ்வளவு அறிவீனம்?
இதை யெல்லாம் சிந்தித்துப் பார்த்த காந்திஜி பிரதிவாதி யாகிய தயேப் சேத்தினிடம் சென்றார். வழக்கை மத்தியஸ்தம் செய்வதற்கு விட்டு முடிவு செய்யும்படி யோசனை சொன்னார் ; மிகவும் மன்றாடி வேண்டிக் கொண்டார். ஆனால் உடனே பலன் கிட்டவில்லை.
வக்கீல்களுக்கு கூலி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. வாதிப் பிரதிவாதிகள் பெரும் செல்வர்கள் தான். ஆயி னும் இப்படியே போய்க்கொண்டிருந்தால் அவர்களுடைய சொத்தை யெல்லாம் இந்த வழக்கே விழுங்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் வழக்கிலேயே அதிகமாகக் கவனம் செலுத்தியபடியால் வாதிப் பிரதிவாதிகள் வியாபாரத்தில் கவ னம் செலுத்துவது குறைந்து வந்தது.
வக்கீல்கள் தங்கள் கட்சிக்கு அநுகூலமாக மேலும் மேலும் சட்ட, நுட்பங்களைக் கிளப்பிக்கொண்டே யிருந்தார்கள். முடிவாக யார் வெற்றி யடைந்தாலும் வழக்கில் செலவழிந்த தொகை திரும்பி வராது என்பது நிச்சயம். கோர்ட் பீஸ் சட்டத்தின்படி வக்கீல்களுக்கு இவ்வளவு விகிதந்தான் கூலி கொடுக்கலாம் என்று விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அட்டர்னிகளுக்குக் கொடுக்கப்பட்ட தொகை பன்மடங்கு அதிகம். இந்த அநீதிகளை யெல்லாம் எண்ண எண்ணக் காந்திஜிக்குச் சகிக்கமுடியவில்லை. வக்கீல் தொழில் மேலேயே வெறுப்பு உண்டாயிற்று. தம்மைப் பொறுத்த வரையில் வாதிப் பிரதிவாதிகளுக்குள் ராஜி செய்து வைப்பது தான் தமது கடமை என்று கருதினார். அதற்கு மேலும் மேலும் சலியாமல் விடாமுயற்சி செய்தார். கடைசியாக, முயற்சி வெற்றி பெற்றது. வழக்கை மத்தியஸ்தத்துக்கு விடத் தயேப் சேத் சம்மதித்தார்.
மத்தியஸ்தர் நியமிக்கப் பட்டார். அவர் முன்னால் இரு தரப்பு வாதங்களும் சொல்லப் பட்டன. எல்லாவற்றையும் மத்தியஸ்தர் கேட்டுவிட்டுக் கடைசியாகத் தாதா அப்துல்லாவின் பக்கமே தீர்ப்பளித்தார். அதன்படி முப்பத்தேழாயிரம் பவுனும் செலவு தொகையும் வாதிக்குப் பிரதிவாதி கொடுக்க வேண்டுமென்று ஏற்பட்டது.
தீர்ப்பு நியாயமான தீர்ப்புத்தான். ஆனால் இத்துடன் காந்திஜி திருப்தி அடைந்துவிட வில்லை. தீர்ப்பின்படி பூராத் தொகையையும் உடனே செலுத்தவேண்டுமென்று வற்புறுத்தினால், தயேப் சேத்தினால் செலுத்த முடியாது. அவர் 'இன் ஸால் வெண்ட்' ஆக நேரிடும். அப்போது தென்னாப்பிரிக்காவில் வசித்த போர்பந்தர் வியாபாரிகளுக்குள் "இன்ஸால் வெண்ட் ஆவதைக் காட்டிலும் மரண மடைவதே மேல்" என்னும் உணர்ச்சி குடி கொண்டிருந்தது. பைசா பாக்கியில்லாமல் பணத்தைக் கொடுத்துவிட வேண்டுமென்றுதான் தயேப் சேத் எண்ணினார். ஆனால் ’இன்ஸால் வெண்ட்' என் னும் அபகீர்த்தியை அடைய விரும்பவில்லை.
ஆகவே தயேப் சேத்தைத் தப்புவிப்பதற்கு ஒரே ஒரு வழி தான் இருந்தது. பல தவணைகளாகப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தாதா அப்துல்லா இணங்கவேண்டும். அப்படி அவரை இணங்கச் செய்வதற்குக் காந்திஜி பெரும் பிரயத்தனம் செய்தார். மத்தியஸ்தத்திற்கு இரு கட்சியாரையும் ஒப்புக்கொள்ளும்படி செய்ததைக் காட்டிலும் இதற்கு அதிகப் பிரயாசை தேவையா யிருந்தது, முடிவில் தாதா அப்துல்லாவின் மனம் இளகிற்று. நீண்ட காலத்தில் பல தவணைகளாகப் பணம் பெற்றுக்கொள்வதற்கு இசைந்தார். முடிவு இருதரப் பாருக்கும் மகிழ்ச்சி யளித்தது. இந்திய சமூகத்தில் இரண்டு தரப்பாரின் மதிப்பும் உயர்ந்தது.
காந்திஜியோ ஆனந்தக் கடலில் ஆழ்ந்தார். தாம் வந்த காரியம் இவ்வளவு திருப்திகரமாக முடிந்ததே என்று மகிழ்ந்தார். உண்மையில் வக்கீல் தொழில் நடத்த வேண்டிய முறையே இதுதான் என்று கருதினார். இந்த எண்ணம் காந்திஜியின் மனத்தில் அப்போது ஆழ்ந்து பதிந்து விட்டது. மகாத்மா தம் சுய சரிதத்தில் கூறுகிறார் :-
"கட்சிக்காரர்களுக்குள் பிளவை நீக்கி ஒற்றுமையை நாட்டுவதே வக்கீலின் உண்மை வேலை என்று அறிந்தேன். இந்தப் படிப்பினை அப்போது என்றும் அழியா வண்ணம் என் ஹிருதயத்தில் பதிந்துவிட்டபடியால், பிற்காலத்தில் நான் வக்கீல் தொழில் நடத்திய இருபது ஆண்டுகளிலும் கட்சிக்காரர்களுக்குள் ராஜி செய்து வைப்பதிலேயே என் காலத்தில் பெரும் பகுதி கழிந்தது. நூற்றுக் கணக்கான வழக்குகளை அப்படி நான் ராஜி செய்து வைத்திருக்கிறேன். இதனால் நான் அடைந்த நஷ்டம் யாதுமில்லை ; ஆன்ம நஷ்டமும் அடையவில்லை."
----------------
20. ஏசுவின் போதனை
தாதா அப்துல்லாவின் வழக்கு நடந்து கொண்டிருந்த போது காந்திஜிக்குச் சில விசேஷ அநுபவங்கள் ஏற்பட்டன.
மேற்படி வழக்கின் அட்டர்னியான மிஸ்டர் பேகர் என்பவரைக் காந்திஜி பிரிட்டோரியா வந்ததும் சந்தித்தார் அல்லவா? மிஸ்டர் பேகர் கிறிஸ்துவ மதத்தில் மிகப் பற்றுள்ளவர். கிறிஸ் துவ மதப் பிரசாரமும் செய்து வந்தார். அவரும் அவருடைய நண்பர்கள் சிலரும் வாரந்தோறும் ஓரிடத்தில் கூடிப் பிரார்த்தனை நடத்தினார்கள். இந்தப் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வரும்படி காந்திஜியை மிஸ்டர் பேகர் அழைத்தார். தமக்கும் தம்முடைய சகாக்களுக்கும் நிற வேற்றுமை உணர்ச்சி கிடை யாதென்றும் தெரிவித்தார்.
அவ்விதமே காந்திஜி மிஸ்டர் பேகரின் மதப் பிரசங்கங்களுக்கும் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கும் சென்றார். இங்கு மிஸ்டர் கோடெஸ் என்பவரையும் இன்னும் சிலரையும் காந்திஜிக்கு மிஸ்டர் பேகர் அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் வழக்கமான பிரார்த்தனையைச் செய்து விட்டு, காந்திஜி கடைத் தேறும் பொருட்டாக விசேஷ பிரார்த்தனை செலுத்தினார்கள்.
"ஆண்டவனே ! இன்று எங்களிடையே புதிதாக வந்திருக்கும் சகோதரருக்கு ஞான மார்க்கத்தைக் காட்டி அருள்வீராக! எங்களுக்கு அருளிய மனச் சாந்தியை அவருக்கும் தருவீராக! எங்களை ஆட்கொண்ட ஏசு பெருமான் அவரையும் ஆட்கொள் எட்டும்!" என்று பிரார்த்தித்தார்கள்.
பிறகு காந்திஜி அடிக்கடி அந்த நண்பர்களைச் சந்தித்து மத விஷயங்களைப் பற்றிச் சர்ச்சை செய்து வந்தார். அவர்கள் காந்திஜியைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்துவிடும்படி அடிக்கடி போதனை செய்தார்கள். கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்தவர்களின் பாவங்களையெல்லாம் ஏசுநாதர் தாம் ஒப்புக்கொண்டு அவர்களுக்கு மோட்சத்தை அளிக்கிறார் என்றும், ஆகையால் பாவம் நீங்கி மோட்சம் அடையக் கிறிஸ்துவ மதத்தில் சேருவது ஒன்றே வழி யென்றும் வற்புறுத்தினார்கள்.
இந்த வாதம் காந்திஜிக்குத் திருப்தி அளிக்கவில்லை. "பாவம் செய்துவிட்டு அதன் பலனை அநுபவியாமல் தப்பவேண்டும் என்று நான் ஆசைப்படவில்லை. பாவத்திலிருந்தும் பாவ எண்ணங்களிலிருந்தும் கூட விடுதலை பெற விரும்புகிறேன். அதற்காக இடைவிடாமல் நான் முயற்சி செய்யப் போகிறேன் " என்று சொன்னார்.
துளசிமணிமாலை அணியும் வழக்கத்தைக் காந்தி மகாத்மா இளம் வயதிலேயே கைக்கொண்டிருந்தார்.
மிஸ்டர் கோடெஸ் என்னும் கிறிஸ்துவ நண்பர் காந்திஜி கழுத்தில் அணிந்திருந்த துளசிமணி மாலையைப் பார்த்துவிட்டு, "இந்த மாலையை எதற்காக அணிந்திருக்கிறீர்கள்? இதெல்லாம் சுத்தக் குருட்டு நம்பிக்கை. அதை இங்கே கொடுத்துவிடுங் கள் ! இப்போதே உடைத்து எறிந்துவிடுகிறேன்!" என்றார்.
"இல்லை ! இதை உடைக்கக் கூடாது. இந்த மாலை என் தாயார் எனக்கு அளித்த புனிதச் சின்னம் " என்றார் காந்திஜி.
"இதனிடம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? இந்த மாலையை எடுத்துவிட்டால் மோட்சம் கிட்டாது என்று நினைக்கி றீர்களா? உண்மையாகச் சொல்லுங்கள்!" என் று மிஸ்டர் கோடெஸ் கேட்டார்.
”இந்த மணி மாலையின் உட்பொருள் என்னமோ எனக்குத் தெரியாது. இதை அணியா விட்டால் எனக்குக் கெடுதல் நேர்ந்து விடும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் என் தாயார் அன்புடன் என் கழுத்தில் அணிவித்த மாலையைத் தகுந்த காரணமின் றி எடுத்து எறிய மாட்டேன் ! இதை உடைக்கவும் சம்மதிக்க மாட்டேன்!" என்றார் காந்திஜி.
இவ்வாறாகப் பல தடவைகளில் நண்பர்கள் எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லியும், காந்திஜி கிறிஸ்துவ மதத்தில் சேரத் தயாராகவில்லை. ஆனால் கிறிஸ்துவ மத போதனைகளில் மிகப் பற்றுக் கொண்டார். முக்கியமாக “தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய்யவேண்டும்" என்னும் ஏசுநாதரின் போதனை அவருடைய சிந்தையைக் கவர்ந்தது.
மேற்படி கொள்கையில் காந்திஜியின் நம்பிக்கையைச் சோதிக்கும்படியான சம்பவம் ஒன்று அப்போது நடந்தது.
பொது நடைப் பாதைகளில் இந்தியர்கள் நடக்கக்கூடாது என்றும், இரவு ஒன்பது மணிக்குமேல் அநுமதிச் சீட்டு இல்லாமல் இந்தியர்கள் வெளியில் புறப்படக் கூடாதென்றும் டிரான்ஸ் வாலில் சட்டங்கள் இருந்தன வல்லவா?
மிஸ்டர் கோடெஸ்ஸம் காந்திஜியும் இரவில் வெளியில் உலாவச் செல்வது வழக்கம். இரவு பத்து மணிக்குத்தான் அவர்கள் திரும்பி வருவார்கள். இப்படிச் சட்ட விரோதம் செய்வதற்காகப் போலீஸார் காந்திஜியைக் கைது செய்தால் என்ன பண்ணுவது என்ற கவலை காந்திஜியைக் காட்டிலும் அதிகமாக மிஸ்டர் கோடெஸ்ஸ க்கு இருந்தது. ஆகையால் அவர் சர்க்கார் வக்கீலான டாக்டர் கிராஸே என்பவரிடம் காந்திஜியை அழைத்துப் போனார். இங்கிலாந்தில் காந்திஜி பாரிஸ்டர் பயிற்சி பெற்ற ஸ்தாபனத்திலேயே கிராஸேயும் பயிற்சி பெற்றவர். அவர் காந்திஜியிடம் மிக்க அனுதாபம் தெரிவித்தார். சாதாரண அநுமதிச்சீட்டுக்குப் பதிலாகப் போலீஸ் தொந்தரவு இல்லாமல் - எப்போது வேண்டுமானாலும் வெளியே போகக் கூடிய வாறு ஒரு கடிதமும் தந்தார். இந்தக் கடிதத் தைக் காந்திஜி எப்போது வெளியே புறப்பட்டாலும் கையோடு எடுத்துப் போவது வழக்கம்.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மனிதர்கள் இப்படிப்பட்ட அநீதமான சட்டங்களை யெல்லாம் இயற்றி யிருக்கும்போது, கிறிஸ்துவ மதத்தைத் தழுவிய் உடனே ஒருவன் பரிசுத்தனாகி மோட்ச சாம்ராஜ்யத்துக்கு உரியவனாகிவிடுவான் என்று நம்புவது காந்திஜிக்குக் கஷ்டமா இருந்திருக்குமல்லவா?
உண்மையில், ஒருவனுக்கு மோட்சம் கிடைப்பதும் கிடைக் காததும் அவனுடைய நடத்தையையும் மனத் தூய்மையையும் பொறுத்தனவே தவிர, அவன் சம்பிரதாயமாகக் கடைப்பிடிக் கும் வெளி மதாச்சாரங்களைப் பொறுத்தன வல்ல என்பது காந்திஜியின் கொள்கை. இந்தக் கொள்கை ருசியாவின் மகான் டால்ஸ்டாய் எழுதிய "ஆண்டவன் ராஜ்யம் உனக்குள்ளே " என்னும் புத்தகத்தைப் படித்ததில் உறுதியாயிற்று. காந்திஜியின் ஆத்மீக வளர்ச்சிக்கு மேற்படி புத்தகம் பெரிதும் துணையாயிருந்தது. தம்பி! நீ இன்னும் கொஞ்சம் பெரியவரனான பிறகு மேற்படி புத்தகத்தை அவசியம் படிக்கவேண்டும். இன்னும் மகான் டால்ஸ்டாய் எழுதியிருக்கும் சிறு கதைகள், நாவல்கள், கட்டுரை நூல்கள் முதலியவற்றையும் படிக்க வேண்டும். டால்ஸ்டாயின் நூல்கள் உலக வாழ்வின் இருளைப் போக்கும் ஞான தீபங்கள் ; அதோடு, அவை மிகச் சிறந்த இலக்கியப் பொக்கிஷங்களுமாகும். நிற்க.
மேற்கண்டவாறு விசேஷ அநுமதிக் கடிதம் பெற்றிருந்துங்கூட, பொது நடைப் பாதைகளில் இந்தியர்கள் நடக்கக் கூடாது என்ற விதியினால் காந்திஜி ஒரு சமயம் பெருந் தொல்லைக்கு ஆளாக நேர்ந்தது.
தினம் இரவு நேரத்தில் காந்திஜியும் மிஸ்டர் கோடெஸ்ஸும் உலாவச் செல்லும் போது 'அக்கிராசனர் வீதி' என்று வழங்கிய சாலை வழியாக ஒரு மைதானத்துக்குப் போவது வழக்கம். இந்த வீதியில் தென்னாப்பிரிக்கா சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற பிரசிடெண்ட் குரூகர் என்பவரின் வீடு இருந்தது. டிரான்ஸ்வால் சர்க்காரின் தலைவராக விளங்கிய அக்கிராசனர். குருகர் எளிய வாழ்வைக் கடைப்பிடித்தவர். அவருடைய வீடு படாடோபமில்லாத சிறிய வீடு. பக்கத்து வீடுகளுக்கும் அக்கிரா சனர் குருகர் வீட்டுக்கும் வித்தியாசம் ஒன்றுமே தெரியாது.
பிரிட்டோரியாவில் லட்சாதிபதிகளான பல வெள்ளைக்காரர்கள் உண்டு. அவர்களுடைய பங்களாக்கள் பிரமாதமா யிருக்கும். ஆனால் குருகரின் வீடு வெகு சாமான்யமான து. வீட்டின் வாச லில் ஒரு சேவகன் எப்போதும் நின்று கொண்டிருப்பான். இதில் லிருந்துதான் அது ஓர் உத்தியோகஸ்தரின் வீடு என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
அந்த வீட்டுக்கு முன்னாலிருந்த நடைப்பாதை வழியாகவே காந்திஜி எப்போதும் உலாவப் போவது வழக்கம். பல நாள் வரையில் இதற்குத் தடை ஒன்றும் ஏற்படவில்லை. ஒரு நாள் ஏற்பட்டு விட்டது !
காவலுக்கு நிற்கும் சேவகர்கள் அடிக்கடி மாறுவது இயல்பே யல்லவா? ஒரு நாள் ஒரு புதிய சேவகன் வந்தான். அவன் நின்ற இடத்தின் அருகாமையில் காந்திஜி சென்றபோது, அந்த மூர்க்கன் சிறிதும் எச்சரிக்கை செய்யாமலும் "அப்பால் போ!" என்று கூடச் சொல்லாமலும் காந்திஜியை உதைத்துத். தள்ளினான்! இப்படி ஒரு மூர்க்கன் செய்வான் என்று நம்புவதற்கே இப்போது கஷ்டமாயிருக்கிற தல்லவா? ஆனால் இதை விட நம்புவதற்குக் கஷ்டமான அபூர்வ நிகழ்ச்சிகளும் அச்சம் தர்ப்பத்தில் நடந்தன.
தற்செயலாக அதே சமயத்தில் அந்தப் பக்கம் மிஸ்டர் கோடெஸ் குதிரைமேல் போய்க் கொண்டிருந்தார். மேற்படி சம்பவத்தைப் பார்த்தார். பரபரப்புடன் காந்திஜியிடம் ஓடி வந்து அநுதாபம் தெரிவித்தார். அதோடு, "இந்த முரடன் மீது கட்டாயம் வழக்குத் தொடர வேண்டும்; நான் சாட்சி சொல்லுகிறேன். இவன் தண்டிக்கப்படுவான் !" என்றார்.
மகாத்மா அதற்கு என்ன சொன்னார் தெரியுமா? "வேண்டாம், வேண்டாம்! பாவம் ! அவன் என்ன கண்டான்? கறுப்பு மனிதர்களை யெல்லாம் இப்படி நடத்தியே இவனுக்குப் பழக்கம். இந்த நாட்டின் சட்டங்கள் அவ்வளவு இலட்சண மாக இருக்கின்றன. ஆகவே இந்தச் சேவகன்மேல் வழக்கு தொடருவதில் என்ன பயன்? எனக்கு ஒருவன் கெடுதல் செய்ததற்காக அவன் பேரில் நான் கோபப்பட மாட்டேன் ; பழி வாங்கவும் எண்ண மாட்டேன். ' தீமை செய்தவனை மன்னித்து விடு' என்பது ஏசுநாதரின் திருவாக்கு அல்லவா? என் னைத் துன்புறுத்திய இவனை நான் மன்னித்து விட்டேன். வழக்குத் தொடர வேண்டிய அவசியமில்லை !" என்றார் காந்திஜி.
மிஸ்டர் கோடெஸ் திகைத்துப் போனார். "ஆஹா ! ஏசு நாதரின் போதனையை வாழ்க்கையில் உண்மையாகவே கடைப் பிடிக்கத் துணிச்சல் உள்ள மனிதர் இதோ ஒருவர் இருக்கிறாரே!" என்று வியந்தார். நாளடைவில் இந்தச் செய்தி பரவிய போது உலகமெல்லாமே ஆச்சரியப்பட்டது. ருஷியாவில் டால்ஸ்டாயும், இந்தியாவில் கோகலேயும், பெஸண்டு அம்மையும் கேட்டு வியந்தார்கள். "இவர் ஒரு மகாத்மா " என்று பலரும் வியந்து பாராட்டினார்கள்.
பிறகு மிஸ்டர் கோடெஸ் அந்தப் போலீஸ்காரனிடம் சென்று டச்சு பாஷையில் பேசினார். அவனுடைய நடத்தை எவ்வளவு மிருகத்தனமானது என்பதைச் சொல்லி, காந்தி மகாத்மா அவனிடம் காட்டும் கருணை எவ்வளவு தெய்வீகமான தென்பதையும் எடுத்துக் கூறினார். அந்த முரட்டுச் சேவகனுடைய மனம் இளகி விட்டது. காந்திஜியிடம் வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். "மன்னிப்புக் கேட்க அவசியமே இல்லை. உன்னை முன்னமே நான் மன்னித்து விட்டேன்" என்றார் காந்தி மகாத்மா.
அந்தப் பாதை வழியாகப் பிறகு மகாத்மா போகவில்லை. ஒரு வேளை மறுபடியும் சேவகன் மாறலாம். அவன் எப்படிப் பட்டவனோ என்னமோ? அவன் மீண்டும் இப்படி ஏதாவது செய்து வைத்தால்? காந்திஜி தமக்கு நேரக் கூடிய கஷ்டத்தைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் ஒரு ஏழைச் சேவகன் அறியாமையினால் முரட்டுச் செயல் புரிவதற்குக் காரணமாக அவர் நடந்து கொள்ள விரும்பவில்லை.
செய்ய வேண்டியது வேறு காரியம். தென்னாப்பிரிக்கா வில் உள்ள அந்த நிற வேற்றுமைச் சட்டங்களை ஒழித்துக் கறுப்பு மனிதர்களைக் காப்பாற்ற வேண்டும். அம்பை விட்டவனை நோகாமல் அம்பை நொந்து கொள்வதில் என்ன பயன்?
-------------
21. "காந்தியை நிறுத்துங்கள்"
தாதா அப்துல்லாவின் வழக்கு முடிந்து விட்டது. அதன் பிறகு பிரிட்டோரியாவில் காந்திஜி இருப்பதற்கு முகாந்தரம் எதுவும் கிடையாது. எனவே டர்பனுக்குப் புறப்பட்டுச் சென்று தாய்நாட்டுக்குக் கப்பல் ஏறுவதற்குக் காந்திஜி ஆயத்தமானார். ஆனால் அப்துல்லா சேத் அவ்வளவு சுலபமாக அவரை விட்டு விடுவாரா? இதற்குள்ளே காந்திஜியின் பேரில் மிக்க அபிமானமும் மரியாதையும் அவருக்கு ஏற்பட்டிருந்தது. ஆகவே, காந்திஜிக்குப் பிரிவு உபசார விருந்து ஒன்று நடத்தினார். பல நண்பர்களை விருந்துக்கு அழைத்தார். எல்லாரும் ஒரு நாள் முழுதும் தங்கி பொழுது போக்க ஏற்பாடு செய்திருந்தார்.
அச் சமயம் அங்கே கிடந்த தென்னாப்பிரிக்காப் பத்திரிகைகளைக் காந்திஜி புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார். "இந்தியர்களின் வாக்குரிமை " என்ற தலைப்பைக் கண்டதும் அதன் அடியில் கண்ட செய்தியைப் படித்தார். அப்போது நேட்டால் சட்ட சபையில் விவாதிக்கப்பட்டுவந்த ஒரு மசோதாவைப் பற்றியது அந்தச் செய்தி. நேட்டால் சட்டசபைத் தேர்தலில் வோட்டுக் கொடுக்கும் உரிமை அங்கே வியாபாரம் முதலிய தொழில்கள் செய்து வந்த இந்தியர்களுக்கு இருந்தது. அதைப் பறித்துவிடும் நோக்கத்துடன் மேற்படி மசோதா கொண்டு வரப்பட்டிருந்தது.
விருந்துக்கு வந்திருந்த இந்திய நண்பர்களிடம் காந்திஜி அதுபற்றி விசாரித்தார். அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை.
அப்துல்லா சேத் கூறினார் -- "இந்த விஷயமெல்லாம் எங்களுக்கு என்ன தெரியும்? வியாபார சம்பந்தமான விஷயங்களைப் பற்றி மட்டுந்தான் நாங்கள் சிரத்தை எடுத்துக் கொள்கிறோம். ஆரஞ்சு பிரீ ஸ்டேட் மாகாணத்தில் இந்தியர்கள் வியாபாரமே செய்யக்கூடாது என்று ஏற்பட்டுவிட்டது. அதைப்பற்றி நாங்கள் செய்த கிளர்ச்சி பயன்படவில்லை, நாங்கள் படிப்பாளிகள் அல்ல. பத்திரிகை வாங்கி அதிலுள்ள மார்க்கெட் நிலவரங்களைப்பற்றி மட்டும் படித்துவிட்டு எறிந்துவிடுகிறோம். சட்ட விவகாரங்களுக்கெல்லாம் இங்குள்ள ஐரோப்பிய அட்டர்னிகளையே நம்பியிருக்கிறோம்."
இதைக் கேட்ட காந்திஜி, "என்ன இப்படிச் சொல்கிறீர் கள்? இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்து கல்வி பயின்ற இந்திய இளைஞர்கள் அநேகர் இருக்கிறார்களே? அவர்கள் உங்களுக்கு உதவி செய்வதில்லையா?" என்றார்.
"அவர்களா? அவர்கள் எங்கள் பக்கத்திலேயே வருவதில்லை. நாங்களும் அவர்களை இலட்சியம் செய்வதில்லை. இங்கே படித்த இந்திய இளைஞர்கள் எல்லாரும் கிறிஸ்துவர்கள். வெள்ளைக்காரப் பாதிரிமார்கள் சொல்கிறபடி ஆடுகிறவர்கள். அந்தப் பாதிரிமார்களோ அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். அப்படி யிருக்கும்போது எங்களுக்கு அவர்களின் உதவி எப்படிக் கிடைக்கும்?" என்று அப்துல்லா சேத் கூறினார்.
இதைக் கேட்டதும் காந்திஜிக்கு ஒரே வியப்பாய்ப் போய் விட்டது. கிறிஸ்துவர்கள் ஆன காரணத்தினால் அவர்கள் இந்தியர் அல்லாதவராகி விட்டார்களா? கிறிஸ்துவ மதத்தின் பொருள் இதுதானா? ஒருநாளும் இல்லை. அத்தகைய கிறிஸ்துவ இந்திய வாலிபர்களை யெல்லாம் நம்மவர்கள் என்று உரிமை பாராட்டவேண்டும் என்பதாகக் காந்திஜிக்குத் தோன்றியது.
ஆனால் இத்தகைய எண்ணங்களினால் என்ன பயன்? காந்திஜியோ கப்பல் ஏற ஆயத்தமாயிருந்தார். தென்னாப்பிரிக்காவில் செய்ய வேண்டிய காரியங்களைப்பற்றி அவர் கவலைப் பட்டு ஆவதென்ன? என்றாலும், அப்துல்லா சேத்துக்கு ஓர் எச்சரிக்கை செய்துவிடவேண்டுமென்று தீர்மானித்துக் கூறினார்:- "இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் இந்த மசோதா நேட்டால் சட்ட சபையில் நிறைவேறுமானால் இந்தியர்களின் நிலைமை இப்போதைக் காட்டிலும் கஷ்டமாகிவிடும்! இந்தியர்களின் சுய மரியாதைக்குப் பங்கம் விளைவிப்பதுடன் இந்திய சமூகத்தையே நாசமாக்கிவிடும் ! ஆகையால் முன் ஜாக்கிரதையாயிருங்கள் !"
இதைக் கேட்ட அப்துல்லா சேத் சொன்னதாவது: "நீங்கள் சொல்வது வாஸ்தவமா யிருக்கலாம். ஆயினும் இந்த மசோதா ஏன் கொண்டுவரப் படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். சில காலத்துக்கு முன்னால் வரையில் இந்தியர்களுக்கு வாக்குரிமை உண்டு என்னும் விஷயமே எங்களுக்குத் தெரியாமலிருந்தது. எங்களுடைய அட்டர்னிகளில் ஒருவரான மிஸ்டர் எஸ்கோம்ப் ஒரு சமயம் தேர்தலுக்கு நின்றார். என்ஜினியர் ஒருவரோடு அவர் போட்டியிட்டார். என்ஜினியர் தம்மைத் தோற்க அடித்து விடுவாரோ என்ற பயம் மிஸ்டர் எஸ் கோம்புக்கு ஏற்பட்டது. உடனே அவர் எங்களிடம் வந்தார். எங்களுக்கு வாக்குரிமை உண்டு என்பதை எடுத்துக் கூறி எங்களை வோட்டர்களாகப் பதிவு செய்து கொள்ளத் தூண்டினார். அப்படியே பதிவு செய்து கொண்டு அவருக்கு வோட்டும் கொடுத்தோம். என்ஜினியர் தோற்றுப்போனார். இது காரணமாகவே எங்களுடைய வோட்டுரிமையைப் பறிக்கும் சட்டம் கொண்டுவருகிறார்கள் போலிருக்கிறது. தாங்கள் எடுத்துச் சொன்ன பிறகு வோட்டுரிமையின் முக்கியம் எங்களுக்குத் தெரிகிறது. ஆனால் அது தெரிந்து என்ன பயன்? நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று தெரியவில்லையே !'
காந்திஜிக்கும் அப்துல்லா சேத்துக்கும் நடந்த சம்பாஷணையை விருந்துக்கு வந்திருந்த பல நண்பர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர், "என்ன செய்ய வேண்டுமென்பதை நான் சொல்லட்டுமா? காந்திஜி இந்தியாவுக்குப் புறப்படாமல் தடுத்து நிறுத்திவிடவேண்டும். கப்பல் டிக்கட்டை ரத்து செய்துவிடவேண்டும். இன்னும் ஒரு மாதம் காந்திஜி இங்கே இருக்கட்டும். அவர் காட்டும் வழியைப் பின் பற்றி நாம் வோட்டுரிமைக்காகப் போராடுவோம்" என்றார்.
உடனே அங்கிருந்தோர் அனைவரும் "அதுதான் சரி ; அது தான் சரி! அப்துல்லா சேத் ! சகோதரர் காந்தியை எப்படியாவது நிறுத்திவிடுங்கள்!" என்று கூச்சலிட்டார்கள்.
அப்துல்லா சேத் காரியத்தில் கண்ணுள்ள மனிதர். காந்திஜியை நிறுத்தினால் அவருக்குச் சன்மானம் கொடுக்க வேண்டாமா என்று யோசனை செய்தார். "நீங்கள் சொல்வது என்னமோ சரியான காரியந்தான். ஆனால் சகோதரர் காந்தியை இனி நிறுத்தி வைப்பதற்கு எனக்குத் தனிப்பட்ட உரிமை கிடை யாது. நாம் எல்லாரும் சேர்ந்து அவரைத் தங்கிப் போகும்படி கேட்கலாம். ஆனால் அவருடைய சன்மானத்துக்கு என்ன ஏற்பாடு? காந்திஜி பாரிஸ்டர் என்பது எல்லாருக்கும் ஞாபக மிருக்கட்டும்!" என்று சொன்னார்.
சன்மானத்தைப் பற்றி அப்துல்லா சேத் குறிப்பிட்டது மகாத்மாவுக்கு வருத்தம் அளித்தது. அவர் குறுக்கிட்டுச் சொன்ன தாவது:- "சேத்! சன்மானம் என்ற பேச்சே வேண்டாம். பொது ஊழியத்துக்குச் சன்மானம் ஏது? யார் கொடுப்பது? யார் வாங்குவது? இந்த நண்பர்களிடம் எனக்கு அதிகப் பழக்கம் கிடையாது. இவர்கள் எல்லாரும் என்னுடன் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருந்தால் இன்னும் ஒரு மாதம் நான் இங்கே தங்கிப் போகிறேன். எனக்குச் சன்மானம் எதுவும் வேண்டியதில்லை. ஆனால் நாம் தொடங்கப்போகும் முயற்சி பணம் இல்லாமல் நடைபெறாது. தந்தி தபால்கள் அனுப்ப வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் அச்சிடவேண்டும். சுற்றுப் பிரயாணம் செய்யவேண்டி வரலாம். இதற்கெல்லாம் பணம் தேவை. பணம் மட்டும் போதாது. ஒருவர் மட்டும் தனித்துச் செய்யக்கூடிய காரியம் அல்ல. பலரும் உற்சாகத்துடன் உதவி செய்வதற்கு முன் வரவேண்டும். என்ன சொல்கிறீர்கள்?"
இவ்விதம் காந்தி மகான் சொன்ன தும் அந்தக் கூட்டத்திலிருந்தவர்களில் பலர் ஏக காலத்தில், "ஆண்டவனுடைய மகிமையே மகிமை. கடவுளின் கருணையே கருணை. தாங்கள் மட்டும் தங்கிப்போகச் சம்மதியுங்கள். ஆள் உதவி, பண உதவி எல்லாம் ஏராளமாக வரும் !" என்று கூவினார்கள்.
நண்பர்களின் இந்த ஏக மனதான விருப்பத்தை மதித்துக் காந்திஜி தென்னாப்பிரிக்காவில் மேலும் ஒரு மாதம் தங்கச் சம்மதித்தார். இதன் காரணமாகப் பின்னால் எத்தனை எத்தனையோ காரியங்கள் விளைந்தன.
ஒரு மாதம் பல மாதங்களாகிப் பிறகு பல வருஷங்களுமாயின. காந்திஜி தென்னாப்பிரிக்காவில் ஆரம்பித்து நடத்திய சத்தியப் போராட்டமான து உலகத்துக்கே ஒரு புது வழி காட்டுவதாயிற்று. அன்று தென்னாப்பிரிக்காவில் கோவித்த நண்பர்களைப்போலவே நாமும் "ஆண்டவனுடைய மகிமையே மகிமை !" என்று கோஷிக்க வேண்டியவர்களாகிறோம்.
---------------
22. வாக்குரிமைப் போர்
தாதா அப்துல்லாவின் வீட்டில் சேத் ஹாஜி முகம்மது அவர்களின் தலைமையில் நேட்டால் இந்தியர்களின் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. எள்ளுப் போட்டால் கீழே விழாதபடி இந்தியர்கள் அன்று கூடியிருந்தார்கள். அக் கூட் டத்தில் இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் மசோதா வைத் தீவிரமாக எதிர்ப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
எதிர்ப்பு வேலையை நடத்தத் தொண்டர்கள் சேர்க்க வேண்டும் என்று காந்திஜி சொன்னார். உடனே நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு தொண்டர்கள் முன் வந்தார்கள். பிரபல முஸ்லிம் வியாபாரிகள் தொண்டர்களானார்கள். கடை குமாஸ்தாக்கள் தொண்டர் படையில் சேர்ந்தார்கள். நேட்டாலில் பிறந்து வளர்ந்து படித்துத் தேர்ந்த இந்தியக் கிறிஸ்தவ வாலிபர்களும் தொண்டர்களாக முன் வந்தார்கள்.
காந்தி மகாத்மா ஆரம்பித்த அந்த முதல் போராட்டத்தில் பங்கு பெறுவதற்கு நமது தமிழ் நாட்டிலிருந்து போன சிலரும் பாக்கியம் செய்திருந்தார்கள். அவர்களில் ஸ்ரீ ஏ. குழந்தை வேலுப் பிள்ளை, ஸ்ரீ ரங்கசாமிப் படையாச்சி என்னும் இருவர் பெயரை மகாத்மா காந்தி தாம் எழுதிய சுய சரிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தக் கூட்டத்தில் கூடியிருந்தவர்கள் எல்லாருக்கும் இந்த மட்டும் ஒரு பொது ஊழியத்தில் ஈடுபடும் சந்தர்ப்பம் தங்களுக்குக் கிடைத்ததே என்று சந்தோஷமாயிருந்தது. நேட்டாலில் இந்திய சமூகத்துக்கு வருவதற்கிருந்த பெரும் அபாயத்தை எண்ணித் தங்களுக்குள் இருந்த எல்லா வேற்றுமைகளையும் அவர்கள் மறந்தார்கள். உயர்ந்தவர், தாழ்ந்தவர், பெரியவர், சிறியவர், எஜமானர், ஊழியர், ஹிந்து, முஸ்லிம், பார்ஸி, கிறிஸ்துவர், குஜராத்தியர், மதராஸியர் ஆகிய சகல வித்தியாசங்களும் ஒழிந்து எல்லாரும் ஒன்று பட்டார்கள்.
நேட்டால் சட்ட சபையில் மசோதா நிறைவேறும் தறுவாயில் இருந்தது. எனவே, முதல் வேலையாகச் சட்டசபை அக்கிராசனருக்கு ஒரு தந்தி கொடுக்கப் பட்டது. இந்தியர் வாக்குரிமை மசோதா நிறைவேற்றுவதைத் தள்ளிவைக்க வேண்டு மென்று அந்தத் தந்தியில் வேண்டிக் கொள்ளப் பட்டது. அம் மாதிரியே நேட்டால் பிரதம மந்திரிக்கும், தாதா அப்துல்லாவின் அட்டர்னி மிஸ்டர் எஸ்கோம்புக்கும் தந்திகள் சென்றன.
விவாதம் இரண்டு நாளைக்குத் தள்ளிவைக்கப்படும் என்று சட்டசபைத் தலைவரிடமிருந்து பதில் வந்தது. இந்த ஆரம்ப நல்ல சகுனத்தினால் தொண்டர்களின் உற்சாகம் அதிகமாயிற்று.
சட்ட சபைக்கு அனுப்ப இந்தியர்களின் விண்ணப்பம் இரண்டு நாளைக்குள் தயாராக வேண்டும். விண்ணப்பத்தில் ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் வாங்கப்பட வேண்டும். எனவே, காந்திஜியின் தலைமையில் இரவெல்லாம் கண் விழித்துத் தொண்டர்கள் வேலை செய்தார்கள்.
காந்திஜி விண்ணப்ப நகலைத் தயாரித்தார். அதற்கு ஏக காலத்தில் ஐந்து பிரதிகள் எடுக்கப் பட்டன. அவற்றை எடுத்துக் கொண்டு தொண்டர்கள் நாலா பக்கமும் விரைந்தார்கள். சிலர் தங்களுடைய சொந்த வண்டியில் சென்றார்கள். சிலர் தாங்களே வாடகை கொடுத்து வண்டி வைத்துக்கொண்டு சென்றார்கள். ஒரே நாளில் கையொப்பங்கள் ஏராளமாக வாங்கப்பட்டன. குறிப்பிட்ட சமயத்தில் விண்ணப்பம் சட்ட சபைக்குச் சென்றது. விண்ணப்பத்தில் கண்ட காரணங்களுக்குச் சர்க்கார் தரப்பில் நொண்டிச் சமாதானங்கள் சொல்லப்பட்டன. அந்த அநியாய மசோதா சட்டமாகி விட்டது.
இவ்விதம் காரியம் கைகூடாமற் போனாலும் அது சம்பந்தமாக நடந்த முயற்சி காரணமாக இந்திய சமூகமே புத்துயிர் பெற்றது. முயற்சியை அத்துடன் விட்டு விடுவதில்லை யென் றும், இந்தியர் ஒரு முகமாகத் தங்கள் வியாபார உரிமைக்காகவும் அரசியல் உரிமைக்காகவும் தொடர்ந்து போராடுவதென் றும் தீர்மானித்தார்கள்.
அப்போது லார்ட் ரிப்பன் என்பவர் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய மந்திரி சபையில் குடியேற்ற நாட்டு மந்திரியாயிருந்தார். நேட்டால் சட்ட சபை செய்த சட்டத்தை நிராகரிக்க வேணுமென்று அவருக்கு மகஜர் அனுப்பத் தீர்மானிக்கப் பட்டது. இந்த மகஜரில் மறுபடியும் இந்தியர்களின் கையொப்பங்கள் வாங்கப்பட்டன. மொத்தம் பதினாயிரம் கையொப்பங்களுடன் குடியேற்ற நாட்டு மந்திரிக்கு மகஜர் போயிற்று.
காந்திஜி மேற்படி மகஜரை அச்சிட ஏற்பாடு செய்தார். ஆயிரம் பிரதிகள் எடுத்து இந்தியாவிலுள்ள பத்திரிகைகள், பிரமுகர்கள் எல்லாருக்கும் அனுப்பினார். இந்தியாவில் பல பத்திரிகைகள் மகஜரை ஆதரித்து அபிப்பிராயம் எழுதின. பம்பாய் ”டைம்ஸ் ஆப் இந்தியா" பத்திரிகையும் லண்டன் "டைம்ஸ்" பத்திரிகையுங்கூட மேற்படி மகஜரைப் பற்றிச் சாதகமாக அபிப்பிராயம் எழுதின.
இதற்குள் ஏறக்குறைய ஒரு மாதம் ஆகிவிட்டது. நேட்டாலில் காந்திஜிக்குப் பல நண்பர்கள் ஏற்பட்டு விட்டார்கள். எல்லாரும் ஒரு முகமாகக் காந்திஜி நேட்டாலிலேயே தங்கிவிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
காந்திஜிக்கும் அங்கே தாம் தொடங்கிய வேலையைத் தொடர்ந்து நடத்திப் பார்த்து விட வேண்டும் என்றிருந்தது. ஆனால், காலட்சேபம் நடத்துவது எப்படி? தனி ஜாகை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்துவதா யிருந்தால் குறைந்த பட் சம் வருஷத்துக்கு 300 பவுன் வேண்டியிருக்கும். இந்த வருமானம் தரக்கூடிய அளவுக்குத் தமக்குக் கோர்ட்டு வேலை தருவதாயிருந்தால் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கிவிடுவதாகக் காந்தி மகாத்மா சொன்னார்.
"நன்றாயிருக்கிறது ! தங்களைத் தங்கும்படிச் சொல்லி விட்டுச் செலவுக்கு ஏற்பாடு செய்யாமல் சும்மா இருந்து விடுவோமா? தாங்கள் செய்யும் பொது வேலைக்காகவே 300 பவுன் வசூல் செய்து தந்துவிடுகிறோம்" என்று நண்பர்கள் அவரிடம் சொன்னார்கள்.
பொது வேலைக்காகப் பணம் பெற்றுக் கொள்ளக் காந்திஜிக்கு விருப்பமில்லை.
“அவ்வளவு தொகை கிடைக்கும்படியாக எனக்குப் பாரிஸ்டர் தொழிலில் கேஸ்கள் கொடுத்தால் போதும். பொது ஊழியத்துக்காகப் பணம் பெற்றுக் கொள்ள மாட்டேன்" என்று காந்தி மகாத்மா வற்புறுத்தினார்.
அதன் பேரில் சுமார் இருபது இந்திய வியாபாரிகள் ஒரு வருஷத்துக்குக் காந்திஜியைத் தங்களுடைய சொந்த வக்கீலாக அமர்த்திக் கொண்டு அவருடைய சேவைக்காக முன்பணமும் கொடுத்தார்கள்.
காந்திஜியும் நேட்டாலில் ஸ்திரமாக வாசம் செய்வதென்று முடிவு செய்தார். ஆனால் அந்த முடிவைக் காரியத்தில் நிறை வேற்றுவது அவ்வளவு சுலபமாயில்லை. எதிர்பாராத தடை ஒன்று குறுக்கிட்டது.
வக்கீல் வேலையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டல்லவா காந்திஜி அங்கே வாழ்க்கை நடத்த உத்தேசித்தார்? அந்த உத்தேசத்துக்கு நேட்டால் வக்கீல் சங்கத்தார் இடையூறு செய்ய முன் வந்தார்கள்.
நேட்டால் ஹைக்கோர்ட்டில் ஆஜராகி வழக்கு நடத்தும் உரிமைக்காகக் காந்திஜி விண்ணப்பம் செய்து கொண்டார். அவர் பாரிஸ்டர் என்பதற்கு ருசு வேண்டும் அல்லவா? அதற்காக பம்பாய் ஹைக்கோர்ட்டில் தாம் வக்கீல் தொழில் நடத்துவதற்காகப் பெற்றிருந்த அங்கீகாரப் பத்திரத்தையும், அத்துடன் இரண்டு நேட்டால் ஐரோப்பியர்களின் நற்சாட்சிப் பத்திரத்தையும் சேர்த்து காந்திஜி விண்ணப்பத்தை அனுப்பினார். தாதா அப்துல்லாவின் சிநேகிதரான மிஸ்டர் எஸ்கோம்ப் என்பவர் தான் அப்போது அட்டர்னி ஜெனரல் ; அதாவது சர்க்கார் வக்கீல். அவரே காந்திஜியின் விண்ணப்பத்தைக் கோர்ட்டில் சமர்ப்பிக்க முன் வந்தார்.
ஆனால் யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக நேட்டால் வக்கீல் சங்கத்தார் குறுக்கிட்டுக் காந்திஜியின் விண்ணப்பத்தை ஆட்சேபித்தார்கள். காந்திஜி இங்கிலாந்தில் பெற்ற அசல் பாரிஸ்டர் சர்டிபிகேட் விண்ணப்பத்தோடு சேர்க்கப்பட வில்லை யென்பது அவர்கள் குறிப்பிட்ட ஒரு காரணம். மேற்படி சர்டிபிகேட்டைப் பம்பாய் ஹைக்கோர்ட்டில் கொடுத்து விட்டுத்தான் அந்த ஹைக்கோர்ட்டின் அங்கீகாரத்தை மகாத்மா பெற்றிருந்தார். ஆகவே அசல் சர்டிபிகேட்டை இப்போது எப்படிக் கொண்டு வர முடியும்?
அசல் பாரிஸ்டர் சர்டிபிகேட் இல்லாத காரணத்தை மட் டும் நேட்டால் வக்கீல் சங்கத்தார் குறிப்பிடவில்லை. தென்னாப்பிரிக்கா வளம் பெற்றுச் செழிப்படைந்ததற் கெல்லாம் காரணம் ஐரோப்பியர்கள். ஆதலால், தென்னாப்பிரிக்கா கோர்ட்டுகளில் ஐரோப்பிய வக்கீல்கள் தான் தொழில் நடத்தலாம் என்றும், இந்திய வக்கீல்களுக்கு இடங்கொடுத்தால் நாளடைவில் ஐரோப்பிய வக்கீல்களைக் காட்டிலும் இந்திய வக்கீல்கள் அதிகமாகி விடுவார்கள் என்றும் விசித்திரமான ஒரு காரணம் சொல்லி ஆட்சேபித்தார்கள்.
காந்திஜிக்கு இது பெரும் வியப்பையும் ஏமாற்றத்தையும் அளித்தது. நீதி வழங்குவதற்காக ஏற்பட்ட நியாய ஸ்தலங்களிலும் இப்படிப்பட்ட அநீதியா என்று ஆச்சரியப் பட்டார். பொங்கிவந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களை முறைப்படி செய்தார். கடைசியில் கோர்ட் டில் விண்ணப்பம் வந்தது. நல்ல வேளையாக நீதிபதி அவ்வளவு மோசமான மனப்பான்மை உடையவராயில்லை. வக்கீல் சங்கத்தின் ஆட்சேபங்களை அவர் நிராகரித்து, காந்திஜியை அட்வகேட்டாக அங்கீகரித்தார். அச்சமயம் நீதிபதி கூறியதாவது:-
"விண்ணப்பதாரர் விண்ணப்பத்துடன் அசல் அத்தாட்சிப் பத்திரத்தைச் சேர்க்கவில்லை யென்னும் வாதம் பொருளற்றது. அவர் பொய்யான அத்தாட்சிகளைச் சேர்த்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ள இடமிருக்கிறது. விசாரணையில் குற்றவாளி யென் று நிரூபிக்கப் பட்டால் அப்போது அவருடைய பெயரை எடுத்து விடலாம். வக்கீல்களின் விஷயத்தில் வெள்ளைக்காரர், வேறு நிறத்தவர் என்னும் வேற்றுமையைச் சட்டம் அங்கீகரிக்க வில்லை. ஆதலின் மிஸ்டர் காந்தியை அட்வகேட்டாக அங்கீகரிக்க மறுப்பதற்கு நமக்கு எவ்வகை அதிகாரமும் கிடையாது. அவருடைய விண்ணப்பத்தை அங்கீகரிக்கிறோம். மிஸ்டர் காந்தி, இனி நீங்கள் சத்தியப் பிரமாணம் செய்யலாம்."
அவ்வாறே காந்திஜி சத்தியப் பிரமாணம் செய்து நேட் டால் ஹைக் கோர்ட்டில் அட்வகேட் ஆனார். ஆனாலும் வக் கீல் சங்கத்தார் கிளப்பிய மேற்படி ஆட்சேபணை அவருடைய மனத்தில் ஆழ்ந்து பதிந்தது. தென்னாப்பிரிக்காவில் உள்ள படித்த ஐரோப்பியர் கூட எத்தகைய துவேஷ மனப்பான்மை கொண்டிருக்கிறார்கள் என்று மகாத்மாவுக்குத் தெரிந்தது.
-------------
23. நேட்டால் இந்தியக் காங்கிரஸ்
டர்பன் ஹைக் கோர்ட்டில் காந்திஜி அட்டர்னி தொழில் நடத்தத் தொடங்கினார். ஆனால் இது அவருடைய வாழ்க்கையில் இரண்டாவது வேலையாகவே இருந்தது. முதற் கடமையாக அவர் கருதிச் செய்தது தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் க்ஷேமத்தைப் பற்றிய பொது ஊ ழியந்தான். இந்த ஊழியம் சரியாக நடைபெறுவதற்கு ஒரு பொது ஸ்தாபனம் அமைக்க வேண்டும் என்று காந்திஜி கருதினார். நண்பர்களுடன் கலந்து ஆலோசனை செய்தார். எல்லாரும் அத்தகைய ஸ்தாபனம் அவசியந்தான் என்று ஒப்புக் கொண்டார்கள்.
ஸ்தாபனத்துக்கு என்ன பெயர் இடுவது என்ற கேள்வி எழுந்தது. இந்தியாவில் 1885-ம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டுப் பிரபலம் அடைந்திருந்தது. தேசிய உணர்ச்சி பெற்ற இந்தியர்கள் எல்லாரும் காங்கிரஸை இந்தியாவின் உயிர் என்றே கருதினார்கள். காந்திஜியும் அதே கருத்துக் கொண்டிருந்தார். ஆகையால் நேட்டாலில் தொடங்க உத்தே சித்த ஸ்தாபனத்துக்கு "நேட்டால் இந்தியக் காங்கிரஸ்" என்று பெயரிடலாம் என்று காந்திஜி யோசனை கூறினார். அதையே மற்றவர்களும் ஒப்புக் கொண்டதில் ஆச்சரியம் இல்லை யல்லவா?
1894-ம் வருஷம் மே மீ 22 டர்பனில் தாதா அப்துல்லாவின் இல்லத்தில் நேட்டாலின் பல பகுதிகளிலிருந்தும் இந்தியர்கள் வந்து கூடியிருந்தார்கள். அவர்களுடைய ஏகமன தான ஆதரவுடன் உற்சாக ஆரவாரங்களுக்கிடையே "நேட்டால் இந் தியக் காங்கிரஸ்" ஸ்தாபிக்கப்பட்டது. காங்கிரஸில் அங்கத்தின ராவதற்கு விதிகள் மிக எளிதாக அமைக்கப்பட்டன. ஆனால் சந்தாமட்டும் அதிகமாக ஏற்படுத்தப்பட்டது. பெரிய வேலைகள் ஆகவேண்டி யிருந்தன வல்லவா? மாதத்திற்குக் குறைந்த பட்சம் ஐந்து ஷில்லிங் சந்தா என்றும், சக்தி உள்ளவர்கள் இஷ்டப்பட்டு அதிகம் செலுத்தலாம் என்றும் ஏற்படுத்தினார்கள். எல்லாருக்கும் முதலில் தாதா அப்துல்லா மாதம் இரண்டு பவுன் சந்தா கொடுப்பதாகக் கையொப்பமிட்டார். காந்திஜி தம்முடைய சக்திக்கு மேல் என்று தெரிந்தே மாதம் ஒரு பவுன் சந்தா வுக்குக் கையொப்பம் செய்தார். மற்றும் சிலர் மாதம் ஒரு பவுனும் பலர் மாதம் பத்து ஷில்லிங்கும் சந்தா தருவதற்கு இசைந்தார்கள். மொத்தமாக நன்கொடைகள் அளிக்கவும் சிலர் முன் வந்தார்கள்.
ஆரம்ப உற்சாகத்தில் பலர் சந்தாவுக்கும் நன்கொடைக்கும் கையொப்பம் செய்து விடுவார்கள். ஆனால் கையொப்பம் செய்தபடி சந்தாவும் நன்கொடையும் ஒழுங்காகச் செலுத்துவோர் எங்கேயும் கொஞ்சம் அருமைதான். நேட்டாலிலும் அப்படித்தானிருந்தது. நேட்டால் இந்தியக் காங்கிரஸின் காரியதரிசி காந்திஜி ஆகையால், சந்தா வசூலிக்கும் பொறுப்பு அவருக்கு ஏற்பட்டது. மாதா மாதம் சந்தா வசூலிப்பது பெருந் தொல்லையா யிருந்தது. ஒரு குமாஸ்தாவுக்கு அந்த வேலையே சரியாய்ப் போயிற்று. இதை உத்தேசித்து மாதச் சந்தாவுக்குப் பதிலாக வருஷச் சந்தா ஏற்படுத்தத் தீர்மானிக்கப் பட்டது. வருஷத்துக்கு குறைந்த பட்சச் சந்தா மூன்று பவுன் என்று ஏற்படுத்தினார்கள். இதன் பிறகு சந்தா வசூல் கொஞ்சம் சுலபமாயிற்று.
பொதுக் காரியங்களுக்குப் பணம் சேகரிப்பதில் காந்திஜியைப் போல் திறமைசாலி வேறு யாரும் இல்லை என்பதை இந்தியாவில் நாம் கண்டிருக்கிறோம். எந்தக் காரியத்துக்கானாலும் ஒரு குறிப்பிட்ட தொகை வேண்டும் என்று காந்திஜி தீர்மானித்தால் அதைச் சேகரித்தே தீருவார். எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சர்களின் மனத்தையும் கரைத்து விடுவார். காந்திஜியின் இந்தத் திறமை தென்னாப்பிரிக்கா-விலேயே வெளியாயிற்று.
காந்திஜியும் நண்பர்களும் அடிக்கடி காங்கிரஸ் அங்கத்தினர் சேர்ப்பதற்காக நேட்டாலில் தூர தூரத்து ஊர்களுக்கும் போவதுண்டு. ஆங்காங்கிருந்த இந்திய வியாபாரிகள் உற்சாகமாக வரவேற்று விருந்தளித்து அங்கத்தினராகவும் சேருவார்கள். பல இடங்களிலிருந்து காந்திஜிக்கு அடிக்கடி அழைப்பும் வந்து கொண்டிருந்தது.
இத்தகைய சுற்றுப் பிரயாணத்தின் போது ஒருமுறை ஓர் ஊரில் தர்ம சங்கடமான நிலைமை ஏற்பட்டது. அந்த ஊரில் யாருடைய விருந்தாளிகளாகக் காந்திஜியும் நண்பர்களும் தங்கினார்களோ அந்த மனிதர் நல்ல பணக்காரர். அவரிடமிருந்து வருஷத்துக்கு ஆறு பவுன் சந்தா எதிர்பார்த்தார்கள். அவரோ மூன்று பவுன் தான் கொடுப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார். கொடாக் கண்டர் - விடாக் கண் டர் கதை நடந்தது. அவரிடம் மூன்று பவுன் வாங்கி விட்டால் மற்றவர்கள் யாரும் அதற்கு மேல் கொடுக்க மாட்டார்கள். தேவையாயிருந்த உத்தேசத் தொகை சேராது. எனவே இரவு வெகு நேரம் வரையில் விவாதம் நீடித்தது. ஒருவரும் சாப்பிட்ட பாடில்லை.
எல்லாருக்கும் பசி அதிகமாயிருந்தாலும், ஆறு பவுன் வசூலியாமல் சாப்பிடுவதில்லை யென் று உறுதியா யிருந்தார்கள். அந்த வியாபாரியும் மசிகிற வழியாகக் காணவில்லை. அதே ஊரைச் சேர்ந்த மற்ற வியாபாரிகள் மன்றாடியும் பயனில்லை. இரவில் பெரும் பகுதி இவ்விதம் கழிந்த பிறகு, நாலாவது ஜாமத்தில் அந்தக் கனவான் வழிக்கு வந்து ஆறு பவுன் தர ஒப்புக்கொண் டார். பிறகு விருந்தும் நடந்தது. இந்தச் செய்தி நாலாபுறமும் பரவியபடியால் சந்தா வசூல் வெகு சுலபமாயிற்று.
காந்திஜி பொதுக் காரியங்களுக்குப் பணம் வசூலிப்பதில் எவ்வளவு திறமை யுள்ளவரோ அவ்வளவு அந்தப் பணத்தைச் செலவு செய்வதிலும் செலவுக்குக் கணக்கு வைப்பதிலும் மிக வும் கண்டிப்பானவர். அவருடைய இந்த இயல்பும் தென்னாப் பிரிக்காவிலேயே வெளியாயிற்று. தம்பி ! பொதுப் பண நிர்வாகம் சம்பந்தமாகக் காந்திஜி எழுதியிருப்பதைக் கேள் :-
"பொது வேலைகளில் சில்லறைச் செலவுகளே பெருந் தொகைகளாகிவிடு மென்பதை நான் அறிந்திருந்தேன். எனவே ஆரம்பத்தில் ரசீது புத்தகங்கள் கூட அச்சடிக்க வேண்டாமென த் தீர்மானித்தேன். எனது காரியாலயத்திலிருந்த சைக்ளோஸ்டைல் என்னும் பிரதிகள் எடுக்கும் கருவியில் ரசீதுகளும் அறிக்கைகளும் தயாரித்துக் கொண்டேன். காங்கிரஸுக்கு நிதியும் அங்கத்தினரும் நிரம்பச் சேர்ந்து வேலையும் அதிகமான பின்னரே ரசீது புத்தகம், அறிக்கை முதலியவை அச்சடிக்கத் தொடங்கினேன். எல்லாப் பொது ஸ்தாபனங்களுக்கும் இத்தகைய சிக்கனம் அத்யாவசியமானது. ஆனால் பெரும்பாலும் இந்த விஷயத்தில் கவனஞ் செலுத்தப் படுவதில்லை யென்பதை நான் அறிந்திருந்தேன்.
பொது ஜனங்கள் தாங்கள் கொடுத்த பணத்துக்கு ரசீது பெறுவதில் கவலை காட்டுவதில்லை. ஆனால் நாங்கள் ரசீது கொடுப்பதை எப்போதும் வற்புறுத்திக் கொண்டு வந்தோம். ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்தோம். நேட்டால் இந்தியக் காங்கிரஸின் பழைய தஸ்தாவேஜிகளைப் புரட்டினால் இன்றும் 1894-ம் ஆண்டுக் கணக்குப் புத்தகத்தை அப்படியே காணலா மென்று நான் துணிந்து கூற முடியும். எந்தப் பொது ஸ்தாபனத்துக்கும் வரவு செலவுக் கணக்கு ஒழுங்காக வைத் திருத்தல் இன்றியமையாதது. இல்லா விட்டால் அந்தப் பொது ஸ்தாபனம் விரைவில் கெட்ட பெயர் எடுக்கும் என்பதில் ஐயா மில்லை. ஒழுங்குபட்ட கணக்கு வையாமல் உண்மையைப் பாதுகாத்தல் இயலாத காரியம் என்பது என் அனுபவம்."
------------------
24. பாலசுந்தரம்
ஸ்ரீ மோகன் தாஸ் காந்தி நேட்டாலில் நிலையாகத் தங்குவது என்ற உத்தேசத்துடன் அட்டர்னி தொழில் செய்ய ஆரம்பித்து நாலு மாதம் ஆயிற்று. இந்த நாலு மாதத்தில் நேட்டாலில் வசித்த இந்திய வியாபாரிகள், இந்தியக் குமாஸ்தாக்கள் இவர்களுடைய பழக்கம் காந்திஜிக்கு ஏற்பட்டிருந்தது. நேட்டால் இந்தியக் காங்கிரஸில் அங்கத்தினராகச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வியாபாரிகள், குமாஸ்தாக்கள் ஆகியவர்கள்தான். தென்னாப்பிரிக்காவில் வசித்த இந்தியர்களில் மிகப் பெரும்பாலோரான ஒப்பந்தக் கூலிகளுடன் காந்திஜிக்கு இன்னும் பழக்கம் ஏற்படவில்லை. ஆனால் ஒப்பந்தக் கூலிகளின் கஷ்டங்களைப்பற்றி ஓரளவு கேள்விப் பட்டிருந்தார்.
இந்த நிலைமையில் ஒருநாள் காந்திஜியின் காரியாலயத்துக்கு ஓர் ஏழை இந்தியன் அலங்கோலமாக அழுதுகொண்டு வந்து சேர்ந்தான். அவன் இடுப்பில் கந்தைத் துணி உடுத்தியிருந்தான் ; கையிலே முண்டாசுத் துணி வைத்திருந்தான் ; அவனுடைய முன் வாய்ப் பற்கள் இரண்டு உடைபட்டு வாயிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது; நோவினாலும் பயத்தினாலும் அவனுடைய உடம்பு நடுங்கிற்று.
காந்திஜியின் காரியாலயத்தில் குமாஸ்தாவாக வேலை செய்தவர் ஒரு தமிழர். அந்தக் குமாஸ்தாவைக் கொண்டு அலங்கோலமாக வந்தவனிடம் விஷயம் என்ன வென்று காந்திஜி விசாரிக்கச் செய்தார். பல் உடைபட்டு வந்தவன் ஒரு தமிழன்; ஒப்பந்தக் கூலி; அவன் பெயர் பாலசுந்தரம். டர்பனில் ஒரு பிரபல ஐரோப்பியரிடம் அவன் ஒப்பந்தக் கூலியாக வேலைக்கு வந்தவன். அந்த மூர்க்க ஐரோப்பிய எஜமான் ஏதோ காரணம் பற்றிக் கோபங்கொண்டு பாலசுந்தரத்தை அவ்விதமாக நையப் புடைத்து விட்டான். அவன் அடித்த அடியில் பாலசுந்தரத்தின் முன் வாய்ப் பற்கள் இரண்டு உடைந்து தெரித்து விழுந்து விட்டன.
"அதிகமாய்ப் பேசினால் பல்லை உடைத்து விடுவேன் !" என்று சிலர் கோபமாகப் பேசுவதை நீ கேட்டிருக்கலாம், தம்பி ! பல்லை உடைப்பது என்பது இலேசான காரியமல்ல; மிகக் குரூரமாக அடித்தால் தான் பல்லை உடைக்க முடியும். பாலசுந்தரத்தை ஒப்பந்தக்கூலியாகப் பெற்றிருந்த வெள்ளைக்காரன் அம்மாதிரி அவனைக் குரூரமாக அடித்திருந்தான்.
இந்தச் சமயத்தில், "ஒப்பந்தக் கூலி " என்றால் என்ன என்பதை உனக்குச் சொல்லி வைக்கிறேன். அதைச் சொல்லுவதில் எனக்குச் சந்தோஷபம் ஒன்றுமில்லை ; வருத்தமாகவும் அவமானமாகவும் இருக்கிறது. ஆனாலும் அதை நீ தெரிந்து கொள்ளாவிட்டால் மேலே வரும் காந்தி மகானுடைய வரலாற்றை உன்னால் நன்கு அறிந்துகொள்ள முடியாது.
இங்கிலாந்து, ஹாலந்து முதலிய தேசங்களிலிருந்து தென்னாப்பிரிக்கா சென்று குடியேறிய ஐரோப்பியர்கள் அந்த நாட்டில் உள்ள நீர்வளத்தைக் கண்டு அங்கே கரும்பு சாகுபடி நிறையச் செய்யலாம் என்று தீர்மானித்தார்கள். கரும்பு சாகுபடி செய்வதற்கு ஆள் வசதி நிறைய வேண்டும். நேட்டாலின் பூர்வ குடிகளான ஸலூ சாதியார் காட்டுமிராண்டி ஜனங்கள்; அவர்களால் எந்த வேலையும் நிலைத்து நின்று செய்ய முடியாது. விவசாய வேலை அவர்களுக்குத் தெரியாது ; சொல்லிக்கொடுத்தாலும் அவர்கள் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஸூலூ சாதியாருக்கு நேர்மாறானவர்கள் இந்தியா தேசத்து ஏழை மக்கள். விவசாய வேலையில் பற்று உள்ளவர்கள் ; உடலை உழைத்துப் பாடுபடக் கூடியவர்கள் இந்த விஷயம் உலகப் பிரசித்தமானது.
ஆகவே ஐரோப்பியர் புதிதாகச் சென்று குடியேறிய இடங்களில் எல்லாம் இந்தியா தேசத்திலிருந்து ஏழை மக்களைத் தருவித்துக்கொள்ள விரும்பினார்கள். இலங்கை யாகட்டும், மலாய் நாடாகட்டும், வெகு வெகு தூரத்திலுள்ள பீஜித் தீவு ஆகட் டும்,-ஐரோப்பியர் குடியேறிய இடங்களில் கரும்பு, தேயிலை, காப்பி, அவுரித் தோட்டங்களில் வேலை செய்வதற்கு இந்தியாவிலிருந்து கூலி ஆட்களைத் தருவித்துக் கொண்டார்கள்.
இதே சமயத்தில் இந்தியாவில் இங்கிலீஷ் காரர்களின் ஆட்சி நிலைபெற்றிருந்தது. அந்த ஆட்சி காரணமாகத் தேசமெங்கும் வறுமை அதிகமாகி வந்தது. வெளிநாடுகளுக்குச் சென்று வயிறு வளர்க்கவும், கூடுமானால் கொஞ்சம் பணம் சம்பாதித் துக்கொண்டு வரவும் இந்தியாவின் ஏழை மக்கள் பலர் தயாரா யிருந்தார்கள். அவர்களைத் திரட்டி வெளிநாடுகளுக்குக் கூலிகளாக அனுப்பிக் கொடுக்க இந்தியாவில் ஆங்கில சர்க்கார் தயாராயிருந்தனர்.
சுமார் 1860-ம் ஆண்டுக்கு முன் பின்னாக தென்னாப்பிரிக்கா ஐரோப்பியர்கள் இந்தியாவிலிருந்து இந்தியக் கூலிகளைத் தரும் வித்துக்கொள்ள விரும்பினார்கள். அப்போது இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் சர்க்கார் அதற்கு அநுமதி கொடுத்தார்கள். இந்த ஏற்பாட்டுக்கு "ஒப்பந்தக் கூலி முறை" என்று பெயர் வழங்கிற்று. இதன்படி தென்னாப்பிரிக்காவிலுள்ள ஐரோப்பியரின் கீழ் ஐந்து வருஷம் கட்டாயமாகக் கூலி வேலை செய்வதாய் இந்தியத் தொழிலாளரிடம் ஒப்பந்தம் எழுதி வாங்கப்பட்டது, 'இந்த ஒப்பந்த காலம் முடிந்ததும் தென்னாப்பிரிக்காவிலேயே நிரந்தரமாய்க் குடியேறலாம்’ என்றும் சொந்தமாக நிலம் வைத்துக்கொண்டு விவசாயம் செய்யலாம் என்றும் ஆசைவார்த்தை சொல்லி ஆள் சேர்த்தார்கள், ஆனால் ஐரோப்பியர் மனத்திற்குள் எண்ணியது, "ஐந்து வருஷம் ஆன பிறகு இவர்களுக்கு இங்கே நிலம் எங்கே கிடைக்கப் போகிறது? அதற்குப் பிறகும் நம்மிடம் கூலி வேலை செய்துதான் இந்தியர்கள் பிழைக்க வேண்டும்!" என்பதுதான். அவர்களுடைய இந்த எண்ணம் என்ன ஆயிற்று என்று பிறகு பார்க்கலாம்.
ஒப்பந்தத் தொழிலாளியாயிருக்கும் வரையில் ஒருவன் ஏறக்குறைய அடிமையைப் போலவே நடத்தப் பட்டான். ஐரோப்பிய எஜமானனுக்குக் கொஞ்சம் கோபம் வந்தாலும் போதும்; இந்தியக் கூலியின்பாடு அதோகதிதான். எஜமான் எவ்வளவு கொடூரமாக நடத்தினாலும் கேட்பார் இல்லை ; நீதி வழங்குவாரும் இல்லை.
இத்தகைய நிலைமை நெடுங்காலமாகத் தென்னாப்பிரிக்காவில் குடி கொண் டிருந்தது. ஆனால் இந்தியாவின் பட்டிக்காடுகளில் வசித்த ஏழைக் குடியானவர்களுக்கு அந்த நிலைமை தெரியாதல்லவா? எனவே, ஆள் சேர்த்தவர்களின் வார்த்தைகளில் மயங்கி மேலும் மேலும் தென்னாப்பிரிக்காவுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.
அப்படிப்பட்ட ஒப்பந்தக் கூலிகளில் ஒருவனான தமிழன் பாலசுந்தரம் மேற்சொன்னவாறு காந்தி மகானுடைய ஆபீஸில் அவருக்கு முன்னால் போய் நின்றான். தன்னுடைய கதையையும் தட்டுத் தடுமாறி அழுதுகொண்டே சொன்னான். காந்திஜி உடனே அவனை வண்டியில் ஏற்றி ஒரு டாக்டரிடம் அழைத் துச் சென்றார். வெள்ளைக்கார டாக்டர் தான் ; ஆயினும் அவர் அவசியமான சிகிச்சையைச் செய்தார். காந்திஜி வற்புறுத்தியதின்பேரில் பாலசுந்தரத்தின் காயங்களைப் பற்றி அத்தாட்சிப் பத்திரமும் எழுதிக் கொடுத்தார்.
உடனே காந்திஜி பாலசுந்தரத்தை ஒரு மாஜிஸ்ட்ரேட்டிடம் அழைத்துச் சென்றார். பாலசுந்தரம் தம்மிடம் சொன்ன கதையை மாஜிஸ்ட்ரேட் முன்னால் வாக்குமூலமாகக் கொடுக்கும்படிச் செய்தார். மாஜிஸ்ட்ரேட் பாலசுந்தரத்துக்கு இழைக்கப் பட்டக் கொடுமையைக் கேட்டுவிட்டு உடனே அந்த ஐரோப்பிய எஜ மானனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இப்போது காந்திஜி யோசனை செய்தார். கேஸ் நடத்தினால் முடிவு என்ன ஆகுமோ என்னமோ? எஜமானனுக்கு ஒரு வேளை அபராதம் போட்டாலும் போடலாம்; அல்லது வழக்கைத் தள்ளினாலும் தள்ளிவிடலாம். ஆனால் பாலசுந்தரத்தின் கதி என்ன? அவன் மறுபடியும் அதே எஜமானனிடம் வேலை செய்ய முடியுமா? அவனை அந்த மூர்க்க எஜமானனிடமிருந்து விடுதலை செய்வதல்லவா இப்போது முக்கியமான காரியம்? அதை எப்படிச் செய்வது?
ஒப்பந்தக் கூலி முறை சம்பந்தமான சட்ட திட்டங்கள் : விதி முறைகள் எல்லாவற்றையும் காந்திஜி ஆராய்ந்தார். ஒப்பந்தக்கூலி ஒருவன் ஒப்பந்தக் காலத்துக்குள் வேலையை விட்டு நின்றால், அவன் மீது எஜமான் சட்டபடி வழக்குத் தொடரலாம்; அப்படி நின்ற குற்றத்துக்குச் சிறைத் தண்டனை கூட விதிக்கலாம் ! இவ்வளவு இலட்சணமாக இருந்தது சட்டம்.
சட்டவிரோதமில்லாமல் பாலசுந்தரத்தை விடுதலை செய்ய இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று, ஒப்பந்தக் கூலிகளைப் பாதுகாப்பதற்கென்று ஏற்பட்ட உத்தியோகஸ்தரிடம் புகார் செய்து அவரைக் கொண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தல். இது நடவாத காரியம் என்று காந்திஜி அறிந்தார். ஏனெனில் ஒப்பந்தக் கூலிகளைப் பாதுகாக்கும் ஐரோப்பிய உத்தியோகஸ்தர் உண்மையில் ஐரோப்பிய எஜமானர்களுடைய உரிமைகளைத்தான் பாதுகாத்து வந்தார். எனவே அந்த வழியில் பிரயத்தனம் செய்வது உபயோகப்படாது.
இன்னொன்று, பால சுந்தரத்தின் எஜமானர் சம்மதித்து இன்னொருவருக்கு ஒப்பந்தத்தை மாற்றிக் கொடுப்பது. இந்த வழியில் முயற்சி செய்து பார்க்கலாம் என்று காந்திஜி மேற்படி எஜமானிடமே சென்றார். "ஐயா ! பாலசுந்தரத்தை நீங்கள் ரொம்பக் கொடுமையாக அடித்து விட்டீர்கள். இதை நீங்களே உணர்ந்திருக்கலாம். ஆயினும் உங்கள் பேரில் வழக்குத் தொடர எனக்கு இஷ்டமில்லை. ஒப்பந்தத்தை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுத்துவிடுங்கள். அத்துடன் இந்த விஷயம் முடிந்து போகட்டும்!" என்றார்.
அந்த மூர்க்க ஐரோப்பியனுடைய மனதுகூடக் காந்திஜியின் வார்த்தைகளினால் இளகி விட்டது. "கேஸ் போடுகிறபடி போடு. ஒருகை பார்த்துவிடுகிறேன் !" என்று அவன் பதில் சொல்லவில்லை. ஒப்பந்தத்தை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுக்கச் சம்மதித்தான்.
சரி ; ஆனால் பால் சுந்தரத்துக்கு இன்னொரு எஜமானனைக் கண்டுபிடிக்க வேண்டுமே? இந்தியர்களுக்கு ஒப்பந்தக் கூலி வைத்துக் கொள்ளும் உரிமை கிடையாது. ஐரோப்பியர்கள் தான் வைத்துக் கொள்ளலாம். ஆகவே காந்திஜி தமக்கு அப்போது தெரிந்திருந்த ஐரோப்பியர்களில் நல்லவர் என்று எண்ணிய ஒருவரிடம் சென்று விஷயத்தைச் சொன்னார். அவர் பாலசுந்தரத்தை ஒப்பந்தக் கூலியாக எடுத்துக்கொள்ளத் தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்தார்.
மாஜிஸ்ட்ரேட்டிடம் இந்த விவரங்கள் எல்லாம் சொல்லப் பட்டன. அவர் காந்திஜி இந்த விஷயத்தில் செய்த முயற்சிகளைக் குறித்து ஆச்சரியப்பட்டுவிட்டு, "பாலசுந்தரத்தை அவனுடைய எஜமானன் அடித்தது குற்றந்தான்; ஆனால் ஒப்பந்தத்தை இன்னொருவருக்கு மாற்றச் சம்மதிப்பதால் விஷயம் இத்துடன் முடிவு பெற்றது " என்று தீர்ப்பு எழுதினார்.
பாலசுந்தரத்தின் கதை தென்னாப்பிரிக்கா எங்கும் பரவியது. தூர தூரத்திலிருந்த தோட்டங்களுக்குள்ளே புகுந்து ஒப்பந்தத் தொழிலாளிகளின் காதில் விழுந்தது. "ஆகா ! நமக்காகப் பரிந்து பேசுகிறவர், பாடுபடுகிறவர் ஒருவர் இருக்கி றாரே!" என்று அவர்கள் எல்லாரும் வியந்து மகிழ்ந்தார்கள். வாழ்க்கையில் அடியோடு நிராசை யடைந்திருந்தவர்களுக் கெல்லாம் ஒரு புது நம்பிக்கை உண்டாயிற்று. "நிர்க்கதி யானோம்" என்று எண்ணியிருந்தவர்களுக்கெல்லாம் ’நமக்கு ஒரு கதி உண்டு' என்ற உற்சாகம் ஏற்பட்டது.
.
பாலசுந்தரம் "கையிலே முண்டாசுத் துணியுடன் காந்திஜியின் அறையில் நுழைந்தான்" என்று மேலே சொன்னேனல்லவா? இது எதற்காகத் தெரியுமா? டர்பன் கோர்ட்டில் காந்திஜியின் தலைப்பாகையை எடுக்கச் சொன்ன விஷயம் உனக்கு நினைவிருக்கிற-தல்லவா? இந்தியர் யாராயிருந்தாலும் ஐரோப்பியரைக் காணப்போகும் போது தலைப்பாகையைத் தலையிலிருந்து எடுத்துக் கையிலே வைத்துக்கொள்ள வேண்டும் என்று தென்னாப்பிரிக்காவில் ஒரு சம்பிரதாயம் அமுலில் இருந்தது. இது விஷயத்தில் தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்கள் வெகு கண்டிப்பாக இருந்தார்கள். இந்தியர்கள் அப்படிச் செய்யாவிட்டால் தங்களுக்கு அது அவமரியாதை என்று எண்ணினார்கள். - தலையில் வைத்திருப்பது குல்லாவானாலும், தலைப்பாகையானாலும், வெறும் துண்டை முண்டாசாகச் சுற் றிக் கொண்டிருந்தாலும் எடுத்துவிட வேண்டியதுதான். விதி விலக்கே கிடையாது. தலைத் துணியை எடுக்காமல் கைகூப்பி வணங்கினாலும் போதாது.
பாலசுந்தரம் ஐரோப்பியர்களைப் பார்க்கப் போகும்போது தலைமுண்டாசை எடுத்துப் பழக்கப் பட்டிருந்தான். காந்திஜி பெரிய மனிதர் ஆகையால் அவர் முன்னால் போகும்போது அப்படிச் செய்யவேண்டும் என்று நினைத்தான் ! இதைக் கண்ட தும் காந்திஜியின் மனம் குன்றிப் போயிற்று. "துணியை எடுக்க வேண்டாம், அப்பனே ! தலையில் சுற்றிக் கொள்!" என்று காந்திஜி பாலசுந்தரத்திடம் சொன்னார். அவனும் சிறிது தயங்கிவிட்டுப் பிறகு முக மலர்ச்சியுடன் தலையில் துணியைச் சுற்றிக் கொண்டான். அந்த நிமிஷத்திலேயே காந்தி மகாத்மா இந்திய மக்களின் சிரஸில் சுதந்திரக் கிரீடத்தை வைத்தார்.
காந்தி மகாத்மா எழுதியிருக்கிறார் :- "இதயத்திலே எழுந்த பரிசுத்தமான ஆசை எதுவும் நிறைவேறாமற் போவ தில்லை. என்னுடைய சொந்த அனுபவத்தில் இதை நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். ஏழை எளியவர்களுக்குத் தொண்டு புரிய வேண்டும் என்பது என் உள்ளத்தில் இருந்த அத்தியந்த ஆசை. அந்த ஆசை என்னை ஏழைகளிடம் கொண்டு சேர்த்தது. அவர்களோடு சரிசமமாகக் கலந்து பழகி அவர்களில் ஒருவனாகிவிடும் சக்தியையும் தந்தது!"
தம்பி! காந்தி மகாத்மாவின் இதயத்தில் எழுந்த அத்தி பயந்த பரிசுத்தமான ஆசை தமிழ் நாட்டைச் சேர்ந்த ஏழைப் பாலசுந்தரத்தின் மூலமாக நிறைவேறியது ஒரு விசேஷமல்லவா? பாலசுந்தரத்தின் கதையைக் கேட்டு நீ அடைந்த துயரத்துக்கு மத்தியில் இப்படி ஒரு திருப்தியும் அடையலாம்.
-------------
25. மூன்று பவுன் தலைவரி
பாலசுந்தரம் காந்திஜியைத் தேடிவந்த சமயம் மிகவும் நல்ல சமயமாயிற்று. பாலசுந்தரத்தின் மூலமாகக் காந்திஜி தென்னாப்பிரிக்காவில் அப்போது வசித்த பதினாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளிகளின் நிலைமையைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுடைய தலையில் போடுவதற்கு ஒரு பெரிய பாறாங்கல் தயாராகிக் கொண்டிருப்பதையும் அவர் அறிந்து கொள்ளக் கூடிய தாயிற்று.
அந்த 1894-ம் ஆண்டில் நேட்டால் அரசாங்கத்தார் இந்தியர்களுக்கு ஒரு மிகப் பெரும் அநீதியை இழைக்கப் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தார்கள். அதாவது ஒப்பந்தக் கூலியாக வந்து ஒப்பந்தம் நீங்கிய ஒவ்வொரு தொழிலாளி மீதும் 25 பவுன் தலைவரி விதிக்க யோசனை செய்தார்கள் !
இப்படிப்பட்ட அபூர்வமான யோசனையை நேட்டால் வெள்ளைக்காரர்கள் ஏன் செய்தார்கள் தெரியுமா? ஒப்பந்தத் தொழிலாளியாக வந்த இந்தியர்கள் நல்ல உழைப்பாளிகள். விவசாயத் தொழிலில் கை தேர்ந்தவர்கள், எளிய வாழ்க்கை நடத்துகிறவர்கள்.
இவர்களை ஒப்பந்தக் காலம் நீங்கிய பிறகு தென்னாப்பிரிக் காவில் சுயேச்சையாக வசிக்கும்படி விட்டால், வெகு சீக்கிரத் தில் வலுத்துப் போய் விடுவார்கள் ! சொந்த நிலம் வைத்துக் கொண்டு பயிர் செய்து சொந்த வீடு கட்டிக்கொண்டு வாழ்வார்கள். சிலர் வியாபாரத் துறையிலும் இறங்குவார்கள்; ஐரோப்பியரை விட அதிகமாகப் பணம் சேர்த்து விடுவார்கள். அடிமைகளைப் போல் ஐரோப்பியர்களுக்கு வேலை செய்து கொண்டு காலம் தள்ள மாட்டார்கள். பிறகு தென்னாப்பிரிக்காவிலுள்ள ஐரோப்பியர்கள் பாடு ஆபத்தாய்ப் போய்விடும்.
ஆகையால் ஒப்பந்தக் கூலிகளாக வருகிறவர்கள் ஒப்பந் தக் காலம் நீங்கிய பிறகு சுயேச்சையாக வாழ அநுமதிக்கக் கூடாது என்று கேட்டால் வெள்ளைக்காரர்கள் கருதினார்கள். ஆனால் ஒப்பந்தக் காலம் முடிந்தவர்களைத் திருப்பி அனுப்புவதும் அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஏனெனில், இந்தியாவில் ஆள் திரட்டியபோது ஒப்பந்தம் நீங்கியதும் அவர்கள் சுயேச்சையாகத் தென்னாப்பிரிக்காவில் வசிக்கலாம் என்று உறுதி கொடுக்கப்பட்டது. ஆகவே அவர்களைப் பலவந்தமாய்த் திருப்பி அனுப்ப முடியாது. அவர்களே திரும்பிப் போகும்படி செய்ய வேண்டும். அல்லது மறுபடியும் வெள்ளைக்காரரிடம் வேலைக்கு அமரும்படி செய்ய வேண்டும் !
இதற்கு உபாயம் என்ன? "போடு தலைவரி! இந்தியர் சுயேச்சையாக வாழ்வதை அசாத்தியமாகச் செய்!" என்று சில புண்ணியவான்கள் உபாயம் சொன்னார்கள். அதை நேட்டால் சர்க்காரும் ஒப்புக் கொண்டார்கள். ஒப்பந்தக் கூலியாக வந்து விடுதலை பெற்ற ஒவ்வொரு இந்தியனும் தலைக்கு வருஷத்துக்கு இருபத்தைந்து பவுன் தலைவரி கொடுக்க வேண் டும் என்று சொன்னார்கள் !
எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் இந்தியத் தொழிலாளி ஒருவன் வருஷத்துக்கு 12 பவுனுக்கு மேல் சம்பாதிக்க முடியாது. இருபத்தைந்து பவுன் வரி கொடு என்றால் எப்படிக் கொடுப்பது? இந்த நிபந்தனையின்படி எந்தத் தொழிலாளி இந்தியனும் அங்கே இருக்க முடியாது! அப்படியென்றால் திரும்பிப் போய்த்தானே தீர வேண்டும்!
இந்தக் கொடிய அநீதியைப்பற்றி அறிந்த காந்திஜி நேட்டால் இந்தியக் காங்கிரஸ் மூலம் கிளர்ச்சி தொடங்கினார். அந்தக் கிளர்ச்சியின் ஒலி இந்தியா வரையில் சென்று எட்டியது. நேட்டால் வெள்ளைக்காரர்கள் யோசித்துப் பார்த்தார்கள். தங்கள் அபூர்வ யோசனைக்கு இந்திய அரசாங்கத்தின் சம்மதம் தேவை என்று கருதினார்கள்.
இந்திய சர்க்காரின் சம்மதத்தின் பேரிலும் ஒத்துழைப்பின் பேரிலும் அல்லவா ஒப்பந்தத் தொழிலாளிகளை அடிமை வேலை செய்யத் திரட்ட வேண்டியிருக்கிறது? ஆகையால் தாங்கள் போடும் தலைவரியை இந்திய சர்க்கார் ஆட்சேபித்து ஒப்பந்தக் கூலிகள் அனுப்புவதையே நிறுத்திவிட்டால் என்ன செய்கிறது என்று கவலைப்பட்டார்கள்.
ஆகவே நேட்டால் வெள்ளைக்காரர்களின் பிரதிநிதிகளாக ஸர் ஹென்றி பின்ஸ், மிஸ்டர் மேஸன் என்னும் இருவர் இந்தியாவுக்குச் சென்றார்கள். அச்சமயம் இந்தியாவில் லார்ட் எல்ஜின் என்பவர் கவர்னர் ஜெனரலாகவும் இராஜப் பிரதிநிதியாகவும் இருந்தார். இந்த இராஜப் பிரதிநிதி என்ன செய்தார் தெரியுமா? "இருபத்தைந்து பவுன் தலைவரி கூடவே கூடாது" என்று சொல்லிவிட்டார். ”கொடுக்க முடியாத வரியாகப் போடாதீர்கள். கொடுக்கக் கூடிய அளவாகப் போடுங்கள்!" என்றார் அந்தப் புண்ணியவான். அதாவது தலைக்கு மூன்று பவுன் வரி விதிக்க லார்ட் எல்ஜின் சம்மதம் கொடுத்தார். இந்தத் தலைவரி தொழிலாளிக்கு மட்டும் அல்ல ; அவன் குடும்பத்தோடு வாழ விரும்பினால் மனைவிக்கும் தலைவரி கொடுக்க வேண்டும். பதின் மூன்று வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைக்கும், பதினாறு வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைக்கும் மூன்று பவுன் வரி கொடுக்கவேண்டும். இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பம் மாதம் ஒரு பவுன் வரி கொடுத்தாக வேண்டும் !
உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் எந்தக் காலத்திலும் இம்மாதிரி அநியாய வரி போடப்பட்டதில்லை. ஆயினும் இந்த அநியாயத்துக்கு இந்தியாவை அப்போது ஆண்ட இராஜப் பிரதிநிதி சம்மதித்தார். "இருபத்தைந்து பவுன் வரி போடுவதை மூன்று பவுனாகச் செய்தேனே ! இந்த சகாயம் போதாதா?" என்றார். உண்மையில் இது சகாயமே யில்லை. இருபத்தைந்து பவுன் வரி போட்டால் நிச்சயமாகத் தென்னாப் பிரிக்காவில் எந்தத் தொழிலாளி இந்தியனும் இருக்க முடியாது ; திரும்பிப் போய் விடுவான். இந்தியாவிலிருந்து புதிய தொழிலாளிகளைக் கொண்டுவர முடியாது. மூன்று பவுன் தலைவரி என்றால், இந்தியத் தொழிலாளிகள் போவதா இருப்பதா என்று தயங்குவார்கள். ஒரு சிலர் இருந்தே பார்க்கலாம் என்று இருப்பார்கள். அடியோடு கொல்லுவதற்குப் பதிலாகக் குற்றுயிராக வைத்திருப்பதற்குச் சமமாகும்.
ஆகவே, தலைவரி மூன்று பவுன் ஆனதுபற்றிக் காந்திஜி திருப்தி யடையவில்லை. அதை ஒரு வெற்றியாகவும் கருத வில்லை. இந்திய வைஸ்ராய் அதற்குச் சம்மதம் கொடுத்தது பெருந் தவறு என்று கருதினார். இந்தியா தேசத்துக்கும் இந்திய மக்களுக்கும் அது பெரும் அவமானம் என்றும் எண்ணினார். ஆகையால் எப்பாடு பட்டாவது அந்தத் தலைவரியை ஒழித்து விடவேண்டும் என்று காந்திஜியின் யோசனையின்பேரில் நேட்டால் இந்தியக் காங்கிரஸ் கங்கணம் கட்டிக் கொண்டது. ஆனால் அந்த முயற்சி இலேசில் வெற்றி யடையவில்லை. இருபது வருஷம் காந்திஜியின் தலைமையில் சாத்வீகப் போராட் டம் நடந்த பிறகுதான் வெற்றி கிடைத்தது. முடிவாக நடந்த பெரும் போராட்டத்தில் தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் பதினா யிரம் பேருக்கு மேல் சிறை சென்றார்கள். பலர் துப்பாக்கிப் பிரயோகத்தினால் மரணம் அடைந்தார்கள். அவர்களுடைய தியாகங்களின் பலனாக முடிவில் வெற்றி கிடைத்தது; மூன்று பவுன் தலைவரியும் ஒழிந்தது.
தலைவரிப் போராட்டத்தைப் பற்றிக் காந்தி மகாத்மா எழுதியிருப்பதாவது :-
"தளராத நம்பிக்கையும் அளவிடப்படாத பொறுமையும் இடைவிடாத முயற்சியும் இருந்திராவிடின் அப்போராட்டம் வெற்றி பெற்றிருக்க முடியாது. தென்னாப்பிரிக்கா இந்திய சமூகம் அப்போராட்டத்தை இடையில் கை விட்டிருந்தால் கிளர்ச்சியை நிறுத்தி வரிக்குட்படுவதைத் தவிர வேறு வழியில்லை யென்று காங்கிரஸ் தீர்மானித்திருந்தால் - இன்று வரை அக் கொடிய வரி விதிக்கப்பட்டே வந்திருக்கும். தென்னாப் பிரிக்கா இந்தியர்களுக்கும் சரி, பாரத தேசத்துக்கும் சரி மகத்தான ஓர் அவமானத்துக்கு அறிகுறியாய் அது விளங்கிக் கொண்டு வந்திருக்கும்."
-----------------
26. தாய் நாட்டில்
தென்னாப்பிரிக்காவுக்குக் காந்திஜி வந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு முறை தாய்நாடு சென்றுவர விரும்பினார். இந்த மூன்று வருஷத்தில் தென்னாப்பிரிக்கா இந்தியர்களிடையே காந்திஜிக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டு விட்டது. பலரும் சிநேகிதர்கள் ஆனார்கள். பாரிஸ்டர் தொழிலும் நன்றாய் நடந்தது. ஆகவே, இந்தியாவுக்குப் போய்ச் சில நாள் இருந்து விட்டு மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வருவது என்று காந்திஜி தீர்மானித்தார். இந்தியாவில் தங்கி உயிருக்கும் சமயத்தில் தென்னாப்பிரிக்கா இந்தியர் நிலைமையைப் பற்றிக் கொஞ்சம் பிரசாரம் செய்யலாம் என்றும் எண்ணினார்.
தாம் இல்லாத சமயத்தில் நேட்டால் காங்கிரஸ் வேலையை யும் சமூக சேவையையும் கவனிப்பதற்கு ஆதம்ஜி மியாகான், பார்ஸி ரஸ்டம்ஜி ஆகிய இரு நண்பர்களை நியமித்துவிட்டுப் "பொங்கோலா" என்னும் கப்பலில் பிரயாணமானார்.
பிரயாணத்தின்போது காந்திஜி உருது பாஷையும் தமிழும் கற்றுக்கொள்ள முயன்றார். தென்னாப்பிரிக்காவிலிருந்த ஒப்பந்தத் தொழிலாளிகளில் பெரும்பாலோர் மதராஸிகள் அல்லவா? அவர்களுக்கு ஊழியம் செய்யவேண்டுமானால் தமிமும் தெலுங்கும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று காந்திஜி கருதினார். கப்பல் டாக்டர் வைத்திருந்த தமிழ் ”ஸ்வபோதினி" புத்தகத்தை வாங்கிப் படித்தார். தமிழ் எழுத்துக்களை நன்றாக எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். பிறகு காந்திஜிக்கு ஏற்பட்ட பல முக்கிய அலுவல்களினால் தொடர்ந்து தமிழ் கற்க முடியவில்லை. சிறைவாசம் செய்த காலங்களில் மட்டும் சிறிது அவகாசம் கிடைத்தது. தமிழ் பாஷையைப் பூரணமாகப் பயின்று தமிழ் மக்களுடன் மனம் விட்டுப் பேசவும் தமிழில் எழுதவும் சக்தி பெறவில்லையே என்ற மனக்குறை காந்திஜிக்கு எப்போதும் இருந்து வந்தது.
கப்பல் ஏறிய 24-ம் நாள், 1896-ம் வருஷத்தின் மத்தியில், காந்திஜி ஹக்ளி நதியை அடைந்தார். அந்த நதியின் செளந்தரியங்களை அநுபவித்துக்கொண்டே இன்னும் கொஞ்சம் பிரயாணம் செய்து கல்கத்தாவில் வந்து இறங்கினார். கல்கத்தாவில் தங்கி வீண் பொழுது போக்க விரும்பாமல் அன்றைய தினம் ரயிலிலேயே பம்பாய்க்குப் புறப்பட்டார்.
பம்பாய்க்குச் செல்லும் மார்க்கத்தில் ரயில் அலகாபாத்தில் 45 நிமிஷம் நின்றது. அந்த நேரத்தில் நகரைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாம் என்று சென்றார். மருந்துக் கடை ஒன்றில் ஒரு மருந்து வாங்குவதற்காக நின்றதில் கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது. மருந்துக் கடைக்காரர் தூங்கி வழிந்து கேட்ட மருந்தைக் கொடுப்பதற்கு நேரம் செய்துவிட்டார். ஆகையால் காந்திஜி திரும்பி ஸ்டேஷனுக்கு வந்தபோது ரயில் போய்விட் டது ! நல்ல வேளையாக ஸ்டேஷன் மாஸ்டர் காந்திஜியின் சாமான்களை மட்டும் வண்டியிலிருந்து வெளியே எடுத்து வைத்திருந்தார்.
அடுத்த ரயில் மறுநாளைக்குத்தான் வரும். ஆகவே அந்த ஒரு தினத்தை வீணாக்க வேண்டாம் என்று காந்திஜி தீர்மானித்தார். அலகாபாத்தில் அப்போது "பயனியர்" என்னும் பத்திரிகை பிரசித்தி பெற்றிருந்தது. அதை நடத்தியவர்கள் ஐரோப்பியர்கள். இந்தியர்களின் கோரிக்கைகளைப் பொதுவாக எதிர்ப்பதே "பயனியர்"பத்திரிகையின் கொள்கை. இது தெரிந்திருந்தும் காந்திஜி அந்தப் பத்திரிகைக் காரியாலயத்துக்குப் போனார். இந்தியாவில் எல்லாக் கட்சியாருடைய ஆதரவையும் தேடவேண்டும் என்று அவர் தீர்மானித்திருந்தபடியால் போனார். பத்திரிகாசிரியர் மிஸ்டர் செஸ்னிக்குத் தம்முடைய நோக்கத்தைக் குறிப்பிட்டுச் சீட்டு அனுப்பினார். மிஸ்டர் செஸ்னி காந்திஜியைப் பார்ப்பதற்கு இசைந்தார். காந்திஜி அவரிடம் தென்னாப்பிரிக்கா இந்தியர்களின் கஷ்டங்களைப்பற்றி விவரமாகக் கூறினார். எல்லாவற்றையும் கேட்ட மிஸ்டர் செஸ்னி, "நீங்கள் இதையெல்லாம் குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதுங்கள். அதை வெளியிடுகிறேன். ஆனால் தலையங்கத்தில் தங்கள் கட்சியை ஆதரித்து எழுத முடியாது. தென்னாப்பிரிக்கா ஐரோப்பியர்களின் கட்சி இன்னதென்பதையும் கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகுதான் அதைப்பற்றி நான் அபிப்பிராயம் எழுத முடியும்" என்றார்.
“ரொம்ப வந்தனம். எங்களுடைய கட்சியைப் பிரசுரிக்க ஒப்புக்கொண்டதே போதும்!" என்று சொல்லிவிட்டுக் காந்திஜி விடைபெற்றுக் கொண்டார்.
இப்படிப் 'பயனியர் ' ஆசிரியர் சொன்னதிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாகப் பல சம்பவங்கள் நிகழ்ந்தன. கடைசியில், காந்திஜி மறுபடியும் தென்னாப்பிரிக்கா சென்று இறங்கிய போது நேட்டால் ஐரோப்பியர்கள் காந்திஜியைக் கொன்றுவிட முயற்சித்ததில் வந்து முடிந்தது! இவ்வளவுக்கும் காரணம் அலகாபாத்தில் ஒரு மருந்துக் கடைக்காரன் தூங்கு மூஞ்சியா யிருந்ததும், அதன் பலனாகக் காந்திஜிக்கு ரயில் தப்பிப் போனதுந்தான். உலகத்தில் எவ்வளவு சின்னக் காரணத்திலிருந்து எவ்வளவு பெரிய பெரிய காரியங்கள் சரித்திரத்தையே மாற்றும் சம்பவங்கள் எல்லாம் விளைந்து விடுகின்றன !
தம்பி ! இந்த இடத்தில் உனக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். காந்திஜி இந்திய விடுதலை இயக்கத்தின் மாபெருந் தலைவராயிருந்த காலத்தில் நம் நாட்டுப் பத்திரிகைப் பிரதிநிதிகள் சிலர் அவர் பேரில் ஒரு குறை கூறுவதுண்டு. "வெள்ளைக்காரப் பத்திரிகை நிருபர்களுக்குக் காந்திஜி விசேஷ சலுகை காட்டுகிறார். இந்தியப் பத்திரிகை நிருபர்களைக் கவ னிப்பதில்லை!" என்று புகார் சொல்வார்கள். இது சுத்தத் தவறான விஷயம். காந்திஜிக்கு அந்த மாதிரி பட்சபாதம் ஒன் றும் கிடையாது. இந்தியப் பத்திரிகைகளை விட ஐரோப்பியப் பத்திரிகைகளுக்கு அவர் அதிக மதிப்புக் கொடுப்பதுமில்லை. ஆனால் ஒரு விஷயத்தை வெளி உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்றால், யாரிடம் சொன்னால் வெளி உலகத்துக்கு தெரியுமோ, அவர்களிடத்தானே சொல்லவேண்டும்? இந்தியாவின் கட்சியில் உள்ள நியாயத்தை அமெரிக்கா அறிய வேண்டுமென் றால், அமெரிக்க நிருபர்களிடம் சொல்லித் தானே ஆக வேண்டும்?-இந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் நம்மவர்கள் சிலர் மகாத்மா மீது குறை கூறினார்கள் ! பெரியவர்களின் விஷயமே இப்படித்தான் ! அவர்களை மற்றவர்கள் அறிந்து கொள்ளாமல் புகார் சொல்லுவது எப்போதுமே உலக இயல்பா யிருந்து வருகிறது. நிற்க,
அலகாபாத்திலிருந்து பம்பாய் சென்று அங்கே தங்காமல் நேரே இராஜகோட்டைக்கு மகாத்மா சென்றார். அங்கே தென்னாப்பிரிக்கா இந்தியரின் நிலைமை பற்றி ஒரு துண்டுப் பிரசுரம் எழுதினார். அதை எழுதி அச்சிட்டு வெளியிடுவதற்கு ஒரு மாதத்திற்கு மேலாயிற்று. அந்தப் பிரசுரத்தின் மேலட்டை பச்சை நிறமாயிருந்தபடியால் அது ’பச்சைப் பிரசுரம்' என்று பெயர் பெற்றது. தென்னாப்பிரிக்கா இந்தியரின் கஷ்டமான நிலைமையைக் காந்திஜி அதில் ஓரளவு குறைத்தே எழுதியிருந்தார். மிதமான, பாஷையை உபயோகித்திருந்தார். மிகைப் படுத்திச் சொன்ன தாக யாரும் குற்றம் சாட்ட இடங்கொடுக்கக் கூடாது என்பது காந்திஜியின் நோக்கம். மேலும் தூரத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றிக் கொஞ்சம் சொன்னாலும் அது அதிகமாகத் தோன்றலாம் அல்லவா?
மேற்படி பச்சைப் பிரசுரத்தில் பதினாயிரம் பிரதிகள் அச்சிட்டு இந்தியா வெங்குமுள்ள எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்பினார். முதன் முதலில் அதைப் பிரசுரித்ததோடு தலையங்கத்திலும் அதைப்பற்றிக் குறிப்பிட்டு எழுதிய பத்திரிகை "பயனியர்" பத்திரிகைதான். இந்தப் பத்திரிகைக் கட்டுரையின் சாராம்சம் ராய்ட்டர் செய்தி ஸ்தாபனத்தினால் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அதன் சுருக்கம் லண்டனிலிருந்து நேட்டாலுக்கு அனுப்பப்பட்டது. அது மூன்றே மூன்று வரிகள் அடங்கிய தந்திச் செய்தி. நேட்டாலில் இந்தியர் நடத்தப்படும் கொடூரமான விதத்தைப் பற்றிக் காந்திஜி ரொம்பவும் கண்டித்துக் கட்டுரை எழுதியிருப்பதாக அந்தச் செய்தி பொதுப்படையாகச் சொல்லிற்று. மேற்படி தந்திச் செய்தி கேட்டால் ஐரோப்பியர்களுக்கு மிகவும் கோபத்தை உண்டாக்கிற்று. அவர்கள் தங்களுடைய கோபத்தை எப்படிக் காட்டினார்கள் என்பதைப் பின்னால் பார்க்கப் போகிறோம்.
'பச்சைப் பிரசுரம்' அச்சிட்டுப் பத்திரிகைகளுக்கு அனுப்பியதுடன் மகாத்மா திருப்தி அடைந்துவிடவில்லை. இந்தியாவின் பிரபல அரசியல் தலைவர்களையும் பிரமுகர்களையும் பார்த்துப் பேசி அவர்களுடைய ஆதரவைத் தேட விரும்பினார். இந்த நோக்கத்துடன் முதலில் பம்பாய்க்குச் சென்றார். பம்பாயில் அப்போது மூன்று பிரமுகர்கள் பிரசித்தி அடைந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் ரானடே ; இன்னொருவர் பட்ருடீன் தயாப்ஜி ; மூன்றாவது பிரமுகர் ஸர் பிரோஸிஷா மேத்தா. முன்னவர் இருவரும் அச்சமயம் பம்பாய் ஹைக்கோர்ட்டின் நீதிபதிகளாயிருந்தார்கள். அந்தக் காலத்திலெல்லாம் ஆரம்பத்தில் அரசியல் தலைவர்களாயிருப்பவர்கள் சீக்கிரத்தில் பெரிய சர்க்கார் உத்தியோகங்களுக்குப் போய்விடுவது வழக்கம்.
ரான டே, தயாப்ஜி இருவரும் காந்திஜியிடம், "எங்களுடைய அநுதாபமெல்லாம் உங்கள் பக்கத்தான் இருக்கிறது. ஆனால் நாங்கள் நீதிபதி உத்தியோகம் வகிப்பதால் பகிரங்கமாக எ துவும் செய்ய முடியாது. உங்களுக்குத் திறமையாக வழி காட்டி உதவி செய்யக் கூடியவர் ஸர் பிரோஸிஷா மேத்தா தான் !" என்று சொன்னார்கள்.
இதிலிருந்து ஸர் பிரோஸிஷா மேத்தா எவ்வளவு செல்வாக் குடையவர் என்பதை காந்திஜி நன்கு தெரிந்து கொண்டார். உடனே அவரிடம் சென்றார். “பம்பாயின் சிங்கம்" என்றும் "பம்பாய் மாகாணத்தின் முடிசூடா மன்னர்" என்றும் ஸர் பி. எம். மேத்தா பட்டம் பெற்றிருந்தார். அப்படிப் பட்டவரைப் பார்ப்பதற்குச் சிறிது தயக்கத்துடனே தான் காந்திஜி போனார். ஆனால் மேத்தாவோ அன்புள்ள தந்தை புதல்வனை வரவேற்பது போல் மகாத்மாவை வரவேற்றார். அப்போது மேத்தாவை அவருடைய அன்புக்குரிய சீடர்களான ஸ்ரீ டி. இ. வாச்சா, ஸ்ரீ காமா முதலியவர்கள் புடை சூழ்ந்திருந்தார்கள். ஸர் பிரோஸிஷா மேத்தா காந்திஜி கூறியதைச் செவிகொடுத்துக் கேட்டார். பின்னர், ''உங்களுடைய கட்சி மிகவும் நியாயமான து. கட்டாயம் உங்களுக்கு உதவி செய்ய வேண்டியது தான். இங்கே ஒரு பொதுக் கூட்டத்துக்கு முதலில் ஏற்பாடு செய்கிறேன்'' என்றார். பொதுக் கூட்டத்துக்குத் தேதியும் இடமும் அவசரமாகக் குறிப்பிடப் பட்டது. அந்த தினத்துக்கு முதல் நாள் தம்மை வந்து பார்க்கும்படி ஸர் பிரோஸிஷா மேத்தா காந்திஜிக்குச் சொல்லி அனுப்பினார்.
---------------
27. பிரசார யாத்திரை
ஸர் பிரோஸிஷா மேத்தா சொல்லியிருந்தபடி, பம்பாயில் பொதுக் கூட்டத்துக்குக் குறிப்பிட்டிருந்த தினத்துக்கு முதல் நாள், காந்திஜி அவரைப் போய்ப் பார்த்தார்.
" காந்தி! பிரசங்கம் தயாரா யிருக்கிறதா? '' என்று மேத்தா கேட்டார். காந்திஜி, ''பிரசங்கம் தயாரிக்கவில்லை ; ஞாபகத்திலிருந்து பேசிவிடலாம் என்றிருக்கிறேன்'' என்றார்.
''அதெல்லாம் இந்த பம்பாயில் சரிக்கட்டி வராது. நாம் நடத்தும் பொதுக் கூட்டத்தினால் பயன் ஏற்பட வேண்டுமானால் உமது பிரசங்கத்தை எழுதி அச்சுப் போட்டுக்கொண்டு வந்துவிட வேண்டும் ! இன்றிரவு பதினோரு மணிக்குள் பிரசங்கத்தை எழுதிக்கொண்டு வந்துவிட வேண்டும். தெரிகிறதா?'' என்று சொன்னார் ஸர் பிரோஸிஷா மேத்தா.
ஸர் பிரோஸிஷா சொன்னபடியே காந்திஜியும் செய்தார். அது எவ்வளவு நல்ல யோசனை என்று கூட்டத்தின்போது தெரிய வந்தது. பொதுக் கூட்டம் பம்பாயில் அப்போது பிரசித்தி பெற்றிருந்த ஸர் கவாஸ் ஜி ஜிஹாங்கீர் மண்டபத்தில் நடைபெற்றது. அந்த மண்டபத்தில் அன்று கூடியிருந்தது போன் ற கூட்டத்தை அதற்கு முன்னால் காந்திஜி பார்த்ததே கிடையாது. அச்சுப்போட்ட பிரசங்கத்தைப் படிக்கும் போது காந்திஜியின் உடம்பு நடுங்கிற்று. அக்கிராசனம் வகித்த ஸர் பிரோஸிஷா மேத்தா அடிக்கடி “உரக்கப் பேசுங்கள்'', ''உரக்கப் பேசுங்கள்'' என்று சொல்லி உற்சாகப்படுத்தினார். இதனால் காந்திஜியின் குரல் மேலும் மெலிவடைந்து வந்தது.
காந்திஜியின் நண்பரான ஸ்ரீ கேசவராவ் தேஷ்பாண்டே என்பவர் பக்கத்தில் இருந்தார். அவருடைய குரல் பலமான து. காந்திஜியின் பிரசங்கத்தைத் தான் படிக்கிறதாக அவர் முன் வந்தார். காந்திஜியும் அதற்கிணங்கி அச்சுப் பிரசங்கத்தை அவரிடம் கொடுத்தார். ஆனால் ஸ்ரீ தேஷ்பாண்டே படிப்பதைக் கேட்கச் சபையோர் தயாராயில்லை. ''வாச்சா! வாச்சா !” என்று கத்தினார்கள். அதாவது ஸர் பிரோஸிஷாவின் பிரதம சிஷ்யரான ஸ்ரீ டி. இ. வாச்சா பேச வேண்டுமென் ற தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள்.
உடனே ஸ்ரீ டி. இ. வாச்சா எழுந்து பிரசங்கத்தைப் படிக்க ஆரம்பித்தார். சபையோர் கரகோஷம் செய்தார்கள். பிறகு கூட்டத்தில் அமைதி நிலவியது. முடிவு வரையில் சபையோர் கவனமாகக் கேட்டார்கள். தென்னாப்பிரிக்கா இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றிப் பிரசங்கத்தில் குறிப்பிட்ட போதெல்லாம் ''வெட்கம், வெட்கம்!'' என்று பலமாகக் கத்தினார்கள்.
இவ்விதம் பொதுக் கூட்டத்தின் நோக்கம் நிறைவேறியது பற்றிக் காந்திஜி மகிழ்ந்தார். கூட்ட முடிவில் ஸர் பிரோஸிஷா மேத்தா காந்திஜியைப் பார்த்து, ''உம்முடைய பிரசங்கம் மிக்க நன்றாயிருந்தது!'' என்று சொன்ன போது காந்திஜி ஆனந்தக் கடலில் மூழ்கினார். அவ்வளவு பெரிய பிரமுகரிடம் பம்பாயின் முடிசூடா மன்னரிடம், ''நன்றா யிருந்தது'' என்று அத்தாட்சி பெறுவது பெரிய காரியம் அல்லவா?
பிற்காலத்தில் ஸர் பிரோஸிஷா மேத்தா பொது ஜனங்களின் பக்திக்கு உரியவராயிருந்த போதே காலமானார். ஆனால் ஸ்ரீ டி. இ. வாச்சா ஸர் டி. இ. வாச்சா ஆகி, பழுத்த மிதவாதியாகி, பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆதரிப்பவராகி, தேசீய இயக்கத்துக்கு எதிரியாகி, இந்தியப் பொதுமக்களின் அதிருப் திக்குப் பாத்திரமாகி, காலகதி அடைந்தார்.
தம்பி ! பேச்சுத் திறமையும் பிரசங்கத் திறமையும் மட்டும் உலகில் ஒருவருக்கு உயர்வை அளித்துவிட முடியாது. அப்படி அடைந்த உயர்வும் நிலைத்து நில்லாது. ஒழுக்கத்தினாலும் தியாகத்தினாலும் இடைவிடாத தொண்டினாலுந்தான் ஒருவருக்கு உண்மையான உயர்வு ஏற்படும்.
அன்று தாம் எழுதி அச்சிட்ட பிரசங்கத்தைத் தாமே உரத்து வாசிக்க முடியாமல் காந்தி மகான் திண்டாடினார், அவர் எழுதிய பிரசங்கத்தை இன்னொருவர் படிக்கவேண்டியதா யிருந்தது.
அதே காந்தி மகாத்மா பிற்காலத்தில் பத்து லட்சம் மக்கள் அடங்கிய பல பொதுக் கூட்டங்களில் பேசினார். மக்கள் நிச்சப்தமாயிருந்து அவருடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் பயபக்தியுடன் கேட்டார்கள்.
* * *
பம்பாயில் ஸர் பிரோஸிஷா மேத்தாவின் தலைமையில் நடந்த பொதுக் கூட்டமானது காந்திஜியின் வேலையை எளிதாக்கி விட்டது. பொதுக் கூட்டத்தைப்பற்றிய விவரங்களைப் பத்திரிகைகளில் படித்து நாடெங்கும் உள்ள தேசியத் தலைவர்கள் தென்னாப்பிரிக்கா இந்தியர் சம்பந்தமான விவரங்களைத் தெரிந்து கொண்டார்கள். எனவே, காந்திஜி முன்னைக் காட்டி லும் அதிக தைரியத்துடனே பூனா நகரத்துக்குச் சென்றார்.
பூனாவில் அப்போது இரண்டு கட்சிகள் இருந்தன. ஸ்ரீ லோகமான்ய பாலகங்காதர திலகரின் கட்சி ஒன்று ; ஸ்ரீ கோபால கிருஷ்ண கோகலேயைத் தலைவராகக் கொண்ட கட்சி ஒன்று. பின்னால் இக்கட்சிகளுக்குள் பிளவு அதிகமாகித் திலகர் கட்சி தீவிரக் கட்சி என்றும், கோகலேயின் கட்சி மிதவாதக் கட்சி என்றும் வழங்கப் பட்டன.
அந்தக் காலத்தில் மேற்படி இரு கட்சிகளுக்குள்ளும் அவ்வளவு பலமான போராட்டம் இல்லை. ஆகையால் இரு கட்சிகளின் ஆதரவையும் தேட வேண்டும் என்று காந்திஜி விரும்பினார். முதலில் லோகமான்யரிடம் சென்றார்.
லோகமான்யர், ''தென்னாப்பிரிக்கா விஷயத்தில் அபிப்பிராய பேதமே இருக்கமுடியாது. எல்லாக் கட்சியின் ஆதரவையும் நீங்கள் பெற விரும்புவது நியாயந்தான். ஆனால் கூட்டத்தின் தலைவர் எந்தக் கட்சியையும் சேராதவரா யிருப்பது நல்லது. ஆசிரியர் பந்தர்க்கரை அக்கிராசனராயிருக்க வேண்டும் மென்று கேட்டுப் பாருங்கள். சில காலமாக அவர் வெளிவருவதே இல்லை. நான் உங்களுக்கு எல்லாவித உதவியும் செய்யத் தயார்!'' என்றார்.
பிறகு காந்திஜி ஸ்ரீ கோகலேயைப் பார்க்கச் சென்றார். பிரசித்தி பெற்ற பூனா பெர்க்கூஸன் கலாசாலையில் அப்போது கோகலே ஆசிரியர். அவருடைய இனிய சுபாவம் காந்திஜியின் உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்தது. இப்போதுதான் முதன் முறையாகப் பார்த்தாலும் பழைய நண்பரைச் சந்திப்பது போலவே தோன்றியது.
காந்திஜி சொல்லுகிறார்:- "ஸர் பிரோஸிஷா இமாலயத்தை போல் எனக்குத் தோன்றினார். லோகமான்யர் மகா சாகரத்தைப் போல் காட்சி அளித்தார். கோகலேயோ கங்கை நதியை ஒத்திருந்தார். இமாலயத்தை ஏறிக் கடத்தல் இயலாத காரியம். சமுத்திரத்தில் ஒருவன் துணிந்து இறங்குவதும் எளிதன்று. ஆனால் கங்கையோ தன்னிடம் வரும்படி அனைவரையும் பரிவோடு அழைக்கிறது. அந்தப் புனித நதியில் நாம் பயமின்றி இறங்கி ஸ்நானம் செய்து மகிழலாம். கையில் துடுப்புடனே படகில் ஏறி அந்த மாநதியில் மிதக்கலாம்!''
இவ்விதமாகக் கோகலே விஷயத்தில் காந்திஜிக்கு ஏற்பட்ட அபிப்பிராயம் பின்னால் மகத்தான பலன்களைத் தந்தது.
ஸ்ரீ கோகலே காந்திஜியை அழைத்துக்கொண்டு போய்ப் பெர்க்கூஸன் கலாசாலை முழுவதையும் காட்டினார். பொதுக் கூட்டம் விஷயமாக யார் யாரிடம் போகவேண்டும் என்றும் அவர்களை எப்படி அணுகவேண்டும் என்றும் யோசனை சொன் னார். ஸர் பிரோஸிஷாவைப் போலவே கோகலேயும் காந்திஜி செய்யப்போகும் பிரசங்கத்தைத் தாம் முன்னதாகப் பார்க்க வேண்டும் என்று கூறினார். டாக்டர் பந்தர்க்கரைச் சந்தித்துப் பேசிய பிறகு தம்மிடம் மறுபடியும் வரும்படி சொன்னார்.
காந்திஜி மிக்க உற்சாகத்துடனே டாக்டர் பந்தர்க்கரிடம் போனார். அந்தப் பேராசிரியர் கல்வித் துறையில் நாட்டுக்கு இணையற்ற தொண்டு செய்த பிரமுகர். காந்திஜியை அவரும் பிரியத்துடன் வரவேற்றார். எந்தக் கட்சியிலும் சேராதவரைப் பொதுக் கூட்டத்துக்குத் தலைவராகக் கோர விரும்புவதாய்க் காந்திஜி சொன்ன போது, "அதுதான் சரி ; அதுதான் சரி'' என்றார் ஆசிரியர் பந்தர்க்கர். உடனே “தாங்கள் தான் தலைவர் ராயிருக்கவேண்டும்'' என்றார் காந்திஜி.
டாக்டர் பந்தர்க்கர் சிறிது யோசித்துவிட்டுச் சொன்னதாவது :- ''நான் அரசியல் விஷயங்களில் தலையிடுவதில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். என்றாலும் நீங்கள் சொல்லும் காரியத்துக்கு என்னால் மறுத்துரைக்க முடியவில்லை. திலகர், கோகலே இருவரையும் நீர் கலந்து கொண்டது சரியான காரியம். அவர்கள் இருவரும் சேர்ந்து நடத்தும் கூட்டத்துக்குத் தலைமை வகிப்பதற்கு எனக்குச் சந்தோஷந்தான். அப்படியே அவர்களிடமும் தெரிவியுங்கள்.''
காந்திஜி மகிழ்ச்சியடைந்தார். பம்பாய்ப் பொதுக் கூட் டத்தைப்போல் பூனாக் கூட்டமும் வெற்றிகரமாக நடந்தது.
* * *
பிறகு காந்திஜி நம் சென்னை மாகாணத்துக்கு வந்தார். பாலசுந்தரம் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவன் அல்லவா? ஆகவே சென்னை மாகாணம் அச்சமயம் அரசியலில் முன்னணியில் நிற்கா விட்டாலும் காந்திஜி வந்த காரியத்துக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. "பச்சைப் பிரசுரம்'' ஏராளமாகச் சென்னை நகரத்தில் விற்பனையாயிற்று.
அப்போது சென்னை நகரில் நடந்த ”மெட்ராஸ் ஸ்டாண் டர்டு" ஆசிரியர் ஸ்ரீ ஜி. பரமேசுவரம் பிள்ளையும், ”ஹிந்து'' பத்திரிகை ஆசிரியர் ஸ்ரீ ஜி. சுப்பிரமணிய ஐயரும், பிற்காலத்தில் மிகப் பிரசித்தி பெற்ற நீதிபதி ஸர் எஸ். சுப்பிரமணிய ஐயரும் தமக்குப் பேருதவி செய்ததாகக் காந்திஜி குறிப்பிட்டுள்ளார்.
* * *
சென்னையிலிருந்து காந்திஜி கல்கத்தாவுக்குப் போனார். கல்கத்தா அப்போது இந்தியாவின் தலைநகரமாயிருந்தது. இந்தியாவின் கவர்னர் ஜெனரல் கல்கத்தாவிலே தான் வசித்தார். கல்கத்தாவில் காந்திஜியின் அனுபவங்கள் அவ்வளவு சந்தோஷகரமா யிருக்கவில்லை. பல தொல்லைகள் அவருக்கு ஏற்பட்டன ; ஏமாற்றங்களும் நேர்ந்தன.
கல்கத்தாவில் காந்திஜிக்கு யாரையுமே தெரியாது. அங்கே போனதும் எங்கே தங்குவது? ரயில்வேக் கம்பெனியின் விளம்பரப் புத்தகத்தில் "கிரேட் ஈஸ்டர்ன் ஹோட்டல்” விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டுக் காந்திஜி மேற்படி ஹோட்டலுக்குத் தந்தி அடித்தார். காந்திஜிக்காக ஓர் அறை ஹோட்டலில் ரிஸர்வ் செய்யப்பட்டிருந்தது. அதில் ஜாகை ஏற்படுத்திக்கொண்டார். லண்டன் ''டெய்லி டெலி கிராப்' பத்திரிகையின் நிருபர் மிஸ்டர் எல்லர் தார்ப்பே என்பவருடன் அந்த ஹோட்டலில் காந்திஜிக்குப் பழக்கம் ஏற்பட் டது. எல்லர் தார்ப்பே ’பெங்கால் கிளப்' என்னும் ஐரோப்பியர் விடுதியில் தங்கியிருந்தார். காந்தியைக் கிளப்புக்கு அழைத்துப் போனார். ஆனால் அந்தக் கிளப்பின் பிரதான ஹாலுக்கு இந்தியர் வரக்கூடாது என்னும் விதி அவருக்குத் தெரியாது. காந்தியை அழைத்துக்கொண்டு அங்கே போனதும் இந்த விவரம் அவருக்குத் தெரிய வந்தது. உடனே தமது சொந்த அறைக்குக் காந்திஜியை அழைத்துப் போனார்.
இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷாருக்கும் தென்னாப்பிரிக்கா இந்தியா முதலிய தேசங்களில் உள்ள பிரிட்டிஷாருக்கும் மனப்பான்மையில் உள்ள வேற்றுமைக்கு மறுபடியும் ஓர் உதாரணம் கிடைத்தது. மிஸ்டர் எல்லர் தார்ப்பே கல்கத்தா ஐரோப்பியர்களின் கேவல மனப்பான்மையைப்பற்றி வருத்தம் தெரிவித்து அங்கே காந்தியைக் கூட்டிக்கொண்டு வந்ததற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
பிறகு காந்திஜி கல்கத்தா பிரமுகர்களைப் பார்க்கச் சென்றார். அந்தக் காலத்தில் வங்காளத்தின் தெய்வமாக விளங்கியவர் ஸ்ரீ பாபு சுரேந்திரநாத் பானர்ஜி. அவரைக் காந்திஜி பார்க்கச் சென்றபோது பல நண்பர்கள் புடை சூழ அவர் வீற்றிருந்தார். காந்திஜி கூறியதைக் கேட்ட பிறகு, “இங்கே எங்களுக்கு இருக்கும் தொல்லைகளே அசாத்தியம். உங்கள் விஷ யத்தில் ஜனங்களைச் சிரத்தை கொள்ளச் செய்வது கஷ்டம் என்று தோன்றுகிறது. ஆயினும் இன்னும் சில பிரமுகர்களை நீங்கள் பார்த்து அவர்களுடைய அநுதாபத்தைப் பெற முயலுங்கள்'' என்று சொன்னார்.
பானர்ஜி குறிப்பிட்ட கனவான்கள் காந்திஜி கூறியதைக் காது கொடுத்தே கேட்க வில்லை. பிறகு காந்திஜி பிரசித்தி பெற்ற 'அமிருத பஜார்' பத்திரிகைக் காரியாலயத்துக்குப் போனார். அங்கே அவரால் பத்திரிகாசிரியரைப் பார்க்கவே முடியவில்லை. பிறகு 'வங்க வாசி' காரியாலயத்துக்குப் போனார். அதன் ஆசிரியர் வெகு நேரம் காந்திஜியைக் காக்க வைத்துவிட்டு, ''எனக்குத் தலைக்குமேல் வேலை இருக்கிறது. உம்முடைய விஷயத்தைக் கேட்க எனக்கு இப்போது நேரமில்லை '' என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
காந்தி மகாத்மா இந்தச் சம்பவம் பற்றி எழுதியிருப்பதாவது :- "ஒரு கண நேரம் எனக்குக் கோபம் வந்தது. ஆனால் உடனே பத்திரிகாசிரியரின் நிலையை உணர்ந்தேன். 'வங்க வாசி'ப் பத்திரிகையின் புகழைக் குறித்து நான் ரொம்பவும் கேள்விப்பட்டதுண்டு. இடை விடாமல் அவரைப் பார்க்க மனிதர்கள் வந்துகொண்டிருப்பதையும் கண்டேன். அவர்கள் அவருக்குப் பழக்கப்பட்டவர்கள். நான் முன் பின் தெரியாதவன். தென்னாப்பிரிக்கா விஷயமும் அவருக்குத் தெரியாது. கஷ்டப்படுகிறவனுக்குத் தன்னுடைய கஷ்டமே பெரியதாகத் தோன்றும். ஆனால் பத்திரிகாசிரியரைப் பார்க்க வருகிறவர்கள் எல்லாரும் ஒவ்வொரு குறையுடனேயே வருவார்கள். எல்லாருடனும் அவர் பேசிப் பதில் சொல்வது எங்நுனம் சாத்தியம்? ”
இவ்வாறு எண்ணி மனத்தைச் சாந்தப்படுத்திக் கொண்ட மகாத்மா பிறகு ஆங்கிலோ - இந்தியப் பத்திரிகாசிரியர்களிடம் சென்றார். ''இங்கிலீஷ்மான்'', ''ஸ்டேட்ஸ்மான் '' என்ற இரண்டு பத்திரிகைகளின் ஆசிரியர்களும் காந்திஜி சொல்லியதை யெல்லாம் பொறுமையுடன் கேட்டுத் தங்கள் பத்திரிகைகளில் விவரமாகப் பிரசுரித்தார்கள்.
'' இங்கிலீஷ்மான் '' பத்திரிகையின் ஆசிரியர் மிஸ்டர் ஸாண்டர்ஸ் என்பவர் காந்திஜியின் உற்ற நண்பராகவே ஆகி விட்டார். காந்திஜி தென்னாப்பிரிக்கா இந்தியர்களுடைய கட்சியை எடுத்துச் சொன்னதோடு தென்னாப்பிரிக்கா ஐரோப்பியருடைய கட்சியையும் பாரபட்சமின்றி எடுத்துச் சொன்ன து மிஸ்டர் ஸாண்டர்ஸின் மனத்தைக் கவர்ந்து காந்திஜியிடம் மரியாதையை உண்டாக்கிற்று.
மிஸ்டர் ஸாண்டர்ஸின் உதவியினால் கல்கத்தாவிலும் பொதுக்கூட்டம் நடத்திவிடலாம் என்று மகாத்மா எண்ணிக் கொண்டிருந்தபோது டர்பனிலிருந்து, ''பார்லிமெண்ட் ஜனவரியில் கூடுகிறது. சீக்கிரம் திரும்பி வாருங்கள்!'' என்று ஒரு தந்திச் செய்தி வந்தது. உடனே காந்திஜி புறப்படத் தீர்மானித்தார். பம்பாயிலிருந்து புறப்படும் அடுத்த முதல் கப்பலில் தமக்கு இடம் தேடி டிக்கட் வாங்கி வைக்கும்படி தாதா அப்துல்லாவின் பம்பாய் ஏஜண்டுக்குத் தந்தி அடித்தார்.
---------
28. கடலில் அபாயம்
தாதா அப்துல்லா கம்பெனியார் “கோர்லாண்டு '' என்னும் நீராவிக் கப்பலை அப்போதுதான் விலைக்கு வாங்கியிருந்தார்கள். கல்கத்தாவிலிருந்து காந்திஜி தந்தி கொடுத்த சமயத்தில் ”கோர்லாண்டு '' கப்பல் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்படுவதா-யிருந்தது. அந்தக் கப்பலிலேயே காந்திஜி பிரயாணம் செய்யவேண்டும் என்றும், டிக்கட் கிரயம் அவரிடம் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் அப்துல்லா கம்பெனியார் தெரிவித்தார்கள். காந்திஜி இம்முறை தமது மனைவியையும், இரண்டு புதல்வர்களையும், சகோதரி குமாரன் ஒருவனையும் தம்மோடு அழைத்துப் போவதாக எண்ணியிருந்தார். அதைக் காந்திஜி தெரியப்படுத்தியதும் அவர்களுக்குக் கப்பலில் இடந்தருவதாகவும் டிக்கட் வாங்கக் கூடாதென்றும் கம்பெனியார் வற்புறுத்தினார்கள். அவர்களுடைய உதவியைக் காந்திஜி நன்றியுடன் ஏற்றுக்கொண்டார். ”கோர்லாண்டு'' கப்பல் புறப்பட்ட அதே சமயத்தில் ''நாடேரி'' என்னும் இன்னொரு நீராவிக் கப்பலும் டர்பனுக்குப் புறப்பட்டது. இரண்டு கப்பல்களிலும் சுமார் 800 பிரயாணிகள் இருந்தார்கள். இவர்களில் பாதிப்பேர் டிரான்ஸ்வாலுக்குச் செல்லுபவர்கள்.
மனைவியையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கப்பல் ஏறுவதற்கு முன்னால் அவர்களுடைய உடை விஷயமாகக் காந்திஜி யோசிக்க வேண்டியதாயிற்று. ஐரோப்பிய நாகரிகத்தையும் நடை உடை பாவனைகளையும் கைக்கொண்டால் தான் தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரர்களுக்கு மத்தியில் கெளரவமான வாழ்க்கை நடத்தலாமென்றும், அங்குள்ள இந்தியர்களுக்கு அப்போதுதான் நல்ல சேவை செய்யமுடியு மென்றும் காந்திஜி கருதினார். ஆனால் திடீரென்று அவர்கள் முழு ஐரோப்பிய உடை தரிப்பது சாத்தியமன்று. ஐரோப்பிய உடைக்கு அடுத்தபடியாக பார்ஸிக்காரர்களின் உடை நாகரிக மானது என்று தோன்றியது. எனவே கஸ்தூரிபாயைப் பார்ஸி மாதரைப் போல் சேலை அணியச் செய்தார். குழந்தைகளுக்குப் பார்ஸிகளைப் போல் மேற்சட்டையும், காற்சட்டையும் வாங்கிக் கொடுத்தார். காலுறையும் அதன் மேல் பூட்ஸும் எல்லாரும் அணிய வேண்டியிருந்தது.
பாவம் ! தாயும் குழந்தைகளும் உடை மாறுதலினால் மிகவும் கஷ்டப்பட்டனர். ஆயினும் பொறுமையோடு சகித்துக் கொண்டு காந்திஜி சொன்னபடி நடந்தார்கள். நாகரிக உடை தரித்ததோடு, ஐரோப்பிய முறையில் மேஜையின் மீது உணவு வைத்துக்கொண்டு கத்தியும் முள்ளும் உபயோகித்துச் சாப்பிடவும் பழகிக்கொண்டார்கள். ஆனால் இந்த நாகரிகமெல்லாம் நெடுங்காலம் நிலைத்திருக்கவில்லை. ''இவையெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனம்'' என்று பிற்காலத்தில் காந்திஜி தீர்மானித்து அவற்றைக் கைவிடச் செய்தார். கைக்கொள்ளுவது கஷ்டமாயிருந்தது போலவே சிலகாலம் பழகிய பிறகு கைவிடுவதும் கஷ்டமாயிருந்தது. ஆயினும் அந்த மாதரசி கணவருடைய விருப்பத்தின்படி தம்முடைய பழக்கத்தை மாற்றிக்கொண்டார். குழந்தைகளும் அப்படியே செய்தன. நிற்க,
கப்பல்கள் இரண்டும் நடுவில் எந்தத் துறைமுகத்திலும் நில்லாமல் நேரே சென் றபடியால் பதினெட்டே நாளில் டர்பன் துறைமுகத்தை அடைந்தன. ஆனால் வழியில், இன்னும் நாலு நாள் பிரயாணம் பாக்கியிருந்தபோது, ஒரு பெரிய அபாயம் நேரிட்டது. பயங்கரமான புயற்காற்றில் கப்பல்கள் அகப்பட்டுக் கொண்டன. பிரயாணிகள் பெரும் பீதி கொண்டார்கள். ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் எல்லாரும் சமய வேறுபாடுகளை மறந்து ஏக பரம்பொருளை நினைத்து வேண்டுதல் செய்து கொண்டார்கள். கப்பல் தலைவரும் பிரயாணிகளுடன் சேர்ந்து ஆண்டவனைப் பிரார்த்திக்கத் தொடங்கினார். காற்றின் வேகத்தினால் மோதப்பட்டுக் கப்பலில் எல்லா இடங்களிலும் 'கிறீச் ', 'கிறீச்' என்ற சத்தம் உண்டாயிற்று. எந்த நிமிஷத்தில் எந்த இடம் பொத்துக் கொள்கிறதோ என்று பயப்படும்படி இருந்தது. ஒரு பலகை சிறிது அகன்று ஒரு சிறு துவாரம் ஏற்பட்டால் போதுமே; குபு குபு என் று கடல் நீர் கப்பலுக்குள் வர ஆரம்பித்து விடுமே! அதுகூட அவசியமில்லை ! காற்றில் அடிபட்டுக் கப்பல் அப்படியும் இப்படியும் ஆடி அசைந்ததைப் பார்த்தால் எந்த நிமிஷமும் கப்பல் கவிழ்ந்து ’அரோகரா' ஆகிவிடலாம் என்றும் எண்ண ஏது இருந்தது. கப்பலின் மேல் தளத்தில் ஒர் ஈ காக்கை இல்லை ! எல்லாரும் கீழே இறங்கி ஒரே கும்பலாய் நெருங்கியிருந்தார்கள். ”எல்லாம் ஆண்டவன் சித்தம் ! ” என் று அடிக்கடி சொல்லிக் கொண்டார்கள்.
இப்படிப்பட்ட பீதிகரமான சமயத்தில் அந்தக் கப்பலில் தைரியமாயிருந்த பிரயாணி காந்திஜி ஒருவர் தான். அவருக்குக் கடல் யாத்திரை பழக்கமாகி யிருந்தது. இயற்கையிலேயே இம்மாதிரி சந்தர்ப்பங்களில் திடசித்தம் கொண்டிருப்பவர் - அத்துடன் கடலில் அடிக்கும் இத்தகைய புயல்களையும் ஏற் கெனவே பார்த்து அநுபவமுள்ளவர். ஆகையால் மற்றப் பிரயாணிகளைச் சந்தித்துத் தைரியம் சொல்லுவதில் காந்திஜி ஈடுபட்டிருந்தார். புயல் நிலைமையைப் பற்றி அடிக்கடி கப்பல் தலைவர் தெரிவித்த செய்திகளைத் தெரிந்துகொண்டு வந்து பிரயாணிகளுக்கு அறிவித்து வந்தார். இவ்விதம் அன்று கப்பல் பிரயாணிகள் பலருடன் காந்திஜிக்கு ஏற்பட்ட பழக்கம் சில நாளைக்குள்ளே மிகவும் பயன்பட்டது என்பதை அடுத்தாற் போல் பார்க்கப் போகிறோம்.
புயல் இருபத்துநாலு மணி நேரம் நீடித்திருந்த பிறகு அதன் வேகம் தணிந்தது. வானம் வெளி வாங்கிற்று. சூரிய பகவான் தரிசனம் தந்தார். அவ்வளவுதான் ! இத்தனை நேரமும் சோகக் கடலில் மூழ்கி ”ஐயோ அப்பா!' என்று அலறிக் கொண்டிருந்தவர்கள் ஆனந்தக் களியாட்டங்களில் ஈடுபட்டார்கள். சம்பிரதாயமாகக் கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள் என்றாலும், அபாய நிலைமையில் ஏற்பட்டிருந்த பக்தி சிரத்தை மறைந்துவிட்டது என்பதைக் காந்திஜி கண்டு வருந்தினார்.
ஆனால் அந்தப் பிரயாணிகளுக்காவது காந்திஜிக்காவது ஒரு விஷயம் அப்போது தெரியாது. கடலில் நேர்ந்த இந்த அபாயத்தைக் காட்டிலும் பெரியதோர் அபாயம் கரையிலே காத்திருக்கிறது என்பதை அவர்கள் அறிருந்திருக்கவில்லை அறிந்திருந்தால் காந்திஜியின் மனோநிலையில் மாறுதல் இருந்திராது; ஆனால் மற்றப் பிரயாணிகள் களியாட்டங்களில் ஈடுபட் டிருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.
* * *
டிசம்பர் மாதம் 18-ந் தேதி காந்திஜி ஏறிவந்த ''கோர்லாண்டு'' கப்பல் டர்பன் துறைமுகத்தை அடைந்தது. அதே தினத்தில் ”நாடேரி ' கப்பலும் வந்து சேர்ந்தது. இரண்டு கப்பல்களும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன.
வெளிநாடுகளிலிருந்து கப்பல்களில் வந்து இறங்குவோரைத் துறைமுகத்தில் வைத்திய பரிசோதனைக்கு உள்ளாக்குவது வழக்கம். தொத்து நோய்கள் பரவாதிருக்கும் பொருட்டு இந்த வழக்கம் கையாளப்படுகிறது. தென்னாப்பிரிக்கா துறைமுகங்களில் கப்பலிலேயே வைத்திய பரிசோதனை செய்து பார்த்துவிட்டுத்தான் கரையில் இறங்க விடுவார்கள்.
'கோர்லாண்டு', 'நாடேரி ' கப்பல்கள் பம்பாயிலிருந்து புறப்பட்டபோது பம்பாயில் பிளேக் நோய் பரவியிருந்தது. ஆகையினால் இந்தக் கப்பல்களின் விஷயத்தில் வைத்திய பரிசோதனை கடுமையாக இருக்கலாம் என்றும், கொஞ்சம் கால தாமதமும் ஏற்படலாம் என்றும் எதிர்பார்த்தார்கள்.
வெளி நாட்டிலிருந்து துறைமுகத்துக்கு வரும் ஒவ்வொரு கப்பல் மீதும் ஒரு மஞ்சள் கொடி பறக்கவிடப்பட்டிருக்கும். மஞ்சள் கொடியை இறக்கிவிட்டால் வைத்தியப் பரிசோதனை முடிந்துவிட்டது என்று பொருள். அதன் பிறகு கப்பலில் வந்த பிரயாணிகளை வரவேற்பதற்காக அவர்களுடைய நண்பர்களும் பந்துக்களும் கப்பலுக்குள் ஏறிவரலாம்.
”கோர்லாண்டு'' கப்பலிலும் மஞ்சள் கொடி பறக்க விடப்பட்டிருந்தது. டாக்டர் வந்து பிரயாணிகளைப் பரிசோதனை செய்தார். ஆனால் அத்தாட்சிப் பத்திரம் உடனே கொடுக்கவில்லை. ''பிளேக் கிருமிகள் வளர்ச்சி பெறுவதற்கு 23 நாள் ஆகலாம் ; இந்தக் கப்பல் பம்பாயிலிருந்து புறப்பட்டு 18 நாள் தான் ஆகிறது. ஆகையால் இன்னும் ஐந்து நாள் எல்லாரும் கப்பலிலேயே இருக்க வேண்டும்'' என்று சொல்லி விட்டு டாக்டர் போய்விட்டார். ''நாடேரி'' கப்பலில் இருந்தவர்களுக்கும் இதே விதமான தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இவ்விதம் வைத்தியர் ஐந்து நாளைக்குத் தடை உத்தரவு போட்ட காரணம் பம்பாய்ப் பிளேக் மட்டும் அல்ல என்பது சீக்கிரத்திலேயே தெரியவந்தது. மேற்படி இரண்டு கப்பலிலும் வந்த இந்தியர்களை டர்பனில் இறங்க விடாமல் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று அந்த நகரில் வசித்த ஐரோப்பியர்கள் பெருங்கிளர்ச்சி செய்து கொண்டிருந்தார்கள் என்பதாகத் தகவல் கிடைத்தது.
ஒவ்வொரு நாளும் வெள்ளைக்காரர்கள் பெருங் கூட்டம் நடத்தினார்கள். ''காந்தியையும் அவருடன் வந்திருக்கும் இந் தியர்களையும் இறங்கவிடக் கூடாது'' என்று ஆவேசமாகப் பேசினார்கள்; தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். அவர்களுடைய கிளர்ச்சிக்கு நேட்டால் அரசாங்கத்தாரின் ஆதரவும் இருந்தது. அரசாங்க மந்திரிகளில் செல்வாக்குள்ள ஒருவர் மேற்படி கிளர்ச்சிக் கூட்டங்களுக்குச் சென்று பகிரங்கமாகக் கலந்து கொண்டார்.
வெள்ளைக்காரர்கள் டர்பனில் எற்கெனவே வசித்த இந்தியர்களைப் பயமுறுத்தினார்கள். தாதா அப்துல்லா கம்பெனியைப் பயமுறுத்தினார்கள். இரண்டு கப்பல்களையும் திருப்பி அனுப்பி விட்டால் நஷ்ட ஈடு தருவதாகவும் சொன்னார்கள் !
ஆனால் டர்பன் இந்தியர்களும் தாதா அப்துல்லா கம்பெனியாரும் உறுதியுடனிருந்தார்கள். டர்பன் இந்திய சமூகத்துக்கு அப்போது மிஸ்டர் லாப்டன் என்னும் ஆங்கிலேயர் வக்கீலாக இருந்து வந்தார். அவர் அஞ்சா நெஞ்சம் படைத்த தீரர். மற்ற வெள்ளைக்காரர்களின் கிளர்ச்சியை அவர் பலமாகக் கண்டித்தார். இந்தியர்களுக்கு உண்மையாக நண்பரா யிருந்து ஆலோசனை சொல்லி வந்தார்.
அச்சமயம் தாதா அப்துல்லா கம்பெனியின் டர்பன் கிளையைச் சேத் அப்துல்லா கரீம் ஹாஜி ஆதம் என்பவர் நிர்வகித்து வந்தார். அவர் தினந்தோறும் விவரமாகக் கடிதம் எழுதிக் கப்பலில் காத்திருந்த காந்திஜிக்கு அனுப்பி வந்தார்.
வெள்ளைக்காரர்களின் சார்பாகவும் கப்பலுக்குக் கடிதம் வந்தது. ”மரியாதையாகத் திரும்பிப் போய் விடுங்கள். திரும்பிப் போகச் சம்மதித்தால் பிரயாணச் செலவு கொடுத்து விடுகிறோம். திரும்பிப் போகச் சம்மதிக்கா விட்டால் கடலிலே தள்ளிச் சாக அடித்து விடுவோம் ! ஜாக்கிரதை !'' என்பது போன்ற கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. காந்திஜி பிரயாணிகள் எல்லாரிடையிலும் சென்று அவர்களுடனே பேசித் தைரியமூட்டி வந்தார். ”நாடேரி'' கப்பலில் இருந்தவர்களுக்கும் அவ்வப்போது தைரியப்படுத்திச் செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்தார்.
டர்பன் வெள்ளைக்காரர்கள் இவ்வளவு மூர்த்தண்யமான துவேஷங் கொண்டு கிளர்ச்சி செய்ததின் காரணம் என்ன தெரியுமா? அவர்கள் காந்திஜியின் மீது இரண்டு குற்றங்களைச் சுமத்தினார்கள்.
1. இந்தியாவிலிருந்தபோது காந்திஜி நேட்டால் வெள்ளைக்காரர்கள் மீது அவதூறு கூறித் துவேஷப் பிரசாரம் செய்தார் என்பது ஒன்று.
2. நேட்டாலில் இந்தியர்களைப் பெருந்திரளாகக் கொண்டு சேர்த்து நேட்டாலை இந்திய மயமாக்கி விடும் நோக்கத்துடன் இரண்டு கப்பல் நிறைய இந்தியப் பிரயாணிகளை அவர் அழைத்து வந்திருக்கிறார் என்பது இரண்டாவது.
உண்மையில், மேற்படி இரண்டு குற்றங்களுக்கும் காந்திஜி உரியவர் அல்ல. இந்தியாவில் காந்திஜி நேட்டால் வெள்ளைக்காரர்களைப் பற்றி மிகைப்படுத்தி ஒன்றும் சொல்லவில்லை. அவர்களுடைய குற்றங்களைக் குறைத்தே கூறினார். நேட்டாலில் இருந்தபோது அவர்களைப்பற்றிக் கூறாத ஒரு வார்த்தையை யாவது இந்தியாவிலே அவர் சொல்லவில்லை.
மற்றப்படி அந்த இரு கப்பல்களிலும் இருந்தவர்களில் தம்முடைய மனைவி மக்களைத் தவிர வேறு யாரையும் காந்திஜிக்குத் தெரியவே தெரியாது. யாருக்கும் கடிதம் எழுதியோ நேரில் பேசியோ நேட்டாலுக்கு வரும்படி அவர் தூண்டியதும் அழைத்ததும் கிடையாது.
இப்படிக் காந்திஜி நிரபராதியாயிருந்தபோதிலும் அவருக்குத் தம்மால் மற்றப் பிரயாணிகளுக்கு இந்த நெருக்கடி ஏற்பட்டு விட்டதே என்று வருத்தமாயிருந்தது. தாதா அப்துல்லா கம்பெனிக்கும் பெரும் சங்கடம் உண்டாகி யிருந்தது. கப்பலில் இருந்த பிரயாணிகளுக்கெல்லாம் உயிருக்கே ஆபத்து என் ற நிலைமை ஏற்பட்டிருந்தது. காந்திஜியின் மனைவி மக்களும் அபாயத்துக்கு உள்ளாகியிருந்தனர்.
இதைப்பற்றி யோசிக்க யோசிக்க, காந்திஜிக்கு மேனாட்டு நாகரிகத்தைப்பற்றி வருத்தம் உண்டாயிற்று. மேனாட்டு நாகரிகத்தின் விளைவாகத்தானே நேட்டால் வெள்ளைக்காரர்கள் இப்படி யெல்லாம் நடந்து கொள்ளுகிறார்கள் !
துறைமுகத்தில் கப்பல் காத்திருந்த சமயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை வந்தது. அந்தப் பண்டிகையை முன்னிட்டுக் கப்பல் தலைவர் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்புப் பிரயாணிகளைத் தம்முடன் விருந்துண்ண அழைத்தார். விருந்துக்குப் “பிறகு விருந்தாளிகளில் சிலரும் விருந்து கொடுத்தவரும் பேசுவ து மேனாட்டு முறை. இந்திய விருந்தாளிகளின் சார்பாகக் காந்திஜி பேசவேண்டி ஏற்பட்டது. சாதாரணமாகப் பண்டிகை விருந்துகளில் பேசுவோர் தமாஷாகச் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்கள். அல்லது ஒருவருக்கொருவர் உபசாரம் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் காந்திஜிக்குத் தமாஷாப் பேச்சில் அப்போது மனம் செல்லவில்லை. அவருடைய உள்ளம் டர்பனில் நடந்து கொண்டிருந்த துவேஷக் கிளர்ச்சிப் போராட்டத் திலேயே ஈடுபட்டிருந்தது. எனவே, கப்பல் தலைவர் அளித்த கிறிஸ்மஸ் விருந்தில் ''மேனாட்டு நாகரிகம்'' என்னும் விஷயமாகக் காந்திஜி பேசினார்.
மேனாட்டார் கிறிஸ்துவ மதத்தினராயிருந்த போதிலும் கிறிஸ்துவின் போதனைகளைக் கைக்கொள்வதில்லை யென்றும், பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய வாழ்க்கை அமைந்திருக்கிற தென்றும் காந்திஜி தமது பேச்சில் கூறினார். இதற்கு மாறாகக் கீழ்நாட்டு நாகரிகம் அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட தென்று எடுத்துக் காட்டினார். கப்பல் தலைவரும், மற்றக் கப்பல் உத்தியோகஸ்தர்களும் வெள்ளைக்காரர்கள். எனினும் அவர்கள் காந்திஜி கூறியதைக் கவனமாகக் கேட்டார்கள். விருந்துப் பேச்சுகள் முடிந்த பிறகு அது விஷயமாகக் காந்திஜியுடன் சம்பாஷணை நடத்தினார்கள். அவர்களில் ஒருவர், ''நீங்கள் அஹிம்சையைப் பற்றி இவ்வளவு பேசுகிறீர்களே? உங்களுடைய கொள்கையை உங்களாலேயே நிறைவேற்றி வைக்க முடியுமா? டர்பன் வெள்ளைக்காரர்கள் பயமுறுத்துகிறபடி காரியத்தில் செய்தார்களானால் நீங்கள் என்ன செய்வீர்களாம்? '' என்று கேட்டார்.
அதற்குக் காந்திஜி, ''அவர்களிடம் நான் கோபங்கொள்ள மாட்டேன். சட்டப்படி வழக்குத் தொடரவும் மாட்டேன். உண்மையிலேயே அவர்கள் மேல் எனக்குக் கோபம் கிடை யாது. அவர்களுடைய அறியாமைக்காகவும் குறுகிய மனப் போக்குக் காகவும் வருந்துகிறேன். ஆனால் அதற்காக அவர்களுக்குப் பதிலுக்குத் தீங்கு செய்ய என் மனம் இடங் கொடாது!'' என்று சொன்னார். கேள்வி கேட்டவர் புன்னகை புரிந்தார். காந்திஜியின் பதிலில் அவருக்கு அப்பொழுது அவ்வளவாக நம்பிக்கை ஏற்படவில்லை.
இவ்விதம் நாட்கள் கழிந்து கொண்டிருந்தன. வைத்திய பரிசோதகர் இப்போது விஷயம் தம் கையில் இல்லை யென்றும், சர்க்காரிடமிருந்து உத்தரவு வந்தால் காந்திஜி முதலியவர்கள் கப்பலிலிருந்து இறங்கலா மென்றும் சொன்னார்,
காந்திஜிக்கு இறுதிச் செய்தி கரையிலிருந்து வந்தது. ”உயிர் தப்பிப் பிழைக்க வேண்டுமானால் பிடிவாதத்தை விட்டு விடுங்கள் ; அப்படியே திரும்பிப் போய் விடச் சம்மதியுங்கள்!'' என்று அந்தச் செய்தி சொல்லிற்று.
----------
29. கரையில் ஆபத்து
கரையிலிருந்து வந்த இறுதிச் செய்திக்குக் காந்திஜி மற்றப் பிரயாணிகளையும் கலந்துகொண்டு பதில் அனுப்பினார். ''திரும்பிப் போக முடியாது. நேட்டால் துறைமுகத்தில் இறங்குவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு. என்ன நேர்ந்தாலும் சரி, அந்த உரிமையை நிலைநாட்ட உறுதி கொண்டிருக்கிறோம் '' என்பதுதான் பதில்.
இனியும் கப்பல்களைக் கடலிலேயே நிறுத்திவைக்க முடியாது என்று அதிகாரிகள் கண்டார்கள். சொல்லக்கூடிய காரணம் ஒன்றும் இல்லை. எனவே ஹார்பருக்குள் கப்பல்கள் வருவதற்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
இரண்டு கப்பல்களும் கரையோரமாகக் கொண்டு வந்து, நிறுத்தப்பட்டன. இத்தனை நாளும் காத்திருந்த பிரயாணிகள் இப்போது பரபரப்புடன் இறங்கினார்கள். நேட்டால் அரசாங்க அட்டர்னியும் ஏற்கெனவே காந்திஜிக்குத் தெரிந்தவருமான மிஸ்டர் எஸ்கோம்ப் இச்சமயத்தில் காந்திஜிக்கு ஒரு செய்தி அனுப்பினார். “இங்குள்ள ஐரோப்பியர்கள் உங்கள் பேரில் தனிப்பட மிகவும் கோபங்கொண்டிருக்கிறார்கள். இது உங்களுக்குத் தெரிந்ததே! ஆகையால் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பகலில் கப்பலிலிருந்து இறங்க வேண்டாம். நன்றாக இருட்டிய பிறகு இறங்குங்கள், துறைமுகத்தின் தலைமை அதிகாரி மிஸ்டர் டாட்டம் உங்களைப் பத்திரமாக அழைத்துப் போய் வீட்டில் விட்டு விடுவார்.'' இந்தச் செய்தியைக் கப்பல் தலைவர் காந்திமகானிடம் தெரவித்தார். காந்திஜியும் அதன்படி செய்ய உத்தேசித்தார், ஆனால் அரை மணி நேரத்துக்கெல்லாம் டர்பன் இந்தியர்களின் வக்கீலான மிஸ்டர் லாப்டன் என் பவர் கப்பலுக்கு வந்து சேர்ந்தார். அவர் காந்திஜியிடம் சொன்னதாவது :-
''நீங்கள் இருட்டிய பிற்பாடு நகரில் பிரவேசிக்கும் யோசனை எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. எதற்காக அப்படிப் பயப்பட வேண்டும்? உங்கள் மனைவியையும் குழந்தைகளையும் முதலில் வண்டியில் ஏற்றி ரஸ்டம்ஜியின் வீட்டுக்கு அனுப்பி விடுவோம். நாம் இருவரும் நடந்து போவோம். யாரும் உங்களுக்குத் தீங்கு செய்வார்கள் என்று நான் கருத வில்லை. நகரம் இப்போது அமைதியா யிருக்கிறது. கிளர்ச்சி அடங்கி விட்டது. அப்படி ஏதாவது அபாயம் வருவதாயிருந்தாலும் அதற்குப் பயப்பட்டுக்-கொண்டு திருடனைப் போல் இருட்டிலே போவதா? கூடவே கூடாது ! உங்கள் விருப்பம் என்ன?'' - இவ்விதம் மிஸ்டர் லாப்டன் கூறியது காந்திஜிக்கு நியாயமாகத் தோன்றியது. அவருடைய யோசனைப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டார். காந்திஜியின் மனைவியும் குழந்தைகளும் முன்னதாக வண்டியில் ஏறி ரஸ்டம்ஜியின் வீட்டுக்குப் பத்திரமாய்ப் போய்ச் சேர்ந்தார்கள்.
கப்பல் தலைவரிடம் அநுமதி பெற்றுக்கொண்டு காந்திஜி மிஸ்டர் லாப்டனுடன் கப்பலிலிருந்து இறங்கினார். துறை முகத்திலிருந்து இரண்டு மைல் தூரத்திலிருந்த ரஸ்டம்ஜியின் வீட்டுக்கு இருவரும் நடந்து செல்லத் தொடங்கினார்கள்.
கப்பலிலிருந்து இறங்கிச் சிறிது தூரம் செல்வதற்குள்ளே வெள்ளைக்காரச் சிறுவர்கள் சிலர் அவரைப் பார்த்து இன்னார் என்று தெரிந்துகொண்டார்கள். உடனே அவர்கள் ''காந்தி! காந்தி !'' என்று கூச்சல் போட்டார்கள். அதைக் கேட்டு ஐந்தாறு பெரிய ஆட்கள் வந்து அந்தப் பிள்ளைகளுடனே சேர்ந்து கூச்சல் போட்டார்கள். அந்தக் கூச்சலைக் கேட்டுவிட்டு நாலாபுறத்திலிருந்தும் சிறுவர்களும் பெரியவர்களும் ஓடி வரத் தொடங்கினார்கள்.
இதைப் பார்த்ததும் மிஸ்டர் லாப்டனுக்குப் பயமாய்ப் போய்விட்டது. கூட்டம் பெரிதாகி விட்டால் தொந்தரவாய்ப் போய் விடலாமென்றும், காந்திஜி மேலே நடந்து செல்ல முடியாமற் போய்விடலாம் என்றும் எண்ணினார். ஆகையால் பக்கத்தில் நின்ற ஒரு ரிக்ஷாவைக் கூவி அழைத்தார். மனிதன் இழுக்கும் வண்டியாகிய ரிக்ஷாவில் காந்திஜி ஏறுவதே கிடையாது. அச் சமயம் மிஸ்டர் லாப்டனுடைய வற்புறுத்தலுக்காக ஏ ற உத்தேசித்தார். ஆனால் அந்த உத்தேசம் பயனளிக்க வில்லை. கூட்டத்தினர் சிலர் ரிக்ஷா வண்டியைச் சுற்றி நின்று கொண்டு. ரிக்ஷாக்காரனைப் பயமுறுத்தினார்கள். அங்கிருந்து
அவன் ஓடியே போய்விட்டான்.
காந்தியும் மிஸ்டர் லாப்டனும் மேலே நடந்தார்கள். போகப் போகக் கூட்டம் பெருகியது ; கூச்சலும் அதிகமாயிற்று. மேலே ஓர் அடி வைக்கவும் முடியாத நிலைமை ஏற்பட்டது. அப்போது கூட்டத்தில் சிலர் மிஸ்டர் லாப்டனைப் பிடித்து இழுத்து அப்புறம் கொண்டுபோனார்கள். மற்றவர்கள் தன்னந்தனியாக நின்ற காந்திஜியைச் சூழ்ந்து கொண்டார்கள். அந்த ஏழை பங்காளன் மீது கல்லை விட்டெறிந்தார்கள். ஒரு முரடன் அவருடைய தலைப்பாகையைப் பிடுங்கிக் கொண் டான். பிறகு ஜனங்கள் அம் மகானைக் கையாலேயே அடிக்க வும் குத்தவும் தொடங்கினார்கள். காந்திஜியின் உடல் தளர்ந்தது ; தலை சுற்றத் தொடங்கியது. ஆயினும் மன உறுதி மட்டும் குன்றவில்லை. கீழே விழுந்துவிடாதிருக்கும் பொருட்டுப் பக்கத்திலிருந்த வீட்டின் முன்புற வேலிக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டார். அவரைச் சூழ்ந்திருந்த கூட்டம் மேலும் அதிகமாகி நாலாபுறத்திலும் அவரை நெருக்கியது. அவர் மூச்சு விடவும் முடியாத நிலைமை ஏற்பட்டது.
அச்சமயத்தில் கடவுள் அருளால் டர்பன் போலீஸ் சூப்ரின் டெண்டு மிஸ்டர் அலெக்ஸாண்டரின் மனைவி அந்த வழியாகச் சென்றார். அவருக்கு ஏற்கெனவே காந்திஜியைத் தெரியும். கூட்டத்தையும் கூக்குரலையும் பார்த்ததும் என்ன விஷயம் என்று விசாரித்தார். கூட்டத்தின் நடுவில் காந்திஜி அகப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததும், தீரமுள்ள அந்தப் பெண்மணி கூட்டத்திற்குள் துணிந்து புகுந்தார். ஜனங்களை விலக்கிக் கொண்டு காந்திஜியின் அருகில் வந்து சேர்ந்தார். அப்போது வெய்யில் இல்லா விட்டாலும் தம்முடைய கையிலிருந்த குடையை விரித்துப் பிடித்துக்கொண்டார். காந்திஜிக்கும் ஜனக் கூட்டத்துக்கும் மத்தியில் நின்றார். இதனால் ஜனங்கள் காந்திஜியை நெருங்கவோ அடிக்கவோ முடியாமற் போயிற்று. டரீமதி அலெக்ஸாண்டர் மீது அடிபடாமல் காந்திஜியை அடிக்க முடியவில்லை.
இதற்குள் ளே அங்கு நடந்ததை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இந்திய இளைஞன் ஒருவன் போலீஸ் ஸ்டேஷ னுக்கு ஓடினான். அங்கே போலீஸ் சூப்பிரன்டெண்டு மிஸ்டர் அலெக்ஸாண்டர் இருந்தார். அவரிடம் தகவலைச் சொன்னான். மிஸ்டர் அலெக்ஸாண்டர் உடனே சில போலீஸ் ஜவான்களை அனுப்பினார். காந்திஜியை அவருடைய வீட்டில் பத்திரமாய்க் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு வரும்படி அவர்களுக்கு உத்தரவிட்டு அனுப்பினார். போலீஸ் ஜவான்கள் அவ்விதமே சென்று காந்திஜியைச் சுற்றி வளையம்போல் நின்றுகொண்டு ரஸ்டம்ஜியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.
அவர்கள் போகும் வழியிலேயே போலீஸ் ஸ்டேஷன் இருந்தது. ஸ்டேஷன் வாசலில் மிஸ்டர் அலெக்ஸாண்டர் காந்திஜியைச் சந்தித்து ''நீங்கள் இன்றைக்கு இங்கேயே இருந்து விடுவது நலம். போலீஸ் ஸ்டேஷனிலேயே இருந்து விட்டால் உங்களைப் பாதுகாப்பதற்கு நான் ஆயிற்று !'' என்றார். காந்திஜி அவருக்கு நன்றி செலுத்தினார். ஆயினும் உயிருக்குப் பயந்துகொண்டு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுவதற்குக் காந்திஜி விரும்பவில்லை.
''இனிமேல் ஒன்றும் அபாயமிராது. ஜனங்கள் சீக்கிரத்தில் சாந்தமடைந்து விடுவார்கள். அவர்களுடைய குற்றம் அவர்களுக்கே புலப்பட்டுவிடும்!'' என்றார்.
பிறகு போலீஸ் துணையுடன் வழியில் வேறு அபாயம் எ துவுமின் றி ரஸ்டம்ஜியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்.
காந்திஜியின் உடம்பெல்லாம் அடிபட்டதினால் தழும்பேறி யிருந்தது. ஒரிடத்தில் பலமான காயம் ஏற்பட்டிருந்தது. காயத்துக்குச் சிகிச்சை செய்தார்கள். அடிபட்ட தழும்புகளுக்கு ஒத்தடம் கொடுத்தார்கள். நல்லவேளையாக இந்த மட்டோடு போயிற்றே என்று வீட்டில் இருந்தவர்கள் அனை வரும் ஆறுதல் அடைந்தார்கள்.
ஆனால் அந்த மட்டோடு போய்விடவில்லை ! வீட்டைச் சுற்றி வெள்ளைக்காரர்களின் கூட்டம் சேர்ந்துகொண்டிருந்தது. சீக்கிரத்தில் கூட்டம் பெரிதாகிவிட்டது. ''காந்தியை வெளியே அனுப்பு!'' என்ற ஒரு குரல் எழுந்தது. ஒரு குரல் பத்துக் குரலாயிற்று. பத்துக் குரல் நூறு குரலாயிற்று. ''காந்தியை வெளியே அனுப்பு!'' என்ற கோஷம் வானை அளாவிய து. அந்தக் கோஷம் வீட்டுக்குள்ளே இருந்தவர்களின் காதிலும் விழுந்தது. தூரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த மிஸ்டர் அலெக்ஸாண்டர் காதிற்கும் எட்டியது.
மிகத் திறமைசாலியான அலெக்ஸாண்டர் ஓடோடியும் வந்தார். ஜனக்கூட்டத்தை அச்சமயம் பயமுறுத்துவதில் பயனில்லை யென்று கண்டார். அவர்களுடன் தமாஷாகப் பேசிக் குஷிப்படுத்தத் தொடங்கினார். இதன் மூலமாக அவர்கள் அத்துமீறி வீட்டுக்குள் புகாமலும் வேறு தீய செயல்களில் இறங்காமலும் பார்த்துக்கொண்டார்.
ஆனால் இம்மாதிரி எத்தனை நேரம் சமாளிக்க முடியும்? ஜனங்கள் கலைந்து போகிற வழியாகக் காணவில்லை.
மிஸ்டர் அலெக்ஸாண்டர் யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தார். வீட்டின் பின்புற வழியாக ஒரு ஆளை அனுப்பிக் காந்திஜியிடம் ஒரு செய்தி சொல்லும்படி செய்தார். அந்தச் செய்தி இதுதான் :- “உங்கள் நண்பரின் வீட்டையும் வீட்டிலுள்ள உடைமைகளையும் உங்கள் குடும்பத்தாரையும் நண்பரின் குடும்பத்தாரையும் காப்பாற்ற விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் உடனே மாறுவேடம் பூண்டு இந்த வீட்டைவிட்டுத் தப்பிச் செல்வது அவசியம். இதைத் தவிர இந்தச் சமயத்தில் வேறு வழியே இல்லை ! ''
இந்தச் செய்தியைக் கேட்டதும் காந்திஜியின் மனத்தில் ஒரு போராட்டம் எழுந்தது. வெளியே போவதா இல்லையா என்பதுபற்றித்தான். கடைசியில் அலெக்ஸாண்டரின் யோசனைப்படி நடக்க முடிவு செய்தார். அதைக் குறித்து காந்திஜி தம் சுயசரிதத்தில் எழுதியிருப்பதாவது:-
''உயிருக்கு அபாயம் நேரிடலாமென்பது வெறும் உத்தேசமாக மட்டுமிருந்தபோது மிஸ்டர் லாப்டன் என்னைப் பகிரங்கமாக வெளிக் கிளம்பும்படி சொன்னார். அவருடைய யோசனையை நான் ஏற்றுக்கொண்டு நடந்தேன். அபாயம் நிச்சயம் என்னும் நிலைமை ஏற்பட்டபோது மற்றொரு நண்பர் நேர்மாறான யோசனைக் கூறினார். அதையும் நான் ஏற்று நடந்தேன். என் உயிருக்கு அபாயம் வரலாம் என்பதை முன்னிட்டே அப்படிச் செய்தேனோ, அல்லது என் நண்பரின் சொத்தையும் சொந்தக்காரர்களையும் காப்பாற்றுவதின் பொருட்டா, அல்லது என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அபாயம் நேரிடாதிருக்கும் பொருட்டா என்று யார் கூற முடியும்? முதலிலே ஜனக்கூட்டத்தை நான் தைரியமாக எதிர்த்ததும், பின்னர் மாறுவேடம் பூண்டு அக் கூட்டத்தினின்று தப்பியோடியதும் இரண்டும் சரியானவை யென்று யார் நிச்சயமாகச் சொல்லமுடியும்?''
காந்திஜி தப்பித்துச் செல்வது என்று முடிவு செய்ததும் அது சம்பந்தமான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தினார். உடம்பின் காயம், வலியெல்லாம் அந்தப் பிரயத்தனத்தில் மறந்து போய்விட்டன. இந்தியப் போலீஸ் சேவகனைப்போல் உடை தரித்துக்கொண்டார். நமது சென்னை மாகாணத்தில் வழங்கும் அங்கவஸ்திரம் ஒன்றை ஒரு தட்டின் மீது சுற்றி அதைத் தலைக்குக் கவசமாக அணிந்துகொண்டார். (மதராஸ் அங்க வஸ்திரத்தின் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம் ! அது மகாத்மா காந்தியின் தலையின் மேல் அவருக்குப் பாதுகாப்பாக விளங்கிய தல்லவா?) அலெக்ஸாண்டரின் திட்டப்படி இரகசியப் போலீஸைச் சேர்ந்த இருவர் காந்திஜியை வெளியில் பத்திரமாக அழைத்துப் போவதற்காக வீட்டுக்குள் வந்தார்கள். அவர்கள் முகத்துக்கு வர்ணம் பூசிக்கொண்டு இந்திய வியாபாரிகளைப் போல் வேஷம் தரித்திருந்தார்கள்.
வீட்டுக்குப் பக்கத்திலிருந்த குறுக்குச் சந்தில் வெளியேறி ஒரு சாமான் கிடங்கில் புகுந்து சாக்கு மூட்டைகளின் வழியாக இருட்டில் தட்டுத் தடுமாறிக் கடைசியில் வீதிக்கு வந்து சேர்ந்தார்கள். அந்தக் கிடங்கின் வாசலிலேயும் ஜனக்கூட்டம் நிறைந்திருந்தது. ஆனால் கிடங்கிலிருந்து வெளிவந்தவர்களில் காந்திஜி இருப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அனைவருடைய கவனமும் ரஸ்டம்ஜியின் வீட்டு வாசலிலேயே இருந்தது. அங்கே மிஸ்டர் அலெக்ஸாண்டர் உயரமான ஒரு படிக்கட்டில் நின்று கொண்டு ஜனக்கூட்டத்தோடு தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தார். சமய சந்தர்ப்பத்துக்கேற்ப அவர் ஒரு பாடல் இட்டுக் கட்டி அதைப் பாடியும் காட்டினார்.
''புளிப்பு இலந்தை மரத்தின்மீது
பொல்லாத காந்தியைத் தூக்குப்போடு!''
என்பது அந்தப் பாட்டின் பல்லவி. இதை மிஸ்டர் அலெக்ஸாண்டர் முறை வைத்துப் பாட, ஜனக் கூட்டமும் அவருடன் சேர்ந்து உற்சாகமாகப் பாடியது !
ஜனங்களின் கவனத்தை இவ்விதம் மிஸ்டர் அலெக்ஸாண்டர் கவர்ந்திருக்கையில், காந்திஜியும் இரகசியப் போலீஸ் துணைவர்களும் அக் கூட்டத்தின் வழியாகப் புகுந்து சென்று தெருக் கோடியில் தயாராய் நின்ற வண்டியில் ஏறிப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
காந்திஜி பத்திரமாய் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தார் என்ற செய்தி வந்த தும் மிஸ்டர் அலெக்ஸாண்டரின் குரல் மாறியது. ''நல்லது. பறவை கூட்டிலிருந்து தப்பி ஓடி விட்டது! நீங்கள் யாருக்காக இங்கே வந்து காத்திருக்கிறீர்களோ அவர் இந்த வீட்டில் இல்லை. இனிமேல் உங்களுடைய வீட்டுக்குத் திரும்பிப் போகலாம்!'' என்று அங்கே கூடியிருந்தவர்களைப் பார்த்து உரத்த குரலில் கூறினார்.
கூட்டத்தில் சிலர் அவர் மேல் கோபங் கொண்டார்கள், சிலர் அவருடைய வார்த்தையை நம்பாமல் சிரித்தார்கள்.
''நல்லது ; உங்களுக்கு என் பேச்சில் நம்பிக்கை இல்லா விட்டால் உங்களுடைய பிரதிநிதிகளாக இரண்டு பேரை நியமனம் செய்யுங்கள். அவர்களை நானே வீட்டுக்குள் அழைத்துப் போகிறேன். காந்தியை அவர்கள் கண்டுபிடித்து விட்டால் உங்களிடம் அவரை ஒப்படைத்து விடுகிறேன். காந்தி இந்த வீட்டில் இல்லையென்று நிச்சயமானால் நீங்கள் எல்லாரும் திரும்பிப் போய் விடவேண்டும். ரஸ்டம்ஜியின் வீட்டுக்கோ காந்தியின் குடும்பத்தாருக்கோ நீங்கள் தீங்கு செய்ய விரும்ப வில்லையல்லவா? அவர்கள் மீது நீங்கள் கோபம் கொள்ளக் காரணம் ஒன்றும் இல்லையே '' என்று சொன்னார் மிஸ்டர் அலெக்ஸாண்டர்.
ஜனங்கள் அலெக்ஸாண்டர் கூறிய யோசனைக்கு இணங்கினர், ரஸ்டம்ஜியின் வீட்டைச் சோதனை போடப் பிரதிநிதிகள் பொறுக்கப் பட்டார்கள். மிஸ்டர் அலெக்ஸாண்டர் அவர்களை அழைத்துக்கொண்டு போனார். வீட்டின் மூலை முடுக்கெல்லாம் அவர்கள் சோதனை போட்டுவிட்டு வந்து ''காந்தி இல்லை!'' என்று தெரிவித்தார்கள். கூட்டத்தில் பெரும்பாலோர் மிஸ்டர் அலெக்ஸாண்டரின் சாமர்த்தியத்தைப் பாராட்டிப் பேசிக் கொண்டு வீடு திரும்பினார்கள். ஒருசிலர் கோபத்தினால் குமுறிக் கொண்டும் திரும்பிச் சென்றார்கள்.
தம்பி! உலகத்தையும் மானிடரின் வாழ்க்கையையும் இயக்கிவரும் நியதி ஒன்று இருப்பதாகப் பெரியோர் கூறு கிறார்கள். அதைத் தெய்வ சித்தம் என்றும் கடவுளின் கருணை என்றும் பெயர் கொடுத்து அழைக்கிறார்கள். அத்தகைய தெய்வ சித்தத்தின் நியதியினாலேயே தான் முதலில் மிஸ்ஸஸ் அலெக்ஸாண்டரும் பின்னர் மிஸ்டர் அலெக்ஸாண்டரும் காந்திஜியைக் காப்பாற்றும் விஷயத்தில் அவ்வளவு சிரத்தை கொண்டிருக்க வேண்டும். அவர்கள் ''நமக்கென்ன வந்தது?'' என்று அலட்சியமாக விட்டிருந்தால், அன்றைய தினம் காந்தியின் உயிருக்கு அபாயம் நேர்ந்திருந்தால் - ஆகா ! இந்த மானிலமும் மன்னுயிரும் இந்தியாவும் இந்தியர்களும் எவ்வளவு மகத்தான நஷ்டத்தை அடைந்திருப்பார்கள்?
-------------
30. வழக்கு வேண்டாம்
சமீபத்தில் நடந்த மகா யுத்தத்தின் ஆரம்பத்தில் மிஸ்டர் நெவில்லி சேம்பர்லின் என்பவர் பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்தாரல்லவா? இவருடைய தந்தை மிஸ்டர் ஜோஸப் சேம்பர்லின் என்பவர் அப்போது பிரிட்டிஷ் மந்திரி சபையில் குடியேற்ற நாட்டு மந்திரியாகப் பதவி வகித்தார். டர்பனில் காந்திஜி இறங்கிய அன்று நடந்த சம்பவங்களைக் கேள்விப் பட்டதும் அவர், ''காந்தியைத் தாக்கியவர்களைக் கைது செய்து அவர்கள் மீது வழக்கு நடத்தவும்'' என்று நேட்டால் சர்க்காருக்குத் தந்தி அடித்தார்.
உடனே நேட்டால் சர்க்காரின் அட்டர்னி ஜெனரலான மிஸ்டர் எஸ்கோம்ப், காந்திஜியைக் கூப்பிட்டு அனுப்பினார். காந்திஜிக்கு நேர்ந்த கஷ்டங்களுக்காகத் தமது வருத்தத்தை யும் அநுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார். பிறகு அவர் கூறியதாவது:- 'கப்பலிலிருந்து இரவு நேரத்தில் இறங்கும்படி நான் சொல்லி அனுப்பினேன். அதைக் கேட்டு நடந்திருந்தால் இந்தக் கஷ்டங்கள் நேர்ந்திரா. ஆனால் மிஸ்டர் லாப்டனுடைய யோசனைப்படி நடந்து அதனால் நேரும் கஷ்டங்களை அநுபவிக்க உறுதி கொண்டிருந்ததை நான் பாராட்டுகிறேன். அம்மாதிரி நடந்து கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு என்பதையும் ஒத்துக் கொள்கிறேன். இப்போது உங்கள் விருப்பம் என்ன? உங்களைத் தாக்கியவர்களைக் குறித்து அடையாளம் சொல்ல முடியுமானால் அவர்களைக் கைது செய்து வழக்கு நடத்தத் தயாரா யிருக்கிறேன். வழக்கு நடத்த வேண்டும் என்று மிஸ் டர் சேம்பர்லினிடமிருந்து தந்தி வந்திருக்கிறது.''
இதற்குக் காந்திஜி பின்வருமாறு பதில் அளித்தார் : ''யார் மீதும் வழக்கு நடத்த எனக்கு விருப்பம் இல்லை. இரண்டொரு மனிதர்களை நான் அடையாளங் கண்டுபிடித்துச் சொல்ல முடியும். அதனால் பயன் என்ன? அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதில் எனக்குத் திருப்தி கிடை யாது. என்னைத் தாக்கியவர்கள் மீது எனக்குக் கோபம். இல்லை; அவர்கள் மீது நான் குற்றம் சொல்லவும் மாட்டேன் - குற்றம் உங்களைப் போன்ற சமூகத் தலைவர்களுடையது. நீங்கள் ஜனங்களுக்குச் சரியான வழி காட்டி யிருக்கவேண்டும். அப்படிச் செய்ய நீங்கள் தவறி விட்டீர்கள். யாருக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்க நான் விரும்பவில்லை. இந்தியாவில் நான் இருந்தபோது நேட்டால் வெள்ளைக்காரர்கள் மீது ஏதோ அவதூறுப் பிரசாரம் செய்ததாக நம்பி அவர்கள் இம்மாதிரி நடந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையை உணரும்போது,
அவர்களே தங்களுடைய செயலுக்காக வருந்துவார்கள்.''
இதைக் கேட்டதும் மிஸ்டர் எஸ்கோம்புக்கு ஒரே வியப்பாய்ப் போய்விட்டது. காந்திஜியிடம் அவருக்கு ஏற்கெனவே இருந்த மதிப்பு இன்னும் உயர்ந்தது.
''இப்போது நீங்கள் சொன்னதை எழுத்து மூலமாக எழுதித் தருவீர்களா? ஏனெனில் தங்களுடைய விருப்பம் இது வென்று மிஸ்டர் சேம்பர்லினுக்கு நான் அறிவித்து விடவேண் டும். ஆனால் அவசரப்பட்டு நீங்கள் எழுதிக் கொடுக்கவேண்டாம். திரும்பிச் சென்று மிஸ்டர் லாப்டனையும் இன்னும் உங்களுடைய நண்பர்களையும் கலந்து கொண்டு முடிவு செய்யலாம். முடிவு செய்த பிறகு எனக்கு எழுதித் தெரிவித்தால் போதும். ஆனால் ஒரு விஷயம் நிச்சயமாகச் சொல்வேன். இப்போது நீங்கள் சொன்னதுபோல் உங்களைத் தாக்கியவர்கள் மீது வழக்குத் தொடராமல் விட்டீர்களானால், நேட்டாலில் அமைதியை நிலை நாட்டுவதற்குப் பெரிதும் உதவியாயிருக்கும் ! '' என்று மிஸ்டர் எஸ்கோம்ப் சொன்னார்.
''வந்தனம் ! ஆனால் இது விஷயமாக நான் யாரையும் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை. தங்களிடம் வருவதற்கு முன்னாலேயே இதைப்பற்றி நன்றாக ஆலோசித்து முடிவு செய்து விட்டேன். இந்த நிமிஷமே தாங்கள் கேட்ட படி எழுதிக் கொடுக்கத் தயாராயிருக்கிறேன் " என்றார் காந்திஜி.
ஆம்; காந்திஜி கப்பலை விட்டு இறங்குவதற்கு முன்னாலேயே கப்பல் உத்தியோகஸ்தர்களிடம் சம்பாஷிக்கும்போது, ”எனக்கு வெள்ளைக்காரர்கள் மீது தனிப்படக் கோபம் கிடையாது. அவர்கள் எனக்குத் தீங்கு செய்தாலும் நான் அவர்களுக்குத் திருப்பித் தீங்கு செய்ய முயலமாட்டேன்'' என்று சொல்லி யிருந்தார் அல்லவா?
அந்த வார்த்தையை இப்போது நிறைவேற்றினார். மிஸ்டர் எஸ்கோம்ப் கேட்டபடி, ''வழக்குத் தொடர வேண்டிய தில்லை '' என்று வாக்குமூலம் எழுதிக் கொடுத்தார்.
* * *
காந்திஜி போலீஸ் ஸ்டேஷனை விட்டு வீட்டுக்குச் சென்ற போது மிஸ்டர் அலெக்ஸாண்டர் இரண்டு போலீஸ் சேவகர்களை அவருடைய பாதுகாப்புக்காக அனுப்பிவைத்தார். ஆனால் வெகு சீக்கிரத்திலேயே போலீஸ் பாதுகாப்புத் தேவையில்லாத நிலைமை ஏற்பட்டு விட்டது.
'நேட்டால் அட்வர்டைஸர் ' என்னும் பத்திரிகையின் பிரதிநிதி காந்திஜியைப் பார்க்க வந்தார். இந்தியாவில் காந்திஜி செய்த காரியங்களைப் பற்றியும் பேசிய பேச்சுக்களைப் பற்றியும் பல கேள்விகள் கேட்டார். ஸர் பிரோஸிஷா மேத்தாவின் யோசனைப்படி காந்திஜி இந்தியாவில் எல்லா இடங்களிலும் தமது பிரசங்கங்களை எழுதிப் படித்திருந்தார். அவ்விதம் செய் தது இப்போதும் மிகவும் உபயோகமா யிருந்தது. தமது பேச் சுக்களின் நகல்களைக் காந்திஜி மேற்படி பத்திரிகைப் பிரதிநிதி யிடம் கொடுத்து, ''இந்தியாவில் என் பேச்சுக்களில் எதைப் பற்றியாவது மிகைப்படுத்திச் சொல்லி யிருக்கிறேனா, தென்னாப்பிரிக்காவில் பகிரங்கமாகச் சொல்லாத எந்த விஷயத்தையாவது இந்தியாவில் சொல்லியிருக்கிறேனா,-நீரே பார்த்துக் கொள்ளும் !'' என்றார். பிரசங்கங்களின் நகல்கள், துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரைகள் ஆகிய வற்றையும் மேற்படி பத்திரிகைப் பிரதிநிதியிடம் கொடுத்தார். அவற்றில் தென்னாப்பிரிக்கா வெள்ளைக்காரரைப்பற்றிக் கடுமையாகவோ அவதூறாகவோ ஒரு வார்த்தையும் இல்லை என்று பத்திரிகைப் பிரதிநிதி தெரிந்து கொண்டார். மற்றும், 'கோர் லாண்டு', 'நாடேரி ' கப்பல்களில் வந்த பிரயாணிகளைத் தாம் திரட்டிச் சேர்த்துக் கொண்டு வரவில்லை யென்றும், கப்பல் ஏறுவதற்கு முன்னால் அவர்களைத் தமக்குத் தெரியவே தெரியாது என்றும் ஆதாரங்களுடன் நிரூபித்தார். மேற்படி கப்பல்களில் வந்தவர்களில் பலர் ஏற்கெனவே தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர்கள், தாய் நாட்டுக்குச் சென்று திரும்புகிறவர்கள் என்றும், இன்னும் பலர் நேட்டாலில் குடியேறும் உத்தேசம் இல்லாதவர்கள், டிரான்ஸ்வாலுக்குப் போகிறவர்கள் என்றும் எடுத்துக் காட்டினார்.
இந்த விவரங்களை யெல்லாம் மேற்படி பத்திரிகைப் பிரதிநிதி தம்முடைய பத்திரிகையில் வெளியிட்டார். இத்துடன், காந்திஜி தம்மைத் தாக்கியவர்கள் மீது வழக்குத் தொடர மறுத்து விட்டார் என்னும் செய்தியும் பிரசுரமாயிற்று. இந்த விவரங்களினால் டர்பன் ஐரோப்பியரின் மனோபாவம் மாறிவிட் டது. அவர்கள் தங்களுடைய நடத்தையைக் குறித்து அவமானப் படலாயினர். பல பத்திரிகைகள் காந்திஜி குற்றமற்றவர் என்று தீர்ப்புக் கூறி ஜனக் கூட்டத்தின் செயலைக் கண்டித்தன. இவ்வாறு டர்பன் வெள்ளைக்காரர்களின் பலாத்காரமும் காந்தி ஜியின் அஹிம்சையும் தென்னாப்பிரிக்கா இந்திய சமூகத்துக்கு ஒரு புதிய கெளரவத்தை அளித்தன. இந்தியர்களின் உரிமைப் போராட்டத்துக்கும் அதனால் சாதகம் ஏற்பட்டது. இந்தியர்களும் அதிகத் தன்மதிப்பு உணர்ச்சி பெற்றார்கள்.
-------------
31. எளிய வாழ்க்கை
காந்திஜி கப்பலிலிருந்து இறங்கிய அன்று நடந்த விபரீத சம்பவங்களின் கொந்தளிப்பு விரைவிலேயே அடங்கிவிட் டது. சில தினங்களுக் கெல்லாம் அவருடைய தினசரி வாழ்க்கை பழைய ரீதிக்கு வந்தது. வக்கீல் தொழிலில் வருமானம் மட்டும் அதிகம் வரத் தொடங்கியது. ஆனால் அதைக் காந்திஜி அதிகமாகப் பொருட்படுத்தவில்லை. தம் வாழ்க்கையைப் பொது ஊழியத்துக்கு மேலும் மேலும் அதிகமாக உபயோகப்படுத்த வேண்டும் என்னும் ஆசை அவர் உள்ளத்தில் வளர்ந்து வந்தது. பொது வேலையில் ஸ்ரீ மனுசுக்லல் நாஸார் காந்திஜிக்குப் பெரிதும் உதவி செய்தார்.
காந்திஜி இல்லாத சமயத்தில் சேத் ஆதம்ஜி மியாகான் தமது கடமையை நன்கு நிறைவேற்றி யிருந்தார். நேட்டால் இந்தியக் காங்கிரஸுக்கு ஆயிரம் பவுனுக்கு மேல் நிதி சேர்த்திருந்தார். காந்திஜி திரும்பி வந்த தினத்தில் நடந்த சம்பவத்தின் பயனாக இந்திய சமூகத்தினிடையே பெரிதும் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தபடியால் அதைப் பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் நிதியை 5000 பவுனாகப் பெருக்கினார். இதைக் கொண்டு ஒரு வீடு வாங்கி வாடகைக்கு விடப்பட்டது. இவ்விதமாக நேட் டால் இந்தியக் காங்கிரசுக்கு நிரந்தர சொத்து ஏற்பட்டது.
இம்மாதிரி பொது ஸ்தாபனங்களுக்கு நிரந்தர சொத்து அதிகம் சேர்த்து வைப்பது பிசகு என்பது காந்திஜி பிற்காலத்தில் கொண்ட உறுதியான அபிப்பிராயம். காந்திஜி தென்னாப் பிரிக்காவை ஒருவழியாக விட்டு விட்டு இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு நேட்டால் காங்கிரஸின் சொத்து கோர்ட்டில் வழக்கு நடப்பதற்குக் காரணமாயிற்று. இதுவும் இன்னும் பல பொது ஸ்தாபன அநுபவங்களும் காந்திஜியின் மனத்தில், “நிரந்தர நிதிகளைக் கொண்டு பொது ஸ்தாபனங்களை நடத்துதல் பெருந் தவறு '' என்ற அபிப்பிராயத்தை உறுதிப் படுத்தியது. இதைப்பற்றிக் காந்திஜி எழுதியிருப்பதாவது:-
''ஒரு பொது ஸ்தாபனத்தின் நிரந்தர நிதியிலேயே அதன் தார்மிக வீழ்ச்சிக்கு வித்து இருக்கிறதென்பதில் ஐயமில்லை. பொது ஸ்தாபனம் எனில், பொது ஜனங்களின் சம்மதியுடன் பொது ஜனங்களின் பணத்தைக் கொண்டு நடக்கும் அமைப்பு என்று பொருள். அத்தகைய ஸ்தாபனத்துக்குப் பொது ஜனங்களின் ஆதரவு எப்போது இல்லாமற் போகிறதோ, அப்போது அந்த ஸ்தாபனம் இருப்பதற்கே உரிமை இழந்ததாகிறது. நிரந்தர நிதியைக் கொண்டு நடத்தப்படும் அமைப்புகள் பொது ஜன அபிப்பிராயத்தை மதியாமல் அதற்கு மாறாக அடிக்கடி காரியம் நடத்துவதைக் காண்கிறோம். நமது தேசத்தில் எங்கும் இது சர்வ சாதாரணம். மத ஸ்தாபனங்கள் என்று கூறப் படும் அமைப்புகளில் சில கணக்குச் சொல்வதே கிடையாது. தர்மகர்த்தர்கள் சொத்துக்குச் சொந்தக்காரர்களாகி விட்டார்கள். அவர்கள் யாருக்கும் கணக்குச் சொல்லக் கடமைப் பட்டவர்களல்லர். இதையெல்லாம் பார்க்கும்போது, அன்றன்று வரும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதே பொது ஸ்தாபனங்களின் இலட்சியமாயிருக்க வேண்டுமென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்.
''நிரந்தரமான கட்டிடங்கள் இன்றி நடைபெறுவதே சாத்தியமில்லாத ஸ்தாபனங்கள் சில இருக்கின்றன. அவற்றிற்கு நான் மேற்கூறியவை பொருந்தா. பொது ஸ்தாபனங்களின் நடைமுதல் செலவுகள் வருஷா வருஷம் கிடைக்கும் சந்தாத் தொகையைக் கொண்டே நடைபெற வேண்டு மென்பது தான் என்னுடைய கருத்து.''
ஒரு பக்கம் பொது ஊழியத்தில் காந்திஜி ஈடுபட்டிருக்கையில் அவருடைய குடும்ப வாழ்க்கை சம்பந்தமான பல பிரச்னைகள் எழுந்தன. பத்து வயதான மருமகனும், ஒன்பது வயதும் ஐந்து வயதும் உள்ள புதல்வர்கள் இருவரும் அவருடன் வந்திருந்தார்கள். இந்த மூன்று சிறுவர்களையும் படிக்க வைப்பது. எப்படி? காந்திஜி பாரிஸ்டர் ஆகையால், ஐரோப்பியக் குழந்தைகளுக்கு என்று ஏற்பட்ட பள்ளிக்கூடங்களில் அவருடைய குழந்தைகளைச் சேர்த்துக் கொண்டிருப்பார்கள். அதை அவர் விரும்பவில்லை. இந்தியக் குழந்தைகளுக்கு என்று தனியாகக் கிறிஸ்துவப் பாதிரிமார்கள் நடத்திய பள்ளிக்கூடத்தில் சேர்க்கவும் விரும்ப வில்லை. ஆதலால் குழந்தைகளுக்குக் காந்திஜியே கல்வி கற்பிக்க முயன்றார். ஆனால் அதற்குப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை. எனவே, ஆங்கில பாஷை கற்பிப்பதற்கு ஓர் ஆங்கில உபாத்தியாயினியை ஏற்படுத்திவிட்டு மற்ற விஷயங்களைத் தாமே கற்பித்தார். காந்திஜி தம்முடைய குழந்தைகள் யாரையும் தென்னாப்பிரிக்காவிலோ இந்தியாவிலோ பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பவே யில்லை. அவருடைய மூத்த புதல்வன் பிற்காலத்தில் தன்னுடைய சொந்தப் பொறுப்பில் இந்தியாவிலுள்ள சர்க்கார் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தான், மற்ற மூன்று புதல்வர்களும் காந்திஜியிடமே பெரும்பாலும் கல்வி கற்றுக் கொண்டார்கள். தம்முடைய புதல்வர்களுக்குக் கல்வி கற்பித்ததிலும் பின்னால் ஏற்பட்ட போனிக்ஸ் ஆசிரமத்தில் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்ததி லும் காந்திஜி பல அநுபவங்களை அடைந்தார். இவற்றைக் கொண்டு இந்தியக் குழந்தைகளுக்கு எந்த முறையில் கல்வி கற்பிக்க வேண்டும் என்பது பற்றி அவர் உறுதியான முடிவுகள் செய்யக் கூடியதாயிற்று. அந்த வாழ்க்கை அநுபவங்களும் முடிவுகளும் காந்திஜியின் ஆதாரக் கல்வித் திட்டத்துக்கு ஒரு நல்ல ஆதாரமா யமைந்தன.
* * *
வக்கீல் தொழிலிலும் குடும்பப் பிரச்னைகளிலும் காந்திஜிக்கு வேண்டிய அலுவல்கள் இருந்தும் அவருடைய மனம் நிம்மதி யடையவில்லை. சகோதர மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டு மென் னும் ஆர்வம் அவருடைய உள்ளத்தில் வளர்ந்து வந்தது. ஒரு நாள் ஒரு குஷ்டரோகி காந்திஜியின் வீட்டுக்குப் பிச்சை கேட்க வந்தான். அவன் ஒப்பந்தத் தொழிலாளியாக வந்து மேற்படி கொடிய நோய் காரணமாக வேலை இழந்து நிர்க்கதியானவன். அவனுக்குப் பிச்சை போட்டுத் துரத்தி விடக் காந்திஜி விரும்பவில்லை. வீட்டில் சில நாள் இருக்கும்படிச் சொல்லி அவனுடைய புண்களை அலம்பிக் கட்டிச் சிகிச்சை செய்தார். வீட்டிலேயே அவனை வைத்துக் கொண்டிருத்தல் மற்றவர்களுக்குத் தொல்லையா யிருந்தது. எனவே கொஞ்சம் உடம்பு குணமானதும் ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கென் று ஏற்பட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.
அது முதல் நோயாளிக்குப் பணிவிடை செய்யும் ஆர்வம் காந்திஜியின் மனத்தில் வளர்ந்து வந்தது. பார்ஸி ரஸ்டம்ஜி தர்மத்துக் கென்று கொஞ்சம் சொத்து ஒதுக்கி வைத்தார். அதைக் கொண்டு காந்திஜி ஏழைகளுக்காகத் தர்ம வைத்திய சாலை ஒன்று ஏற்படுத்தினார். ஏழைகளுக்கு உதவி செய்வதில் பற்றுக் கொண்ட டாக்டர் பூத் மேற்படி வைத்தியசாலையைக் கவனித்துக் கொண்டார். அந்த வைத்தியசாலையில் காந்திஜி தினம் இரண்டு மணி நேரம் வேலை செய்தார். நோயாளிகளிடம் பேசி அவர்களுடைய நோய்களைத் தெரிந்து கொண்டு டாக்டர் பூத்திடம் சொல்லி அவர் எழுதிக்கொடுக்கும் முறைப் படி மருந்துகளைக் கலந்து கொடுத்து வந்தார். சுருங்கச்சொன்னால், 'கம்பவுண்டர்' வேலை பார்த்தார். இந்தத் தொண்டு காந்திஜிக்கு மிக்க மன நிம்மதி அளித்தது. அதோடு ஏழை இந்தியர்களுடன் கலந்து நெருங்கிப் பழகுவதற்குச் சந்தர்ப்பங்கள் அதிகம் கிடைத்தன.
ஆரம்பத்தில் காந்திஜி தென்னாப்பிரிக்காவில் மேனாட்டு முறையில் நாகரிக வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தார். தொண்டில் பற்று அதிகமாக ஆக ஆடம்பரத்தில் வெறுப்பு மிகுந்தது. வாழ்க்கையை எளிமைப்படுத்த ஆரம்பித்தார். வண்ணானிடம் துணிகளைச் சலவைக்குப் போடுவ தில் பணம் அதிகச் செலவானதுடன் சமயத்தில் துணிகள் வருவதில்லை யாதலால் டஜன் கணக்கில் சட்டைகளும் காலர்களும் தேவையாயிருந்தன. எனவே சலவைச் சாமான்களும் இஸ்திரிப்பெட்டியும் வாங்கி வைத்துக்கொண்டு காந்திஜி தாமே துணிகளை வெளுத்துக் கொள்ளத் தொடங்கினார். முதன் முதலில் சலவை சரியாக வரவில்லை. கழுத்துப் பட்டைக்கு இஸ்திரி போட்டதில் பசை மாவு அதில் அதிகமாக ஒட்டிக் கொண்டு கோர்ட்டுக்குப் போன பிறகு உதிர்ந்து வீழ ஆரம்பித்தது. மற்ற பாரிஸ்டர்கள் இதன் பொருட்டுக் காந்திஜியைப் பார்த்துச் சிரித்தார்கள். ஆனால் கேலிக்கும் பரிகாசத் துக்கும் பயப்படும் சுபாவம் காந்திஜிக்கு எப்போதுமே கிடையாது. சிரித்தவர்களைப் பார்த்து, ''என் காலரை நானே சலவை செய்து இஸ்திரி போட்டதில் இப்படி மா உதிர்கிறது. அது உங்களுடைய குதூகலத்துக்குக் காரணமாயிருப்பதில் எனக்கு இரு மடங்கு சந்தோஷம் '' என்றார் காந்திஜி.
''எதற்காக நீங்களே சலவை செய்து கொள்ள வேண்டும்? இந்த ஊரில் சலவைச் சாலை இல்லையா? '' என்று காந்திஜியின் பாரிஸ்டர் நண்பர்கள் கேட்டார்கள்.
''இருக்கின் றன! அதனால் என்ன? நம்முடைய சொந்தக் காரியங்களுக்கு எதற்காகப் பிறரை நம்பி யிருக்கவேண்டும்? நம்முடைய காரியங்களை நாமே செய்து கொள்வதுதானே நல்லது? '' என்று காந்திஜி பதில் அளித்தார்.
கொஞ்ச நாளைக்கெல்லாம் காந்திஜி சலவைக் கலையில் நன்கு தேர்ந்து விட்டார். பின்னால் ஒருசமயம் ஸ்ரீ கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு விஜயம் செய்தார். கோகலேயிடம் அவருடைய குரு ஸ்ரீ ரானடே அன்பளிப்பாகக் கொடுத்த அங்கவஸ்திரம் ஒன்று இருந்தது. முக்கியமான சந்தர்ப்பங்களில் ஸ்ரீ ரானடே அளித்த அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொள்வது ஸ்ரீ கோகலே யின் வழக்கம். தென்னாப்பிரிக்காவில் ஜோகானிஸ்பர்க் இந்தியர்கள் கோகலேக்கு ஒரு விருந்து நடத் தினார்கள். அதற்கு மேற்படி அங்க வஸ்திரத்தை அணிந்து கொண்டுபோகக் கோகலே விரும்பினார். ஆனால் அங்கவஸ்திரம் மடிப்புக் கலைந்து போயிருந்தது. இது குறித்துக் கோகலே அடைந்த கவலையைக் காந்திஜி தெரிந்துகொண்டு தம்முடைய கைவரிசையைக் காட்டுவதாகச் சொன்னார்.
'' அரசியல் காரியங்களுக்கும் வக்கீல் வேலைக்கும் உம்மை நம்பலாம். ஆனால் சலவைத் தொழிலுக்கு எப்படி நம்ப முடியும்? அங்கவஸ்திரத்தைக் குட்டிச் சுவராக்கி விட்டால் என்ன செய்வேன்? '' என்றார் கோகலே.
காந்திஜி மேலும் பிடிவாதம் பிடித்து அங்கவஸ்திரத்தை வாங்கிக் கொண்டார். சலவைத் தொழிலாளியைவிட நன்றாய் இஸ்திரி செய்திருப்பதாகக் கோகலே மகிழ்ச்சியுடன் அத்தாட்சி கொடுத்தார்.
சலவைத் தொழிலைப்போலவே தலைமயிர் வெட்டிக் கொள் ளும் வேலையையும் காந்திஜி கற்றுக் கொண்டார் முதலில் இந்தக் காரியமும் காந்திஜியை அவருடைய சகாக்களின் நகைப்புக்கு உள்ளாயிற்று. '' உமது மயிருக்கு என்ன ஆபத்து வந்தது? எலி கடித்து விட்டதா? '' என்று நண்பர்கள் சிரித்துக் கொண்டே கேட்டார்கள். ஆனால் கொஞ்ச நாளைக் குள் தலை மயிரைத் தாமே வெட்டிக் கொள்வதிலும் காந்திஜி நல்ல திறமை அடைந்தார்.
தம்பி! இதெல்லாம் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சலவைத் தொழில், கூவரத் தொழில் உள்பட அறுபத்து நாலு கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் என்னும் விவரத்தை நினைப் பூட்டுகிற தல்லவா?
--------------
32. போயர் யுத்தம்
தென்னாப்பிரிக்காவில் 1899-ஆம் ஆண்டில் போயர் யுத்தம் ஆரம்பமாயிற்று. ஹாலந்து தேசத்திலிருந்து தென்னாப்பிரிக்காவில் போய்க் குடியேறியவர்கள் 'போயர்கள்' என்று அழைக்கப் பட்டார்கள். முதலில் இவர்கள் நேட்டாலில் அதிகமாகக் குடியேறி யிருந்தார்கள். நேட்டால் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தபிறகு போயர்களில் பெரும்பாலோர் உள்நாடு நோக்கிச் சென்று டிரான்ஸ்வால் ராஜ்யத்தை ஸ்தாபித்துக் கொண்டார்கள். கொஞ்ச காலம் டிரான்ஸ்வால் ஏறக்குறைய சுதந்திர ரரஜ்யமாக இருந்து வந்தது. அப்போது தான் குரூகர் என்னும் போயர்ப் பிரமுகர் டிரான்ஸ்வால் குடியரசின் தலைவராக இருந்தார். குடியரசு என்று பெயர் இருந்தாலும் ஓரளவு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் தொடர்பு இருந்தது. ஆனால் டிரான்ஸ்வால் மீது பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஸ்திரப் படுத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் சர்க்கார் முயன்றபோது போயர்கள் அம்முயற்சியை எதிர்த்தார்கள், அதன் விளைவாகவே போயர் யுத்தம் மூண்டது.
இந்த யுத்தத்தில் தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்கள் என்ன கொள்கையை அனுசரிக்க வேண்டும் என்ற பிரச்னை எழுந்தது. காந்தி மகான் இது விஷயமாக ரொம்பவும் சிந்தனை செய்தார். அந்த நாளில் பிரிட்டிஷ் ஆட்சியின் நல்ல நோக்கத்தில் மகாத்மாவுக்கு நம்பிக்கை இருந்தது. உலகத்தின் முன்னேற்றத்துக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உதவி செய்கிறது என்று எண்ணினார். இந்தியாவிலும் தென்னாப்பிரிக்காவிலும் நடைபெறும் பட்சபாதங்களும் மற்ற அநீதிகளும் ஆங்காங் குள்ள தனிப்பட்ட இங்கிலீஷ்காரர்களின் காரியங்கள் என்றும், மொத்தத்தில் பிரிட்டிஷார் தர்ம நியாயமாகக் காரியம் செய்கிறவர்கள் என்றும் நம்பியிருந்தார். ஆகையால் போயர்களின் சுதந்திரக் கோரிக்கையில் காந்திஜிக்கு அநுதாபம் இருந்த போதிலும் தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் பிரிட்டிஷ் கட்சியிலேயே இருக்க வேண்டும் என்று நினைத்தார். தங்களுக்குச் சுதந்திரம் வேண்டு மென்று போராடும் போயர்கள் இந்தியர்களுக்காவது தென்னாப்பிரிக்காவின் சுதேசிகளுக்காவது சுதந் திரம் கொடுக்க விரும்ப வில்லை ; நியாயம் செய்யவும் முன் வருவதில்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சர்க்காரோ எல்லாருக்கும் சமநியாயம் வழங்குவதாகச் சொல்லிக் கொள்ளவாவது. செய்தார்கள். காந்திஜி தாக்கப்பட்ட செய்தி அறிந்ததும் ”தாக்கியவர்களைக் கைது செய்யவும் ” என்று ஜோசப் சேம்பர்லின் தந்தி அடித்தார் அல்லவா? இதிலிருந்து பிரிட்டிஷார் எப்போதும் நியாயமாக நடந்து கொள்ளா விட்டாலும் அவர்களுக்கு நியாய உணர்ச்சி இருந்தது என்றாவது ஏற்பட்டது. போயர்கள் விஷயத்திலோ இதுகூடச் சொல்வதற்கில்லை. அவர்கள் தென்னாப்பிரிக்காவில் வந்து குடியேறியவர்கள் தான். ஆயினும் தாங்கள் குடியேறிய பிரதேசம் தங்களுக்கே சொந்தம் என் று நினைத்து அவர்கள் நடந்து கொண்டார்கள்.
இதையெல்லாம் எண்ணிக் காந்திஜி போயர் யுத்தத்தின் போது பிரிட்டிஷ் கட்சியில் இருந்து தொண்டு செய்வதென்று. முடிவு செய்தார். 'பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரஜைகளுக்கு உள்ள பூரண உரிமைகளை நாம் கோருகிறோமல்லவா? ஆகையால் அந்த சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்கும் நாம் உதவி செய்தாக வேண்டும்'' என்று மற்ற இந்தியர்களுக்கு எடுத்துச் சொன்னார். யுத்த சேவை செய்ய முன் வந்த இந்தியர்களைக் கொண்டு 'ஆம்புலன்ஸ் படை' அமைத்தார். 'ஆம்புலன்ஸ் படை' என்றால் என்ன தெரியுமா, தம்பி? போர்க்களத்தில் போர் செய்கிறவர்கள் காயம் பட்டு விழுவார்கள் அல்லவா? அவர்களைத் தூக்கிக் கொண்டு வந்து இராணுவ முகாம் ஆஸ்பத்திரிகளில் சேர்ப்பது, அவசியமான ஆரம்ப சிகிச்சைகளைச் செய்வது முதலிய ஜீவகாருண்ய சேவைகளைச் செய்யும் படைக்கு 'ஆம்புலன்ஸ் படை' என்று பெயர். யுத்தம் செய்யும் படை வீரர்களைப் போலவே இவர்களும் ஆபத்துக்கு உட்பட்டாக வேண்டும். ஆனால் இவர்கள் யாரையும் கொல்ல வேண்டியதில்லை. காயம் பட்டுச் சாகக் கிடப்பவர்களுக்குப் பணிவிடை செய்து கூடுமானால் அவர்களைப் பிழைக்கச் செய்வது இவர்களுடைய வேலை. மொத்தத்தில் யுத்த சேவை என்றாலும், மிகச் சிறந்த ஜீவகாருண்யத் தொண்டாகும்.
காந்திஜி 'ஆம்புலன்ஸ் படை'க்கு இந்தியர்களைச் சேர்க்க ஆரம்பித்தபோது பலர் அவரை அதைரியப் படுத்தினார்கள். இந்தியர்கள் அபாயங்களைக் கண்டு அஞ்சும் கோழைகள் என் றும், தாற்காலிக சுயநலத்தைத் தவிர வேறு விசால நோக்கம் இல்லாதவர்கள் என்றும் அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் நம்பினார்கள். ஆகையால் காந்திஜியின் முயற்சியைப் பொது வாக ஆங்கிலேயர் ஆதரிக்கவில்லை. ஆனால் டாக்டர் பூத், மிஸ்டர் லாப்டன், மிஸ்டர் எஸ்கோம்ப் முதலிய சிலர் காந்திஜியை ஆதரித்து உற்சாகப் படுத்தினார்கள். சேவைப் படையில் சேர்ந்த இந்தியர்களுக்கு டாக்டர் பூத் பயிற்சி அளித்தார். யுத்தகாலத்தில் சேவை செய்யத் தகுந்தவர்கள் என்று வைத்தியர்களின் அத்தாட்சியும் வாங்கப் பட்டது. இவ்வளவுக்குப் பிறகு காந்திஜி போர்க்களத்தில் தொண்டு செய்ய இந்திய சேவைப் படைக்கு அனுமதி அளிக்கும்படி நேட்டால் சர்க்காருக்கு எழுதினார். சர்க்காரின் பதில் பளிச் சென்று வந்தது. ''மிக்க வந்தனம் ; ஆனால் தற்சமயம் உங்கள் ஊழியம் தேவை இல்லை !'' என்று சர்க்காரின் பதில் கூறியது.
இத்துடன் காந்திஜி சும்மா இருந்துவிட வில்லை. இந்தியர்களின் சேவையைச் சர்க்கார் ஒப்புக் கொள்ளும்படி செய்வ தற்கு மேலும் பிரயத்தனம் செய்தார். டாக்டர் பூத் அவர்களை அழைத்துக் கொண்டு நேட்டால் பிஷப் பாதிரியைப் போய்ப் பார்த்தார் ; விவரங்களைச் சொன்னார். இந்திய சேவைப் படையில் இந்தியக் கிறிஸ்துவர் பலர் இருக்கிறார்கள் என்னும் விவரத்தையும் அறிவித்தார். நேட்டால் பிஷப் காந்திஜியின் முயற்சிக்கு உதவி செய்வதாக வாக்களித்தார். நேட்டால் சர்க்காருக்கும் எழுதினார்.
இதற்கிடையில் போயர் யுத்தம் மிகக்கடுமையான நிலையை அடைந்தது. பிரிட்டிஷ் சர்க்கார் எதிர்பார்த்ததைக் காட்டிலும் போயர்கள் அதிகப் பிடிவாதமாகப் போராடினார்கள். இந்தியர்களின் யுத்த சேவையைச் சர்க்கார் அலட்சியம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது.
நாற்பது தலைவர்கள் உள்பட ஆயிரத்து நூறு இந்தியர்கள் அடங்கிய சேவைப் படை போர்க்களத்தில் சேவை செய்யச் சென்றது. இந்த ஆயிரம் பேரில் முந்நூறு பேர் சுதந்திர இந்தியர்கள், மற்றவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகள். இந்திய சேவைப் படை போர்க்களத்தில் நல்ல ஊழியம் செய்து பெயர் பெற்றது. சாதாரணமாகச் சேவைப் படையினர் துப்பாக்கிப் பிரயோக எல்லைக்குள் செல்ல அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால் ஸ்பியான் கோட் என்னுமிடத்தில் பிரிட்டிஷ் துருப்புக்கள் போயர்களால் முறியடிக்கப் பட்ட போது மிக நெருக்கடியான நிலைமை ஒன்று ஏற்பட்டது. போர்க்களத்திற்குச் சென்று காயம்பட்டவர்களைத் தூக்கி வெளி யேற்ற முடியுமா என்று பிரிட்டிஷ் தளபதி ஜெனரல் புல்லர் காந்திஜிக்குச் செய்தி அனுப்பினார். ஒரு கணமும் தயங்காமல் ''அப்படியே செய்கிறோம்!'' என்று காந்திஜி பதில் அனுப்பினார். பிறகு இந்திய சேவைப் படை துப்பாக்கிப் பிரயோகம் நடந்து கொண்டிருந்த போர்க் களத்திலேயே சேவை செய்ய ஆரம்பித்தது. காயம் பட்ட வீரர்களைச் சுமந்துகொண்டு சுமார் இருபத்தைந்து மைல் வரையில் நடந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வேண்டி யிருந் தது. இந்திய சேவைப் படையைச் சேர்ந்தவர்கள் சிறிதும் சுணங்காமல் இத்தகைய சேவைகளைச் செய்தார்கள். இவர்களால் ரண களத்திலிருந்து தூக்கிச் செல்லப்பட்டவர்களில் தளபதி உட்கேட் என்னும் பிரபல இராணுவ அதிகாரி ஒருவர்.
இவ்விதம் ஆறு வார காலம் இந்திய சேவைப் படை தொண்டு புரிந்தது. இதற்குள் பிரிட்டிஷ் சேனாதிபதி இங்கிலாந்திலிருந்து உதவிப் படை வரும் வரையில் மேலே முன்னேறு வதில்லை என்று தீர்மானித்து விட்டார். ஆகையால் இந்திய சேவைப் படை கலைத்துவிடப் பட்டது.
போயர் யுத்தத்தின் போது இந்தியர்கள் செய்த சேவையைப் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய சர்க்கார் பெரிதும் பாராட்டினார்கள். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் மதிப்பு அதிகமாயிற்று. ''நாம் எல்லாரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் புதல்வர்கள் தானே? வெள்ளைக்காரர் ஆனால் என்ன? இந்தியர் ஆனால் என்ன? '' என் னும் தோரணையில் தென்னாப்பிரிக்காப் பத்திரிகைகள் கூட இந்தியரின் சேவையைப் புகழ்ந்து எழுதின.
சேனாதிபதி ஜெனரல் புல்லர் இந்தியரின் போர்க்களச் சேவையைத் தமது அறிக்கைகளில் பாராட்டி யிருந்தார். சேவைப் படையின் தலைவர்களுக்கு யுத்த சன்மானப் பதக்கங்கள் அளித்து அவர்கள் கௌரவிக்கப்ப் பட்டனர்.
சாதாரண வெள்ளைக்காரர்களின் மனோ பாவமும் பெரிதும் மாறுத லடைந்து விட்டதாகக் காணப்பட்டது. யுத்தத்தின் போது இந்தியர்களும் வெள்ளைக்காரர்களும் சிநேக பாவம் கொண்டாடினார்கள். ஆயிரக்கணக்கான வெள்ளைக்கார சோல்ஜர்களுடன் இந்தியர்கள் நெருங்கிப் பழக நேர்ந்தது.
கஷ்டங்களும் சோதனைகளும் ஏற்படும் காலத்தில் மனித சுபாவம் சில சமயம் பெரிதும் மேன்மை அடைவதுண்டு. அதற்கு ஓர் நல்ல உதாரணம் அப்போது கிடைத்தது. காந்தி மகாத்மா எழுதியிருக்கிறார்:-
''சிவ்லி பாசறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம் அங்கு, லார்ட் ராபர்ட்ஸின் புதல்வர் லெப்டினண்ட் ராபர்ட்ஸ் படுகாய முற்று மரணமடைந்தார். அவர் உடலைப் போர்க்களத் திலிருந்து தூக்கிச் செல்லும் கடமை எங்கள் படைக்குக் கிடைத்தது. அன்று வறட்சி மிகுந்த தினம். ஒவ்வொருவரும் தண்ணீருக்குத் தவித்துக் கொண்டிருந்தனர். வழியில் தாகம் தணித்துக் கொள்ளக்கூடிய ஒரு சிறிய அருவி ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் முதலில் யார் அருவியில் தண்ணீர் அருந்துவது என்ற பிரச்னை ஏற்பட்டது. வெள்ளைக்காரப் போர் வீரர்கள் அருந்திய பின்னரே நாங்கள் அருவியில் இறங்குவதென்று முடிவு செய்திருந்தோம். ஆனால் அவர்கள் இதற்குச் சம்மதிக்க வில்லை ; எங்களை முதலில் தண்ணீர் குடிக்கும்படிச் சொன்னார்கள். இவ்வாறு, யார் முதலில் தண்ணீர் அருந்துவது என்பது குறித்து எங்களுக்குள் கொஞ்ச நேரம் போட்டி நடந்தது.''
காந்தி மகாத்மா தம்முடைய வாழ்க்கையில் நிகழ்ந்த நினைக்க நினைக்க இன்பந்தரும் ஞாபகங்களில் மேற்கூறிய சம்பவம் ஒன்று என்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
------------
33. கஸ்தூரிபாயும் கண்டஹாரமும்
தென்னாப்பிரிக்கா இந்திய சமூகத்தில் காந்திஜியின் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. அந்தச் செல்வாக்கைக் காந்திஜி சமூகத்தின் நன்மைக்காகவே பயன்படுத்தி வந்தார். இந்தியர்களின் உரிமைகளுக்காகச் சர்க்காரோடு போராடுவதுடன் அவர் நின்று விடவில்லை. இந்திய சமூகத்தில் குடிகொண்டிருந்த குறைபாடுகளைப் போக்கித் தூய்மைப் படுத்தவும் பெருமுயற்சி செய்தார். நம்மிடத்திலுள்ள குறை பாடுகளை மறைத்து மெழுகுவது காந்திஜிக்கு எப்போதும் பிடிப்பதில்லை. நம்முடைய உரிமைகளுக்காகப் போராடுவதில் எவ்வளவு சிரத்தை காட்டுகிறோமோ அவ்வளவு கடமைகளைச் செலுத்துவதிலும் ஊக்கம் காட்ட வேண்டும் என்பது காந்திஜியின் உறுதியான கொள்கை.
தென்னாப்பிரிக்கா இந்தியர்களைப் பற்றி வெள்ளைக்காரர்கள் அடிக்கடி சொல்லி வந்த ஒரு குறைபாடு இந்தியர்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாய் வைத்துக் கொள்ளுவதில்லை யென்பது தான். பொதுவாக இந்தியர்களிடம் இந்தக் குறை உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. நம்முடைய உடம்பையும் உடைகளையும் சுத்தமாய் வைத்துக் கொள்வதில் நாம் மிகுந்த சிரத்தை காட்டுவோம். உணவுப் பொருள் களின் விஷயத்தில் வெகு சுத்தமா யிருப்போம். ஆசார அனுஷ்டிப்பாகக் கடைப் பிடிப்போம். ஒரு நாள் உடுத்திய துணியை இன்னொரு நாள் உடுத்த மாட்டோம். தோய்த்து உலர்த்தித்தான் உடுத்திக் கொள்வோம். இல்லாவிட் டால் ' விழுப்பு' என்போம். ஒருவரை யொருவர் தொட்டால் தீட்டு என்போம். சாப்பிட்ட இடத்தைச் சாணமிட்டு மெழுகா விட்டால் இடம் சுத்தமான தாகக் கருத மாட்டோம். நன்றாகத் தேய்த்து வைத்த பாத்திரத்தை மறுபடியும் தண்ணீர் விட்டுக் கழுவுவோம். இப்படி யெல்லாம் சுத்தம், அசுத்தம், தீட்டு, தீண்டாமை முதலிய பல கட்டுப்பாடுகளை அனுசரிக்கும் நாம் வேறு சில முக்கியமான காரியங்களில் சுத்தம் - அசுத்தம் என்னும் உணர்ச்சியே இல்லாமல் நடந்து கொள்வோம். வீட்டுக் குள்ளிருக்கும் குப்பையை வாசலிலே போட்டு விட்டுத் திருப்தி யடைவோம். எச்சில் இலைகளைப் பக்கத்து வீட்டு ஓரமாகப் போட்டு விட்டுச் சும்மா இருப்போம். சாக்கடைத் தண்ணீர் நம் வீட்டுக்கு வெளியிலே போய்விட்டால் போதுமான து! வீதியிலோ கொல்லையிலோ சாக்கடைத் தண்ணீர் தேங்கிக் கிடந்து நாற்றம் எடுப்பதைக் கவனிப்பதில்லை. அதனால் எவ்வளவு சுகாதாரக் குறைவு என்பதையும் எண்ணிப் பார்ப்பதில்லை. நதிக் கரைகளையும் கோயில் குளங்களையும் மற்றும் பொது இடங்களையும் நம்முடைய ஜனங்கள் அசுத்தப்படுத்துவதைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை !
தென்னாப்பிரிக்காவில் வசித்த இந்திய சமூகத்தாரிடையிலும் இத்தகைய குறைபாடுகள் இருந்தன. இவற்றைக் குறித்து வெள்ளைக்காரர்கள் அடிக்கடி புகார் சொல்லி வந்தார் கள். அது காரண மாக இந்தியர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசினார்கள். அவர்கள் சொல்லுவதில் உண்மை இருக்கிறது. என்பதைக் காந்திஜி கண்டார்.
''எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு "
என்னும் கொள்கையைக் காந்தி மகான் பரிபூரணமாகக் கடைப்பிடிப்பவர். ஆகவே டர்பனில் வசித்த இந்தியர்களின் வீடு வாசல்களைத் தூய்மைப் படுத்துவதற்கும் தூய்மையாக, வைத்துக் கொள்ளும்படி செய்வதற்கும் பெரு முயற்சி தொடங்கினார். அந்த முயற்சிக்கு வேகம் கொடுப்பதற்கு ஒரு காரணம் ஏற்பட்டது. அதாவது டர்பனில் பிளேக் நோய் பரவத் தொடங்கியது. இந்தியர் வீடுகளின் சுகாதாரத்தைக் கவனிக்கும் விஷயத்தில் நகரசபை அதிகாரிகள் இந்திய சமூகத் தலைவர்களின் உதவியை நாடினார்கள். காந்திஜியும் மற்ற சமூகத் தலைவர்களும் டர்பனில் வசித்த ஒவ்வொரு இந்தியரின் வீட்டுக்கும் போய்ச் சோதனை போட்டார்கள். வீட்டுக்கு உள்ளும் புறமும் தூய்மைப்படுத்துவதற்குப் பிரயத்தனம் செய்தார்கள்: காந்திஜியும் அவருடைய சகாக்களும் மேற்கொண்ட பிரயத் தனத்தின் காரணமாக அதிகாரிகளின் வேலை எளிதாயிற்று. இந்திய சமூகம் பெருநன்மை அடைந்தது. பிளேக் முதலிய கொள்ளை நோய்கள் பரவும்போதெல்லாம் நிர்வாக அதிகாரிகள் பொறுமை இழந்து அளவு மீறிய கடும் முறைகளைக் கையாளுவது வழக்கம். அதனால் ஜனங்கள் பெருந் தொல்லைகளுக்கும் அல்லல்களுக்கும் ஆளாவார்கள். டர்பனில் பிளேக் நோய் தோன்றிய சமயத்தில் காந்திஜியின் முயற்சியால் இந்திய சமூ கத்தாரே முன் வந்து சகலவிதமான சுகாதார முறைகளையும் மேற்கொண்டார்கள். இதனால் அவர்கள் அதிகாரக் கொடுமைகளுக்கு ஆளாகாமல் தப்பினார்கள்.
மேற்கூறிய முயற்சி நடந்த காலத்தில் காந்திஜிக்குப் பல வருந்தத் தக்க அநுபவங்கள் ஏற்பட்டன. உரிமைகளுக்காகப் போராடும் போது இந்திய சமூகத்தினர் எவ்வளவு ஊக்கம் காட்டினார்களோ அவ்வளவு இப்போது கடமைகளை ஆற்றும் விஷயத்தில் காட்டவில்லை என்பதைக் கண்டார். சிலர் காந்திஜியிடம் அவமதிப்பாகவே நடந்து கொண்டார்கள். சிலர் வாய்ப் பேச்சில் மரியாதை செலுத்தி விட்டுக் காரியத்தில் அசட்டையா யிருந்தார்கள். இதனாலெல்லாம் காந்திஜி மனச்சோர்வு அல்லது மனக் கசப்பு அடைந்து விடவில்லை. மக்களின் இயல்பு இது தான் என்பதை அறிந்து பொறுமையுடன் தமது முயற்சியைச் செய்து வந்தார். மொத்தத்தில் இந்திய சமூகத்தாரின் வீடுகளும் சுற்றுப்புறங்களும் தூய்மை அடைந்தன.
இவ்வாறு இந்திய சமூகத்தின் முன்னேற்றத்துக்காகப் பற்பல துறைகளிலும் பாடுபட்டு வந்ததோடு இந்தியர்களுக்குத் தாய்நாட்டின் நினைவும் தாய் நாட்டிடம் பக்தியும் இருக்கு மாறும் பார்த்துக் கொண்டார். வெளி நாடுகளுக்கு வந்துள்ள இந்தியர்கள் தாய்நாட்டுக்குச் செலுத்த வேண்டிய கடமை உண்டு என்பதை அடிக்கடி வற்புறுத்தினார். இதைக் காரியத்தில் காட்டுவதற்கு விரைவில் சந்தர்ப்பம் நேர்ந்தது.
1897-ம் ஆண்டிலும் 1899-ம் ஆண்டிலும் இந்தியாவின் சில பகுதிகளில் கடும் பஞ்சம் நேர்ந்தது. அந்தப் பகுதிகளில் வசித்த இந்திய மக்கள் கொடிய கஷ்டங்களை அநுபவித்தார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டுக் காந்திஜி தென்னாப்பிரிக்காவில் நிதி வசூல் ஆரம்பித்தார். தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் தாராளமாக நிதிக்குப் பண உதவி செய்தார்கள். வர்த்தக சமூகத்தாரைத் தவிர ஒப்பந்தத் தொழிலாளிகளும் தங்களால் இயன்ற சிறு தொகைகளைக் கொடுத்து உதவினார்கள். தென்னாப் பிரிக்கா வெள்ளைக்-காரர்களுக்குக் காந்திஜி விடுத்த வேண்டுகோளும் வீண் போகவில்லை. வெள்ளைக்காரர்கள் பலரும் இந் தியப் பஞ்சநிவாரணத்துக்குப் பணம் கொடுத்து உதவினார்கள். காந்திஜி கூறுகிறார் :- இவ்வாறு, தென்னாப்பிரிக்கா இந்தியர்களுக்கு நான் செய்த ஊழியம் ஒவ்வொரு படியிலும் சத்தியத்தின் புதிய புதிய அம்சங்களை எனக்குப் புலப்படுத்தி வந்தது. சத்தியம் என்பது ஒரு பெரிய விருட்சம். அதற்கு நீர் ஊற்றி வளர்க்க வளர்க்க அதிகப் பழங்களைத் தருகிறது. சத்திய மென்னும் சுரங்கத்தில் எவ்வளவு ஆழமாகத் தோண்டுகிறோமோ அவ்வளவுக்கு அதில் புதைந்து கிடக்கும் ரத்தினங் களைக் கண்டு பிடிப்போம் தொண்டு புரிவதற்குப் புதிய புதிய துறைகளே அந்த இரத்தினங்களாகும். ”
* * *
இம்முறை காந்திஜி தென்னாப்பிரிக்காவில் ஐந்து வருஷம் இருந்தார். 1901-ம் ஆண்டில் தாய்நாட்டுக்குத் திரும்ப எண்ணினார். தென்னாப்பிரிக்காவில் மேலும் தங்கினால் பணம் சம்பாதிப்பதே முக்கிய வேலையாய்ப் போய் விடு மென்றும் இந்தியாவுக்குச் சென்றால் அதிக பயன் தரும் தொண்டு செய்யலாம் என்றும் நினைத்தார், தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் நலன்களைக் கவனித்துக் கொள்வதற்கு மனுசுக்லால் நாஸார் முதலிய நண்பர்கள் இருந்தார்கள். காந்தி மகாத்மாவுடன் சேர்ந்து தொண்டு புரிந்ததில் அவர்களுக்கு நல்ல பயிற்சி ஏற்பட்டிருந்தது.
நண்பர்களிடம் காந்திஜி தம் உத்தேசத்தைத் தெரிவித்த போது அவர்கள் இலேசில் அதற்கு இணங்கவில்லை. கடைசியாக ஒரு நிபந்தனையின் பேரில் விடை கொடுக்க ஒப்புக்கொண்டார்கள். அந்த நிபந்தனை தென்னாப்பிரிக்கா இந்தியர்கள் மறுபடியும் காந்திஜியின் உதவி தங்களுக்குத் தேவை என்று கருதி அழைத்தால் காந்திஜி எந்தத் தடையும் கூறாமல் உடனே திரும்பி வந்துவிட வேண்டு என்பது தான்.
நிபந்தனையைக் காந்திஜி அவ்வளவாக விரும்பவில்லை யென்றாலும் நண்பர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு அதை ஒப்புக் கொண்டார். பிறகு, காந்திஜி இந்தியா போவதை முன்னிட்டுப் பிரிவுபசார விருந்துகளும் கூட்டங்களும் ஆரம்பமாயின. நேட் டால் இந்தியர்கள் அன்பு என்னும் அமுத வெள்ளத்தில் மகாத்மாவை மூழ்க அடித்தார்கள். பல பரிசுப் பொருள்கள் அளிக்கப்பட்டன. தங்கச் சாமான்கள்-வெள்ளிச் சாமான்களோடு விலை யுயர்ந்த வைர ஆபரணங்களும் பரிசாக அளிக்கப்பட்டன. இந்தப் பரிசுகளில் ஐம்பத்திரண்டு பவுன் பெறுமானமுள்ள கண்டஹாரம் ஒன்றும் இருந்தது. இது காந்திஜியின் மனைவியாரான கஸ்தூரி பாய்க்கு என்று கொடுக்கப்பட்டது.
மேற்படி வெகுமதிகள் ஏராளமாகக் கிடைத்த ஒரு நாள் இரவு காந்திஜிக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. பரிசுகளைத் தாம் சொந்தத்துக்கு வைத்துக் கொள்வது உசிதமா என்று சிந்தனை செய்தார். அவை பெரும்பாலும் சமூகத்துக்கு அவர் செய்த தொண்டை உத்தேசித்து அளிக்கப்பட்டவை. அவற்றை அங்கீகரித்தால் சமூகத் தொண்டுக்குக் கூலி பெற்றது போலத் தானே ஆகும்? அது முறையாகுமா? ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பரிசுகளை வேண்டாமென்று புறக் கணிப்பதும் சுலபமான காரியமில்லை. வேண்டாம் என்று மறுப்பது காந்திஜிக்கு விருப்பமா யிருந்தாலும் அதற்கு மனைவியும் குழந்தைகளும் சம்மதிக்க வேண்டுமே? அவர்கள் ஒரு வேளை ஆட்சேபித்தால் என்ன செய்வது?
காந்திஜியின் வீட்டில் அதுவரை விலையுயர்ந்த நகை எதுவும் கிடையாது. தங்கச் சாமான்--வெள்ளிச் சாமான் கிடையவே கிடையாது. நகைப் பைத்தியத்தை ஒழிக்க வேண்டும் என்று காந்திஜி ஜனங்களுக்கு அடிக்கடி உப தேசித்து வந்தார். தம் குடும்பத்தில் அதைக் கடுமையாக அனுஷ்டித்தார். அப்படி யிருக்க, இப்போது பரிசாகக் கிடைத்த தங்கக் கடிகாரங்கள், தங்கச் சங்கிலிகள், வைர மோதிரங்கள் ஆகியவற்றை என்ன செய்வது?
இரவெல்லாம் யோசனை செய் து பரிசுகளைச் சொந்தத்துக்கு வைத்துக்கொள்ளக் கூடாது என்ற முடிவுக்குக் காந்திஜி வந்தார். அவற்றைத் தென்னாப்பிரிக்கா இந்திய சமூகத்துக்கே உரிமை யாக்குவதென்றும், அந்தத் தர்ம சொத்தைப் பரிபாலிப்பதற்கு பார்ஸி ரஸ்டம் ஜி முதலியவர்களைத் தர்மகர்த்தர்களாக நியமிப்ப தென்றும் தீர்மானித்தார். அந்தப்படியே கடிதமும் எழுதி முடித்தார். இதற்குப் பிறகுதான் காந்திஜியினால் தூங்க முடிந்தது.
பொழுது விடிந்ததும் குழந்தைகளிடம் தம்முடைய தீர்மானத்தைத் தெரிவித்தார். தந்தையின் உயர்ந்த இலட்சியங்களில் பயிற்சி பெற்று ஊறிப் போயிருந்த குழந்தைகள் காந்திஜியின் முடிவை உற்சாகமாக ஆமோதித்தன.
''அப்படியானால் உங்கள் அம்மாவிடம் இதைப்பற்றிப் பேசி அவளை இந்த ஏற்பாட்டுக்கு இணங்கச் செய்யுங்கள், பார்க்கலாம்!'' என்றார் காந்திஜி.
அவர் எதிர்பார்த்தது போலவே கஸ்தூரிபாயை இணங்கச் செய்வது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. ஸ்ரீமதி கஸ்தூரிபாய் கூறியதாவது :- " உங்களுக்கு இப் பொருள்கள் தேவையில்லை. உங்கள் குழந்தைகளுக்கும் தேவையில்லை. நீங்கள் சொல்கிறதைக் கேட்டுக் கொண்டு அவர்கள் உங்கள் இஷ்டப்படி கூத்தாடுவார்கள். குழந்தைகளுக்கு என்ன தெரியும்? ஆனால் பரிசுகளைத் திருப்பிக் கொடுக்க நான் சம்மதிக்க மாட்டேன், என்னை நகை அணிந்துகொள்ளக் கூடாது என்று சொல்கிறீர்கள்; அதன்படியே நான் நடக்கிறேன். ஆனால் நாளைக்கு நம் பிள்ளைகள் மணக்கும் நாட்டுப் பெண்களின் விஷயம் என்ன? அவர்களையும் நீங்கள் கட்டாயப் படுத்த முடியுமா? அவர்களுக்கு ஆபரணங்கள் வேண்டி யிருக்கும். ஆகையால் திருப்பிக் கொடுக்கவே கூடாது.''
இவ்வாறு ஸ்ரீமதி கஸ்தூரிபாய் சொல்லித் தம் வாதத்துக்குப் பக்கபலமாகக் கண்ணீர் பெருக்கத் தொடங்கினார்.
எனினும் காந்திஜி சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. கற்பாறையை யொத்த சலியாத மன உறுதியுட னிருந்தார்.
''குழந்தைகளுக்கு நாளைக்குக் கலியாணம் செய்து வைக்கப் போகிறோமா? அவர்களுக்கு வயது வந்தபின் கலியாணம் செய்து கொள்ளலாம். அப்போது அவர்களே தங்கள் காரியத்தைக் கவனித்துக் கொள்வார்கள். நாமாகக் கலியாணம் பண்ணி வைத்தால் நகைப் பைத்தியம் கொண்ட பெண்களை ஒரு நாளும் கலியாணம் செய்துவைக்கப் போவ தில்லை. அப்படி உன் மருமகள்மார்களுக்கு ஆபரணம் செய்து போடுவது அவசியம் என்று ஏற்பட்டால் நான் ஒருவன் இல்லையா? என்னைக் கேட்டால் வேண்டியதை வாங்கிக் கொடுக்கிறேன் ! ''
'' உங்களை யார் கேட்பது? இவ்வளவு நாளைக்குப் பிறகும் உங்கள் சமாசாரம் எனக்குத் தெரியாதா? என்னுடைய நகைகளை யெல்லாம் நீங்கள் தானே பிடுங்கிக் கொண்டீர்கள்? அப்படிப்பட்ட நீங்களா மருமகள்மாருக்கு ஆபரணம் செய்து விடப் போகிறீர்கள்? ஒருநாளும் இல்லை. இப்போதே என் குழந்தைகளைச் சந்நியாசியாக்கப் பார்க்கிறீர்களே ! கூடாது, கூடாது. நகைகளைத் திருப்பிக் கொடுக்க முடியாது. மேலும் என்னுடைய கண்டஹாரத்தைக் கேட்பதற்கு நீங்கள் யார்? உங் களுக்கு என்ன உரிமை?''
இதைக் கேட்ட காந்திஜி சற்றுக் கோபம் அடைந்து ”கண்டஹாரம் இந்திய சமூகத்துக்கு நான் செய்த ஊழியத் துக்காகக் கொடுக்கப்பட்டதா? உன்னுடைய ஊழியத்துக்காகவா?'' என்று கேட்டார்.
''உங்களுடைய ஊழியத்துக்காகத்தான். ஆனால் நீங்கள் செய்த ஊழியம் நான் செய்தது போல் அல்லவா? உண்மையில், நான் ஒன்றும் செய்யவில்லையா? இரவும் பகலும் உங்களுக்காக உழைத்தேனே, அதெல்லாம் ஊ ழியம் அல்லவா? வழியோடு போகிறவர்களை யெல்லாம் வீட்டுக்கு அழைத்துவந்து என்னை வதைத்தீர்களே? அது என்ன ஆகிறது? உங்களுடைய விருந் தாளிகளுக்கெல்லாம் நான் அடிமையைப் போல் உழைக்க வில்லையா? அதற்காக வெல்லாம் இந்தக் கண்டஹாரம் எனக்குத் தகாதா? ”
ஸ்ரீமதி கஸ்தூரி பாயின் கேள்விகளில் பெரிதும் உண்மை யிருந்தது. ஆகையால் அவை கூரிய அம்புகளைப்போல் காந்திஜியின் உள்ளத்தில் தைத்தன. எனினும், காந்திஜி தம் உறுதியிலிருந் து பிறழவில்லை. மேலும் ஸ்ரீமதி கஸ்தூரி பாயுடன் தொடர்ந்து வாதாடிப் பரிசுகளைத் திருப்பிக் கொடுப்பதற்குச் சம்மதிக்கும்படி செய்தார்.
இந்தச் சம்பவத்தைப் பற்றி விவரமாகச் சொல்லி விட்டுக் காந்தி மகாத்மா முடிவாக எழுதி யிருப்பதாவது :-
''இவ்வாறு செய்ததின் பொருட்டு நான் எப்போதுமே வருந்தியதில்லை. நாளடைவில் என் மனைவியும் அப்படிச் செய்ததே அறிவுடைமை என்பதை உணர்ந்து கொண்டாள். இதனால் எவ்வளவோ சோதனைகளுக் குள்ளாகாமல் நாங்கள் பாதுகாக்கப் பட்டோம். பொது ஊழியத்தில் ஈடுபட்டோர் விலை உயர்ந்த வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளக் கூடாதென்பது என் உறுதியான அபிப்பிராயம்.''
--------
This file was last updated on 04 Nov. 2019
Feel free to send the corrections to the .